அழகர்சாமியின் குதிரை (சிறுகதை) – பாஸ்கர் சக்தி

இந்தக் கதையை நான் பிரமாதம் என்றெல்லாம் சொல்லமாட்டேன். என் anthology-யில் நிச்சயமாக இடம் பெறாது. கதை எப்படி போகும் என்றெல்லாம் சுலபமாக யூகிக்க முடிகிறது. (நிஜ அழகர்சாமி வரும் இடத்தைத் தவிர) காதல் கொஞ்சம் செயற்கையாக இருக்கிறது. இருந்தாலும் சில இடங்களில் புன்னகை வருகிறது. அருள் வந்த போலீஸ்காரர், கிராமத்திலேயே ஏறக்குறைய செட்டில் ஆகிவிடும் கான்ஸ்டபிள்கள், கடுப்பான கோடாங்கி, குதிரை சிலை தேடப் போய் நிஜ குதிரை வந்தது, நிஜ குதிரையைத் தேடி வரும் நிஜ அழகர்சாமி என்று சில இடங்கள் நன்றாக வந்திருக்கின்றன. நிறைய விவரங்களோடு நாவலாக எழுதி இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

பாஸ்கர் சக்தி டிவி சீரியல் எழுதி புகழ் பெற்றவராம். இந்தக் கதையும் இப்போது திரைப்படமாகிறதாம். படம் ரிலீஸ் ஆகிவிட்டதாம்.

ஜேம்ஸ் பாண்ட் நாவல் – மூன்ரேக்கர்

பதின்ம வயதுகளில் ஜேம்ஸ் பாண்ட் ஒரு பெரிய icon. ரோஜர் மூர், ஷான் கானரி திரைப்படங்களை விரும்பிப் பார்ப்பேன். ஜேம்ஸ் பாண்டின் தீம் இசை, அரை நிர்வாணப் பெண்கள், வித விதமான gadgets, I am Bond – James Bond என்று சொல்லும் ஸ்டைல் என்று பல அம்சங்கள் மனதை கவர்ந்திருந்தன. ரோஜர் மூரை விடுங்கள், தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட் ஜெய்ஷங்கர் படங்களைக் கூட தேடிப் போய் பார்த்த காலம் அது.

பற்றாக்குறைக்கு அப்போதுதான் ஆங்கிலப் புத்தங்களை படிக்க ஆரம்பித்திருந்தேன். த்ரில்லர்கள், ஆக்ஷன் அட்வென்ச்சர் கதைகளை விரும்பிப் படித்தேன். (இப்போதும் படிக்கிறேன்.) இயன் ஃபிளமிங் எழுதிய ஜேம்ஸ் பாண்ட் நாவல்கள் கிடைக்காதா கிடைக்காதா என்று தேடி இருக்கிறேன். அந்த வயதிலேயே ஒவ்வொரு நாவலையும் படிக்கும்போதும் ஏமாற்றமே அடைந்திருக்கிறேன்.

ஜேம்ஸ் பாண்ட் நாவல்கள் நல்ல த்ரில்லர்கள் கூட இல்லை. ஒரு ஃபார்முலாவை வைத்து – பாண்ட் என்ன சாப்பிட்டார் (caviar etc.), என்ன மது அருந்தினார் (martini, shaken but not stirred etc.), எத்தனை பெண்களோடு படுத்தார், எத்தனை ஸ்டைலான உடை, கார், சிகரெட் இத்யாதி இத்யாதி – வைத்து ஒரு கதை. மீண்டும் மீண்டும் இவற்றைப் பற்றி வரும்போது, மனதுக்குள் “I get it, move on!” என்று தோன்றும். அப்புறம் ஒரு உலக மகா வில்லன், உலகத்தையே அழிக்கும் அவனால் ஒரு சின்ன துப்பாக்கியோடு அலையும் ஜேம்ஸ் பாண்டை மட்டும் ஒன்றும் செய்ய முடியாது, பாண்டை கொல்ல வேண்டுமென்றால் கொக்கு தலையில் வெண்ணெய் வைத்துத்தான் பிடிப்பார்கள். ஷாக் வால்யூவுக்காக எழுதப்படும் காட்சிகள் (ஸ்காராமாங்காMan with the Golden Gun – ஒரு பாம்பைக் கொன்று அப்புடியே raw-வாக ச்சாப்பிடுவான்) எல்லாம் ரொம்ப ஷாக்கிங்காக ஒன்றும் இருக்காது.

ஆனாலும் எல்லா கதைகளையும் படித்திருக்கிறேன். ஏன் இப்போது சார்லி ஹிக்சன் (Charlie Higson) என்பவர் எழுதும் Young Bond சீரிஸ் நாவல்களைக் கூட – இவற்றில் பாண்ட் ஸ்கூல் போகும் பதின்ம வயதினன் – விடுவதில்லை. சினிமாவாக வந்து அந்த வயதில் பிடித்தவை என்பதைத் தவிர ஒரே ஒரு காரணம்தான் உண்டு. சில சமயம் இந்தக் கதைகளில் வரும் விளையாட்டுக் காட்சிகள் புத்திசாலித்தனமாக அமைக்கப்பட்டவை. அது அப்போதும் சரி இப்போதும் சரி பிடித்திருக்கிறது.

மூன்ரேக்கரில் ஒரு உலக மகா வில்லன் – ஹ்யூகோ ட்ராக்ஸ் – முன்னாள் நாஜி, இப்போது இங்கிலாந்தில் தன் நாஜி வாழ்க்கையை மறைத்து ஒரு பெரிய தொழிலதிபராக இருக்கிறான். ஏவுகணை உற்பத்தி செய்கிறான். இன்னும் நாலைந்து நாளில் ஒரு ஏவுகணை விண்ணில் செலுத்தப்படப் போகிறது. பாண்டின் பாஸ் M சீட்டு விளையாடும் க்ளப்பில் அவனும் ஒரு உறுப்பினன். சீட்டு விளையாடும்போது ஏமாற்றுகிறான் என்று சந்தேகம். M பாண்டை வந்து பார்க்க சொல்கிறார். பாண்ட் அவன் எப்படி ஏமாற்றுகிறான் என்று கண்டுபிடித்துவிடுகிறார். அவனுக்கு புத்தி புகட்ட தான் அவனை ஏமாற்றுவதாக சொல்கிறார்.

என்னைப் பொறுத்த வரையில் அந்த ஏமாற்றும் காட்சிதான் கதையின் உருப்படியான விஷயம். அவர்கள் விளையாடுவது பிரிட்ஜ். பாண்ட் சீட்டுகளை ஒரு வரிசையில் வைத்து ட்ராக்சுக்கு மிகவும் வலிமையான சீட்டுகள் வரும்படி செய்கிறார். ஆனால் பாண்டுக்கு வருவது அந்த வலிமையான சீட்டுகளை தோற்கடிக்கக் கூடிய சீட்டுகள். ட்ராக்ஸ் பெரிய அளவு பந்தயம் வைத்து பணத்தை இழக்கிறான், தான் ஏமாற்றுவது இவர்களுக்கு தெரிந்துவிட்டது என்று அவனுக்கு புரிகிறது.

அப்புறம் வழக்கம் போல அழகான பெண், வழக்கம் போல ஏவுகணையை லண்டன் மேல் செலுத்த ட்ராக்ஸ் திட்டம், வழக்கம் போல பாண்ட் அதை முறியடிப்பது என்று கதை போகிறது.

இந்த புத்தகத்தால்தான் பிரிட்ஜ் எப்படி விளையாடுவது என்று கற்றுக் கொண்டேன். (இன்னும் bidding கொஞ்சம் தகராறு)

கோல்ட்ஃபிங்கரில் வரும் கோல்ஃப் போட்டி எனக்குப் பிடித்த இன்னொரு விளையாட்டு காட்சி. இப்போதும் பிடித்திருக்கிறதா என்று படித்துப் பார்க்க வேண்டும்.

அமெரிக்க ஜனாதிபதி கென்னடி ஒரு முறை ஜேம்ஸ் பாண்ட் நாவல்கள் தனக்கு பிடித்தமானவை என்று சொன்னாராம். எனக்கென்னவோ அந்த 15 நிமிஷ புகழ்தான் ஜேம்ஸ் பாண்ட் நாவல்களை படமாக்க உந்துதலாக இருந்தன என்றும் அந்த படங்கள்தான் இந்தக் கதைகளை இன்னும் பிரபலப்படுத்தின என்றும் தோன்றுகிறது.

உங்களுக்கு ஜேம்ஸ் பாண்ட் நாவல்களில் பிடித்த அம்சம் ஏதாவது உண்டா? இருந்தால் எழுதுங்கள்!

அனுபந்தம் (இதற்கு ஒரு நல்ல தமிழ் வார்த்தை சொல்லுங்கப்பு!) :

இயன் ஃபிளமிங் மொத்தம் 14 ஜேம்ஸ் பாண்ட் புத்தகங்களை எழுதி இருக்கிறார். அவை

 1. கசினோ ராயேல் (1953)
 2. லிவ் அண்ட் லெட் டை (1954)
 3. மூன்ரேகர் (1955)
 4. டைமண்ட்ஸ் ஆர் ஃபாரெவர் (1956)
 5. ஃபரம் ரஷ்யா, வித் லவ் (1957)
 6. டாக்டர் நோ (1958)
 7. கோல்ட்ஃபிங்கர் (1959)
 8. ஃபார் யுவர் ஐஸ் ஒன்லி (1960)
 9. தண்டர்பால் (1961)
 10. ஸ்பை ஹூ லவ்ட் மீ (1962)
 11. ஆன் ஹர் மெஜஸ்டீஸ் சீக்ரட் சர்வீஸ் (1963)
 12. யூ ஒன்லி லிவ் ட்வைஸ் (1964)
 13. மான் வித் தி கோல்டன் கன் (1965)
 14. ஆக்டோபுஸ்ஸி (1966)

இந்திரா பார்த்தசாரதி புதிய ப்ளாக் தொடங்கி இருக்கிறார்

நாலைந்து நாளாக ஊரில் இல்லை. அவ்வப்போது இந்த மாதிரி ஒரு gap விழுந்துவிடுகிறது. அதனால் இன்றைக்கு ஒரு quickie போஸ்ட்.

இந்திரா பார்த்தசாரதி இப்போது ஒரு ப்ளாக் எழுதத் தொடங்கி இருக்கிறார். கட்டாயம் படியுங்கள்!

எழுத்தாளர் தளங்கள் போஸ்டிலும் இப்போது இ.பா.வின் தள முகவரியை சேர்த்துவிட்டேன். மேலும் முத்துலிங்கத்தின் தள முகவரி மாறி இருக்கிறது, அதையும் அப்டேட் செய்துவிட்டேன். (தகவல் தந்த ஸ்ரீனிவாசுக்கு நன்றி!)

தேவன் மரணம் – விகடன் தலையங்கம்

எனக்கு எழுத்தாளர் தேவனைப் பற்றி எப்போதும் ஒரு soft corner உண்டு. வணிக எழுத்துகளைத் தவிர வேறு எதுவும் தெரியாத காலத்தில் ஜஸ்டிஸ் ஜகன்னாதன் போன்ற ஒரு minor classic-ஐ படித்ததால் இருக்கலாம். துப்பறியும் சாம்பு இன்றும் புன்னகையை வரவழைப்பதால் இருக்கலாம். ஸ்ரீமான் சுதர்சனத்தில் ஒரு மத்தியதர வர்க்க குடும்பத் தலைவனுக்கு என்றென்றும் உள்ள பணப் பிரச்சினைகளில் என்னையே கண்டதால் இருக்கலாம். அவர் வணிக எழுத்தைத் தாண்டி இலக்கியம் கிலக்கியம் எல்லாம் படைக்க வேண்டும் என்று நினைக்கவில்லை, ஆனால் சில சமயம் பத்திரிகை, தொடர்கதை ஆகியவை நிர்ணயிக்கும் எல்லைகளை அநாயாசமாகத் தாண்டி இருக்கிறார்.

தேவன் 5-5-57 -இல் இறந்திருக்கிறார். இறந்தபோது அவர் விகடன் ஆசிரியர். இன்று ஒரு பழைய பதிவு – அவர் மறைவைப் பற்றி விகடனில் எழுதப்பட்ட தலையங்கம் – கண்ணில் பட்டது. அவரது 53-ஆவது நினைவு நாள் என்பதற்காக மீண்டும் பதித்திருக்கிறேன்.

விகடனின் மகத்தான நஷ்டம்!

சென்ற 23 ஆண்டுகளாக அவர் எழுதிய சிரஞ்சீவி இலக்கியங்கள் நம் கண் முன் இருக்கின்றன. ஆனால் ஸ்ரீ தேவன் மறைந்துவிட்டார். வடபழனி ஆண்டவனைப் பற்றி மனமார எழுதிய பேனா மன்னர், அவர் திருவடியிலேயே இரண்டறக் கலந்துவிட்டார்.

அவர் பேனாவிலே பிறந்த துப்பறியும் சாம்புவும், கல்யாணியும், கோமதியின் காதலனும், ஸ்ரீமான் சுதர்சனமும் உயிர் பெற்றுச் சிரஞ்சீவிகளாக உலாவிக்கொண்டிருக்கையில், அவர்களைப் படைத்த பிரமன் இறைவனடி சேர்ந்துவிட்டார்.

ஆங்கிலக் கதைகளையே படித்துப் பழக்கப்பட்டவர்கள் கூட ஸ்ரீ தேவனுடைய ஜஸ்டிஸ் ஜகந்நாதனையும், ஸி.ஐ.டி. சந்துருவையும் படித்துவிட்டுத் தமிழிலும் இப்படிப் புதுமைக் கருத்துக்களுடன் எழுத முடியுமா என்று வியந்து பாராட்டினார்கள்.

தேவன் அவர்களின் நஷ்டம் தமிழ்நாட்டுக்கே ஈடு செய்ய முடியாதது என்றால், விகடனுக்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்தைப் பற்றி எப்படி எழுதுவது? அவருடைய அற்புதமான கதைகளை, எழுத்துக் கோக்கும்போதே படித்துக் களித்த ஆனந்த விகடன் கம்பாஸிடர்கள் அத்தனை பேரும் இன்று அழுது கண்ணீர் வடிக்கின்றார்கள். ஆசிரியர் குழாம் அலறித் துடிக்கிறது. கடமை உணர்ச்சியும், அன்பும், எல்லோரையும் அரவணைத்துக் கொண்டு போகும் நற்குணமும் படைத்த உத்தமமான நிர்வாக ஆசிரியரை இழந்து விகடன் கண்ணீர் வடிக்கிறான். 5.5.57 ஞாயிற்றுக்கிழமை பகல் ஒன்றரை மணிக்கு, தேவன் தேவனாகி விட்டார். அவர் பூத உடம்பு மறைந்து விட்டது. புகழுடம்புடன் ஆனந்த விகடன் வாசகர்களின் உள்ளங்களில் குடி புகுந்துவிட்டார்.

தொடர்புடைய சுட்டிகள்:
கல்கியும் தேவனும் – அசோகமித்திரன் ஒப்பிடுகிறார்
ராஜத்தின் மனோரதம்
கோமதியின் காதலன்
துப்பறியும் சாம்பு
ஜஸ்டிஸ் ஜகன்னாதன்

தி. ஜானகிராமனின் “நளபாகம்”

நண்பர் ஒருவர் சொன்னார் – மோகமுள்ளை இப்போது படிக்க முடியவில்லை, அலுப்பாக இருக்கிறது என்று. தி.ஜானகிராமன் போன்ற icon அலுத்துப் போகிறாரா என்று ஆச்சரியப்பட்டேன். கரெக்டாக இந்த நாவலும் அப்போது கிடைத்தது. சரி என்று படிக்க ஆரம்பித்தேன்.

தி.ஜா.வின் மீது எனக்கு எப்போதும் உள்ள விமர்சனம் மனிதர் அரைத்த மாவையே அரைக்கிறார் என்பதுதான். எப்போதும் அந்த தஞ்சாவூர் பண்ணையார் அல்லது அக்ரஹாரம் வாழ்க்கை, எப்போதும் ஏதோ ஒரு “தவறான” உறவு. தோசை, மசால் தோசை, ஊத்தப்பம், பெசரட், வெங்காய தோசை என்று மாற்றி மாற்றிப் போட்டாலும் அந்த மாவின் லேசான புளிப்பு சுவைதானே மீண்டும் மீண்டும்!

இதைப் படிக்கும்போதும் அதே விமர்சனம்தான். அதே தஞ்சாவூர் கிராமம். இந்த முறை “தவறான” உறவு மனரீதியாக மட்டும். அதே மாதிரி தி.ஜா. டைப் மனிதர்கள். அதே மாதிரி பேச்சு. சுமாரான கதைப்பின்னல்.

இந்த முறை ஊரின் பேர் நல்லூர். நல்லூர் ரங்கமணி அம்மாள் குடும்பத்தில் எப்போதும் ஸ்வீகாரப் பிள்ளைதான், குழந்தை பிறப்பதே இல்லை. ரங்கமணி யாத்திரை போகும்போது சமையல்கார காமேஸ்வரனை சந்திக்கிறாள். ஏறக்குறைய தன் மகனாக வரித்துக் கொள்கிறாள். அதே யாத்திரையில் ஜோசியர் முத்துசாமி ரங்கமணியின் தத்துப் பிள்ளை மற்றும் மருமகள் இல்லை இல்லை மாட்டுப்பெண் ஜாதகத்தைப் பார்த்துவிட்டு உங்கள் பையனுக்கு குழந்தை கிடையாது, மாட்டுப்பெண்ணுக்கு உண்டு என்கிறார். சரி வழக்கமான முடிச்சைப் போட்டுவிட்டார் என்று நினைத்தேன்.

ரங்கமணி காமேஸ்வரனை தன் வீட்டுக்கு வந்து இருக்கும்படி அழைக்கிறாள். காமேஸ்வரனும் போகிறான். நியோக முறைப்படி காமேஸ்வரன் மூலமாக தனக்கு ஒரு பேரனைப் பெற்றுக் கொள்ளலாம் என்று ரங்கமணிக்கு ஒரு ஐடியா இருக்கிறது. மருமகள் பங்கஜத்துக்கும் காமேஸ்வரன் மேல் ஈர்ப்பு இருக்கிறது. காமேஸ்வரனுக்கு ரங்கமணியின் ஐடியா தெரியாவிட்டாலும் தி.ஜா.வின் வழக்கமான அழகான பெண்கள் மீது வழக்கமாக ஏற்படும் ஈர்ப்பு பங்கஜத்தின் மேல் இருக்கிறது. இரண்டு பேரும் வெளியே காட்டிக்கொள்ளவில்லை. காமேஸ்வரன் மெதுமெதுவாக குடும்பத்தில் ஒருவராக ஆகிறான்.

காமேஸ்வரனுக்கு விஷயம் தெரியும்போது அதிர்கிறான். தற்செயலாக பங்கஜத்தை தனியாக சந்திக்க நேரிடுகிறது. பங்கஜத்துக்கும் ஆசை உண்டு என்று தெரிகிறது. ஆனால் கையைத் தொடுவதற்கு மேல் போகவில்லை. அது என்னவோ ஒரு catharsis மாதிரி பங்கஜத்துக்கு – அவள் தன் கணவன் துரையோடு ஒன்று சேர்கிறாள். இங்கே என்னவோ தி.ஜா. கணவன் மனைவி இது வரை சேராதது மாதிரி ஒரு ஃபில்ம் காட்டுகிறார். எப்படி சார்? பங்கஜம் கர்ப்பம் ஆகிறாள்.

காமேஸ்வரனுக்கு ஊரில் நட்பு வட்டம் பெருகுகிறது. தி.க.வைச் சேர்ந்த இளங்கண்ணன் முதற்கொண்டு நண்பர்கள். உள்ளூர் ஸ்கூலில் அனேகமாக தலித் மாணவர்கள் சாப்பிடும் மதிய உணவின் தரத்தைக் காணும் காமேஸ்வரன் பிடி அரிசி என்று ஒரு திட்டத்தைக் கொண்டு வருகிறான். உலை போடும் முன் ஒரு பிடி அரிசியைத் தனியாக எடுத்து வைத்துவிடவேண்டும். நன்கொடை வசூலிக்கிறான். எல்லாரும் சேர்ந்து நல்ல மதிய உணவை மாணவர்களுக்கு போடுகிறார்கள். (இந்த பிடி அரிசி திட்டம் மறைந்த காஞ்சி சந்திரசேகரேந்திர சரஸ்வதி அவர்களின் ஐடியாவாம். நல்ல ஐடியாவாக இருக்கிறதே! ஏன் அவ்வளவாக வெளியே தெரியவில்லை?)

ஆனால் ஊரில் தன்னையும் பங்கஜத்தையும் வைத்து அபவாதம் இருப்பதை உணரும் காமேஸ்வரன் நல்லூரை விட்டு வெளியேறுகிறான். அத்தோடு கதை முடிகிறது.

கதையின் பலம் வழக்காமானவைதான்: மொழி, சரளம், கதாபாத்திரங்கள். அது என்னவோ தி.ஜா.வின் நடை கோடைக்காலத்தின் மெல்லிய குளிர்ந்த காவேரியைத்தான் எனக்கு நினைவுபடுத்துகிறது. தி.ஜா.வின் மனிதர்கள் – இளங்கண்ணன், ஜோசியரின் மனைவி, காமேஸ்வரன் குடியிருக்கும் அறையின் வீட்டு ஓனர் என்று பலர் மிக நல்ல சித்திரங்கள்.

பலவீனங்கள் என்று பார்த்தால் பையனுக்கு குழந்தை இல்லை, மருமகளுக்கு மட்டும்தான் குழந்தை என்று ஒரு முடிச்சு போட்டார். அதை அவிழ்க்கவே இல்லையே? முத்துசாமி ஜோசியர் இப்படி அபவாதம் வந்ததைத்தான் சொன்னேன் என்று சொல்வது வெறும் சப்பைக்கட்டாக இருக்கிறது. அப்புறம் என்னதான் பாயின்ட்?

சில சமயம் எனக்குத் தோன்றுகிறது – தி.ஜா.வின் எந்தக் கதையை முதலில் படித்தாலும் அது பிடித்துப் போகும். அதற்கப்புறம் படிக்கும் கதைகளில் ஒரு மாதிரி deja vu உணர்வு ஏற்பட்டு அலுக்க ஆரம்பித்துவிடும் என்று. ஒரு சூழல் மீண்டும் மீண்டும். பி.ஜி. உட் ஹவுசின் 46-ஆவது கதையைப் படிக்கிற மாதிரி.

படிக்கலாம். நிச்சயமாக above average. சுவாரசியமான பாத்திரங்கள், நடை உள்ள கதை. ஆனால் repetitive தி.ஜா.

இதுதான் தி.ஜா.வின் கடைசி நாவலாம். கணையாழியில் தொடர்கதையாக வந்ததாம்.

உடுமலை தளத்தில் கிடைக்கிறது. விலை 135 ரூபாய்.

எஸ்விவியின் “உல்லாச வேளை”

க.நா.சு.வின் “படித்திருக்கிறீர்களா?” புத்தகம் எனக்கு ஒரு eye-opener. தமிழில் சுஜாதா, கல்கி தாண்டியும் இலக்கியம் உண்டு என்று நான் அந்தப் புத்தகம் மூலம்தான் தெரிந்துகொண்டேன். செகந்தராபாதில் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் வருஷாவருஷம் ஒரு புத்தகக் கண்காட்சி நடத்துவார். அங்கேதான் இந்த புத்தகத்தை வாங்கினேன். வாங்கிய உடனேயே வராந்தாவிலேயே உட்கார்ந்து புத்தகத்தை படித்தும் முடித்துவிட்டேன். ஆனால் அவர் சொல்லி இருந்த அநேக புத்தகங்கள் அந்த புத்தக கண்காட்சியில் கிடைக்கவில்லை. கிடைத்த ஒரே புத்தகம் “உல்லாச வேளை“.

உல்லாச வேளையில் கதை கிதை எதுவும் கிடையாது. ஒரு பணக்கார/மேல் மத்திய தர வர்க்க பிராமணக் குடும்பம். கணவர் வாசுதேவய்யர் ஜட்ஜ். மனைவி பெந்துக்கு (பெருந்தேவி) எழுதப் படிக்கத் தெரியாது. இரண்டு பெண்கள், இரண்டு பையன்கள். மனைவியின் அண்ணாவும் அவர்களோடு இருக்கிறார். ஊரில் நிலபுலம். அவர்கள் அடிக்கும் அரட்டையை கதையாக எழுதிவிட்டார்.

கதை கிடையாது என்றால் பின்னே என்னதான் இருக்கிறது? கதாபாத்திரங்கள்தான். பெந்து தனக்கு எழுதப் படிக்கத் தெரியாதது பற்றி குறைப்பட்டுக் கொள்வதும், வாசுதேவய்யர் அவளை கிண்டல் செய்வதும் திரும்பத் திரும்ப வரும் motifs. அன்றைய ஃபாஷன் (லுங்கிப் புடவை, தியாகபூமிப் புடவை), குடும்பத்தை விட்டுவிட்டு தேச சேவை செய்யும் பெண்கள் – இல்லை இல்லை ஸ்திரீகள், மாம்பலத்தின் குறைகள், லேடீஸ் கிளப், எதைப் பற்றி வேண்டுமானாலும் பேசுவார்கள். அவ்வளவுதான்.

இருபது வருஷத்துக்கு முன் படித்தபோது மிகவும் ரசித்தேன். இப்போதோ ரசிக்கவில்லை. Fluff, உயர் மத்திய வர்க்க பிராமண குடும்ப milieu-ஐ தத்ரூபமாக கொண்டு வந்திருக்கிறார் என்றுதான் அப்போதும் தோன்றியது, இப்போதும் தோன்றுகிறது. ஆனால் fluff-ஐ அன்று ரசிக்க முடிந்தது. Milieu தத்ரூபமாக இருந்தாலும் பிடித்து இழுத்து உட்கார வைக்கவில்லை. சுவாரசியம் பற்றவில்லை என்று தோன்றுகிறது. இன்னும் எத்தனை பக்கம் என்று புரட்டிப் பார்த்துக் கொண்டே இருந்தேன்.

ஆனால் இவரது ஒரு புத்தகமாவது படிக்க வேண்டும் என்று விரும்புபவர்களுக்கு இதுதான் பெஸ்ட். பிற புத்தகங்கள் (ராமமூர்த்தி) அப்போதே ரசிக்கவில்லை.

போன தலைமுறையினருக்கு எஸ்விவியை பிடித்திருக்கும் என்று நினைக்கிறேன். சுஜாதா கூட இவரது நகைச்சுவையை மெச்சி இருக்கிறார் என்று நினைவு. ஜெரோம் கே. ஜெரோம், ஸ்டீஃபன் லீகாக், ஏ.ஜி. கார்டினர், ஜி.கே. செஸ்டர்டன், ஈ.வி. லூகஸ் போன்றவர்கள்தான் இவருடைய எழுத்துக்கு ரோல் மாடல் என்று நினைக்கிறேன். எனக்கு இந்த ஆங்கில எழுத்தாளர்கள் அவ்வளவு ரசித்ததில்லை. அவர்களுக்கு இவரே பெட்டர். 🙂

இவருடைய முழுப் பெயர் எஸ்.வி. விஜயராகவாச்சாரியார். முதலில் ஆங்கிலத்தில் எழுதிக் கொண்டிருந்தார் என்றும் கல்கி இவரை தமிழில் (விகடனில்) எழுத வைத்தார் என்றும் தெரிகிறது. வெங்கட் சாமிநாதன் இவரை மிகவும் சிலாகித்து ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார் (பகுதி 1, பகுதி 2). நான் சொன்னேன் இல்லையா, பெரிசுங்களுக்கு(த்தான்) இவரை பிடிக்கும் என்று!

கோடலின் நிரூபணம் (Godel’s Proof)

ஒரு விதத்தில் பார்த்தால் கணிதம் என்பதே பல தேற்றங்களின் தொகுப்புதான். தேற்றம் என்பதை formal ஆக இப்படி வரையறுக்கலாம். நமக்கு தெரிந்த “உண்மைகளை”, தேற்றங்களை ஆதாரமாக வைத்து இன்னும் சில தேற்றங்களை கண்டுபிடிக்கிறோம். உதாரணமாக நமக்கு இப்படி ஒரு தேற்றம் தெரியும் என்று வைத்துக் கொள்வோம் – எந்த எண்ணையும் பூஜ்யத்தால் பெருக்கினால் பூஜ்யம்தான் விடை. அதாவது: For all x , x times 0 is 0 என்று நமக்குத் தெரியும். இந்த தேற்றத்தை அடிப்படையாகக் கொண்டு இப்போது ஒரு புதிய தேற்றத்தை நாம் நிறுவ முடியும். இரண்டு எண்களின் பெருக்குத் தொகை பூஜ்யம் என்றால் அந்த இரண்டில் ஏதோ ஒரு எண் பூஜ்யம். அதாவது: if x times y is 0, then x is 0 or y is 0. சிம்பிள், சரிதானே! இப்படி தேற்றங்களை கண்டுபிடித்துக் கொண்டே போகலாம்.

கணிதத்தின் லட்சியமே இதுதான் என்று சொல்லலாம். மிகச் சில axioms – இவைதான் அடிப்படை விதிகள் – மற்றும் வரையறைகளோடு ஆரம்பிக்க வேண்டும். இந்த அடிப்படை விதிகள், வரையறைகள் பொதுவாக நிஜ வாழ்க்கையிலிருந்து எடுக்கப்படும். (இரண்டு கோடுகள் ஒரு புள்ளியில்தான் சந்திக்கும் என்கிற மாதிரி) அந்த அடிப்படை விதிகளை அஸ்திவாரமாக வைத்து மேலும் மேலும் தேற்றங்கள் நிறுவப்படும். நிறுவுவதற்கு லாஜிக் பயன்படுத்தப்படும். எந்தக் காலத்திலும் 1=2 என்பது போன்ற தவறுகளை தேற்றங்களாக நிறுவமுடியாது. இருக்கும் அத்தனை தேற்றங்க ளையும் நிறுவக் கூடிய ஆற்றல் அந்த axioms, மற்றும் லாஜிக்குக்கு இருக்க வேண்டும். Trivial ஆக சொன்னால்: கூட்டல் என்ற சின்ன விஷயத்தை எடுத்துக் கொள்வோம். எல்லா கூட்டல் உண்மைகளையும் நிறுவ வேண்டியதில்லை. உதாரணமாக 176000 கோடியுடன் ஒன்றைக் கூட்டினால் என்ன விடை என்று ஏற்கனவே நிறுவி இருக்க வேண்டியதில்லை, ஆனால் நிறுவக் கூடிய ஆற்றல் கூட்டல் என்ற சிஸ்டத்துக்கு இருக்க வேண்டும்.

இது அற்ப விஷயம் இல்லை. மயிர் பிளக்கும் விஷயமும் இல்லை. நான்கு வண்ண தேற்றம் (Four Color Theorem) என்று ஒரு தேற்றம் இருக்கிறது. – ஒரு மேப்பில் (map) பல பிரதேசங்களை காட்டுகிறோம். ஒவ்வொரு பிரதேசத்துக்கும் ஒரு வண்ணம் கொடுக்கிறோம். அடுத்தடுத்து இருக்கும் பிரதேசங்களுக்கு (அதாவது இந்த பிரதேசங்களுக்கு ஒரு பொதுவான எல்லை இருக்கிறது) வேறு வேறு வண்ணம் கொடுத்தால்தான் அவை வேறு வேறு பிரதேசங்கள் என்று தெரியும் இல்லையா? அப்படித்தான் கொடுக்கப் போகிறோம். அதிக பட்சம் எத்தனை வண்ணங்கள் வேண்டும்? நான்கு வண்ணங்கள் போதும் என்கிறது இந்த தேற்றம். இதை சமீபத்தில்தான் நிறுவ முடிந்தது. அது வரை இந்த தேற்றம் உண்மைதானா, உண்மையாக இருந்தாலும் கணிதத்தால் அதை உண்மை என்று நிறுவ முடியுமா என்று தெரியவில்லை. இப்படி நீண்ட காலமாக நிறுவ முடியாத தேற்றங்கள் உண்டு – Goldbach’s Conjecture இன்னும் நிறுவப்படவில்லை. Fermat’s Last Theorem நானூறு வருஷங்களுக்குப் பிறகு சமீபத்தில்தான் நிறுவப்பட்டது.

பல கணித மேதைகள் சரியான அடிப்படை விதிகளைக் கொண்டு (தேவைப்பட்டால் இன்னும் சில அடிப்படை விதிகளை சேர்த்துக் கொண்டாவது) எல்லா உண்மையான தேற்றங்களையும் நிறுவும் ஆற்றல் கணிதத்துக்கு உண்டு என்று நிறுவ முயற்சி செய்தார்கள். பெர்ட்ராண்ட் ரஸ்ஸல், டேவிட் ஹில்பர்ட் போன்றவர்கள் இவர்களில் பிரபலமானவர்கள். இவர்கள் எல்லாருக்கும் கர்ட் கோடல் (Kurt Godel ) ஆப்பு வைத்துவிட்டார்.

கோடல் 1931-இல் ஒரு seminal பேப்பரை எழுதினார். அடிப்படை விதிகள், லாஜிக் என்று போகும் எந்த சிஸ்டத்திலும் சில உண்மையான தேற்றங்களை நிறுவ முடியாது என்பதுதான் அவரது கண்டுபிடிப்பு. அதாவது எந்த கணித சிஸ்டமும் முழுமையானது இல்லை. எல்லா உண்மையான தேற்றங்களையும் இப்படிப்பட்ட – அடிப்படை விதிகள், அதை வைத்து தேற்றங்கள், நிறுவப்பட்ட தேற்றங்களை வைத்து மேலும் தேற்றங்கள் – எந்த சிஸ்டத்தாலும் நிறுவ முடியாது. அடிப்படை விதிகளை எவ்வளவு விரிவுபடுத்தினாலும் இது முடியாத காரியம். இதைத்தான் கோடல் இந்த பேப்பரில் நிரூபிக்கிறார்.

கோடலின் இந்த கண்டுபிடிப்பைப் பற்றி எர்னெஸ்ட் நேகல் (Ernest Nagel), மற்றும் ஜேம்ஸ் நியூமன் (James Newman ) இருவரும் ஒரு சின்ன புத்தகம் – Godel’s Proof – எழுதி இருக்கிறார்கள். கோடல், எஷர் அண்ட் பாக் (Godel, Escher and Bach) என்ற புகழ் பெற்ற புத்தகத்தை எழுதிய டக்ளஸ் ஹாஃப்ஸ்டட்டர் (Douglas Hofstadter) அதன் இரண்டாம் பதிப்பை கொண்டு வந்திருக்கிறார். (என்) தலையை சுற்ற வைக்கும் கணிதத்தை சிம்பிளாக சொல்ல முயற்சித்திருக்கிறார்கள்.

சின்ன புத்தகம்தான். நூறு பக்கம் இருக்கலாம். 75 பக்கத்துக்கு மேல்தான் (எனக்கு) தலை சுற்ற ஆரம்பிக்கிறது. ஆனால் படித்துப் புரிந்து கொள்ளக் கூடிய புத்தகம்தான்.

நான் புரிந்து கொண்டது இதுதான். கணித நிரூபணம் என்பது ஒரு விதமான மொழி. For all x , x times 0 is 0 என்பதை நீங்கள் கணித மொழியின் alphabet-இல் சில குறியீடுகளை வைத்து சுருக்கமாக எழுதலாம். அந்த கணித font-ஐ வோர்ட்பிரஸ்ஸில் எப்படி பயன்படுத்துவது என்று தெரியாததால் நான் ஆங்கிலத்தில் அதை விரிவாக எழுத வேண்டி இருக்கிறது.

இந்த alphabet-இன் ஒவ்வொரு எழுத்துக்கும் கோடல் ஒரு எண்ணை map செய்கிறார். உதாரணமாக 0 என்ற குறியீட்டுக்கு 6 என்று ஒரு எண். (இது கோடலின் mapping இல்லை, நான் ஒரு உதாரணம் கொடுத்திருக்கிறேன், அவ்வளவுதான்) அப்படி என்றால் ஒவ்வொரு ஸ்டேட்மென்டையும் ஒரு எண்ணாக மாற்றலாம். இதுதான் அந்த ஸ்டேட்மேன்டின் கோடல் எண் (Godel Number). ஒவ்வொரு நிரூபணத்திலும் உள்ள ஸ்டேட்மென்ட்களை இப்படி கோடல் எண்ணாக மாற்றலாம். ஒவ்வொரு நிரூபணமும் ஒரு சில கோடல் எண்களின் தொகுப்பே.

கணிதத்தில் சில புகழ் பெற்ற paradoxes உண்டு. சிம்பிளான ஒரு ஸ்டேட்மெண்டை எடுத்துக் கொள்வோம் – “நான் சொல்வதெல்லாம் பொய்”. நான் சொல்வதெல்லாம் பொய் என்றால் இந்த ஸ்டேட்மெண்டும் பொய். அப்படி என்றால் நான் சொல்வதெல்லாம் பொய் இல்லை, இந்த ஒரு ஸ்டேட்மென்டாவது உண்மை! ஆனால் இந்த ஸ்டேட்மென்ட் உண்மை என்றால் நான் சொல்வதெல்லாம் பொய். அப்படி என்றால் இந்த ஸ்டேட்மென்ட் பொய்!

இதன் இன்னொரு புகழ் பெற்ற வடிவம்தான் நாவிதன் paradox. (barber paradox ). தமிழில் எழுதி மூச்சு வாங்குவதால் ஆங்கிலத்திலேயே கட் பேஸ்ட் செய்கிறேன்.
Suppose there is a town with just one male barber; and that every man in the town keeps himself clean-shaven: some by shaving themselves, some by attending the barber. It seems reasonable to imagine that the barber obeys the following rule: He shaves all and only those men in town who do not shave themselves.
Under this scenario, we can ask the following question: Does the barber shave himself?
Asking this, however, we discover that the situation presented is in fact impossible:
If the barber does not shave himself, he must abide by the rule and shave himself.
If he does shave himself, according to the rule he will not shave himself.

கோடலின் நிரூபணமும் இதன் ஒரு வடிவத்தைத்தான் பயன்படுத்துகிறது. இந்த கோடல் எண்களின் தொகுப்பை நிறுவ முடியாது என்ற தேற்றத்தை கோடல் நிறுவ முயற்சிக்கிறார். முடிவதில்லை. அதுதான் சிஸ்டத்தின் முழுமை அற்ற தன்மையைக் காட்டுகிறது. (எனக்கு இந்த பகுதி கொஞ்சம் ததிங்கினத்தோம், மீண்டும் படிக்க வேண்டும்)

பொதுவாக self-referential ஸ்டேட்மென்ட்கள் கணிதத்தில் பெரிய பிரச்சினை. அதை கோடல் formal ஆக அணுகி நம் விஞ்ஞானத்தின் முழுமை அற்ற தன்மையை காட்டுகிறார்.

புத்தகத்தை படியுங்கள் என்று சிபாரிசு செய்கிறேன். அமேசான் தளத்தில் கிடைக்கிறது. ஏழு டாலர் சொச்சம் விலை.

கணையாழியின் கதை – கஸ்தூரிரங்கன்

கணையாழி தொகுப்பு என்று இரண்டு வால்யூம்கள் என்னிடம் இருக்கின்றன. கஸ்தூரிரங்கன் எழுதிய முன்னுரையில் அவர் கணையாழியை எப்படி ஆரம்பித்தார் என்று விவரிக்கிறார். ஓவர் டு கஸ்தூரிரங்கன்!

புது தில்லி. பொழுது போகாத ஒரு மாலை வேளையில் நண்பர் ரங்கராஜனுடன் அரட்டை அடித்துக் கொண்டிருந்தபோது பத்திரிகை ஆரம்பிக்கும் யோசனை தோன்றியது. இது போன்ற விபரீத ஆசைகள் அவ்வப்போது தோன்றுவது உண்டு. சினிமா எடுக்க வேண்டும்; நாடகம் நடத்த வேண்டும்; மிருந்தங்க வித்வானாக வேண்டும்; மானசரோவர் யாத்திரை போய் வர வேண்டும். சமுதாயத்தை சீர்திருத்த ஒரு இயக்கம் ஆரம்பிக்க வேண்டும் என்றெல்லாம் திட்டம் போட்டுக்கொண்டு அதை அப்படியே கைவிட்டு விடுவது வழக்கம்.

பத்திரிகை ஆரம்பிப்பது ஒரு செயல்படுத்தக் கூடிய திட்டமாகத் தோன்றியது. அன்றைய விலைவாசியில் ஐநூறு ரூபாய் இருந்தால் 32 பக்கங்களுக்கு ஆயிரம் பிரதிகள் அச்சடித்து விடலாம். ஆண்டுச் சந்தா ஐந்து ரூபாய் என்று ஒரு ஆயிரம் பேரைப் பிடித்து விடலாம். மேலும் ஐநூறு முதல் ஐயாயிரம் பிரதி வரை ஏஜெண்டுகள் மூலம் விற்று விட பத்தாயிரம், ஐம்பதாயிரம் என்று பெருகி ஐந்து லட்சம் வர கூட எட்டி விடலாம். இதெல்லாம் என்னுடைய அல்நாஷர் கனவு. பேஷாகச் செய்து விடலாம் என்று சொன்னார் ரங்கராஜன். தன் பங்குக்கு ஒவ்வொரு இதழிலும் எழுதுவதாக உறுதி அளித்தார்.

தமிழில் வெளிவந்து கொண்டிருந்த பத்திரிகைகளிலிருந்து வித்தியாசமாக இருக்க வேண்டும். அரசியல், ஆன்மிகம், மருத்துவம், அத்துடன் கொஞ்சம் இலக்கியம் என்று முடிவாயிற்று. ஆங்கிலப் பத்திரிகைகளின் தரத்தில் அறிவார்த்தமாக இருக்க வேண்டும். ஜோக்குகள் கூடாது. அப்போது கலைமகள் தரமான இலக்கிய இதழாக வெளிவந்து கொண்டிருந்தது. தி. ஜானகிராமன், லா.ச.ரா., அகிலன் மற்றும் பிறமொழிக் கதைகள் என்று நன்றாக வந்து கொண்டிருந்தது. ‘கலைமகள்’ போல் ஒரு தமிழ் பெயராக இருக்க வேண்டும் என்று யோசித்து ‘கணையாழி‘ என்ற பெயரை வைத்தேன். அதை முறைப்படி பதிவு செய்து முதல் இதழுக்காக விஷயங்களைச் சேகரித்தேன். பாதி நானே எழுதியது. ஸ்ரீரங்கம் எஸ்.ஆர். என்ற பேரில் ரங்கராஜன் ஒரு பக்கம் எழுதித் தந்தார். பிற்காலத்தில் அவர் சுஜாதா என்று பிரபலமானார்.

தில்லிக்கு அப்போது வந்திருந்த ஜெயகாந்தனுடன் ஒரு பேட்டி, கலைமகளில் அரசியல் கட்டுரைகள் எழுதி வந்த கே. ஸ்ரீனிவாசன் கட்டுரை, ஓரிரண்டு கதைகள் என்று நாற்பது பக்கத்திற்கு விஷயங்கள் தயாராகி விட்டன. சினிமா, நாடகம் பற்றிய தகவல்கள், விமர்சனங்கள், ந. பிச்சமூர்த்தி கவிதைகள் பற்றி ச.து. நளினியின் ஒரு அலசல் என்றெல்லாம் இருந்தன.

தில்லியில் அப்போது தமிழ் அச்சகம் இல்லை. அதனால் சென்னைக்குச் சென்று ஒரு மாதம் தங்கி அச்ச்சகமே கதி என்று உட்கார்ந்தேன். ஆனால் ஒரு மாதத்திற்குள் வேலை முடியவில்லை. என்னுடைய அலுவலகத்தில் அதற்கு மேல் விடுப்பு கிடையாது என்ற எச்சரிக்கையுடன்தான் புறப்பட்டேன். நான் அப்பொழுது அமெரிக்கப் பத்திரிகையான ‘நியூயார்க் டைம்ஸ்’ தில்லி அலுவலகத்தில் ஒரு அமெரிக்கருக்கு உதவி நிருபராக இருந்தேன்.

டெம்மி சைசில் நாற்பது பக்கம் என்று திட்டமிட்டிருந்தது. ஆனால் இருபத்திநாலு பக்கங்கள்தான் அச்சடிக்க முடிந்தது. இரண்டாயிரம் பிரதிகள். பைண்ட் செய்து தில்லிக்கு அனுப்பி விடுங்கள் என்று சொல்லிவிட்டு என் உறவினர் ஒருவரை அதற்குப் பொறுப்பாக்கி திரும்பி விட்டேன். பிரதிகள் வந்து சேர மேலும் இரண்டு வாரங்களாகின.

ஜூலை 1965, விலை 40 காசு என்று முதல் பக்கத்தில் அச்சடித்து வந்த கணையாழி ஆகஸ்ட் 15-ஆம் தேதிதான் வெளி வந்தது. அட்டைப் படமாக இந்தியா தேசம். அதற்குள் நேருவும் சாஸ்திரியும். அதுதான் அட்டைப்படக் கட்டுரை. ஜவஹர்லால் நேரு காலமாகி லால்பகதூர் சாஸ்திரி பிரதமராகப் பொறுப்பேற்று ஓராண்டு முடிந்திருந்தது. நாடு சிறப்பாக முன்னேறுவதற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்று சாஸ்திரிக்கு ஆலோசனைகள் வழங்கி இருந்தேன். அவற்றை செயல்படுத்த வாய்ப்பில்லாமலேயே அவர் அடுத்த சில மாதங்களுக்குள் இறந்து போய் விட்டார். இரண்டாயிரம் பிரதிகளை என்ன செய்வது? சென்னையில் ஒரு ஏஜென்ட் ஐநூறு பிரதிகள் வாங்கிக் கொண்டார். தில்லியில் கன்னாட் பிளேசில் இருந்த சௌத் இந்தியா ஹோட்டலில் ஆயிரம் காப்பிகள் விற்பனைக்குக் கொடுத்தேன். சென்னையில் நூறு பிரதிகளும் தில்லியில் ஐம்பது பிரதிகளும் விற்றன. ஐநூறு பிரதிகளை இலவசமாக பலருக்கு அனுப்பினேன். ஆனாலும் உற்சாகம் குறையவில்லை. படித்தவர்கள் நன்றாக இருக்கிறது, வித்தியாசமாக இருக்கிறது, நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று பாராட்டினார்கள்.

சந்தாக்கால் வரத் தொடங்கின. அதற்கு மேல் எழுத்தாளர்களின் படைப்புகளும் வரத் துவங்கின. தில்லிவாசிகளான சுப்புடு, பி.எஸ். ரங்கநாதன், பூர்ணம் விஸ்வநாதன், லா.சு.ர. (லா.சு. ரங்கராஜன்) போன்றவர்கள் எழுதினார்கள். அதன் பிறகு இந்திரா பார்த்தசாரதி, தி. ஜானகிராமன், என்.எஸ். ஜகன்னாதன், கே.எஸ். ஸ்ரீனிவாசன் என்று ஒரு ஐந்து நட்சத்திரத் தரத்தில் படைப்புகள் கணையாழியில் வெளி வரத் துவங்கின.

இளம் எழுத்தாளர்கள் ஆதவன், சம்பத், மாலன், பாலகுமாரன் ஆகியோர் ஆர்வத்துடன் எழுதினார்கள். ஞானக்கூத்தன், எஸ். வைத்தீஸ்வரன், தி.ஸௌ. வேணுகோபாலன், சி. மணி முதலான ‘எழுத்து‘க் கவிஞர்கள் புதுக் கவிதைகள் எழுதினார்கள். முக்கியமாக அசோகமித்திரன் கணையாழியின் பொறுப்பாசிரியராக சென்னையிலிருந்து செயல்பட்டார். முகவும் பொறுப்புடன் பிரதிபலன் எதிர்பார்க்காது மாதாமாதம் கணையாழியை அச்சடித்து தில்லிக்கு அனுப்பி வைத்தார். அவருடைய கட்டுரைகள், கதைகள், தொடர்கதை என்று ஒவ்வொரு இதழிலும் ஏதாவது உண்டு. விமர்சனக் கட்டுரை, சுஜாதாவின் கடைசிப் பக்கம், சுப்புடுவின் சங்கீத வித்வான்கள் அறிமுகம் என்று இதழ் தவறாமல் வெளிவந்தன. நேர்முகப் பேட்டிகள். இந்திரா காந்தி, மொரார்ஜி, காமராஜ், அண்ணா, கருணாநிதி போன்ற பெரிய அரசியல் புள்ளிகளுடன், கணையாழிக்கு ஒரு அந்தஸ்து கிடைத்தது. ஆனால் விற்பனை எண்ணிக்கை ஆயிரத்துக்கும் குறைவாகவே இருந்தது.

முப்பது ஆண்டுகள் நடத்திய பின் கணையாழியின் பொருளாதாரமும் என் உடல் நிலையும் நலிந்து போக பத்திரிகை நடத்தும் பொறுப்பை ‘தசரா’ அறக்கட்டளைக்கு மாற்றிய கட்டத்தில் அதன் உச்ச கட்ட விற்பனை மூவாயிரம் பிரதிகள்தான். அறிவார்த்தமான ‘சீரியஸ்’ படைப்புகளுக்கு தமிழக வாசகர்களிடமிருந் ஆதரவு அதிக அளவில் எப்போதுமே இருந்ததில்லை.

என் பொறுப்பில் முப்பது ஆண்டுகள் வெளிவந்த கணையாழியின் தொகுப்ப்களை வெளியிட வேண்டும் என்ற ஆசை வெகு காலமாகவே எனக்கு இருந்தது. ஆனால் அதற்கும் ஊக்கத்துடன் ஆதரவு தர யாரும் முன்வரவில்லை. திட்டத்தை கைவிட்டு விடலாம் என்று முடிவு செய்தபோது கடவுளே அனுப்பியது போல ‘கலைஞன்’ நந்தா முன் வந்தார். பத்தாண்டுகளுக்கு ஒரு தொகுப்பாக மூன்று தொகுப்புகளை வெளியிடுவதாக அவர் சொன்னபோது நான் வியப்படைந்தேன். அவருடைய தன்னம்பிக்கையைப் பாராட்டிவிட்டு என்னுடைய சம்மதத்தையும் கொடுத்தேன். முதல் பத்தாண்டுத் தொகுப்புகள் காணாமல் போய்விட்டன. யாரிடமோ கொடுத்துத் திரும்பி வரவில்லை. இந்நிலையில்தான் வே. சபாநாயகம் கிடைத்தார். ஆரம்பத்திலிருந்து இன்று வரை ஓர் இதழ் விடாமல் சேர்த்து பைண்ட் செய்து வைத்திருக்கும் சபாநாயகம் ஓர் இலட்சிய வாசகர். சிறந்த படைப்பாளியும் கூட. கணையாழியில் குறுநாவல், கட்டுரைகள் என்று எழுதி இருக்கிறார். எனவே அவரை விட பொருத்தமான தொகுப்பாசிரியர் வேறு யாரும் இருக்க முடியாது என்று நந்தாவிடம் சொன்னேன்.

முத்த பத்தாண்டு கணையாழியில் வெளிவந்த ஏராளமான படைப்புகளிலிருந்து மிகவும் அக்கறையுடன் தேர்வு செய்து தந்திருக்கிறார். ஆரம்ப கால நோக்கங்களைப் பூர்த்தி செய்யும் விதமாக இந்த முதல் தொகுப்பு அமைந்திருக்கிறது. அரசியல் முதல் இலக்கியம் வரை பலதரப்பட்ட விஷயங்கள். பிற்பாடு கணையாழியில் இலக்கிய மணம் அதிகமாக கமழ ஆரம்பித்து அரசியல் வாடை அமுங்கி விட்டது. இதற்குக் காரணம் தமிழில் புதிது புதிதாக இலக்கியம் எழுத ஆரம்பித்திருக்கும் இளைஞர்கள். இவர்களில் பலர் கணையாழியில்தான் முதலில் எழுதி அதனாலேயே ஒரு இலக்கியப் படைப்பாளி என்று முத்திரை பெற்று வேறு பத்திரிகைகளில் எழுதிக் கொண்டிருப்பவர்கள். கணையாழியின் ஒரு சாதனை என்று சொல்ல வேண்டுமானால் புதிய எழுத்தாளர்களுக்கு ஊக்கம் கொடுத்து அவர்களை இலக்கிய உலகுக்கு உரிய முறையில் அறிமுகம் செய்து வைத்ததைச் சொல்லலாம்.

முப்பது ஆண்டுகள் தொடர்ந்து வெளிவந்த கணையாழி இக்கால கட்டத்தில் தனக்கென்று ஒரு சிறப்பான இடத்தைப் பெற்றிருக்கிறது என்றால் அதற்குரிய பெருமை என்னுடன் ஒத்துழைத்த நண்பர்கள், எழுத்தாளர்கள் மற்றும் இந்தியாவிலும் அயல் நாடுகளிலும் பரந்து விரவி இருக்கும் கணையாழி வாசகர்களையே சேர வேண்டும்.

இந்தத் தொகுப்பில் காணப்படும் படைப்புகள் பல பல்வேறு படைப்பாளிகளின் தனி வெளியீடுகளிலும் இடம் பெற்றுள்ளன. முதல் ஒன்பது ஆண்டு கணையாழி கதைகள் மற்றும் கவிதைகள் 1986-இலேயே பிரசுரமாகி இருக்கின்றன. அவற்றிலுள்ள படைப்புகளை இத்தொகுப்பில் தவிர்த்திருக்கிறோம். மேலும் இரண்டு தொகுப்புகள் அடுத்தடுத்து வரவிருக்கின்றன. இன்டர்நெட்டிலும் முப்பதாண்டு கால கணையாழியின் உள்ளடக்கம் ஒன்று கூட விடாமல் பதிவாகி இருக்கிறது. http://www.ambalam.com என்ற முகவரியிலிருந்து பெறலாம்.

அம்பலம் டாட் காம் என்ற இணைய முகவரி இப்போது வேலை செய்யவில்லை. யாருக்காவது புதிய முகவரி தெரியுமா?

மூன்று வால்யூம்கள் வரும் என்று சொல்லி இருக்கிறார். மூன்று வந்ததா இல்லை இரண்டோடு நின்றுவிட்டதா?

கஸ்தூரிரங்கன் குறிப்பிட்டிருக்கும் பி.எஸ். ரங்கநாதன் கடுகு என்ற புனைபெயரில் பிரபலமானவர்.

தொகுப்பாசிரியர் வே. சபாநாயகத்தின் ப்ளாக் இங்கே.

தொடர்புடைய சுட்டி:
கஸ்தூரிரங்கன் மறைவு
கணையாழி அனுபவம் – வே. சபாநாயகம்

கணையாழி கஸ்தூரிரங்கன் மறைவு

கஸ்தூரிரங்கன் மறைந்தார் என்பது வருத்தமாக இருந்தது. இத்தனைக்கும் எனக்கும் கணையாழிக்கும் ஸ்நானப்ராப்தி கூட கிடையாது.

நான் கிராமங்களில் வளர்ந்தவன். வீட்டில் குமுதம் விகடன் புழங்கும். கல்கி, கலைமகள், துக்ளக் பற்றி பிரக்ஞை இருந்தது. உள்ளூர் நூலகத்தில் மஞ்சரி, கலைக்கதிர் (தமிழில் எனக்குத் தெரிந்து வந்த ஒரே ஒரு விஞ்ஞானப் பத்திரிகை) , செங்கோல் (இதுதான் ம.பொ.சி. நடத்திய பத்திரிகை என்று நினைக்கிறேன்), திட்டம் என்றெல்லாம் பத்திரிகைகளைப் பார்த்திருக்கிறேன். என் உறவினர் ஒருவர் தீபம் பத்திரிகையை அச்சடித்தாரோ என்னவோ, அதனால் அந்தப் பத்திரிகையைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். கணையாழி? அதைப் பற்றி கேள்விப்படும்போது எனக்கு இருபது வயது இருக்கலாம். அப்போது பத்திரிகையே நின்று போய்விட்டது என்று நினைக்கிறேன்.

ஆனால் கணையாழி ஒரு பெரும் இயக்கம். விடுதலைக்கு முற்பட்ட ஒரு தலைமுறைக்கு மணிக்கொடி என்றால் இரண்டு மூன்று தலைமுறைக்கு கணையாழிதான். சரஸ்வதி, எழுத்து, தாமரை என்றெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் இந்த இரண்டு பத்திரிகைகளின் தாக்கம் வேறு எதற்கும் இருந்ததாகத் தெரியவில்லை. இவை இரண்டும் இல்லாவிட்டால் வணிக எழுத்து நல்ல இலக்கியத்தை விழுங்கி இருக்கும்.

என்னிடம் கணையாழி தொகுப்புகள் என்று இரண்டு வால்யூம்கள் இருக்கின்றன. அவற்றைப் புரட்டிப் பார்த்தபோது முன்னுரையில் கஸ்தூரிரங்கன் எந்தக் காலத்திலும் கணையாழியின் விற்பனை மூவாயிரத்தைத் தாண்டியதில்லை என்று குறிப்பிடுகிறார். ஆயிரம்தான் சராசரி விற்பனை போலத் தெரிகிறது. மிஞ்சிப் மிஞ்சிப் போனால் ஒரு பத்தாயிரம் பேர் ரெகுலராக படித்திருப்பார்களா? இத்தனை குறைவான விற்பனை உள்ள ஒரு பத்திரிகை எப்படி இவ்வளவு பெரிய தாக்கத்தை உருவாக்கியது? என் கண்ணில் அதுதான் கஸ்தூரிரங்கனின் சாதனை.

மணிக்கொடி, வாசகர் வட்டம், கணையாழி, சுபமங்களா போன்றவற்றை நான் நல்ல எழுத்துகளை விரும்பும் லட்சியவாதிகளின் சாதனைகள் என்று கருதுகிறேன். கஸ்தூரிரங்கனுக்கு என் மனமார்ந்த நன்றி!

லக்ஷ்மியின் “காஞ்சனையின் கனவு”

லக்ஷ்மி ஒரு காலத்தில் ஸ்டார் எழுத்தாளார். அவரும் ஒரு சிம்பிள் ஃபார்முலாவை பயன்படுத்தினார் – “பத்தினிக்கு இன்னல் வரும் பழையபடி தீரும்” – இந்த ஃபார்முலாவை அவர் ஐம்பதுகளின், அறுபதுகளின் மத்திய தர வர்க்க, வேலைக்கு போக ஆரம்பித்த பெண்களின் மனம் கவரும் வண்ணம் சித்தரித்தார். ஒரு பத்து வருஷங்களாவது பெண்களின் மன நிலையை உண்மையாக எழுத்தில் கொண்டு வந்தார். ஆனால் அவர் நினைவு வைத்துக் கொள்ள வேண்டிய எழுத்தாளர் இல்லை. அவர் எழுதிய மிக சிறந்த நாவல்களாக கருதப்படும் மிதிலா விலாஸ், பெண் மனம் போன்ற அத்தனையும் என் கண்ணோட்டத்தில் வெறும் fluff. அவருடைய எழுத்துகளை 2009-இல் தமிழக அரசு நாட்டுடமை ஆக்கியது, ஆனால் அவரது வாரிசுகள் இதை மறுத்துவிட்டார்கள். (இன்னும் புத்தகங்கள் விற்று நல்ல ராயல்டி வருகிறது போலும்!)

காஞ்சனையின் கனவும் அப்படித்தான். நினைவு வைத்துக் கொள்ள வேண்டிய நாவல் இல்லை. ஆனால் இந்த புத்தகத்தில் தெரியும் அந்தக் கால விழுமியங்கள் சுவாரசியமாக இருக்கின்றன. கதையின் நாயகனுக்கு ஒரு தாசியின் பெண்ணோடு தொடுப்பு. தாசி குலத்துப் பெண்ணானாலும் அவள் கற்புக்கரசி. அப்படி ஒரு பெண்ணை “வைத்துக்கொண்டு” இருக்கும்போதே வேறு ஒரு பெண்ணை மணந்துகொள்கிறான். இது கதையில் யாருக்கும் தவறாகத் தெரியவில்லை! இன்றைக்கு இப்படி ஒரு நாவல் வந்தால் பெண்ணியவாதிகள் கொதித்தெழுவார்கள்.

சிம்பிளான, பெரிய முடிச்சுகள் எதுவும் இல்லாத கதை. ஊரில் ஒரு பண்ணையார். தொழில் செய்யப் பார்க்கிறார். அவருக்குத்தான் தாசி குலப் பெண்ணோடு தொடுப்பு. அந்த பெண் இவரை கணவனாக வரித்திருக்கிறாள். நடுவில் இவர் ஒரு ஏழைப் பெண்ணைப் பார்த்து மயங்கி அவளை கல்யாணம் செய்து கொள்கிறார். ஒரே நேரத்தில் இரண்டு பேரிடமும் அன்பாக இருக்கிறார். மனைவியும் துணைவியும் இன்னொருத்தி வந்துவிட்டாளே என்று அழுவதைக் கூட பண்ணையார் இல்லாதபோதுதான் செய்வார்கள், அப்படிப்பட்ட பத்தினி தெய்வங்கள். (முடியல!) பண்ணையார் அந்தஸ்து பார்க்கிறார், அதனால் அவர் தன் மனைவியின் தாத்தாவைத் தவிர்க்கிறார். மனைவியின் அண்ணன் ஒரு டாக்டர். அந்தக் காலத்தில் டாக்டர்கள் கூட ஏழையாக இருந்தார்கள் போலிருக்கிறது. சரி லக்ஷ்மியே ஒரு டாக்டர் அவருக்குத் தெரியாதா? டாக்டர் சீதாவோடு அவனுக்கு காதல். சீதா பண்ணையாருக்கு உறவு. பண்ணையார் வீட்டுக்கு சீதா வரும்போது இவர் அவளையும் பார்த்து சபலப்படுகிறார். ஏற்கனவே வைப்பு விஷயத்தில் சோகமாக இருக்கும் கர்ப்பிணி மனைவி வீட்டை விட்டு ஓடிவிடுகிறாள். அண்ணனும் தவறாகப் புரிந்துகொண்டு எங்கோ போய்விடுகிறான். அப்புறம் உண்மை எல்லாம் தெரிகிறது. வைப்பாட்டி உயிரை விடுகிறாள். எல்லாரும் இணைந்து சுபம்!

கே.ஆர். ராமசாமி (ஹீரோ), லலிதா (ஹீரோயின்), பத்மினி (தாசியின் பெண்), மனோகர், நம்பியார் நடித்து காஞ்சனா என்ற திரைப்படமாகவும் வந்தது. ராண்டார்கை இந்தப் படத்தைப் பற்றி இங்கே எழுதி இருக்கிறார்.

ஜெயமோகன் காஞ்சனையின் கனவு நாவலைத் தன் பரப்பிலக்கிய லிஸ்டில் சேர்த்திருக்கிறார். அவர் அப்படி சேர்க்காவிட்டால் இந்த நாவலைப் பற்றி பதிவு எழுதி இருக்கவே மாட்டேன். அவர் நல்ல இலக்கியம் என்று சுட்டிக் காட்டுபவை எனக்கு அனேகமாக பிடித்திருக்கின்றன. ஆனால் அவர் பொருட்படுத்த வேண்டிய வணிக எழுத்து என்று சுட்டிக் காட்டுபவை பல முறை தண்டமாகத் தெரிகிறது. இருந்தாலும் அவர் சொல்லி இருக்கும் அத்தனை புத்தகங்களையும் பற்றி எழுத வேண்டும் என்று ஒரு ஆசை. இலக்கியத்தை தேர்ந்தெடுக்க மிகவும் கறாரான அளவுகோல் வைத்திருக்கும் அவர் வணிக எழுத்து என்று வந்துவிட்டால் எப்படியாவது பாஸ்மார்க் போட்டுவிடலாம் என்று நினைக்கும் வாத்தியாரைப் போல இருக்கிறார். 🙂 சின்ன வயதில் அவருக்கு பிடித்திருந்த கதைகளைத் தேர்ந்தெடுக்கிறாரோ என்னவோ. 🙂

என் கண்ணில் லக்ஷ்மியே இதை விட நல்ல நாவல்களை – மிதிலா விலாஸ், பெண் மனம் – மாதிரி எழுதி இருக்கிறார். இதைத் தவிர்க்கலாம். படமே 1952-இல் வந்திருக்கிறது. கதை நாற்பதுகளில் எழுதப்பட்டிருக்க வேண்டும். வைப்பாட்டியை அப்போது எப்படி பார்த்திருப்பார்கள் என்ற insight தவிர எனக்கு புத்தகத்தில் வேறு ஒன்றும் கிடைக்கவில்லை.

உடுமலை தளத்தில் புத்தகம் கிடைக்கிறது. விலை 105 ரூபாய்.

தொடர்புடைய சுட்டிகள்:
லக்ஷ்மியின் வாழ்க்கைக் குறிப்பு
காஞ்சனா திரைப்படத்தைப் பற்றி ராண்டார்கை