சுஜாதாவின் “எதையும் ஒரு முறை”

கணேஷ்-வசந்த்; ஒரு பிணம்; கணேஷுடன் வேலை செய்ய விரும்பும் ஒரு சட்டக் கல்லூரி மாணவி நிருபமா என்று கதை ஆரம்பிக்கிறது. கணேஷ்-வசந்த் அந்தப் பிணத்தை புறம் தள்ளி கோர்ட், கேஸ், வாய்தா என்று போக விரும்பினாலும் நிருபமாவின் பிடிவாதத்தால் இந்தப் பிணத்தைப் பற்றி விசாரிக்கிறார்கள். அவள் ஒரு லோ கிளாஸ் விபசாரி என்று தெரிகிறது. அவள் வீட்டில் பறவைகளைப் பற்றி ஒரு புத்தகத்தை கண்டுபிடிக்கிறார்கள். அந்தப் புத்தகத்தின் சொந்தக்காரனைப் பிடிக்கிறார்கள். அவன் பெரிய பணக்காரன். வாழ்க்கையில் எதையும் ஒரு முறை செய்து பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவன். அவன்தான் கொலை செய்தவன் என்று சந்தேகித்தாலும் எந்த ஆதாரமும் இல்லை. என்ன செய்யப் போகிறார்கள்? “எதையும் ஒரு முறை” செய்து பார்ப்பான் என்று கணேஷ் தன் டீமை சமாதானப்படுத்துவதோடு கதை முடிகிறது.

கதையில் ஒன்றுமே இல்லை. விபசாரி, நீலப்பட references அந்தக் கால வாசகர்களுக்கு கிளுகிளுப்பு ஊட்டி இருக்கலாம். அதற்காக வலிந்து புகுத்தி இருக்கிறாரோ என்று தோன்றுகிறது. கடைசி வரி நல்ல impact உடையதுதான். ஆனால் கதையோடு முழுதாக ஒட்டவில்லை.

இதே போல கரு உள்ள இன்னொரு கதை – பேர் பாலமோ என்னவோ சரியாக நினைவில்லை – எழுதி இருக்கிறார் என்று நினைவு.

தவிர்க்கலாம். கணேஷ்-வசந்த் என்ற பேர் இல்லாவிட்டால் யாரும் இதை திரும்பிக் கூட பார்க்கமாட்டார்கள்.

கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. விலை எழுபது ரூபாய்.

நட்பாஸ் தன் எண்ணங்களை இங்கே பதித்திருக்கிறார்.

லூயிஸ் சச்சாரின் “ஹோல்ஸ்”

லூயிஸ் சச்சார் (Louis Sachar) எழுதிய ஹோல்ஸ் (Holes) பெரிய அளவில் வெற்றி பெற்ற சிறுவர் புனைவு. நியூபெர்ரி விருது வென்றிருக்கிறது. இந்த விருதை சிறுவர் புனைவுகளுக்கான ஆஸ்கார் என்று சொல்லலாம். ஷியா லெபஃப், சிகர்னி வீவர் நடித்து திரைப்படமாகவும் வந்தது.

ஸ்டான்லி யெல்நாட்ஸ் IV (ஸ்டான்லி என்ற பேரைத் திருப்பிப் போட்டால் யெல்நாட்ஸ் என்று வரும்) செய்யாத குற்றத்துக்காக ஒரு சிறுவர் “ஜெயிலுக்குப்” போகிறான். ஸ்டான்லியின் குடும்பத்துக்கு ஒரு சாபம் உண்டு. அவர்கள் பரம்பரையை துரதிருஷ்டம் துரத்துகிறது. நிறைய பணத்தோடு கலிஃபோர்னியா நோக்கி வரும் ஸ்டான்லியின் தாத்தாவிடமிருக்கும் அத்தனை பணத்தையும் ஒரு திருட்டுக் கும்பல் பறித்துக் கொள்கிறது. அவர்கள் குடும்பம் எப்போதும் கஷ்டத்தில் இருக்கிறது.

ஸ்டான்லியின் ஜெயில் ஒரு காம்ப். வறண்டு போன ஒரு ஏரியில் இருக்கிறது. அங்கே இருக்கும் எல்லா சிறுவர்களும் தினமும் ஒரு குழியைத் தோண்ட வேண்டும். காம்ப் வார்டன் ஒரு கிஸ்ஸிங் கேட் பார்லோ புதைத்துவிட்டுப் போன பொக்கிஷத்தைத் தேடிக் கொண்டிருக்கிறாள். கேட் பார்லோவுக்கும் வார்டனின் தாத்தாவுக்கும் history உண்டு. பார்லோ ஒரு கறுப்பனை விரும்புவதால் அந்த கறுப்பன் கொல்லப்படுகிறான். அதனால் பார்லோ கொள்ளைக்காரி ஆகிறாள். பார்லோவின் புதையலைத் தேடுவது வார்டனின் தாத்தாவிடமிருந்தே ஆரம்பிக்கிறது. மேலும் பார்லோ இட்ட சாபத்தால்தான் அந்த ஊரில் மழை சுத்தமாக நின்று போய் ஏரியும் வறண்டு விடுகிறது.

வார்டனின் கொடுமைகளை தட்டிக் கேட்க ஆளில்லை. நண்பன் ஜெரோனி தண்ணீர் இல்லாத பாலைவனத்துக்கு ஓடுகிறான். அவனைக் காப்பாற்ற ஸ்டான்லியும் பாலைவனத்துக்குப் போகிறான். சாபங்கள் தீர்ந்தனவா, ஸ்டான்லி விடுதலை அடைந்தானா என்பதுதான் கதை.

சிறுவர்களின் லெவலில் நன்றாக எழுதப்பட்டிருக்கும் கதை. பத்து பனிரண்டு வயது வாக்கில் நிச்சயம் த்ரில்லிங் ஆக இருக்கும். முடிச்சுகளை கொஞ்சம் சாமர்த்தியமாக அவிழ்க்கிறார்.

உங்கள் குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுங்கள் என்று சிபாரிசு செய்கிறேன்.

இதற்கு ஒரு sequel-உம் உண்டு – Small Steps. ஜெயிலில் இருந்த இன்னொரு டீனேஜரான ஆர்ம்பிட் இப்போது ஸ்கூல், வேலை என்று சாதாரண வாழ்க்கை வாழ முயற்சி செய்துகொண்டிருக்கிறான். ஒரு பழைய நண்பனின் வற்புறுத்தலால் ஒரு டீனேஜ் பாப் பாடகியின் concert-க்கு ப்ளாக்கில் டிக்கெட் விற்க முயற்சி செய்கிறான். சில பல நிகழ்ச்சிகளால் அந்த பாடகியை சந்திக்கிறான், இருவருக்கும் நடுவில் ஈர்ப்பு ஏற்படுகிறது. பாடகியின் மாற்றாந்தந்தை (stepfather) அவள் பணத்தை அபகரிக்க முயற்சிகள் செய்துகொண்டிருக்கிறான். என்ன ஆகிறது என்று கதை. படிக்கலாம், ஆனால் பிரமாதம் இல்லை.

“மாடர்ன் லைப்ரரி” சிபாரிசுகள்

இன்னும் ஒரு லிஸ்ட் – மாடர்ன் லைப்ரரிக்காரர்கள் சிறந்த நூறு நாவல்கள் என்று ஒரு லிஸ்ட் வெளியிட்டிருக்கிறார்கள். அவர்களது நிபுணர் குழு நூறு நாவல்களைத் தேர்ந்தெடுத்திருகிறது, வாசகர்கள் ஓட்டுப் போட்டு இன்னொரு நூறு நாவல்களை.

வசதிக்காக இங்கே டாப் டென் நாவல்களை கொடுத்திருக்கிறேன். இவற்றில் நான் படித்தது கேட்ச்-22, மற்றும் டார்க்நெஸ் அட் நூன்.

 1. Ulysses by James Joyce
 2. Great Gatsby by F. Scott Fitzgerald
 3. A Portrait of the Artist as a Young Manby James Joyce
 4. Lolita by Vladimir Nabokov
 5. Brave New World by Aldous Huxley
 6. Sound and the Fury by William Faulkner
 7. Catch-22 by Joseph Heller
 8. Darkness at Noon by Arthur Koestler
 9. Sons and Lovers by D.H. Lawrence
 10. Grapes of Wrath by John Steinbeck

கேட்ச்-22-வில் ஒரே ஒரு பாராதான் படிக்க முடியும் –

There was only one catch and that was Catch-22, which specified that a concern for one’s safety in the face of dangers that were real and immediate was the process of a rational mind. Orr was crazy and could be grounded. All he had to do was ask; and as soon as he did, he would no longer be crazy and would have to fly more missions. Orr would be crazy to fly more missions and sane if he didn’t, but if he were sane he had to fly them. If he flew them he was crazy and didn’t have to; but if he didn’t want to he was sane and had to.

டார்க்நெஸ் அட் நூன் சிறந்த புத்தகம். அதன் புத்திசாலித்தனம் என்னை மிகவும் கவர்ந்தது. ஆனால் அது என் டாப் டென்னில் வருமா என்பது சந்தேகம்தான்.

இந்த லிஸ்ட் என் ரசனைக்கேற்றது இல்லை. பல புத்தகங்கள் – ஐ, கிளாடியஸ், ஸ்லாட்டர்ஹவுஸ் ஃபைவ், பிரிட்ஜ் ஆஃப் சான் லூயிஸ் ரே, கிம் – போன்றவை இந்த மாதிரி ஒரு லிஸ்டில் இடம் பெறக் கூடாது. வாசகர்கள் தேர்வோ அதை விட மோசம். ரான் ஹப்பார்ட் போன்றவர்களை கணக்கில் எடுத்துக் கொள்வது முட்டாள்தனம், அவரது Scientology cult உறுப்பினர்கள் வாசகர்கள் தேர்வை ஹைஜாக் செய்துவிட்டார்கள் என்று நினைக்கிறேன். இருந்தாலும் இந்த மாதிரி லிஸ்ட்கள் உபயோகமானவை, அதனால்தான் இங்கே இணைப்பு கொடுத்திருக்கிறேன். இப்போது இருக்கும் மனநிலை தொடர்ந்தால் யார் லிஸ்ட் போட்டு கண்ணில் பட்டாலும் இணைப்பு கொடுத்துவிடுவேன் என்று நினைக்கிறேன். 🙂

மாடர்ன் லைப்ரரிக்காரர்களின் non-fiction தேர்வுகளை இங்கே காணலாம்.

ம்யூசிக் ஆஃப் ப்ரைம்ஸ்

இந்தப் புத்தகத்தைப் பற்றி தமிழில் எழுத வேண்டும் என்று ஆசை. ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. மேலும் கணிதத்தின் குறியீடுகளை எப்படி எழுதுவது என்று தெரியவில்லை.

ப்ரைம் நம்பர் என்றால் தெரிந்திருக்கும். ஒரு எண்ணுக்கு இரண்டே இரண்டு வகுப்பான்கள் (divisor) இருந்தால் அது ப்ரைம் நம்பர். ஏழு ஒரு ப்ரைம் நம்பர். அதை மீதி இல்லாமல் வகுக்கக் கூடியவை இரண்டு எண்கள்தான் – 1, மற்றும் 7. ஆனால் ஆறு ப்ரைம் நம்பர் இல்லை. ஏனென்றால் அதை 1, 2, 3, 6 ஆகிய நான்கு எண்களும் மீதி இல்லாமல் வகுக்கும்.

Natural number set-இல் இந்த ப்ரைம் நம்பர்கள் எப்படி அமைகின்றன என்பது ஒரு புதிர்தான். முதல் பத்து ப்ரைம் நம்பர்களைத் தெரியும் என்றால் அதை வைத்து பதினோராவது ப்ரைம் என்ன என்று கண்டுபிடிக்க முடியாது. பல நூறு வருஷங்களில் இவற்றைப் பற்றி நிரூபிக்க முடிந்த ஒரே விஷயம் இவற்றின் எண்ணிக்கை infinite என்பது மட்டும்தான்.

கவுஸ் என்ற ஜீனியஸ் இவற்றைப் பற்றி முதலில் ஒரு முக்கியமான யூகத்தை – Prime Number Theorem – முன் வைத்தார் – Gauss guessed that the probability that a number N is prime is 1/log(N) where log is taken to the base e.

கவுஸின் மாணவர் ரீமன் – இன்னொரு ஜீனியஸ் – ரீமன் ஜீடா ஃபங்க்ஷன் (Riemann Zeta Function) என்று ஒன்றை நிறுவினார். All non-trivial zeros of this function have real part 1/2 என்பதுதான் புகழ் பெற்ற Riemann Hypothesis. இது இன்னும் நிரூபிக்கப்படவில்லை.

ரீமனின் ஃபங்க்ஷனை என்னால் கணிதக் குறியீடுகள் இல்லாமல் எழுதமுடியவில்லை. ஆனால் விசித்திரமான ஒரு ஈக்வேஷன் அது. அதற்கும் ப்ரைம் நம்பர்களுக்கும் தொடர்பு இருப்பது ஆச்சரியமான விஷயம். ரீமனின் யூகம் நிரூபிக்கப்பட்டால் ப்ரைம் நம்பர்களைப் பற்றி நாம் இன்னும் நிறையப் புரிந்து கொள்ளலாம்.

இதற்கு மேல் என்னால் தமிழில் விளக்க முடியவில்லை. ஆனால் மார்க்ஸ் டு சடோயின் (Marcus du Sautoy) இந்தப் புத்தகம் புரிந்து கொள்ளக் கூடிய அளவில் நிறைய பேசுகிறது. சில இடங்களில் over-simplify செய்கிறார், ஆனால் நல்ல புத்தகம். கணிதத்தில் ஆர்வம் உள்ளவர்கள் படிக்க வேண்டிய புத்தகம்.

இந்தப் புத்தகத்துக்கு ஒரு தளம் இருக்கிறது. Navigation கொஞ்சம் கடியாக இருந்தாலும் கருத்துகளைப் புரிந்து கொள்ள உதவும்.

சார்ஜ் ஆஃப் த லைட் பிரிகேட்


சமீபத்தில் சார்ஜ் ஆஃப் த லைட் பிரிகேட் என்று ஒரு படம் பார்த்தேன். பழைய கறுப்பு வெள்ளை படம். எர்ரால் ஃப்ளின் (எம்ஜிஆரின் ஆதர்ச நடிகர்) ஹீரோ. படம் ஒன்றும் பிரமாதமில்லை. ஆனால் கடைசி பத்து நிமிஷத்தில் பீரங்கிகளை எதிர்த்து அறுநூறு குதிரை வீரர்கள் போரிடுவதைக் காட்டுகிறார்கள். அது ஒரு மகத்தான காட்சி. அந்தக் காட்சியின்போது இடையிடையே லார்ட் டென்னிசனின் புகழ் பெற்ற கவிதையின் வார்த்தைகளையும் ஸ்லைட் போட்டுக் காட்டுகிறார்கள். அந்த வார்த்தைகள் மனதை எழுச்சி கொள்ளச் செய்தன. கவிதையைத் தேடிப் பிடித்து படித்தேன்.

Half a league, half a league,
Half a league onward,
All in the valley of Death
Rode the six hundred.
“Forward the Light Brigade!
Charge for the guns!” he said.
Into the valley of Death
Rode the six hundred.

Forward, the Light Brigade!”
Was there a man dismay’d?
Not tho’ the soldier knew
Some one had blunder’d.
Theirs not to make reply,
Theirs not to reason why,
Theirs but to do and die.
Into the valley of Death
Rode the six hundred.

Cannon to right of them,
Cannon to left of them,
Cannon in front of them
Volley’d and thunder’d;
Storm’d at with shot and shell,
Boldly they rode and well,
Into the jaws of Death,
Into the mouth of hell
Rode the six hundred.

Flash’d all their sabres bare,
Flash’d as they turn’d in air
Sabring the gunners there,
Charging an army, while
All the world wonder’d.
Plunged in the battery-smoke
Right thro’ the line they broke;
Cossack and Russian
Reel’d from the sabre-stroke
Shatter’d and sunder’d.
Then they rode back, but not,
Not the six hundred.

Cannon to right of them,
Cannon to left of them,
Cannon behind them
Volley’d and thunder’d;
Storm’d at with shot and shell,
While horse and hero fell,
They that had fought so well
Came thro’ the jaws of Death,
Back from the mouth of hell,
All that was left of them,
Left of six hundred.

When can their glory fade?
O the wild charge they made!
All the world wonder’d.
Honor the charge they made!
Honor the Light Brigade,
Noble six hundred!

கவிதையும், martial சந்தமும் ஒரு உத்வேகத்தைத் தருகின்றன. இதைப் படிக்கும்போதே ஒரு பாட்டு மாதிரிதான் வருகிறது.

சினிமா ஒரு magnificent மீடியம்தான். அந்தக் காட்சி இல்லாவிட்டால் கவிதை பிடித்திருக்குமா என்று தெரியவில்லை. என்ன காரணமோ, ஒரு கவிதை பிடிக்கும்போது பதிவு செய்துவிடுகிறேன்!

லைட் பிரிகேட்டின் தாக்குதல் உண்மை நிகழ்ச்சி. அதைப் பற்றி ஒரு ஜெனரல் சொன்னாராம் – “it is magnificent , but it is not war”

P.S. பாரதியின் “ஜெய ஜெய பவானி” என்ற கவிதை நினைவுக்கு வந்தது. இதே போல உத்வேகம் தரும் கவிதை, சந்தம்.

அன்றும் இன்றும் – வாடிவாசல் நாவலுக்கு விளம்பரம்

எழுத்து இதழில் செப்டம்பர் 1959-இல் வாடிவாசல் நாவலுக்கு வெளிவந்த விளம்பரம். சொல்புதிது குழுமத்தில் கிடைத்தது என்று நினைக்கிறேன், சரியாக ஞாபகம் இல்லை.

 1. ஜல்லிக்கட்டு இல்லை ஜெல்லிக்கட்டு.
 2. ஆனால் புஜ வலு இல்லை புய வலு.
 3. தூய தமிழில் எழுதப்பட்டிருக்கிறது – ஆனால் இரண்டாவது வரியில் “அதுக்கு” என்று இருக்கிறது, “அதற்கு” என்று இல்லை.
 4. விலை ஒரு ரூபாய்!

அதே வார்த்தைகள் பிழை திருத்தப்பட்டு (“அதுக்குவேண்டும்” என்பது “அதுக்கு வேண்டும்” என்று மாறி இருக்கிறது) காலச்சுவடு பதிப்பகத்தின் மீள்பதிப்பின் பின் அட்டையிலும் இருக்கிறது. படம் மட்டும் மாறி இருக்கிறது.

இன்று விலை ஐம்பது ரூபாய். அப்படி என்றால் ஐம்பது வருஷங்களுக்கு முன் இரண்டு ரூபாய்க்கு இருந்த வாங்கும் திறன் இப்போது நூறு ரூபாய்க்கு இருக்கிறது என்று வைத்துக் கொள்ளலாமா?

தொடர்புடைய சுட்டி:
வாடிவாசல் புத்தகத்தைப் பற்றி

கிப்ளிங்கின் “ஜங்கிள் புக்”

ஜங்கிள் புக்கைப் படிக்கும்போது எனக்கு பதினைந்து வயது இருக்கலாம். கிப்ளிங்கின் sheer inventiveness என்னை பிரமிக்க வைத்தது. ஓநாய்ப் பையன் மௌக்ளி, மலைப்பாம்பு காவின் கண்களும் நடனமும் என்று பல விதமான சித்தரிப்புகளை கற்பனை செய்யவே ஒரு அபாரமான புத்தி வேண்டும் என்று தோன்றியது. பற்றாக்குறைக்கு ஜங்கிள் புக் படத்தையும் பார்த்தேன். அதே ஃப்ரேம்வொர்க்கை வைத்துக்கொண்டு இன்னொரு அற்புதத்தை வால்ட் டிஸ்னிக்காரர்கள் படைத்திருந்தார்கள். குறிப்பாக பலு (கரடி), ஹாத்தி (யானை), கா, லூயி (குரங்கு), மௌக்ளி காதல் வசப்படுவது, பாட்டுகள் என்று கலக்கி இருந்தார்கள். கிப்ளிங்கின் கற்பனை எவ்வளவு வளமானதாக இருந்தால் இப்படி இன்னொரு கதையைப் படைக்க முடியும்!

இந்தியாவை பாம்புகள், யானைகள், Indian Rope Trick மாதிரி பல exotic விஷயங்கள் உள்ள ஒரு fantasy பூமியாக மேலை நாட்டவர்களுக்கு காட்டுவது, அதனால் புகழ் பெறுவது என்று (இன்றும் தொடரும்) ஒரு trend உண்டு. ஒரு விதத்தில் பார்த்தால் கிப்ளிங்தான் அதைத் தொடங்கி வைத்தார். ஆனால் அவரது கதைகளில் இல்லாததது patronizing tone. அவருடைய கண்களில் இந்தியர்களின் value system வேறு. அதை அவராலேயே முழுதாக புரிந்து கொள்ள முடியவில்லை என்றாலும் பல இடங்களில் கோடி காட்டி இருக்கிறார். அப்படிப்பட்டவையே அவருடைய சிறந்த புனைவுகள். அவரை நாட்டார் மரபை ஆங்கில வாசகர்களுக்கு கொண்டு போகிறவர் என்று கருதுகிறேன். அதுவே அவரது ஸ்பெஷாலிடி. அதை அவரே கூட உணர்ந்ததில்லை என்று தோன்றுகிறது.

இதில் மௌக்ளி கதைகள் மூன்றுதான். முதல் கதையில் மௌக்ளி ஓநாய்க் கூட்டத்தில் சேர்வதும் பிரிவதும். இரண்டாவதில் கா குரங்குகளை வேட்டையாடுவது. மூன்றாவதில் மௌக்ளி ஷேர் கானை கொல்வது. மிச்சக் கதைகளில் எனக்குப் பிடித்தது ரிக்கி-டிக்கி-டாவி. பாம்புக்கும் கீரிக்கும் சண்டை.

கூகிள் புக்ஸில் கிடைக்கிறது.

நான் கதைச்சுருக்கம் எல்லாம் எழுதப் போவதில்லை. படியுங்கள், குழந்தைகளுக்கு படித்துக் காட்டுங்கள், படிக்க வையுங்கள், சினிமா பாருங்கள், குழந்தைகளுக்கு காட்டுங்கள். அவ்வளவுதான்.

இரண்டு பாட்டுகளின் வீடியோக்கள் கீழே.

Bare Necessities

Louie’s Song

தொகுக்கப்பட்ட பக்கம்: கிப்ளிங் பக்கம்

எனக்கு பிடித்த ஒரு பாரதியார் கவிதை

தேடிச் சோறு நிதந்தின்று – பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பல செயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி – கொடுங்
கூற்றுக்கிரையெனப் பின் மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே -நான்
வீழ்வேனென்று நினைத்தாயோ!

கவிதை என்றால் அலர்ஜி என்று அவ்வப்போது சொல்லிக் அலட்டிக் கொண்டாலும் சில கவிதைகள் மனத்தைக் கவரத்தான் செய்கின்றன. “தேடிச் சோறு நிதந்தின்று பல சின்னஞ்சிறு கதைகள் பேசி மனம் வாடித் துன்பமிக உழன்று” என்ற வரிகளில் அற்ப சிரமங்களை எல்லாம் தாண்டியவன் நான் என்கிறாரே, அந்த dismissive attitude-தான் இதை உச்சத்துக்கு கொண்டு போகிறது.

எனக்கு இது ஒரு inspiring கவிதை. செக்குமாடு மாதிரி வாழ்க்கை ஆகிவிடத்தான் செய்கிறது. இந்தக் கவிதையைப் படிக்கும்போதெல்லாம் அப்படி ஆகிவிட்டோமா என்று சுயபரிசோதனை செய்து கொள்கிறேன்.

இந்த வரிகளின் உணர்ச்சியை வேறு மொழிகளில் – குறிப்பாக ஆங்கிலத்தில் – கொண்டு வரவே முடியாது என்று தோன்றுகிறது. படிப்பவர்களுக்கு நல்ல ஆங்கில மொழிபெயர்ப்பு என்று ஏதாவது பட்டால் சொல்லுங்கள், தமிழ் படிக்கத் தெரியாத என் பெண்களுக்கும் காட்ட வேண்டும்…

அசோகமித்ரனின் “பதினெட்டாவது அட்சக்கோடு”

இந்தப் புத்தகத்தையா பிடிபடவில்லை என்று நொந்துகொண்டேன்? என்னதான் சொல்ல வருகிறார், கதையே இல்லையே என்று குறை சொன்னேன்? நேரடியான கதைதானே!

முதல் முறை படித்தபோது முடிச்சு இருந்தால்தான் நல்ல புனைவு என்ற நினைத்திருந்த காலமாக இருக்க வேண்டும். இந்தக் கதையில் முடிச்சுகள் கிடையாது. எந்தவிதமான சிக்கலான கதைப் பின்னலும் கிடையாது. ஒரு பதின்ம வயதினனின் வழக்கமான பிரச்சினைகள்தான், நாம் எல்லாரும் அனுபவித்த அகவயப் பிரச்சினைகள்தான். நாடு சுதந்திரம் அடைந்த காலம், ஹைதராபாத் நிஜாம் ஆட்சி குழப்பங்கள், அதனால் நிறைய புறவயப் பிரச்சினைகளும் இருக்கின்றன. அந்தப் பிரச்சினைகள் ஒன்றாக இணையும் புள்ளி கதையின் க்ளைமாக்ஸ். அங்கே சந்திரசேகரனின் பதின்ம பருவம், மிஞ்சி இருக்கும் குழந்தைத்தனம் எல்லாம் முடிவடைந்து விடுகிறது. உண்மையைச் சொல்லப் போனால் அப்படி முடிவடைந்துவிட்டது என்று நினைப்பதற்கு எந்த காரணமும் இல்லை, ஆனால் அவன் இனி மேல் படித்து வேலை பார்த்து குடும்பம் நடத்தும் நிலைக்குப் போய்விட்டான் என்று நினைப்பதுதான் பாந்தமாக இருக்கிறது.

ஒரு தேர்ந்த சிற்பி ஒவ்வொரு இஞ்சையும் பார்த்து பார்த்து செதுக்குவது போல செதுக்கி இருக்கிறார். மேல்தட்டு நாசிர் கானோடு கிரிக்கெட் தொடர்பு, தமிழ் பாட்டு பாடுவது, மாட்டை கவனிப்பது, எப்போதும் ரேடாரில் இருந்துகொண்டே இருக்கும் பெண்கள், தமிழ்நாட்டிலிருந்து வந்து இங்கே ரஜாக்கர்களோடு சேர்ந்து வீர சாகசம் புரிய எண்ணும் அப்பாவின் முஸ்லிம் நண்பர் சையது, ரஜாக்கர்கள் கை ஓங்கி இருக்கும்போது திடீரென்று அதிகாரம் செய்ய நினைக்கும் பக்கத்து வீட்டுக்கார காசிம், ஏமாந்தவர்களிடம் வளையல் தரும் காங்கிரஸ்கார பெண்கள் என்று வரிக்கு வரி செதுக்கி இருக்கிறார். பக்கத்துக்கு ஒரு முறையாவது புன்னகை வருகிறது. நகைச்சுவை என்பது உட்ஹவுசின் farcial நகைச்சுவையோ, சுஜாதாவின் நக்கலோ இல்லை. மனிதர்களை கூர்ந்து கவனித்து அவர்களுக்குள் எப்போதும் உள்ள முரண்பாடுகள், அசட்டுத்தனங்களை ஆர்ப்பாட்டம் இல்லாமல் காட்டும் உயர்ந்த நகைச்சுவை. அது பாட்டுப் பாட விரும்பும் கெமிஸ்ட்ரி வாத்தியார் தம்பிமுத்துவாகட்டும், சினிமா பார்க்கும்போதும் ரெயில்வே பாசை காட்டி உள்ளே போகும் அப்பாவாகட்டும், போலீஸ் தடியடி நடக்கப் போகிறது என்ற பயத்தில் இருக்கும்போது மூசி நதியில் தண்ணீர் இல்லை என்று கவனிப்பதிலாகட்டும் மீண்டும் மீண்டும் வெளிப்படுகிறது.

க்ளைமாக்ஸ் ஒரு உச்சக்கட்டம்தான். ஆனால் என்னைப் பொறுத்த வரையில் கதையின் உச்சக்கட்டம் என்பது காந்தி இறந்துவிட்டார் என்று தெரியும்போது சந்திரசேகரன் மனம் கொந்தளிக்கும் தருணம்தான். அது எப்படி என்னவோ ஒரு dry thesis எழுதுவது போல சந்திரசேகரனின் கொந்தளிப்பை விவரிக்கிறார்? இதே கட்டத்தை ஜெயமோகன் போன்றவர்கள் எழுதி இருந்தால் கண் கலங்கி இருக்கும். இவர் எழுதியதில் அடிவயிறு கலங்குகிறது, ஆனால் வார்த்தைகளில் உணர்ச்சி பொங்கவில்லை.

ஜெயமோகன் இந்த நாவல்

பொதுவரலாற்றை ஒரு சரடாகவும் சாமானியர்களின் சாமானிய வாழ்க்கையை ஒரு சரடாகவும் பின்னிக்கொண்டே செல்கிறது. இரண்டுக்கும் பெரிய தொடர்பேதும் இல்லை. சட்டென்று ஒரு கட்டத்தில் சந்திரசேகரன் வரலாற்றில் முட்டிக்கொள்கிறான். அதுவே உச்சகட்டம்.

என்கிறார். அப்படியும் சொல்லலாம்தான். ஆனால் எனக்கு இது coming of age genre நாவல், பதின்ம வயதினனின் அகவயச் சிக்கல்களும் வரலாற்றின் புறவயச் சிக்கல்களும் முட்டிக் கொள்ளும் ஒரு புள்ளி என்பதுதான் இன்னும் சரியாகத் தெரிகிறது.

குறைகள்? எனக்கு மூன்று தெரிகின்றன. ஒன்று அவ்வப்போது ஆங்கிலத்தில் எழுதி தமிழில் மெக்கானிகலாக மொழிபெயர்த்தது போல இருக்கிறது. உதாரணமாக “உங்கள் தோலை நீங்கள் காப்பாற்றிக் கொள்ளுங்கள்” என்று எழுதுகிறார். அவர் மனதில் “Save your skins” என்று ஓடி இருக்க வேண்டும். இரண்டு க்ளைமாக்ஸ். சுருக்கமாக எழுதுவதுதான் அவரது ஸ்டைல் என்றாலும் கொஞ்சம் abrupt ஆக முடித்துவிட்டது போல இருக்கிறது. மூன்றாவது சில சமயம் first person-இல் எழுதுகிறார், சில சமயம் third person-இல். எதற்கு இந்தக் குழப்பம் என்று புரியவில்லை. ஆனால் மூன்றுமே minor grumbles-தான்.

நான் படித்த சிறந்த புத்தகங்களில் ஒன்று. கட்டாயம் படியுங்கள்.

தொடர்புடைய சுட்டிகள்:
பக்சின் பதிவு
ஜெயமோகன் விளக்குகிறார்

வடுவூர் துரைசாமி ஐயங்காரின் “வித்யாசாகரம்”

தாமரைமணாளன் பதிவு கண்டு பாஸ்டன் பாலா, ஜெயமோகன் போன்றவர்கள் பூரித்துப் போயிருக்கிறார்கள். (ஜெயமோகன் கமெண்டைப் படிக்கத் தவறாதீர்கள். நான் வாய்விட்டு சிரித்துவிட்டேன்.) அவர்கள் போன்றவர்களை இன்னும் மகிழ்ச்சி வெள்ளத்திலே மூழ்க வைக்க இந்தப் பதிவு.

வடுவூர் துரைசாமி ஐயங்கார் ஒரு காலத்திலே ஸ்டார் எழுத்தாளர். மர்ம நாவல் எழுதுவார். ஜே.ஆர். ரங்கராஜு, வை.மு. கோதைநாயகி அம்மாள், ஆரணி குப்புசாமி முதலியார் போன்றவர்கள் இந்த மாதிரி நாவல்களை எழுதி – பல நேரத்தில் ஆங்கிலப் புத்தகங்களிருந்து காப்பி அடித்து – புகழும் பணமும் நிறைய சம்பாதித்தார்களாம். க.நா.சு. போன்ற ஜாம்பவான்கள் எல்லாம் வடுவூரார் எழுத்தை சிலாகித்திருக்கிறார்கள். கல்கியும் இவரது ரசிகர். (ஆனால் ஒரு கமென்ட் அடித்திருக்கிறார் பாருங்கள் – வடுவூரார் கடைசியாக எழுதிய நாலைந்து புத்தகத்தை வெளியிடாமல் இருந்தால் நன்றாக இருந்திருக்கும், தமிழ்த்தாய்க்கு அந்த அதிர்ஷ்டம் இல்லை! – தஞ்சாவூர் குசும்பு என்பது இதுதான்.) நான் இவரது புத்தகங்களை கண்ணால் கூட கண்டதில்லை, காண்பேன் என்ற நம்பிக்கையும் இருந்ததில்லை.

நாலைந்து வருஷத்துக்கு முன் நான் இந்தியா போயிருந்தபோது அல்லையன்ஸ் பதிப்பகம் வடுவூராரின் சில புத்தகங்களை மறுபதிப்பு செய்திருந்தது. நான் வாங்க விரும்பியது திகம்பர சாமியார். அந்த டைட்டில் மட்டும் அவர்கள் வெளியிடவில்லை. சரி குருட்டாம்போக்கில் எதையாவது வாங்குவோம் என்று வித்யாசாகரம் என்ற புத்தகத்தைத் தூக்கிக் கொண்டு வந்தேன். (அப்புறம் தெரிந்த விஷயம் – திகம்பர சாமியார் என்பது சினிமாவாக வந்தபோது வைத்த பேர். ஒரிஜினல் புத்தகத்தின் பேர் கும்பகோணம் வக்கீல்.)

பத்து பக்கம் படித்ததும் புத்தகம் தேறாது என்று தெரிந்துவிட்டது. இருந்தாலும் என்னதான் எழுதி இருக்கிறார் என்று தெரிந்து கொள்ள ஒரு ஆவல். தம் கட்டிப் படித்தேன். கதையும் சுகமில்லை, முடிச்சும் பிரமாதமில்லை. என்ன கதை என்றெல்லாம் விவரிக்கப் போவதில்லை, வேண்டுமானால் நீங்களே படியுங்கள், இல்லை என்றால் நண்பர் ராஜன் எழுதி இருக்கும் இந்தக் கட்டுரையைப் படித்துக் கொள்ளுங்கள். யாம் பெற்ற துன்பம் பெறுக இவ்வையகம்!

எனக்கு ஆர்வம் ஊட்டிய அம்சங்கள் இரண்டு. ஒன்று நடை. காலாவதியான நடைதான். அதில் இருக்கும் நகைச்சுவையும் ரொம்ப சிம்பிள் ரகம்தான். ஆனால் புனைவுகளையே பார்க்காத, பரமார்த்த குரு கதைகளே நகைச்சுவையின் உச்சமாக இருந்த காலகட்டத்தில் இவை பெரிதும் ரசிக்கப்பட்டிருக்கும். உதாரணத்துக்கு முதல் பாராவை அப்படியே கீழே தருகிறேன்.

சேலத்தில் எஞ்சினியர் வேலையிலிருந்து காலகதியடைந்த சிங்காரவேலு முதலியாரது புத்திரரான வித்தியாசாகர முதலியார் பெயருக்கு மாத்திரம் வித்தியாசாகர முதலியாராக விளங்கினார். அவர் சேலம் கலாசாலைக்குப் பல வருஷகாலமாகப் போய் வந்து கொண்டிருந்தார். பரீட்சைகளும் வருஷத்திற்கொரு முறை வந்து போய்க் கொண்டிருந்தன. முதலியாரவர்களது புதிய புஸ்தகங்கள் வருஷந்தோறும் பழைய புஸ்தகங்களாக மாறிக் கிழிந்து போய்க் கொண்டிருந்தன. அவருடன் கூடப் படித்த நன்றியற்ற ஏனைய சிறுவர்கள் அவரிடத்தில் இரக்கமின்றியும், நட்பைப் பாராமலும் அவரை அதே வகுப்பில் விடுத்துப் புதிய வகுப்புகளுக்குப் போய்க் கொண்டிருந்தனர். ஆனால், நமது முதலியார் மாத்திரம் தமது பழைய நண்பரிடம் ஆழ்ந்த அபிமானம் வைத்தவராதலால், தமது பழைய வகுப்பு, பழைய அறை, பழைய பெஞ்சிப் பலகை, பழைய இடம் முதலியவற்றைத் துறவாமலும், பழைய உபாத்தியாயரைக் கைவிடாமலும் இருந்து, வித்தைக்கடலில் வீழ்ந்து மெட்ரிகுலேஷன் என்ற மடுவில் கிடந்தது பரீட்சைகளாகிய சூழல்களில் அகப்பட்டு நீந்தி அவ்விடத்திலிருந்து விடுபடும் துறையறியாதவராய்த் தத்தளித்து உண்மையாகவே வித்தியாசாகரத்தில் முழுகி முழுகி எழுந்து கொண்டிருந்தார்.

இரண்டாவது அன்றைய சமூகம் எப்படி இருந்திருக்கும் என்ற யூகங்கள். தாசிகள், அவர்களது தந்திரங்கள், ஜமீன்தார்களும் மிட்டா மிராசுகளும் தாசிகளோடு பழகும் விதம், குடும்பப் பெண்கள் தாசிகளை எதிர்கொண்ட விதம் என்று அவர் காட்டி இருப்பதில் நிறைய மிகைப்படுத்தல்கள் இருக்கும்தான். காஞ்சனையின் கனவில் லக்ஷ்மியும் தில்லானா மோகனாம்பாளில் கொத்தமங்கலம் சுப்புவும் காட்டும் தாசிகளின் உலகமே எனக்கெல்லாம் அன்னியமாக இருக்கிறது. இருந்தாலும் இப்படி ஒரு உலகம் இருந்ததா என்று வியக்க வைக்கிறது.

க.நா.சு.வும் கல்கியும் அவர்கள் ரொம்பச் சின்னவர்களாக இருந்தபோது படித்திருக்க வேண்டும், ஏறக்குறைய அவர்கள் படித்த முதல் கதைபுத்தகங்களாக இருக்க வேண்டும், அதனால்தான் ஆஹா ஓஹோ என்கிறார்கள். (எனக்கும் இப்படி அலிஸ்டர் மக்ளீன் புத்தகங்கள் மீது ஒரு கவர்ச்சி உண்டு)

டிகேஎஸ் சகோதரர்கள் இதை நாடகமாக மாற்றி இருக்கிறார்கள். டி.ஆர். ராமச்சந்திரன், அன்றைய செக்சி நட்சத்திரம் தவமணி தேவி (வேறென்ன ரோல்? தாசி மோகனாம்பாதான்) நடித்து 1946-இல் வித்யாபதி என்று வந்திருக்கிறது.

இது தமிழ் புனைவுலகம் எப்படி எல்லாம் இருந்தது, பரிணமித்தது என்று தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு மட்டுமே.

தொடர்புடைய சுட்டிகள்:
வடுவூர் துரைசாமி ஐயங்கார்
இந்த நாவலைப் பற்றி நண்பர் திருமலைராஜன்
வித்யாபதி திரைப்படம் பற்றி ராண்டார்கை

ஜே.ஆர். ரங்கராஜு
வை.மு. கோதைநாயகி அம்மாள்

வடுவூரார் பற்றி டோண்டு
தென்றல் இதழில் வடுவூரார் பற்றி (Registration Required)
வடுவூரார் பற்றி தமிழ் ஸ்டுடியோவில்

ஜெயமோகனின் பகடி கதை (திகம்பர சாமியார் மட்டுமல்ல, ஏறக்குறைய எல்லா துப்பறியும் நிபுணர்களும் – கணேஷ்-வசந்த், சங்கர்லால், ஷெர்லாக் ஹோம்ஸ்… – உண்டு)