நைலான் கயிறு சுஜாதாவின் முதல் நாவல். கணேஷ் (மட்டும்) இதிலும் வருகிறார். 1968-இல் எழுதப்பட்டது. குமுதத்தில் தொடர்கதையாக வந்தது. பல வருஷங்களுக்கு முன் படித்திருக்கிறேன். மனித மனம் விசித்திரமானது, கணேஷ் ஒன்பதாவது சாப்டருக்கு அப்புறம் வரமாட்டார் என்று நன்றாக நினைவிருந்தது, ஆனால் கதையின் போக்கு அனேகமாக மறந்துவிட்டது.
இன்று மீண்டும் படிக்கும்போது கதையின் அபாரமான பலமாகத் தெரிவது முடிச்சோ, பாத்திரப் படைப்போ, துப்பறியும் முறையோ, நடையோ இல்லை. அன்றைய (மேல்தட்டு) இளைஞர் உலகத்தின் அலட்டலையும், துள்ளலையும், கொஞ்சம் அசட்டுத்தனத்தையும் எனக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற அபாரமான தன்னம்பிக்கை+திமிரையும் பிரமாதமாகச் சித்தரித்திருப்பதுதான். இந்த அலட்டலும் துள்ளலும் என் தலைமுறையிலும் இருந்தது, வேறு விதங்களில் வெளிப்பட்டது. இன்று அடுத்த ஃ பேஸ்புக், ட்விட்டர் தலைமுறையிலும் வேறு வேறு விதங்களில் இதைத்தான் காண்கிறேன். என் அப்பா தாத்தா காலத்திலும் கூட இப்படித்தான் இருந்திருக்கும். என்றும் உள்ள இளைஞர் உலகத்தைச் சித்தரிக்க வேண்டும் என்று அவர் கிளம்பவில்லை, ஆனால் அது அருமையாக வந்திருக்கிறது. அதை இன்னும் டெவலப் செய்திருந்தால் இதை தமிழின் சிறந்த நாவல்களில் ஒன்றாகவே வைத்திருப்பேன். இன்று குறிப்பிடத் தக்க நாவல் என்பதோடு நிறுத்திக் கொள்ள வேண்டியதாக இருக்கிறது.
எல்லா விதத்திலும் முன்னோடி நாவல்தான். துப்பறியும் முறை நுட்பங்கள் – 25 நொடிக்கு ஒரு டாக்சி வரும் சாலை, அதனால் ஐம்பது அடிக்குள் உள்ள ஒரு இடத்திலிருந்து “குற்றவாளி” வந்து டாக்சி பிடித்திருக்க வேண்டும் என்பது, எந்த ஊரிலிருந்து வந்தான் என்று யூகிப்பது, பொருந்தாத-விளக்க முடியாத ஒரு சின்ன விஷயத்தை விடாமல் துரத்தி “குற்றவாளியைப்” பிடிப்பது எல்லாமே நன்றாக வந்திருக்கிறது. இந்தக் கதை, ஒரு விபத்தின் அனாடமி, நிர்வாண நகரம் மாதிரி கதைகளை வைத்துப் பார்த்தால், சுஜாதா ஒரு சிறந்த துப்பறியும் கதை எழுத்தாளராக வந்திருக்கலாம், கணேஷ்-வசனத்தை இந்திய ஷெர்லாக் ஹோம்சாக உருவாக்கி இருக்கலாம். எதிலுமே அவர் முழுதாக ஈடுபடவில்லை என்று தோன்றுகிறது.
அவருடைய நடை gimmicks சிலவற்றை இங்கும் காணலாம். உதாரணமாக ஒருவன் மாடிப்படிகளில்
இ
ற
ங்
கு
கி
றா
ன்
அந்தக் காலத்துக்கு (மெலிதான) காமம் வெளிப்படுகிறது. சுனந்தாவின் டைரியில் அவள் மெல்ல மெல்ல காமவசப்படுவது, கிருஷ்ணனோடு, பிறகு கணேஷோடும் படுக்கத் தயாராக இருக்கும் ஹரிணி போன்றவை எல்லாம் அப்போது கிளுகிளுப்பாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். என் தலைமுறைக்கு புஷ்பா தங்கதுரை, பாலகுமாரன் மாதிரி. குமுதம் பத்திரிகைக்கும் அதில் பரிபூரண சம்மதம் இருந்திருக்கும்.
கணேஷ் மட்டும்தான். வசந்த் இல்லை. ஆனால் வசந்த் இல்லாத குறையும் இல்லை. கணேஷே வசந்த் மாதிரிதான் நடந்து கொள்கிறான். இந்தக் கதையில் கணேஷ் பம்பாயில் ப்ராக்டிஸ் செய்கிறான். சில வருஷங்களுக்குள் (பாதி ராஜ்யம், ஒரு விபத்தின் அனாடமி) டெல்லி போகிறான். அங்கே நீரஜா என்று ஒரு பெண் அசிஸ்டன்ட். பிறகு சென்னை, அங்கேதான் வசந்த் வந்து சேர்ந்து கொள்கிறான்.
கதை சிம்பிள். பம்பாயின் பெட்டர் ரோடில் (Pedder Road) ஒரு அபார்ட்மென்ட் காம்ப்ளெக்சில் கிருஷ்ணன் நைலான் கயிறால் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்படுகிறான். சந்தேகம் அவனோடு தொடர்புள்ள ஹரிணியின் அண்ணன் தேவ் மீது விழுகிறது. கணேஷ் திறமையாக வாதாடி தேவை விடுவிக்கிறான். ரிடையர் ஆகப் போகும் போலீஸ் உயர் அதிகாரி ராமநாதன் இதை ஒரு சவாலாக எடுத்துக் கொள்கிறார். விளக்க முடியாத ஒரே க்ளூ கிருஷ்ணனின் டெலிஃபோன் புக்கில் இருக்கும் ஒரு டெலிஃபோன் நம்பர். அந்த நம்பர் ஒரு சின்ன தொழிற்சாலையுடையது, அங்கே யாருக்கும் கிருஷ்ணனைத் தெரியவில்லை. தேவ் கேசில் ஒரு டாக்சி டிரைவர் சொன்னதிலிருந்து யாரோ ஒருவன் எம்.ஜி. ரோடில் டாக்சியில் ஏறி அங்கே வந்தான் என்று தெரிகிறது. டாக்சி பிடித்த இடம், கிருஷ்ணன் வேலை பார்த்த ஊர்கள் எல்லாவற்றையும் ஆராய்ந்து யாரோ டெல்லியில் இருந்து வந்து கொலை செய்திருக்க வேண்டும் என்று யூகிக்கிறார். மேலே படித்துக் கொள்ளுங்கள்.
கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. விலை அறுபது ரூபாய். அட்டைப்படத்துக்கும் கதைக்கும் சம்பந்தம் இல்லை, என்ன நினைத்துப் போட்டார்களோ? 🙂 பத்ரியைத் தெரிந்தவர்கள் யாராவது இருந்தால் கேட்டுச் சொல்லுங்கப்பா!
சுஜாதா எழுதி இருக்கிறார். அவருடைய முதல் கதை. கணேஷ் இருக்கிறார். நல்ல துப்பறியும் கதையின் கூறுகள் இருக்கின்றன. வேறென்ன வேண்டும்? கட்டாயம் படியுங்கள்!
அருமையான கதை.
குமுதத்தில் நான் தொடர்கதையாக படித்திருக்கிறேன்.
நன்றி.
LikeLike
‘தனிமை கொண்டு’ என்ற சிறு கதைதான் ‘நைலான் கயிறு’ -ஆக உருவெடுத்தது என்று நினைக்கிறேன். சிறுகதையில் இருந்த பாதிப்பு நெடுங்கதையில் இல்லை. அதுவும் வசனங்கள் எல்லாம் ஆங்கிலத்தில் இருந்து தமிழ் படுத்தினார் போல இருக்கும். வசந்த் வரும் வரை இப்படித்தான் இருந்தது.
LikeLike
அருமையான கதை. படித்த காலத்தில் மிகவும் பிடித்திருந்தது. நிறைய மறந்துவிட்டது. தங்கள் பதிவைப் பார்த்த பின் மீண்டும் படித்துப் பார்க்கவேண்டும் என்று தோன்றுகிறது. இதில் தான், அந்தப் பெண் ஹரிணி, கிருஷ்ணனைப் பார்க்கச் செல்லும்போது அவள் படித்துக்கொண்டிருந்தாள் என்று “பெர்ரி மேசன்” பற்றிக் குறிப்பிடுவார். அதற்குப் பிறகுதான் நான் பெர்ரி மேசெனைத் தேடித் பிடித்து படித்தேன். அந்த சீரீசும் பிடித்திருந்தது. இது போல போகிற போக்கில் அவர் செய்த புதிய அறிமுகங்கள் பலப்பல.
LikeLike
no his first novel was jannal malar . read katrathum petrathum 1st part and post in blog. nylon kairu is 1st crime novel
LikeLike
இந்த கதையில் மேலும் சுவாரசியங்கள்: (நினைவில் இருந்து)
“உங்கள் தந்தி சற்று முந்தி வந்தது” என்றார் தற்செயலான எதுகையில்
இரு பெண்கள் ஸ்கிப்பிங் ரோப் விளையாடிக்கொண்டு பேசியது அங்கில்லாத மூன்றாவது பெண்ணைப்பற்றி
LikeLike
ராஜ் சந்திரா, நான் தனிமை கொண்டு படித்ததில்லை. ஆனால் பல வசனங்கள் ஆங்கிலத்தில் எழுதி தமிழில் மொழிபெயர்த்த மாதிரிதான் இருந்தது.
வருண், ஜன்னல் மலர் எழுபதுகளின் இறுதியிலோ என்னவோ தொடர்கதையாக வந்தபோது அங்கும் இங்கும் ஓரிரு அத்தியாயம் படித்திருக்கிறேன். நிச்சயமாக நைலான் கயிறுதான் அவருடைய முதல் நாவல்.
எஸ்செக்ஸ் சிவா, நீங்கள் சொல்லும் இடங்களை – குறிப்பாக “அங்கில்லாத மூன்றாவது பெண்ணைப் பற்றி” – நானும் ரசித்தேன்.
ரத்னவேல், பாலாஜி, மறுமொழிக்கு நன்றி!
LikeLike
ஆர்வி,
“நைலான் கயிறு” என்றவுடனே, போச்சு, ஸஸ்பென்ஸை சொல்லிவிட்டாரோ என்று கொஞ்சம் பயந்துவிட்டேன், “நிர்வாண நகரம்” பதிவிலும் தான்.
நல்ல காலம், முடிச்சுப்பக்கம் போய் அழகாக நிறுத்திவிட்டீர்கள்…ஆர்வமுள்ளவர்கள் அவர்களே போய் அவிழ்க்கட்டும்!
இதுதான் அவரது முதல் நாவல் என்றுதான் சொல்லியிருக்கிறார். முதல் அல்லது முதலிரு அத்தியாங்களை குமுதத்திற்கு அனுப்பினால், எஸ்ஏபி பதிலனுப்பாமல் சட்டென்று வெளியிட்டார் என்று சுஜாதா எழுதியமாதிரி நினைவு.
நண்பர் பாலாஜி சொன்னமாதிரி சுஜாதா ஒரு அற்புதக்கதவு – அவருக்கு முன்னோடிகளையும் அவருக்கு பின்னால் வந்தவர்களையும் அவர் மூலமாக எத்தனைபேருக்கு அறிமுகம் – அவரது சாதனைப்பட்டியலில் இதற்குத்தான் முதல் இடம்.
LikeLike
சிவா, துப்பறியும் கதைகளின் பெரிய சுவாரசியமே முடிச்சுதானே? அதை உடைத்தால் எப்படி? ஆனால் நைலான் கயிறில் சஸ்பென்சை விட பிற விஷயங்களைத்தான் அதிகம் ரசித்தேன்.
LikeLike
‘நைலான் கயிறு’தான் சுஜாதாவின் முதல் நாவல் என்று நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். முதல் நாவலே பலரை சுஜாதாவின் பக்கம் திரும்பிப்பார்க்க வைத்தது. பலரை அவரது வாசக ரசிகர்களாக்கியது.
சிவா மற்றும் ஆர்.வி.
நானும் அப்படித்தான். சஸ்பென்ஸ் திரைப்படங்களுக்கு விமர்சனம் எழுதும்போது கூட சஸ்பென்ஸை உடைக்க மாட்டேன்.
ஒரு அனுபவம்…. ஒருமுறை தியேட்டரில் ‘அதே கண்கள்’ படத்தைப் பார்க்கச்சென்றிருந்தேன். ஏற்கெனவே அந்தப் படத்தைப் பார்த்திருக்கிறேன். படம் துவங்கியதும், என் பக்கத்திலிருந்த பெண்ணிடம், அவரோடு வந்திருந்த இன்னொரு பெண் திரையில் இருந்த நட்சத்திரங்களில் ஒருவரைச் சுட்டிக்காட்டி, ‘அதோ அந்த ஆள்தான் எல்லா கொலைகளையும் செய்வான்’ என்று சொன்னாள். நான் உடனே என் அருகில் இருந்த பெண்ணிடம், ‘இன்னும் ஏன் உட்கார்ந்திருக்கீங்க?. அதான் உங்க தோழி சஸ்பென்ஸைப்போட்டு உடைச்சிட்டாங்கல்ல?. இனிமேல் நீங்க படம் பார்த்தும் பயனில்லை, நீங்க எழுந்து போகலாம்’ என்று சொன்னேன். மூன்றாவது இருக்கையிலிருந்த பெண்ணுக்கு அப்போதுதான் உரைத்தது. நாக்கைக் கடித்துக்கொண்டார்.
LikeLike
ஆமாம் சாரதா/ஆர்வி,
சஸ்பென்ஸை உடைத்தால் சுனந்தா டைரியில் எழுதியது போல
நீங்களும் ஆயிரம் வருடங்கள் தலைகீழாக நரகத்தில் தொங்குவீர்கள்!
(கல்லூரி காலத்தில் என் அனைத்து டைரிகளிலும் இந்த டைலாக்கை எழுதி வைத்திருந்தேன்!)
LikeLike