போதி மரம் (என் சிறுகதை)

நான் படித்த மானாம்பதி உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் – வேல்முருகன், தமிழரசு, அந்தோணிசாமி ஆகியோருக்கு – இந்தச் சிறுகதை சமர்ப்பணம்.

நான்காவது முறையாக பச்சையப்பன் விழித்துக் கொண்டான். தலையை கொஞ்சம் தூக்கி தலையணைக்கு பக்கத்தில் இருந்த கைக்கடிகாரத்தைப் பார்த்தான். ரேடியப் பச்சை முட்கள் மணி ஐந்தேகால் என்று காட்டின.

இனி மேல் தூக்கம் வராது. எழுந்தான். ஏறக்குறைய அவிழ்ந்தே போயிருந்த கைலியை இறுக்கிக் கட்டிக் கொண்டான். எதிர் சுவரின் அருகே குறட்டை விட்டுக் கொண்டிருந்த செல்வராஜை வன்மத்தோடு பார்த்தான். ஆணியில் மாட்டியிருந்த சட்டையின் பையிலிருந்து ஒரு பாசிங் ஷோ சிகரெட்டையும் தீப்பெட்டியையும் எடுத்துக் கொண்டான். கதவைத் திறந்து கொண்டு வெளியே போனான்.

மழை நின்றுவிட்டிருந்தது. வானம் இன்னும் வெளுக்கவில்லை. நல்ல குளிர் காற்று வீசியது. ஆனால் மீண்டும் உள்ளே போகாமல் குளிரில் தன்னைத் தானே வருத்திக் கொள்வது என்று முடிவு செய்து அங்கேயே தகரக் கூரைக்குக் கீழே நின்றான். கூரையிலிருந்து தண்ணீர் இன்னும் சொட்டிக்கொண்டிருந்தது. சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டான். முந்தாநாள் டெண்டு கொட்டாயில் வாக்குறுதி சினிமாவில் ஜெய்ஷங்கர் வட்டம் வட்டமாகப் புகைவிட்டு ஃபிளாஷ்பாக் ஆரம்பித்தது நினைவு வந்தது. தானும் வட்ட வட்டமாகப் புகைவிட்டான்.

ராத்திரி எல்லாம் இந்தக் கூரை மீதுதான் மழை சடசடவென்று பெய்து கொண்டே இருந்தது. அதனால்தான் தூங்கமுடியவில்லை. மதியம் கண்ணை சுற்றப் போகிறது. அந்த ஹெட்மாஸ்டர் கிழவன் இன்று ஐந்து பீரியட் வைத்து விட்டுவிட்டால் ரூமுக்கு வந்து நல்ல தூக்கம் போடலாம். மரத்தடியில் சேறாக இருக்கும், அங்கே எட்டு, ஒன்பது கிளாஸ் நடத்த முடியாது. அவன்களும் கட்டடத்திற்குள் இருந்தால் இரைச்சல் தாங்காது. என்ன இரைச்சல் இருந்தாலும் கவலை இல்லாமல் குறட்டை விடுகிறான் பார். எருமை மாடு, எருமை மாடு. அதெப்படி இவனுக்கு மட்டும் எப்பவும் பழம் நழுவி பாலில் விழுந்து கொண்டே இருக்கிறது? மச்சம்! நான் இவனுக்கு சீனியர், உயிரைக் கொடுத்து போன வருஷம் பத்தாம் கிளாஸ் பரீட்சையில் எழுபது பர்சென்ட் பாஸ் செய்ய வைத்தேன். நான் ப்ரைவேட் சொல்லிக் கொடுக்காமல் ஊர் பிரசிடென்ட் அழகானந்தம் பெண் இந்திரா சயன்சில் பாஸ் பண்ணி இருப்பாளா? இப்ப இவனிடம்தான் ப்ரைவேட் படிப்பேன் என்று பிடிவாதம் பிடித்து படிக்கிறாள், அவள் அப்பன் என்னை கண்டுகொள்வது கூட இல்லை. ஹரிஜன் என்பதாலா, இருக்காது போன வருஷம் வீட்டுக்குள் உட்கார வைத்து விருந்தே போட்டானே! நான் போன பிறகு கோமியம் வைத்து கழுவிவிட்டானோ என்னவோ. காரியம் ஆகணும் என்றால் கழுதை காலையும் பிடி கதையோ? சரி செல்வராஜுக்கு மட்டும் என்ன கல்யாணமா பண்ணி வைத்துவிடப் போகிறான்? இவனோ முதலியார், அவனோ செட்டி. ஆனாலும் அந்த இந்திராவுக்கு எல்லாம் கொஞ்சம் பெரிசு. டக்கர் குட்டிதான், இப்போது தனியாக சைட் அடிக்கக் கூட முடியவில்லை. சரி அழகானந்தமாவது இப்போது யாரால் வேலை ஆகிறதோ அவனைக் கண்டுகொள்கிறான். இந்த ஹெட்மாஸ்டர் கிழத்துக்கு என்ன ஓரவஞ்சனை? சீனியர் என்னை விட்டுவிட்டு எதுக்கெடுத்தாலும் இவன்கிட்டேதான் என்ன செய்யலாம் எது செய்யலாம் என்று கேட்டுக் கொண்டிருக்கிறது. நான் மட்டும் வேலை செய்யாமல் வெங்காயமா உரிக்கிறேன்? இன்னும் இரண்டு வருஷத்தில் ரிடையர் ஆகப் போகிறது, பேர் மட்டும் பாலகிருஷ்ணன். அம்மா வைக்கிற கருவாட்டுக் குழம்புக்கு தனி ருசி. பாலகிருஷ்ணனிலிருந்து எப்படி கருவாட்டுக்குப் போனேன்? ஊம்ம்ம்! பாலகிருஷ்ணன், கிருஷ்ணன், தசாவதாரம், மச்ச அவதாரம், மீன், கருவாடு, அம்மா வைக்கிற குழம்பு! பிடித்துவிட்டேன்! சிகரெட் முடிகிற நேரம், கையை சுட்டுக்கொண்டு விடக் கூடாது. அவள் படத்தில் ஸ்ரீகாந்த் மாதிரி ஸ்டைலாக இது முடிவதற்குள் அடுத்த சிகரெட்டைப் பற்ற வைக்க வேண்டும். மடையன் ஒரு சிகரெட்டைத்தான் கொண்டு வந்திருக்கிறேன்.

சிகரெட்டைக் கீழே போட்டு நசுக்கினான். ரூம் கதவைத் திறந்து உள்ளே போனான். செல்வராஜின் குறட்டை இன்னும் பலமாகவே இருந்தது. மணி ஐந்தரை ஆகி இருந்தது. பரமு டீக்கடையைத் திறக்க இன்னும் அரை மணி நேரம் இருக்கிறது. அது வரை என்ன செய்வது? பல் தேய்த்து வெளிக்குப் போய் வந்துவிடலாம். இன்று வேலிக்காத்தான் காட்டுப் பக்கம் ஒதுங்க முடியாது. ஆனால் கக்கூசில் சிகரெட் பிடித்தால் அந்த கழுகு மூக்கு நாராயணன் சிகரெட் பிடிப்பதே தப்பு, அதுவும் என் வீட்டிலேயே வேறு பிடிக்கிறாயா என்று கத்துவான். நடராஜ நாராயணன் நர்த்தனமே ஆடிவிடுவான். நானாவுக்கு நானா! என்ன ஒரு எதுகை மோனை! நர்த்தனம் மாதிரி வார்த்தை எல்லாம் நாக்கிலே துள்ளி விளையாடுதே! இதையெல்லாம் கேட்பவன் எவனும் என்னை ஹரிஜன் என்று சொல்லமாட்டான். ஆனால் ஒன்று, இந்த செல்வராஜ் செட்டியாரானாலும் நம்மிடம் நல்லபடியாகவே பழகுகிறான். சமயத்தில் எச்சில் சிகரெட் கூட பிடிக்கிறான். சரி மாதக் கடைசியில் கோபால் பல்பொடி, பாசிங் ஷோ சிகரெட் என்று நாம் போவதில்லையா அவனுக்கும் மாதக் கடைசி வராதா என்ன? அதெப்படி அவனுக்கு மட்டும் எல்லாம் சுலபமாக நடக்கிறது? ஸ்கூலில் நமக்கு கோபக்காரன், கத்துகிறவன் என்று முத்திரையே குத்திவிட்டார்கள், ஆனால் எல்லா பையன்களும் பெண்களும் இவனை சுற்றி சுற்றி வருகிறார்கள். ஒரு வேலை சொன்னால் நமக்கு எவனும் செய்வதில்லை, இவனிடம் சார் டீ வாங்கிவரட்டுமா, அட்டெண்டன்ஸ் ரெஜிஸ்டர் கொண்டு வரட்டுமா, சைக்கிளில் ஏறிக்குங்க, ரூமில் கொண்டு விடுகிறேன் என்று கேட்டு கேட்டு செய்து தருகிறான்கள். பரமு கடையில் இத்தனை நாள் கழித்துத்தான் நமக்கு பற்று வைக்க முடிகிறது, இவனுக்கு வந்த இரண்டாம் நாளே பற்று.

பச்சையப்பனுக்கு செல்வராஜைப் பார்க்க பார்க்க எரிந்தது. பல்பொடியை எடுத்துக் கொண்டு வெளியே போகும்போது குளிர் காற்று வருகிற மாதிரி கதவை நன்றாகத் திறந்து வைத்தான். ஆனால் இரண்டடி எடுத்து வைத்திருக்கமாட்டான், செல்வராஜ் தலையைத் தூக்கி “ஏ பச்சை” என்று கூப்பிட்டான். பச்சையப்பனுக்கு திரும்பிப் பார்க்க வேண்டியதாயிற்று. “கதவை மூடிட்டுப் போப்பா” என்று சொல்லிவிட்டு செல்வராஜ் மீண்டும் முடங்கிக் கொண்டான். பச்சையப்பனுக்கு மட்டும் மூன்றாவது கண் இருந்திருந்தால் செல்வராஜ் அங்கேயே சாம்பலாயிருப்பான். இல்லாததால் விதியே என்று கதவை மூடினான். இன்னும் கடுப்பு ஏறிற்று. நடராஜ நாராயணன் என்ன நர்த்தனம் ஆடினாலும் கக்கூசில் சிகரெட் பிடிப்பது என்ற முடிவோடு கீழே இறங்கினான்.

நேற்று ஊருக்குள் நுழைந்தவன் எல்லாருக்கும் தோஸ்தாகிவிட்டான். இவனோடு டெண்டுக்குப் போனால் அந்த அயோக்கியன் லட்சுமணன் வாத்தியாருக்கு சோடா கொடுடா என்று அனுப்புகிறான். நான் தனியாகப் போனால் எவனும் கண்டுகொள்வதில்லை. கோவிலில் மகாலிங்கம் கூட இவன் போகும்போதெல்லாம் “வாங்க செட்டியாரே” என்று கூப்பிட்டு கற்பூர ஆரத்தி காட்டுகிறார். சரி அதுவாவது புரிந்து கொள்ளலாம், அவருக்கும் எழுபது வயதிருக்கும், நான் ஹரிஜன் என்றும் தெரியும். “வாங்க ஹரிஜரே” என்று யாரும் கூப்பிடப் போவதில்லை. இவனும் எல்லாருக்கும் நன்றாக சோப்பு போடுகிறான். ஹெட்மாஸ்டர் பொண்டாட்டிக்கு ரோஜாச் செடியை பதியன் போட்டுத் தருவதென்ன, நடராஜ நாராயணனுக்கு மெட்ராசிலிருந்து கணையாழி பத்திரிகை வாங்கி வருவதென்ன, டெண்டுக் கொட்டாய் லட்சுமணனிடம் தான் எம்ஜிஆருக்கு கை கொடுத்ததைப் பற்றி வாய் ஓயாமல் பேசுவதென்ன என்று எதையாவது செய்கிறான், எல்லாரும் செல்வராஜ் சார் செல்வராஜ் சார் என்று இவன் பின்னாலேயே அலைகிறார்கள். இவனும் இவன் ஸ்டெப் கட்டும் பாதி மார்பு வரை காலர் வைத்த சட்டையும் ரவுடி மாதிரி ஒரு பட்டை பெல்டும் பெல்பாட்டமும் – தெருவைப் பெருக்கிறது என்று பெல்பாட்டத்தின் அடியில் ஒரு ஜிப் வைக்கிறான், அதை பசங்க எல்லாரும் பார்த்து அவனவன் அதே மாதிரி அலைகிறார்கள் – இந்த மாதிரி நான் ட்ரெஸ் போட்டுக் கொண்டு நான் ஸ்கூலுக்குப் போனால் பாலகிருஷ்ணன் என்னைக் கூப்பிட்டு டீசண்டாக வர வேண்டும் என்பான். எல்லாம் நேரம்!

பச்சையப்பன் ரூமுக்குப் போய் ஒரு சட்டையை எடுத்து மாட்டிக் கொண்டான். சேறு நிறைந்த வீதியில் ஜாக்கிரதையாக நடக்க வேண்டி இருந்தது. ஒரு சூடான டீ உள்ளே இறங்கியது கொஞ்சம் இதமாக இருந்தது. தினத்தந்தி பேப்பரில் வழக்கமான விஷ ஊசி கேஸ், மஸ்டர் ரோல் ஊழல், சர்க்காரியா கமிஷன், இந்திரா காந்தி தஞ்சாவூரில் நிற்பாரா மாட்டாரா, கள்ளக் காதலனை சதக் சதக் என்று குத்தினான் என்ற செய்திகள். கன்னித்தீவு, ஆண்டிப் பண்டாரம் ஒன்று விடாமல் படித்தான். பரமு “சார் பேப்பரைக் கசக்கிடாதீங்க” என்றபோது செல்வராஜிடம் இப்படி சொல்வானா என்று இன்னும் கொஞ்சம் எரிந்தது. இரண்டு தேங்காய் பன்னும் இன்னொரு டீயும் சாப்பிட்டு முடிக்கும் வரை வேறு எவனுக்கும் பேப்பரைத் தராமல் படித்தான். வேண்டுமென்றே பரமு பார்க்காதபோது பேப்பரைக் கொஞ்சம் கிழித்தும் வைத்தான்.

வீட்டுக்குள் நுழையும்போது நாராயணன் அவனை நிறுத்தினார். “எத்தனை முறை சொல்லி இருக்கேன், கக்கூசில தம் அடிக்கக் கூடாதுன்னு! வயசுப் பசங்க, தம், செகண்ட் ஷோ எல்லாம் இருக்கத்தான் இருக்கும். அதை வெளிலே போய் பிடியேன்யா! செல்வராஜும்தான் சிகரெட் பிடிக்கறான், ஆனா மரியாதை உள்ள பையன். என்னைப் பார்த்தா மரியாதைய சிகரெட்ட அணைப்பான். அவன் ரிக்வெஸ்ட் பண்ணித்தானே உங்க ரெண்டு பேரையும் மாடில சிகரெட் பிடிக்கலாம்னு விட்டிருக்கேன்! ஏய்யா காலங்கார்த்தாலே இப்படி என் உயிரை வாங்குறே! நிம்மதியா ஒதுங்கக் கூட முடியலே!” என்று கத்தினார். நாராயணன் தன்னை சொன்னது கூட பச்சையப்பனுக்கு பெரிய விஷயமாகத் தெரியவில்லை, ஆனால் செல்வராஜ் பேரை இழுத்ததுதான் தலையில் ரத்தம் ஏறியது.

ரூமில் நுழைந்தபோது செல்வராஜ் கேட்டான் – “என்ன நாராயணன் கிட்ட பூசையா?” பச்சையப்பன் அசிரத்தையாக ஊம்ம் கொட்டுவது போல நடிக்க முயற்சித்தான். பிறகு கேட்டான் – “நீ கக்கூசில சிகரெட் பிடிக்கலியா? இப்பெல்லாம் சிகரெட் வேண்டி இருக்குன்னு சொல்லிட்டிருந்தியே?”

“அதான் ட்ரிக்கு. நாராயணன் முடிச்ச பிறகுதான் நான் உள்ள போனேன். அது வரைக்கும் ரமா அக்காகிட்டே ஒரு கப் காப்பி வாங்கிக் குடிச்சிட்டிருந்தேன்” என்று செல்வராஜ் சிரித்தான்.

பச்சையப்பன் குரோதம் தெரியக் கூடாதென்று முகத்தைத் திருப்பிக் கொண்டான். “நேரமாச்சு, கிளம்பலியா?” என்று செல்வராஜைக் கேட்டுக் கொண்டே உடை மாற்ற ஆரம்பித்தான்.

மீண்டும் தூறல் ஆரம்பித்திருந்தது. செல்வராஜிடம் குடை கிடையாது என்று தெரியும். தன் குடையில் வருகிறாயா என்று நாகரீகத்துக்காக அவனைக் கேட்க வேண்டி இருந்தது. அவனோ வேண்டாம் என்று சொல்லிவிட்டு ரமா அக்காவிடம் ஓசிக் குடையில் ராஜ பவனி வருகிறான். போகும் வழியில் எல்லாம் பையன்கள், கலர் கலராய் பெண்கள். ஒருவன் மாற்றி ஒருத்தி குட் மார்னிங் வைத்துக் கொண்டிருந்தார்கள். தான் மட்டும் தனியாகப் போனால் பாதி பேர் கண்டுகொள்ள மாட்டார்கள்.

ஸ்கூலுக்குப் போன பிறகுதான் செல்வராஜை மறக்க முடிந்தது. மழையினால் இன்று அட்டெண்டன்ஸ் கொஞ்சம் கம்மிதான். அதுவும் மக்குகள்தான் மழை பெய்தால் மட்டம் போடுவார்கள். பாடம் நடத்துவது கொஞ்சம் சுலபமாக இருந்தது. எட்டு ஒன்பதாம் கிளாஸ் இரைச்சல் போட்டது, விட்டு விட்டு மழை பெய்து கொண்டிருந்தது எதுவும் பச்சையப்பன் கவனத்தில் இல்லை.

மூன்றாவது பீரியட் பச்சையப்பனுக்கு கிளாஸ் இல்லை. லேடீஸ் ஸ்டாஃப் ரூமிலிருந்து செகண்டரி கிரேட் லெவல் அம்சா டீச்சரும் கிரிஜா டீச்சரும் ஜென்ட்ஸ் ஸ்டாஃப் ரூமுக்குள் எட்டிப் பார்த்தார்கள்.

“செல்வராஜ் சார் இல்லையா? அவருக்கு இப்ப கிளாஸ் இருக்கா?”

“ஃப்ரீதான். தம் அடிக்கப் போயிருக்கானோ என்னவோ. என்ன வேணும்? ஏதாவது சொல்லணுமா?”

“இல்ல, திருப்பி மழை பெய்யும் போல இருக்கு. இன்னிக்கு மார்னிங்லியே அஞ்சு பீரியட் வச்சு மதியத்தோட விட்டுட்டா நாங்கல்லாம் எஸ்எல்என்எஸ் பஸ் பிடிச்சு சீக்கிரம் போயிடுவோம். அவர ஹெட்மாஸ்டர் கிட்ட கேக்கச் சொல்ல முடியுமா?”

“ரொம்ப ஸ்ட்ரிக்டாச்சே! அவர் இதுக்கெல்லாம் ஒத்துக்க மாட்டாரே, உங்களுக்குத் தெரியாதா?”

“இந்த செல்வராஜ் சார் கிட்ட ஏதோ மாயம் இருக்கு, அவர் சொன்னா நடக்குமோ என்னவோன்னு ஒரு ஆசைதான்…”

பச்சையப்பன் கையிலிருந்த பேனாவை தவறுதலாக கீழே போடுவது போல போட்டு அதை எடுப்பது போல குனிந்து தன் முகத்தை மறைத்துக் கொண்டான். “நான் அவன் வந்தா சொல்லறேன்” என்றான். அம்சா டீச்சர் கிழவி, ஐம்பது வயசிருக்கும், ஒழியட்டும். ஆனால் இந்த கிரிஜா – தனக்கு சான்சே இல்லை என்றாலும் ரகசியமாக ரசிக்கும் வெள்ளைத்தோல், அய்யர் வீட்டுப் பெண் கிரிஜாவுமா! அவளுமா செல்வராஜ் ரசிகர் மன்றத்தில் சேர்ந்துவிட்டாள்!

செல்வராஜ் ஹெட்மாஸ்டரிடம் பேசப் போனபோது “நானும் வரேன் செல்வராஜ்” என்றான். தானே பேசுவது, இந்த பாலகிருஷ்ணன் டபிள் எம்.ஏ., எம்.எட். என்னதான் பதில் சொல்கிறார் என்று பார்த்துவிடுவது என்று நினைத்துக் கொண்டான். ஹெட்மாஸ்டர் ரூமை தட்டி வைத்து இரண்டாகத் தடுத்திருக்கும். தட்டிக்குப் பின்னால் நின்று செல்வராஜ் என்னவோ ராஜசபைக்குப் போகிற மாதிரி பணிவோடு “மே ஐ கம் இன் சார்?” என்றான். கிழவன் கெளரவம் பட சிவாஜி மாதிரி “கம் இன், கம் இன்” என்றான். பைப் இல்லாததுதான் குறை.

நமக்கு இந்த மாதிரி கூழைக் கும்பிடு எல்லாம் போட வராது. “சார், திருப்பி மழை வரும் போல இருக்கு. லேடீஸ் எல்லாம் வெளியூர்ல இருந்து பஸ் பிடிச்சு வரவங்க. இன்னிக்கு அஞ்சு பீரியட் வச்சு விட முடியுமான்னு…”

பச்சையப்பன் பேசி முடிக்கவில்லை, அதற்குள் பாலகிருஷ்ணன் இடைமறித்தார். “நோ நோ, நமக்கு டிசிப்ளின்தான்…”

இப்போது செல்வராஜ் பச்சையப்பன் இரண்டு பேருமே அவர் வாக்கியத்தை முடிப்பதற்குள் பேச ஆரம்பித்தார்கள். பச்சையப்பன் “சார் மரத்தடியில இன்னிக்கு…” என்று ஆரம்பிக்கும்போது செல்வராஜ் அவன் காலை மிதித்தான். பச்சையப்பன் திரும்பி செல்வராஜைப் பார்க்கும்போது அவன் சொன்னான்.

“எக்சாக்ட்லி சார். நானும் இதத்தான் சார் சொன்னேன். சாருக்கு டிசிப்ளின்தான் முக்கியம், இந்த மாதிரி ரிக்வெஸ்ட் எல்லாம் அவர் கன்சிடரே பண்ணமாட்டார்னு சொன்னேன் சார். இருந்தாலும் நாங்க கேக்கலைன்னு அவங்க தப்பா நினைச்சுக்கக் கூடாதுன்னுதான் சார் வந்தோம். நீங்களே போய் கேளுங்கன்னு சொன்னேன், லேடீஸ் பாருங்க, உங்களைக் கண்டு பயப்படறாங்க! அவங்களுக்கு நீங்கன்னா சிம்ம சொப்பனம் சார்! நீங்க ஸ்ட்ரிக்ட்தான், ஆனாலும் அடுத்தவங்க கஷ்டத்தைப் புரிஞ்சிக்கறவர்னு அவங்களுக்குத் தெரியல சார். இன்னிக்கு எட்டு ஒம்பது கிளாஸ் உள்ள நடக்கிறதாலே கொஞ்சம் சத்தம் அதிகமா இருக்கு, எதுவும் சரியா நடத்த முடியலே. ஆனாலும் இப்படி மழை வரும்போதெல்லாம் நம்ம பாதி நாளோட ஸ்கூல் விடமுடியுமா சார்? அதத்தான் சார் அவங்க கிட்ட சொன்னேன்.”

“என்னை கண்டு பயப்படறாங்களா? ஹாஹாஹா, ஓஹோஹோ, வாட் எ ஜோக், வாட் எ ஜோக்! நான் என்ன சிங்கமா புலியா?” என்று மீண்டும் கெளரவம் சிவாஜி ஸ்டைலில் வசனம் பேசினார் பாலகிருஷ்ணன். அவருக்கு ஒரே மகிழ்ச்சி என்பது அவர் முகத்தில் தெளிவாகத் தெரிந்தது.

“எக்சாக்ட்லி சார். நீங்க பலாப்பழம் மாதிரி சார். வெளிய குத்தினாலும் உள்ள எவ்வளவு ஸ்வீட்னு அவங்களுக்கு நீங்கதான் சார் புரிய வைக்கணும்”

“பலாப்பழம்! பலாப்பழம்!” என்று மீண்டும் சிரித்தார் அவர். அவருக்குப் பெருமை தாங்கவில்லை. “இன்னிக்கு அஞ்சு பீரியட் வச்சு விட்டுடலாம். பாவம் அவங்களும் பஸ் பிடிச்சு வீட்டுக்குப் போகணும். லேடீஸ், கொஞ்சம் அவங்களை நாம கன்சிடர் பண்ணித்தான் ஆகணும். ஜென்ட்ஸ் மட்டும்தான்னா எப்படியாவது அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம். போகும்போது அவங்களை வந்து என்னைப் பாக்கச் சொல்லுங்க. வாட் எ ஜோக், வாட் எ ஜோக்!” என்றார். பிறகு மேஜை மேல் இருந்த மணியை அடித்தார். பியூன் வந்ததும் “இன்னிக்கு அஞ்சு பீரியட்னு எல்லா டீச்சர்ஸ் கிட்டயும் சொல்லிடுப்பா” என்றார்.

செல்வராஜ் “தாங்க்ஸ் சார்!” என்றபடியே எழுந்திருந்தான். பச்சையப்பனுக்கு வாய் கொஞ்சம் திறந்திருந்தது. அவனும் பிரக்ஞை வந்தவனாய் “தாங்க்ஸ் சார்” என்றபடியே வெளியேறினான்.

வெளியே வந்ததும் செல்வராஜ் பச்சையப்பனை தரதரவென்று அரச மரத்தடிக்கு இழுத்துச் சென்றான். “காரியத்தயே கெடுக்கப் பாத்தியே பச்ச! இத்தன நாளா இங்கே வேல பாக்கிறே, இந்தாளப் பத்தி உனக்குத் தெரியாதா? நாம ஏணின்னா அவன் கோணின்னுதான் சொல்லுவான். அஞ்சு பீரியடோட விடணும்னா விடாதீங்கன்னு சொல்லணும், அப்பத்தான் விடுவான். நீ புரியாம அஞ்சு பீரியட் வைங்க சார்னு சொன்னதும் இன்னிக்கு கதை கந்தல்தான் நினச்சேன். என்னவோ சிங்கம் புலின்னு சொல்லிப் பாத்தேன், வொர்க் அவுட் ஆயிடுச்சு. ஆடற மாட்டை ஆடித்தான் கறக்கணும் பச்சை, எல்லார்கிட்டயும் அவன் அவனுக்குப் பிடிச்ச மாதிரிதான் பேசணும். உன்கிட்ட என்ன சொன்னா வேல நடக்குமோ அந்த ஆர்க்யுமென்ட அவன்கிட்ட சொல்லிக்கிட்டிருக்கியே! அவன்கிட்ட என்ன சொன்னா வேல நடக்குமோ அதை இல்ல நாம சொல்லணும்!”

பச்சையப்பன் மண்டைக்குள் பல்ப் எரிந்தது. அந்த நொடியில் ஆயிரம் ட்ரம்ஸ் ஒரே நேரத்தில் ஒலித்தன. மேலே நிமிர்ந்து பார்த்தான். வானமும் நிர்மலமாக இருந்தது.

முந்தைய சிறுகதைகள்:
துரோண கீதை
சுப்ரமணியின் காதல்
அம்மாவுக்கு புரியாது