டிக் ஃபிரான்சிசின் “என்கொயரி”
எனக்கு பொதுவாக டிக் ஃபிரான்சிஸ் எழுதிய த்ரில்லர்கள் பிடிக்கும். அவரது நெர்வ் என்ற புத்தகத்தைப் பற்றி முன்னாலும் எழுதி இருக்கிறேன். யாருக்கும் நினைவிருக்கப் போவதில்லை என்பதால் இங்கே கொஞ்சம் ரிபீட் செய்கிறேன்.
ஃபிரான்சிஸ் ஒரு முன்னாள் குதிரைப் பந்தய ஜாக்கி. ஆங்கிலேயர். இங்கிலாந்து அரச குடும்பத்தினரின் குதிரைகளை எல்லாம் ரேசில் ஓட்டி இருக்கிறார். ஜாக்கி தொழிலிருந்து ரிடையர் ஆன பிறகு எழுத ஆரம்பித்தார். எல்லாமே குதிரைப் பந்தய பின்புலம் உள்ள த்ரில்லர்கள். வங்கி அதிகாரி, பத்திரிகையாளர், துப்பறிபவர், பைலட், குதிரை தரகர், ரேஸ்கோர்ஸ் நிறுவன பங்குதாரர், சமையல் செய்பவர், வைன் வியாபாரி என்று பலதரப்பட்டவர்கள் ஹீரோவாக வருவார்கள். ஆனால் எல்லாருக்கும் குதிரை பந்தய பின்புலம் இருக்கும். சில சமயம் ஹீரோ ஃப்ரான்சிசைப் போலவே ஒரு ஜாக்கியாகவும் இருப்பார்.
ஃபிரான்சிசின் ஹீரோக்கள் எல்லாரும் ஒரே அச்சில் வார்த்தவர்கள். கூர்மையான மூளை உடையவர்கள். எந்த பிரச்சினை வந்தாலும் கலங்கமாட்டார்கள், அதை தீர்க்க முயற்சி எடுப்பார்கள். உணர்ச்சிகளுக்கு அடிமையாகமாட்டார்கள், ஆனால் உணர்ச்சிகளுக்கு உரிய இடம் தருவார்கள். Strong ethical core உடையவர்கள். எது சரி எது தவறு என்பதை பற்றி உறுதியான கருத்து உடையவர்கள். ஆனால் தண்டனை தருவதை விட, பழி வாங்குவதை விட பிரச்சினையை எப்படி தீர்ப்பது என்பதற்குத்தான் முக்கியத்துவம் தருவார்கள்.ஏதாவது ஒரு சீனில் வில்லன்களிடம் பயங்கர அடி வாங்குவார்கள். அதுதான் அனேகமாக புத்தகத்தின் உச்சக்கட்ட சீன் ஆக இருக்கும். அடி என்றால் உங்கள் வீட்டு அடி எங்கள் வீட்டு அடி இல்லை. நெர்வ் புத்தகத்தில் ஹீரோவை heating இல்லாத குதிரை லாயத்தில் கைகளை மேலே தூக்கி கட்டிவிட்டு வில்லன் போய்விடுவான். ஹீரோ நாலைந்து மணி நேரம் அப்படி தொங்க வேண்டி இருக்கும். இன்னொரு புத்தகத்தில் (Forfeit) ஹீரோ ரா விஸ்கியை இரண்டு முழு டம்ளர் குடித்துவிட்டு கார் ஓட்ட வேண்டி வரும். இந்தக் கதையில் கால் உடைந்து படுத்திருக்கும் ஹீரோவை தாக்க ஒரு வில்லன் வருவான்.
எனக்கு இந்த மாதிரி உணர்ச்சிவசப்படாத, எதையும் லாஜிகலாக பார்க்கும் மனிதர்களைப் பிடிக்கும் என்பதால்தானோ என்னவோ இவரது புத்தகங்களை நான் ரசிக்கிறேன்.
என்கொயரி (Enquiry) 1969-இல் வெளிவந்த புத்தகம். இந்தக் கதையின் ஹீரோ கெல்லி ஹ்யூஸ் ரசிக்கக் கூடியவன்.
கெல்லி ஹ்யூஸ் ஒரு ஜாக்கி. அவர் ஓட்டும் குதிரைதான் ரேசில் வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குதிரையை பயிற்றுவிப்பவர் (trainer) க்ரான்ஃபீல்ட். க்ரான்ஃபீல்ட் பயிற்றுவிக்கும் இன்னொரு குதிரை ரேசில் ஜெயிக்கிறது. இவர்கள் யாரும் ஃபவுல் கேம் ஆடவில்லை என்றுதான் ரேசிங் அதிகாரிகள் எல்லாரும் நினைக்கிறார்கள். ஆனால் பேருக்காவது ஒரு விசாரணை நடத்த வேண்டி இருக்கிறது. கடைசி நேரத்தில் விசாரிக்கும் ஜட்ஜ் மாறுகிறார், ஹ்யூஸ், க்ரான்ஃபீல்டுக்கு எதிராக அவர்கள் எதிர்பார்க்காத வகையில் வலுவான, ஆனால் பொய் சாட்சியங்களை ஜட்ஜ் சமர்ப்பிக்கிறார். ஜட்ஜ் நேர்மையானவர் என்பதில் சந்தேகம் கிடையாது. ஹ்யூசும் க்ரான்ஃபீல்டும் இனி மேல் ரேஸ் பக்கம் வரக்கூடாது என்று எச்சரிக்கப்படுகிறார்கள்.
எதிர்பாராத சாட்சியங்களால் அன்று ஹ்யூஸ் கவிழ்ந்துவிட்டாலும் அடுத்த நாள் மனதை திடப்படுத்திக் கொள்கிறான். தான் தவறு எதுவும் செய்யவில்லை, சாட்சியங்கள் பொய் என்பது அவனுக்குத் தெரிந்ததே. பொய் சாட்சியம் என்று அவன் எல்லாரிடமும் சொல்கிறான். தளர்ந்து போயிருக்கும் கிரான்ஃபீல்டை உறுதிப்படுத்துகிறான். கிரான்ஃபீல்டின் மகளுடன் காதல் ஏற்படுகிறது. ஜட்ஜிடம் இந்த சாட்சியங்கள் எங்கிருந்து கிடைத்தன என்று கேட்கிறான். அவனைக் கொல்ல முயற்சி நடக்கிறது. கால் மட்டும் உடைந்து படுத்திருக்கும்போது அவனிடம் இருக்கும் ஒரு சாட்சியைத் திருட வருபவன் அவனை வலுவாகத் தாக்குகிறான். ஹ்யூஸ் எப்படி எல்லா பிரச்சினைகளையும் சமாளிக்கிறான் என்பதுதான் கதை.
வழக்கம் போல ஒரு டென்ஷன் சீன்; மனநிலை பிறழ்ந்த கிரேஸ் க்ரான்ஃபீல்டின் மகள் கழுத்தின் கத்தி வைக்கிறாள். அவளை காதலிக்கும் ஹ்யூஸ் கிரேஸின் கவனத்தை தன் பக்கம் திருப்புகிறான். நல்ல சீன்.
1969-இல் வெளிவந்த புத்தகம்.
டிக் ஃபிரான்சிஸ் புத்தகங்களில் கச்சிதமாக அமைந்த ஒன்று. த்ரில்லர் விரும்பிகள் நம்பிப் படிக்கலாம்.
தொடர்புடைய சுட்டிகள்:
டிக் ஃபிரான்சிசின் “நெர்வ்”
RV,
In your other posting you suggested to start with ‘Forfeit’ if one haven’t read any of DF books before. Now you have written about ‘Enquiry’ , which one I should go with as a start?
LikeLike