குமுதினி II – அந்தப்புர தபால்

குமுதினி 1905-ஆம் ஆண்டு பிறந்தவர். விகடன், கல்கி, கலைமகள் போன்ற பத்திரிகைகள் பிரபலமாக ஆரம்பித்த காலத்தில் எழுதி இருக்கிறார். நாற்பதுகளுக்குப் பின் எழுதியதாகத் தெரியவில்லை. மேல்தட்டு அய்யங்கார் மாமி. அந்த சூழலின் சில பல கட்டுப்பாடுகளை சுலபமாகத் தாண்டி இருக்கிறார். எழுதுவதே அப்படிப்பட்ட ஒரு விஷயம்தானே!

அந்தப்புர தபால்” – இதிகாச ராணிகள் “நவீன” ஸ்டைலில் எழுதிக் கொள்ளும் கடிதங்கள் – என்ற தலைப்பில் எழுதியவை எனக்குப் பிடித்திருந்தன. சீதை தீபாவளிப் புடவை பற்றி தன் அம்மாவுக்கு கடிதம் எழுதுகிறாள், புடவை சாயம் போகாமல் இருக்குமா என்ற கவலை எல்லாம் வெளிப்படுகிறது. ஹிடிம்பியின் பாட்டிக்கு ஹிடிம்பி ஜாதி மாறி மனிதனான பீமனை மணப்பதால் வரும் கோபம், நளபாகம் புகழ் நளனுக்கு சமைத்துப் போடுவதில் உள்ள சிரமங்கள் பற்றி தமயந்தி என்றெல்லாம் சில.

சீதாப் பிராட்டியின் கடிதங்கள்

1

மிதிலாதிபதியான ஜனகரின் பட்டமகிஷிக்கு அயோத்தியிலிருந்து சீதாதேவி எழுதி விடுத்த கடிதம்.

அம்மாவுக்கு அநேக தண்டனிட்டு அடியாள் சீதை வணக்கத்துடன் விக்ஞாபித்துக் கொள்வது. உபயகுசலோபரி. நீ அனுப்பின ஆட்களும் ரதமும் வந்தன. தீபாவளிக்கு எங்கள் எல்லோரையும் மிதிலைக்கு வரவேண்டுமென்று நீ ஆக்ஞாபித்ததாகத் தூதுவன் கூறினான். இங்கே நிகழ்வதெல்லாம் அறிந்தால் அவ்விதம் நாங்கள் வருவது எவ்வளவு சிரமமான செய்கையென்று உணர்வாய். மாமனாரவர்கள் சதாகாலமும் மாண்டவியின் மாமியார் கைகேயி தேவியின் கிருகத்திலேயே இருக்கிறார். என் மாமியாருக்கு அசாத்தியக் கோபம். அதை வெளியே காண்பிக்காமல் பூஜையிலும் பிராமண போஜனத்திலும் இறங்கியிருக்கிறார். விடியற்காலையிலேயே எழுந்து ஸ்நானம் செய்துவிட்டு அவருக்கு உதவி செய்ய வேண்டியதாக இருக்கிறது. நாள் முழுதும் வேலை. சற்றும் ஓய்வு கிடையாது.

கலியாணமாகி வந்ததுமே மைத்துனர் பரதரை அவர் மாமா வந்து அழைத்துக் கொண்டு போய்விட்டார். சத்ருக்கனர் விஷயம் தெரிந்ததுதான், அண்ணாவின் பின் வால். அவர்கள் திரும்பி வந்து, நாங்கள் எல்லோரும் அனுமதி பெற்றுக் கொண்டு மிதிலைக்குப் புறப்பட்டால் தீபாவளிக்கு வந்து சேர முடியுமோ என்னவோ தெரியாது. சந்தேகமாயிருக்கிறது. எல்லாம் யோசித்ததில் தீபாவளியை அயோத்தியிலேயே கழிப்பது உத்தமம் என்று உன் மாப்பிள்ளை தீர்மானித்திருக்கிறார். இதைப் பற்றி மாமனாரவர்களிடமிருந்து அப்பாவுக்கு ஒரு கடிதம் வரும்.

எங்களுக்குப் பீதாம்பரங்களை இங்கே அனுப்பு. உன் மாப்பிள்ளைக்கு மஞ்சள் பட்டுதான் பிடிக்கிறது. ஆகையால் அதையே வாங்கி அனுப்பவும். இங்கே எங்கள் மாப்பிள்ளை ரிஷ்யசிருங்கருக்குத் தீபாவளிக்காக ஒரு புது மாதிரி சுவர்ண கங்கணம் செய்திருக்கிறார்கள். நன்றாக இருக்கிறது. அந்த மாதிரி உன் பெரிய மாப்பிள்ளைக்கு ஒன்று அனுப்பு. இதைக் கொண்டு வரும் ஆட்களுடன் அவ்வித வேலை தெரிந்த தட்டான் ஒருவனனக் கூட்டியனுப்பியிருக்கிறேன். இந்த விஷயம் நான் எழுதினதாகத் தெரியவேண்டாம்.

எனக்கு சிந்தூர வர்ணப் புடவை தயாரித்திருப்பதாக எழுதியிருக்கிறாய். இங்கே அயோத்தியில் எல்லாரும் ரொம்ப நாகரீகமாக துணி உடுத்துகிறார்கள். யவன தேசத்து வர்த்தகர்கள் கொண்டுவரும் பீதாம்பரங்களாம். கரை சின்னதாகப் போட்டு மிக நேர்த்தியாயிருக்கின்றன. நாத்தனார் சாந்தை நீலாம்பர வர்ணத்தில் ஒன்று உடுத்தியிருந்தாள். எனக்கு அது மாதிரி வேண்டுமென்று விருப்பமாயிருக்கிறது. நீ எனக்குக் கலியாணத்தின்போது வாங்கிக் கொடுத்த புடவைகளுக்கெல்லாம் கரை அதிக அகலம். அவைகளை இப்போது எனக்கு உடுத்துவதற்கே எனக்கு வெட்கமாக இருக்கிறது. எல்லாரும் பரிகாசம் செய்கிறார்கள். அந்த மாதிரி வாங்கி அனுப்பாதே.

பூஜ்யரான தந்தைக்கு என் நமஸ்காரங்கள்.

விநயத்துடன் இங்ஙனம்
சீதை

2
அம்மாவிற்கு விக்ஞாபனம். க்ஷேமம். உனக்குக் கடிதம் எழுதிய பிறகு நாத்தனார் சாந்தையைப் பார்த்தேன். நீலாம்பர வர்ணம் ஸ்திரமாக இருப்பதில்லையாம். வெளுத்துவிடுகிறதாம். ஆகையால் எனக்கு அந்த வர்ணத்தில் பீதாம்பரம் வேண்டாம். முதலில் உத்தேசித்தவிதம் சிந்தூரவர்ணப் புடவையையே அனுப்பு. அல்லது தாம்பர வர்ணத்தில் வெளுக்காமலிருக்கும் என்ற உத்தரவாதத்துடன் பீதாம்பரம் அகப்பட்டால் வாங்கியனுப்பவும். ஒரு முறை உடுத்திய வர்ணத்தையே திரும்பத் திரும்ப உடுத்துவதென்றால் அலுப்பாயிருக்கிறது. உன் சௌகரியப்படி செய். நான் தொந்தரவு கொடுக்க விரும்பவில்லை. நீலாம்பர வர்ணம் மட்டும் வாங்காதே.

அடியாள் சீதை

3
அம்மாவிற்கு விக்ஞாபனம். க்ஷேமம். திடீரென்று மாமனாரவர்களுக்கு யோசனை தோன்றியிருக்கிறது. உன் மாப்பிள்ளைக்குப் பட்டாபிஷேகம் செய்யப் போவதாகச் சொல்கிறார். பந்தலில் உங்கள் ஆசீர்வாதத்துடன் புடவை வைக்க வேண்டுமே, எந்த மாதிரி அனுப்புகிறாய்? நவமல்லி வர்ணம் நன்றாயிருக்குமா? பந்தலில் வைப்பதாகையால் நன்றாயிருக்கவேண்டும். ‘மான் புள்ளிகள்’ மாதிரி வேலைப்பாடு செய்த புடவைகள் சட்டென்று அகப்படுமா? அல்லது முன்னால் சொல்லிப் போடச் சொன்னால் மட்டும் கிடைக்குமா? குயில் வர்ணம் மயில் வர்ணமெல்லாம் மாமியாரவர்களுக்குப் பிடிக்கிறதில்லை. வ்யாக்ரவர்ணம் வேஷம் போட்டாற் போலிருக்கும். என்ன செய்யப் போகிறாயோ, எனக்குத் தெரியவில்லை. இந்தப் புடவைகளைப் பற்றிச் சிந்தித்துச் சிந்தித்து என் மூளை கலக்கமடைந்துவிட்டது. ஒரு தீர்மானத்திற்கும் வரமுடியவில்லை. உசிதப்படி செய்.

உன் பிரிய சீதை.

குறிப்பு: அல்லது தீபாவளிப் புடவை, பட்டாபிஷேகப் புடவை இரண்டையும் சேர்த்து ஒரு பெரிய புடவையாக வாங்கி அனுப்பு.

4
அம்மாவிற்கு,

ஒரு புடவையும் அனுப்ப வேண்டாம். எல்லாம் தீர்ந்துவிட்டது. நாங்கள் வனவாசம் செய்யப் போகிறோம். பரதருக்குத்தான் பட்டாபிஷேகம். இதைக் கொண்டு வருவபவன் எல்லா விவரமும் சொல்வான். எனக்கு ஒரே ஒரு மரவுரிதான் இருக்கிறது. காட்டில் மழையில் நனைந்துவிட்டால் கட்டிக் கொள்ள வேறு கிடையாது. ஆகையால் முடிந்தால் ஒரு மரவுரி அனுப்பு. சௌகரியப்பட்டால் வத்தலும் அப்பளமும் அனுப்பு. உன் அப்பளந்தான் நன்றாயிருக்கிறதென்று மாப்பிள்ளை சொன்னார். நாங்கள் சித்ரகூடத்திற்குப் போகிறோம். இது ஒருவருக்கும் தெரியவேண்டாம். அவசரம்.

சீதை

குறிப்பு: இனி புடவைகள் வர்ணத்தைப் பற்றி சிந்திக்கவேண்டாம். எனக்கு மனதில் அதிக நிம்மதி ஏற்பட்டிருக்கிறது. பெண்களெல்லாருமே வனவாசத்துக்குப் போனால் எவ்வளவு நலம் என்று தோன்றுகிறது. வாழ்க்கையின் கவலையில் பாதி குறைந்துவிடும்.

நளன் சமையலில் புலி. அவனுக்கு சமைத்துப் போட முடியாத தமயந்தி செய்யும் தந்திரம் இந்தக் கடிதத்தில்:

அம்மா,

அத்தைப் பாட்டி வந்து சேர்ந்தாள். அன்றைய தினமே எனக்கு சுதினமாயிற்று. அவள் சமையல் செய்கிறாள். அரசர் வாய் பேசாமல் சாப்பிட்டுவிட்டுப் போகிறார். காரணம், அவள் சமைப்பது என்னவென்று அறிய முடியாததே. அதனை அறிந்தாலல்லவா அதில் குற்றம் சொல்லலாம்?

அத்தை அசாத்திய செட்டு. முதல் நாள் விஞ்சிய பதார்த்தங்களைக் கூட வீணாக்குவதில்லை. மிஞ்சிய பருப்பு, ரசம், கீரை எல்லாவற்றையும் ஒன்றாகப் போட்டு ஒரு புது விதக் குழம்பாகச் செய்துவிடுகிறார். இதில் என்ன சரக்குகள் கலந்திருக்கின்றன, எதனால் இந்த வாசனை உண்டாகிறது என்று எவராலும் கண்டுபிடிக்க முடிவதில்லை. முன்பின் பார்த்திராத வஸ்துக்களையெல்லாம் அரசர் உட்கொண்டுவிட்டு அது எவ்விதம் சமைக்கப்பட்டிருக்கிறதென்ற சிந்தனையிலேயே ஆழந்தவராய் கை கழுவிச் செல்கிறார். எல்லாரும் சௌக்கியமாய் இருக்கிறோம்.

இப்படிக்கு
உன் பிரிய தமயந்தி

தொடர்புடைய சுட்டிகள்:
முந்தைய பகுதி – சில்லறைச் சங்கதிகள் லிமிடெட்

குமுதினியின் ராமாயணம் – ஆங்கிலக் கட்டுரை
குமுதினியின் “அந்தப்புர தபால்” – ஹிந்துவில் சீதாப்பிராட்டியின் கடிதங்கள் + ஹிடிம்பியின் பாட்டி எழுதிய கடிதங்கள் (ஆங்கிலக் கட்டுரை)
குமுதினியைப் பற்றி அவரது மருமகள் (மகனின் மனைவி) பிரேமா நந்தகுமார் (நா. கணேசனின் தளத்திலிருந்து)

குமுதினி – “சில்லறைச் சங்கதிகள் லிமிடெட்”

குமுதினியின் எழுத்துக்களை நான் அதிகம் படித்ததில்லை. அனுத்தமா, ஆர். சூடாமணி ஆகியோர் வரிசையில் வைக்கப்பட வேண்டியவர் என்று நினைத்திருந்தேன். சமீபத்தில் “படித்தேன் ரசித்தேன்” புத்தகத்தில் கல்கி குமுதினியின் “சில்லறைச் சங்கதிகள் லிமிடெட்” புத்தகத்துக்கு எழுதிய முன்னுரையைப் படித்தேன். கல்கி, தேவன், எஸ்விவி, சாவி, நாடோடி, துமிலன் வரிசையில் வைக்கப்பட வேண்டியவர் என்று தெரிகிறது. சில சமயம் பழைய எழுத்துக்கு ஒரு ஸ்பெஷல் charm இருக்கிறது. அதை என்னால் ஞானரதத்திலும், சின்னச் சங்கரன் கதையிலும், கமலாம்பாள் சரித்திரத்திலும் பத்மாவதி சரித்திரத்திலும் மட்டுமில்லை, இவரது எழுத்திலும் உணர முடிகிறது. இவரது எழுத்துக்களைத் தொகுத்து ஒரு ஐந்தாறு வருஷத்துக்கு முன் வெளியிட்டிருக்கிறார்கள் என்று தெரிகிறது. புத்தகங்கள் கிடைத்தால் வாங்க வேண்டும்.

கல்கி பாராட்டும் “சில்லறைச் சங்கதிகள் லிமிடெட்” உட்பட்ட சில சாம்பிள்கள் நெட்டில் கிடைத்தன. கல்கியே சொல்வது போல இவரும் ஏ.ஜி. கார்டினர், ஈ.வி. லூகாஸ் வழியில் நடக்க முயற்சித்திருக்கிறார். அந்த கட்டுரையையும், கல்கியின் முன்னுரையையும் கீழே கொடுத்திருக்கிறேன். இன்னும் சில சாம்பிள்கள் அடுத்த பகுதியில்.

சில்லறைச் சங்கதிகள் லிமிடெட்

நான் சென்னைக்குப் போகும் சமயமெல்லாம் அதற்கு இரண்டு நாட்கள் முன்பாகவே என்னுடைய பாட்டி எனக்குப் புத்திமதி சொல்ல ஆரம்பிப்பார். அவற்றில் ஒன்று ‘கதவை எப்போதும் தாளிட்டு வா. இல்லாவிட்டால், ‘அதை வாங்கு, இதை வாங்கு’ என்று தொந்தரவு செய்து கொண்டே இருப்பார்கள்’ என்பது.

நானும் அவள் சொல்லுகிற விதமே செய்வது வழக்கம். அப்படிச் செய்தும் கூட சிற்சில சமயம் கதவைத் தட்டி உள்ளே இருப்பவர்களைக் கூப்பிட்டுத் தங்களுடைய போலிச் சரக்குகளை விற்கப் பார்க்கும் பலரிடம் அகப்பட்டுக் கொண்டிருக்கிறேன். ஆகையால், இந்த முறை ஒரு தினம் பகல் வேளையில் வாசற்கதவை யாரோ தட்டின சமயம் நான் மிக ஜாக்கிரதையாக கதவை அரை அங்குலத்திற்குத் திறந்து எட்டிப்பார்த்தேன்.

அங்கு யாரோ புது மனிதன் நிற்பதைக் கண்டு, ‘ஏதாவது விற்க வந்திருக்கிறாயென்றால் எனக்கு ஒன்றும் வேண்டாம்’ என்றேன்.

‘நான் விற்க வந்திருப்பது சாமான்களல்ல. சௌகரியத்தையே விற்க வந்திருக்கிறேன். உங்களுக்குத் திருப்தி இல்லாவிட்டால் ஒரு பைசா கூட கொடுக்கவேண்டாம். நான் சில்லறைச் சங்கதிகள் லிமிடெட் கம்பெனியின் ஏஜெண்ட்’ என்றான் வந்தவன்.

நான் கதவை மற்றோர் அரை அங்குலம் திறந்து ‘என்ன’ என்று கேட்டேன்.

‘ஒவ்வொரு மாதமும் ஒரு சொற்பத் தொகையை நீங்கள் எங்களுடைய கம்பெனிக்குக் கட்டினால் போதும்.. உடனே எங்களுடைய கம்பெனி ஆட்கள் ஒருவன் மூலமாக உங்களுடைய சில்லறை விஷயங்களை எல்லாம் கவனித்துக் கொள்ளும். குழாயிலே ஜலம் வீணாகக் கொட்டாமல் அவ்வப்போதுப் பார்த்துக் குழாயை மூடி, அநாவசியமாக எரியும் எலெக்ட்ரிக் விளக்குகளை அணைத்து, எண்ணெய் தேய்த்து ஸ்நானம் செய்பவர் மிகுதியாய் வைத்துவிட்டுப் போகும் சீயக்காய் ஜலத்தை மோட்டார் டிரைவருக்குக் கை கழுவக் கொடுத்து, பல் தேய்க்கும் பேஸ்ட் உலர்ந்து போகாமல் அதனுடைய டியூப் மூடியைத் தேடிப் பார்த்து அதை எப்போதும் இறுக மூடிவைத்து, சோப்புக் கிண்ணத்தின் அடியில் தங்கும் ஜலத்தை வடித்து, வாடின வாழை இலைகளைப் பொறுக்கி முன்னால் செலவிற்கு எடுத்துக் கொடுப்பார்கள்’

‘இவ்வித தொண்டு செய்கிற கம்பெனி ஒன்று வேண்டியதுதான்’ என்றேன்.

‘உங்களுடைய வீட்டை ஒழுங்காக வைத்துக் கொள்வதற்கு வேண்டிய உதவியெல்லாம் நாங்கள் செய்யத் தயார். வீட்டில் மளிகை சாமான்கள் முற்றிலும் தீர்ந்து போவதற்கு இருபத்து நான்கு மணி நேரத்திற்கு முன்பே, புதுச் சரக்கு வாங்கி வைப்பதற்கு உத்தரவாதம் தருகிறோம். புருஷர்களின் வேஷ்டி, ஷர்ட்டு முதலியவைகளைக் கிரமமாக உபயோகிக்க எடுத்துக் கொடுத்து, ஜதையில் ஒன்று மாத்திரம் முன்னாடியே கிழிந்துவிடாமல் பார்த்துக் கொள்வோம். இது மெத்தை உறை, தலையணை உறைகளுக்கும் சேர்ந்ததாகும். நாளடைவில் எங்கள் கம்பெனியால் உங்களுக்கு ஏற்படும் பண லாபத்தைக் கவனித்தால், எங்கள் கம்பெனிக்குக் கொடுக்கும் சொற்பத் தொகையைப் பொருட்படுத்தமாட்டீர்கள். பெண்களுக்கு அவர்கள் பழைய ரவிக்கைகளைக் கண்டு அலுப்பு ஏற்படுவதற்கு இரண்டு நாள் முன்பாகவே அவற்றை எடுத்துத் தூர எறிந்து விடுவோம். சாவிக்கொத்தை அடிக்கடிப் பார்த்து உபயோகமற்ற சாவிகள் பல அதில் சேர்ந்து கனமாகிவிடாமல் பார்த்துக் கொள்வோம். எந்தச் சாவி அநாவசியமோ அதை உடனே எடுத்து எறிந்து விடுவோம்’

‘அவ்விதம் செய்ய இதுவரை ஒருவரும் துணிந்ததே கிடையாதே!’ என்றேன்.

‘ஆமாம். மற்றும் நாங்கள் கவனிக்கும் சில்லறை விஷயங்களாவன: தினசரிப் பத்திரிகையின் பக்கங்களைச் சரியாகப் பார்த்து மடித்து வைப்போம். அஞ்சனப்பெட்டி, எண்ணெய் ஜாடி, நெய், சர்க்கரை ஜாடிகளை அவ்வப்போது பார்த்து மூடுவோம். அலமாரி, பீரோக்களின் கதவுகளை மூடுவோம். சீப்பில் தங்கும் மயிர், அழுக்கு முதலியவற்றை நீக்குவோம்.”

‘ஆச்சரியமாயிருக்கிறதே! உங்களுடைய கம்பெனிக்கு மாதம் எவ்வளவு கட்டவேண்டும்?’ என்று நான் கேட்டேன்.

‘இத்துடன் இன்னும் முதல் கிளாஸ் மெம்பரானால் அதற்கு வேறு பிரத்யேகத் தொண்டு செய்வோம். அவை, உங்கள் வீட்டில் யாராவது உங்களைப் பார்க்க வந்தால் அச்சமயம் எங்களுடைய கம்பெனியின் ஆட்கள் ஒருவர் கூட இருப்பார். உங்களில் ஒருவர் “அன்றைக்கு நான் ஏதோ கேள்விப்பட்டேன்…” என்றாவது, “ஏதோ படித்தேனே…” என்றாவது சொல்லிவிட்டு, கேள்விப்பட்டதும், படித்ததும் என்னவென்று ஞாபகத்திற்கு வராமல் கஷ்டப்படும் சமயம், எங்கள் கம்பெனிக்காரர் உடனே, “நீங்கள் அன்றைக்குக் கேள்விப்பட்டது கோடி வீட்டுச் சுப்பம்மாளின் தம்பி மனைவிக்கு சீமந்தம் என்பதே” என்றும், “நீங்கள் படித்தது முந்தாநாள் பத்திரிகையில் அடுத்தவாரம் சென்னையில் மழை அதிகமாயிருக்கும் என்ற செய்தியே” என்றும் ஞாபகப்படுத்துவார்.’

‘நிஜமாகவே இதெல்லாம் செய்வீர்களா?’ என்று நான் கேட்டேன்.

‘இது மாத்திரமா? இன்னும் எவ்வளவோ செய்வோம். உங்கள் சிரமமெல்லாம் போய்விடும். சந்தோஷமாய், கவலையில்லாமல் ஜீவிக்கலாம்!’ என்றான்.

நான் கதவை நன்றாகத் திறந்தேன். ‘உள்ளே வந்து உங்கள் கம்பெனியின் விலாசத்தையும் சந்தா விகிதத்தையும் உடனே சொல்லுங்கள்’ என்றேன்.

கல்கியின் முன்னுரை கீழே. கல்கி இந்த முன்னுரையை 1948-இல் எழுதி இருக்கிறார். பதினைந்து வருஷத்துக்கு முன் குமுதினியின் முதல் கட்டுரையைப் படித்தேன் என்று சொல்வதிலிருந்து குமுதினி 1933-இலேயே எழுத ஆரம்பித்துவிட்டார் என்று தெரிகிறது.

ஸ்ரீமதி குமுதினி அவர்களுடைய பாட்டியாரின் முன்யோசனையை நான் பெரிதும் பாராட்டுகிறேன். சாமான் விற்க வருகிறவர்களுடைய தொல்லைக்காக வீட்டின் வாசற்கதவை சாத்தி வைக்கச் சொன்ன அருமையான யோசனையைக் குறிப்பிடுகிறேன். இந்த விதமான தொல்லையை நான் ரொம்ப அனுபவித்திருப்பதால்தான் சொல்லுகிறேன். பழைய சுபிட்சமான காலத்திலே ஒரு நாள் சாத்தியிருந்த கதவைத் தட்டி திறக்கச் செய்து “புது மாடல் டீலக்ஸ் மோட்டார் கார் வேண்டுமா, சார்! ரொம்ப மலிவாய் வந்திருக்கிறது!” என்று ஒரு ஆள் என்னைக் கேட்டான். ‘டஜன் கணக்காய் வாங்கினால் என்ன விலை? மனங்குக் கணக்கில் நிறுத்தி வாங்கினால் என்ன விலை” என்று நான் கேட்டேன். அவன் என்னைப் பார்த்து “இது கீழப்பாகம் என்று தெரியாமல் வந்துவிட்டேன்; மன்னிக்கவும்” என்று சொல்லிவிட்டு ஓட்டம் பிடித்தான்.

அந்தக் காலம் எல்லாம் மலையேறிப் போய்விட்டது. இப்பொழுது யாரும் எந்தச் சாமானும் வாசல்களில் கொண்டு வந்து விற்பதில்லை. அரிசி வருவதில்லை; பருப்பு வருவதில்லை; கறிகாய் வருவதில்லை; காப்பிக் கொட்டை வருவதில்லை. கரி மூட்டையும் விறகு வண்டியும் வருவதில்லை. தோளிலே ஜவுளி மூட்டையைத் தூக்கிப் போட்டுக் கொண்டு வரும் சைனாக்காரர்கள் வருவதில்லை. பழைய குடைக் கம்பிகளில் ஒரு கட்டு எடுத்துக் கொண்டு குடை ரிப்பேர் செய்ய வருவானே, அவனைக் கூடக் காண்பதில்லை. ஒடிந்த குடைக் கம்பி ஒன்று வாங்க வேண்டுமென்றால் அதற்காக முதலில் சர்க்காரிடம் பெர்மிட் வாங்க வேண்டியிருக்கிறது. அதற்காக மூன்று மந்திரிகளிடமும் ஒன்பது எம்.எல்.ஏ.க்களிடமும் சிபார்சுக் கடிதம் வாங்க வேண்டியிருக்கிறது. இதெல்லாம் முடியாதவர்கள் கறுப்பு மார்க்கெட்டுக்குப் போய்த்தான் உடைந்த குடைக்கம்பி வாங்க வேண்டும்.

இப்படிப்பட்ட காலத்தில் குமுதினி அவர்களின் “சில்லறைச் சங்கதிகள் லிமிடெட்” என்னும் கட்டுரையைப் படித்ததும் எனக்கு ஒரே ஆனந்தமாய்ப் போய்விட்டது.

அந்த மனிதன், அற்புதமான மனிதன், சௌகரியத்தையே விற்பதற்காகக் கொண்டு வந்த மகான், அவன் இப்போது எங்கே இருக்கிறானோ என்று விசாரிக்கத் தோன்றியது.

அந்த ஆச்சரிய சக்தி வாய்ந்த மனிதன், என்னென்ன அபூர்வமான காரியங்களைச் செய்வானாம் தெரியுமா? வீட்டில் மளிகைச் சாமான்கள் எதுவும் முற்றிலும் தீர்ந்து போவதற்கு இருபத்து நான்கு மணி நேரத்துக்கு முன்பே புதுச் சரக்குகள் வாங்கிவிடுவானாம்! குழாயில் ஜாலம் வீணாகக் கொட்டாமல் பார்த்துக் கொள்வானாம்! அனாவசியமாக எரியும் எலெக்ட்ரிக் விளக்குகளை அணைப்பானாம்! இப்படி எத்தனையோ ஸௌகரியங்களை விற்பனை செய்யும் கம்பெனிக்குத்தான் “சில்லறை சங்கதிகள் லிமிடெட்” என்று பெயராம்.

ஆனந்தம்! ஆனந்தம்! அந்த அபூர்வமான கம்பெனியைச் சேர்ந்த மனிதன் ஒரு நாள் என்னுடைய வீட்டையும் தேடி வருவான் என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். அவன் வந்தவுடனே கேட்பேன் – “அப்பனே! உன்னுடைய கம்பெனியார் இத்தனை அற்புதமான காரியங்கள் எல்லாம் செய்கிறார்களே! பேஷான ஒரு புத்தகத்துக்கு ஒரு ஜோரான முன்னுரை எழுதிக் கொடுப்பதாக ஒப்புக் கொண்டிருக்கிறேன். எனக்காக அதை உன் கம்பெனியார் எழுதிக் கொடுத்து உதவி செய்வார்களா?” என்று.

புத்தகம் எழுதுவது பெரிய காரியம். முன்னுரை எழுதுவது வெறும் சில்லறைச் சங்கதிதான்; இல்லையென்று சொல்லவில்லை. ஆனால் பெரிய காரியத்தைச் செய்வதை விடச் சில்லறைக் காரியத்தை நடத்துவது கஷ்டமாயிருக்கிறது. முன்னுரை எழுதுவது எவ்வளவு கஷ்டமென்று தெரிந்திருந்த்ம் எழுதுவதாக ஏற்றுக் கொண்டேன். காரணம் குமுதினி அவர்களின் எழுத்துத் திறமையில் எனக்குள்ள பெரும் மதிப்பை வெளியுடுவதற்கு எப்போது சந்தர்ப்பம் கிடைக்கும் என்று வெகு காலமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்ததுதான்.

பதினைந்து வருஷத்திற்கு முன்பு குமுதினி எழுதிய முதல் கட்டுரையைப் படித்த உடனேயே எனக்கு ஒரே வியப்பாய்ப் போய்விட்டது. தமிழ் பாஷையை இவ்வளவு லாகவமாகக் கையாண்டு எழுதும் இந்தப் பெண்மணி யாரோ, எந்த ஊரோ, என்ன பேரோ என்று பிரமித்துப் போனேன். ஊர் பேர் முதலியன தெரிந்து போய்விட்டதினால் பிரமிப்பு நீங்கி விடவில்லை. நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வந்தது.

தமிழ் வசனத்தைக் கையாளும் லாகவம் ஒரு புறமிருக்க, சாதாரண சின்ன விஷயங்களைப் பற்றி – சில்லறைச் சங்கதிகளைப் பற்றி – இவ்வளவு ரசமாக எப்படி எழுத முடிகிறது என்று ஆச்சரியமும் மற்றொரு புறத்தில் வளர்ந்து வந்தது.

ஆங்கில நாட்டின் பிரபல ஆசிரியர்களான ஏ.ஜி. கார்டினர், ஹிலாரே பெல்லாக் முதலியவர்கள் இப்படி சின்னச் சின்ன விஷயங்களைப் பற்றி ரசமான கட்டுரைகள் எழுதுவார்கள். அவற்றைப் படிக்கும்போது நாமும் இப்படியெல்லாம் ஏன் எழுதக் கூடாது என்று தோன்றும். ஆனால் எழுத உட்கார்ந்தால் எந்தச் சில்லறை விஷயத்தைப் பற்றி எழுதுவது என்றே முடிவு செய்ய முடிவதில்லை. “வங்காளப் பஞ்சத்தின் கோர தாண்டவம்”, “தென்னாப்பிரிக்கா இந்தியர் படும் அவதி”, “அர்ஜென்டினாவில் விவசாய வளர்ச்சி”, “ஃபீஜித் தீவில் தோட்ட முதலாளிகள் கொடுமை” முதலிய மகத்தான விஷயங்களைப் பற்றி வேணுமானால் எழுதலாம். ரொம்ப நன்றாகவும் காரசாரமாகவும் உணர்ச்சி ததும்பவும் எழுதலாம். ஆனால் சலவைத் தொழிலாளியிடம் துணி போட்டு வாங்குவது, தையல் தொழிலாளியிடம் சட்டை தைக்கக் கொடுப்பது, சமையல் அறையில் ஈ மொய்க்காமல் காக்கும் முறை, வீட்டுக்கு விருந்தாளிகள் வந்தால் வரவேற்று உபசரிக்க வேண்டிய படத்தை, அடுத்த வீட்டுப் பெண் குழந்தை சங்கீதம் கற்றுக் கொள்ளும் அழகு – ஆகிய சில்லறை விஷயங்களைப் பற்றி எழுதுவது அரிதரிது; மிகவும் அரிது!

எனக்குத் தெரிந்த வரையில் தமிழ் நாட்டில் குமுதினி அவர்கள்தான் இம்மாதிரி சில்லறை விஷயங்களைப் பற்றி ரசமாக எழுதுவதில் சிறந்த வெற்றி அடைந்திருக்கிறார். மற்றும் பல துறைகளிலும் குமுதினியின் தமிழ்த் தொண்டு நன்கு நடந்து வருகிறது. டாக்டர் தாகூர் அவர்களின் “குமுதினி” என்னும் அழகிய நவீனத்தை மொழிபெயர்த்திருக்கிறார். குழந்தை வளர்த்தலைப் பற்றி அருமையான புத்தகம் ஒன்று எழுதியிருக்கிறார். வார்தா ஆசிரமத்தில் சில காலம் தங்கியிருந்துவிட்டு வந்து அங்கு நடக்கும் காந்திஜிக்கு உகந்த நிர்மாணத் திட்டங்களைப் பற்றியும் எழுதியிருக்கிறார். பல பாஷைகளிலும் அரிய நூல்களைப் படித்து தமிழில் ரசமான விமர்சனங்கள் தந்திருக்கிறார்.

எனினும், குமுதினியின் தமிழ்த் தொண்டுகளுக்குள்ளே அவர் சில்லறை சங்கதிகளைப் பற்றி எழுதியுள்ள கட்டுரைகள்தான் மிகவும் சிலாக்கியமானவை என்று கருதுகிறேன்.

அத்தகைய கட்டுரைகளின் கோவையாகிய இந்தப் புத்தகத்தை தமிழ் மக்களின் சார்பாக மகிழ்ச்சியுடன் வரவேற்று மனப்பூர்வமான வாழ்த்துக் கூறுகிறேன்.

தொடரும்… (அந்தப்புர தபால்)

தொடர்புடைய சுட்டிகள்:

குமுதினி பற்றி ப்ரேமா நந்தகுமார் பகுதி 1, பகுதி 2
குமுதினி எழுதிய சிறுகதை – நந்துவின் பிறந்த நாள்