சுஜாதாவின் “24 ரூபாய் தீவு”

சுஜாதாவின் கச்சிதமான புனைவுகளில் ஒன்று.

எனக்கென்னவோ எழுபதுகளும் எண்பதுகளும்தான் சுஜாதா புனைவுகளின் பொற்காலம் என்று தோன்றுகிறது. அறுபதுகளில் he was finding his feet. எண்பதுகளின் பிற்பாதியிலேயே அவரது creative juices வற்ற ஆரம்பித்துவிட்டது என்று நினைக்கிறேன்.

24 ரூபாய் தீவு புகழ் பெற்ற நாவல். குமுதத்தில் தொடர்கதையாக வந்தது. பிற்காலத்தில் ஒண்டித்வனி என்று கன்னட திரைப்படமாகவும் வந்தது. (கொலை செய்யப்பட்டது என்கிறார் சுஜாதா) இப்போது கிழக்கு பதிப்பகத்தார் வெளியிட்டிருக்கிறார்கள். விலை 80 ரூபாய்.

கதை சிம்பிள். ஒரு நிருபன். விஸ்வநாத். மத்யமர் பிராமணக் குடும்பம். அம்மா, மூன்று தங்கைகள். ஒரு பெண் அவனுக்கு ஃபோன் செய்து சென்சேஷனல் நியூஸ் தருகிறேன் வீட்டுக்கு வா என்கிறாள். போனால் பெண்ணின் பிணத்தைத்தான் பார்க்க முடிகிறது. தற்செயலாக அங்கே இருக்கும் ஒரு டைரியைத் தள்ளிக் கொண்டு வந்துவிடுகிறான். டைரியில் சில கவிதைகளைப் படிக்கிறான். முழுதும் படிக்காமல் டைரியை டாக்சியிலேயே விட்டுவிடுகிறான். பேப்பரில் ஃபில்லர் எழுதும்போது இந்தப் பெண்ணின் மரணம், மற்றும் டைரியைக் குறிப்பிடுகிறான். டைரியைத் தா என்று செத்துப் போன பெண்ணின் தங்கை கேட்கிறாள். நான்தான் அந்தக் கவிதையை எழுதினேன் தா என்று ஒரு “கவிஞன்” கேட்கிறான். பணம் தருகிறேன் தா என்று ஒரு மாமா கேட்கிறார். அடிப்பேன் தந்துவிடு என்று சில ரவுடிகள் கேட்கிறார்கள். பெரிய அரசியல் தலைவரும் தற்போதைய முதல்வரைக் கவிழ்த்து தான் முதல்வராக முயற்சிக்கும் கோபிநாத் இவனைக் கூப்பிட்டு அந்த டைரியைப் பற்றி விசாரிக்கிறார். முதல்வருக்கும் இறந்தவளுக்கும் தொடர்பு இருந்திருக்கலாம், நான் உனக்கு போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்கிறேன் என்கிறார். டைரியைத் தா தா என்று பலரும் பல விதமாகக் கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். ஸ்காண்டல் பெரிதாகி முதல்வர் ராஜினாமா, கோபிநாத் முதல்வர். அடுத்த நாளே இவன் பத்திரிகையில் இந்தப் பெண்ணைப் பற்றி செய்தி போடுவதை நிறுத்துகிறார்கள். இவன் எதிர்க்க வேலையிலிருந்து சஸ்பெண்ட் செய்கிறார்கள். விஸ்வநாத்தின் 15 வயதுத் தங்கை சீரழிக்கப்படுகிறாள். விஸ்வநாத் அரெஸ்ட் செய்யப்படுகிறான். டைரி எங்கே எங்கே என்று அழுத்தம் தரப்படுகிறது. கடைசியில் வேலையிலிருந்தே தூக்கிவிடுகிறார்கள். தன் பொருட்களை எல்லாம் ஆஃபீசிலிருந்து எடுத்து வரும்போது டைரி அங்கே பல குப்பைகளோடு கிடக்கிறது. டைரியில் என்ன இருக்கிறது, விஸ்வநாத் என்ன ஆனான் என்பதுதான் க்ளைமாக்ஸ்.

கதையின் பெரிய பலம் ஹீரோயிசம் எதுவும் இல்லாதது. விஸ்வநாத் நம் பக்கத்து வீட்டில் பார்க்கக் கூடியவன். அதி சாதாரணன். கடைசி வரைக்கும் அப்படித்தான். அவனுடைய அடிப்படை சுபாவம் மாறுவதே இல்லை. அவன் குடும்பத்தார், ஆஃபீஸ், அரசியல்வாதிகள் எல்லாருமே நாம் பார்க்கக் கூடியவர்களே. கதையின் நம்பகத் தன்மை சிறப்பாக இருக்கிறது. அப்புறம் சுஜாதாவின் நடை, சின்னச் சின்ன ஜோக்குகள், கிளுகிளுப்புக்காக கொஞ்சம் sexual references (இன்று காலாவதியாகிவிட்டவை) எல்லாம் உண்டு.

பலவீனம் சுலபமாக யூகிக்கக் கூடிய வில்லன்கள். சில பக்கங்களிலேயே டைரியில் அடையாளம் காட்டப்படப் போகும் வில்லன் யார் என்று தெரிந்துவிடுகிறது. இன்னொரு விதத்தில் சொன்னால் கதை, கதையின் முடிச்சு எல்லாம் சீக்கிரமே புரிந்துவிடுகிறது. ஆனால் “திரைக்கதை’ நன்றாக இருக்கிறது.

இதில் கணேஷ்-வசந்த் இருவரும் உண்டு. சின்ன ரோல்தான், விஸ்வநாத்தை பெயிலில் எடுக்கும் வக்கீல்கள். கணேஷ் சென்னை வந்தாயிற்று. ஆனால் இன்னும் முழு கணேஷாக மாறவில்லை. வசந்த் மாதிரி ஓரிரு இடங்களில் டயலாக் அடிக்கிறார்.

படியுங்கள் என்று சிபாரிசு செய்கிறேன்.

தொடர்புடைய சுட்டி:
ஒண்டித்வனி பற்றி சுஜாதா