குருவி மூளை (சிறுகதை)

”கனம் கோர்ட்டார் அவர்களே! திருமணம் ஆகி ஆறுவருடங்களே நிரம்பிய இந்தப் அபலை அனுபவித்த கொடுமைகளை பிராசிக்யூஷன் தகுந்த சாட்சியங்கள் மூலம் நிரூபணம் செய்துள்ளது. எனவே இந்தியன் பீனல் கோட் செக்‌ஷன் 304A டவ்ரி டெத்
படி ஆயுள் தண்டனை….”

ஹஹ்ஹ்ஹா……

ஆர்டர்… ஆர்டர்…… ஆர்டர்…. கோர்ட்டாரின் ”கேவல்” அவரின் மேஜையின் மேல் மீண்டும் மீண்டும் மோதியது

கருப்பு அங்கியிலிருந்த ராகவன். சுற்றி வரப் பார்த்தான். முதலில் தன் சீனியரின் முகத்தைப் பார்த்தான். கறுத்திருக்கிறதா சிவந்திருக்கிறதா? தெரியவில்லை ஆனால் ஆத்திரம் தெரிந்தது. டிஃபென்ஸ் அணி அட்டகாசமாக சிரித்தது. சாட்சி கூண்டிலிருந்த சாட்சி எக்காளத்துடன் சிரித்தது. பார்வையாளர்கள் எல்லோரும் எழுந்து நின்று கையை அவனை நோக்கி நீட்டிச் சிரித்தனர். திடீரென்று கோர்ட்டார் எழுந்து நின்று ”கேவலை” தன் தலையிலேயே தட்டிக் கொண்டு ஆர்டர் ஆர்டர் என்றார். ”கேவலை சீனியரை பார்த்து வீசி எறிந்தார். சீனியர் தலையில் மோதி விழுந்தது. சீனியர் ”வலிக்கலையே, வலிக்கலையே”என்று தலையை தடவி விட்டுக் கொண்டே கத்தினார்.

கோர்ட்டார் வேகமாக இறங்கி வந்து சாட்சிக் கூண்டில் ஏறிகொண்டு அங்கிருந்த சாட்சியை கூண்டிலிருந்து வெளியே தள்ளினார். ”ராமசுந்தரம்… அபிஷ்டு… இவனெல்லாம் ஒரு வக்கீல், 304A ஆ? Bயா? இது கூடத் தெரியாது, வந்துட்டன் ஜூனியரை கூட்டிண்டு” என்றவாறு கையை தலைக்குமேல் வைத்துக் கொண்டு ஆடினார்.

ராமசுந்தரம் “வலிக்கலையே,  வலிக்கலையே” என்றார்.

“என்ன வலிக்கலைங்கறாய், A வலிக்கலையா B வலிக்கலையா இல்லை 304லே வலிக்கலைங்கராயா?”

ராகவனுக்கு தலை வலித்தது.

தள்ளிவிடப்பட்ட பெண் சாட்சி திடீரென்று தன் முன்னால் ஆணாக மாறி ”எப்படியாவது எனக்கு சாட்சிக் கூண்டை ஜட்ஜ் கிட்டே இருந்து எனக்கு வாங்கிக் கொடுங்க சார்…என்ன பீஸானாலும் சரி” என்றது.

க்யுக்கி…கீக்….க்யூக்கிக்…கீக்

”ஷ்ஷ்ஷ்ஸ்ஸ்…..”

குருவிகள். அவனை அலட்சியப்படுத்தியது அவை இரண்டும். காலைச் சுறுசுறுப்புடன் தன் மெல்லிய கூவலுடன் கவலையில்லாமல் தன் கடமையைத் தொடர்ந்தது.

”சனியன்கள்!”

10 மணி சூரிய ஒளியிடமிருந்து தப்பிக்க போர்வையை முகத்திற்கு மேல் படரவிட்டான்.

“ச்ச…ஜட்ஜ் எப்படி ஆடுவார்”

க்யுக்கி…கீக்….க்யூக்கிக்…கீக்

போர்வைக்குள் சிந்தித்தான். வெப்பம் பரவத் தொடங்கியது. ராகவனுக்கு வேர்த்தது.

“என்னது? விவஸ்தையில்லாமல் கோர்ட் ப்ரொசீடிங்க்ஸ்…”

கீக்…கிக்கி…கீக்

”இனி படுக்கமுடியாது…மனுஷன் தூங்கக் கூட முடியாது இந்த வீட்டில்”

போர்வையை எட்டி உதைத்து விட்டு எழுந்து கட்டிலில் உட்கார்ந்த்தான். தலையனையை கட்டிலிருந்த சுவரோரம் சாய்த்துக் கொண்டு அதன் மீது உட்கார்ந்தவாறே சாய்ந்துக் கொண்டான்.

வரிசையாக ஒன்றன் பின்னால் நான்கு பெரிய அறைகள் கொண்ட வீடு. முன்பக்க ஹால். பின் பக்கம் அடுப்படி. அதன் பின் பின்பக்க தாழ்வாரம். பின் அறைக்கும் முன் அறைக்கும் நடுவில் இரண்டு பெரிய அறைகள். முன் அறையில் ராகவன். முன் அறையிலிருந்து முன் சுவற்றின் நடுவில் தெருவிற்கு வாசல் கதவு. கதவுக்கு இரண்டு புறமும் ஜன்னல்கள். ஐந்து படிகள் இறங்கினால் தெருவில நிற்கலாம். படிகளுக்கு இரண்டு பக்கமும் திண்ணை. திண்ணைகளையும் படிகளையும் ஓட்டு கூறை வெயிலிலும் மழையிலும் பாதுகாக்கும் என்பது நம்பிக்கை. திண்ணகளிலிருந்து ஜன்னல் வழியாக முன் அறையை பார்க்க முடியும். வாசல் கதவின் வழியாக அதற்கு நேராக அமைந்துள்ள அடுத்தடுத்த அறைகளின் கதவுகள் வழியாக பின் தாழ்வாரம் வரை பார்க்க முடியும்.

முன் அறையில் வாசல் பக்கம் இடப்பக்க ஜன்னலை அடுத்து ராகவனின் கட்டில். முதல் அறை இரண்டாம் அறை தடுப்புச் சுவரை ஒட்டி வலப்புறத்தில் நெல் மூட்டைகள்.

க்யுக்கி…கீக்….க்யூக்கிக்…கீக் ….

வட்டமடித்துக் கொண்டிருந்த குருவிகளிரண்டு இரண்டிரண்டாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த நான்கு நெல் மூட்டைகளின் மேல் சென்று அமர்ந்தன. முதல் குருவி ஒரு மூட்டையிலிருந்த சிறிய ஓட்டையின் வழியாக தன் அலகால் கொஞ்சம் நெல்லை கவ்வியது. அதன் துனைக் குருவி முகத்தை வெடுக்கென்று வெடுக்கென்று எந்த கணக்குமில்லாமல் எல்லா திசைகளிலும் கழுத்தை வெட்டிக் கொண்டிருந்தது. ஒரு முறை அவனைப் பார்த்து வேகமாக முகத்தை திருப்பியது போலிருந்தது அவனுக்கு. முதல் குருவி மேலும் பேராசையுடன் மூட்டையிலிருந்த நெல்லை கவ்வ முயன்றது. ஆனால் பாதிக்குமேல் தரையில் சிதறியது. பயந்து இரண்டு குருவிகளும் படபடத்து மூட்டையின் மேல் சிறகடித்து எழுந்தது. ஒரு அரைவட்டம் போட்டு பின்னர் தைரியம் பெற்று மீண்டும் மூட்டை மேல் சென்றமர்ந்தது. இப்பொழுது முதல் குருவி வெடுக் வெடுக்கென்று முகத்தை வெட்ட இரண்டாவது குருவி மூட்டையை பதம் பார்த்தது. அலகிலிருந்து நெல் சிந்தும் வரை கவ்விய பின்னர் இரண்டும் ஒரு முறை முகத்தை வெட்டிக் கொண்டு திடீரென்று நினைத்துக் கொண்டு சிறகுகளை வேகமாக அடித்துக் கொண்டு அவன் கட்டிலை கடந்து வாசல் வழியாக பறந்து வெளியில் சென்றன.

ராகவன் ஜன்னல் வழியாக குருவிகளை கண்களால் பின் தொடர்ந்தான். வீட்டின் எதிரிலிருந்த பெரிய மாமரத்தை நோக்கிச் சென்றது. மாமரத்தை ஒரு சுற்று சுற்றி வந்து சற்றே அந்தரத்தில் சிறகுகளை படபடத்துவிட்டு மேற் கிளை வழியாக கீழே பாய்ந்து மறைந்தது.

“எங்கே?” கழுத்தை மேலும் கீழும் நீட்டினான்.

ஒரு கோணத்தில் பிடித்துவிட்டான். மரத்தின் அடர்ந்திருந்த நடுப் பகுதியில் இரண்டு கிளைகளுக்கு நடுவில் ஒரு குச்சிகளாலான கூட்டில் வந்திறங்கியது. உள்ளிருந்து ஒரு குஞ்சு எட்டிப்பார்த்தது. ஒரு குருவி அலகினால் அந்த குஞ்சின் அலகிறகுள் கொள்ளையடித்த நெல்லை ஊட்டியது. இன்னொன்று நெல்லை கூட்டினுள் அப்படியே போட்டுவிட்டு மீண்டும் தனியாக ராகவனை நோக்கி வந்தது. வாசலுக்குள் சுதந்திரமாக பறந்து வந்து கீச் கீச்சென்று கத்தியவாறு வட்டமடித்தது. சிறிது நேரத்தில் முதல் குருவியும் பறந்து வந்து சேர்ந்து கொண்டு கத்தியது. அந்தரத்தில் சிறிது கத்திய பிறகு நெல் மூட்டையை நோக்கிப் பாய்ந்தது.

பாட்டி பின் கட்டிலிருந்து முன் கட்டிற்கு வேலைகாரியிடம் கத்திக் கொண்டே வந்தாள். அவள் உள்ளே நுழைந்ததும் குருவிகளிரண்டும் வாயிலிருந்த நெல்லை சிந்திவிட்டு வாசலை நோக்கி பறந்து மறைந்தது.

”ராகவா, இந்த மூட்டையை கொஞ்சம் அந்த குதிரில் தட்டேண்டா…இரண்டு நாளா கத்திட்டிருக்கேன்ல…பாரு நெல்ல குருவி பாழ் பண்ணுது”

“போ பாட்டி! வேற வேல இல்ல இதுக்கு தான் நான் வக்கீலுக்கு படிச்சேனா… ஒரு வக்கீல என்ன வேல வாங்கிறதுன்னு உனக்கு விவஸ்த்தையே கிடையாது”

“ஆமாம் போடா! உங்க தாத்தாவுந்தான் பெரிய கிரிமினல் வக்கீல் அவர் ஒரு நாளாவது வீட்டில உக்கார்ந்திருந்தாரா? எத்தனை ஜனங்க அவருக்காக வீட்டு வாசல்ல காத்திட்டிருப்பா தெரியமா? நீ கட்டில்ல தூங்கிற இடத்தில தான் காலம்பற 7 மணிலிருந்து அவர் கேஸ் பாத்திட்டிருப்பாரு தெரியுமா? நீ 11மணி வரத் தூங்கிட்டிருக்க”

“கேஸ் பாக்கிறதுக்கு முதல்ல ஒரு நல்ல சீனியரிட்ட தொழில் கத்துக்கனும். நல்ல சீனியர்ட்ட சேந்துக்கனும்னா வக்கீல் பட்டம் வாங்கியிருக்கனும். பட்டம் வாங்னும்னா பாஸ் பண்ணியிருக்கனும். பிள்ளையாண்டானுக்கு பாஸ் பண்ற வழியே தெரியலையே!” என்றவாறு பார்த்தசாரதி வந்து திண்ணையை விட்டுவிட்டு வாசற்படியில் உட்கார்ந்தார்.

”மாமா, உங்க வேலை என்ன உண்டோ அதப் பாருங்க” ராகவன் முறைத்துவிட்டு உள்ளே சென்றான்.

“போடா போ, உங்க தாத்தாண்ட நான் ஜூனியரா இருந்தச்ச தான் தொழில் கத்துண்டேன். இருந்தாலும் எவ்வளவு மதிப்பா என்னெ வச்சுப்பார் தெரியுமா! நீயும் இருக்கியே! அது சரி…! என் ஆத்துல உள்ளாவாளுக்கெல்லாம் ஓரளவு சம்பாதிச்சாச்சு கொடுத்தேன். அவாளே என்ன மதிக்க மாட்டேங்கறா! நீயா மதிக்கப் போறே! அது மட்டுமா…வெளில உள்ளவாளுக்கும் தான் தானம் தர்மம எல்லாம் செஞ்சேனே. ஏன்! இல்லாதவாள்ட்டேயெல்லாம் ஃபீஸே வாங்கலயே! இருந்தாலும் யார் மதிக்கறா என்னை? வெட்டி வக்கீலுங்கறா!”

”ராகவனைப் பத்தி உங்களுக்கு தெரியாதா? விடுங்க சாரதி அண்ணா” என்றாள் பார்த்தசாரதியின் புலம்பல்களை பற்றி தெரிந்திருந்த பாட்டி. சுய பச்சாதாபம்.

”இல்லேம்மா கற்பகம்! பீஸ் கெட்ட காசில்லாமல் 4 வருஷம் முடக்கிப் போட்ட வக்கீல் படிப்பு. அதை முடிக்கனும்னு  நான் கஷ்டப் பட்டுண்டிருந்தச்சே உன் ஆம்படையான் எனக்காக பீஸ் கட்டினான். அப்புறம் நான் பாஸ் பண்ணி வெளியே வரச்சே ஃப்ளரிஷ் ஆயண்டிருந்த அவன் என்னே ஜூனியராவும் சேர்த்துண்டு நேக்கு ஒரு வாழ்வும் கொடுத்தான்!  பேரக் குழந்தையை ஒன்னண்ட ஒப்படைச்சுட்டு பிள்ளையோடும், மாட்டுப் பொண்ணோடும் நம்மளையெல்லாம் அழ உட்டுண்டு ஆக்ஸிடண்டில போய் சேர்ந்துட்டன். இந்தப் பிள்ளையை வச்சுண்டு நோக்கு அப்புறம் கஷடம் தான். நேக்கும் நோக்கு உதவ முடியலே. எப்போ கட்சிக்காராள்ட்டே கோர்ட்டார் காசு வாங்கிண்டு தீர்ப்பு சொல்ல ஆரம்பிச்சாரோ அன்னிக்கு கவுனை கழட்டினவன் தான் நான். என்ன செய்யறது! உன் ஆம்படையான் நேக்கு தொழில் மட்டும்னா கத்துக் கொடுக்கலே! லோகத்தில் எப்படி தர்மத்தோடு வாழறதுன்னும் சொல்லிகொடுத்துட்டானே! ஆனா நாலு காசு சம்பாதிச்சாத்தான் லோகத்தில மதிப்பா! நம் வாழ்வு தான் இப்படி ஆயிட்டது. இவனாவது உருப்படனுமேங்கற கவலைதான் நேக்கு”

”உங்க அன்பு இவனுக்கு புரிய மாட்டேங்குதே, சிவ சிவா”

“சரி பாஸ் பண்ற வரை வக்கீல் மகேஷ்வரன்ட்ட அஸிஸ்டண்டா இருன்னா, துரை ஈ அடிக்கறவாள்ட்டேல்லாம் அனுப்பிச்சு இன்ஸல்ட் பண்ணாதேள்ங்கறான். சரிடா சும்மா இருக்கறதுக்கு எதனாச்சும் தொழில் ரீதியாவது பேசிண்டிருக்கலாமோல்லியோன்னா அவன் ஜூனியராத்தான் போவானாம். பாஸ் பண்ணாதவாள யார் ஜீனியரா ஒத்துப்பா? ஏதாவது ஐடியா சொல்லப் போனா கோபம் மட்டும் மூக்குக்கு மேலேன்னா வர்றது அவனுக்கு. என்னவோ அவன் பாடு பகவான் பாடுன்னுட்டு என்னாலே பாத்துண்டிருக்க முடியலே. பகவான்னு சொன்னதும் தான் நினைப்பு வர்றது. கோயில்லே கிருஷ்ணமூர்த்தி காத்திண்டிருப்பான். நான் வரேம்மா”

பார்த்தசாரதி சென்றதும் கவலையுடன் பின் கட்டிற்கு சென்றாள் பாட்டி.

ராகவன் கட்டிலில் வந்து உட்கார்ந்துக் கொண்டான்.

“பாட்டி காஃபி கொண்டு வா”

குருவிகள் வேலையை சுறு சுறுப்பாக செய்து கொண்டிருந்தன. கத்திக் கொண்டிருந்தன.

“என்னப்பா வக்கீலு, இன்னிக்கு என்ன ப்ளானு? கோர்ட்டுக்கு போலியா?” நக்கலாக கேட்டுக் கொண்டே தன் பூனையுடனும் கின்னத்தில் பாலுடனும் தினத்தந்தியுடனும் வாசல் திண்ணையில் வந்து உட்கார்ந்தான் இரண்டு வீடு தள்ளி இருக்கும் வீட்டின் சுரேஷ்.

’கடுப்பேத்தாதப்பா”

பூனை பாலில் மூழ்க சுரேஷ் தினத்தந்தியில் மூழ்கினான். பாட்டி காஃபியுடன் தோன்றினாள். நிலைகண்ணாடியில் தலையை வாரிக் கொண்டிருந்தான் ராகவன்.

“ஏண்டா வக்கீல் மகேஷ்வரண்ட்ட..”

“பாட்டி மறுபடியும் மறுபடியும் இந்தப் பேச்ச எடுக்காதேங்கறன்ல்ல…இனிமேல் மகேஷ்வரன் அது இதுன்ன எனக்கு கெட்ட கோபம் வரும். அப்புறம் இந்த வீட்டிலயே இருக்க மாட்டேன். நீ தனியா கிடந்து சாக வேண்டியதான்.”

”சரிப்பா…நீ எங்கேயும் போக வேண்டாம். ஒனக்கு என்ன தோணுதோ அதைச் செய்” என்று சோர்வுடன் பாட்டி திரும்பினாள்.

“அப்புறம் பாட்டி…அந்த சாரதி மாமாவ அவரோட வீட்டிலேயே இருக்கச் சொல்லு. கிழவனுக்கு இந்த காலத்து கேஸ் ஒன்னகூட டீல் பண்ண முடியாது. எங்கே? கோர்ட்டுக்கு வழி சொல்ல சொல்லு பாப்போம்? கிழடு. இவன்ல்லாம் உயிரோடிருக்கனும்னு யாரு அழுதா. இவன் போனா மாமி கூட அழமாட்டா. நயா பைசாக்கு பிரயோஜனமில்ல. இதுல ஊர் வம்பு ஒண்ணு தான் குறச்சல்”

“டேய் டேய்…சாரதி மாமாவே அப்படியெல்லாம் பேசாதே. அவர் நமக்கு செஞ்ச உதவி இந்த காலத்தில் யாரும் பண்ண மாட்ட. நம்ம தாத்தாவும் ஒங்க அப்பா அம்மாவும் போன பிறகு இவர் தான் நம்ம கடனையெல்லாம் அடச்சார் தெரியுமா? எதுக்குடா? யார்டா இந்த காலத்தில இப்படி செய்வா? ஏதோ நம்ம மேலே உள்ள அக்கறையில உனக்கு புத்திமதி சொல்றாரு. அவரை போட்டு இப்படி திட்டுறயே. வயசுக்காவது மதிப்பு குடுக்கணும்டா”

“பாட்டி அதல்லாம் ஒன்னோட வச்சுக்கணும். நானா அவர எங்க கடனெல்லாம் வந்து அடச்சு குடுங்கன்னேன்? கடன அடைக்கிறேனுட்டு ஒன்ன டாவடிச்சிருப்பாரு…”

“டேய்….” பேச்சு வராமல் பாட்டி கத்தினாள். கண்களில் கண்ணீர் நிறைந்திருந்தது. சிறிது நேரம் ஒன்றும் பேசாமல் நின்றாள்…பின்னர் சென்று விட்டாள்.

காஃபியை எடுத்துக் கொண்டு திண்ணைக்கு வந்தான். சுரேஷ் கண்டுகொள்ளாமல் தினத்தந்தியில் மூழ்கியிருந்தான்.

”கேவலம் இந்த சுரேஷ் பயல். டுவெல்த் ஃபெயில். இவன்கூட நம்மள மதிக்க மாட்டேங்கறான். வரட்டும். ஒரு பேப்பர்தான். அது கிளியர் பண்ணின பிறகு பாத்துக்கறேன்”

க்யுக்கி…கீக்….க்யூக்கிக்…கீக் இரண்டு குருவிகள் ஐந்தாக வீட்டுக்குள்ளும் வெளியுமாக பறந்தது.

“என்னப்பா சுரேஷ்…என்ன நீயூஸ் பேப்பர்ல”

சுரேஷ் தலையை நிமிர்த்தவில்லை. ராகவனை அலட்சியப்படுத்தினான்.  ராகவனுக்கு பார்த்தசாரதி ஏற்றிய கடுப்பே குறையவில்லை. பாட்டி வேறு அவருக்கு பரிந்து கொண்டு வந்ததில் இன்னும் ஆத்திரம் அடைந்திருந்தான். இப்பொழுது சுரேஷ் மதிக்கவில்லை.

முந்தைய நாள் இரவு பியர் கம்பெனிக்கு ராகவன் வழக்கமாக கூப்பிடும் சுரேஷை கூப்பிடவில்லை. வக்கீல் பத்ரியை கூப்பிட்டு சென்றான். பாஸ் பண்ணிய வக்கீல். பிராக்டீஸ் செய்யும் வக்கீல். முக்கியமாக சம்பாதிக்கும் வக்கீல். ராகவனை பொறுத்த வரையில் சுரேஷ் ஒரு யூஸ்லெஸ் மற்றும் யூஸ் அண்ட் த்ரோ. கம்பெனி இல்லாவிட்டால் மட்டும் சுரேஷிடம் பேசுவான். .

“இப்படி இன்ஸல்ட் பண்ணுறானே? காலேஜ்ல் இவன் மட்டுமிருந்தா செத்தான்…” ஆத்திரம் ஏறிக்கொண்டேயிருந்தது.

க்யுக்கி…கீக்….க்யூக்கிக்…கீக்

”ச்ச..இந்தக் குருவி தொல்ல தாங்க முடியல. மனுஷனை நிம்மதியா தூங்க கூட விடறதில்ல” ஆத்திரத்தை மறைக்கப் பேசினான்.

“என்னமோ வக்கீலுங்கற…குருவி மேல கேஸ் போடு…ஹஹ்ஹஹஹா…” சுரேஷ் கோபத்தை தன் மட்டமான ஹாஸ்யத்தால் வெளிப்படுத்தினான்.

“என்னப்பா கிறுக்குத்தனமா பேசற…குருவி மேல கேஸ் போட முடியுமா?” ராகவனுக்கு இதற்கெல்லாம் பதில் பேசவேண்டிய அவசியமே கிடையாது என்ற அடிப்படையை ஆத்திரம் மறைத்தது.

”கேஸ் போட முடியாட்டி ஜெயில்ல போடு…புடிச்சு கூண்டில போட…ஒன் சவடால்லாம் ஒன் பாட்டிகிட்ட தான். இந்த குருவிகிட்டல்லாம் பலிக்காது…என்ன குருவிய ஒன் பாட்டின்னு நினச்சியா. உருவந்தான் அதுக்கு சின்னது.”

ஆத்திரம் தலைக்கு மேல் ஏறத் தொடங்கியிருந்தது.

”அறிவில்லாத குருவி. அதப் போய் மனுசனுக்கு ஈக்வல்லா பேசறியே”

“உனக்கு ஈக்வல்லாதான் பேசறேன். குருவிக்கு ஓன் சைஸ்க்கு மூளை. உனக்கு அந்த குருவி சைஸுக்கு மூளை…ஹஹ்ஹாஹஹ்ஹ்…” முழுவதாக இன்ஸல்ட் பண்ணிய திருப்தி.

”சுரேஷ் மரியாதையாப் பேசு…நான் ஒரு வக்கில்.”

“ஆமா பொல்லாத வக்கீல்…போக்கத்த வக்கீல்…மொதல்ல பாஸ் பன்ற வழியப் பாரு” பேப்பர், கிண்ணம், பூனையுடன் திண்ணைய காலி செய்தான் சுரேஷ்.

ஆத்திரத்தில் தனித்து விடப்பட்ட ராகவனுக்கு மேலும் ஆத்திரம் ஏறிக் கொண்டேயிருந்தது. வேகமாக திண்ணையை விட்டு எழுந்து வீட்டிற்குள் நுழைந்து அதே வேகத்தில் கதவை மூடிவிட்டு கட்டிலில் விழுந்தான். மூட்டையின் மேலிருந்த குருவிகள் பதட்டமடைந்து எல்லா திசைகளிலும் பறந்தன. முன் கதவு முடியிருந்ததால் தடுமாறி எங்கு போவது என்று தெரியாமல் பின்னர் ஜன்னல் இடுகை கண்டு பிடித்து வெளியே பறந்தது ஒன்று. இரண்டு பின் கட்டை நோக்கி பறந்து வெளியேறிற்று. இரண்டு அந்தரத்தில் பறந்துக் கொண்டிருந்தது. கதவு சத்தத்தில் ஏற்பட்ட பயத்தில் வழக்கத்தை விட பயங்கரமாக கத்திக் கொண்டிருந்தது.

ராகவன் வெறியுடன் கட்டிலில் உட்கார்ந்திருந்தான்.

“கேவலம் சுரேஷ்…இவன் நம்மளை இன்ஸல்ட் செய்திட்டானே…இந்த ஊரிலேயெ இருக்ககூடாது இனிமேல்.” யோசித்தான். ”

“அது சரிபடாது. காசில்லாமல் எங்கே போறது?” இயலாமை மேலும் ஆத்திரத்தையூட்டியது. சிறிது நேரம் அப்படியே சிந்தனையில் உடகார்ந்திருந்தான். சிந்திக்க முடியவில்லை. கோபம் கோபமாக வந்தது.

“நம்மால் ஒன்றுமே செய்யமுடியாதா? ஒன்றுமே சாதிக்க முடியாதா? எனக்கு தெரியும் ஏன் பாஸ் பண்ணலைன்னு. என் மூளை யாருக்கும் குறஞ்சது ஒன்னுமில்லை. சொல்லப் போனா எனக்கு எல்லாத்தையும் விட அதிகம். எப்படி சொல்லப் போக முடியும்? என்ன ப்ரூவ் பண்ணியிருக்கிறேன்? முடியாதுங்கறதத் தான் புரூவ் பண்ணியிருக்கிறேன்…பண்றேன் பண்றேன் நான் யாருன்னு காட்டுறன்… ”

க்யுக்கி…கீக்….க்யூக்கிக்…கீக் குருவிகள் அவன் சிந்தனையை கலைத்தது. மீண்டும் ஐந்தாகி இருந்தது. கதவு மூடியிருந்தால் இப்பொழுது ஜன்னல் வழியாக ஏற்பட்ட புதிய பாதைக்கு பழக்கப்பட்டிருந்தது.

”இருந்தாலும் சுரேஷ் என் மூளை இந்த குருவி சைஸ்ன்னு இன்ஸல்ட் பண்ணிட்டான்…குருவி மேல கேஸ் போடனுமாம் இல்லைன்னா ஜெயில்ல போடனுமாம்ல.. அவனுக்கு தான் மூளை குருவி சைஸ்…எனக்கு அப்படின்னா அவனுக்கு அதுகூட கிடையாது”

கீக்யுக்கி…கீக்….க்யூக்கிக்…கீக்

”இந்தக் குருவி கேவலம் இந்த குருவி ….இதா என் மூளை? அறிவுகெட்ட குருவி…” திடிரென்று ஐடியா வந்தது.

“ஆஹா…என்ன செய்கிறேன் பாரு உன்னை ஜெயில்ல போட முடியாதுன்னு சவால் விட்டனல… ஒன்ன பிடிக்கிறேன் பார்” என்று குருவிகளை நோக்கி ஓடினான்.

வெட்டி வெட்டி பார்த்துக் கொண்டிருந்த காவல் குருவிகளும் இறைகுருவிகளும் மரண பயத்தில் பதறி உச்சஸ்தாயில் கீச்கீச்சை வெளிப்படுத்தி சிறகடித்து சிதறியது. கண்ணிமைக்கும் நேரத்தில் ஜன்னல் வழியாக பறந்து மறைந்த்து.

“ச்ச குருவி…கேவலம் குருவி. இதை பிடிக்க முடியவில்லை. ஒரு வேளை குருவி மூளை நம் மூளைய விட பெரிசோ! ச்ச..”

ராகவன் அப்படியே சோர்ந்து கட்டிலில் படுத்து விட்டான். சற்று நேரத்தில் மீண்டும் தூக்கம் கண்ணை சுற்றியது.

க்யுக்கி…கீக்….க்யூக்கிக்…கீக்

ராகவன் கண் விழித்தான்.

”என்ன மணி…12 ”

“பாட்டி பசிக்குது சாப்பாடு கொண்டு வா!”

பாட்டி வரவில்லை. காலையில் நடந்தது எல்லாம் உடனே ஞாபகம் வந்து குருவியில் முடிந்தது. குருவி தான் எழுப்பியிருக்கிறது என்பதை உணர்ந்தான். இரண்டு குருவிகள் மும்மரமாக நெல்லைக் கொத்திக் கொண்டிருந்தது.

“இந்த குருவிகளுக்கு என்ன தைரியம். திரும்பவும் வந்துவிட்டதே…இதை எப்படி பிடிப்பது!” இப்பொழுது சற்றே நிதானம் அடைந்திருந்தது அவன் ஆத்திரம்.

அசைவு தெரியாமல் மெதுவாக எழுந்தான். அடிமேல் அடி வைத்து வலது ஜன்னல் பக்கம் சென்றான். மெதுவாக ஓசையில்லாமல் மூடி தாழ் போட்டான். இடது பக்கம் நகர்ந்தான். இடது பக்க ஜன்னலையும் மூடினான். குருவிகள் நிதானமாக கொத்திக் கொண்டிருந்தது. அப்பொழுதைக்கு அப்பொழுது கழுத்தை வெட்டி சுற்று முற்றும் பார்த்தாலும் நடப்பது என்ன என்று அறியவில்லை. அறியும் மனநிலையிலும் அவை இல்லை. நெல் ஒன்றே குறியாக இருந்தது.

மெதுவாக கட்டிலின் மேல் ஏறினான். கதவின் மேலிருந்த வெண்டிலேட்டரை ஓசைப்படாமல் மூடினான். குருவிகள் இன்னும் சந்தேகப் படவில்லை.

“கம்பீளீட்லி ஸீல்ட். இரண்டாம் கட்டு கதவு ஒன்று தான் பாக்கி. இந்த நேரத்தில் பாட்டி வந்து கெடுத்துவிடக் கூடாது.” மெதுவாக பின் பக்கம் எட்டிப் பார்த்தான். பாட்டி தெரியவில்லை. அவள் கண்ணீர் நிச்சயமாக அவனுக்குத் தெரியாது.

“குருவிகள் நெல்லை வெளியே கொண்டு போற மாதிரி தெரியலை. அங்கேயே லஞ்ச் சாப்பிடுகிறது போலும். நல்லது நல்லது அப்படியே சாப்பிட்டிட்டுருங்க”

சத்தமில்லாமல் தரையில் படுத்தான். கொஞ்சம் கொஞ்சமாக உருண்டான். இரண்டாம் அறை கதவை நெருங்கி எழுந்தான். மெதுவாக கதவை மூடி தாழ் போட்டான்.

“ஆஹஹ்ஹா”

வெறி பிடித்திருந்தது அவனுக்கு. குருவிகள் பதறி ஜன்னலை நோக்கிப் பறந்தன. ஜன்னலில் மோதித் திரும்பியது. கதவு வெண்டிலேட்டர் எல்லாவற்றிலும் மோதின.

’ஆஹஹ்ஹா….ஒஹாஹ்ஹாஹா” ராகவன் நடுவில் வந்து முழங்கினான்.

”கேடு கெட்ட குருவிகளே! எங்கே போவீங்கன்னு பாக்கிறேன்…நல்லா மாட்டிக்கிட்டீங்க” கொக்கரித்தான்.

பாட்டி உள்ளேயிருந்து பதறி ஓடி வந்தாள். மூடியிருந்த கதவை தட்டினாள்.

”டேய், என்னடா ஆச்சு? கதவைத் திறடா”

“பாட்டி நீ போ. நான் சொன்னப் பிறகு வா!”

“கதவத் திறயேண்டா” பாட்டி கதவை தட்டும் சத்தம் அடங்கும் வரை அசையாமல் நின்றான்.

“சுரேஷ், ஜெயில்ல போட்டுட்டண்டா”

அவன் தலைக்கு மேல் குருவிகள் சுற்றி சுற்றி பதற்றத்தில் பறந்தது.

”நல்லா பறங்க, அது தான் எனக்கு வேணும்.”

எங்காவது ஒரு சிறிய இடைவெளி கிடைக்குமா என்று பரிதவித்தது அவை இரண்டும். கண்ணாடி வெண்டிலேட்டர் வழியாக வந்த சூரிய வெளிச்சத்தை பார்த்து வெளியுலக பாதை என்ற நப்பாசையில் அதன் மீது மீண்டும் மீண்டும் மோதி, விழுந்து பறந்தது.

சுமார் பதினைந்து நிமிடங்கள் நிற்காமல் பறந்தது. களைப்படைய தொடங்கியிருந்தது ஒரு குருவி. அதன் வேகம் குறைந்திருந்தது. இரண்டாவது குருவி இன்னும் வேகமாக தான் பறந்து கொண்டிருந்தது.

“நீ எங்க நெல்ல் நிறைய சாப்பிட்டுருக்க. அதான் ஒனக்கு தெம்பு ஜாஸ்தியாயிருக்கு. ஒன்ன அப்புறம் கவனிச்சிக்கறேன். ஒன் ஃப்ரெண்ட முதல்ல கவனிக்கறேன்”

சோர்வடைந்த முதல் குருவியை மட்டும் தன் இலக்காக்கினான் ராகவன். கட்டிலிலிருந்த தன் டவலை எடுத்து அதை ஓய்வெடுக்க விடாமல் சுற்றி சுற்றி விரட்டினான். முதல் குருவியின் வேகம் இரண்டாவது குருவியின் வேகத்தில் பாதிக்கும் மேல் குறைந்திருந்தது. ராகவன் வீசும் டவல் அதனை நெருங்கும் பொழுது அது பீதியடைந்து மேலும் வேகமாக பறக்க முயற்சி செய்தது. அந்த அதித முயற்சியினால் மீதமிருந்த சக்தியை இரட்டிப்பாக இழக்கத் தொடங்கியது. பீதியில் அதன் கண்கள் விரிந்திருந்தது. அதற்கும் கண்கள் உண்டு என்று இப்பொழுது தான் தெளிவாக ராகவனால் உணரமுடிந்தது. அதன் கண்களை குரோதத்துடன் சந்தித்தான்.

“டயர்ட் ஆனியா, நல்லா டயர்ட் ஆகு. என்னோட ஒனக்கு நிறையா மூளையா? ஒன் திமிரெல்லாம் என்கிட்ட வச்சுக்காத. ஓடு ஓடு நிக்காத” டவலை அதை நோக்கி வீசினான்

அது பறக்க முடியாமல் சுவரில் மோதியது. சற்றே முயன்றெழுந்து மீண்டும் வலுவில்லாமல் பறந்தது. இதுவரை ஒரே வட்டத்தில் பறந்து கொண்டிருந்த அது வட்டத்தை முழுமையாக இழந்து மேலிருந்து கீழ் நோக்கி பறந்து வந்து நெல் மூட்டையின் மேல் விழுந்தது. அதை நோக்கி ராகவன் நெருங்கினான். கடைசி முயற்ச்சியாக மேலெழுந்த குருவி இயற்க்கை அதற்கு அளித்திருந்த எல்லா பாதுகாப்புகளையும் இழந்து இறகுகள் இயங்க மறுத்து பரிதாபமாக தரையில் மோதியது.

இரண்டாம் குருவியின் வேகமும் இப்பொழுது குறையத் தொடங்கியிருந்தது. அது அதன் ஆர்பிட்டில் செய்வதறியாது பறந்து கொண்டிருந்தது. முதல் குருவி பறப்பதை நிறுத்தியதால் பீதியில் கீச் கீச்சென்று கர்ண கொடூரமாக கத்தியது.

ராகவன் முதல் குருவியை கையிலெடுத்தான். அவன் முகத்தில் வெற்றி பெருமிதம். குருவி கண்களை மூடி மூடி திறந்தது. அதன் சின்ன உடல் உஷ்ணமாக இருந்தது. உடல் அதிர்ந்தது. மனிதர்கள் மூச்சு வாங்குவதைக் காட்டிலும் பலமாக இருந்தது. கால்கள் செயலற்றிருந்தன. சிறகுகள் லேசாக அசைந்ததுக் கொண்டிருந்தன. எல்லா சக்தியை இழந்த நிலையிலும் அது இன்னும் பறக்க முயன்று கொண்டிருந்ததன் அடையாளம். முயற்சி. சாகும் வரை முயற்சி. மூளை இல்லாத குருவி முயல்கிறது. இறுதி வரை போராடுகிறது. இறுதி என்று தெரிந்தும் போராடுகிறது.

ராகவன் உள்ளங்கையில் முதல் குருவியை வைத்துக் கொண்டு இரண்டாவது குருவியின் கடைசி படலத்திற்கு தன் வெறி கொண்ட விரட்டலை கிரியா உக்கியாக்கினான். முடிவு இப்பொழுது அவனுக்கு அறிமுகமாகியிருந்தது. அதனால் மனதளவில் அவன் அதன் செய்கைகளை பின் பற்றவில்லை. கடமையாக சற்றே அது தளறும் பொழுது மட்டும் தன் டவலை வைத்து விரட்டினான். விரைவில் அவன் கட்டிலில் சென்று விழுந்தது இரண்டாம் குருவி.

கையிலெடுத்துக் கொண்டான்.

“என்னால் முடியாதா? என்னால் முடியும். ஹஹஹ்ஹ்ஹ்ஹ்ஹா”

”கதவை திறடா”

”ஒன்னும் முடியாது என்று நினைச்சிட்டிருந்த பாட்டிட்ட காமிக்கறேன் முதல்ல”

இரண்டு குருவிகளையும் கீழே வைக்கப் போனான். தயங்கி இரண்டு குருவிகளையும் ஒரு கையில் பிடித்துக் கொண்டு தாழ்ப்பாழை கழற்றி கதவைத் திறந்தான். உள்ளங்கையில் இரண்டு குருவிகளும் ஒன்றுடன் ஒன்று நெரிந்தது

”கதவ பூட்டிட்டு என்னடா பன்ற?” பாட்டி உள்ளே நுழைந்தாள்

”பாத்தியா பாட்டி, என்னால முடியதுன்னியே.”

பாட்டி கண்களில் அதிர்ச்சி.

“டேய் குருவிடா”

“ஆமாம் பாட்டி குருவி. நெல் தின்னி குருவி.”

”டேய் டேய் டேய் விட்டுடுடா. பாவம்டா. நமக்கு எதுக்கு இந்த பாவம்லாம். வேண்டாம். நெல் தானே சாப்பிடுது. போனா போகுது.”

”இரு பாட்டி எல்லோர்ட்டையும் காமிக்கறேன். ஒன்னுக்கும் யூஸ் இல்லேன்னானே ஓம் ப்ரெண்டு பார்த்தசாரதி. வந்து பாக்கச் சொல்லு”

பாட்டிக்கு ஏகத்திற்கு கோபம் வந்தது. குருவிகள் பறந்துவிடட்டும் என்று நினைத்து அவன் கையை தட்டினாள். அதை எதிர் பார்க்காத ராகவன் அதிர்ச்சியடைந்தான்.

“கிழ முண்டம், நான் எவ்வளவு கஷடப்பட்டு பிடிச்சிருக்கேன். தட்டி விடவா பாக்குற. போ” தள்ளிவிட்டதில் பாட்டி இரண்டாம் அறையில் போய் விழுந்தாள்.

”பகவானே, இவனுக்கு புத்தியக் கொடு” என்று ஈனஸ்வரத்தில் முனகினாள். கதவை மூடி தாழிட்டான். நெல் மூட்டைகளின் மேலிருந்த துண்டு கயிறு இரண்டை எடுத்து குருவிகளின் கால்களில் கட்டினான். அந்த ஜீவன்களின் உடல் இன்னும் அதிர்ந்துக் கொண்டிருந்தன். அதை சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்த அவனுக்கு திடீரென்று அதன் மீது இரக்கம் வந்தது. சிறிது நேரம் சிந்தித்தான்.

”இந்த சுரேஷ் பயலிடம் நான் யாருன்னு காமிச்சுட்டு உங்களை நான் அவிழ்த்து விடுறேன் சாரி”

வெளிக் கதவை திறந்து திண்ணை தூணில் இரண்டு குருவிகளையும் கட்டினான். குருவிகளுக்கு கொஞ்சம் தெம்பு வந்திருந்தது. இரண்டும் மெலிதாக சிறகை அடித்தன. இப்பொழுது அதனால் நிற்க கூட முடிந்தது.

”பறந்துடுமோ?”

மேலும் இறுக்கமாக கட்டினான். திருப்தி அடைந்தான். சுரேஷ் வீட்டை நோக்கி நடந்தான். பெருமிதமாக சுரேஷ் வீட்டிற்கு சென்று கதவைத் தட்டினான். குருவிகள் அங்குமிங்கும் கயிற்று நுனியில் கட்டப்பட்டு அதன் ஆரத்திற்க்குள் மெதுவாக தத்தி தத்தி நடக்கத் தொடங்கியிருந்தது.

கதவை திறந்தான் சுரேஷ். குளித்து இடுப்பில் டவலோடு இருந்தான்.

“யாரு? ஓ நீயா… என்ன பரீட்சையில பாஸ் பண்ணி வக்கீலாயிட்டயா?”

“என்னமோ சொன்னியே. கேஸ் போடுன்னு. ஜெயில்ல போடுன்னு. முடியாதுன்னு நினச்சியா?”

”என்ன சொன்னேன்? எப்பொ?”

“அதான் காலம்பற. குருவியை ஜெயில்ல போடுன்னு”

சுரேஷ் சற்றே அதிர்ச்சியானான்.

“குருவிய பிடிச்சிட்டயா? என்ன உளர்ர? குருவிய எப்படி பிடிக்க முடியும்? இரு டிரஸ்ஸ மாட்டிட்டு வரேன்”

”வாடா வா. வக்கீலாயிட்டயான்னா நக்கல் விடுற? இன்னைக்கு தெரியும் என் சாமர்த்தியம். குருவியை இன்னிக்கு பிடிச்சிருக்கேன், இன்னும் ஒரு வருஷத்தில பாரு. நான் பிராக்டீஸ் ஆரம்பிச்சப்பறம் முதல் கேஸ் – ப்ரொஸிகியூஷன் நான். நீ டிஃபென்ஸ்.”

அந்த நொடியில் ராகவன் அடுத்த ஒரு வருட திட்டத்தை வேகமாக சிந்தித்தான்.

“பாஸ் பண்ணு…பிராக்டீஸ் ஆரம்பி…பாட்டியோட வைர நெகலஸை வித்து… ஜட்ஜப் பாரு…நெக்லஸிலிருந்து ஒரு கல்லை சுரேஷ் வீட்டில….”

“கணம் கோர்ட்டார் அவர்களே! இங்கே நிற்கும் சுரேஷ் பல லட்சம் பெருமானமுள்ள வைர நெக்லஸை இதோ இங்கே இருக்கும் கற்பகம் என்ற இந்த பெண்மணியிடம் திருடியிருக்கிறான்….”

”சரி வா” சட்டை பட்டனை போட்டுக் கொண்டே வெளியே வந்தான் சுரேஷ்.

ராகவன் முன்னே வெற்றியுடன் நடந்தான்.

வீட்டை நெருங்கிய ராகவன் சுரேஷை திரும்பி பார்த்து திண்ணையை சுட்டிக் காட்டினான்.

“அதோ பா…”

திண்ணை மீதிருந்து சுரேஷின் பூணை நாக்கால் தன் உதடுகளை தடவிக் கொண்டிருந்தது.