சரி செய்யப்பட்டது – சுஜாதா நாவலில் கிழக்கு பதிப்பகம் செய்த குளறுபடி

சுஜாதாவின் இதன் பெயரும் கொலை புத்தகத்தில் இறுதிப் பகுதி இல்லாமல் இருந்தது, பக்கங்கள் முன் பின்னாக இருந்தது, ஒரே பக்கத்தில் பாராக்கள் முன்பின்னாக இருந்தது என்று பல பிரச்சினைகள் இருந்ததை இரண்டு மூன்று பதிவுகளுக்கு முன் எழுதி இருந்தேன். கிழக்கு பதிப்பகம் பத்ரி இந்த பதிவை கவனித்து உடனடியாக பதிலும் அளித்திருக்கிறார்.

இந்தப் புத்தகத்தில் ஒரு மாபெரும் பிழை நிகழ்ந்திருந்தது எங்காது (sic) புரடக்‌ஷனில். கடைசி பல பக்கங்கள் பைண்ட் செய்யப்படாமலேயே கடைகளுக்குச் சென்றுவிட்டன. சிங்கப்பூரில் நூலகத்தில் இதனைப் படித்த ஒரு வாசகர் கூப்பிட்டுச் சொன்னதும், கடையில் இருந்த புத்தகங்களை எல்லாம் திரும்பப் பெற்று, பைண்டிங்கைப் பிரித்து கடைசிப் பக்கங்களைச் சேர்த்து, மீண்டும் பைண்ட் செய்து அனுப்பிவைத்தோம். ஆனால் அதற்குள் புத்தகங்களை வாங்கிச் சென்ற சுமார் 200 பேர்களை எப்படிச் சென்று சேர்வதென்று தெரியவில்லை.

உங்களுக்குத் தெரிந்து யாரேனும் – நூலகமோ அல்லது தனியாரோ – குளறுபடியான அந்தப் புத்தகத்தை வைத்திருந்தால், அதனை எங்களுக்கு அனுப்பி, பதிலுக்கு சரியான புத்தகத்தைப் பெற்றுக்கொள்ளச் சொல்லுங்கள். நன்றி.

தவறுக்கு சப்பைக்கட்டு கட்டுபவர்கள்தான் தமிழ் இணைய உலகில் அதிகம். இப்படி பொறுப்பாக பதில் சொன்ன பத்ரிக்கு நன்றி! கிழக்கு பதிப்பகத்தார் professionals என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறார்.

பத்ரி உடனடியாக பதில் அளித்தாலும் இதை இணைப்பதில் எனக்குத்தான் தாமதம் ஆகிவிட்டது. அதற்காக பத்ரி என்னை மன்னிக்க வேண்டும்.