கிருஷ்ணனைப் பிடிக்காதவன் (என் சிறுகதை)

“ஆஆல்!”

“ஆல்வின்ன்ன்ன்!”

“ஆல்வின் யூசுஃப் அலி!”

“ஆல்வின் யூசுஃப் அலி அர்வனுவா!”

கத்தியவன் பிரபு. ராமப்பிரபு. தினமும் அவனுக்கும் ஆல்வினுக்கும் இதே பிரச்சினைதான். ஆல்வின் குளியலறைக்குள் நுழைந்தால் லேசில் வரமாட்டான். பிரபுவுக்கு எழுந்தவுடன் காலைக்கடனை முடிக்க வேண்டும். கழிப்பறையும் குளியலறையோடு சேர்ந்தது.

“டேய் இன்னிக்கு ப்ராஜெக்ட் ரெவ்யூ பண்ண மினிஸ்டர் எல்லாம் வராங்கடா, இட்ஸ் நைன் டென் அல்ரெடி, சீக்கிரம் வெளியே வாடா!”

குளியலறைக் கதவு திறந்தது. ஆல்வின் கோட் சூட்டோடு வெளியே வந்தான். தலையில் சிவப்புத் துணியை வழக்கம் போல பண்டானா மாதிரி கட்டி இருந்தான். “தமிழ். தமிழ்ல பேசு” என்றான்.

“தாங்கள் இந்த அலங்காரம் எல்…” என்று ஆரம்பித்த பிரபு முடிக்காமலே அவசர அவசரமாக கதவை அறைந்து சாத்தினான்.

சிறிது நேரத்தில் ஜீப் ஹார்ன் கேட்டது. பிரபு குளியலறையிலிருந்து வெறும் ஜட்டியுடன் வெளிப்பட்டான். அவன் உடலில் ஒரு சொட்டு ஈரமும் இல்லை. ஷூவைப் போட்டுக் கொண்டிருந்த ஆல்வின் “இன்னிக்கும் குளிக்கலியா?” என்றான். பிரபு அவனை அலட்சியப்படுத்தி தன் அறைக்குள் நுழைந்தான். அறைக் கதவை மூடாமலே உள்ளாடையை மாற்றினான். ஜீன்சையும் சட்டையும் எடுத்து மாட்டிக் கொண்டான். தலைக்கு ஜெல், உடலுக்கு பாடி ஸ்ப்ரே, சென்ட் என்று பூசிக் கொள்வது தெரிந்தது. வெளியே வந்தவன் ஒரு தட்டிலிருந்து இரண்டு ப்ரெட் துண்டுகளையும், ஒரு ஃபிளாஸ்கில் இருந்த காப்பியையும் எடுத்துக் கொண்டான். ஜீப்பில் இருந்த குருநாத்திடம் “சாரி ஃபார் தி டிலே சார், இட்ஸ் ஆல் பிகாஸ் ஆஃப் திஸ் இடியட் ஆல்வின்” என்று சொல்லிக் கொண்டே உள்ளே ஏறினான். குருநாத்தும் ஆல்வினும் ஒரே நேரத்தில் “தமிழ். தமிழ்ல பேசு” என்றார்கள். ஜீப் விரைந்தது.

குருநாத் கொஞ்சம் பெரியவர். முப்பத்தைந்து வயது இருக்கலாம். இருவரையும் பார்த்து புன்னகைத்தார். “இளைஞர்களே” என்று ஆரம்பித்தார். பிரபு “யார் இளைஞன்? இவனா? இந்த நாகாகாரங்களுக்கு இருக்கற ரெகார்ட் எல்லாம் சும்மா சார், அத்தனையும் ஃபேக். இருபத்தைந்து வயசுன்னு இருக்கற ரெகார்டை எல்லாம் நம்பாதீங்க சார். இவனுக்கு முப்பது வயசாவது இருக்கும்” என்றான். ஆல்வின் புன்னகைத்தான். “ஃபேக் என்ற வார்த்தைக்கு பதில் போலி என்று சொல்லலாமே” என்றான். “அட போதும்பா. ரெண்டு பேரும் ப்ராஜெக்டை ரொம்ப நல்லா பண்ணி இருக்கீங்க. கங்க்ராஜுலேஷன்ஸ், இல்லை இல்லை வாழ்த்துக்கள்” என்றார்.

ஆல்வின் “வேலையே இனி மேல்தான் இருக்கிறது ஐயா. இந்தத் திட்டத்தை கணினியிலும் அலைபேசியிலும் செயல்படுத்துவது முதல் படி மட்டுமே. இதை சுற்றுப்பட்ட கிராமங்களில் ஒரு பத்தாயிரம் பேராவது பயன்படுத்தினால்தான் இந்தத் திட்டம் ஓரளவாவது வெற்றி பெற்றிருக்கிறது என்று சொல்ல முடியும்” என்றான். பிரபு “அது உன் டிபார்ட்மென்ட். நீதான் அங்கமி ஆச்சே, உனக்கு தெரிஞ்சவங்க கிட்ட பேசு, அவங்களுக்கு எடுத்துச் சொல்லு, அவங்களை எல்லாம் இத யூஸ் பண்ண வைப்பா. நம்ம டெஸ்டிங்ல விஸ்வேமா கிராமத்திலருந்து ஒரே நேரத்தில அம்பது எஸ்எம்எஸ் வரைக்கும் ஹாண்டில் பண்ண முடியுது, ஆனா நூறு பேர் ஒரே நேரத்தில எஸ்எம்எஸ் அனுப்பினா? ஐநூறு பேர்? டேடாபேஸ் அதை ஹாண்டில் பண்ணிடும் ஆனா ஃபிரண்ட்எண்ட் ஸ்கேல் ஆகுமான்னு எனக்கு இன்னும் சந்தேகமாத்தான் இருக்கு” என்றான். ஆல்வின் வாயைத் திறந்தான்; அதற்குள் பிரபு கோபமாக “டேடாபேஸ், ஃபிரண்ட்எண்ட், ஸ்கேலபிலிடிக்கெல்லாம் எனக்கே தமிழ்ல வார்த்த தெரியாது, பொத்திக்கிட்டு வா” என்றான்.

குருநாத் “ஆறு மாசத்தில அவன் தமிழ் கத்துக்கிட்டான். இப்ப கம்ப ராமாயணமே படிக்கறான். நாம தப்பித் தவறி இங்கிலிஷ்ல ஏதாவது சொன்னா தமிழ்ல பேசுங்கறான். நமக்குத்தான் இன்னும் ஒரு வார்த்தை அங்கமி தெரியல” என்றார்.

“சும்மா இருங்க சார், அம்மான்னு ஒரு வார்த்தை சொல்லிக் கொடுடான்னு கேட்டேன். அதுக்கு என்னவோ “ம்”, “ம்ம்ம்”ங்கறான், நான் திருப்பி சொன்னா “ம்” இல்லடா “ம்”ங்கறான். இவனும் இவன் பாஷையும்”

ஆல்வின் சிரித்துக் கொண்டான். குருநாத் “இன்னிக்கு ஃபங்ஷன்ல சென்ட்ரல் மினிஸ்டர் ரிப்பன் கட் பண்ணறாங்க. பெரிய குடும்பத்து வாரிசு வந்தாலும் வரலாம். லோகல் மினிஸ்டர் எல்லாம் வராங்க. ப்ளீஸ் டோன்ட் க்வாரல் இன் ஃ பிரண்ட் ஆஃப் தெம்” என்றார். பிரபுவும் ஆல்வினும் “தமிழ். தமிழ்ல பேசுங்க” என்றார்கள்.

அமைச்சர்களோடு பெரிய குடும்பத்து வாரிசும் வந்திருந்தார். அவர் வெறும் எம்.பி.தான் என்றாலும் எல்லா அமைச்சர்களும் அவரையே சுற்றி சுற்றி வந்தார்கள். செக்கச்செவேலென்று இருந்தார். வெள்ளை பைஜாமா, வெள்ளை குர்தா, கறுப்பு “ஆமைக்கழுத்து” அதாவது டர்டில்நெக் ஸ்வெட்டர். சிக்கென்று இருந்தார். நாற்பது வயதுக்கு மேல் ஆகிவிட்டது என்று சொல்லவே முடியாது. முன்னாலும் பின்னாலும் பெரிய பெரிய துப்பாக்கிகளோடு பத்து பேர். குருநாத் தோளில் கை போட்டுக்கொண்டு அது எப்படி இது எப்படி என்று பிரபுவையும் ஆல்வினையும் ஆயிரத்தெட்டு கேள்வி கேட்டார். அவருக்கு திட்டம் பிடித்திருந்தது. உத்தரப் பிரதேசத்தில் பத்து கிராமங்களில் இதை செயல்படுத்த வேண்டும் என்றால் எத்தனை நாளாகும், என்ன செலவாகும் என்று விசாரித்தார். இணை அமைச்சர் ஜேம்ஸ் கோன்யாக்கிடம் நாலு வார்த்தை பேசிவிட்டு இவர்களிடம் “கீப் இட் அப்!” என்று சொல்லிவிட்டு விறுவிறென்று கிளம்பிப் போய்விட்டார்.

உயர்கல்வி அமைச்சர் ஜேம்ஸ் கோன்யாக் மகிழ்ச்சியாக இருந்தார். குருநாத்திடம் “இட் இஸ் நைஸ் டு சி அன் யூஸ்ஃபுல் ப்ராஜெக்ட்” என்றார். குருநாத் “யூஸ்ஃபுல்” என்ற வார்த்தைக்கு முன்னால் “a” என்று சொல்ல வேண்டுமா இல்லை “an” என்று சொல்ல வேண்டுமா என்று ஒரு நொடி யோசித்தார். “ஆல் கிரெடிட் கோ டு தீஸ் யங் மென்” என்று ஆல்வினையும் பிரபுவையும் அறிமுகப்படுத்தினார். ஆல்வினை ஏற இறங்கப் பார்த்த அமைச்சர் “அங்கமி?” என்று கேட்டார். ஆல்வின் ஆமாம் என்று தலையை ஆட்டியதும் அவருக்கு சுவாரசியம் கொஞ்சம் குறைந்துவிட்டது. இருந்தாலும் விட்டுக் கொடுக்காமல் இந்த திட்டம் அங்கமி, கோன்யாக், லோதா எல்லா பழங்குடியினரிடமும் பரவ வேண்டும், எப்படிப் பரப்புவது என்று கேட்டார். குருநாத் விஸ்வேமா கிராமத்து பூசாரி ஆல்வினுக்கு மாமா உறவென்றும், அதனால்தான் இங்கே ப்ரூஃப் ஆஃப் கான்செப்ட் அளவில் திட்டத்தை செயல்படுத்தினோம் என்றும் தெரிவித்தார். கொஞ்ச தூரத்தில் இருந்த ஒரு ஐம்பது அறுபது வயதுக்காரர் – முழு பழங்குடி ஆடையில் இருந்தவர் – ஒருவரை அருகே அழைத்தார். இவர்தான் அந்த பூசாரி, வில்லியம் க்ரிபனுவா என்று அறிமுகப்படுத்தினார். உ.பி.க்கு மூட்டை கட்டுவதற்கு முன் ஒரு கோன்யாக் கிராமத்திலாவது செயல்படுத்த சொல்லிவிட்டு அமைச்சர் கிளம்பினார்.

அமைச்சர் கிளம்பியதும் பிரபு “குருநாத் சார், பார்ட்டி!” என்றான். குருநாத் “சரி வீட்டுக்கு வாங்க, உங்க அண்ணியை இட்லி சுட்டுத் தரச் சொல்றேன்” என்றார். பிரபு “சார்! சார்! பார்ட்டிய உங்க வீட்டில வச்சுக்கலாம், ஆனா பியர், ரம் எல்லாம் வேணும் சார்! மேஜர்கிட்டே சொல்லி ஏற்பாடு பண்ணுங்க சார்!” என்றான். ஆல்வின் குருநாத்தின் தயக்கத்தைப் பார்த்து நமட்டுச் சிரிப்பு சிரித்தான். “குடும்பத்தில் குழப்பத்தை உண்டாக்காதே. நாம் மது வகைகளை எடுத்துக் கொண்டு நாளை காட்டிலே வனபோஜனம் செய்வோம்” என்றான். குருநாத் “சரி ஜீப்ப எடுத்துக்குங்க. ராத்திரி நானும் உங்க வீட்டுக்கு வர்றேன். நாளைக்கு வனபோஜனம் கினபோஜனம் எல்லாம் வச்சுக்குங்க. அண்ணிகிட்ட சொல்லி இட்லி செஞ்சு கொடுத்தனுப்பறேன். நான்-வெஜ் எல்லாம் நீங்க பாத்துக்கங்க.” என்றார். “சார் இவன் தமிழனேதான். நடு சென்டர், பட் ஆனா மாதிரி காட்டிலே வனபோஜனம்கறான் பாருங்க, பின்ன நாட்டிலா வனபோஜனம் செய்ய முடியும்?” என்று பிரபு சிரித்தான். குருநாத்தும் சிரித்துக்கொண்டே மேஜர் கனகசுந்தரத்துக்கு அலைபேச ஆரம்பித்தார்.

மொட்டை மாடியின் சுவரில் சாய்ந்துகொண்டு தலையில் வழக்கமான சிவப்பு பண்டானாவுடன் ஆல்வினும் கலைந்த தலையுடனும் பிரபுவும் கெக்ரி – நாகாலாந்தின் அரிசி பியர் – அருந்திக் கொண்டிருந்தார்கள்.பிரபுவுக்கு எப்போதுமே தாங்கும் சக்தி குறைவு. இரண்டு கோப்பை உள்ளே போனதும் அவனுக்கு ஏறிவிட்டது. ஆல்வினின் தோளில் கையைப் போட்டுக் கொண்டான்.

“ஆல்வின், நீ எனக்கு ஃப்ரென்ட், ஃபிலாசஃபர், கைடுடா. தமிழ்ல சொல்லவா? நீ எனக்கு நண்பன், தத்துவ ஞானி, வழிகாட்டிடா”

“உனக்கு ஏறிவிட்டது, போய்ப் படுத்துக் கொள்”

“இல்லடா நான் நிஜமா சொல்றேன். நீ மட்டும் இங்க இல்லன்னா எனக்கு பைத்தியமே பிடிச்சிருக்கும் தெரியுமா?”

“இப்போது என்ன வாழ்கிறது?”

“அது இல்லடா, வேணிக்கு கல்யாணம் ஆயிட்ச்சுன்னு தெரிஞ்சதும் நான் சூயிசைட் பண்ணிக்கிட்டிருந்திர்ப்பேன். நீதானடா என்னை கன்சோல் பண்ணி…” பிரபுவுக்கு கண் கலங்க ஆரம்பித்துவிட்டது. இன்னும் இரண்டு நிமிஷத்தில் விம்மி விம்மி அழ ஆரம்பித்துவிடுவான். குருநாத் பேச்சை மாற்றினார்.

“ஆல்வின், அது என்ன பேர் ஆல்வின், யூசுஃப், அலி, அர்வனுவா? நீயோ கிறிஸ்டியன், முஸ்லிம் பேரையும் வச்சிருக்கே?”

“சார், அர்வனுவான்றது மகாபாரத அரவான் வம்சம் அப்படிங்கறதாலதான் சார். அது ஹிந்துப் பேர், அதை விட்டுட்டீங்களே!”

“அது அப்படித்தான் குருநாத். நான் கிரிஸ்டியன்தான், ஆனாலும் முஸ்லிம் பேரும் என் பேர்ல இருக்கு. அர்வனுவா என் குலப் பெயர்.”

“எனக்கென்னவோ நீ ஹிந்துன்னுதான் தோணுது. ராமாயணம், மகாபாரதம், எல்லாம் கரைச்சு குடிச்சிருக்கே. நான் கெக்ரி குடிக்கற மாதிரி.”

“நிச்சயமா ஹிந்து இல்ல. கிருஷ்ணனை மாதிரி ஒரு அயோக்கியனை நீங்க எல்லாம் எப்படி கும்பிடறீங்க?”

“என்ன நீ கண்ணன அயோக்கியங்கற?”

“பின்னே என்ன? கௌரவர்களை ஏமாற்றிதானே ஜெயித்தான்? பீஷ்மரையும் துரோணரையும், கர்ணனையும் நேர்மையா போராடி ஜெயிக்க முடியுமா? ரண்சோட்! ஜராசந்தனுக்கு பயந்து மதுராவை விட்டு ஓடினவன்தானே! கோழை, ஏமாற்றுக்காரன், அவன் எல்லாம் உங்களுக்கு கடவுள்!”

“எனக்கு பெஹன்சோத்தான் தெரியும். ரண்சோட் எல்லாம் தெரியாது.” என்று இடையில் புகுந்தான் பிரபு.

குருநாத் விடவில்லை. “இதெல்லாம் உண்மையா நடந்ததுன்னு நினைக்கறியா ஆல்வின்? மகாபாரதக் கதைப்படி கிருஷ்ணன் திரௌபதிக்கு சேலை கொடுத்துக்கிட்டே இருந்தாரு, சக்கரத்தை விட்டு சூரியன மறச்சாரு, தர்மனோட தேரு பூமிக்கு மேலயே இருந்தது, அஸ்வத்தாமா சிரஞ்சீவி, இன்னும் தலையில பெரிய காயத்தோட ஊர் ஊரா அலைஞ்சுக்கிட்டிருக்கான். இதெல்லாம் கதைப்பா!”

“பொய்யோ என்னவோ. ஆனால் அந்த பொய்க்கதையில் வரும் பொய்க் கிருஷ்ணனைத்தான், அயோக்கியக் கிருஷ்ணனைத்தான் எல்லாம் கும்பிடறீங்க? பொய்யா இருந்தாலும் அயோக்கியனை ஏன் கடவுளா மதிக்கறீங்க?”

“சார், கிருஷ்ணனைப் பத்தி மட்டும் பேசாதீங்க. அப்புறம் நிறுத்தவே முடியாது. நாலு கப் கெக்ரி உள்ளே போனா கிருஷ்ணனைத் திட்ட ஆரம்பிச்சிடுவான்” என்று சிரித்தான் பிரபு. இன்னும் இரண்டு நிமிஷத்தில் கபகபகபவென்று தொடர்ந்து சிரித்துக் கொண்டே இருப்பான்.

குருநாத் கிளம்பினார். “ஜீப் இருக்கு. மேஜர் நிறைய ரம்மும் பியரும் கொடுத்திருக்கார். நாலைஞ்சு நாள் ஜாலியா ஊர் சுத்திட்டு வாங்க. அடுத்த மண்டே வந்தா போதும். என்ஜாய்!” என்றார். இருவரும் “தமிழ்” என்று அனிச்சையாகச் சொன்னார்கள்.

முதல் இரண்டு நாள் எல்லாம் சரியாகத்தான் இருந்தது. மூன்றாவது நாள்தான் நல்ல மழை. ஜீப் சேற்றில் மாட்டிக் கொண்டது, எடுக்க முடியவில்லை. அருகே கிராமம் ஏதாவது இருக்கிறதா என்று கூடத் தெரியவில்லை. இரண்டு பேரும் தொப்பலாக நனைந்துவிட்டார்கள். நாகாலாந்தில் பிறந்து வளர்ந்திருந்த ஆல்வின் சமாளித்துக் கொண்டான், ஆனால் நடந்து நடந்து பிரபு களைத்துப் போனான். இரவு வரும்போது நல்ல ஜுரம் அடித்தது. ஆல்வின் எப்படியோ ஒரு பாழடைந்த குடிசை ஒன்றைக் கண்டுபிடித்து அங்கே பிரபுவை தன் மீது சாய்த்து அழைத்துப் போனான்.

பசி வேறு வயிற்றைக் கிள்ளியது. ஆல்வின் இரண்டு கட்டையை உரசி உரசி எப்படியோ தீ மூட்டினான். வெளியே போய் ஒரு கிளையை ஒடித்து வில் போலச் செய்தான். இன்னொரு குச்சியை ஒரு கல்லால் தீட்டி தீட்டி அம்பாக்கினான். அங்கே இருந்த உடைந்த சட்டிகளில் அன்று இரவு முயல் கறி. பிரபுவுக்கு தன் நகர வளர்ப்பும் படிப்பும் காட்டில் எதற்கும் பயன்படாது என்று தெளிவாகப் புரிந்தது.

நல்ல குளிர் வேறு அன்று இரவு முழுதும் நடுக்கியது. ஆல்வின் தன்னுடைய கால்சட்டை, மேல்சட்டை இரண்டையும் பிரபுவுக்கு உடுத்தினான். அந்தக் குடிசையில் கிடந்த இரண்டு கிழிந்த துணிகளை நாகா பாணியில் உடுத்திக் கொண்டான். இரவு முழுதும் தூங்கவில்லை, பிரபுவுக்கு ஈரத்துணியால் நெற்றியில் ஒத்தடம் கொடுத்துக் கொண்டே இருந்தான். காலையில் மழை விட்டிருந்தது. பிரபு அரை மயக்கத்தில் இருந்தான். பிரபுவைத் தன் தோளில் தூக்கிப் போட்டுக் கொண்டு நடக்க ஆரம்பித்தான். பிரபு “தாங்க்ஸ் ஆல்வின் தாங்க்ஸ் ஆல்வின்” என்று பினாத்திக் கொண்டே இருந்தான். சில சமயம் ஆல்வின் “தமிழ்” என்று பதில் சொன்னான்.

தூரத்தில் சாலையும், ஒரு சில ஜீப்களும் தெரிந்தன. ஆல்வின் வேகமாக நடக்க ஆரம்பித்தான். சாலை ஓரத்தில் பிரபுவை இறக்கி வைத்தான். சாலை மழையால் அங்கங்கே தார் பூச்சு அகன்று நாசமாகி இருந்தது. பிரபுவுக்கு உடல் முழுக்க நன்றாக வேர்த்திருந்தது. ஆல்வின் அவன் அணிந்திருந்த இரண்டு கால்சட்டைகளில் தன் கால் சட்டையை கழற்ற ஆரம்பித்தான்.

வேகமாக ஒரு ஜீப் வரும் சத்தம் கேட்டது. ஆல்வின் திரும்பிப் பார்த்தான். ஒரு ஜீப்பின் டயர்கள் சாலை ஈரத்தில் வழுக்கிக்கொண்டு அவர்களை நோக்கி வருவது தெரிந்தது. ஆல்வின் பிரபுவை அப்படியே தூக்கி வீசினான். ஆனால் அவன் ஓடுவதற்குள் ஜீப் அவன் மீது மோதியது. அவனது மார்பெலும்புகள் உடையும் சத்தம் பெரிதாகக் கேட்டது. ஆல்வின் அப்படியே விழுந்தான்.

பிரபு “யூ பாஸ்டர்ட்ஸ்!” என்று கத்திக் கொண்டே ஜீப்பை நோக்கி ஓடி வந்தான். நடக்கக் கூட முடியாமல் இருந்தவனுக்கு ஓடுவதற்கு பலம் இரண்டு நிமிஷத்துக்கு மேல் இல்லை. அதற்குள் ஆல்வினை எப்படியோ அடைந்து அவன் கையைப் பிடித்துக் கொண்டு உடைந்து அழுதான்.

ஜீப்பை ஒட்டி வந்த கேப்டன் ஷிவேந்தர் சிங் அரோராவுக்கு தலையில் சின்ன அடி பட்டிருந்தது, இடது கை ஒரு வினோதமான கோணத்தில் உடைந்து தொங்கியது. ஆனால் அவருக்கு பெரிய சேதமில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.”த ஜீப் வாஸ் ஸ்கிட்டிங்!” என்று அரற்றினார். பின்னால் உட்கார்ந்திருந்த ஜவான் ஒருவன் இப்போது காரை ஓட்ட, ஆல்வினை ஜீப்பில் எடுத்துப் போட்டுக் கொண்டு கோஹிமா நகரத்துக்கு விரைந்தார்கள்.

தலைமை டாக்டர் திரங் காங்மே கையை விரித்துவிட்டார். ஆல்வினின் நுரையீரலை உடைபட்ட மார்பெலும்புகள் கிழித்து விட்டதாகவும் இனி மேல் பிழைக்க முடியாது என்றும் உறவினர்களுக்கு சொல்லி அனுப்பிவிடும்படியும் சொன்னார். ஆல்வினுக்கு இப்போது பிரக்ஞை இருக்கிறது, போய்ப் பார்க்கலாம் என்றும் சொன்னார்.

பிரபுவும் குருநாத்தும் உள்ளே நுழைந்தார்கள். ஒரு ராணுவ அதிகாரியின் ஜீப்பில் ஒரு நாகா வாலிபன் அடிபட்டு செத்தான் என்பது பூதாகாரமாக வெடிக்கக் கூடிய ஒரு நிகழ்ச்சி. கேப்டன் அரோராவும் தயங்கித் தயங்கி பின்னாலேயே வந்தார்.

ஆல்வினின் தலையிலும் பெரிய காயம், பாண்டேஜ் போடப்பட்டிருந்தது. பிரபுவால் அழுகையை நிறுத்தவே முடியவில்லை. ஆல்வின் பிரபுவை கண்டு கொள்ளாமல் முதலில் அரோராவை அருகில் அழைத்தான். குருநாத்தை அருகே அழைத்து இது கலவரம் ஆகாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்றும், தன் உடலை தன் மாமாவிடம் ஒப்படைத்துவிட்டால் அவர் நாகா வழக்கப்படி அடக்கம் செய்துவிடுவார், வெளியே தெரியாது என்றும் சொன்னான். தன் சாவு ஒரு விபத்து என்று கையெழுத்துப் போட்டுக் கொடுத்தான். அரோராவே இப்போது கலங்கினார்.

பிறகு பிரபுவைப் பார்த்தான். புன்னகையோடு கையை ஆட்டினான். கண் மூடிவிட்டது.

ஆல்வினின் மாமா இறுதிச் சடங்குகளுக்கு பிரபுவைக் கூட அனுமதிக்கவில்லை. நாகர்கள் மட்டுமே, அதுவும் அர்வனுவா குலத்தவர் மட்டுமே அதில் கலந்து கொள்ளலாம் என்று சொல்லிவிட்டார்.

பிரபுவுக்கு அதற்குப் பிறகு மனம் நாகாலாந்தில் பொருந்தவே இல்லை. மாற்றல் வாங்கிக் கொண்டான். ஊருக்குப் போவதற்கு முன் ஆல்வினின் மாமாவைப் பார்க்க வேண்டும் என்று தோன்றியது. இரண்டு பாட்டில் ரம் எடுத்துக் கொண்டு விஸ்வேமா கிராமத்துக்குப் போனான். ஆல்வினின் இறுதிச் சடங்குகளுக்குப் பிறகு அவர் கிராமத்துக்கு வருவதே இல்லை என்றும் காட்டிலே இருக்கும் அவர்களது குல தெய்வக் கோவிலான அரவான் கோவிலிலேயே தனியாகத் தங்குகிறார் என்றும் தெரிந்தது. பிரபு பாட்டில்களுடன் கோவிலுக்கு நடந்து போனான்.

அது கோவில் எல்லாம் இல்லை. மேலே கூரை இல்லாத நான்கு உடைந்த கல் சுவர்கள் கொண்ட ஒரு செவ்வகக் கட்டிடம். கோவிலுக்குள் நுழைந்தவுடன் அவன் கண்ணில் பட்டது ஆல்வின்தான். தலையில் ரத்தம் ஒழுகும் பெரிய காயத்துடன் தரையில் உறங்கிக் கொண்டிருந்தான். அவன் பக்கத்தில் ஒரு சின்ன வில்லும் ஒரு துணிப் பையில் பல அம்புகளும் கிடந்தன. பிரபுவுக்கு மூச்சே நின்றுவிட்டது. ஆல்வின் தன் தலையில் எப்போதும் கட்டி இருக்கும் சிவப்பு பண்டானா, நாலு கோப்பை கெக்ரி உள்ளே இறங்கியதும் ஆல்வின் கண்ணனை தவறாமல் திட்டுவது, மாமா வில்லியம் க்ரிபனுவா, ஒரு தீட்டப்பட்ட குச்சியை முயல் மேல் சரியாக குறி வைத்து விட்டது, பிழைக்க முடியாத அளவுக்கு நுரையீரல் சேதம் என்று டாக்டர் சொன்னது என்று பல பிம்பங்கள் அவன் மனதில் க்ஷண நேரத்தில் ஓடின. தழுதழுத்த குரலோடு அவன் ஆல்வினை அழைத்தான் –

அஸ்வத்தாமரே!”

இந்தக் கதை என் பி.ஈ. ப்ராஜெக்ட் துணைவர்களுக்கான சிவகுருநாதன், பிரபுராம் மற்றும் ஆல்வின் யூசுஃப் அலி கெவிசுசா ஆகியோருக்காக.

பிற்சேர்க்கை: இப்போது இருப்பது இரண்டாவது draft. முதல் draft-இல் ஆல்வின் சுடப்பட்டு இறப்பதாக கதையை அமைத்திருந்தேன், சரியாக வரவில்லை. சாரதாவும் அதை விமர்சித்திருந்தார்.

தொடர்புடைய சுட்டிகள்:
நாங்கள் அங்கமி கற்ற கதை

பதித்த பிற சிறுகதைகள்:
அம்மாவுக்கு புரியாது
சுப்ரமணியின் காதல்
துரோண கீதை
போதிமரம்

12 thoughts on “கிருஷ்ணனைப் பிடிக்காதவன் (என் சிறுகதை)

 1. Exellent wrote up!!!!!!!!!

  //அஸ்வத்தாமா சிரஞ்சீவி, இன்னும் தலையில பெரிய காயத்தோட ஊர் ஊரா அலைஞ்சுக்கிட்டிருக்கான்//
  இந்தப் பகுதி இல்லாமல் இருந்திருக்கலாமோ?

  Like

  1. சுபத்ரா, // அஸ்வத்தாமா சிரஞ்சீவி… // என்பது மகாபாரதத்தில் ஒரு obscure reference, அவ்வளவாகத் தெரியாத விஷயம் என்று நினைக்கிறேன். அதனால்தான் சொல்ல வேண்டியதாகிவிட்டது.

   Like

   1. Hai RV,
    மன்னிக்கவும். அந்தப் பகுதி ஆல்வினே அவனைப் பற்றிச் சொல்லிக்கொள்வது போல் தவறாக எண்ணிவிட்டேன். ஒரு ஃப்லோவாக வாசிக்கும் போது முந்தைய வரியில் ‘என்றான் பிரபு’ எனப் பிரபுவின் டயலாக் முடிந்தது போல் தோன்றியது! எனவே! 🙂

    Like

 2. மஹாபாரதத்தின் உள்ள மற்றொரு சிரஞ்சீவியான கிருபர் – வில்லியம் க்ரிபனுவா!
  மலை ஜாதிப் பெண்ணுக்கும் அர்ச்சுனனுக்கும் பிறந்த அரவான், பாண்டவர்களுக்காக களபலி கொடுக்கப்பட்டவன் – குலதெய்வம்! (மனிப்பூர்?)
  யுகம் தாண்டியும் தொடரும் வண்மம். நல்ல knot RV!
  விவரணைகள் ரொம்ப குறைவாக, உரையாடல்களின் பலத்தால் நகர்ந்தாலும் விறுவிறுப்பாகவே நகர்வதாகத் தான் எனக்குத் தோண்றுகிறது. அப்படி ஒன்றும் நீளமும் இல்லை! good effort!
  பிரகாஷ்.

  Like

 3. தழுதழுத்த குரலோடு அவன் ஆல்வினை அழைத்தான் –

  “அஸ்வத்தாமரே!”//

  ஆர்.வி.,
  எங்கே வாசகனுக்கு புரியாமல் போய்விடுமோ என்கிற பயத்தில் நீங்களே கடைசியில் விளக்கி விட்டீர்கள் என்று தோன்றுகிறது! எழுத்தாளன் அதைச் செய்யவேண்டுமா என்பதில் எனக்கு சந்தேகம் உண்டு. அப்படியே வாசக யூகத்திற்கு விட்டிருந்தால் இன்னும் கொஞ்சம் பூடகத்தின் கணம் (இரகசியத்தின் கவர்ச்சி) கதைக்குக் கிடைத்திருக்கும் என்றும் தோண்றுகிறது.
  -பிரகாஷ்.

  Like

 4. டியர் ஆர்.வி.,

  ‘அஸ்வத்தாமனுக்கு மரணமில்லை’ என்ற மகாபாரதத்தின் ஒற்றை வரியைக் கருவாகக்கொண்டு உருவாக்கப்பட்ட அழகான கதைப்பின்னல். மகாபாரதமே பெரிய கடல். அதுபோக அதிலிருந்து முளைத்த கதைகள் இன்னும் எத்தனை ஆயிரம் இப்படி உலவிக்கொண்டு இருக்கின்றனவோ. நான் ஏற்கெனவே சொன்னதுபோல, மகாபாரதத்தில் வரும் ஒரு சின்ன கதாபாத்திரத்தை எடுத்து அதன் உள்ளே புகுந்தால், அதுவே ஒரு சரித்திரம் ஆகிவிடும்.

  அந்த வகையில் உங்களுக்கு இது எத்தனையாவது முயற்சி என்று தெரியவில்லை. ஆனால் ரொம்பவே சுவாரஸ்யம். ஆனால் அந்த ராணுவ அதிகாரி துப்பாக்கியால் சுடும் இடம் மட்டுமே சற்று நெருடல். தமிழுக்கு ஒரு புதிய சிறுகதை எழுத்தாளர் கிடைத்துவிட்டார் என்ற நம்பிக்கையைத் தருகிறது உங்கள் நடை. வாழ்த்துக்கள்.

  Like

 5. பிரகாஷ், அஸ்வத்தாமா ஒரு obscure reference , என்னை மாதிரி மகாபாரதப் பித்து உள்ளவர்களுக்குத்தான் தெரிந்திருக்கும் என்று நினைத்திருந்தேன். இத்தனை பேருக்கு அந்தப் பித்து இருப்பது சந்தோஷமாக இருக்கிறது!
  சாரதா, உங்களுக்கு கதை பிடித்திருந்தது மகிழ்ச்சி. சுடும் இடம் எனக்கும் எழுதும்போதே நெருடலாகத்தான் இருந்தது. நீங்கள் சொன்னதும் அந்த நெருடல் இன்னும் தெளிவாகத் தெரிகிறது. பேசாமல் விபத்தாக மாற்றிவிடலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

  Like

  1. சங்கரன், நான் வெளியே விட்டிருக்கும் கதைகளில் எனக்குப் பிடித்ததும் இதுதான். உங்களுக்கும் பிடித்திருப்பது மகிழ்ச்சி!

   Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.