சித்திரவீதிக்காரன் பதிவு – வாசித்த புத்தகங்களும் வாசிக்கும் வலைத்தளங்களும்

சித்திரை வீதிக்காரன் என்பவர் “வாசித்த புத்தகங்களும் வாசிக்கும் வலைத்தளங்களும்” என்று ஒரு பெரிய லிஸ்ட் போட்டிருக்கிறார்; பிடித்த நாவல்கள், கட்டுரை/சிறுகதைத் தொகுப்புகள், தளங்கள் என்று போகிறது. (தளங்களில் எங்கள் இன்னொரு தளமான கூட்டாஞ்சோறும் ஒன்று). பாருங்கள் என்று சிபாரிசு செய்கிறேன்.

தொடர்புள்ள சுட்டிகள்:
எழுத்தாளர் வலைத்தளங்கள்

எழுத்தாளர் தாமரைமணாளன்

இருபது முப்பது வருஷங்களுக்கு முன்னால் தாமரைமணாளன் என்ற பேரை விகடனில் அவ்வப்போது பார்த்திருக்கிறேன். எந்தக் கதையும் அந்த வயதிலும் என்னைக் கவர்ந்ததில்லை. சமீபத்தில் மேல்காற்று புத்தகத்தை புரட்டியபோது அய்யா வைகுண்டரின் மேற்கோள்கள் நிறைய தெரிந்தது. முதல் இரண்டு பக்கத்தில் ஒரு நாடார் குடும்பத்தைப் பற்றிய கதை என்று தெரிந்தது. எனக்கு ஒரு ஜாதி பின்புலம் உள்ள நாவல் என்றால் பிடிக்கும். இது நாடார் ஜாதி பின்புலம் உள்ள நாவலோ என்று படிக்க ஆரம்பித்தேன். ஒரு நாடார் குடும்பத்தின் கதைதான். ஆனால் வேஸ்ட். அந்த மேற்கோள்கள் தவிர வேறு எதுவுமே உருப்படியாக இல்லை. முடிச்சே இல்லாத கதை. ஹீரோ என்ற ஒரே காரணத்துக்காக எல்லா பெண்களும் அவனை விழுந்து விழுந்து காதலிக்கிறார்கள். அவ்வளவுதான் கதை.

இது தொடர்கதையாக வந்திருக்க வேண்டும். ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் ஒரு வெட்டி சஸ்பென்ஸ் வைத்திருக்கிறார்.

ஆயிரம் எண்ணங்கள் உதயம் என்று இன்னொரு புத்தகமும் கிடைத்தது. சிம்பிளான கதை – நாயகி தேவகிக்கு ஈகோ உண்டு. காதலன் ரமேஷோடு சின்ன வேறுபாடு பெரிதாக வளர்கிறது. சுமார். அவ்வளவுதான் கதை. எழுபதுகளில் தொடர்கதையாக வந்திருக்க வேண்டும். அப்போது பெண்ணுக்கு ஈகோ என்பது பெரிய விஷயமாக இருந்திருக்கலாம்.

விகடனில் ஒரு சரித்திர நாவல் வந்தது என்று நினைவு. பேர் மறந்துவிட்டது. நினைவு வைத்துக் கொள்ள வேண்டிய நாவல் இல்லை என்பது மட்டும்தான் ஞாபகம் இருக்கிறது.

இந்த இரண்டு புனைவுகளை மட்டும் வைத்து மட்டும் சொல்கிறேன் – தாமரைமணாளன் போன்றவர்கள் வாரப் பத்திரிகைகளின் பக்கங்களை நிரப்புவதற்கு மட்டும்தான் பயன்பட்டிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். வாரப் பத்திரிகை எழுத்தாளர்களை விரும்பிப் படிக்கும் ஜீவியின் தளத்தில் கூட இவரைப் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை.

2003-இல் இறந்துவிட்டார் என்று தெரிகிறது.

இவர் புனைவுகளைப் படித்திருக்கிறீர்களா? எதையாவது சிபாரிசு செய்வீர்களா?

பிற்சேர்க்கை: தாமரைமணாளன் விகடனில் துணை ஆசிரியராக இருந்தார் என்றும் பிறகு மணியனோடு வெளியேறி இதயம் பேசுகிறது குழு பத்திரிகைகளுக்கு உதவி ஆசிரியராக இருந்தார் என்றும் பிறகு வாசுகி என்ற பத்திரிகையின் ஆசிரியராக இருந்தார் என்றும் சாரதா, ஸ்ரீனிவாஸ் தகவல் தருகிறார்கள். சாரதா “இவரது ஆயிரம் வாசல் இதயம் உள்பட சில கதைகள் திரைப்படமாக எடுக்கப்பட்டன. இதனிடையே நடிகர் ஜெமினி கணேசன் இதய மலர் என்ற படத்தை இயக்கி வந்தவர், பாதியிலேயே அதைவிட்டு விலக, மீதியை தாமரை மணாளன் அதை இயக்கி வெளியிட்டார். அதனால் படத்துவக்கத்தில் பெயர் காட்டும்போது ‘இயக்கம்: ஜெமினி கணேசன், தாமரை மணாளன்’ என்று காட்டப்பட்டது. படமும் ஓடவில்லை” என்று மேலும் தகவல் தருகிறார்.

விலைக்கு வாங்கி இருக்கிறேன் என்ற டிவி தொடரையும் எழுதினாராம். அந்தப்புரம், இந்திரவிழா என்ற இரண்டு சரித்திர நாவல்கள் மங்கலாக நினைவிருக்கின்றன.

ஸ்ரீனிவாஸ் தாமரைமணாளனை நினைவு கூரும் இன்னொரு சுட்டி தருகிறார்.