Skip to content

எழுத்தாளர் தாமரைமணாளன்

by மேல் ஜூன் 21, 2011

இருபது முப்பது வருஷங்களுக்கு முன்னால் தாமரைமணாளன் என்ற பேரை விகடனில் அவ்வப்போது பார்த்திருக்கிறேன். எந்தக் கதையும் அந்த வயதிலும் என்னைக் கவர்ந்ததில்லை. சமீபத்தில் மேல்காற்று புத்தகத்தை புரட்டியபோது அய்யா வைகுண்டரின் மேற்கோள்கள் நிறைய தெரிந்தது. முதல் இரண்டு பக்கத்தில் ஒரு நாடார் குடும்பத்தைப் பற்றிய கதை என்று தெரிந்தது. எனக்கு ஒரு ஜாதி பின்புலம் உள்ள நாவல் என்றால் பிடிக்கும். இது நாடார் ஜாதி பின்புலம் உள்ள நாவலோ என்று படிக்க ஆரம்பித்தேன். ஒரு நாடார் குடும்பத்தின் கதைதான். ஆனால் வேஸ்ட். அந்த மேற்கோள்கள் தவிர வேறு எதுவுமே உருப்படியாக இல்லை. முடிச்சே இல்லாத கதை. ஹீரோ என்ற ஒரே காரணத்துக்காக எல்லா பெண்களும் அவனை விழுந்து விழுந்து காதலிக்கிறார்கள். அவ்வளவுதான் கதை.

இது தொடர்கதையாக வந்திருக்க வேண்டும். ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் ஒரு வெட்டி சஸ்பென்ஸ் வைத்திருக்கிறார்.

ஆயிரம் எண்ணங்கள் உதயம் என்று இன்னொரு புத்தகமும் கிடைத்தது. சிம்பிளான கதை – நாயகி தேவகிக்கு ஈகோ உண்டு. காதலன் ரமேஷோடு சின்ன வேறுபாடு பெரிதாக வளர்கிறது. சுமார். அவ்வளவுதான் கதை. எழுபதுகளில் தொடர்கதையாக வந்திருக்க வேண்டும். அப்போது பெண்ணுக்கு ஈகோ என்பது பெரிய விஷயமாக இருந்திருக்கலாம்.

விகடனில் ஒரு சரித்திர நாவல் வந்தது என்று நினைவு. பேர் மறந்துவிட்டது. நினைவு வைத்துக் கொள்ள வேண்டிய நாவல் இல்லை என்பது மட்டும்தான் ஞாபகம் இருக்கிறது.

இந்த இரண்டு புனைவுகளை மட்டும் வைத்து மட்டும் சொல்கிறேன் – தாமரைமணாளன் போன்றவர்கள் வாரப் பத்திரிகைகளின் பக்கங்களை நிரப்புவதற்கு மட்டும்தான் பயன்பட்டிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். வாரப் பத்திரிகை எழுத்தாளர்களை விரும்பிப் படிக்கும் ஜீவியின் தளத்தில் கூட இவரைப் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை.

2003-இல் இறந்துவிட்டார் என்று தெரிகிறது.

இவர் புனைவுகளைப் படித்திருக்கிறீர்களா? எதையாவது சிபாரிசு செய்வீர்களா?

பிற்சேர்க்கை: தாமரைமணாளன் விகடனில் துணை ஆசிரியராக இருந்தார் என்றும் பிறகு மணியனோடு வெளியேறி இதயம் பேசுகிறது குழு பத்திரிகைகளுக்கு உதவி ஆசிரியராக இருந்தார் என்றும் பிறகு வாசுகி என்ற பத்திரிகையின் ஆசிரியராக இருந்தார் என்றும் சாரதா, ஸ்ரீனிவாஸ் தகவல் தருகிறார்கள். சாரதா “இவரது ஆயிரம் வாசல் இதயம் உள்பட சில கதைகள் திரைப்படமாக எடுக்கப்பட்டன. இதனிடையே நடிகர் ஜெமினி கணேசன் இதய மலர் என்ற படத்தை இயக்கி வந்தவர், பாதியிலேயே அதைவிட்டு விலக, மீதியை தாமரை மணாளன் அதை இயக்கி வெளியிட்டார். அதனால் படத்துவக்கத்தில் பெயர் காட்டும்போது ‘இயக்கம்: ஜெமினி கணேசன், தாமரை மணாளன்’ என்று காட்டப்பட்டது. படமும் ஓடவில்லை” என்று மேலும் தகவல் தருகிறார்.

விலைக்கு வாங்கி இருக்கிறேன் என்ற டிவி தொடரையும் எழுதினாராம். அந்தப்புரம், இந்திரவிழா என்ற இரண்டு சரித்திர நாவல்கள் மங்கலாக நினைவிருக்கின்றன.

ஸ்ரீனிவாஸ் தாமரைமணாளனை நினைவு கூரும் இன்னொரு சுட்டி தருகிறார்.

Advertisements
16 பின்னூட்டங்கள்
 1. knvijayan permalink

  தாமரை மணாளனின் ஆதர்சம் இதயம் பேசுகிறது மணியன்,அப்புறம் என்னத்தை சொல்வது.

  Like

 2. உங்கள் பதிவு நன்றாக இருந்தது சினிமா சம்பந்தமான செய்திகளை கீழே பதியவும்.

  Like

 3. டியர் ஆர்.வி.

  ஆனந்த விகடனின் பிரதான எழுத்தாளர்களில் ஒருவராக விளங்கிய தாமரை மணாளன், விகடனில் இருந்து எழுத்தாளர் மணியன் ஒரு பெரிய கூட்டத்துடன் விலகி வந்து ‘இதயம் பேசுகிறது’ பத்திரிகையைத் துவங்கியபோது அவருடனேயே விலகி வந்து ‘இதயம்’ பத்திரிகையின் துணை ஆசிரியர் ஆனார். பின்னர் இதயம் பப்ளிகேஷன்ஸ் சார்பில் பாலஜோதிடம், எண்கள், மணியன், மயன்… இப்படி வச வ்சவென்று மணியன் பல பத்திரிகைகளைத் துவங்கியபோது, தா.ம. எழுதுவதைக் குறைத்துக்கொண்டு அவற்றின் நிர்வாகத்தைக் கவனித்து வந்தார்.

  போதாத காலமோ என்னவோ அதிலிருந்தும் விலகி, தனியாக ‘வாசுகி’ என்ற பத்திரிகையைத் துவக்கினார். இதற்குமுன பத்திரிகைத்துறையில் அவ்வளவு அனுபவம் இருந்தும் என்ன காரணத்தாலோ தொழிலில் தோல்வியடைந்தார்.

  இவரது ‘ஆயிரம் வாசல் இதயம்’ உள்பட சில கதைகள் திரைப்படமாக எடுக்கப்பட்டன. இதனிடையே நடிகர் ஜெமினி கணேசன் ‘இதய மலர்’ என்ற படத்தை இயக்கி வந்தவர், பாதியிலேயே அதைவிட்டு விலக, மீதியை தாமரை மணாளன் அதை இயக்கி வெளியிட்டார். அதனால் படத்துவக்கத்தில் பெயர் காட்டும்போது ‘இயக்கம்: ஜெமினி கணேசன், தாமரை மணாளன்’ என்று காட்டப்பட்டது. படமும் ஓடவில்லை.

  தாமரை மணாளன் அவ்வளவு சுவாரஸ்யமான எழுத்தாளர் அல்ல. விகடனுக்கு முன் ‘ராணி’ பத்திரிகையிலும் எழுதி வந்தாராம். நான் படித்ததில்லை.

  Like

 4. Boston Bala permalink

  Probably if had written now, he could have become famous by blog writings

  Like

 5. மறக்கப்பட்ட தாமரை மணாளன்…
  http://ambarathooni.blogspot.com/2011/01/blog-post_22.html

  Like

 6. சாரதா, ஸ்ரீனிவாஸ், நீங்கள் தந்த தகவல்களையும் சேர்த்துவிட்டேன். நன்றி!

  பாஸ்டன் பாலா, விஜயன், ஃபில்மிக்ஸ் மறுமொழிக்கு நன்றி!

  Like

 7. அண்ணே , பொறுமைக்கு ஒரு அளவேயில்லையா ? 🙂

  Like

 8. சென்ற பிறவியிலே சிற்றிதழ்சார் விமர்சகராக பிறந்து தமிழ் வணிக எழுத்துக்களை கரித்துக்கொட்டிய விமர்சகர் வத்தலக்குண்டு பித்தன் என்பவர் அதனால் வணிக எழுத்தாளர் பூவை எஸ் ஆறுமுகம் அவர்களின் சாபத்துக்காளாகி மரணம் அடைந்து ஆர்.வியாக பிறந்து அத்தனை வணிக எழுத்துக்களையும் உட்கார்ந்து வாசித்து இன்னலுறும் நிலைக்கு ஆளானார் என்று ஒரு கதை இருக்கிறதே. உண்மையா?

  ஜெ

  Like

  • ஜெயமோகன், உங்கள் கமெண்டைப் படித்ததும் கெக்கேபிக்கே என்று சிரித்தேன். ரொம்ப நாளாச்சு சார் இணையத்தில் படித்துவிட்டு வாய் விட்டு சிரித்து!

   Like

 9. ஆனந்த விகடன், இதயம் பேசுகிறது, மணியன், தாமரை மணாளன் ஆகிய பெயர்களை உச்சரிக்கும்போது, மறக்காமல் நினைவுக்கு வரும் இன்னொரு எழுத்தாளர் திரு ஜே.எம்.சாலி. இவரும் இதயம் பத்திரிகையின் துணையாசிரியர்களில் ஒருவர் மட்டுமல்ல. பல்வேறு சிறுகதைகள், நாவல்கள் எழுதியுள்ளார். சிலவற்றைப் படித்திருக்கிறேன். (அவசரத்துக்கு ஒரு பெயரும் நினைவுக்கு வரவில்லை). இவரும் சுவாரஸ்யமான எழுத்தாளர். தாமரை மணாளனின் உற்ற நண்பர்.

  பயணக்கட்டுரைகள் எழுதுவதற்காக மணியன் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது, அங்குள்ள தமிழ்நாட்டைச்சேர்ந்த நண்பர்களின் விவரங்களையும், முகவரிகளையும் சேகரித்துக் கொடுப்பதில் பெரும்பங்கேற்றவர். இதயம் குரூப் நிறுவனம், இளைஞர்களுக்காக ‘மயன்’ என்ற பத்திரிகையை (மணியன் என்பதன் சுருக்கம்..?) ஆரம்பித்தபோது, அதற்குப்பொறுப்பாசிரியராக இருந்தவர் ஜே.எம்.சாலி. உடல்நலக்குறைவு காரணமாக அவர் விலகியபோது, ‘அபஸ்வரம் ராம்ஜி’ அதன் பொறுப்பாசிரியரானார். சில மாதங்களில் அந்தப்பத்திரிகையும் மறைந்து போனது.

  Like

 10. ம்.. இன்னொரு விஷயமும் உண்டு. மணியன் எழுதியதாகச் சொல்லப்படும் பல கதைகளை உண்மையில் எழுதியவர் தாமரை மணாளன் தான் என்ற குற்றச்சாட்டு உண்டு. இதை சன் (அப்படித்தான் நினைக்கிறேன்) டி.வி. பேட்டியில் ஒருவர் (வீரபாண்டியன் என்று நினைவு..) கேட்டதற்கு அப்படியே மழுப்பி விட்டார் தாமரை மணாளன். பத்திரிகை நிர்வாகத்தில் சில சமயம் சில விஷயங்களை அனுசரித்துப் போக வேண்டியிருக்கும் என்று பட்டும் படாமல் சொன்னார்.

  இவர் கதைகள் கிட்டத்தட்ட ஒரே மாதிரி காதல் கதைகளாகவே இருக்கும். வர்ணனை மயமாக இருக்கும். இதயம் பேசுகிறது இதழில் இவரது தொடர்கதையும், மணியனின் தொடர்கதையும் ஒரேசமயத்தில் வெளியானபோது மேற்கண்ட குற்றச்சாட்டு எழுந்தது.

  இவரது ’அந்தப்புரம்’ என்ற கதை டி.வி தொடராக வெளியானது. மனோரமா நடித்திருந்தார். சிறந்த எழுத்தாளராக ஒருவேளை கருதப்படாமல் இருக்கலாம். ஆனால் நல்ல, வெள்ளந்தியான மனிதர் என்பது மட்டும் உண்மை.

  Like

 11. //வாரப் பத்திரிகை எழுத்தாளர்களை விரும்பிப் படிக்கும் ஜீவியின் தளத்தில் கூட இவரைப் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை.//

  இந்த மாதிரி எதிர்பாராமல் கிடைக்கும் ‘ஷொட்டு’களில் சந்தோஷம் தான் என்றாலும், ‘வாரப் பத்திரிகை எழுத்தாளர்களை விரும்பிப் படிக்கும்’ என்கிற அடைமொழி அத்தனை சரியில்லை. எனது ‘எழுத்தாளர்’ பகுதியில் இதுவரை இடம்பெற்றவர்களில் வாரப் பத்திரிகைகளில் எழுதியவர்கள் ஒரு சிலர் தான். அவர்களின் எழுத்துக்களுக்கே உரித்தான பல குணாம்ச காரணங்களினால், நினைவில் தட்டுப்படுகிற தேர்ந்த எழுத்தாளர்களையே தெரிவு செய்து எழுதுகிறேன். .அப்படி இன்னும் எழுத வேண்டியவர்களைப் பற்றி ஒரு பெரிய லிஸ்டே வைத்திருக்கிறேன். அதில் தாமரை மணாளன், மணியன் போன்றவர்கள் இல்லை. ஆனந்தவிகடனில் ஜெ.கே.யை எழுத வைத்ததில், மணியனுக்கு பெரும்பங்கு உண்டு என்பதே மணியனை நினைத்தால் என் நினைவுக்கு வரும் மறக்க முடியாத ஒரு செய்தி. அந்த அவரின் பங்களிப்பு, தமிழ் எழுத்துலகில் எப்படிப்பட்ட ஒரு எழுச்சியை ஏற்படுத்தியது என்பது நீங்களும் அறிந்த ஒன்றே.

  Like

 12. சாரதா, ஜே.எம். சாலி பற்றி எனக்கும் நினைவில்லை. ஆனால் பேரைப் பார்த்திருக்கிறேன்.
  ரமணன், // மணியன் எழுதியதாகச் சொல்லப்படும் பல கதைகளை உண்மையில் எழுதியவர் தாமரை மணாளன் தான் …// அடப் பாவமே, தாமரைமனாளனின் எழுத்தைப் பற்றி யாரும் ஒரு நல்ல வார்த்தை சொல்ல மாட்டேன் என்கிறீர்களே? 😉
  ஜீவி, // அதில் தாமரை மணாளன், மணியன் போன்றவர்கள் இல்லை. // நான் மட்டும்தான் மாட்டிக்கிட்டேன் போல இருக்கே!

  Like

 13. ஜே.எம். சாலி, ‘கலைமகள்’ குழுமத்தின் சிறுவர் பத்திரிகையான ‘கண்ணன்’ பத்திரிகை மூலம் அறிமுகம் ஆனவர். அவருக்கு எழுத ஊக்கமும், உற்சாகமும் அளித்தவர் ‘கண்ணன்’ பத்திரிகையின் ஆசிரியராய் இருந்த உங்கள் பெயர் கொண்ட பழம்பெரும் எழுத்தாளர் ‘ஆர்வி’ அவர்கள். தமிழ் எழுத்துலகுக்கு ஆர்வியின் பங்களிப்பு பற்றி எனது தளத்தில் எழுத்தாளர் பகுதியில் ‘பெரியவர் ஆர்வி’ என்று அவரைப் பற்றி பதிந்திருக்கிறேன். வணிக எழுத்தாளராக ஆர்வி அவர்களை திரு.ஜெயமோகன் வர்ணித்திருந்ததை ஏற்றுக கொள்ள முடியாமல் என்னில் வெளிப்பட்ட கதையே ‘மறம்’.

  Like

 14. தமது உலகம் சுற்றிய அனுபவத்தை மணியன் ஆனந்த விகடனில் எழுதிய கட்டுரைகளுக்கு தலைப்பாகிய ‘இதயம் பேசுகிறது’ என்பதே அவரது பத்திரிகைக்கு பெயராயிற்று. ‘இதயம் பேசுகிறது’ ஆசிரியர் குழுவில் இணைந்த இன்னொரு பிரபல எழுத்தாளர் எஸ். லட்சுமி சுப்ரமணியன்.

  ஜெயமோகன் குறிப்பிட்டிருக்கிற பூவை. எஸ். ஆறுமுகத்தின் எழுத்து நடை அலாதியானது. ம.பொ.சி.யின் தமிழரசு கழகப் பிரமுகர் ஜி.உமாபதி நடத்திய ‘உமா’ பத்திரிகையில் சிலகாலம் உதவியாசிரியராக இவர் பணியாற்றினார்..

  Like

 15. ஜே.எம். சாலி, இதயம் பேசுகிறது இதழ் பற்றிய விவரங்களுக்கு நன்றி ஜீவி! இதை எல்லாம் நீங்கள் ஒரு பதிவாகவே எழுத வேண்டும்…

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: