பத்திரிகைகளுக்கு (சிறுகதை) எழுதுதல்

என் சிறு வயதில் குமுதம், விகடன், கல்கி, கலைமகள் எல்லாவற்றிலும் சிறுகதைகள், தொடர்கதைகள் நிறைய வரும். அடுத்த வார இன்ஸ்டால்மென்ட் எப்போது வரும் என்று காத்திருந்து படித்தவர்கள் பலர் உண்டு – நான் உட்பட. சிறுகதைப் போட்டி, நாவல் போட்டி என்று பல நடக்கும்.

இப்போதெல்லாம் குமுதம் விகடனில் பேருக்குக் கூட கதைகள் வருவதில்லை போலிருக்கிறது. சிறு பத்திரிகைகள், இணையம்தான் கதைகளைப் பதிக்க ஒரே வழியோ என்று தோன்றுகிறது. எங்கோ அமெரிக்காவில் உட்கார்ந்திருப்பவனுக்கு சிறு பத்திரிகைகள் அவ்வளவு viable இல்லை. ஜெயமோகன் போன்ற ஜாம்பவான்களே இணையம்தான் தோதான ஊடகம் என்று தீர்மானித்துவிட்டார்கள். என்னதான் இணையம் இணையம் என்றாலும் காகிதத்தில் வந்தால்தான் (எனக்கு) திருப்தி.

சிறுகதைகளைப் பதிக்க என்னதான் வழி? உங்களுக்கு ஏதாவது தெரியுமா? ஏதாவது போட்டிகள் நடந்தால் அதை எப்படித் தெரிந்து கொள்வது? எந்தப் பதிவராவது இந்தப் போட்டிகளைப் பற்றி தகவல் தருகிறாரா?

தன்னிலை விளக்கம் #1: நான் எழுதுவது எனக்காகத்தான், அடுத்தவர்கள் படிப்பது போனஸ் மட்டுமே என்று நான் சமீபத்தில்தான் உணர்ந்தேன். அதனால் பத்திரிகைகளில் என் கதை வரவில்லை என்றால் தூக்கம் பிடிக்காத நிலை என்றெல்லாம் இல்லை. போனஸ் கிடைத்தால் நல்லதுதானே, நாலு பேர் குறை சொன்னால் பிரச்சினைகள் தெரிந்து இன்னும் நன்றாக எழுத வருமோ என்ற ஆசைதான்.

தன்னிலை விளக்கம் #2: பய புள்ள நாலு கதைய, அதுவும் அவன் ப்ளாகிலய போட்டுட்டு கனா காணுதே என்று நினைக்காதீர்கள். எந்தக் கனவும் இல்லை. 🙂

தன்னிலை விளக்கம் #3: போட்டிகள் பற்றி யாராவது ரெகுலராக அப்டேட் செய்தால் நன்றாக இருக்கும், இது உள்ளூரில் இருப்பவர்தான் செய்ய முடியும் என்று தோன்றுகிறது. Any volunteers?