வடுவூர் துரைசாமி ஐயங்காரின் “வித்யாசாகரம்”

தாமரைமணாளன் பதிவு கண்டு பாஸ்டன் பாலா, ஜெயமோகன் போன்றவர்கள் பூரித்துப் போயிருக்கிறார்கள். (ஜெயமோகன் கமெண்டைப் படிக்கத் தவறாதீர்கள். நான் வாய்விட்டு சிரித்துவிட்டேன்.) அவர்கள் போன்றவர்களை இன்னும் மகிழ்ச்சி வெள்ளத்திலே மூழ்க வைக்க இந்தப் பதிவு.

வடுவூர் துரைசாமி ஐயங்கார் ஒரு காலத்திலே ஸ்டார் எழுத்தாளர். மர்ம நாவல் எழுதுவார். ஜே.ஆர். ரங்கராஜு, வை.மு. கோதைநாயகி அம்மாள், ஆரணி குப்புசாமி முதலியார் போன்றவர்கள் இந்த மாதிரி நாவல்களை எழுதி – பல நேரத்தில் ஆங்கிலப் புத்தகங்களிருந்து காப்பி அடித்து – புகழும் பணமும் நிறைய சம்பாதித்தார்களாம். க.நா.சு. போன்ற ஜாம்பவான்கள் எல்லாம் வடுவூரார் எழுத்தை சிலாகித்திருக்கிறார்கள். கல்கியும் இவரது ரசிகர். (ஆனால் ஒரு கமென்ட் அடித்திருக்கிறார் பாருங்கள் – வடுவூரார் கடைசியாக எழுதிய நாலைந்து புத்தகத்தை வெளியிடாமல் இருந்தால் நன்றாக இருந்திருக்கும், தமிழ்த்தாய்க்கு அந்த அதிர்ஷ்டம் இல்லை! – தஞ்சாவூர் குசும்பு என்பது இதுதான்.) நான் இவரது புத்தகங்களை கண்ணால் கூட கண்டதில்லை, காண்பேன் என்ற நம்பிக்கையும் இருந்ததில்லை.

நாலைந்து வருஷத்துக்கு முன் நான் இந்தியா போயிருந்தபோது அல்லையன்ஸ் பதிப்பகம் வடுவூராரின் சில புத்தகங்களை மறுபதிப்பு செய்திருந்தது. நான் வாங்க விரும்பியது திகம்பர சாமியார். அந்த டைட்டில் மட்டும் அவர்கள் வெளியிடவில்லை. சரி குருட்டாம்போக்கில் எதையாவது வாங்குவோம் என்று வித்யாசாகரம் என்ற புத்தகத்தைத் தூக்கிக் கொண்டு வந்தேன். (அப்புறம் தெரிந்த விஷயம் – திகம்பர சாமியார் என்பது சினிமாவாக வந்தபோது வைத்த பேர். ஒரிஜினல் புத்தகத்தின் பேர் கும்பகோணம் வக்கீல்.)

பத்து பக்கம் படித்ததும் புத்தகம் தேறாது என்று தெரிந்துவிட்டது. இருந்தாலும் என்னதான் எழுதி இருக்கிறார் என்று தெரிந்து கொள்ள ஒரு ஆவல். தம் கட்டிப் படித்தேன். கதையும் சுகமில்லை, முடிச்சும் பிரமாதமில்லை. என்ன கதை என்றெல்லாம் விவரிக்கப் போவதில்லை, வேண்டுமானால் நீங்களே படியுங்கள், இல்லை என்றால் நண்பர் ராஜன் எழுதி இருக்கும் இந்தக் கட்டுரையைப் படித்துக் கொள்ளுங்கள். யாம் பெற்ற துன்பம் பெறுக இவ்வையகம்!

எனக்கு ஆர்வம் ஊட்டிய அம்சங்கள் இரண்டு. ஒன்று நடை. காலாவதியான நடைதான். அதில் இருக்கும் நகைச்சுவையும் ரொம்ப சிம்பிள் ரகம்தான். ஆனால் புனைவுகளையே பார்க்காத, பரமார்த்த குரு கதைகளே நகைச்சுவையின் உச்சமாக இருந்த காலகட்டத்தில் இவை பெரிதும் ரசிக்கப்பட்டிருக்கும். உதாரணத்துக்கு முதல் பாராவை அப்படியே கீழே தருகிறேன்.

சேலத்தில் எஞ்சினியர் வேலையிலிருந்து காலகதியடைந்த சிங்காரவேலு முதலியாரது புத்திரரான வித்தியாசாகர முதலியார் பெயருக்கு மாத்திரம் வித்தியாசாகர முதலியாராக விளங்கினார். அவர் சேலம் கலாசாலைக்குப் பல வருஷகாலமாகப் போய் வந்து கொண்டிருந்தார். பரீட்சைகளும் வருஷத்திற்கொரு முறை வந்து போய்க் கொண்டிருந்தன. முதலியாரவர்களது புதிய புஸ்தகங்கள் வருஷந்தோறும் பழைய புஸ்தகங்களாக மாறிக் கிழிந்து போய்க் கொண்டிருந்தன. அவருடன் கூடப் படித்த நன்றியற்ற ஏனைய சிறுவர்கள் அவரிடத்தில் இரக்கமின்றியும், நட்பைப் பாராமலும் அவரை அதே வகுப்பில் விடுத்துப் புதிய வகுப்புகளுக்குப் போய்க் கொண்டிருந்தனர். ஆனால், நமது முதலியார் மாத்திரம் தமது பழைய நண்பரிடம் ஆழ்ந்த அபிமானம் வைத்தவராதலால், தமது பழைய வகுப்பு, பழைய அறை, பழைய பெஞ்சிப் பலகை, பழைய இடம் முதலியவற்றைத் துறவாமலும், பழைய உபாத்தியாயரைக் கைவிடாமலும் இருந்து, வித்தைக்கடலில் வீழ்ந்து மெட்ரிகுலேஷன் என்ற மடுவில் கிடந்தது பரீட்சைகளாகிய சூழல்களில் அகப்பட்டு நீந்தி அவ்விடத்திலிருந்து விடுபடும் துறையறியாதவராய்த் தத்தளித்து உண்மையாகவே வித்தியாசாகரத்தில் முழுகி முழுகி எழுந்து கொண்டிருந்தார்.

இரண்டாவது அன்றைய சமூகம் எப்படி இருந்திருக்கும் என்ற யூகங்கள். தாசிகள், அவர்களது தந்திரங்கள், ஜமீன்தார்களும் மிட்டா மிராசுகளும் தாசிகளோடு பழகும் விதம், குடும்பப் பெண்கள் தாசிகளை எதிர்கொண்ட விதம் என்று அவர் காட்டி இருப்பதில் நிறைய மிகைப்படுத்தல்கள் இருக்கும்தான். காஞ்சனையின் கனவில் லக்ஷ்மியும் தில்லானா மோகனாம்பாளில் கொத்தமங்கலம் சுப்புவும் காட்டும் தாசிகளின் உலகமே எனக்கெல்லாம் அன்னியமாக இருக்கிறது. இருந்தாலும் இப்படி ஒரு உலகம் இருந்ததா என்று வியக்க வைக்கிறது.

க.நா.சு.வும் கல்கியும் அவர்கள் ரொம்பச் சின்னவர்களாக இருந்தபோது படித்திருக்க வேண்டும், ஏறக்குறைய அவர்கள் படித்த முதல் கதைபுத்தகங்களாக இருக்க வேண்டும், அதனால்தான் ஆஹா ஓஹோ என்கிறார்கள். (எனக்கும் இப்படி அலிஸ்டர் மக்ளீன் புத்தகங்கள் மீது ஒரு கவர்ச்சி உண்டு)

டிகேஎஸ் சகோதரர்கள் இதை நாடகமாக மாற்றி இருக்கிறார்கள். டி.ஆர். ராமச்சந்திரன், அன்றைய செக்சி நட்சத்திரம் தவமணி தேவி (வேறென்ன ரோல்? தாசி மோகனாம்பாதான்) நடித்து 1946-இல் வித்யாபதி என்று வந்திருக்கிறது.

இது தமிழ் புனைவுலகம் எப்படி எல்லாம் இருந்தது, பரிணமித்தது என்று தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு மட்டுமே.

தொடர்புடைய சுட்டிகள்:
வடுவூர் துரைசாமி ஐயங்கார்
இந்த நாவலைப் பற்றி நண்பர் திருமலைராஜன்
வித்யாபதி திரைப்படம் பற்றி ராண்டார்கை

ஜே.ஆர். ரங்கராஜு
வை.மு. கோதைநாயகி அம்மாள்

வடுவூரார் பற்றி டோண்டு
தென்றல் இதழில் வடுவூரார் பற்றி (Registration Required)
வடுவூரார் பற்றி தமிழ் ஸ்டுடியோவில்

ஜெயமோகனின் பகடி கதை (திகம்பர சாமியார் மட்டுமல்ல, ஏறக்குறைய எல்லா துப்பறியும் நிபுணர்களும் – கணேஷ்-வசந்த், சங்கர்லால், ஷெர்லாக் ஹோம்ஸ்… – உண்டு)