வடுவூர் துரைசாமி ஐயங்காரின் “வித்யாசாகரம்”

தாமரைமணாளன் பதிவு கண்டு பாஸ்டன் பாலா, ஜெயமோகன் போன்றவர்கள் பூரித்துப் போயிருக்கிறார்கள். (ஜெயமோகன் கமெண்டைப் படிக்கத் தவறாதீர்கள். நான் வாய்விட்டு சிரித்துவிட்டேன்.) அவர்கள் போன்றவர்களை இன்னும் மகிழ்ச்சி வெள்ளத்திலே மூழ்க வைக்க இந்தப் பதிவு.

வடுவூர் துரைசாமி ஐயங்கார் ஒரு காலத்திலே ஸ்டார் எழுத்தாளர். மர்ம நாவல் எழுதுவார். ஜே.ஆர். ரங்கராஜு, வை.மு. கோதைநாயகி அம்மாள், ஆரணி குப்புசாமி முதலியார் போன்றவர்கள் இந்த மாதிரி நாவல்களை எழுதி – பல நேரத்தில் ஆங்கிலப் புத்தகங்களிருந்து காப்பி அடித்து – புகழும் பணமும் நிறைய சம்பாதித்தார்களாம். க.நா.சு. போன்ற ஜாம்பவான்கள் எல்லாம் வடுவூரார் எழுத்தை சிலாகித்திருக்கிறார்கள். கல்கியும் இவரது ரசிகர். (ஆனால் ஒரு கமென்ட் அடித்திருக்கிறார் பாருங்கள் – வடுவூரார் கடைசியாக எழுதிய நாலைந்து புத்தகத்தை வெளியிடாமல் இருந்தால் நன்றாக இருந்திருக்கும், தமிழ்த்தாய்க்கு அந்த அதிர்ஷ்டம் இல்லை! – தஞ்சாவூர் குசும்பு என்பது இதுதான்.) நான் இவரது புத்தகங்களை கண்ணால் கூட கண்டதில்லை, காண்பேன் என்ற நம்பிக்கையும் இருந்ததில்லை.

நாலைந்து வருஷத்துக்கு முன் நான் இந்தியா போயிருந்தபோது அல்லையன்ஸ் பதிப்பகம் வடுவூராரின் சில புத்தகங்களை மறுபதிப்பு செய்திருந்தது. நான் வாங்க விரும்பியது திகம்பர சாமியார். அந்த டைட்டில் மட்டும் அவர்கள் வெளியிடவில்லை. சரி குருட்டாம்போக்கில் எதையாவது வாங்குவோம் என்று வித்யாசாகரம் என்ற புத்தகத்தைத் தூக்கிக் கொண்டு வந்தேன். (அப்புறம் தெரிந்த விஷயம் – திகம்பர சாமியார் என்பது சினிமாவாக வந்தபோது வைத்த பேர். ஒரிஜினல் புத்தகத்தின் பேர் கும்பகோணம் வக்கீல்.)

பத்து பக்கம் படித்ததும் புத்தகம் தேறாது என்று தெரிந்துவிட்டது. இருந்தாலும் என்னதான் எழுதி இருக்கிறார் என்று தெரிந்து கொள்ள ஒரு ஆவல். தம் கட்டிப் படித்தேன். கதையும் சுகமில்லை, முடிச்சும் பிரமாதமில்லை. என்ன கதை என்றெல்லாம் விவரிக்கப் போவதில்லை, வேண்டுமானால் நீங்களே படியுங்கள், இல்லை என்றால் நண்பர் ராஜன் எழுதி இருக்கும் இந்தக் கட்டுரையைப் படித்துக் கொள்ளுங்கள். யாம் பெற்ற துன்பம் பெறுக இவ்வையகம்!

எனக்கு ஆர்வம் ஊட்டிய அம்சங்கள் இரண்டு. ஒன்று நடை. காலாவதியான நடைதான். அதில் இருக்கும் நகைச்சுவையும் ரொம்ப சிம்பிள் ரகம்தான். ஆனால் புனைவுகளையே பார்க்காத, பரமார்த்த குரு கதைகளே நகைச்சுவையின் உச்சமாக இருந்த காலகட்டத்தில் இவை பெரிதும் ரசிக்கப்பட்டிருக்கும். உதாரணத்துக்கு முதல் பாராவை அப்படியே கீழே தருகிறேன்.

சேலத்தில் எஞ்சினியர் வேலையிலிருந்து காலகதியடைந்த சிங்காரவேலு முதலியாரது புத்திரரான வித்தியாசாகர முதலியார் பெயருக்கு மாத்திரம் வித்தியாசாகர முதலியாராக விளங்கினார். அவர் சேலம் கலாசாலைக்குப் பல வருஷகாலமாகப் போய் வந்து கொண்டிருந்தார். பரீட்சைகளும் வருஷத்திற்கொரு முறை வந்து போய்க் கொண்டிருந்தன. முதலியாரவர்களது புதிய புஸ்தகங்கள் வருஷந்தோறும் பழைய புஸ்தகங்களாக மாறிக் கிழிந்து போய்க் கொண்டிருந்தன. அவருடன் கூடப் படித்த நன்றியற்ற ஏனைய சிறுவர்கள் அவரிடத்தில் இரக்கமின்றியும், நட்பைப் பாராமலும் அவரை அதே வகுப்பில் விடுத்துப் புதிய வகுப்புகளுக்குப் போய்க் கொண்டிருந்தனர். ஆனால், நமது முதலியார் மாத்திரம் தமது பழைய நண்பரிடம் ஆழ்ந்த அபிமானம் வைத்தவராதலால், தமது பழைய வகுப்பு, பழைய அறை, பழைய பெஞ்சிப் பலகை, பழைய இடம் முதலியவற்றைத் துறவாமலும், பழைய உபாத்தியாயரைக் கைவிடாமலும் இருந்து, வித்தைக்கடலில் வீழ்ந்து மெட்ரிகுலேஷன் என்ற மடுவில் கிடந்தது பரீட்சைகளாகிய சூழல்களில் அகப்பட்டு நீந்தி அவ்விடத்திலிருந்து விடுபடும் துறையறியாதவராய்த் தத்தளித்து உண்மையாகவே வித்தியாசாகரத்தில் முழுகி முழுகி எழுந்து கொண்டிருந்தார்.

இரண்டாவது அன்றைய சமூகம் எப்படி இருந்திருக்கும் என்ற யூகங்கள். தாசிகள், அவர்களது தந்திரங்கள், ஜமீன்தார்களும் மிட்டா மிராசுகளும் தாசிகளோடு பழகும் விதம், குடும்பப் பெண்கள் தாசிகளை எதிர்கொண்ட விதம் என்று அவர் காட்டி இருப்பதில் நிறைய மிகைப்படுத்தல்கள் இருக்கும்தான். காஞ்சனையின் கனவில் லக்ஷ்மியும் தில்லானா மோகனாம்பாளில் கொத்தமங்கலம் சுப்புவும் காட்டும் தாசிகளின் உலகமே எனக்கெல்லாம் அன்னியமாக இருக்கிறது. இருந்தாலும் இப்படி ஒரு உலகம் இருந்ததா என்று வியக்க வைக்கிறது.

க.நா.சு.வும் கல்கியும் அவர்கள் ரொம்பச் சின்னவர்களாக இருந்தபோது படித்திருக்க வேண்டும், ஏறக்குறைய அவர்கள் படித்த முதல் கதைபுத்தகங்களாக இருக்க வேண்டும், அதனால்தான் ஆஹா ஓஹோ என்கிறார்கள். (எனக்கும் இப்படி அலிஸ்டர் மக்ளீன் புத்தகங்கள் மீது ஒரு கவர்ச்சி உண்டு)

டிகேஎஸ் சகோதரர்கள் இதை நாடகமாக மாற்றி இருக்கிறார்கள். டி.ஆர். ராமச்சந்திரன், அன்றைய செக்சி நட்சத்திரம் தவமணி தேவி (வேறென்ன ரோல்? தாசி மோகனாம்பாதான்) நடித்து 1946-இல் வித்யாபதி என்று வந்திருக்கிறது.

இது தமிழ் புனைவுலகம் எப்படி எல்லாம் இருந்தது, பரிணமித்தது என்று தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு மட்டுமே.

தொடர்புடைய சுட்டிகள்:
வடுவூர் துரைசாமி ஐயங்கார்
இந்த நாவலைப் பற்றி நண்பர் திருமலைராஜன்
வித்யாபதி திரைப்படம் பற்றி ராண்டார்கை

ஜே.ஆர். ரங்கராஜு
வை.மு. கோதைநாயகி அம்மாள்

வடுவூரார் பற்றி டோண்டு
தென்றல் இதழில் வடுவூரார் பற்றி (Registration Required)
வடுவூரார் பற்றி தமிழ் ஸ்டுடியோவில்

ஜெயமோகனின் பகடி கதை (திகம்பர சாமியார் மட்டுமல்ல, ஏறக்குறைய எல்லா துப்பறியும் நிபுணர்களும் – கணேஷ்-வசந்த், சங்கர்லால், ஷெர்லாக் ஹோம்ஸ்… – உண்டு)

30 thoughts on “வடுவூர் துரைசாமி ஐயங்காரின் “வித்யாசாகரம்”

 1. ஆனாலும் இது அநியாயங்க. வடுவூரார் போட்டோக்கு பதில் அரியக்குடியாரின் போட்டோவைப் போட்டிருப்பதைச் சொல்கிறேன் ;-(

  ஆனால் ஒரு விஷயம், வடுவூரார் காப்பி அடித்தாரோ கற்பனையில் எழுதினாரோ வெகுஜன வாசகர்களையும் படிக்கத் தூண்டிய மிக முக்கியமான ஆசாமி என்பதை மறுக்க முடியாது. மேலும் 2011ல் இருந்து கொண்டு 1930களை இதே (அனுபவ) கண்ணோட்டத்தோடு அணுகுவதும் சரியான முடிவைத் தராதா? 40 வயது ஆர்வியை விட 80 வயது பெரியவர் யாராவது வடுவூராரைப் பற்றிச் சொன்னால் அதுதான் சரியாக இருக்கும்.

  பிரதிபா ராஜகோபாலன், மகரிஷி, பி.வி.ஆர், அபர்ணா நாயுடு, நளினி சாஸ்திரி, சத்யேஷ்குமார், ரம்யா ராஜேஷ், அழகாபுரி அழகப்பன், எஸ். பாலசுப்ரமணியம், ஜோதிர்லதா கிரிஜா, விமலா ரமணி, உஷா சுப்ரமண்யன் போன்றோர் பற்றிய உங்களது அற்புதமான, அனுபவபூர்வ விமர்சனங்களையும் அறிய ஆவலாக இருக்கிறேன்
  😉

  Like

  1. ரமணன், அட ஆமாங்க, தவறான ஃபோட்டோவைப் போட்டுவிட்டேன். திருத்தியதற்கு நன்றி!

   நீங்க சொல்லி இருக்கும் லிஸ்டில் பாதி பேர் யாருன்னே தெரியலே… 🙂

   Like

 2. //நீங்க சொல்லி இருக்கும் லிஸ்டில் பாதி பேர் யாருன்னே தெரியலே… //

  அடப்பாவமே… ஒண்ணு செய்யட்டுமா.. எங்கிட்ட இருக்கிற பழைய மோனா, மாலைமதி, குங்குமச் சிமிழ், ஊதாப்பூ, மனோரஞ்சிதம், ராணிமுத்து, விழிகள், அப்புறம்….. சரி விடுங்க.. இந்த மாதிரித் தொகுப்புகளை உங்களுக்கு அனுப்பி வைக்கட்டுமா… நல்லா பொழுது போகும். ஜெயமோகனின் வாழ்த்துகளும் கிடைக்கும்.

  யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்… ; – )

  Like

 3. http://tamilonline.com/thendral/Auth.aspx?id=127&cid=2&aid=7193&m=c&template=n

  இதுல கட்டுரையும் கதையும் வந்திருக்குதே! கதை ’மொக்கை’போல இருந்தாலும் கொஞ்சம் சிரிக்குற மாதிரிதான் இருக்கு. நீங்க படிச்சீங்களா? அவருடைய வாரிசுகள் யாரும் எழுத்துலகில் இல்லையா? உங்களுக்கு அதுபற்றித் தெரியுமா? கொஞ்சம் எழுதுங்களேன்.

  அப்புறம் இதே மாதிரி ஆரணி குப்புசாமி, (நல்ல குப்புசாமி அல்ல) மேதாவி, பி.டி.சாமி பத்தியெல்லாம் எழுதணும்னு கேட்டுக்கறேன். இப்போ பரண் மேல ஏறித் தேடினதுல ரெண்டு பி.டி.சாமி நாவல் கிடைச்சுது தலைப்பு என்ன தெரியுமா?

  1) நுழையக் கூடாத அறை (பிரேமா பிரசுரம்)

  2) திறந்து காட்டு தீபா (த்ரில் நாவல்)

  இதுபோன்ற நாவல்கள், கதைகள் பத்தி உங்க அபிப்ப்ராயம் என்னவோ?

  Like

  1. திகில், மர்மம் நிறைந்த பேய் கதைகளை எழுதி, “பேய்க் கதை மன்னன் என்று பெயர் பெற்றவர் பி.டி.சாமி. இவரது சொந்த ஊர் நாகர்கோயில் மறவன் குடியிருப்பு. 18 வயதில் எழுதத் தொடங்கிய அவர் 2,000 நாவல்களும், 500க்கும் மேற்பட்டசிறுகதைகளும் எழுதியுள்ளார். இவரது எழுத்தாற்றலை கெளரவிக்கும் வகையில் தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கி சிறப்பித்தது.

   “ஓட்டல் சொர்க்கம், “புனித அந்தோணியார் போன்ற படங்களுக்கு பி.டி.சாமி திரைக்கதை எழுதியுள்ளார். தனது சொந்த தயாரிப்பாக இவர் இயக்கிய “பாடும் பச்சைக் கிளி என்ற படம் திரைக்கு வரவில்லை.

   Like

 4. சாமியார் புன்னகையுடன் ‘ ‘என் பெயர் திகம்பர சாமியார் . பூர்வாசிரமத்திலே சொக்கலிங்கம் பிள்ளை . மனைவி சிவகாமியுடன் துப்பறியும்பொருட்டிங்கு வந்தேன், துப்பறிவதற்கு தாசிகளைத் தேடி போகிறேன் ‘ என்றார் .

  ‘தாசிகளா எதற்கு ? ‘

  ‘என்ன கேள்வி இது மகனே ? பத்து பக்கத்துக்கு பத்துபக்கம் தாசிகதைகள் இல்லாமல் என்னால் எப்படி துப்பறிய முடியும் ? நீ என் புகழ்பெற்ற கும்பகோணம் வக்கீல் என்ற கேஸைமட்டுமாவது ஒருமுறை படித்துப் பார்க்கவேண்டும்… ‘
  http://www.jeyamohan.in/?p=11588

  Like

 5. பி.டி.சாமி சில வருடங்களுக்கு முன்னால் மூளையில் கான்சர் வந்து இறந்தார். அதுபற்றிய செய்தி கூட நாளிதழில் ஏதும் வரவில்லை. அவரது தொடரை வெளியிட்ட பத்திரிகைகளே கூட அவரை மறந்து போயின. ”வணிக எழுத்தாளர்கள்” என்றும் அடையாளப்படுத்தப்படும் பல எழுத்தாளர்களது வாழ்க்கை இப்படித்தான். இதற்குக் காரணங்கள் என்ன என்பதை ஆராய்ந்தால் பல விஷயங்கள் தெரிய வரும். இலக்கிய எழுத்தாளரோ, வணிக எழுத்தாளரோ வறுமையின் பிடியிலிருந்து தப்பிப் பிழைத்தவர் ஒரு சிலரே! எழுத்தே வாழ்க்கையாகக் கொண்டால் என்ன ஆகும் என்பதற்கு நம் முன் வாழும் எழுத்தாளர்கள் பலரே சான்றாக உள்ளனர்.

  காலம் என்பது கழங்கு போற்சுழன்று
  மேலது கீழாய் கீழது மேலாய் மாறிக் கொண்டே இருக்கிறது. ஒருகாலத்தில் விரும்பப்படும், போற்றப்படும் எழுத்து அடுத்துவரும் காலங்களில் உதாசீனப்படுத்தப்படுகிறது. புறக்கணிகப்படுகிறது. இதில் உயர்ந்தோர் யார், தாழ்ந்தோர் யார்?

  மக்களின் மனத்தில் சிந்தனைகளை விதைத்துச் செல்பவனே, அவர்களது அறிவை, சிந்தனையை மேம்படுத்துபவனே சிறந்த எழுத்தாளனாக, படைப்பாளியாக காலம் கடந்து நிற்கிறான், இல்லையா?

  Like

 6. மிகச்சிறிய வயதில் பள்ளிப்பருவத்தில், நாஞ்சில் பி.டி.சாமியின் திகில் கதைகள் படிப்பதில் தணியாத ஆர்வம். அந்தக்காலத்தில், அந்தப்பருவத்தில் அவை திகில். இப்போது படிக்காமல் இருப்பது நலம். இதையா விரும்பிப்படித்தோம் என்று சுவாரஸ்யம் குறைந்து விடும். புத்தகத்தின் தலைப்புகளும் சுண்டி இழுப்பது போல இருக்கும்.
  ‘பாடிவரும் பேய், பயந்தோடும் பாமா’,
  ‘இரவு முழுவதும் என்னுடன் இருந்தால்’,
  ‘ரத்தம் சொட்டும் கத்தி முனை’
  போன்ற தலைப்புகளில் கதை எழுதி பயமுறுத்துவார். பாக்கெட் நாவல் சைஸில் (பாடப்புத்தகதில் ஒளித்துப்படிக்கத் தோதாக) இருக்கும்.

  ராணி வாரப்பத்திரிகையில் அவர் எழுதியிருந்த ‘சிவப்புச்சேலை’ என்ற தொடர்கதையின் பைண்டு செய்யப்பட்ட வடிவம், லெண்டிங் லைப்ரரியில் படிக்க நேர்ந்தது. சதா கருப்புக்கண்ணாடி அணிந்திருக்கும் வில்லனிடம் கதாநாயகி மயங்குகிறாள். பின்னொருமுறை அவன் கண்ணாடி கீழே விழும்போது, அவனுக்கு ஒரு கண்ணுக்கு பதில் பெரிய குழி மட்டுமே இருப்பதைப்பார்த்து அலறுகிறாள். அந்த வயதில் அதெல்லாம் பெரிய திகிலாகத் தெரிந்தது எனக்கு.

  மாணவப்பருவத்தினர் சுஜாதாவை நேசிக்கத்துவங்கும் முன்னர் இருந்த கிரேஸ் பி.டி.சாமி. காரணம் அப்போது திகில் கதை எழுதுபவர்கள் மிகக்குறைவு. குடும்பக்கதைகள் என்ற பெயரில் வரன் பார்த்தலையும் வரதட்சணைக்கொடுமைகளையும் எழுதிக் குவித்தவர்களே அதிகம் இருந்தனர்.

  Like

 7. ரமணன், நீங்கள் சொன்ன எழுத்தாளர் லிஸ்டில்தான் பாதிப் பேர் தெரியவில்லை என்றால் பத்திரிகைகளிலும் பாதி கேள்விப்பட்டதே இல்லை. ஊதாப்பூவா? மனோரஞ்சிதமா? விழிகளா? எங்க சார் பிடிக்கறீங்க? ஆரணி குப்புசாமி முதலியாரை எப்போதாவது படிக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். பி.டி. சாமி இது வரை லிஸ்டில் இல்லை. ஆனால் “திறந்து காட்டு தீபா” என்ற நாவல் பேரைப் பார்த்தால் படிக்கலாம் என்று தோன்றுகிறது. 🙂 அவர் பற்றிய விவரங்களைத் தந்தற்கு (சாரதாவுக்கும் ஸ்ரீனிவாசுக்கும் கூட) நன்றி!

  டோண்டு, உங்கள் தள சுட்டியை ஸ்ரீநிவாசும் தந்திருக்கிறார். எல்லா சுட்டிகளையும் இப்போது இணைத்துவிட்டேன்.

  Like

 8. // ஊதாப்பூவா? மனோரஞ்சிதமா? விழிகளா? எங்க சார் பிடிக்கறீங்க? //

  அது ஒரு காலம் சார். ஈசல் போல மாதநாவல்கள் வந்து கொண்டிருந்த காலம். எழுத்தாளர்கள் எல்லாம் ஆளாளுக்கு ஒரு பத்திரிகை நடத்திக் கொண்டிருந்தாங்க. ஐமீன் பார்ர்டன்ர் மாதிரி. ஊதாப்பூவை ஆசிரியராக இருந்து நடத்தியது நம்ம புஷ்பா தங்கதுரை. ராஜாராணி நாவலை நடத்தியது ராஜேந்திரகுமார். அனுராதா ரமணன் கூட ஏதோ ஒரு நாவலுக்கு ஆசிரியர் பொறுப்பில் இருந்தாங்க. ராஜேஷ்குமார் இந்த ரிஸ்க் எடுக்கலை. அவருக்கு உதவ பாக்கெட் நாவல்; அசோகன் இருந்தான். சுபா உல்லாச ஊஞ்சல், நாவல் லீடர் இது மாதிரி ஏதோ நடத்திக்கிட்டு இருந்தாங்க. விழிகள் விஜயன் என்பவருடையது என ஞாபகம்.

  இது மட்டுமா இன்னும் இருக்கே… டேபிரேக், டெரர் நாவல், ஹாரர் நாவல், ரம்யா நாவல், நவரத்னம், சுஜாதா, க்ளிக் நாவல், த்ரில் நாவல், சூப்பர் நாவல், எ நாவல் டைம், டெவில் நாவல் .. இப்படியெல்ல்லாம் நிறைய வந்ததுங்க. அப்போதைய எனது கல்லூரி நாட்களில் இவற்றைப் படிப்பதுதான் ஒரே பொழுதுபோக்கு. குப்பை சமாசாரம் என்றாலும் அப்போது பொழுதுபோக்க உதவியது என்பதை மறுக்க முடியாது.

  மொத்த முடியும் கொட்டிப் போக கீழ்கண்டவர்களைப் படிக்குமாறு சிபாரிசு செய்கிறேன்.

  – ஆர்னிகா நாசர், வேலூர் அப்துல்லா, ராகவேந்திர குமார், சதயேஷ்குமார், தேவிபாலா, மேகலா சித்ரவேல்… அப்புறம்….. வேண்டாம் இதுவே போதும்.

  ஒரே ஒரு சந்தேகம்தான் ஜெயமோகன் சார் இதுமாதிரி நூல்களை எல்லாம் படித்திருப்பாரா?

  Like

  1. ஆர்.வி. மற்றும் ரமணன்,

   அப்படி திடீர், திடீரென புற்றீசல்கள் போல துவங்கப்பட்ட பத்திரிகைகளுச் சொந்தக்காரர்கள் அப்பத்திரிகையின் ஆசிரியர்களான எழுத்தாளர்கள் அல்ல. வேறு யாரோ சிலர். அவர்கள் பத்திரிகை துவங்க ஆசைப்பட்ட போதிலும் பத்திரிகைக்கு ஒரு ‘பிராண்ட் நேம்’ வேண்டுமென்பதற்காக, அப்போதிருந்த பிரபல வார, மாத இதழ் எழுத்தாளர்களை அணுகி தங்கள் பத்திரிகையின் ஆசிரியராக இருக்க அழைக்க, அவர்களும் தங்களுக்கு பத்திரிகையாசிரியர் போஸ்ட் கிடைக்கிறதென்ற விருப்பத்திலும், அந்தப்பொறுப்பை ஏற்றனர். ஆனால் அவற்றில் பல அல்பாயுசில் முடிந்தன என்பதுதான் சோகம். ஆசிரியர்களாக எழுத்தாளர்கள் இருந்தால் போதுமா?. நடத்துபவர்களுக்கு திறமை வேண்டாமா?.

   அந்த வகையில் எழுத்தாளர் இந்துமதி கூட ‘அஸ்வினி’ என்ற வார இதழின் ஆசிரியராக இருந்தார். குமுதம், குங்குமம், சாவி போன்ற பத்திரிகைகளின் சைஸில் வந்தது. சில மாதங்கள்தான். அதுவும் நின்றுபோனது. வேதனையான வேடிக்கை என்னவென்றால் ‘அஸ்வினி’ பத்திரிகையை நிறுத்தும் முடிவெடுத்ததே ஆசிரியர்(?) இந்துமதிக்குத் தெரியாதாம். ஒருநாள் காலை தனது பத்திரிகை அலுவலகம் போக கிளம்பியவருக்கு ஓனரிடமிருந்து போன் வந்ததாம். பத்திரிகையை நிறுத்தி விட்டோம், அலுவலகத்துக்கு வரவேண்டாம்’ என்று. (இது செவி வழிச்செய்தி அல்ல, இந்துமதியே ஒரு பேட்டியில் சொன்னது).

   Like

 9. அரு. ராமநாதனைப் பற்றி என் தளத்தில் எழுத வேண்டும். அவர் நடத்திய பத்திரிகை ‘காதல்’. எனது ஆரம்ப காலக் கதைகள் நிறைய இதில் பிரசுரமாகியிருக்கின்றன.
  எல்லோரும் தீபாவளி மலர் வெளியிட்டால், இவர் ‘வசந்த மலர்’ வெளியிடுவார். ஒரு வசந்த மலரில் ஜெகசிற்பியனதும், எனதுமான இரு குறுநாவல்கள் வெளிவந்தன.
  ‘பார்வதி அம்மாள் என் அம்மா’ என்னும் எனது அந்தக் குறுநாவலின் பெயர் தான் நினைவில் இருக்கிறதே தவிர, கத்தரித்து ஃபைலில் வைத்திருந்த அச்சுப்பிரதி எங்கு போனதோ தெரியவில்லை.

  அரு. ராமநாதன் நடத்திய பதிப்பகம் தான் ‘பிரேமா பிரசுரம்’. புத்தகத்தின் பக்க வெளிகளில் ஆரஞ்சு நிறம் மண்டித் தெரிகிற மாதிரியான பைண்டிங்கில் திகில் கதைகளையும், துப்பறியும் கதைகளையும் முதன் முதல் தமிழில் வெளியிட்டவர்கள் இவர்களே. கிட்டத்தட்ட 180 அல்லது 220 பக்கங்கள் கொண்ட, அத்தியாயம் அத்தியாயமாக எழுதப்பட்ட முழுநாவல்கள். விலை:ரூ. 1.50 லிருந்து இரண்டுக்குள் தான் இருக்கும். அந்த வயதில் படிக்க ரொம்பவும் சுவாரஸ்யமாக இருக்கும். சிரஞ்சீவி, மேதாவி, சந்திர மோகன் போன்றவர்களின் நாவல்களை தொடர்ந்து வெளியிட்டு வந்தார்கள். ‘பேய் வீடு’, ‘அபிராம சுந்தரியின் குடும்ப ரகசியம்’ ‘ரெளடி அகல்யா’, ‘ரகசிய பங்களா’– போன்ற சில துப்பறியும்+ திகில் நாவல்கள் நினைவில் நிழலாடுகின்றன. இதில் மேதாவி தான் தம் எழுத்து நடையால் என்னைக் கவர்ந்தவர். அந்தக் காலத்திலிருந்து எழுத்து நடையின் மீது தான் பிரேமை கொண்டிருக்கிறேன் என்பதை இப்பொழுது நினைத்துப் பார்க்கையிலும் விசேஷமாகத் தெரிகிறது.

  Like

  1. கோடம்பாக்கத்தில் மீனாட்சி காலேஜ் எதிரில் இன்னமும் பிரேமா பிரசுரம் இருக்கிறது. அதே பழைய பாணியில் புத்தகங்கள் வருகின்றன. அரு.ராமநாதனின் “வீரபாண்டியன் மனைவி”க்கு ஈடாக எதைச் சொல்ல முடியும். அற்புதமான நடையும், ஓவியங்களும். நான் படித்த பல சரித்திர நாவல்களுள் என் நினைவில் நிற்பதில் அதுவும் ஒன்று. மணிபல்லவம் எல்லாம் பின்னால்தான்.

   Like

 10. அரு.ராமநாதனின் ‘வீரபாண்டியன் மனைவி’ சரித்திர நாவல், எண்பதுகளின் இறுதியில் தேவி வார இதழில் தொடர்கதையாக வந்தது. பின்னர் அதே தேவி வார இதழில் தொடர்கதைகளாக வந்த, எஸ்.பாலசுப்பிரமணியனின் ‘பொன் அந்தி’, மற்றும் ‘சந்திரவதனா’ எனும் சரித்திர நாவல்களும் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றன. (‘பொன் அந்தி’ கதையின் பெரும்பகுதி கமல் அவர்களின் ஆதர்ச படைப்பான ‘மருதநாயகத்தின்’ வரலாற்றை உள்ளடக்கியது என்பார்கள்).

  Like

 11. அரு. ராமநாதன் தனது ‘வீரபாண்டியன் மனைவி’ நாவலை அவரது ‘காதல்’ பத்திரிகையில் தான் தொடர்கதையாக எழுதினார். ‘காதல்’ பத்திரிகை மாதப் பத்திரிகையாதலால், இந்தத் தொடர் நெடுங்காலம் அந்தப் பத்திரிகையில் வெளிவந்தது. 1958-59 வாக்கில் இந்தத் தொடரை அந்தப் பத்திரிகையில் சேலத்தில் பார்த்த நினைவு இருக்கிறது. 59-ல் நான் பள்ளிக்கல்வி இறுதி வகுப்பில் படித்துக் கொண்டிருந்த நினைவில் சொல்கிறேன். ‘தேவி’ அதை மறுபிரசுரம் செய்திருக்கலாம். இவர் எழுதிய சமூக நாவல்களில் ‘நாயனம் செளந்திரவடிவு’ குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய ஒன்று.

  இவர் எழுதிய ‘இராஜராஜ சோழன் கதை தான் பின்னர் டி.கே.எஸ். சகோதரர்களால் நாடக ஆக்கம் பெற்றது. பின்னால் அது வெள்ளித்திரையிலும் தமிழின் முதல் 70 எம்.எம். படமாகக் காட்சி தந்தது. அதே போல், சிவாஜி- பத்மினி நடித்து மிகவும் பேசப்பட்ட ‘தங்கப் பதுமை’க்கு திரைக்கதை வசனம் இவர் தான்.

  Like

  1. சூப்பர் தகவல்கள் ஜீவி. ஆர்வி அரு.ராமநாதன் பற்றி விரிவாக ஒரு பதிவு போடுமாறு கேட்டுக் கொள்கிறேன். உங்களது ரசனையைப் பார்க்கும் போது ”வீரபாண்டியன் மனைவி” உங்களுக்குப் பிடிக்குமென்றே நினைக்கிறேன்.

   // “திறந்து காட்டு தீபா” என்ற நாவல் பேரைப் பார்த்தால் படிக்கலாம் என்று தோன்றுகிறது. //

   சரி சரி. ஆனால் தீபா திறந்து காட்டியது இதயத்தை அல்ல மூளையை. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை மையமாக வைத்து எழுதப்பட்ட நாவல் அது.

   இப்ப படிக்கணும்னு உங்களுக்குத் தோணாது, சரியா? 😉

   Like

 12. புஷ்பா தங்கதுரை, ராஜேந்திரகுமார், அனுராதா ரமணன், ராஜேஷ்குமார், சுபா, விஜயன் – இந்தப் பெயர்களைத் தவிர மற்ற எல்லாமே எனக்குப் புதுசு.. 😦

  Like

 13. சுபத்ரா,

  உங்களுக்கு இவர்களையெல்லாம் தெரிந்திருக்கும்போது, அதே காலகட்டத்தில் கொடிகட்டிப்பறந்த சிவசங்கரி, இந்துமதி, வாசந்தி, சவீதா, கீதா பென்னட், ஸ்டெல்லா புரூஸ் போன்றவர்களையும் கண்டிப்பாக தெரிஞ்சிருக்கணுமே.

  Like

 14. டியர் சாரதா,
  நான் மேற்கூறியவை கூட பழைய புத்தகக் கடைகளிலும் நூலகங்களிலும் நானாகத் தேர்வு செய்து எடுத்து வாசித்தமை தான். நீங்கள் குறிப்பிட்டுள்ளவர்களில் சிவசங்கரி, இந்துமதி, வாசந்து படித்திருக்கிறேன் 🙂 சவீதா, கீதா பென்னட், ஸ்டெல்லா புரூஸ் தெரியவில்லை!
  Thank U for Ur response 🙂

  Like

 15. இவர்களில் ஸ்டெல்லா புரூஸ் மட்டும் பெண் பெயரில் எழுதிய ஆண் எழுத்தாளர். அவர் இயற்பெயர் ராம்மோகன். இவரது ‘அறை நண்பர்’ கதை நினைவில் நிற்கிறது.

  Like

 16. ஜீவி சார்,
  தள்ளாத வயது அப்பாவை வீட்டில் வைத்து பார்த்துக்கொள்ள முடியாமல் மேன்ஷனில் விடும் மகன் – இந்த கதை தானே?
  ஸ்டெல்லாபுரூஸின் “அது ஒரு கனாக்காலம்” ராம்குமார், சுனந்தா…பதின்ம வயதினரிடம் (அப்போ!) மிகப்பிரபலம்…

  Essex சிவா

  Like

 17. ரமணன்/சாரதா, புஷ்பா தங்கதுரை, ராஜேந்திரகுமார் போன்றவர்கள் பேரை நம்பி பத்திரிகை என்பது ஆச்சரியமாக இருக்கிறது. இவ்வளவு பாப்புலராக இருந்தார்களா?

  ஜீவி, அரு.ராமநாதன் பற்றி விரைவில் எழுதுங்கள்!

  எஸ்செக்ஸ் சிவா, ஸ்டெல்லா ப்ரூஸ் பற்றிய பதிவு இங்கே – https://siliconshelf.wordpress.com/2010/09/20/ஸ்டெல்லா-ப்ரூஸ்/

  இன்னும் சில வணிக எழுத்தாளர்கள் பற்றி பதிவுகள் இங்கே:
  அனுராதா ரமணன் – https://siliconshelf.wordpress.com/2010/09/19/அனுராதா-ரமணன்/
  பட்டுக்கோட்டை பிரபாகர் – https://siliconshelf.wordpress.com/2010/09/21/பட்டுக்கோட்டை-பிரபாகர்/
  கண்ணதாசன் – https://siliconshelf.wordpress.com/2011/06/20/கண்ணதாசனின்-புனைவுகள்/
  தாமரைமணாளன் – https://siliconshelf.wordpress.com/2011/06/21/எழுத்தாளர்-தாமரைமணாளன்/
  இந்திரா சவுந்தரராஜன் – https://siliconshelf.wordpress.com/2011/03/27/இந்திரா-சௌந்தரராஜன்/

  Like

 18. வடுவூராரின் மிஸஸ் லைலா மோகினி அல்லது மயன் ஜாலம் இங்கே…

  Click to access TM3481.pdf

  கண் நன்றாகத் தெரிபவர்கள், கழுத்து வலி வராதவர்கள், ரொம்பப் பொறுமைசாலிகள் டவுன்லோட் செய்து படிக்கலாம்.

  Like

 19. ஆர்வமுள்ள வேறு யாருக்காவது உபயோகப் படக் கூடும். மேலும் சுட்டிகள் இதோ…

  மங்கையர் பகட்டு

  Click to access TM3311.pdf

  கும்பகோணம் வக்கீல்

  Click to access TM3316.pdf

  பன்னியூர் படடோப சர்மா

  Click to access TM3271.pdf

  இதை எல்லாம் பக்கம் பக்கமாக ஸ்கேன் செய்து வலையேற்றி வரும் பொள்ளாச்சி நசனின் சேவை மதிக்கத் தகுந்தது.

  அவரைப்பற்றி விரிவாக http://pollachinasan.com-ல் அறியலாம்.

  Like

  1. மேலும் சுட்டிகளுக்கு நன்றி, ரமணன்! கும்பகோணம் வக்கீல் படிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் நீங்கள் கொடுத்த சுட்டியில் ஒரு பாகம்தான் இருப்பது போலத் தெரிகிறது…

   Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.