எனக்கு பிடித்த ஒரு பாரதியார் கவிதை

தேடிச் சோறு நிதந்தின்று – பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பல செயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி – கொடுங்
கூற்றுக்கிரையெனப் பின் மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே -நான்
வீழ்வேனென்று நினைத்தாயோ!

கவிதை என்றால் அலர்ஜி என்று அவ்வப்போது சொல்லிக் அலட்டிக் கொண்டாலும் சில கவிதைகள் மனத்தைக் கவரத்தான் செய்கின்றன. “தேடிச் சோறு நிதந்தின்று பல சின்னஞ்சிறு கதைகள் பேசி மனம் வாடித் துன்பமிக உழன்று” என்ற வரிகளில் அற்ப சிரமங்களை எல்லாம் தாண்டியவன் நான் என்கிறாரே, அந்த dismissive attitude-தான் இதை உச்சத்துக்கு கொண்டு போகிறது.

எனக்கு இது ஒரு inspiring கவிதை. செக்குமாடு மாதிரி வாழ்க்கை ஆகிவிடத்தான் செய்கிறது. இந்தக் கவிதையைப் படிக்கும்போதெல்லாம் அப்படி ஆகிவிட்டோமா என்று சுயபரிசோதனை செய்து கொள்கிறேன்.

இந்த வரிகளின் உணர்ச்சியை வேறு மொழிகளில் – குறிப்பாக ஆங்கிலத்தில் – கொண்டு வரவே முடியாது என்று தோன்றுகிறது. படிப்பவர்களுக்கு நல்ல ஆங்கில மொழிபெயர்ப்பு என்று ஏதாவது பட்டால் சொல்லுங்கள், தமிழ் படிக்கத் தெரியாத என் பெண்களுக்கும் காட்ட வேண்டும்…

அசோகமித்ரனின் “பதினெட்டாவது அட்சக்கோடு”

இந்தப் புத்தகத்தையா பிடிபடவில்லை என்று நொந்துகொண்டேன்? என்னதான் சொல்ல வருகிறார், கதையே இல்லையே என்று குறை சொன்னேன்? நேரடியான கதைதானே!

முதல் முறை படித்தபோது முடிச்சு இருந்தால்தான் நல்ல புனைவு என்ற நினைத்திருந்த காலமாக இருக்க வேண்டும். இந்தக் கதையில் முடிச்சுகள் கிடையாது. எந்தவிதமான சிக்கலான கதைப் பின்னலும் கிடையாது. ஒரு பதின்ம வயதினனின் வழக்கமான பிரச்சினைகள்தான், நாம் எல்லாரும் அனுபவித்த அகவயப் பிரச்சினைகள்தான். நாடு சுதந்திரம் அடைந்த காலம், ஹைதராபாத் நிஜாம் ஆட்சி குழப்பங்கள், அதனால் நிறைய புறவயப் பிரச்சினைகளும் இருக்கின்றன. அந்தப் பிரச்சினைகள் ஒன்றாக இணையும் புள்ளி கதையின் க்ளைமாக்ஸ். அங்கே சந்திரசேகரனின் பதின்ம பருவம், மிஞ்சி இருக்கும் குழந்தைத்தனம் எல்லாம் முடிவடைந்து விடுகிறது. உண்மையைச் சொல்லப் போனால் அப்படி முடிவடைந்துவிட்டது என்று நினைப்பதற்கு எந்த காரணமும் இல்லை, ஆனால் அவன் இனி மேல் படித்து வேலை பார்த்து குடும்பம் நடத்தும் நிலைக்குப் போய்விட்டான் என்று நினைப்பதுதான் பாந்தமாக இருக்கிறது.

ஒரு தேர்ந்த சிற்பி ஒவ்வொரு இஞ்சையும் பார்த்து பார்த்து செதுக்குவது போல செதுக்கி இருக்கிறார். மேல்தட்டு நாசிர் கானோடு கிரிக்கெட் தொடர்பு, தமிழ் பாட்டு பாடுவது, மாட்டை கவனிப்பது, எப்போதும் ரேடாரில் இருந்துகொண்டே இருக்கும் பெண்கள், தமிழ்நாட்டிலிருந்து வந்து இங்கே ரஜாக்கர்களோடு சேர்ந்து வீர சாகசம் புரிய எண்ணும் அப்பாவின் முஸ்லிம் நண்பர் சையது, ரஜாக்கர்கள் கை ஓங்கி இருக்கும்போது திடீரென்று அதிகாரம் செய்ய நினைக்கும் பக்கத்து வீட்டுக்கார காசிம், ஏமாந்தவர்களிடம் வளையல் தரும் காங்கிரஸ்கார பெண்கள் என்று வரிக்கு வரி செதுக்கி இருக்கிறார். பக்கத்துக்கு ஒரு முறையாவது புன்னகை வருகிறது. நகைச்சுவை என்பது உட்ஹவுசின் farcial நகைச்சுவையோ, சுஜாதாவின் நக்கலோ இல்லை. மனிதர்களை கூர்ந்து கவனித்து அவர்களுக்குள் எப்போதும் உள்ள முரண்பாடுகள், அசட்டுத்தனங்களை ஆர்ப்பாட்டம் இல்லாமல் காட்டும் உயர்ந்த நகைச்சுவை. அது பாட்டுப் பாட விரும்பும் கெமிஸ்ட்ரி வாத்தியார் தம்பிமுத்துவாகட்டும், சினிமா பார்க்கும்போதும் ரெயில்வே பாசை காட்டி உள்ளே போகும் அப்பாவாகட்டும், போலீஸ் தடியடி நடக்கப் போகிறது என்ற பயத்தில் இருக்கும்போது மூசி நதியில் தண்ணீர் இல்லை என்று கவனிப்பதிலாகட்டும் மீண்டும் மீண்டும் வெளிப்படுகிறது.

க்ளைமாக்ஸ் ஒரு உச்சக்கட்டம்தான். ஆனால் என்னைப் பொறுத்த வரையில் கதையின் உச்சக்கட்டம் என்பது காந்தி இறந்துவிட்டார் என்று தெரியும்போது சந்திரசேகரன் மனம் கொந்தளிக்கும் தருணம்தான். அது எப்படி என்னவோ ஒரு dry thesis எழுதுவது போல சந்திரசேகரனின் கொந்தளிப்பை விவரிக்கிறார்? இதே கட்டத்தை ஜெயமோகன் போன்றவர்கள் எழுதி இருந்தால் கண் கலங்கி இருக்கும். இவர் எழுதியதில் அடிவயிறு கலங்குகிறது, ஆனால் வார்த்தைகளில் உணர்ச்சி பொங்கவில்லை.

ஜெயமோகன் இந்த நாவல்

பொதுவரலாற்றை ஒரு சரடாகவும் சாமானியர்களின் சாமானிய வாழ்க்கையை ஒரு சரடாகவும் பின்னிக்கொண்டே செல்கிறது. இரண்டுக்கும் பெரிய தொடர்பேதும் இல்லை. சட்டென்று ஒரு கட்டத்தில் சந்திரசேகரன் வரலாற்றில் முட்டிக்கொள்கிறான். அதுவே உச்சகட்டம்.

என்கிறார். அப்படியும் சொல்லலாம்தான். ஆனால் எனக்கு இது coming of age genre நாவல், பதின்ம வயதினனின் அகவயச் சிக்கல்களும் வரலாற்றின் புறவயச் சிக்கல்களும் முட்டிக் கொள்ளும் ஒரு புள்ளி என்பதுதான் இன்னும் சரியாகத் தெரிகிறது.

குறைகள்? எனக்கு மூன்று தெரிகின்றன. ஒன்று அவ்வப்போது ஆங்கிலத்தில் எழுதி தமிழில் மெக்கானிகலாக மொழிபெயர்த்தது போல இருக்கிறது. உதாரணமாக “உங்கள் தோலை நீங்கள் காப்பாற்றிக் கொள்ளுங்கள்” என்று எழுதுகிறார். அவர் மனதில் “Save your skins” என்று ஓடி இருக்க வேண்டும். இரண்டு க்ளைமாக்ஸ். சுருக்கமாக எழுதுவதுதான் அவரது ஸ்டைல் என்றாலும் கொஞ்சம் abrupt ஆக முடித்துவிட்டது போல இருக்கிறது. மூன்றாவது சில சமயம் first person-இல் எழுதுகிறார், சில சமயம் third person-இல். எதற்கு இந்தக் குழப்பம் என்று புரியவில்லை. ஆனால் மூன்றுமே minor grumbles-தான்.

நான் படித்த சிறந்த புத்தகங்களில் ஒன்று. கட்டாயம் படியுங்கள்.

தொடர்புடைய சுட்டிகள்:
பக்சின் பதிவு
ஜெயமோகன் விளக்குகிறார்