பொருளடக்கத்திற்கு தாவுக

அசோகமித்ரனின் “பதினெட்டாவது அட்சக்கோடு”

by மேல் ஜூன் 24, 2011

இந்தப் புத்தகத்தையா பிடிபடவில்லை என்று நொந்துகொண்டேன்? என்னதான் சொல்ல வருகிறார், கதையே இல்லையே என்று குறை சொன்னேன்? நேரடியான கதைதானே!

முதல் முறை படித்தபோது முடிச்சு இருந்தால்தான் நல்ல புனைவு என்ற நினைத்திருந்த காலமாக இருக்க வேண்டும். இந்தக் கதையில் முடிச்சுகள் கிடையாது. எந்தவிதமான சிக்கலான கதைப் பின்னலும் கிடையாது. ஒரு பதின்ம வயதினனின் வழக்கமான பிரச்சினைகள்தான், நாம் எல்லாரும் அனுபவித்த அகவயப் பிரச்சினைகள்தான். நாடு சுதந்திரம் அடைந்த காலம், ஹைதராபாத் நிஜாம் ஆட்சி குழப்பங்கள், அதனால் நிறைய புறவயப் பிரச்சினைகளும் இருக்கின்றன. அந்தப் பிரச்சினைகள் ஒன்றாக இணையும் புள்ளி கதையின் க்ளைமாக்ஸ். அங்கே சந்திரசேகரனின் பதின்ம பருவம், மிஞ்சி இருக்கும் குழந்தைத்தனம் எல்லாம் முடிவடைந்து விடுகிறது. உண்மையைச் சொல்லப் போனால் அப்படி முடிவடைந்துவிட்டது என்று நினைப்பதற்கு எந்த காரணமும் இல்லை, ஆனால் அவன் இனி மேல் படித்து வேலை பார்த்து குடும்பம் நடத்தும் நிலைக்குப் போய்விட்டான் என்று நினைப்பதுதான் பாந்தமாக இருக்கிறது.

ஒரு தேர்ந்த சிற்பி ஒவ்வொரு இஞ்சையும் பார்த்து பார்த்து செதுக்குவது போல செதுக்கி இருக்கிறார். மேல்தட்டு நாசிர் கானோடு கிரிக்கெட் தொடர்பு, தமிழ் பாட்டு பாடுவது, மாட்டை கவனிப்பது, எப்போதும் ரேடாரில் இருந்துகொண்டே இருக்கும் பெண்கள், தமிழ்நாட்டிலிருந்து வந்து இங்கே ரஜாக்கர்களோடு சேர்ந்து வீர சாகசம் புரிய எண்ணும் அப்பாவின் முஸ்லிம் நண்பர் சையது, ரஜாக்கர்கள் கை ஓங்கி இருக்கும்போது திடீரென்று அதிகாரம் செய்ய நினைக்கும் பக்கத்து வீட்டுக்கார காசிம், ஏமாந்தவர்களிடம் வளையல் தரும் காங்கிரஸ்கார பெண்கள் என்று வரிக்கு வரி செதுக்கி இருக்கிறார். பக்கத்துக்கு ஒரு முறையாவது புன்னகை வருகிறது. நகைச்சுவை என்பது உட்ஹவுசின் farcial நகைச்சுவையோ, சுஜாதாவின் நக்கலோ இல்லை. மனிதர்களை கூர்ந்து கவனித்து அவர்களுக்குள் எப்போதும் உள்ள முரண்பாடுகள், அசட்டுத்தனங்களை ஆர்ப்பாட்டம் இல்லாமல் காட்டும் உயர்ந்த நகைச்சுவை. அது பாட்டுப் பாட விரும்பும் கெமிஸ்ட்ரி வாத்தியார் தம்பிமுத்துவாகட்டும், சினிமா பார்க்கும்போதும் ரெயில்வே பாசை காட்டி உள்ளே போகும் அப்பாவாகட்டும், போலீஸ் தடியடி நடக்கப் போகிறது என்ற பயத்தில் இருக்கும்போது மூசி நதியில் தண்ணீர் இல்லை என்று கவனிப்பதிலாகட்டும் மீண்டும் மீண்டும் வெளிப்படுகிறது.

க்ளைமாக்ஸ் ஒரு உச்சக்கட்டம்தான். ஆனால் என்னைப் பொறுத்த வரையில் கதையின் உச்சக்கட்டம் என்பது காந்தி இறந்துவிட்டார் என்று தெரியும்போது சந்திரசேகரன் மனம் கொந்தளிக்கும் தருணம்தான். அது எப்படி என்னவோ ஒரு dry thesis எழுதுவது போல சந்திரசேகரனின் கொந்தளிப்பை விவரிக்கிறார்? இதே கட்டத்தை ஜெயமோகன் போன்றவர்கள் எழுதி இருந்தால் கண் கலங்கி இருக்கும். இவர் எழுதியதில் அடிவயிறு கலங்குகிறது, ஆனால் வார்த்தைகளில் உணர்ச்சி பொங்கவில்லை.

ஜெயமோகன் இந்த நாவல்

பொதுவரலாற்றை ஒரு சரடாகவும் சாமானியர்களின் சாமானிய வாழ்க்கையை ஒரு சரடாகவும் பின்னிக்கொண்டே செல்கிறது. இரண்டுக்கும் பெரிய தொடர்பேதும் இல்லை. சட்டென்று ஒரு கட்டத்தில் சந்திரசேகரன் வரலாற்றில் முட்டிக்கொள்கிறான். அதுவே உச்சகட்டம்.

என்கிறார். அப்படியும் சொல்லலாம்தான். ஆனால் எனக்கு இது coming of age genre நாவல், பதின்ம வயதினனின் அகவயச் சிக்கல்களும் வரலாற்றின் புறவயச் சிக்கல்களும் முட்டிக் கொள்ளும் ஒரு புள்ளி என்பதுதான் இன்னும் சரியாகத் தெரிகிறது.

குறைகள்? எனக்கு மூன்று தெரிகின்றன. ஒன்று அவ்வப்போது ஆங்கிலத்தில் எழுதி தமிழில் மெக்கானிகலாக மொழிபெயர்த்தது போல இருக்கிறது. உதாரணமாக “உங்கள் தோலை நீங்கள் காப்பாற்றிக் கொள்ளுங்கள்” என்று எழுதுகிறார். அவர் மனதில் “Save your skins” என்று ஓடி இருக்க வேண்டும். இரண்டு க்ளைமாக்ஸ். சுருக்கமாக எழுதுவதுதான் அவரது ஸ்டைல் என்றாலும் கொஞ்சம் abrupt ஆக முடித்துவிட்டது போல இருக்கிறது. மூன்றாவது சில சமயம் first person-இல் எழுதுகிறார், சில சமயம் third person-இல். எதற்கு இந்தக் குழப்பம் என்று புரியவில்லை. ஆனால் மூன்றுமே minor grumbles-தான்.

நான் படித்த சிறந்த புத்தகங்களில் ஒன்று. கட்டாயம் படியுங்கள்.

தொடர்புடைய சுட்டிகள்:
பக்சின் பதிவு
ஜெயமோகன் விளக்குகிறார்

13 பின்னூட்டங்கள்
 1. நல்ல பதிவு.

  Like

 2. விமல் permalink

  ஜெயமோகனின் பெயர் தொடாமல் உங்களால் ஒரு புத்தக விமர்சினம் கூட எழுத முடியாது போல இருக்கிறது !?

  ஜெயமோகன் பற்றி விளக்குகிறார் எஸ்.ராமகிருஷ்ணன் விகடன் மேடையில்….
  ____________________________________________________________________________
  கா.காமேஷ், மயிலாடுதுறை

  ஜெயமோஹனிடம் பிடித்தது என்ன ? பிடிக்காதது என்ன ?

  பிடித்தது : நாஞ்சில் வட்டார மொழியை உயுரோட்டமாக கையாளும் லாகவம், மற்றும் அவரது ஆழ்ந்த தத்துவ ஈடுபாடு.

  பிடிக்காதது : தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்கி கொள்வது மற்றும் குரு மனப்பாங்கு ..!

  நன்றி : ஆனந்த விகடன் – 06/07/2011 &
  எஸ்.ராமகிருஷ்ணன் – அருமையான விளக்கம் !!!
  ____________________________________________________________________________

  Like

  • விமல், கடைசி 20 பதிவுகளில் ஒன்றில் – ஒரே ஒரு பதிவில் – ஜெயமோகன் பேர் வருகிறது. அதுவும் நான் ஜெயமோகனை ஒன்று கேட்டு, அவர் விளக்கி, அந்த விளக்கத்தினால் திருப்பிப் படித்த புத்தகம்.
   20 பதிவில் ஒன்றில் ஜெயமோகன் குறிப்பிடப்படுவதர்கா இத்தனை சலிப்பு? உங்கள் உண்மையான பிரச்சினை என்ன சார்?

   Like

 3. ஆர்.வி சார்,
  உங்கள் கதையேதான் எனக்கும். முதல் தடவை படிக்கும் போது அவ்வளவு சிறப்பாகத் தெரியவில்லை.கிரிக்கட் சமாசாரங்கள் கொஞ்சம் போர்கூட அடித்தது.
  இப்போது படிக்கும் போது(அச்சு, அமைப்பு, விலையில் உயர்ந்த காலச்சுவடு வெளியீடு) பக்கத்திறகுப்பக்கம் மெதுவாக சுவைத்துப்படிக்கும்படி இருந்தது.ஞானி
  இதைத்தான் ஏ.ஆர். ரகுமான் இசை போல அனுபவிக்க அனுபவிக்கத்தான் சுவை
  தெரியும் என்று கூறுகிறார்)கிரிக்கட் சமாசாரங்கள் கூட இளஞ்சிறுவனின் பார்வையில் நன்றாக இருந்தது.எ,, ன்ன எளிமை, சந்துருவாகவே மாறிவிடுகிறோம்.
  வா.மணிகண்டனின் முன்னுரையும், ஆதவனின் விமர்சனமும்(பின்னிணைப்பு)
  அருமை.

  Like

 4. prathap permalink

  //முடிச்சு இருந்தால்தான் நல்ல புனைவு என்ற நினைத்திருந்த காலமாக இருக்க வேண்டும்// நான் தற்பொழுது இந்த நிலையில் தான் இருக்கிறேன், எனக்கு முடிச்சுகள், திருப்பங்கள் இருந்தால் தான் அது நல்ல புத்தகமாக தெரிகிறது, தாங்களும் இந்த நிலையில் இருந்துள்ளீர்கள் என்று இந்த பதிவை படித்து உணர்கிறேன் :):):)

  Like

 5. ப்ரதாப், படித்துப் பாருங்கள், நீங்கள் 18ஆம் அட்சக்கோட்டை விரும்பக் கூடும்.

  Like

 6. நான் படித்த அசோகமித்திரனின் முதல் புத்தகம்

  http://rengasubramani.blogspot.in/2012/10/18.html

  Like

Trackbacks & Pingbacks

 1. 5.விஷ்ணுபுரம் – மாய யதார்த்தவாதம் « விஷ்ணுபுரம்
 2. தமிழின் டாப் டென் நாவல்கள் | சிலிகான் ஷெல்ஃப்
 3. 18-வது அட்சக்கோடு பற்றி அசோகமித்ரன் | சிலிகான் ஷெல்ஃப்
 4. க.நா.சு.வின் நாவல் பட்டியல் | சிலிகான் ஷெல்ஃப்
 5. ஜடாயுவின் பரிந்துரைகள் | சிலிகான் ஷெல்ஃப்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: