லூயிஸ் சச்சாரின் “ஹோல்ஸ்”

லூயிஸ் சச்சார் (Louis Sachar) எழுதிய ஹோல்ஸ் (Holes) பெரிய அளவில் வெற்றி பெற்ற சிறுவர் புனைவு. நியூபெர்ரி விருது வென்றிருக்கிறது. இந்த விருதை சிறுவர் புனைவுகளுக்கான ஆஸ்கார் என்று சொல்லலாம். ஷியா லெபஃப், சிகர்னி வீவர் நடித்து திரைப்படமாகவும் வந்தது.

ஸ்டான்லி யெல்நாட்ஸ் IV (ஸ்டான்லி என்ற பேரைத் திருப்பிப் போட்டால் யெல்நாட்ஸ் என்று வரும்) செய்யாத குற்றத்துக்காக ஒரு சிறுவர் “ஜெயிலுக்குப்” போகிறான். ஸ்டான்லியின் குடும்பத்துக்கு ஒரு சாபம் உண்டு. அவர்கள் பரம்பரையை துரதிருஷ்டம் துரத்துகிறது. நிறைய பணத்தோடு கலிஃபோர்னியா நோக்கி வரும் ஸ்டான்லியின் தாத்தாவிடமிருக்கும் அத்தனை பணத்தையும் ஒரு திருட்டுக் கும்பல் பறித்துக் கொள்கிறது. அவர்கள் குடும்பம் எப்போதும் கஷ்டத்தில் இருக்கிறது.

ஸ்டான்லியின் ஜெயில் ஒரு காம்ப். வறண்டு போன ஒரு ஏரியில் இருக்கிறது. அங்கே இருக்கும் எல்லா சிறுவர்களும் தினமும் ஒரு குழியைத் தோண்ட வேண்டும். காம்ப் வார்டன் ஒரு கிஸ்ஸிங் கேட் பார்லோ புதைத்துவிட்டுப் போன பொக்கிஷத்தைத் தேடிக் கொண்டிருக்கிறாள். கேட் பார்லோவுக்கும் வார்டனின் தாத்தாவுக்கும் history உண்டு. பார்லோ ஒரு கறுப்பனை விரும்புவதால் அந்த கறுப்பன் கொல்லப்படுகிறான். அதனால் பார்லோ கொள்ளைக்காரி ஆகிறாள். பார்லோவின் புதையலைத் தேடுவது வார்டனின் தாத்தாவிடமிருந்தே ஆரம்பிக்கிறது. மேலும் பார்லோ இட்ட சாபத்தால்தான் அந்த ஊரில் மழை சுத்தமாக நின்று போய் ஏரியும் வறண்டு விடுகிறது.

வார்டனின் கொடுமைகளை தட்டிக் கேட்க ஆளில்லை. நண்பன் ஜெரோனி தண்ணீர் இல்லாத பாலைவனத்துக்கு ஓடுகிறான். அவனைக் காப்பாற்ற ஸ்டான்லியும் பாலைவனத்துக்குப் போகிறான். சாபங்கள் தீர்ந்தனவா, ஸ்டான்லி விடுதலை அடைந்தானா என்பதுதான் கதை.

சிறுவர்களின் லெவலில் நன்றாக எழுதப்பட்டிருக்கும் கதை. பத்து பனிரண்டு வயது வாக்கில் நிச்சயம் த்ரில்லிங் ஆக இருக்கும். முடிச்சுகளை கொஞ்சம் சாமர்த்தியமாக அவிழ்க்கிறார்.

உங்கள் குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுங்கள் என்று சிபாரிசு செய்கிறேன்.

இதற்கு ஒரு sequel-உம் உண்டு – Small Steps. ஜெயிலில் இருந்த இன்னொரு டீனேஜரான ஆர்ம்பிட் இப்போது ஸ்கூல், வேலை என்று சாதாரண வாழ்க்கை வாழ முயற்சி செய்துகொண்டிருக்கிறான். ஒரு பழைய நண்பனின் வற்புறுத்தலால் ஒரு டீனேஜ் பாப் பாடகியின் concert-க்கு ப்ளாக்கில் டிக்கெட் விற்க முயற்சி செய்கிறான். சில பல நிகழ்ச்சிகளால் அந்த பாடகியை சந்திக்கிறான், இருவருக்கும் நடுவில் ஈர்ப்பு ஏற்படுகிறது. பாடகியின் மாற்றாந்தந்தை (stepfather) அவள் பணத்தை அபகரிக்க முயற்சிகள் செய்துகொண்டிருக்கிறான். என்ன ஆகிறது என்று கதை. படிக்கலாம், ஆனால் பிரமாதம் இல்லை.