Skip to content

சுஜாதாவின் “எதையும் ஒரு முறை”

by மேல் ஜூன் 30, 2011

கணேஷ்-வசந்த்; ஒரு பிணம்; கணேஷுடன் வேலை செய்ய விரும்பும் ஒரு சட்டக் கல்லூரி மாணவி நிருபமா என்று கதை ஆரம்பிக்கிறது. கணேஷ்-வசந்த் அந்தப் பிணத்தை புறம் தள்ளி கோர்ட், கேஸ், வாய்தா என்று போக விரும்பினாலும் நிருபமாவின் பிடிவாதத்தால் இந்தப் பிணத்தைப் பற்றி விசாரிக்கிறார்கள். அவள் ஒரு லோ கிளாஸ் விபசாரி என்று தெரிகிறது. அவள் வீட்டில் பறவைகளைப் பற்றி ஒரு புத்தகத்தை கண்டுபிடிக்கிறார்கள். அந்தப் புத்தகத்தின் சொந்தக்காரனைப் பிடிக்கிறார்கள். அவன் பெரிய பணக்காரன். வாழ்க்கையில் எதையும் ஒரு முறை செய்து பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவன். அவன்தான் கொலை செய்தவன் என்று சந்தேகித்தாலும் எந்த ஆதாரமும் இல்லை. என்ன செய்யப் போகிறார்கள்? “எதையும் ஒரு முறை” செய்து பார்ப்பான் என்று கணேஷ் தன் டீமை சமாதானப்படுத்துவதோடு கதை முடிகிறது.

கதையில் ஒன்றுமே இல்லை. விபசாரி, நீலப்பட references அந்தக் கால வாசகர்களுக்கு கிளுகிளுப்பு ஊட்டி இருக்கலாம். அதற்காக வலிந்து புகுத்தி இருக்கிறாரோ என்று தோன்றுகிறது. கடைசி வரி நல்ல impact உடையதுதான். ஆனால் கதையோடு முழுதாக ஒட்டவில்லை.

இதே போல கரு உள்ள இன்னொரு கதை – பேர் பாலமோ என்னவோ சரியாக நினைவில்லை – எழுதி இருக்கிறார் என்று நினைவு.

தவிர்க்கலாம். கணேஷ்-வசந்த் என்ற பேர் இல்லாவிட்டால் யாரும் இதை திரும்பிக் கூட பார்க்கமாட்டார்கள்.

கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. விலை எழுபது ரூபாய்.

நட்பாஸ் தன் எண்ணங்களை இங்கே பதித்திருக்கிறார்.

Advertisements
37 பின்னூட்டங்கள்
 1. டியர் ஆர்.வி.
  நாவல் நன்றாக இல்லையென்று தெரிந்த பின்னும் அதற்கு அறிமுகப்பதிவு / மதிப்புரை எழுதியுள்ளீர்கள். இதை எப்படி எடுத்துக்கொள்வது?. ‘நான்தான் மாட்டிக்கொண்டேன், நீங்களாவது தவிர்த்துக்கொள்ளுங்கள், சுஜாதா என்ற பெயரைப்பார்த்து விழுந்துவிடாதீர்கள்’ என்று மற்றவர்களை எச்சரிப்பதற்கான பதிவு என்றா?.

  சுஜாதா எழுதிய அத்தனையும் முத்துக்கள் அல்ல. 1982-ல் டெல்லியில் நடந்த ஆசிய விளையாட்டுப்போட்டிகளை மையமாக வைத்து அவர் எழுதிய ‘பத்து செகண்ட் முத்தம்’ என்ற நாவல்கூட சுமார் லெவலுக்கும் படுகீழேதான். ரொம்பவே போர் அடிக்கும். (தலைப்பை மட்டும் ரொம்ப அட்ராக்டிவ்வாக வைத்து விடுவார்).

  Like

 2. natbas permalink

  சார், இது என்ன சார் மரணத்தைவிடக் கொடுமையான தண்டனையாக இருக்கிறது? அவர் எப்போதோ எழுதிய கதைகளை எல்லாம் ஏதோ நேற்றுதான் வெளிவந்த மாதிரி புதுசாக எடுத்துப் படித்துவிட்டு, “கதையில் ஒன்றுமே இல்லை… தவிர்க்கலாம்” என்றெல்லாம் விமரிசனம் செய்கிறீர்கள்!

  சுஜாதாதான் ஆழமே இல்லாமல் பணம் பண்ணுவதற்காக அச்சுபிச்சென்று அங்கிருந்தும் இங்கிருந்தும் காப்பி அடித்து ஒன்றுமில்லாத கதைகளை வார்த்தை ஜாலத்தால் பெரிய இது மாதிரி எழுதி அவரது முட்டாள் வாசகர்களை புனைவுலக பிக்மிக்களாக மாற்றிவிட்டார் என்பது இன்று நிறுவப்பட்டு விட்டதே? இன்று அவருக்கு ஆதரவான குரல்கள் தீனமாக ஒலிக்கின்றன. நாளை அவையம் அடங்கிவிடும் என்பதில் சந்தேகமில்லை.

  போதும் சார், போதும், நீங்கள் இனியும் சுஜாதாவைப் படிக்க வேண்டுமா? அதற்கான முகாந்தரம் என்ன? சில முட்டாள்கள் அவரைப் பெரிய ஒரு மேதை என்று சொல்வது உங்களுக்கு உறுத்தலாக இருக்கக் கூடாது- முட்டாள்கள் எப்போதும் அதிமேதாவிகளைப் போலவே பேசுவார்கள்.

  அவர்களைப் புறந்தள்ளிவிட்டு காலத்தால் அழியாத காவியங்களை எங்களுக்கு அறிமுகப்படுத்துங்கள், ப்ளீஸ்.

  ]

  Like

 3. சாரதா,

  மற்றவர்களை எச்சரிப்பது ஒரு புறம். கணேஷ்-வசந்த் வரும் எல்லா நாவல்களையும் பற்றி எழுத வேண்டும் என்ற ஆர்வம் ஒரு புறம்.

  பத்து செகண்ட் முத்தம் எனக்கு ஓரளவு பிடித்த புத்தகம் – https://siliconshelf.wordpress.com/2010/10/03/சுஜாதாவின்-பத்து-செகண்ட/

  நட்பாஸ்,

  // சார், இது என்ன சார் மரணத்தைவிடக் கொடுமையான தண்டனையாக இருக்கிறது? அவர் எப்போதோ எழுதிய கதைகளை எல்லாம் ஏதோ நேற்றுதான் வெளிவந்த மாதிரி புதுசாக எடுத்துப் படித்துவிட்டு, “கதையில் ஒன்றுமே இல்லை… தவிர்க்கலாம்” என்றெல்லாம் விமரிசனம் செய்கிறீர்கள்! //

  என்ன செய்யலாம், எனக்கு படிக்கும் தருணம்தான் முக்கியம். 2000 வருஷத்துக்கு முற்பட்ட கிரேக்க நாடகங்களைப் பற்றி கூட எழுத வேண்டும் என்று ஒரு எண்ணம் இருக்கிறது.

  // போதும் சார், போதும், நீங்கள் இனியும் சுஜாதாவைப் படிக்க வேண்டுமா? அதற்கான முகாந்தரம் என்ன? சில முட்டாள்கள் அவரைப் பெரிய ஒரு மேதை என்று சொல்வது உங்களுக்கு உறுத்தலாக இருக்கக் கூடாது- முட்டாள்கள் எப்போதும் அதிமேதாவிகளைப் போலவே பேசுவார்கள். //

  பொதுவாக சுஜாதாவைப் பிடித்திருப்பதுதான் காரணம். அவர் முழு வெற்றி பெற்ற இடங்கள் குறைவுதான், ஆனால் அவரது நடை, உரையாடல்கள் எல்லாம் பொதுவாக ரசிக்கக் கூடியவை. தமிழில் எனக்கு மூன்று பேர்தான் மேதை லெவல் (புதுமைப்பித்தன், அசோகமித்திரன், ஜெயமோகன்) – அதற்காக நான் வேறு யாரையும் படிக்கக் கூடாதா? என்னைப் பார்த்தால் என்ன எப்போது அழியாத காவியம் மட்டுமே படிப்பவன் போலவா தெரிகிறது? 🙂 நைலான் கயிறு, 24 ரூபாய் தீவு பற்றிய பதிவுகளில் அவற்றைப் புகழ்ந்து எழுதி இருந்தேனே, நீங்கள் கவனிக்கவில்லையா

  கிரி, கோபம் கீபம் எதுவும் இல்லை. மனதில் படுவதை நேரமையாக எழுத வேண்டும், பம்மக்கூடாது என்று நினைப்பவன் நான் அவ்வளவுதான்.

  Like

  • natbas permalink

   சார், உங்க வாசிப்பில் பெரிய பிரச்சினை ஏதோ ஒன்று இருக்கிறது. அதை இன்னதென்று எனக்கு சொல்லத் தெரியவில்லை.

   ஏதோ ஒரு பிட் பட ரேஞ்சுக்கு இந்த நாவலை விமரிசித்திருக்கிறீர்கள், நியாயமா? இது குறிந்து உங்களுக்குப் பாராட்டக் கிடைத்த ஒரே ஒரு விஷயம், ” கடைசி வரி நல்ல impact உடையதுதான்.” என்ற ஒன்றே.

   ஆனால் பாருங்கள், அதுவும்

   “ஆனால் கதையோடு முழுதாக ஒட்டவில்லை.”

   இது என்ன சார், நியாயம்?

   ==============

   ஒன்று, வாசிப்பின்மீது மரியாதை இருக்க வேண்டும். அல்லது வாசிக்கப்படும் நபர் மீது மரியாதை இருக்க வேண்டும்.

   போஸ்ட் மார்ட்டம் செய்கிற டாக்டர் ஆபரேஷன் தியேட்டருக்குள் நுழைந்த மாதிரி ஒரே ரத்தக் களறியாக இருக்கிறது சார் நீங்க செய்யற வேலை…

   சுஜாதா என்று மட்டுமில்லை, பிடி சாமி ஜோதிர்லதா கிரிஜா எல்லாரையும் இப்படித்தான் அணுகுகிறீர்கள்.

   கதையில் கொஞ்சமாவது ஜீவன் இல்லாவிட்டால் அதை இத்தனை வாசகர்கள் படித்திருப்பார்களா, சொல்லுங்கள். அந்த ஜீவன் என்ன என்று உணர உங்களுக்கு ஆர்வம் இல்லையா?

   அலெக்சாண்டர் போப், “Who breaks a butterfly upon a wheel?”” என்று ஏதோ எழுதியிருப்பார். உங்கள் விமரிசனங்கள் அதை நினைவுறுத்துகின்றன.

   //. மனதில் படுவதை நேரமையாக எழுத வேண்டும், பம்மக்கூடாது என்று நினைப்பவன் நான் அவ்வளவுதான்.// என்ற இந்த கறார்தன்மை பாராட்டப்பட வேண்டியதே. ஆனால் அதற்காக இரக்கமில்லாமல் இருக்க வேண்டுமா என்ன? ஒரு புத்தகத்தை எம்பதி இல்லாமல் நாம் படிக்கிறோமென்றால், நமக்கு அந்தப் புத்தகத்தைப் படிக்கும் தகுதி இல்லை என்றுதான் பொருள்.

   ப்ராங்காக இருப்பதற்கும் ப்ரூட்டலாக இருப்பதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை. ஆனால் ப்ரூட்டலாக இருப்பவர்களை யாரும், “இவன் ஒளிவுமறைவில்லாமல் வெளிப்படையாக இருந்தான்,” என்று பாராட்டுவதில்லை.

   புனைவுகள் பொதுவெளியில் படைக்கப்பட்டு பொதுவெளியில் வாழ்பவை. அவற்றுக்கு உயிர் இருக்கிறது என்று பல்ஸ் பிடித்துப் பார்க்கும் மென்மையுடன் அணுக வேண்டும் சார்- முரட்டுத்தனமாக புரட்டிப் பார்த்து விட்டு இது வேலைக்காகாது என்று வீசி எரிவதற்குப் பெயர் வாசிப்பு இல்லை என்று நினைக்கிறேன்.

   அந்த வேலையைப் படிக்காமலேயே செய்யலாம்.

   Like

   • நட்பாஸ்,

    // இது குறிந்து உங்களுக்குப் பாராட்டக் கிடைத்த ஒரே ஒரு விஷயம், ” கடைசி வரி நல்ல impact உடையதுதான்.” என்ற ஒன்றே.

    ஆனால் பாருங்கள், அதுவும்

    “ஆனால் கதையோடு முழுதாக ஒட்டவில்லை.”

    இது என்ன சார், நியாயம்? // என்ன சார், சினிமா பாக்கறீங்க, இந்த பாட்டு நல்லாருக்கு, ஆனால் கதையோடு ஒட்டவில்லை என்று தோணினதே இல்லையா?

    // சுஜாதா என்று மட்டுமில்லை, பிடி சாமி ஜோதிர்லதா கிரிஜா எல்லாரையும் இப்படித்தான் அணுகுகிறீர்கள். // இன்னும் பிடி சாமி ஜோதிர்லதா கிரிஜாவை அணுகலியே?

    // கதையில் கொஞ்சமாவது ஜீவன் இல்லாவிட்டால் அதை இத்தனை வாசகர்கள் படித்திருப்பார்களா, சொல்லுங்கள். அந்த ஜீவன் என்ன என்று உணர உங்களுக்கு ஆர்வம் இல்லையா? // சார் இது வேலைக்காகாத ஆர்குமென்ட். ரமணி சந்திரன்தான் ரொம்ப பாப்புலர் என்று கேள்வி.

    // // மனதில் படுவதை நேரமையாக எழுத வேண்டும், பம்மக்கூடாது என்று நினைப்பவன் நான் அவ்வளவுதான்.// என்ற இந்த கறார்தன்மை பாராட்டப்பட வேண்டியதே. ஆனால் அதற்காக இரக்கமில்லாமல் இருக்க வேண்டுமா என்ன? ஒரு புத்தகத்தை எம்பதி இல்லாமல் நாம் படிக்கிறோமென்றால், நமக்கு அந்தப் புத்தகத்தைப் படிக்கும் தகுதி இல்லை என்றுதான் பொருள். // ஒரு புத்தகம் தண்டம் என்று தோன்றினால் இரக்கப்பட்டு அப்படி சொல்லக்கூடாது என்கிறீர்களா? எனக்கு அது சரிவராது…

    // உங்க வாசிப்பில் பெரிய பிரச்சினை ஏதோ ஒன்று இருக்கிறது. அதை இன்னதென்று எனக்கு சொல்லத் தெரியவில்லை. // இருக்கலாம். அது என்ன பிரச்சினைன்னு நீங்க இன்னும் சொல்லலேன்னுதான் தோணுது. இன்னும் கொஞ்சம் யோசிச்சு articulate பண்ணினீங்கன்னா தாராளமா பேசலாம்.

    Like

  • @RV
   நான் கோபம் என்று குறிப்பிட்டது நட்பாஸ் அவர்கள் பின்னூட்டத்தை. @ போடலை, க்ஷமிக்கோணும்.

   Like

 4. சுஜாதாவின் சில குறிப்பிடும்படியான எழுத்துகளை அவர் குறுநாவல்களில் சாதித்திருக்கிறார். உ.ம். ‘காகித சங்கிலிகள்’, ‘ஜன்னல் மலர்’ மற்றும் ‘குருபிரசாத்தின் கடைசி தினம்’. ஆரம்பக்கால கதைகளில் பெண்களின் உள்மனதைப் எழுதுகிறேன் பேர்வழி என்று அபத்தமாக போட்டுத்தள்ளியிருப்பார் (இதில் ‘தனிமைகொண்டு’ மற்றும் அதன் நீட்சியான ‘நைலான் கயிறு’-வில் வரும் அந்தப் பெண்ணின் டைரிக் குறிப்பு அடங்காது). அதன்பின், செய்தி வாசிப்பவர் போல கதையை எழுதிவிட்டு வாசகரை நீயே மேற்கொண்டு யோசிச்சிக்கோ என்று ஒதுங்குவதுதான் அவரின் நீண்ட நாள் தாக்குப்பிடித்த இரகசியம்.

  கணேஷ், வசந்த் கதைகள் பெரும்பாலானவை காமிக்ஸ் கதைகளின் அடுத்தக் கட்டங்கள் தான். பெரி மேசன் காலத்தியவை. ஆனாலும் அவர்கள் வரும் கதைகள் வெற்றி அடைந்த காரணம் நம் எல்லோரிலும் கொஞ்சம் கணேஷும் நிறைய வசந்தும் இருப்பதுதான். அதை மிக சுலபமாக அவரால் தொட முடிந்தது. மற்றப்படி வசந்த் அடிக்கும் ஜோக்குகள் எல்லாம் சிரித்து முடித்தப்பின் இதுக்கா சிரிச்சோம் ஸ்டைல்தான். சுஜாதாவின் வெற்றி அவரின் சிறுகதைகளில்(முக்கியமாக ஸ்ரீரங்கக் கதைகள்) மட்டுமே.

  80% சுஜாதாவின் எழுத்துக்கள் தொடர்கதை வடிவத்துக்கும், பாக்கெட் நாவல் நிர்ப்பந்தத்துக்கும் எழுதப்பட்டவை. ஒரு சேர வாசிக்கும் போது நிச்சயம் hollow -வாகத்தான் இருக்கும்.

  >>தமிழில் எனக்கு மூன்று பேர்தான் மேதை லெவல் (புதுமைப்பித்தன், அசோகமித்திரன், ஜெயமோகன்)
  – இந்த மூவருமே நீங்கள் சொல்வதை ஒப்பமாட்டார்கள் (I understand it is your list, but since you said it publicly… :)). ஆதவன், கிரா, பா.சிங்காரம், வண்ணநிலவன், சு.ரா, ஜெயகாந்தன், திஜா காட்டிய உலகங்கள் இன்றும் பேசப்படுகின்றன. நகுலன் நாவல் தொகுப்பு இன்னும் படிக்கவில்லை, அதனால் அவர் என் பட்டியலில் இன்னும் இல்லை. அதுதவிர தற்கால எழுத்தாளார்கள் வரிசை இன்னும் பெரியது.

  மற்றபடி சுஜாதாவின் எழுத்துக்கள் தமிழ் இலக்கியத்தில் எங்கே இருக்கும் என்பது அ.மி. ஒரு பேட்டியில் பொதுவாக சொன்னது போல ‘இன்னும் சில பத்தாண்டுகளில் தெரியும்’.

  Like

 5. சுஜாதாவின் அனைத்துக் கதைகளையும் ஒன்றுவிடாமல், வரிசையாக, ஒரே நேரத்தில், அதாவது அடுத்தடுத்த சில நாள்களில் படித்தவர்கள் சில மகானுபாவர்களாக மட்டுமே இருக்கமுடியும். தேசிகன் செய்திருக்கிறாரா என்று தெரியாது. நான் செய்திருக்கிறேன். கடந்த ஆண்டு. சிலிகான் ஷெல்ஃப் ஆர்.வி இப்போது செய்கிறார் என்று நினைக்கிறேன்.

  ஒரு வாசகனாக சுஜாதா கதைகள் அனைத்தையும் வைத்துக்கொண்டு ஓர் ஆய்வுக்கட்டுரை எழுதவேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் அவருடைய புத்தகங்களை பதிப்பிப்பதால் அப்படிச் செய்வது கொஞ்சம் அசௌகரியமாக இருக்கக்கூடும் (அட் லீஸ்ட் இப்போதைக்கு) என்று சும்மா இருந்துவிட்டேன். என்றாவது ஒருநாள் நடக்கும் என்று மட்டும் இப்போதைக்கு எச்சரிக்கை செய்கிறேன்! (கூகிள் பஸ்ஸ்ஸ்ஸில் இட்டது)

  Like

 6. //இதே போல கரு உள்ள இன்னொரு கதை – பேர் பாலமோ என்னவோ சரியாக நினைவில்லை – எழுதி இருக்கிறார் என்று நினைவு.///

  ஆம். அதன் பெயர் ”மலை மாளிகை” அதில் ஒரு நபரது மனைவி காணாமல் போய் விடுவாள். அது கொலையா, தற்கொலையா அல்லது ஓடிப் போய் விட்டாளா என்பதுதான் மர்மம். அந்த நபர் கணேஷையும் வசந்தையும் செஸ் விளையாடக் கூப்பிட அங்கே கதை தொடங்கும். சுவாரஸ்யமான நாவல்தான். இத்தனை ஆண்டுகளுப் பிறகும் மனதில் நிற்கிறதே.கிழக்கில் இந்தப் புத்தகம் இருக்கக் கூடும்.

  Like

 7. கணேஷ் – வசந்த எல்லாம் வாசக சுவாரஸ்யம் கருதி எழுதப்பட்டவைதான். அதில் அவர் கையாண்டிருக்கும் உரைநடைகளால்தான் அவர் வாசகர் மனதில் இடம் பிடித்தார். கணேஷ் வசந்த் பங்கு கொண்ட ”கொலையுதிர் காலம்” மிக சுவாரஸ்யமானது. மற்றபடி இந்த ஐந்தாவது அத்தியாயம், மீண்டும் ஒரு குற்றம், மேலும் ஒரு குற்றம் எல்லாம் சுமாரனவையே.

  சுஜாதாவின், நகரம், ஸ்ரீரங்கத்து தேவதைகள், (சில) மத்யமர், தூண்டில் கதைகள் போன்ற சிறுகதைகள், எப்போதும் பெண், காகிதச் சங்கிலிகள் போன்ற நாவல்கள், டாக்டர் நரேந்திரனின் வினோத வழக்கு, கணையாழியின் கடைசி பக்கங்கள், கற்றதும் பெற்றதும், 21ம் விளிம்பு போன்ற கட்டுரைகள் இவையே அவரது ஆளுமைத் தன்மையை நிரூபிப்பவை.

  வெ.சா சொல்வது போல அவரால் இன்னும் எவ்வளவோ செய்ய முடிந்திருக்கும். அந்த அளவுக்கு ஆற்றலும், திறமையும், மேதைமையும் உள்ளவர்தான். ஆனால் செய்யவில்லை. காரணம் சமரசமா அல்லது தன் வாசகர்களுக்கு இது போதும் என்ற எண்ணமா அல்லது வணிக நிர்ப்பந்தமா என்பது ஆய்வுக்குரியது

  Like

 8. ராஜ் சந்திரா, உங்கள் கருத்துகளோடு ஏறக்குறைய முழுதாக உடன்படுகிறேன். சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள்.

  பத்ரி, எல்லாக் கதைகளுமா? அப்படி எல்லாம் இல்லை. இன்னும் இரண்டு மூன்றுதான் லிஸ்டில் இருக்கிறது. 🙂

  ரமணன், எனக்கு சுஜாதா எதிலும் முழுதாக ஈடுபடவில்லை என்று தோன்றுகிறது. ஈடுபட்டிருந்தால் கலக்கி இருப்பார் என்றும் நினைக்கிறேன். அப்புறம் மலை மாளிகை வேறு கரு. அதைப் பற்றிய பதிவு இங்கே – https://siliconshelf.wordpress.com/2011/04/27/சுஜாதாவின்-குறுநாவல்-கண/

  Like

 9. தலைப்பைத் தவறாகச் சொல்லி விட்டேனோ? பரணில் ஏறிப் பார்த்து விட்டுப் பின்னர் வருகிறேன். 😦

  Like

 10. EssexSiva permalink

  சுஜாதா எழுதிய காலகட்டம் என்று பார்த்தால் அறுபதுகளில் இருந்து 2007/8 வரை…
  இவ்வளவு நீண்ட காலகட்டத்தில் ஒவ்வொரு மனிதருக்கும் அவர்கள் எண்ணங்கள், வாழ்க்கை மற்றும் பல பல விஷயங்களைப்பற்றிய அபிப்பிராயங்கள்…எத்தனை விதமான மாற்றங்கள் அவருக்குள் இருந்திருக்கும்… நம்மில் நமது அபிப்பிராயங்களில் இன்று எவ்வளவு மாற்றங்கள் (போன வருடமோ, பத்து வருடங்களுக்கு முன்போ இருந்ததை compare செய்யும்போது)
  ஆரம்ப கணையாழி கடைசிப்பக்கங்களில் ஒரு இளைஞருக்குரிய கோபம் இருக்கும் (ஒரு வாக்கியத்தை உடைத்து கவிதையா, என்னைய்யா விளையாடுகிறீர்களா என்பார்!)
  ஆனால் இவ்வளவு வருடங்களில் அவரது நடையில் மாற்றம் நிறைய இருக்காது (நான் கூட நினைப்பேன், என்ன இவர் இரண்டு வருடங்களுக்கு முன்னே எழுதி ப்ரிட்ஜில் வைத்துவிடுவாரோ என்று!)) கடைசிகாலங்களில் மெரினா பீச்சில் சந்தித்த (இவரை விட) முதியவரைப்பற்றி எழுதியது – நடை அதே, அதே!

  எதிலும் அவர் முழுமையாக ஈடுபடவில்லை என்பது விவாதத்திற்கு உரியது. எனக்கென்னவோ அவர் அப்படி ஒன்றிரெண்டில் “முழுமையாக” ஈடுபட்டிருந்தால் உண்டாக்கி இருக்கக்கூடிய தாக்கங்களைவிட இன்று அவர் விளைவித்திருக்கும் தாக்கங்கள் அதிகம்தான் (இது என்னுடைய கருத்துதான்! எல்லாருக்கும் உடன்பாடாக இருக்க வேண்டிய கட்டாயமில்லை!)

  மேலும் அவருக்கு இன்னொரு பக்கமும் இருந்தது; ஒரு வெற்றிகரமான professioanl career.
  இன்று, இணையம் தங்குதடையின்றி எங்கும் கிடைக்ககூடிய சூழ்நிலையில் (மின்சாரத்தைப்பற்றி சொல்ல முடியாது!), தகவல்கள் விரல் நுனியில் கிடைக்கும் காலத்தில் இருக்கிறோம்.
  அவர் காலத்தில் இந்த அளவிற்கு இல்லாத சூழ்நிலையில், அலுவலக, குடும்ப loginகளிலும் இருக்கவேண்டும்; அப்புறம் எழுத்து…
  அலுவலக, குடும்ப தின கவலை/வேலைகளுக்கு மத்தியில் தினமும் பிடித்த தளங்களுக்கு போய் படிப்பதும், கொஞ்சம், கொஞ்சம் புத்தகங்கள் படிப்பதுமே கடினமாக இருக்கிறது (பசங்களுக்கு வாரத்தில் ஒரு மூன்று/நான்கு நாட்களுக்கு மேல் இரவு கதைகள் சொல்லமுடிவதில்லை!)
  இவர் எப்படித்தான் balance செய்தாரோ!

  கவர்ந்த அவரது எழுத்துகளில் “கரையெல்லாம் செண்பகப்பூ” மற்றும் “அப்பா அன்புள்ள அப்பா”வையும் தயக்கம் இல்லாமல் சேர்க்கலாம்.
  கடைசியாக, நான் முன்னரே சிலிக்கான் ஷெல்பில் சொன்ன மாதிரி சச்சின் டக் அடிக்கவில்லையா, பத்து, இருபதுகளில் அவுட் ஆகி சொதப்பவில்லையா என்ன?!

  Essex சிவா

  Like

 11. பத்ரி அவர்களின் பின்னூட்டத்தில் இருக்கும் “என்றாவது ஒருநாள்” என்ற வார்த்தைகள் அதே தலைப்பிலான சுஜாதா எழுதிய கதையை எனக்கு நினைவூட்டுகின்றன. ரொம்பவும் சிம்பிளான எண்பது அல்லது நூறுபக்கத்திற்கு நீளும் சற்றே நீண்ட ஒரு அழகான குறுநாவல்.

  இந்த புத்தகம் பற்றி இணையத்தில் ஏதேனும் பதிவு இருக்கிறதா?

  Like

 12. சிவா, நீங்கள் சொல்வதோடு ஏறக்குறைய முழுதாக உடன்படுகிறேன்.
  ராஜ், “மேலும் ஒரு குற்றம்” என்று புத்தகப் பேரை சொன்னதற்கு நன்றி!
  கிரி, நீங்கள் சொல்லும் புனைவைப் படித்ததில்லை, நீங்கள்தான் எழுதுங்களேன்!

  Like

 13. இந்த வியாதி தமிழர்களை புதிதாய் பிடித்தாட்டுகிறது!
  ஏதாவது ஒரு பழைய புத்தகத்தை எடுத்துக் கொள்வது;
  உடனே தலைமை ஆசிரியராய் மாறி அந்த புத்தகத்திற்கு “மார்க்” போடுவது.
  இது சொள்ளை..அது சொட்டை…என, ஆரம்பித்துவிடுவது.

  2011-ல் உட்கார்ந்துகொண்டு, 1980 ஆரம்பத்தில் எழுதப்பட்ட
  ஒருகதையை, அதுவும் ஒரு வெகுஜனப் பத்திரிக்கையில் எழுதியதை,
  வேலைமெனக்கெட்டு “மார்க்” போட்டுப் பார்ப்பதில் என்ன திருப்தி?

  அவர் ஒன்றும் என்னைவிட பெரியவனில்லை. உன் அலங்காரமெல்லாம்
  என்னிடம் வேகாது என்ற ‘intellectual arragance”-ஆ?

  தமிழன் மெல்ல மெல்ல புத்தகம் படிக்கும் பழக்கத்தினை இழந்துகொண்டிருக்கிறான்.
  அவனை படிக்கவிடாமல் அனைத்து மாத,வார இதழ்களும், தொலைகாட்சிகளும் மழுங்கடித்து கொண்டிருக்கின்றன. இதுபோன்ற சட்டாம்பிள்ளை “விமரிசனங்கள்” தமிழுக்கு எந்த விதத்திலும் உதவாது. இது நமது எழுத்தாளர்களுக்கு எந்த விதத்திலும் நியாயம் செய்வதாய் இல்லை. அதுவும் மறைந்த ஒரு எழுத்தாளரைப் பற்றி! அவர் ஏதும் மறுப்பு எதும் அளிக்க வாய்ப்பில்லை என்ற தைரியமா? அல்லது ஏதோ ஒரு பெரிய மனிதரை விமரிசித்துவிட்டால், நாமும் பெரிய மனிதனாகிவிடலாம் என்ற ஆசையா தெரியவில்லை.

  இது போன்றே விமரிசனம் செய்வதாய் இருந்தால், ‘மௌனி’,’கல்கி’,’ புதுமைப்பித்தன்’
  ‘ஜெயகாந்தன்’ உட்பட எவரும் உங்கள்து பார்வையில் ‘தேற’ மாட்டார்கள்.

  உங்களால் முடிந்தால், தமிழில் எவ்வள்வோ நல்ல புத்தகங்கள் இருக்கின்றன. அவைகளை அடையாளம் காட்டுங்கள். அனலைஸ் செய்து, பிற இலக்கியங்களுக்கு, நமது தமிழ் இலக்கியங்கள் ஒன்றும் குறைவில்லை எனச் சொல்லுங்கள். புத்தகம் படிப்பதை ஊக்குவிப்பதற்கு ஏதேனும் செய்வதைவிட்டு…..ஏன் இப்படி? இள இரத்தங்கள் உங்களது விமரிசனத்தைப் படித்தால், “ஓஹோ.. தமிழில் எல்லாமே குப்பை போலும்” என் நினத்துக் கொள்ளப் போகிறார்கள்.

  ‘ஹிட் ரேட்’ வேண்டுமெனில் அதற்கு நிறைய பாஸிட்டிவான வழிகள் உள்ளன.

  கோபப்படாமல் படித்தால் எனது ஆதங்கம் புரியும்.
  அன்புடன்,
  பலராமன்.

  Like

  • அன்புள்ள பலராமன்,

   // கோபப்படாமல் படித்தால் எனது ஆதங்கம் புரியும். // கோபப்பட எதுவுமில்லை. ஆதங்கம் இருப்பது புரிகிறது, ஆனால் என்ன ஆதங்கம் என்றுதான் பிடிபடவே மாட்டேன் என்கிறது.

   உங்கள் மறுமொழியைப் பார்த்தால் எதையும் பிடிக்கவில்லை என்று சொல்லக்கூடாது என்றுதான் பொருள் வருகிறது. அதை அப்படியே நீட்டித்தால் ரமணி சந்திரன், ராஜேஷ் குமார், விஜயகாந்தின் டிபிகல் சினிமா, எல்லாம் எவ்வளவு தண்டமாக இருந்தாலும் விமர்சனம் எழுதக் கூடாது என்று வரும். நட்பாசும் இப்படித்தான் ஏதோ சொல்கிறார். இது எனக்கு இசைவானதல்ல. உங்கள் வார்த்தைகளைத் தாண்டி பொருள் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன், ஆனால் என்ன சொல்ல வருகிறீர்கள், உங்கள் உண்மையான வாதம், பிரச்சினை என்ன என்று புரியவே இல்லை. இப்போதைக்கு உங்கள் வார்த்தைகளுக்கு மட்டும்தான் பதில் சொல்லக் கூடிய நிலை.

   // 1980 ஆரம்பத்தில் எழுதப்பட்ட ஒரு கதையை, அதுவும் ஒரு வெகுஜனப் பத்திரிக்கையில் எழுதியதை …// 1980 ஆரம்பத்தில் எழுதப்பட்டது, விகடனில் எழுதப்பட்டது என்பதெல்லாம் ஒரு விஷயமா? நேற்றைக்கு, போன வாரம், போன மாதம், போன வருஷம் எழுதப்பட்டவற்றை மட்டும்தான் விமரிசிக்க வேண்டுமா என்ன? இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட கிரேக்க நாடகங்களைப் பற்றிக் கூட எழுத வேண்டும் என்று எண்ணம் இருக்கிறது!

   // அவர் ஒன்றும் என்னைவிட பெரியவனில்லை. உன் அலங்காரமெல்லாம் என்னிடம் வேகாது என்ற ‘intellectual arragance”-ஆ? // ஒருவர் எழுத்தை விமர்சிப்பதற்கும் அவரை விமர்சிப்பதற்கும் வித்தியாசம் இல்லையா? நீங்கள் கூடத்தான் என் எழுத்தை விமர்சிக்கிறீர்கள். அதுவும் என் அலங்காரம் எல்லாம் உங்களிடம் வேகாது என்ற arrogance-தானா?

   // தமிழன் மெல்ல மெல்ல புத்தகம் படிக்கும் பழக்கத்தினை இழந்துகொண்டிருக்கிறான். அவனை படிக்கவிடாமல் அனைத்து மாத,வார இதழ்களும், தொலைகாட்சிகளும் மழுங்கடித்து கொண்டிருக்கின்றன. இதுபோன்ற சட்டாம்பிள்ளை “விமரிசனங்கள்” தமிழுக்கு எந்த விதத்திலும் உதவாது. // என் விமர்சனத்தை வைத்து தமிழனின் படிக்கும் பழக்கம் மாறும் என்று நீங்கள் சொல்வது… ரொம்பப் புகழாதீங்க சார்! சரி சுஜாதா அவர் இளைஞராக இருந்தபோது – பேரும் புகழும் அடையாதபோது – எத்தனையோ எழுத்தாளர்களை, சினிமாக்காரர்களை கடுமையாக விமர்சித்திருக்கிறார் என்று அறிவீர்களா? அவருக்கும் இதே அட்வைஸ் கொடுத்திருப்பீர்களா?

   // அதுவும் மறைந்த ஒரு எழுத்தாளரைப் பற்றி! அவர் ஏதும் மறுப்பு எதும் அளிக்க வாய்ப்பில்லை என்ற தைரியமா? // சுஜாதா உயிரோடு இருந்திருந்தாலும் எனக்கு மறுப்பு அளித்து எழுதுவார் என்று நான் நினைக்கவில்லை. என்னை ரொம்பவுமே அதிகமாக மதிப்பிடுகிறீர்கள். 🙂

   // இது போன்றே விமரிசனம் செய்வதாய் இருந்தால், ‘மௌனி’,’கல்கி’,’ புதுமைப்பித்தன்’ ‘ஜெயகாந்தன்’ உட்பட எவரும் உங்கள்து பார்வையில் ‘தேற’ மாட்டார்கள். // ஒருவர் எழுத்து எனக்கு தேறுகிறதா இல்லையா என்பது அவர் எழுத்தைப் பொறுத்தது. அவருக்கு இருக்கும் போரையும் புகழையும் பொறுத்தது இல்லை. மௌனி எனக்கு இது வரை புரிந்ததில்லை. பொ. செல்வனைத் தவிர மற்ற கல்கி எழுத்துகளை நான் இரண்டாம் தரமாகவே கருதுகிறேன். புதுமைப்பித்தன் தமிழின் மூன்று ஜீனியஸ் எழுத்தாளர்களில் ஒருவர். முடிந்தால் முந்தைய பதிவுகளையும் படித்துப் பாருங்கள்.

   மீண்டும் சொல்கிறேன், நட்பாஸ் மற்றும் உங்களுக்கு ஏதோ ஆதங்கம் இருப்பது தெளிவு. நான் எல்லாப் புத்தகங்களையும் ஆஹா ஓஹோ பேஷ் பேஷ் என்று போலித்தனமாக பாராட்ட வேண்டும் என்று நினைக்கமாட்டீர்கள். After all , நீங்கள் இந்தப் பதிவை அப்படி போலித்தனமாக பாராட்டவில்லை என்பதே அதற்கான சான்று. பிறகு என்ன ஆதங்கம் என்றுதான் என் சிற்றறிவுக்குப் பிடிபடவில்லை.

   Like

 14. சிம்பிள். ரமணி சந்திரன், ராஜேஷ்குமார் கதைகள் எல்லாம் வேலைக்கு ஆகாது அல்லது அவை அவ்வளவு பிரமாதமானதில்லை என்பது சிலர் கருத்தாக இருக்கலாம். ஆனால் அவற்றையும் விரும்பி வாசிப்பவர்களுக்கு அவர்கள் கதைகள் தான் புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், அமி மாதிரி.

  நீங்கள் மௌனி புரியவில்லை என்பது போல் அவர்கள் அமி புரியவில்லை, ஜெ பிடிக்கவில்லை, புதுமைப்பித்தன் குழப்பமாக உள்ளது என்று கூறலாம்.

  பிரச்னை ரசனையில் இருக்கிறதா அல்லது உள்வாங்கிக் கொள்வதில் இருக்கிறதா என்பதுதான்.

  இலக்கியவாதிகளுக்கு, க.நா.சு, வெ.சா போன்றவர்களுக்கு இந்தக் கதைகள் எல்லாம் மூன்றாம் பட்சமே.

  என்னைப் பொறுத்தவரை இவற்றை வணிக எழுத்துக்கள் என்று புறந்தள்ள வேண்டியதில்லை. இவற்றை ஒரு ஆரம்பமாக ஸ்டார்ட் – அப்பாக வைத்துக் கொள்ளலாம். ஆனால் அவற்றிலேயே தேங்கி நின்று விடுவதுதான் பலரது செயல்பாடாக உள்ளது. இதற்குக் காரணம் ஆர்வமின்மை என்பது ஒருபுறமிருக்க சூழல்கள், ஏற்புத் திறனின்மை என்பதையும் கூற வேண்டும்.அதற்காக அவர்கள் எல்லாம் முட்டாள்கள் என்றோ, கடந்து வந்தவர்கள் எல்லாம் புத்திசாலிகள் என்பதோ பொருளல்ல.

  ராஜேஷ்குமார், சுபாவில் ஆரம்பித்தவர்களில் பலர் இன்று தேர்ந்த வாசகர்களாக உள்ளனர். இன்றைக்கு அதே எழுத்தைப் படிக்கும் போது அதில் ‘ஒன்றுமில்லை’ அல்லது ’வெகு சுமார்’ என்று தோன்றுகிறது. அதற்கு விரிவடைந்த அவர்களது அறிவார்ந்த சிந்தனை காரணமாக இருக்கலாம். அல்லது படைப்பு பற்றிய புரிதல் காரணமாக இருக்கலாம். அதற்காக ராஜேஷ்குமார், சுபாவைப் புறக்கணித்தால் அப்புறம் எப்படி மேலே வர முடியும்? ’மௌனி’ புரியவில்லை மாதிரி பின்னால் எதுவுமே புரியவில்லை என்று ஆகி விடாதா?

  அது வணிக எழுத்தோ தீவிர எழுத்தோ எழுத்தாளர்களின் உழைப்பு மதிக்கப்பட வேண்டும். ஒரு வாசகனாக சிலது பிடிக்காமல் இருக்கக் கூடும், ஆனால் மற்றவர்களுக்கு அது பிடிக்கக் கூடும் என்பதால் கண்ணியமாக அதைச் சொல்ல வேண்டியது அவசியமாகிறது. வாசகனுக்கும் விமர்சகனுக்கும் வேறுபாடு உள்ளதல்லவா?

  சமீபத்தில் தென்றலில் ஒரு நேர்காணல் படித்தேன். (இந்திரா சௌந்தர்ராஜன்) அவர் தான் எழுத்தாளராகவே பா. செயப்பிரகாசம்தான் காரணம் என்கிறார். தனக்குப் பிடித்த எழுத்தாளர் லா.ச.ரா. என்கிறார். ஆனால் இ.சௌ. ஒரு வணிக எழுத்தாளர். சொல்லப் போனால் இ.பாவை விட இ.சௌ. பிரபலம். தன்னுடைய படைப்பிற்கு அவர் நேர்மையாக இருக்கிறாரா என்பதைத் தான் நாம் இதில் பார்க்க முடியுமே தவிர, உயர்வு தாழ்வையல்ல

  சிலபேரால் விரும்பப்படுவது மட்டுமே உயர்வானது. பல பேரால் ரசிக்கப்படுவது மூன்றாம் தரமானது என்ற ஒப்பீடும், எண்ணமும், கருத்தும் தவறானதே!

  விருப்பம் ரசனை, சிந்தனை, அறிவு, சூழல் என பலவற்றைச் சார்ந்து அமைவதால் தான் இத்தனை வேறுபாடுகள். அதனை நாம் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும்.

  இந்திரா சௌந்தர்ராஜன் நேர்காணலிலிருந்து சில வரிகள்… (திரு. பலராமனின் கேள்விகளோடு ஒத்திருப்பதால் இதனை இங்கே தட்டச்சிப் போடுகிறேன்)

  கே: வெகுஜன நாவல்கள் இலக்கியம் கிடையாது என்ற கருத்து குறித்து.

  ப: இது ஒரு ஜனநாயக நாடு. யாருக்கும் கருத்துக் கூற உரிமையுண்டு. என்னைக் கேட்டால், வெகுஜன நாவல் எழுதி வெற்றி பெற முடியாதவர்கள், வெகுஜன அங்கீகாரம் பெற முடியாமல் தோற்றுப் போனவர்கள் இப்படிச் சொல்கிறார்கள் என்பேன்.

  (இது எப்படி இருக்கு?)

  கே: உங்களைக் கவர்ந்த எழுத்தாளர்கள் யார், யார்?

  ப: எல்லா எழுத்தாளர்களையுமே நான் மிகவும் மதிக்கிறேன். இதைவெறும் முகஸ்துதிக்காகவோ, பெருந்தன்மைக்காகவோ சொல்லவில்லை. உண்மையாகவே சொல்கிறேன். ஏன் என்றால் ஒரு பத்திரிகையில் ஒரு படைப்பு வருகிறது என்றால் அதற்கான தகுதி இருந்தால்தான் முடியும். ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு விதத் திறமை இருக்கிறது. அது படைப்புகளில் வெளிப்படுகிறது. இதில் சிறந்தது, சிறப்பில்லாதது என்று எதுவும் இல்லை. நமக்குப் பிடித்தது, பிடிக்காதது என்று வேண்டுமானால் இருக்கலாமே தவிர, உயர்ந்தது, தாழ்ந்தது எல்லாம் எழுத்தில் இல்லை. நமக்குப் பிடிக்கவில்லை என்றால் பிடிக்கவில்லை என்று சொல்லலாமே தவிர நன்றாக இல்லை என்று சொல்லக் கூடாது. ஆனால் அதுதான் இப்போது எழுத்துலகில் நடக்கிறது. அது நமக்குப் பிடிக்காமல் இருக்கலாம். ஆனால், வேறு யாருக்காவது பிடித்திருக்கக் கூடும் அல்லவா? என்னை மிகவும் பாதித்த எழுத்தாளர் என்றால் அது லா.ச. ராமாமிர்தம் அவர்கள்தான்.

  (உண்மையாகவே உண்மையான பதில்)

  http://tamilonline.com/thendral/Auth.aspx?id=124&cid=4&aid=7004&m=m&template=n

  சரிங்க. நன்றி வணக்கம்.

  Like

 15. அன்புள்ள ரமணன், ராஜேஷ்குமாரோ சுஜாதாவோ டால்ஸ்டாயோ பிடித்திருப்பதோ பிடிக்காமல் இருப்பதோ பிரச்சினை இல்லை. நான் “எதையும் ஒரு முறை” நாவல் சரியில்லை என்று நிராகரித்தால் இன்னின்ன காரணங்களால் உன்னை மறுக்கிறேன், இது நல்ல நாவலே என்று வாதிப்பது வரவேற்க வேண்டியது. ஆனால் நட்பாஸ், மற்றும் பலராமன் முப்பது வருஷத்துக்கு முன்னால் எழுதியதை, விகடனில் எழுதியதை இன்று ஏன் விமர்சிக்கிறாய், அவ்வளவு பெரிய, பாப்புலர் எழுத்தாளரை விமர்சிக்கும் அளவுக்கு நீ பெரியவனா, உனக்கு அவ்வளவு திமிரா, நீ இப்படி எழுதினால் படிக்கும் பழக்கம் ஒழிந்துவிடும் என்று வாதிடுகிறார்கள். என்னால் இந்த வாதங்களை சீரியஸாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. அவர்களுக்கு நான் எழுதியதில் பிரச்சினை இருக்கிறது என்று தெரிகிறது, ஆனால் அவர்களாலும் இன்னும் articulate செய்யமுடியவில்லை, என்னாலும் அவர்களுடைய உண்மையான பிரச்சினை என்ன என்றுதான் தெரியவில்லை.

  Like

 16. //அவ்வளவு பெரிய, பாப்புலர் எழுத்தாளரை விமர்சிக்கும் அளவுக்கு நீ பெரியவனா, உனக்கு அவ்வளவு திமிரா, நீ இப்படி எழுதினால் படிக்கும் பழக்கம் ஒழிந்துவிடும் என்று வாதிடுகிறார்கள்//

  இதற்கு என்ன பதில் சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. விமர்சனத்திற்கு பாரதியிலிருந்து யாருமே விதி விலக்கு இல்லையே? நல்ல விமர்சனம் ஒரு நல்ல படைப்பை மேலும் மெருகேற்றத்தானே செய்யும்? விமர்சிக்கவே கூடாது என்பது சரியல்ல. ஆனால்…. இது போன்றவர்களை விமர்சிப்பதற்கு அல்லது விமர்சனம் செய்பவருக்கு ஒரு அடிப்படைத் தகுதி இருக்க வேண்டும், அது உங்களுக்கு இல்லை என்று நினைக்கிறார்களோ என்னவோ?

  என்னால் உங்களை அப்படிச் சொல்ல முடியவில்லை. ஆனால் ஒன்றை உங்களிடம் கவனித்தேன், ஒரு எழுத்தாளரின் ஒரு சில நூல்களை மட்டுமே படித்து விட்டு, அவர் படைப்புகள் அனைத்துமே இப்படித்தான் இருக்கும் என்று நிர்தாட்சண்யமாக ஒதுக்குவது. அது சரியல்ல. அது பற்றி முன்பு பின்னூட்டமும் இட்டிருந்தேன். அதற்காக ஒரு எழுத்தாளர் 100 புத்தகங்கள் எழுதியிருந்தால் 100ஐயும் படிக்க முடியுமா என்று நீங்கள் கேட்கலாம். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்றும் கூறலாம். உங்களுடைய கண்ணிற்கு ஒரு எழுத்தாளர் எழுதிய திராபையான புத்தகங்கள் மட்டுமே கிடைத்து, நீங்கள் அதைப் படித்து ’ முழுக்க முழுக்க அவர் எழுத்து அப்படித்தான்’ என்ற முடிவிற்கு வந்திருக்கக் கூடுமல்லவா? (விதி விலக்கு – ரமணி சந்திரன் etc…..) உதாரணமாக நீங்கள் இ.சௌவை விலக்கியிருக்கிறீர்கள். அவர் எழுதிய கிருஷ்ணாதாசி, ரங்கநதி இரண்டுமே சிறந்தவை. நீங்கள் அவற்றைப் படிக்கும் வாய்ப்பு இல்லாததால் இசௌ. இப்படித்தான் என்று கருதி விலக்கியிருக்கக் கூடும்.

  வணிக எழுத்தோ, தீவிர எழுத்தோ எந்த ஒரு படைப்பாளியுமே எப்போதுமே மிகச் சிறந்த நூல்களைத் தர முடியுமா என்ன? என்ன ஒன்று இலக்கியத்தில் நல்ல படைப்புகளை நாம் தேர்ந்தெடுக்க முடியும். வணிக எழுத்தில் பொறுக்கி… மன்னிக்கவும் தேடி அலைந்துதான் நல்ல எழுத்தை அடையாளம் காண முடியும். குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றில் மிகை நாடி மிக்கக் கொளல் வேண்டும்.

  சுஜாதா எதையுமே முழுமையாக சரிவரச் செய்யவில்லை என்கிறீர்கள். அது அப்படியல்ல. அவர் ’என் வாசகர்களுக்கு இதுபோதும்’ என்று விட்டதினால் தான் செய்யவில்லை. அதற்காக அவர் ஆற்றல் குறைந்தவரல்ல. அவர் நினைத்திருந்தால் செய்திருக்க முடியும். சில அவ்வாறு முயன்றவர்தான். ஆனால் செய்யவில்லை. காரணம் வணிக நிர்ப்பந்தம் என்பதை விட ’போதும்’ என்ற மனநிலையே என்றுதான் நான் கருதுகிறேன்.ஏனென்றால் அவர் எதை எழுதினாலும் வெளியிடத் தயாராக பத்திரிகைகள் இருந்தன. இருந்தும் ஏன் செய்யவில்லை என்றால் இந்த மனப்பான்மைதான் காரணம். திறமைக்குறைவு காரணமல்ல. மேலும் இதெல்லாம்ம் சரியா, தவறா என்று நாம் தீர்ப்பு சொல்ல முடியாது. அது அவரவரது விருப்பம் சார்ந்தது?

  ஆனால் ஒன்று. ஒரு வாசகனுக்கு எது தேவையோ அதைக் கொடுப்பவன் இலக்கியவாதியா அல்லது எதைக் கொடுத்தால் வாசகரை மேலும் சிந்திக்கத் தூண்ட முடியும் என்று நினைத்து எழுதுபவன் இலக்கியவாதியா என்பது முக்கியமானது. சுஜாதா இரண்டையுமே செய்தவர். அதனால் அவரை நிராகரிக்க இயலாது என்பதே என் கருத்து. அது அல்லாமல் இவர் இப்படித்தான் என மதிப்பீடு செய்வதும் தவறானது.

  இதற்காக நான் வணிக எழுத்துக்கு வக்காலத்து வாங்குபவன் என நினைக்க வேண்டாம். அந்தப் புள்ளியில் இருந்துதான் ஆரம்பிக்க வேண்டியிருக்கிறது என்பதால் அதை முற்றிலும் தவிர்க்க வேண்டியதில்லை என்றே சொல்கிறேன்.

  நன்றி

  Like

 17. ஜெமோ-வை quote செய்தால் நாம் எதையுமே கறுப்பு/வெள்ளை என்று இரண்டு தரத்திற்க்குள் அடங்(க்) கி விடுகிறோம்.இடைப்பட்ட தரவரிசையை நாம் பெரும்பாலும் நினைப்பதில்லை. சுஜாதா இறந்துவிட்டார் என்பதற்காகவெல்லாம் அவரின் எழுத்துக்களை விமர்சனம் செய்யாமல் இருக்க முடியாது. அவரே அதை விரும்ப மாட்டார். அப்படி பார்த்தால் பல இறந்த எழுத்தாளர்களின் works நமக்குத் தெரிய வாய்ப்பில்லை (பி.டி.சாமி உட்பட).

  சுஜாதா அதிகமாக விமர்சிக்கப்படக் காரணம் அவர் ஒரு confused இலக்கியவாதி. சீரியஸ் எழுத்துக்கும், வணிக எழுத்துக்கும் இடையில் அல்லாடியவர். இறுதிவரை தன்னால் வணிக சமரசங்களில் இலக்கியம் படைக்கமுடியும் என்று நம்பியவர் (இலக்கியம் வரையறை என்ன என்று கேட்பவர்களுக்கு ஜெமோ-வின் ‘ஆழ்நதியைத் தேடி’ புத்தகத்தில் முதல் கட்டுரையைப் படிக்க வேண்டுகிறேன்). கொஞசம் வெற்றியும் பெற்றவர். அவரின் quote-களில் அதிகமாக அவர் எழுதிய சிறுகதைகளைக் காண முடியும்.

  இலக்கிய ஏணியில் சுஜாதாவைத் தாண்டி பல எழுத்தாளர்கள் சாதித்திருக்கிறார்கள். அவர்களை அடைய நிச்சயம் சுஜாதாவை அடைய வேண்டும். அது அவரின் வெற்றி. ஆனால் அவர் மட்டுமே இறுதி இலக்கு அல்ல… For that matter, எந்த எழுத்தாளரும். அதைத்தான் ஒரு எழுத்தாளனின் எழுத்துக்களைப் பற்றிய விமர்சனம் செய்யவேண்டும்.

  Like

 18. அன்புள்ள ரமணன்,

  // விமர்சனத்திற்கு பாரதியிலிருந்து யாருமே விதி விலக்கு இல்லையே? // நட்பாஸ் ஒரு நாளும் அப்படி நினைக்கமாட்டார். பலராமனும் அப்படி நினைக்கிறார் என்று நான் எண்ணவில்லை. அவர்கள் மனதில் இருப்பது வார்த்தைகளில் சரியாக வரவில்லை, என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை, அவ்வளவுதான்.

  // ஆனால்…. இது போன்றவர்களை விமர்சிப்பதற்கு அல்லது விமர்சனம் செய்பவருக்கு ஒரு அடிப்படைத் தகுதி இருக்க வேண்டும்… // என்னைப் பொறுத்த வரையில் புத்தகத்தைப் படிப்பதுதான் அந்த அடிப்படைத் தகுதி, அதற்கு மேல் எதுவும் தேவையில்லை.

  // ஒரு எழுத்தாளரின் ஒரு சில நூல்களை மட்டுமே படித்து விட்டு, அவர் படைப்புகள் அனைத்துமே இப்படித்தான் இருக்கும்… // எப்போதாவது சில நல்ல புத்தகங்கள் விட்டுப் போகலாம். ஆனால் probabability குறைவு. ஆனால் இ. ஸௌ. வை நிராகரிக்கும் முன் கூட பதினோரு “மாத நாவல்” சைஸ் புனைவுகள் படித்தேன். அதற்கு மேல் தெம்பில்லை.

  // வணிக எழுத்தோ, தீவிர எழுத்தோ எந்த ஒரு படைப்பாளியுமே எப்போதுமே மிகச் சிறந்த நூல்களைத் தர முடியுமா என்ன? // சரியே. ஆனால் இது சிறந்த நூல் இல்லை, அது தண்டம் என்று சுட்டிக் காட்டுவது ஏன் பிரச்சினையாகிறது என்று புரியவில்லை. ஆனால் இது சிறந்த நூல் என்று சொன்னால் யாருக்கும் கோபம் வருவதில்லை. 🙂

  // அவர் ’என் வாசகர்களுக்கு இதுபோதும்’ என்று விட்டதினால் தான் செய்யவில்லை…// அது அவர் விருப்பம் என்று நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் எழுத்துத்தான் எப்போதும் விமர்சிக்கப்படுகிறது, எழுத்தாளர் இல்லையே? நூல் தண்டம் என்றால் எழுத்தாளரை குறை சொல்வதாக பொருள் கொள்ளக் கூடாது இல்லையா?

  ராஜ் சந்திரா,
  // ஜெமோ-வை quote செய்தால் நாம் எதையுமே கறுப்பு/வெள்ளை என்று இரண்டு தரத்திற்க்குள் அடங்(க்) கி விடுகிறோம்.// ஜெயமோகன் அப்படி கறுப்பு வெள்ளை என்று பார்ப்பதில்லை என்பது என் கருத்து. அவர் சுஜாதாவை பாராட்டவும் செய்கிறார், சுந்தர ராமசாமியை குறையும் சொல்கிறார். அவர் பாராட்டுவது பொதுவாக கண்டுகொள்ளப்படுவதில்லை, குறை சொல்வதுதான் பெரிதாக ஊதப்படுகிறது.

  Like

 19. arangasamy permalink

  நட்பாஸ் ,

  என்ன இது ? நீங்கள்தானா இது ? 🙂

  Like

 20. @ அரங்கசாமி அண்ணே
  இதே கேள்வியைத்தான் நானும் அவரிடம் இங்கேயும் சரி, தொலைபேசி மூலமாகவும் சரி, கேட்டேன். சுஜாதா என்றால் சிலர் ரௌத்திரதாரி ஆகிவிடுகிறார்கள் போல.

  Like

 21. கிரி ,

  இளமையில் ப்ரியம் வந்துவிட்டால் போகாதுதான் , ஆனால் எதையும் பகுத்துப் பார்க்கும் , விமர்சனத்துடன் அணுகும் நட்பாஸ் சுஜாதான்னா மட்டும் கொஞ்சம் அதிகமா போயிடறார் போல .

  அப்புறமா உணர்ந்து அதை சொல்வதும் உண்டு .

  Like

 22. //சிம்பிள். ரமணி சந்திரன், ராஜேஷ்குமார் கதைகள் எல்லாம் வேலைக்கு ஆகாது அல்லது அவை அவ்வளவு பிரமாதமானதில்லை என்பது சிலர் கருத்தாக இருக்கலாம். ஆனால் அவற்றையும் விரும்பி வாசிப்பவர்களுக்கு அவர்கள் கதைகள் தான் புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், அமி மாதிரி.//

  உண்மையோ உண்மை என்பேன் நான். ரமணி சந்திரனின் சில புத்தகங்களை அருணோதயம் 25 பதிப்புகளுக்கு மேல் வெளியிட்டுள்ளது. காரணம், அவர் கதைகளை உருகியுருகிப் படிக்கும் பெண்கள்.

  இவர்கள் வயதான மற்றும் நடுத்தரப் பெண்கள் மட்டும் என்றெல்லாம் நினைக்காதீர்கள். இந்தத் தலைமுறைக் கல்லூரிப் பெண்களும் ரமணி சந்திரன் நாவல்கள் புதிதாக வெளியாகும் போது வரிசையில் நின்று (ஆம், வரிசையில் நின்று) வாங்குகிறார்கள்.

  Like

 23. இன்னும் டாப் சேல்ஸ் ரமணிச்சந்திரன்தான் . மற்ற குடும்ப நாவல் எழுத்தாளர்கள் எல்லோரும் காணாமல் போயாச்சு . இவர் மட்டும் நிற்கிறார் .(நானும் படிப்பேனே ர.ச ) 🙂

  மிக நல்ல பல்ப் எழுத்தாளர் என்றால் அவர்தான் – சுஜாதாவைவிட 😦

  Like

  • அண்ணே,
   நீங்கள் கிண்டலடிக்கிறீர்களா என்ன எனத் தெரியவில்லை. ஆனால், நிஜமாகவே டாப் சேல் எழுத்தாளர் அவர்தான் எனத் தெரிகிறது. நான் சொல்வதில் தவறிருந்தால் இங்கே கமெண்ட்ஸ் லூப்பில் இருக்கும் பத்ரி சார் திருத்தலாம்.

   மேலும், அவர் அடியொற்றி நிறைய பெண் நாவல் எழுத்தாளர்கள் இப்போது வந்திருக்கிறார்கள். அருணோதயம் போனபோது பார்த்தேன். (சத்தியமாக அவர்கள் பெயரெல்லாம் நினைவில் இல்லை). அவர்களில் குறைந்தது அரை டஜன் எழுத்தாளினிகள் தொடர்ச்சியாக எழுதித் தள்ளும் சக்சஸ் பேர்வழிகள் என்றார்கள் அங்கே.

   Like

 24. @அரங்கசாமி அண்ணன்…

  சொல்லாமல் என்ன…. தோ… சொல்லிட்டாரே… http://patthotontru.blogspot.com/2011/07/blog-post.html

  Like

 25. அடடே , அங்க ர.சவை பற்றியும் எழுதியிருக்காரே 🙂

  Like

 26. அரங்கசாமி, கிரி, நட்பாசின் பதிவிற்கு சுட்டி தந்ததற்கு நன்றி! அதையும் இப்போது பதிவில் இணைத்துவிட்டேன்.

  Like

 27. சிறு வயதில் படித்த போது சிறப்பாகவே இருந்தது (15 வயதில்)

  Like

 28. //அவர் அடியொற்றி நிறைய பெண் நாவல் எழுத்தாளர்கள் இப்போது வந்திருக்கிறார்கள். //

  kanchana jayathilakar. r.manimala, uma maheswari, jey sakthi etc etc

  Like

 29. முரளிகண்ணன், சுஜாதாவின் புத்தகங்கள் பதின்ம வயதினரை – அதுவும் ஓரிரு தலைமுறைக்கு முந்தியவர்களை – கவர்ந்ததில் வியப்பே இல்லை. 🙂
  ரமணன், தகவலுக்கு நன்றி!

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: