ஜெயமோகனின் “மாடன் மோட்சம்”

தோழி அருணாவை இந்தத் தளத்தில் எழுதும்படி ரொம்ப நாளாகக் கேட்டுக் கொண்டிருந்தேன். அவரும் விதவிதமாக டிமிக்கி கொடுத்துக் கொண்டே இருந்தார், இன்றுதான் மாட்டினார். ஜெயமோகனின் புகழ் பெற்ற “மாடன் மோட்சம்” சிறுகதையைப் பற்றி எழுதி இருக்கிறார். இது எனக்கும் பிடித்த சிறுகதைகளில் ஒன்று, கிளாசிக். இன்னும் நிறைய எழுதுவார் என்ற எதிர்பார்ப்புடன், ஓவர் டு அருணா!

ஊருக்கு வெளியே கையில் வாளும், மீசையுமாக காவல் நிற்கும் சுடலை மாடசாமி ஒரு இரவில் தன் பூசாரியை தேடிக்கொண்டு ஊருக்குள் போவதுடன் கதை ஆரம்பமாகிறது. தன் வீழ்ச்சியின் கதையை பூசாரியுடன் அமர்ந்து அங்கலாய்க்கிறது மாடன். அதில் இருந்து சிறு தெய்வங்களின் இன்றைய நிலை, பால் மாவுக்கும், கோதுமைக்கும் ஆசைப்பட்டு மதம் மாறும் கிராமம், இந்து முன்னணியின் அரசியல், வெள்ளை அங்கி அணிந்த வேத ஆசாமிகள், இதை எல்லாம் புரிந்து கொண்டு தன் வம்சாவழியாக கோழியும், ஆடும் வெட்டி காப்பாற்றி வந்த தன் தெய்வத்தின் நலனிற்காக இவர்கள் அனைவரையும் வைத்து தன் வேலையை சாதித்துக் கொள்ளலாம் என நினத்து ஆழம் தெரியாமல் காலை விடும் பூசாரி அப்பி என எல்லா ஆட்டக்காரர்களையும் வைத்துக்கொண்டு நாஞ்சில் நாட்டு வழக்கில் சமகால நிலவரத்தை தனக்கே உரிய பாணியில் நன்றாக கிண்டல் செய்கிறார் ஜெ.மோ.

”குட்டி தேவதையாக இருந்தாலும் அதுவும் கடவுள்தானே! தன்னை மீறிய சம்பவங்களின்போது கல்லாகி விடுதல் என்ற பொது விதியிலிருந்து அது மட்டும் எப்படித் தப்ப முடியும்?” போன்ற வரிகள் அங்கதத்தின் உச்சம்.

மாடன், கோவிலில் குடியேறிய பிறகு அங்கு நடக்கும் கூத்துக்களை படித்து சிரித்து கண்ணீர் வந்தது. தலை முறையாக தனக்கு ஊழியம் செய்யும் பூசாரியின் கட்டாய வெளியேற்றத்தைக் கூட, கடாவிற்க்கு ஆசைப்பட்டு பார்த்து கொண்டு இருக்கும் மாடன் ஒரு குறியீடு மட்டுமே என நினைக்கிறேன்.

விஜயகாந்த் வில்லன் வேஷம் கட்டியது போல் மாற்றப்பட்டு, எல்லா விதமான காம்ப்ரமைசும் பண்ணிய பின்னரும் தான் விரும்பும் பலி கிடைக்கப் போவதில்லை என அறிந்து அதிர்ச்சியுடன் பழைய மாடனாக உக்கிரமாக வாள் வீசி புறப்பட எத்தனிக்கையில், நிறுவனமயமாக்காப்படுவது கடவுளே ஆனாலும் எஞ்சுவது நிறுவனம் மட்டுமே என மாடன் உணரும் இடம், தலைப்பை சொல்கிறது. மாடனையும், அவரின் செயலையும், நிலமையையும் ஒரு குறீயீடாகவே நான் படித்தேன்.

நாஞ்சில் நாட்டு வழக்கு புரிந்தால், கிண்டல்களை இன்னும் ரசிக்கலாம்.

சிலிகான் ஷெல்ஃப் தளமும் ஜெயமோகனும் II

நண்பர்கள் யாரும் – குறிப்பாக சாரதா, ஸ்ரீனிவாஸ், விமல் – பதற வேண்டாம். நீங்கள் எனக்கு நண்பர்கள், ஜெயமோகனுக்கு அல்ல. உங்களைப் பற்றி நான் அறிவேன். சாரதா காழ்ப்புணர்ச்சியோடு விமர்சிக்கிறார் என்று நினைத்திருந்தால் நான் எதற்கு பதிவு கிதிவு எல்லாம் எழுதி நேரத்தை வீணாக்கப் போகிறேன்? விமல் ஜோக்காக எழுதினார் என்று நான் புரிந்து கொள்ளாமல் இல்லை. ஸ்ரீனிவாஸ் எங்கள் தளங்களுக்கு இன்னும் சக ஆசிரியர்தான். சந்திரமௌலியைப் பற்றி நான் இந்த மூவர் அளவுக்கு அறியமாட்டேன், ஆனால் இது வரை அவரது மறுமொழிகளில் எந்த காழ்ப்பையும் நான் பார்த்ததில்லை.

ஜெயமோகன் சொல்வது பொதுவாக, அதை உங்களைப் பற்றி குறிப்பாக சொல்வதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். அவர் ஒரு வசை காந்தம். என்ன சொன்னாலும் திட்டுவதற்கு நாலு பேர் இருக்கிறார்கள். அவர் தளத்தை ரெகுலராகப் படிப்பவர்களுக்கு எத்தனை முட்டாள்தனமான வசைகள் வருகின்றன என்று தெரியும். அந்தப் புரிதலோடு அவர் மறுமொழியைப் படித்தால் ஏற்றுக் கொள்ள முடியாத விஷயம் எதையும் அவர் எழுதவில்லை என்பது தெரியும். சுருக்கமாகச் சொன்னால் “பிலே, வேலையைப் பாரும்” என்கிறார்.

ஜெயமோகனின் மறுமொழியில் எனக்கு ஒரு இடத்தில் மட்டுமே எனக்கு கொஞ்சம் வேறுபாடு உண்டு. “இங்கே பலரிலும் நான் காண்பது இந்த காழ்ப்பையே” என்று எழுதி இருந்தாலும், “பலரிலும்” என்று specific ஆக சொல்லி இருந்தாலும், படிப்பவர்கள் தவறாக எடுத்துக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது. இங்கே (தவறான) விமர்சனம் செய்யும் சாரதா மற்றவர்கள் தன்னைத்தான் சொல்கிறார் என்று நினைக்கும்படி எழுதி இருக்கிறார். இன்னும் அவர் போல வசை பெறும் அளவுக்கு நான் “வளரவில்லை”, என்னை overestimate செய்துவிட்டார். -) காழ்ப்புணர்ச்சியை நான் வினவு தளத்தில், சில சமயம் தமிழ் ஹிந்து தளத்தில், ஏன் கூட்டாஞ்சோறு தளத்தில் கூட சந்தித்திருக்கிறேன், ஆனால் இந்தத் தளத்தில் அபூர்வமே. சும்மா புத்தகத்தைப் பற்றியே எழுதிக் கொண்டிருப்பவனை யார் பொருட்படுத்தி திட்டப் போகிறார்கள்? 🙂

மேலும் ஜெயமோகன் “ஒரு முத்திரையை ஒருவர் மேல் குத்திவிட்டால் அதன் பின்னர் அவர் அந்த முத்திரையை களைவதற்காக நேர் எதிராக சிந்திக்க ஆரம்பிப்பார், பேச ஆரம்பிப்பார் ” என்று எழுதுகிறார். எனக்கு இது வரை இந்தப் பிரச்சினை இல்லைதான். ஆனால் நண்பர்கள்தான் முத்திரை ஏன் குத்தப்படுகிறது, ஜெயமோகனின் பேர் சில பதிவுகளில் இருப்பது ஏன் தவறாகத் தெரிகிறது என்று விளக்க வேண்டும்.

எஸ்கேஎன் “உங்கள் கருத்துகளை மற்றும் மேற்கோளாக நீங்கள் படித்த கருத்துக்களை சொல்வதில் தவறென்ன ?” என்று எழுதி இருக்கிறார். அவர் சொல்வது சரியே. அதே போல இந்தத் தளம் ஜெயமோகனின் கருத்தைப் பிரதிபலிக்கும் தளமாக மாறிவிட்டது என்று தோன்றினால் சாரதாவும் ஸ்ரீநிவாசும் மற்றவர்களும் அதை சொல்வதிலும் தவறில்லை. அவர்களுடைய அந்த விமர்சனம் is not borne out by facts, அவ்வளவுதான்.

ஜெயமோகன் சொல்ல வருவது எனக்குப் புரிகிறது. இணையத்தில் ஓரளவாவது வசைக்கு இலக்காகாதவர்கள் அவரது வன்மையான மொழியை புரிந்து கொள்வது கஷ்டம் என்றும் புரிகிறது. சாரதா, மற்றவர்கள் காட்டமான மொழியில் வருத்தம் அடைந்திருப்பதும் புரிகிறது. அது பொதுவாக வசை பாடும் கும்பலுக்காக, இவர்களைக் குறித்து இல்லை என்றும் புரிகிறது. “பாதிப்பு” இல்லாதவன் அவரது மறுமொழியை கூலாக அணுகுவது போல மற்றவர்கள் அணுகுவது கஷ்டம் என்றும் புரிகிறது. முடிந்தால் என் அனுபவத்தை, புத்தியை வைத்து எனக்குத் தோன்றும் முடிவுகளை – அவை சரியாக இருக்கலாம் என்ற சாத்தியக் கூறையாவது – ஏற்றுக் கொள்ளுங்கள். முடியாவிட்டால் பரவாயில்லை. டாபிக்குக்கு வருவோம்.

ஜெயமோகனின் கண்ணாடி மூலமே இந்தத் தளம் நடத்தப் படுகிறது என்று இன்னும் நினைக்கிறீர்களா?

பின்குறிப்பு: இந்தத் தளம் புத்தகங்களுக்காக; ஜெயமோகனுக்காக இல்லை. அதனால் இந்த விஷயத்தைப் பற்றி இதுதான் கடைசிப் பதிவு. மீண்டும் புத்தகங்களுக்குத் திரும்பவே விரும்புகிறேன்.

தொடர்புடைய சுட்டி: முந்தைய பதிவு

சிலிகான் ஷெல்ஃப் தளமும் ஜெயமோகனும்

இது வரை ஒரு ஆறேழு பேர் இந்தத் தளத்தில் ஜெயமோகனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக கமென்ட் அடித்திருக்கிறார்கள். அந்த ஆறேழு பேரில் இப்போது தோழி சாரதாவும் சேர்ந்துவிட்டதால் இதை எழுதுகிறேன்.

சாரதா என் மதிப்பிற்கும் அன்புக்கும் உரியவர். அவார்டா கொடுக்கறாங்க தளம் செயலாக இருந்த காலத்தில் இருந்தே பழக்கம். அவர்

எந்த ஒன்றையும் உங்கள் கண்களால் நேரடியாகப் பார்க்காமல், ‘ஜெயமோகன்’ என்ற கண்ணாடி அணிந்து பார்ப்பது சற்று நெருடுகிறது. (ஆனால் அது உங்கள் உரிமை என்பதை மறுப்பதற்கில்லை). எது ஒன்றைப்பற்றியும் சொல்லும்போது, உங்கள் கருத்து என்ன, அல்லது அணுகுமுறை எப்படி என்று நேரடியாக வருவதை விடுத்து, முதலில் அதைப்பற்றி ஜெயமோகன் என்ன சொல்லியிருக்கிறார் என்று ஒரு பாரா, அல்லது ஒரு வரி போடுவது (எல்லாவற்றிற்கும்) நன்றாக இருக்கிறதா?

என்று என் சுஜாதா மதிப்பீடு பதிவைப் பற்றி மறுமொழி எழுதி இருந்தார். என் எண்ணங்களை எழுதாமல் ஜெயமோகனின் கருத்தையே நான் பிரதிபலிக்கிறேன் என்று அவருக்கு தோன்றி இருப்பது எனக்கு வியப்பளித்தது. அவர் மறுமொழி எழுதி இருக்கும் பதிவே ஜெயமோகனின் கருத்திலிருந்து நான் வேறுபடுவதை, வேறுபடுவதற்கான காரணங்களை விளக்கும் பதிவுதான். என்னடா முன்முடிவுகளோடு பதிவைப் படிக்காமலே எழுதிவிட்டாரா என்று காரசாரமாக பதில் எழுத ஆரம்பித்தேன்; ஆனால் அவருக்கு ஏன் அப்படி தோன்றுகிறது என்று கண்டுபிடிப்போமே என்று தோன்றியதால் அந்தப் பதிலை குப்பைக்கூடைக்கு அனுப்பிவிட்டேன்.

கண்டுபிடிப்போமே என்றுதான் ஆரம்பித்தேன். என்னால் முடியவில்லை, இன்னும் புரியவில்லை. ஒரு வேளை ஜெயமோகன் சொல்வதுதான் எப்போதும் ஸ்டார்டிங் பாயின்ட், அவர் கருத்தை வெட்டியும் ஒட்டியும் மட்டுமே எழுதுகிறேன் என்று நினைக்கிறாரோ என்னவோ தெரியவில்லை. அதுவும் சரியாக இல்லை, ஏனென்றால் ஜெயமோகன் கருத்து ஸ்டார்டிங் பாயின்ட்டாக இருப்பதும் அபூர்வமே. சரி ஜெயமோகன் இந்தத் தளத்தில் என்ன ரோல் வகிக்கிறார் என்பதைப் பற்றியாவது விளக்குகிறேன். மாட்னீங்க!

எனக்கு படிக்கப் பிடித்திருக்கிறது. ஒரு வித addiction என்றே சொல்லலாம். பேசாமல் படித்தோமா போனோமா என்று இல்லாமல் எதற்காக இந்த விமர்சனம், புத்தக அறிமுகம், வணிக எழுத்தா/சீரிய எழுத்தா என்ற சச்சரவு எல்லாம்? என் விமர்சன மெதடாலஜி பதிவில் சொன்ன ஒரு பாயிண்டை இங்கு மீண்டும்:

ஒத்த ரசனை உள்ளவர்களை கண்டுபிடிக்கத்தான்! புத்தகங்களைப் பற்றி பேசுவதில் ஒரு மகிழ்ச்சி இருக்கிறது. அந்த மகிழ்ச்சி ஏறக்குறைய ஒத்த ரசனை உள்ளவர்களிடம் பேசும்போது இன்னும் அதிகமாகிறது. மார்க் போட்டால் கூட ஓரளவு ஒத்துப் போகிறது. அப்படி யாராவது கிடைத்தால் விடாதீர்கள்! உங்களுக்கு அவரும் அவருக்கு நீங்களும் செய்யும் சிபாரிசுகள் அனேகமாக ஒர்க் அவுட் ஆகும்!

எனக்கு ஜெயமோகனுக்கும் ஓரளவு ஒத்த ரசனை இருக்கிறது. குறிப்பாக அவர் இலக்கியம் என்று கருதும் படைப்புகளை அனேகமாக நானும் ரசிக்கிறேன். சில சமயம் எங்கள் எண்ணங்கள் ஒத்துப் போவதும் இல்லை. சமீபத்தில் சுஜாதாவைப் பற்றி என்னுடைய மதிப்பீட்டுப் பதிவு ஒரு உதாரணம். அவர் சிபாரிசு செய்யும் எல்லா புத்தகங்களையும் படிக்க வேண்டும் என்று எனக்கு ஆசை உண்டு. நான் சொல்லி அவர் இது வரை ஒரு புத்தகம் (Guns, Germs and Steel) படித்திருக்கிறார் என்று நினைக்கிறேன். அவரது மெதடாலஜி, வரையறைகள் மீது எனக்கு விமர்சனங்கள் உண்டு. ஆனால் அவர் ஒரு தேர்ந்த வாசகர், என்னை விடச் சிறந்த விமர்சகர் என்பதில் எனக்கு எந்த வித சந்தேகமும் இல்லை. தெள்ளத் தெளிவாக இதுதான் என் பாணி, இதுதான் என் வரையறை என்று சொல்லிவிட்டு அதன்படியே புத்தகங்களை விமர்சிப்பவர் எனக்குத் தெரிந்து அவர் ஒருவரே. அவரால் inspire ஆகித்தான் நானும் இது என் பாணி என்று சொல்லிவிட்டு அப்புறம்தான் புத்தகங்களைப் பற்றி இந்த ப்ளாகில் எழுத ஆரம்பித்தேன்.

ஜெயமோகன் என்னை விடச் சிறந்த விமர்சகர் என்பது தன்னடக்கம் இல்லை. தன்னடக்கம் என்பது ஒரு விதப் பொய். தேவை இல்லாதபோது பொய் சொல்வதில் எனக்கு எப்போதும் விருப்பம் இருந்ததில்லை. டெண்டுல்கர் என்னை விட சிறந்த பேட்ஸ்மன் என்றால் அது தன்னடக்கம் என்று யாரும் நினைக்கமாட்டீர்கள் இல்லையா?

ஜெயமோகன் மேதைதான், ஆனால் கடவுள் இல்லை. அவர் சொல்வது வேதவாக்கு இல்லை. கடவுளே விமர்சித்தாலும், by definition, விமர்சனம் எதுவும் இறுதி முடிவு இல்லை.அப்படி ஜெயமோகன் சொல்லிட்டார்ப்பா, அத்தோட அவ்வளவுதான் என்று நான் சொன்னால் அவருக்கு என் மீது இருக்கும் கொஞ்சநஞ்சம் மரியாதையும் போய்விடும். 🙂

விமர்சனத்தின் முக்கியமான tangible பயன் புத்தக அறிமுகம்தான். சில சமயங்களில் அது புத்தகத்தின் பின்புலத்தை விளக்கலாம் (பக்ஸ் எழுதிய பதினெட்டாவது அட்சக்கோடு அறிமுகம் நல்ல உதாரணம்), சில சமயங்களில் இதைப் படித்துவிட்டு அதைப் படித்தால் நன்றாக இருக்கும் என்று சொல்லலாம், ஆனால் ஷேக்ஸ்பியரைத்தான் காலகாலத்துக்கும் படிக்கப் போகிறோம், நாடக விமர்சனங்களையா படிக்கப் போகிறோம்?

ஒரு புத்தகத்தைப் பற்றி எழுதும்போது என் கருத்தைத்தான் பதிவு செய்கிறேன். ஜெயமோகனுக்குப் பிடித்திருக்கிறது, பிடிக்கவில்லை என்பது என் கருத்தைப் பாதிப்பதில்லை. அவர் சிபாரிசு செய்தால் அந்தப் புத்தகம் நான் படிக்க வேண்டிய லிஸ்டில் நிச்சயமாகச் சேரும், அவ்வளவுதான். அவர் மட்டுமல்ல, சுஜாதா ஒரு புத்தகத்தைப் பற்றி சொன்னாலும் சேரும், அசோகமித்ரன் சொன்னாலும் அப்படித்தான். ஒரு புத்தகத்தைப் பற்றி என் கருத்தைப் பதிவு செய்யும்போது ஜெயமோகன் போன்ற ஒரு நிபுணரின் கருத்து கிடைத்தால் அதையும் பதிவு செய்கிறேன். அவர் மட்டுமல்ல, அசோகமித்ரன், சுந்தரராமசாமி, கி.ராஜநாராயணன், சுஜாதா, க.நா. சுப்ரமண்யம், வெங்கட் சாமிநாதன் போன்றவர்கள் அந்தப் புத்தகத்தைப் பற்றி ஏதாவது சொல்லி அது என் கண்ணில் பட்டால் அதையும் பதிவு செய்வேன். க.நா.சு.வின் படித்திருக்கிறீர்களா புத்தகத்தில் இருக்கும் சிபாரிசுகளைப் பற்றி பல முறை எழுதி இருக்கிறேன் (உல்லாச வேளை, நாகம்மாள், கரித்துண்டு, இதயநாதம்…) எஸ். ராமகிருஷ்ணன் தமிழின் சிறந்த சிறுகதை அல்லது நாவல் என்று குறிப்பிட்டிருந்தால் அதை கட்டாயம் பதிவு செய்கிறேன். கல்கியின் சில புத்தக முன்னுரைகளைப் (சில்லறை சங்கதிகள் லிமிடட், கப்பலோட்டிய தமிழன்) பதித்திருக்கிறேன். கல்கியும் சுஜாதாவும் க.நா.சு.வும் வெ.சா.வும் ஜெயமோகனும் பாராட்டுகிறார்கள் என்பதற்காக நான் எதையும் பாராட்டுவதும் இல்லை, அவர்கள் நிராகரிக்கிறார்கள் என்பதற்காக நான் எதையும் நிராகரிப்பதும் இல்லை.

ஜெயமோகன் நிறைய எழுதுகிறார். அதுவும் இணையத்தில் நிறைய எழுதுகிறார். பிறரின் புத்தகங்களை விமர்சிக்கிறார். கல்கியும் சுஜாதாவும் க.நா.சு.வும் செய்திருக்கும் விமர்சனங்கள் இணையத்தில் சுலபமாகக் கிடைப்பதில்லை. கிடைத்தால் அவர்களையும் மேற்கோள் காட்டுவேன். அப்படி காட்டுவது என் பாணி, அவ்வளவுதான்.

ஜெயமோகனின் இரண்டு பதிவுகள் – தமிழின் சிறந்த நாவல்கள் மற்றும் சிறந்த சிறுகதைகள் – எனக்கு references. அதில் இருக்கும் அத்தனை புனைவுகளைப் பற்றியும் எழுத விரும்புகிறேன். நான் ஒரு புத்தகத்தைப் பற்றி எழுதி அந்தப் புத்தகம் இவற்றில் குறிப்பிடப்பட்டிருந்தால் ஜெயமோகன் இதை தமிழின் சிறந்த (வணிக, அவணிக) நாவல்களில் ஒன்றாக கருதுகிறார் என்பதை நிச்சயமாகக் குறிப்பிடுவேன். ஒரு வேளை இது உங்கள் கண்ணை உறுத்துகிறதோ என்னவோ. ஆனால் எஸ்.ரா.வின் இரண்டு பதிவுகளும் – – தமிழின் சிறந்த நாவல்கள் மற்றும் சிறந்த சிறுகதைகள் – எனக்கு references-தான். எஸ்.ரா., ஜெயமோகன் இருவரில் யாராவது ஒருவர் தேர்ந்தெடுத்திருந்தாலும் அது நிச்சயமகக் குறிப்பிடப்படும். ஜெயமோகன் லிஸ்டில் இருக்கிறது என்று சொல்வது தவறாகப் பட்டால் ஏன் எஸ்.ரா. லிஸ்டில் இருக்கிறது என்று சொல்வது தவறாகப் படவில்லை என்பது எனக்கு இன்னும் புரியவில்லை.

முதல் முறை யாரோ ஒருவர் ஜெயமோகன் பேரைக் குறிப்பிடாமல் உங்களால் ஒரு பதிவு கூட எழுத முடியாதா என்று கேட்டபோது நானே அதிச்சி அடைந்தேன். நான் உணராமலே ஜெயமோகனைப் பற்றி குறிப்பிடுவது கன்னாபின்னாவென்று அதிகரித்துவிட்டதோ என்று கொஞ்சம் பயந்தேன். நாற்பது பழைய பதிவுகளுக்கு மேல் மீண்டும் படித்துப் பார்த்தேன். இரண்டிலோ மூன்றிலோ ஜெயமோகன் என்ற பேர் இருந்தது. சமீபத்தில் விமல் கூட இப்படி சொன்னபோது கூட முதல் பக்கத்தில் இருந்த பத்து பதிவுகளையும் பார்த்தேன், ஒன்றில் மட்டும் ஜெயமோகன் பேர் இருந்தது. சராசரியாக பத்து பதினைந்து பதிவுகளுக்கு ஒரு முறை ஜெயமோகன் பேர் குறிப்பிடப்படுகிறது. சராசரியாக பத்து பதிவில் ஒன்று சுஜாதா புத்தகங்களைப் பற்றி.:-)

நண்பர் ஸ்ரீனிவாஸ் சில சமயம் நீங்கள் ஜெயமோகன் பக்தரா என்பார். ஜெயமோகனின் கருத்தை வெட்டியும் பதிவு வருகிறது, ஒட்டியும் பதிவு வருகிறது. அவர் இந்தக் கேள்வியை ஜெயமோகன் கருத்தை மறுத்து எழுதும் பதிவிலும் கேட்பார்!

சாரதா ஏன் ஜெயமோகனின் கருத்தோடு சுஜாதா பதிவை ஆரம்பிக்கிறாய் என்று கேட்கிறார். அவர் சொன்ன கருத்துதான் ஆரம்பப் புள்ளி, அதனால்தான். சாரதா சொன்ன கருத்துதான் இந்தப் பதிவின் ஆரம்பப் புள்ளி, இந்தப் பதிவை அதோடுதான் ஆரம்பித்திருக்கிறேன். சாரதாவின் கருத்தை மறுத்துத்தான் எழுதி இருக்கிறேன். இதையும் யாராவது நான் சாரதாவின் கண்ணாடி மூலமே உலகைப் பார்க்கிறேன் என்று பொருள் கொள்ளாமல் இருந்தால் சரி. 🙂

தொடர்புடைய சுட்டி: அடுத்த பதிவு

சிவசங்கரியின் “பாலங்கள்”

எனக்கு சின்ன வயதிலிருந்தே சிவசங்கரி மீது கொஞ்சம் கடுப்பு உண்டு. சிவசங்கரி காட்டும் மனிதர்கள் செயற்கையானவர்கள், ஃபிலிம் காட்டுகிறார்கள் என்றுதான் தோன்றும். ஆனால் எனக்குத் தெரிந்த பெண்களுக்கெல்லாம் சிவசங்கரிதான் பிடிக்கும். அவர்களோடு கடலை போடவாவது இதை எல்லாம் படிக்க வேண்டி இருந்தது. அதுவும் ஒரு வழக்கமான முக்கோணக் காதல் கதையில் அருண் என்று ரொம்ப நல்லவன் ஒருவன் வருவான் பாருங்க, அவனை எங்கேயாவது பார்த்தால் இரண்டு அறை கொடுக்க வேண்டும் என்று கொலை வெறியோடு கொஞ்ச நாள் அலைந்தேன். ஆனால் அவர் பெண்கள் உலகத்தில் ஒரு சூப்பர்ஸ்டார், ஒரு மனிதனின் கதை, நண்டு மாதிரி சில புத்தகங்கள் ஒரு தலைமுறை பெண்களின் மனதைத் தொட்டன என்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.

உறவினர் வீட்டில் பாலங்கள் என்ற புத்தகம் கிடைத்தது. இதைப் பற்றி அரசல் புரசலாகக் கேட்டிருக்கிறேன். படித்துத்தான் பார்ப்போமே என்று பிரித்தேன்.

சிவசங்கரி நல்ல முயற்சி செய்திருக்கிறார். தலைமுறைகளாகத் தொடர்ந்து வரும் அரவணைப்பு, தஞ்சாவூர் அக்ரஹாரக் குடும்பங்களின் ஐம்பது-அறுபது வருஷங்களுக்கு முந்தைய பழக்க வழக்கங்களை பதிவு செய்வது என்று நிறைய முயன்றிருக்கிறார். ஆனால் முயற்சி வெற்றி பெறவில்லை. வெற்றி பெற்றிருந்தால் இதை நான் இலக்கியம் என்றுதான் மதித்திருப்பேன்.

மூன்று தலைமுறைகள், மூன்று குடும்பங்கள், ஒவ்வொன்றிலும் பாட்டிக்கும் பேத்திக்கும் ஜெனரேஷன் கேப், அதை சமாளிக்கும் அம்மா என்ற தீம். 1910-40 தலைமுறை பகுதியில் எக்கச்சக்க நுண்விவரங்கள். 1940-65 தலைமுறையில் சென்னையில் வளரும் மேல்தட்டு பிராமணக் குடும்பச் சூழ்நிலையைப் பற்றி நல்ல சித்தரிப்பு (இது சிவசங்கரி வளர்ந்த சூழ்நிலை என்று நினைக்கிறேன்) அவ்வளவுதான் கதை.

முதல் தலைமுறையில் சேகரித்த எல்லா விவரத்தையும் சொல்லிவிட வேண்டும் என்ற ஆசையில் கதையின் சுவாரசியத்தைக் கொன்றுவிடுகிறார். இரண்டாவது தலைமுறையில் நுண்விவரங்கள் குறைந்துவிடுகின்றன. ஆனால் நல்ல சித்தரிப்பு இருக்கிறது. மூன்றாவது தலைமுறையிலோ நுண்விவரத்தையே காணோம்.

வெண்ணெய் எடுப்பது ஒவ்வொரு தலைமுறையிலும் எப்படி மாறுகிறது என்று காட்டுவது மாதிரி சில ஐடியாக்கள் நன்றாக இருந்தன. பெண் பூப்படைவது, மாதவிடாயைக் கையாள்வது எப்படி மாறுகிறது என்ற obvious விஷயங்களைத்தான் எதிர்பார்த்தேன்.

உடுமலை தளத்தில் கிடைக்கிறது. விலை நூறு ரூபாய்.

படிக்கலாம், நல்ல முயற்சிதான், இதை சிலர் ரசிக்கக்கூடும் என்பதை உணர்கிறேன், ஜெயமோகன் இதை சிறந்த social romances லிஸ்டில் சேர்க்கிறார். ஆனால் எனக்கு சரிப்படவில்லை.

பிற்சேர்க்கை: விகடனில் தொடராக வந்தபோது முதல் பாகத்திற்கு கோபுலு, இரண்டாவது பாகத்திற்கு மணியம் செல்வன், மூன்றாவது பாகத்திற்கு ஜெயராஜ் ஆகியோர் ஓவியம் வரைந்ததாக ரமணனும் சாரதாவும் தகவல் தருகின்றனர். (வாரப் பத்திரிகை ஓவியங்களை நான் மிகவும் ரசிப்பவன். பத்திரிகையை கிழித்து பைண்ட் செய்த புத்தகம் என்றால் மிகவும் பிடிக்கும்.)

விஜயன், சாரதா இருவரும் அதில் பலகாரம் சரியாக வரவில்லை என்று ஒரு மாமி அடுப்பிடம் போய் “என்னை அவமானப்படுத்தணும்னா இதோ பார்த்துக்கோ” என்று புடவையைத் தூக்கி அடுப்பிடம் காட்டிய ஒரு காட்சியை நினைவு கூர்கிறார்கள். என் கண்ணில் இதெல்லாம் ஒரு விஷயமே இல்லை, ஆனால் இந்த காட்சி அப்போது சர்ச்சையை கிளைப்பியது என்றும் துக்ளக் பத்திரிகை இது ஆபாசம் என்று போர்க்கொடி தூக்கியதாகவும் சாரதா தகவல் தருகிறார்.

நண்பர் சிமுலேஷனின் அம்மா இந்தப் புத்தகத்தைப் பற்றி ரேடியோவில் விமர்சித்திருக்கிறார். அவரது விமர்சனத்தை இங்கே கேட்கலாம், transcript-ஐ படிக்கலாம். கையெழுத்து முத்துமுத்தாக இருக்கிறது!

சுஜாதா புத்தக லிஸ்ட்

சுஜாதாவின் எல்லா புத்தகங்களுக்குமான bibliography இங்கே கிடைக்கிறது. சுட்டி தந்த நண்பர் ரமணனுக்கு நன்றி!

தொகுப்பு –> சுஜாதா பக்கம்

வ.உ.சி. எழுதிய புத்தகம்

திலகரைப் பற்றி வ.உ.சிதம்பரம் பிள்ளை 1933-34 -ஆம் வருஷங்களில் ஒரு பத்திரிகையில் “திலக மகரிஷி” என்ற பெயரில் தொடராக எழுதினாராம். அது இலங்கைப் பத்திரிகையாம், வீரகேசரி என்று பெயராம். பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் பேராசிரியராகப் பணி புரிந்த மா.ரா. அரசு என்பவர் இவற்றைத் தொகுத்து போன வருஷம் (2010) புத்தகமாக வெளியிட்டாராம்.

யாராவது படித்திருக்கிறீர்களா? உங்களுக்கு ஏதாவது விவரம் தெரிந்தால் சொல்லுங்கள்!

காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்ட புத்தகம் என்றும் கிழக்கு பதிப்பத்தில் கிடைக்கிறது என்றும் நண்பர்கள் சந்திரமௌலீஸ்வரன் மற்றும் ஸ்ரீனிவாஸ் தகவல் தருகின்றனர். விலை நூறு ரூபாயாம்.

தொடர்புடைய சுட்டிகள்:
ஹிந்து நாளிதழில் இந்தப் புத்தகம் பற்றி
ம.பொ.சி. எழுதிய கப்பலோட்டிய தமிழன் பற்றி ஆர்வி, அதே புத்தகம் பற்றி கல்கி

பொன்னியின் செல்வன்

”பொன்னியின் செல்வன்” மூன்றரை வருடங்கள் தொடராக வந்த ஒரு சரித்திர புனைவு. அமரர் கல்கியின் வெற்றி பெற்ற கதைகளுள் ஒன்று. இதை பற்றி எண்ணற்ற விமரிசனங்களும், தர்க்கங்களும், ஆராய்ச்சிகளும், ”அடித்தலும், துவைத்தலும்” நடந்து விட்டன. இன்றும் நடந்து கொண்டுதானிருக்கிறது. கதை எழுதப்பட்டு கிட்டதட்ட 60 வருடங்களாகியும் வாசகர்கள் மத்தியில் இன்னும் அதனிடம் ஒரு ஈர்ப்பு சக்தி இருந்து கொண்டுதானிருக்கிறது. வாசகர்கள் பல தளங்களில் இருந்தாலும் இன்னும் வாசிக்கப்படுவதால் நாவலை பொறுத்தவரையில் வெற்றிதான்.

கதையின் அமைப்பு – நல்ல கதை. பிரமிக்க வைக்கும் கதை பின்னல். ஒவ்வொரு நிகழ்வுக்கும் தகுந்த உறுதியான காரணங்கள் பின் வருகின்றன. அவை சில சமயம் உடனே வந்து விடுகின்றன. சில சமயங்களில் ஆயிரம் பக்கங்களுக்கு அப்பால் வருகின்றது. வாசகர்களுக்கு நிகழ்வுகளின் காரணங்களை தொடர்வதே ஒரு சிறிய அறைகூவல்தான். கதாபாத்திரங்களின் இயல்பை கட்டுக் குலையாமல் கொண்டு செல்கிறார் அமரர் கல்கி. ஆரமபம் முதல் குழப்ப சிந்தனையுள்ள நந்தினி கடைசி வரை ஆதித்த கரிகாலன் “கொலை” வரை குழம்பிக் கொண்டிருக்கிறார். ஆதித்த கரிகாலன் தன்னை சூழ்ந்துள்ளவர்களிடம் கடைசி வரை விஷ வார்த்தைகள் கக்கிக்கொண்டே இருக்கிறான். அருள்மொழிவர்மன் கடைசி வரை அன்பை பொழிகிறார்.  நாவலின் பரபரப்பும், சஸ்பென்ஸும் துணைக்கு வருகிறது. வாசகர்களைக் வணிக எழுத்தை ஒத்த பரபரப்புடன் கட்டிப் போடுகிறது. முக்கியமாக ரவிதாஸனின் ஆபத்துதவிகள் ஆதித்த கரிகாலனையும், அருள்மொழிவர்மனையும், சுந்தர சோழரையும் ஒரே பொழுதில் ஒரே சமயத்தில் கொலை செய்ய முயலுவதும், அதற்கு சொல்லப்படும் காரணங்களும் இன்றும் தீவிரவாதிகளும் (9/11 இரட்டை கோபுரம், பெண்டகன் மற்றும் இதர இடங்களில் நாசவேலைகள்), பல அரசுகளும் பின் பின்பற்றும் யுக்தியாக (coordinated effort) இருப்பதை நாம் பார்க்கும் பொழுது கல்கி கதையில் போர் முறைகளையும், சதிகளையும் கையாண்ட விதம் பாராட்டுக்குறியதே.

வரலாற்று சம்பவங்களை வைத்து கதை வளர்ந்திருக்கிறது. மேல் கூறிய கதை சொல்லும் விதத்தை மறந்து விட்டால் நன்றாக எடுத்துச் சென்றுள்ளார். ஆதித்த கரிகாலன் கொலை வரலாற்று ஆராய்ச்சியாளர்களால் இன்றும் உறுதி செய்ய முடியாத ஒரு பெரிய புதிர். கதையிலும் அப்படியே அமைத்திருப்பது கதைக்கு பலம் சேர்க்கிறது. திருவாலங்காடு செப்பேடுகள் ”அருள்மொழியே முடிச்சூட்ட வேண்டும் என்று மக்கள் விரும்பினார்கள் ஆனால் மதுராந்தகருக்கு பட்டம் சூட்டினான் அருள்மொழி” என்று சொல்வதை வேறு அர்த்தம் கொள்கிறார்கள் சில சரித்திர வல்லுனர்கள். உடையார்குடி கல்வெட்டை ஆதாரமாக வைத்து கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி “சோழர்கள்” என்ற ஆய்வில் மதுராந்தக உத்தம சோழன் தான் சதிசெய்து ஆதித்த கரிகாலனை கொன்றுவிட்டு சிம்மாசனத்தில் ஏறினான் என்று கூறுகிறார். தி.வை. சதாசிவ பண்டாரத்தார் என்ற ஆய்வாளர் இப்படி நடக்க வாய்பில்லை என்கிறார். ஆனால் 1971ல் விவேகானந்தா கல்லூரி மலரில் வந்த ஆர்.வி. சீனிவாசனின் கட்டுரையில் ஆதித்த கரிகாலனுடைய கொலையில் சதி செய்தது அருள்மொழிவர்மனும், குந்தவையும் தான் என்கிறார். ரவிதாசன் சோழ அரசில் முக்கிய பதவி வகித்து வந்தானென்றும், அவனுக்கு அருள்மொழி அளித்த தண்டனை மிகவும் சிறியது (சோழ நாட்டின் உள்ளேயே ரவிதாஸன் “நாடு” கடத்தப்பட வேண்டும்) என்றும் கருத்துக்கள் நிலவுவதே அதன் காரணமாக இருக்கலாம். இதை ஆய்வாளர் டாகடர். க.த.திருநாவுக்கரசு வன்மையாக மறுக்கிறார். ரவிதாஸன் பஞ்சவன் பிரம்மாதிராஜனும் அவன் சகோதரன் சோமன் சாம்பவனும் பிராமணர் குலத்தில் தோன்றியவர்களாதலால் அவர்களுக்கு மனு தர்மத்தின் படி மரண தண்டனை அளிக்க முடியாது என்பதால் தான் ரவிதாஸனுக்கு சிபி, மனுநீதிச் சோழன் குலத் தோன்றலாகிய அருள்மொழிவர்மன் கடுமையான தண்டனை கொடுக்கவில்லை என்று கூறிகிறார்.

ஒருவேளை அருள்மொழிவர்மனும், குந்தவையும் மதுராந்தகத் உத்தமச் சோழன், ரவிதாஸன் இவர்களுடன் சேர்ந்து சதி செய்திருப்பார்களா? ஆட்சி பங்கீடு பேச்சுவார்த்தையில் மதுராந்தகனும் அருள்மொழிவர்மனும் சோழ நாட்டை ஒருவர் பின் ஒருவராக ஆளலாம் என்று சமரசத்திற்கு வந்திருப்பார்களா? ஆனால் தெய்வ நம்பிக்கை (சிவபக்தி – ஆதாரம் ராஜராஜேஸ்வரம்) கொண்ட அருள்மொழி அப்படியெல்லாம் செய்வானா என்றும் தோன்றுகிறது. ஆதித்த கரிகாலன் கடவுள் நம்பிக்கையற்றனாக சித்தரிக்கிறார் அமரர் கல்கி. அது வரலாற்று உண்மையாக இருக்குமானால் இந்த கான்ஸ்பிரஸி தியரி மேலும் வலுப்பெறுகிறதல்லவா? இது பற்றி சமகால் ஆராய்ச்சியாளர் டாக்டர் நாகசாமி எதாவது கருத்து சொல்லியிருக்கிறாரா என்று தெரியவில்லை. ஜெயமோகனும் கருத்துகள் வைத்திருக்கலாம்.

எது எப்படியோ இந்த வரலாற்று நிகழ்வுகளை உறுதிப்படுத்துவது மிகக் கடினம். அதனால் அமரர் கல்கியின் கருத்துக்களோடு ஒன்றிப் பார்த்தால் தான் பொன்னியின் செலவன் ஒரளவேனும் அர்த்தமுள்ளதாக இருக்கும். ராஜராஜனின் மேல் குற்றமிருக்கும் என்று நம்பினால் பொன்னியின் செல்வன் படைப்பு அமரர் கல்கியின் ஆத்மாவிலிருந்து உருவாக மிகவும் கடினமாக இருந்திருக்கும். அவரைப் பொறுத்தவரையில் அருள்மொழிவர்மன் அறம் நிறைந்த ஒழுக்க சீலனாகவே இருந்திருக்கிறான். அதை நில நாட்டப் பாடுபடுகிறான்.

அமரர் கல்கி பழந் தமிழகத்தின் விழுமியங்களை இன்றையமக்கள் அறியவேண்டும் என்பதே அவருடைய வாழ்க்கையின் லட்சியமாக கொண்டிருந்தார் என்று சொல்லப்படுகிறது. “விமோச்சனம்” பத்திரிக்கை கட்டுரைகள், மது ஒழிப்பு பற்றிய கதைகள் போன்றவை மூலமாக அவர் கொண்டிருந்த விழுமியங்களை எடுத்துச் சொல்லிக் கொண்டேயிருந்தார். பொன்னியின் செல்வனிலும் அந்த தரிசனம் கிடைக்கிறது. சோழ நாட்டுக்கு சதி செய்யும் கூட்டம் உட்பட, அனைத்து கதாபாத்திரங்களுமே ஏதோ ஒரு வகையில் அறத்தை கடைபிடிக்கிறது. நந்தினி – பாண்டிய நாட்டிற்கு உண்மையாக இருப்பதற்க்காக சதி திட்டம் தீட்டினாலும் பெரிய பழுவேட்டறையருக்கு துரோகம் செய்யாமலிருக்கிறாள்; ரவிதாஸன் குழுவினர் – நந்தினியை அரசியாக ஏற்றுக் கொண்டபிறகு அவள் கூறுவதை மீறக்கூடாது என்று சூளுரைக்கினறனர்; ஆழ்வார்க்கடியான் நம்பி அநிருத்த பிரம்மராயரிடம் உண்மையாகவே இருக்கிறான்; பழுவட்டரையர்கள் சதி திட்டம் தீட்டினாலும் சுந்தர சோழ சக்ரவர்த்தியிடமும் சோழ நாட்டை பாதுகாப்பதிலும் நேர்மையாகவே இருக்கிறார்கள்; தவறுவதால் தன்னை தானே பெரிய பழுவேட்டரையர் மாய்த்துக் கொள்கிறார்; அருள்மொழிவர்மன் அறமே வாழ்க்கை என்று வாழ்கிறான். ஏன், ”மதுராந்தகன்” கூட சோழ நாட்டை போரிட்டே பிடிக்கவேண்டுமென நினைத்து செம்பியன் மாதேவியை விட்டு பிரிகிறான். கதை முழுக்க வரும் சதிகளும், வஞ்சங்களுக்குமிடையில் அமரர் கல்கி நிலைநாட்டும் விழுமியங்களை வாசகர்கள் தவறவிடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

சோழ நாட்டு இயற்கை காட்சிகளை பற்றி கல்கி விவரிப்பது ஒரு ரொமான்ஸ் தான். அப்படிபட்ட வளம், தேனும் பாலும் ஓடியதாக சொலவதெல்லாமே மிகைப்படுத்தல் வகையிலே தான் பார்க்கமுடிகிறது. வானதியும் குந்தவையும் மணிமேகலையும் வந்தியத்தேவனும் காணும் கனவுகள் வாயிலாக சோழ நாட்டு வளத்தை விவரிக்கிறார். இந்த விவரிப்புகளை தனித்து எடுத்துப் பார்த்து பரிசீலிப்போமானால் சங்க கால் இன்பவியல இலக்கியம் சாயல் கொண்டிருக்கிறது என்று சொல்லலாம்.

ஆனால் பொன்னியின் செல்வன் இலக்கியமா என்று பலருக்கு ஒரு ஐயமிருக்கிறது. மொத்தமாக நோக்கும்பொழுது இது இலக்கியம் அல்ல என்று உறுதியாக சொல்ல முடியும். இலக்கிய கூறுகள் ஆங்காங்கு வெளிப்படுகிறதே தவிர, இது வரலாற்றை அனுகூலமாக எடுத்துக் கொண்டு அதன்மூலம் ஒரு ரொமான்ஸாகத்தான் பரிணமித்திருக்கிறது. அதாவது அமரர் கல்கியின் சோழ நாடு இப்படி இருக்கவேண்டும் என்ற அபிலாஷை வெளிவந்திருக்கிறது. இது ஏன் இலக்கியமல்ல? நான் புரிந்துக் கொண்ட கோட்பாடின் படி இலக்கியம் சமகாலங்களின் அல்லது கடந்த காலங்களின் இயல்பான நிலை, சூழல், மற்றும் மக்களின் வாழ்க்கை, நடை, உடை, பாவனை, பண்பாடு, கலாச்சாரம் முதலியவற்றை புதினம் அல்லது பிற இலக்கிய கருவிகள் மூலம் மிகையில்லாமல் அல்லது பெரிதும் மிகைப்படுத்தாமல் சொல்வது ஆகும். இந்தக் கோட்பாடின் படி அமரர் கல்கி அவற்றை ஆழமாக சொல்லவில்லை.  மேலும் 1950ல் உள்ள தொல்பொருள் அறிதலின் படி, ஆயிரம் வருடத்திற்கு முந்தைய காலத்தில் (அதாவது 900 முதல் 1100ஆம் ஆண்டு வரை) கல்வெட்டுகள் மூலமும், செப்பேடுகள் மூலமும் வெளியிடப்பட்ட சோழ நாட்டு வாழ்க்கை முறை தகவல்கள் இவற்றையெல்லாம் சொல்லும் வகையில் விவரமானதாக அமைந்திருக்கவில்லை என்பது நம்மால் ஊகிக்கமுடிகிறது. கிடைத்த செப்பேடுகள் பெரும்பாலும் அரசு மற்றும் நிர்வாகம் சம்பந்தப்பட்ட தகவல்களையே அனேகமாக கூறி வந்தது. இந்த தகவல்களைக் கொண்டு வாழ்க்கை அனுபவங்களும் நிலைகளும் சூழலும் முழுமையாக கொடுக்க இயலாது. அமரர் கல்கி அந்த முயற்சியில் இறங்கவுமில்லை. உதாரணத்திற்கு தல்ஸ்த்யோவஸ்கியின் குற்றமும், தண்டனையும் பக்கத்துக்கு பக்கம் புதிய தரிசனங்களை கொடுத்துக் கொண்டே போகிறது. அதை பொன்னியின் செல்வனுடன் ஒப்பு நோக்கினால் இந்த வித்தியாசங்களை எளிதில் புரிந்துக் கொள்ளமுடியும்.

என்றாலும் கல்கி சில வரலாற்று நிகழ்வுகளின் மூலம் அகன்ற வாழ்க்கையை எடுத்துரைக்க முற்படுகிறார். அரபு நாடுகளுக்கும் சோழ நாட்டுக்கும் வணிகம் வளர்ந்து வந்தது. முன்னதாக மூன்று நூற்றாண்டுகளாக இஸ்லாம் அறிமுகப்படுத்தப்பட்டு சேர நாட்டில் (அன்றைய கேரளாவில்) இஸ்லாம் தன்னை ஸ்தாபித்திருந்தது. இந்த காலகட்டத்தில் அரபிக்கடலில் வணிக போக்குவரத்து பெருகியிருந்தது. கப்பல் கொள்ளையர்களும் வளர்ந்து வந்தனர். ஈழ நாட்டுவரை அரபு கப்பல் கொள்ளையர்களும் புழங்கி வந்திருக்கிறார்கள். இவற்றையெல்லாம் நிகழ்வுகளாக கதையில் சேர்த்திருக்கிறார். வட நாட்டுக் கோவில்களை எல்லாம் இஸ்லாமியர்கள் இடித்து தள்ளிக் கொண்டிருந்ததை ஒரு முரட்டு மதம் வளர்ந்து வருவதாகவும் குறிப்பிடுகிறார். (ராஜபுட்ததான மன்னர் ராஜா தாஹீரின் கடல் கொள்ளையர்களின் ஊக்குவிப்பே இஸ்லாமியர்கள் முதன் முதலில் உள்ளே நுழைவதற்கு காரணமாக இருந்தது என்பது வரலாறு – இஸ்லாமிய தரப்பு வாதம்).

குறை என்று பார்க்கப் போனால் இது ஒன்று தான் – கதையின் நடை (ஓட்டமும் தான்) சில சமயங்களில் ஏதோ குழந்தைகளை வைத்து கதை சொல்வது போலிருக்கிறது. உதாரணத்திற்கு வந்தியத்தேவன் வம்பில் மாட்டும் பொழுதெல்லாம் அவனை காப்பாற்றுவதற்க்காகவே அனைத்து நிகழ்வுகளும் காத்துக் கொண்டிருப்பதாக சித்தரித்திருப்பது, தேவை ஏற்படும் பொழுதெல்லாம் ஆள் மாற்றம் சுலபமாக நடப்பது, ”இருளாக இருக்கிறதே, எப்படி போவது” என்று ஒரு கதாபாத்திரம் சிந்தனை செய்து கொண்டிருக்கும்பொழுதே ”இதோ வெளிச்சம்” என்று இன்னொரு பாத்திரம் உதவி செய்வது, அல்லது ”தண்ணீரில் விழுந்து விட்டோமே, படகு வேண்டுமே” என்றால் யாரவது ஒருவர் அந்தப் பக்கம் படகுடன் வருவது, போன்ற முதிர்வு பெறாத நடைகள் பெருத்த ஏமாற்றத்தை அளிப்பது மட்டுமல்லாமல் சராசரி வணிக எழுத்திற்கும் கீழே போய்விடுகிறது. அதுவும் பெரிய பழுவேட்டரையர் கடம்பூரிலிருந்து கிளம்பி புயலில் சிக்கி கோயிலில் படுத்து பின்னர் பாண்டிய நாட்டு ரவிதாஸன் ஒற்றர் கும்பல்கள் லவ்ட்ஸ்பீக்கர் இல்லாத குறையாக அவர்கள் திட்டத்தை விவரிப்பதை “ஒட்டு” கேட்பது – ஒரு வேளை நேரத்தை விரயம் செய்கிறோமோ என்ற சோர்வை உண்டாக்குகிறது. விதியே என்று முன்னகர்ந்தால் ஒரு கதாபாத்திரத்திற்கு பிற கதாபாத்திரங்கள் உதவி செய்வது போதாதென்று கல்கி நினைத்தாரோ என்னவோ – ”வந்தியத்தேவன் அராபியக் கொல்லையர்களிடம் கட்டுண்டு கிடக்கிறானே. அய்யய்யோ! எப்படி தப்பிக்கப் போகிறான், ஒரு வேளை அவன் கட்டுகள் இறுக்கமாக கட்டு படவில்லையோ? ஆம் அப்படி தான் இருக்கவேண்டும்” என்று கூறி தன் பங்குக்கு கடலில் குதித்து, கப்பலில் சென்று கட்டுகளை லூஸ் பண்ணிவிட்டுவிட்டு மாயமாக மறைகிறார். கொடுமையே என்றிருக்கிறது. ”ஆபத்தா, இதோ வருகிறேன்” என்று திடீர், திடீரென்று தோன்றும் எம்ஜியார் திரைப்படத்தை நினைவூட்டுகிறது. அல்லது இன்றைய விஜய் சினிமாக்களை. ஒருவரும் வராவிட்டால் ஆசிரியரே வந்துவிடுவார். இதெல்லாம் ஆழ்வார்க்கடியான், வந்தியத்தேவன் போன்றவர்களுக்குதான். இருப்பதிலேயே வீரமான, புஜபல பராக்கிரம் நிறைந்த ஆதித்த கரிகாலனிடம் உதவிகளெல்லாம் பலிக்கவில்லை. ”அப்பாடா” என்றிருந்தது. 60 வருடங்களுக்கு முந்தைய கதை என்பதால் இந்தக் குறையை கண்டுக் கொள்ளாவிட்டால் கதை காலத்தில் பின்னோக்கிச் செல்லும் ஒரு இனிய பயணமே.

பொன்னியன் செல்வன் கதையை பதின்ம வயதில் படிப்போருக்கு அனேகமாக பரவசம் கொடுத்திருக்கும். காலம் கடந்து படிப்போருக்கும் பரவசம் தரக்கூடிய கதைதான். முதிர்ந்த வாசகர்களுக்கு தகவல்களும் சில சிறிய பிரமிப்புகளும் காத்திருக்கின்றன. ஆனால் அனைவரும் கட்டாயமாக படிக்க வேண்டிய ஒரு புதினமே.

மின்னூலை விமல் தரவேற்றி இருக்கிறார்.

தொகுக்கப்பட்ட பக்கம்: கல்கி பக்கம்

தொடர்புடைய சுட்டி: ஆர்வி பதிவு

சோவின் “சாத்திரம் சொன்னதில்லை”

தமிழில் நல்ல நாடகங்கள் அபூர்வம். சோ ராமசாமி எழுதிய எல்லா நாடகங்களும் தேறும் என்று சொல்வதற்கில்லை, ஆனால் சோவின் நல்ல நாடகங்களும் அவருடைய கோமாளி இமேஜால் கண்டுகொள்ளப் படுவதில்லை.

சோவை பழைய கிரேக்க நாடக ஆசிரியர் அரிஸ்டோஃபனசுடன் ஒப்பிடலாம். அரிஸ்டோஃபனஸ் முதல் காமெடி நாடக எழுத்தாளர், சடையர் என்பது இவரோடுதான் ஆரம்பித்தது என்கிறார்கள். ஆனால் அரிஸ்டோஃபனசை இன்று முழுதாக புரிந்து கொள்வது கஷ்டம். அடிக்கடி க்ளியான் என்ற தலைவரை கிண்டல் அடித்து நிறைய வசனம் வரும். க்ளியானைப் பற்றி நமக்குத் தெரிவதே இந்த வசனங்களின் மூலம்தான். கிண்டல் அடிப்பது எப்படி புரியும்? சோவும் இப்படித்தான் அன்றைய அரசியல் நிகழ்ச்சிகளைப் பற்றி ஏதாவது கிண்டல் அடிப்பார், இன்றைய இளைஞனுக்கு எப்படி புரியும்?

சோவின் பொற்காலத்தில் – அறுபதுகள், எழுபதுகளின் முற்பாதி – அவர் ஏதாவது ஒரு சமுதாயப் பிரச்சினையை எடுத்துக் கொள்வார். அதை சில பாத்திரங்களை வைத்து விளக்குவார். மெலோட்ராமா ஸ்டைல்தான். சில சமயம் விளக்கம் நன்றாக இருக்கும், பல சமயம் உருப்படாது. ஆனால் நன்றாக விளக்கி இருந்தாலும் ஒரு பிரச்சினை இருக்கும் – வலிந்து புகுத்தப்பட்ட நகைச்சுவை. அவர் நடிக்கவென்றே ஒரு கோமாளி பாத்திரம் இருக்கும். அந்தக் கோமாளித்தனம் நாடகத்தின் பெரிய பலவீனம். ஆனால் அந்த பலவீனம், கோமாளித்தனம் இல்லாவிட்டால், சென்னை சபா சர்க்யூட்டில் அவருடைய நாடகங்கள் வெற்றி பெற்றிருக்க முடியாது.

அரிதாக அந்த கோமாளித்தனத்தையும் மீறி சில நல்ல நாடகங்கள் வந்திருக்கின்றன. அவற்றில் சாத்திரம் சொன்னதில்லையும் ஒன்று. (உண்மையே உன் விலை என்ன, யாருக்கும் வெட்கமில்லை, முகமது பின் துக்ளக் ஆகியவையும் என் கண்ணில் வெற்றி அடைந்த நாடகங்களே.)

சாத்திரம் சொன்னதில்லையில் அவர் ஜாதிப் பிரச்சினையை எடுத்துக் கொள்கிறார். ஜாதிப் பிரக்ஞை, ஜாதி ஸ்டீரியோடைப்கள் நம் மனதில் எவ்வளவு ஆழமாக ஊறிப் போயிருக்கின்றன என்பதை. அதை சிக்கனமாக, சில பாத்திரங்களையே வைத்துக் காட்டுகிறார்.

சாரியார் பிராம்மணோத்தமர். ஜாதி பார்க்கமாட்டார். ஒரே மகன் பாச்சா. பாச்சாவுக்கு படிப்பு வரவில்லை. பல வருஷமாக பி.யு.சி. பரீட்சை எழுதிக் கொண்டிருக்கிறான். ஆனால் சாரியாருக்கு அவன் செல்ல மகன். அவனுக்காக சப்பைக்கட்டு கட்டிக்கொண்டே இருக்கிறார். துரைக்கண்ணு ஹரிஜன். எம்.எல்.ஏ. அவருக்கும் பாச்சா வயதில் ஒரு மகன் இருக்கிறான். பெருமாள். பாச்சாவும் பெருமாளும் ஒரே ஆஸ்பத்திரியில் ஒரே நாளில் பிறந்தவர்கள். பெருமாள் நன்றாகப் படிக்கிறான். காண்ட்ராக்டர் முதலியார் மகள் உமாவோடு பெருமாளுக்குக் காதல். சாரியார் போன்றவர்கள் சிபாரிசு செய்தும் ஜாதி பார்க்கும் முதலியார் மறுக்கிறார். பாச்சா உமாவை கல்யாணம் செய்து கொள்கிறேன் என்றால் சாரியார் சம்மதிப்பாரா என்று கேள்வி கேட்கிறார். சாரியார் சம்மதிப்பேன் என்கிறார், ஆனால் முதலியார் நம்பவில்லை. இதற்குள் இவர்கள் காதல் ஊரெல்லாம் தெரிந்துவிடுகிறது. அது துரைக்கண்ணுக்கு பிரச்சினை ஆகிறது. ஏன் பெருமாளுக்கு ஹரிஜன் பெண்ணாகப் பார்க்கவில்லை என்று கேள்வி எழுகிறது. முதலில் காதலை ஒத்துக் கொண்ட துரைக்கண்ணு இப்போது உமாதான் என் பையன் பின்னால் சுற்றினான், பெருமாள் அவளைக் காதலிக்கவில்லை என்று பெருமாளைச் சொல்ல வைக்கிறார். முதலியார் அவமானப்படுகிறார்.

சாரியார் உண்மையிலேயே ஜாதி பார்க்கமாட்டாரா என்று அவரது டாக்டர் நண்பர் அவரை பரீட்சிக்க நினைக்கிறார். சாரியார் காதுபட பெருமாள்தான் சாரியாருக்குப் பிறந்தவன், பாச்சா துரைக்கண்ணுக்குப் பிறந்தவன், ஆஸ்பத்திரியில் குழந்தைகள் மாறிவிட்டனர் என்று சாரியார் நம்பும்படி பேசுகிறார். சாரியாருக்கு மண்டையில் லைட் எரிகிறது. பிராமணப் பையன், சாரியாரின் வித்துக்கு படிப்பு எப்படி வராமல் இருக்கும் என்ற கேள்விக்கு விடை கிடைத்துவிடுகிறது. பெருமாளின் மீது பாசமும் பாச்சா மீது கோபமும் வருகிறது. பாச்சா உமாவை மணக்க விரும்புவதாக சொல்கிறான். ஹரிஜன் முதலியாரை மணந்துகொண்டால் எனக்கென்ன போச்சு என்று சாரியார் சம்மதிக்கிறார், ஆனால் அவரது ஜாதி பார்க்காத உயர்ந்த உள்ளத்தைக் கண்டு ஊரே பாராட்டுகிறது.

சாரியாருக்கு உண்மை தெரிந்ததா, உமா யாரை மணக்கிறாள், என்பதுதான் மிச்சக் கதை.

எனக்கு சில விதங்களில் இது எஸ்.எல். பைரப்பா எழுதிய தாட்டு என்ற கதையை நினைவுபடுத்தியது. இதே போல சிக்கனமாக, வெகு சில பாத்திரங்களை வைத்து (ஒரு பிராமணக் குடும்பம், ஒரு கௌடா குடும்பம், ஒரு ஹரிஜன் குடும்பம்) ஜாதியை அற்புதமாக அலசி இருப்பார். சோவுக்கும் பைரப்பாவுக்கும் தூரம் அதிகம். இருந்தாலும் அதே சிக்கனம் இந்த நாடகத்திலும் தெரிகிறது.

சாரியார் அற்புதமான பாத்திரம். மிச்ச பாத்திரங்களில் ஜீவன் இல்லை. சோ நடிப்பதற்காக எழுதப்பட்ட நிரஞ்சன் பாத்திரம் சில இடங்களில் எரிச்சல் ஊட்டுகிறது. அதுவும் “வ” என்ற ஒலியைச் சொல்ல வரவில்லை (வங்காளிகள் போல), பிறகு “ப” வரவில்லை என்று கழுத்தை அறுக்கிறார். ஆனால் நாடகமாகப் பார்ப்பவர்கள் நிச்சயம் சிரித்திருப்பார்கள்.

நல்ல நாடகம், படியுங்கள் என்று சிபாரிசு செய்கிறேன். பார்த்தால் படிக்கும்போது தெரியும் சில குறைகளும் மறைந்துவிடும், அதனால் முடிந்தால் பார்த்துவிடுங்கள்.

அல்லையன்ஸ் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. விலை நாற்பது ரூபாய்.

சுஜாதாவின் மூன்று முகங்களும் தமிழ் இலக்கிய வரலாற்றில் அவரது இடமும்

சமீபத்தில் ஜெயமோகன் சுஜாதா

இலக்கியவாதி என்பதைக் காட்டிலும் வணிக எழுத்தாளர்தான். உங்கள் தேவை சுவாரசியம் என்பதல்லாமல் ஆன்மபரிசோதனையோ, அறிவார்ந்த தேடலோ, உணர்வுகளின் அனுபவமோ என்றால் உங்களுக்கு சுஜாதா பெரிதாகப் படமாட்டார். சுஜாதாவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்கள் பதின்பருவத்தில் அவரை வாசித்து அதன் பின் அந்த வாசகத் தரத்திலேயே நின்றுவிட்டவர்கள்

என்று எழுதி இருந்தார். அது தமிழ் இலக்கியத்தில் சுஜாதாவின் இடம் என்ன என்று யோசிக்க வைத்தது. கொஞ்ச நாளாக நிறைய சுஜாதா பதிவுகளாக வரவும் இதுதான் காரணம் – கையில் கிடைத்த புத்தகத்தை எல்லாம் படித்தேன்.

பதிவு ரொம்ப நீளமாகிவிட்டது. அதனால் சுருக்கத்தைத் தருகிறேன்.

சுஜாதாவுக்கு மூன்று முகங்கள் இருக்கின்றன – தாக்கம், முன்னோடி முயற்சிகள், தரம் வாய்ந்த படைப்புகள். அவரது தாக்கம் – குறிப்பாக கம்ப்யூட்டர் பற்றிய அபுனைவுகளின் (non -fiction) தாக்கம் – எண்பதுகளின் இளைஞர் கூட்டத்தின் மீது நிறைய உண்டு. அவர் மூலம்தான் நிறைய பேருக்கு இலக்கியம், ரசனை பற்றி அறிமுகம் கிடைத்தது. அவரது முன்னோடி முயற்சிகள் – குறிப்பாக SF (Science Fiction) – அறிவியல் புனைவுகள் முக்கியமானவை. சில சமயம் சாகசக் கதைகளின் limitations-ஐத் அவர் அநாயாசமாகத் தாண்டி இலக்கியம் படைத்திருக்கிறார். (நிர்வாண நகரம்) ஆனால் அவரது தரம் வாய்ந்த படைப்புகள் என்பது ஜெயமோகன் சொல்வது போல சில பல சிறுகதைகளும் (குறிப்பாக ஸ்ரீரங்கத்துக் கதைகள்) சில நாடகங்களும் மட்டுமே. ஜெயமோகன் அவரது மூன்றாவது முகத்தை மட்டும் கருத்தில் கொண்டு மேற்கண்ட வரிகளை எழுதி இருக்கிறார். மற்ற முகங்களை கணக்கில் எடுக்காததால் சுஜாதாவை குறைத்து மதிப்பிடுகிறார். ஆனால் எல்லா முகங்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டாலும் தமிழ் இலக்கிய வரலாற்றில் சுஜாதா இரண்டாம், மூன்றாம் படியில்தான் இருக்கிறார். சுருக்கமாகச் சொன்னால் சுஜாதா “வணிக/வாரப்பத்திரிகை எழுத்தாளர்களில்” முதன்மையானவர், அதிமுக்கியமானவர். அவணிக எழுத்தாளர், இலக்கியம் படைத்தவர் வரிசையிலும் அவருக்கு இடம் உண்டு.

நான் வளர்ந்து வந்த காலத்தில் சுஜாதா ஒரு icon. வாரப் பத்திரிகை எழுத்தின் சூப்பர்ஸ்டார். நிர்வாண நகரம், 24 ரூபாய் தீவு, நைலான் கயிறு போன்ற புத்தகங்கள் சுவாரசிய எழுத்து, இலக்கிய எழுத்து இரண்டுக்கும் நடுவில் எங்கேயோ இருக்கின்றன. Minor classics என்று கருதக்கூடிய பல புனைவுகளை அவர் எழுதி இருக்கிறார். சுவாரசியமான எழுத்தின் இலக்கிய சாத்தியங்களை ஒரு இரண்டு தலைமுறையினருக்காவது – அறுபதுகளின் இறுதியிலிருந்து எண்பதுகளின் இறுதி வரை – அவர் காட்டினார். மணியனையும் லக்ஷ்மியையும் சாண்டில்யனையும் படித்து வளர்ந்தவர்களுக்கு அவர் எழுத்தில் ஒரு புத்துணர்வு தெரிந்தது. புதுமைப்பித்தனும் அசோகமித்ரனும் கி.ரா.வும் சுந்தர ராமசாமியும் ஒரு சின்ன வாசகர் வட்டத்தைத் தாண்டி வராத காலம் அது என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.

ஆனால் அவர் வெறும் ஆலையில்லாத ஊருக்கு இலுப்பைப்பூ கேஸ்தானா இல்லை அதற்கு மேலும் ஏதாவது உண்டா? என்னைப் பொறுத்த வரையில் அவரது இடத்தை நிர்ணயிக்க நாம் மூன்று வேறு வேறு முகங்களைப் பார்க்க வேண்டும்.

  1. தாக்கம்
  2. முன்னோடி முயற்சிகள்
  3. இலக்கியம் என்ற உரைகல்லில் தேறும் படைப்புகள்

தாக்கம்:
தமிழ் கூறும் நல்லுலகில் அவரது தாக்கம் மிகப் பெரியது. கல்கிக்குப் பிறகு இத்தனை தாக்கம் உடைய, இத்தனை நாள் தாக்குப்பிடித்த, எழுத்தாளர் மற்றும் கலாசார சக்தி இவர்தான். அதற்கு அவரது நடையும், எழுத்தில் தெரிந்த இளமையும், புதுமையும் புத்துணர்ச்சியும் மட்டும் காரணமில்லை; விஞ்ஞானம், மின்னணுவியல் (electronics), கணினிகள் சமூகத்தின் பெரிய மாற்றமாக உருவெடுத்தபோது அவற்றைப் பற்றி விளக்கக் கூடிய திறம் வாய்ந்த ஒரே தமிழ் எழுத்தாளர் அவர்தான். பிரபலமான எழுத்தாளர் எழுதுவதை எல்லாரும் படித்தார்கள். ஓரளவு புரிந்தது. எண்பதுகளின் பிற்பாதியிலிருந்து தொண்ணூறுகள் வரை தமிழ்நாட்டின் இளைஞர் கூட்டம்- குறிப்பாக கிராமங்களிலிருந்து வந்த இளைஞர் கூட்டம் – அவர் மூலம்தான் கணினி, மின்னணுவியலை அறிமுகப்படுத்திக் கொண்டது. அவர்தான் அன்றைய விஞ்ஞான விக்கிபீடியா. அபுனைவுகள் (non-fiction) மூலம் மட்டுமல்ல, என் இனிய இயந்திரா, மீண்டும் ஜீனோ போன்ற கவர்ச்சிகரமான பாக்கேஜிங்கில் அவர்களுக்கு விஞ்ஞானப் புனைவுகள், விஞ்ஞானம் அறிமுகம் ஆனது. என் நண்பனின் வீடு கட்டும் கம்பெனி பேர் ஜீனோ பில்டர்ஸ்! ஏண்டா இப்படி சம்பந்தம் இல்லாமல் பேர் வைத்தாய் என்று ஒரு முறை கேட்டேன், அது ஒரு cool name, எல்லாருக்கும் சட்டென்று நினைவிருக்கும் என்று சொன்னான்.

கணேஷ்-வசந்த் கதைகளின் கவர்ச்சி, குறிப்பாக பெண்களைக் கவர்ந்த வசந்த், மத்யமர் போன்ற இலக்கியம் படைக்கும் முயற்சிகள், கரையெல்லாம் செண்பகப்பூ போன்ற நாவல்களில் நாட்டுப் பாடல் அறிமுகம் என்று பல விஷயங்கள் அவர் மேல் உள்ள ஈர்ப்பை அதிகரித்தன. அவருக்கு நல்ல புனைவுகளோடு, கவிதைகளோடு நல்ல பரிச்சயம் இருந்தது. அவற்றை கணையாழி மாதிரி பத்திரிகைகளில், தனிப்பட்ட முறையில் அறிமுகப்படுத்தி வைத்தார். வணிக எழுத்தின் வாடையே இல்லாத சுப்ரபாரதிமணியன் போன்றவர்கள் கூட அவரிடம் முன்னுரை வாங்கிப் போட்டார்கள். அவரது ரசனையின் மீது நம்பிக்கை இல்லாதவர் யாருமில்லை என்று நினைக்கிறேன்.

கவிதைகள் பற்றி பேசுவது, கணையாழி போன்ற இலக்கியப் பத்திரிகையில் எழுதுவது, பரந்த படிப்பு, விஞ்ஞானி என்ற முத்திரை, பல விஷயங்களை போகிறபோக்கில் அறிமுகப்படுத்துவது எல்லாம் அவரது தாக்கத்தை அதிகரித்திருக்கின்றன.

ஆனால் ஒரு விஷயம். இன்றைய பதின்ம வயதினர் அவரை விரும்பிப் படிப்பதில்லை. நிஜ விக்கிபீடியாவே இருக்கும்போது யாரும் அவரை அறிவியல் கலைக் களஞ்சியமாகப் பார்ப்பதில்லை. அவரது எழுத்தின் புத்துணர்ச்சி பழகிவிட்டது. அவர் இனி வரும் தலைமுறையினரிடம் இப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தப் போவதில்லை. சுருக்கமாகச் சொன்னால் இந்த முகம் ஒரு லோகல் முகம்; சிறிது காலமே நிற்கக் கூடிய முகம். அந்த குறுகிய காலத்தில், அந்த சின்ன வட்டத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பதால்தான் இந்த முகத்தைப் பற்றி யோசிக்க வேண்டி இருக்கிறது.

முன்னோடி முயற்சிகள்:
தமிழில் சில genre-கள் அவரோடுதான் ஆரம்பிக்கின்றன. அறிவியல் புனைவுகளை முதன்முதலாக எழுதியது அவர்தான். அவை சிறந்த அறிவியல் புனைவுகள் இல்லை என்பது வேறு விஷயம். மீண்டும் ஜீனோ மட்டும்தான் கொஞ்சம் பரவாயில்லை என்று நினைக்கிறேன். இப்போது படித்தால் என்ன நினைப்பேனோ தெரியாது. ஆனால் பிரதாப முதலியார் சரித்திரத்தை இன்று படித்தால் போரடிக்கிறது என்பதற்காக வேதநாயகம் பிள்ளையின் சாதனையை குறைத்து மதிப்பிட முடியுமா? அப்படித்தான் அவரது SF முயற்சிகளும்.

இன்றும் படிக்கக் கூடிய துப்பறியும் புனைவுகளை எழுதி இருக்கிறார். ஒரு விபத்தின் அனாடமி, நைலான் கயிறு போன்ற நாவல்களில் துப்பறியும் நாவல்களின் நுட்பங்களை நன்றாக கொண்டு வந்திருக்கிறார். நிர்வாண நகரம் போன்ற படைப்புகளில் அவர் துப்பறியும் புனைவுகளின் limitations-ஐ சுலபமாகத் தாண்டி இலக்கியம் படைத்திருக்கிறார்.

தமிழின் சிறந்த நாடக ஆசிரியர் வரிசையில் வைக்கப்பட வேண்டியவர். தமிழ் நாடக எழுத்தில் யாருமே ஷேக்ஸ்பியரோ பெர்னார்ட் ஷாவோ இப்சனோ ஆர்தர் மில்லரோ இல்லை என்பது வேறு விஷயம். ஆனால் அவரது சில நாடகங்கள் – ஊஞ்சல், சரளா போன்றவை – டென்னசி வில்லியம்சின் நல்ல படைப்புகளோடு ஒப்பிடக் கூடியவை.

பெ.நா. அப்புசாமிக்குப் பிறகு மீண்டும் மீண்டும் விஞ்ஞானம் பற்றி விளக்கியவரும் அவர்தான். ஆனால் இன்று அவற்றைப் படிக்க ஆள் இல்லை.

நல்ல இலக்கியம், குறிப்பாக கவிதைகளை மீண்டும் மீண்டும் அறிமுகப்படுத்தி இருக்கிறார். இதை வேறு பலரும் செய்திருக்கிறார்கள், ஆனால் யாருக்கும் இவரது பிராபல்யம் இருந்ததில்லை. அதனால் இவர் சொன்னதற்கு நல்ல தாக்கம் இருந்தது.

அவர் முனைந்திருந்தால் உலகத்தரம் வாய்ந்த SF, துப்பறியும் கதைகளை எழுதி இருக்கலாம். அவர் எதிலும் முழுமூச்சாக ஈடுபடவில்லை என்பதுதான் உண்மை. சாகசக் கதைகள் – குறிப்பாக கணேஷ்-வசந்த் கதைகள் தமிழின் மிகச் சிறந்த சாகசக் கதைகள். ஆனால் ஷெர்லாக் ஹோம்ஸை உரைகல்லாக வைத்துப் பார்த்தால் இவை மிகவும் பின்தங்கி இருக்கின்றன.

எத்தனை குறைகள் இருந்தாலும், முன்னோடி முயற்சிகள் முக்கியமானவை. ஆனால் அவற்றின் காலம் கடந்த பிறகு சராசரி வாசகன் அவற்றை ஒதுக்கத்தான் செய்வான். அவற்றின் முக்கியத்துவத்தை ஒரு தேர்ந்த விமர்சகருக்கு/வாசகருக்கு/ஆராய்ச்சியாளருக்குத்தான் விளங்கிக் கொள்ள முடியும். சுஜாதாவின் SF முயற்சிகளை நான் காலம் கடந்துவிட்ட முன்னோடி முயற்சிகள் என்றுதான் கணிக்கிறேன். இந்தக் கணிப்பு சுஜாதாவின் “விஞ்ஞானச் சிறுகதைகள்” தொகுப்பை வைத்து ஏற்பட்டது. என் இனிய இயந்திரா, மீண்டும் ஜீனோ பல வருஷங்களுக்கு முன் படித்தது. இப்போது மீண்டும் படித்தால் என் எண்ணம் மாறலாம்.

சாகசக் கதைகளின் காலம் இன்னும் முடியவில்லை, ஆனால் அந்தக் கதைகளின் limitations-ஐ அவர் தாண்டி இருக்கும் கதைகளே – நைலான் கயிறு, நிர்வாண நகரம் இத்யாதி – இன்னும் பல ஆண்டுகள் நிற்கும்.

நினைவில் நிற்கும் படைப்புகள்:
முழு வெற்றி பெற்ற படைப்புகள் என்பவை குறைவே. சில பல சிறுகதைகள், சில நாடகங்கள் ஆகியவற்றையே அவரது சாதனையாகக் கொள்ள வேண்டும். ஸ்ரீரங்கத்து சிறுகதைகள் – அதுவும் அவை தொகுக்கப்பட்டிருக்கும்போது – நல்ல இலக்கியம். ஒரு தனி சிறுகதையின் தாக்கத்தை விட அந்தத் தொகுப்பின் தாக்கம் அதிகம். அன்றைய அய்யங்கார்களின் ஸ்ரீரங்கத்தை – இன்றைக்கு அது இல்லை – காலாகாலத்துக்கும் நினைவு கொள்ள அவரது சிறுகதைகள்தான் காரணம். பிரச்சினை என்னவென்றால் அவரது output அதிகம். அதில் நல்ல சிறுகதைகள் என்று தேடுவது கொஞ்சம் கஷ்டம். தேறும் விகிதம் (எனக்கு) குறைவுதான்.

ஒரு எழுத்தாளரின் தரத்தை நிர்ணயிக்க சுலபமான வழி அவர் எழுதியதில் எதை எல்லாம் மொழிபெயர்த்து உலக அளவில் கொண்டு போக வேண்டும் என்று யோசிப்பதுதான். மூன்றாவது முகம், நினைவில் நிற்கும் படைப்புகள், இலக்கியம் என்பது ஏறக்குறைய அதுதான். அப்படி சுஜாதா எழுத்துகளில் கொண்டு போக வேண்டியவை என்றால் ஸ்ரீரங்கத்துக் கதைகள் (அவை அழிந்துபோன ஒரு உலகை தத்ரூபமாகக் காட்டுகின்றன), மேலும் சில சிறுகதைகள், இரண்டு மூன்று நாடகங்கள். உலக அளவில் வைத்துப் பார்த்தால் அவர் footnote என்ற அளவுக்குக் கூட வருவாரா என்பது சந்தேகம்தான்.

ஜெயமோகன் அவரது மூன்றாவது முகத்தை வைத்து மட்டுமே அவரை மதிப்பிடுகிறார். பிரதாப முதலியார்/கமலாம்பாள்/பத்மாவதி சரித்திரத்தின் முக்கியத்துவத்தை உணரும், எல்லாருக்கும் எடுத்துச் சொல்லும் ஜெயமோகன் சுஜாதாவின் முன்னோடி முயற்சிகளுக்கு உரிய முக்கியத்துவம் கொடுப்பதில்லை. சுஜாதாவின் அபுனைவுகளை (non-fiction) ஜெயமோகன் பொருட்படுத்துவதாகத் தெரியவில்லை. சுஜாதாவின் தாக்கத்தை ஜெயமோகன் கண்டுகொள்வதே இல்லை. இலக்கியம் என்றால் எப்போதுமே ஜெயமோகன் படு கறாராக எடை போடுவார். இப்படி மூன்றாவது முகத்தை வைத்து மட்டுமே பார்ப்பதால் ஜெயமோகன் சுஜாதாவை கொஞ்சம் underestimate செய்கிறார். மூன்றாவது முகத்தை மட்டும் வைத்துப் பார்த்தால் அவர் சொல்வது எனக்கும் ஏறக்குறைய சரியே. ஆனால் அவரது முன்னோடி முயற்சிகள், SF, சாகசக் கதைகளின் format-இல் அவற்றின் limitations-ஐ தாண்டுவது, அபுனைவுகளின் தாக்கம் ஆகியவையும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டியவையே என்பது என் உறுதியான கருத்து.

ஆனால் மூன்று முகங்களையும் வைத்துப் பார்த்தாலும் நான் சுஜாதாவை தமிழ் எழுத்தாளர்களின் இரண்டாம் வரிசையில்தான் வைப்பேன். ஆனால் முதல் வரிசையில் மிஞ்சி மிஞ்சிப் போனால் என்ன பத்து இருபது பேர் இருப்பார்களா? என் கண்ணில் அவர் சாதனையாளரே.

பின்குறிப்பு #1: சுஜாதா பற்றி எனக்கு நிறைய நாஸ்டால்ஜியா உண்டு. சிறு வயதிலேயே படிக்கும் பழக்கம் வந்துவிட்டாலும், சுஜாதாவுக்கு முன்பு சில – வெகு சில – தரம் வாய்ந்த புத்தகங்களைப் படித்திருந்தாலும், இலக்கியம்+சுவாரசியம் என்பதற்கான அறிமுகம் சுஜாதாவிடமிருந்துதான் கிடைத்தது. அவருடைய எல்லா புத்தகங்களையும் படிக்க வேண்டும் என்று ஆசை. Bibliography ஏதாவது இருக்கிறதா? நண்பர் ரமணன் கொடுத்த bibliography சுட்டி. பேச்சி தந்த சுட்டி இங்கே.சுஜாதா பக்தர்கள் யாருக்காவது இதை உருவாக்கும் திட்டம் இருக்கிறதா? உப்பிலி ஸ்ரீனிவாஸ்? (பால்ஹனுமான்)

பின்குறிப்பு #2: எண்பதுகளுக்குப் பிறகு சுஜாதா எழுதிய புனைவுகளில் – உள்ளம் துறந்தவன் மாதிரி -கொஞ்சம் சொதப்பி இருப்பார், ஆனால் அதற்கு முன் அப்படி இல்லை என்று எனக்கு ஒரு நினைப்பு இருந்தது. அவர் ஸ்டாராக இருந்த காலத்திலும் – எதையும் ஒரு முறை இத்யாதி – சில சமயம் அப்படித்தான் என்று தெரிந்தது வியப்புதான். வாரப் பத்திரிகைகளில் தொடர்கதையாக விட்டுவிட்டு படிக்கும்போது இது தெரிவதில்லை, ஆனால் மொத்தமாகப் படிக்கும்போது தெரிகிறது.

பின்குறிப்பு #3: ஜெயமோகன் சுஜாதாவை நிராகரிக்கிறார் என்று ஒரு கருத்து பரவலாக நிலவுகிறது. மேலோட்டமாகப் படிக்காதீர்கள். ஜெயமோகன் சுஜாதாவைப் புகழ்ந்து சொன்னால் அதை யாரும் கண்டுகொள்வதில்லை. ஆனால் அவர் குறை கண்டுபிடித்தால் அது பூதாகாரமாகத் தெரிகிறது!

ஜெயமோகனின் விமர்சனம் இதுதான் – சுஜாதாவின் புனைவுகளில் முக்கால்வாசி இலக்கியம் என்று சொல்வதற்கில்லை. அந்த விகிதம் என்ன, பத்து சதவிகிதம் புனைவுகள்தான் இலக்கியமா, இருபதா, ஐம்பதா, எண்பதா என்பதில் நீங்களும் நானும் ஜெயமோகனும் வேறுபடலாம். ஆனால் சுஜாதா சொதப்பியும் இருக்கிறார், இலக்கியம் என்று சொல்ல முடியாத புனைவுகளும் எழுதி இருக்கிறார் என்பதை யாரும் மறுக்க முடியாது. அவர் இலக்கியம் படைத்திருக்கிறார் என்பதை ஜெயமோகனும் பல முறை அழுத்தி சொல்லி இருக்கிறார். சந்தேகம் இருந்தால் அப்பா அன்புள்ள அப்பா என்ற பதிவுக்கு அவர் எழுதிய கமெண்டைப் பாருங்கள்.

ஒரு முந்தையப் பதிவிலிருந்து – ஜெயமோகன் தேர்ந்தெடுத்த சிறந்த சிறுகதைகள் பற்றி – சில வார்த்தைகளை கீழே கொடுத்திருக்கிறேன்.

புதுமைப்பித்தனின் 12 சிறுகதைகள். அசோகமித்ரனுக்கும் 12. தி.ஜா., அழகிரிசாமி, கி. ராஜநாராயணன், சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன், கோணங்கிக்கு தலா 8. சுஜாதாவுக்கு 7. பிச்சமூர்த்தி, லா.ச.ரா., ஆ. மாதவன், முத்துலிங்கம், வண்ணதாசன், கந்தர்வன், யுவன் சந்திரசேகர், ஜெயமோகன் ஆகியோருக்கு தலா 6. இந்த 17 பேருக்கும் ஏறக்குறைய பாதி கதைகள்.

அதாவது நல்ல சிறுகதைகளை எழுதியவர்கள் என்று பார்த்தால் (என் கண்ணில்) ஜீனியஸ்களான புதுமைப்பித்தன், அசோகமித்திரன் ஆகியோருக்கு அடுத்த வரிசையில் சுஜாதா – தி.ஜா., அழகிரிசாமி, கி.ரா., சுந்தரராமசாமி, ஜெயகாந்தன், லா.ச.ரா., ஜெயமோகன் இத்யாதியினருடன் இருக்கிறார்!

அனுபந்தம் – ஜெயமோகன் தேர்ந்தெடுத்த சுஜாதா சிறுகதைகள்

  1. நகரம்
  2. குதிரை
  3. மாஞ்சு
  4. ஓர் உத்தம தினம்
  5. நிபந்தனை
  6. விலை
  7. எல்டொரோடா

நகரம் சிறுகதைக்கு மட்டும் அழியாச்சுடர்களில் லிங்க் கிடைத்தது. மிச்ச கதைகளுக்கும் சுஜாதா பக்தர்கள் யாராவது லிங்க் கொடுங்கப்பா/ம்மா!

நண்பர் ரமணன் கொடுத்த bibliography சுட்டி. பேச்சி தந்த சுட்டி இங்கே.

 

தொகுக்கப்பட்ட பக்கம்: சுஜாதா பக்கம்

கவிதைகளுக்கு ஒரு தளம் (அரியவை.ப்ளாக்ஸ்பாட்.காம்)

இந்தத் தளம் எனக்கானதில்லை; கவிதை விரும்பிகளுக்காக. ஜெயமோகன் சிபாரிசு செய்யும் கவிதைகளைத் தொகுத்து ஒரே இடத்தில் தருகிறாராம். தொகுக்கும் மகானுபாவன் யார் என்று தெரியவில்லை பேர் கு. மாரிமுத்து என்று தெரிகிறது, வாழ்த்துக்கள் மாரிமுத்து!

தொடர்புடைய சுட்டிகள்:
ஜெயமோகனின் லிஸ்ட்