சுஜாதாவின் “கமிஷனருக்குக் கடிதம்”

சுஜாதா போலீஸ் துறையை – குறிப்பாக பெங்களூர் போலீஸ் அதிகாரிகளை வைத்து – சில கதைகள் எழுதி இருக்கிறார். வசந்த காலக் குற்றங்கள் என்ற இன்னொரு கதை நினைவு வருகிறது.

கமிஷனர் சுதாகர் முரட்டு ஆசாமி. அவரிடம் மாயா பயிற்சிக்காக வந்து சேர்கிறாள். வந்த முதல் நாளே அவளை ஒரு கோரமான விபத்து, தற்கொலை கேஸ் என்று பிணங்களைக் காட்டி கொஞ்சம் பயமுறுத்துகிறார். பிறகு நைட் லைஃப் காட்டுகிறேன் பேர்வழி என்று அவிழ்த்துப்போட்டு ஆடும் காபரே டான்ஸ், ட்ரக்ஸ் அடிக்கும் இளைஞர் கூட்டம், விபச்சாரிகள் என்று காட்டுகிறார். அவளால் கவரப்படும் இன்ஸ்பெக்டர் ரமேஷை அவளிடமிருந்து பலவந்தமாகப் பிரிக்கிறார். சுதாகரின் சொந்த வாழ்க்கை சோகம். விவாகரத்து. மகளை தன்னுடன் ஒட்டவிட மாட்டேன் என்கிறாள் என்று முன்னாள் மனைவி மீது கோபம். ரமேஷ் மாயாவை எச்சரிக்கிறான். தன் காதலையும் சொல்கிறான். சுதாகரும் அப்ளிகேஷன் போடுகிறார். சுதாகரின் மகள் கடத்தப்படுகிறார். சுதாகருக்கு ஹார்ட் அட்டாக். முன்னாள் மனைவிக்கும் சுதாகருக்கும் சண்டை, ஆறுதல் சொல்லிக் கொள்வது எல்லாம் நடக்கிறது. மகள் கிடைத்தாளா, மாயா யாரைத் தேர்ந்தெடுக்கிறாள் என்பதுதான் கதை.

கதையின் பலம் மாயாவுக்கு சுதாகர் “பயிற்சி” தருவதுதான். போலீஸ் வாழ்க்கையை, நகரத்தின் சிறு குற்ற உலகை துல்லியமாகக் காட்டுகிறார். முடிச்சும் தீர்வும் யூகிக்கக் கூடியவைதான், ஆனால் நன்றாக வந்திருக்கிறது.

பலவீனம் பார்ப்பவர் எல்லாம் மாயாவை சைட் அடிப்பது; மாயா ஒரு விபச்சாரியின் தலை மயிரைக் கத்தரிப்பது துப்பாக்கி சூட்டில் போய் முடிவது நம்பும்படி இல்லை.

படிக்கலாம். ஆனால் படித்தே ஆக வேண்டிய புத்தகம் இல்லை.

கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. விலை நூறு ரூபாய்.