சுஜாதா போலீஸ் துறையை – குறிப்பாக பெங்களூர் போலீஸ் அதிகாரிகளை வைத்து – சில கதைகள் எழுதி இருக்கிறார். வசந்த காலக் குற்றங்கள் என்ற இன்னொரு கதை நினைவு வருகிறது.
கமிஷனர் சுதாகர் முரட்டு ஆசாமி. அவரிடம் மாயா பயிற்சிக்காக வந்து சேர்கிறாள். வந்த முதல் நாளே அவளை ஒரு கோரமான விபத்து, தற்கொலை கேஸ் என்று பிணங்களைக் காட்டி கொஞ்சம் பயமுறுத்துகிறார். பிறகு நைட் லைஃப் காட்டுகிறேன் பேர்வழி என்று அவிழ்த்துப்போட்டு ஆடும் காபரே டான்ஸ், ட்ரக்ஸ் அடிக்கும் இளைஞர் கூட்டம், விபச்சாரிகள் என்று காட்டுகிறார். அவளால் கவரப்படும் இன்ஸ்பெக்டர் ரமேஷை அவளிடமிருந்து பலவந்தமாகப் பிரிக்கிறார். சுதாகரின் சொந்த வாழ்க்கை சோகம். விவாகரத்து. மகளை தன்னுடன் ஒட்டவிட மாட்டேன் என்கிறாள் என்று முன்னாள் மனைவி மீது கோபம். ரமேஷ் மாயாவை எச்சரிக்கிறான். தன் காதலையும் சொல்கிறான். சுதாகரும் அப்ளிகேஷன் போடுகிறார். சுதாகரின் மகள் கடத்தப்படுகிறார். சுதாகருக்கு ஹார்ட் அட்டாக். முன்னாள் மனைவிக்கும் சுதாகருக்கும் சண்டை, ஆறுதல் சொல்லிக் கொள்வது எல்லாம் நடக்கிறது. மகள் கிடைத்தாளா, மாயா யாரைத் தேர்ந்தெடுக்கிறாள் என்பதுதான் கதை.
கதையின் பலம் மாயாவுக்கு சுதாகர் “பயிற்சி” தருவதுதான். போலீஸ் வாழ்க்கையை, நகரத்தின் சிறு குற்ற உலகை துல்லியமாகக் காட்டுகிறார். முடிச்சும் தீர்வும் யூகிக்கக் கூடியவைதான், ஆனால் நன்றாக வந்திருக்கிறது.
பலவீனம் பார்ப்பவர் எல்லாம் மாயாவை சைட் அடிப்பது; மாயா ஒரு விபச்சாரியின் தலை மயிரைக் கத்தரிப்பது துப்பாக்கி சூட்டில் போய் முடிவது நம்பும்படி இல்லை.
படிக்கலாம். ஆனால் படித்தே ஆக வேண்டிய புத்தகம் இல்லை.
கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. விலை நூறு ரூபாய்.
அன்பு நன்பரே!
சரிதான். உங்களுக்கு சுஜாதாவின் எழுத்துக்கள் பால் ஏதோ ஒரு pre-conceived நோஷன் இருக்கிறது. (உடனே உங்களுக்கு இருக்கிறதா என ஆரம்பித்து விடாதீர்கள்). ஏதேனும் நேண்டி-நோண்டி குறை சொல்லியே ஆகவேண்டும் என தீர்மானித்தது போல இருக்கிறது, உங்களது விமரிசனம். இந்த “கமிஷனருக்கு கடிதம்’ புத்தகத்தை குறைந்த பட்சமாக மூன்று முறை படித்துள்ளேன். எனது மனதைக் கவர்ந்த புத்தகம் தான் அது.
/பலவீனம் பார்ப்பவர் எல்லாம் மாயாவை சைட் அடிப்பது; மாயா ஒரு விபச்சாரியின் தலை மயிரைக் கத்தரிப்பது நம்பும் படியாக இல்லை / என்கிறீர்கள். அவர் அவ்வாறு ஏன் செய்தார் என்பது யூகிக்கக் கூடியது தானே? முடிவாக இது படித்தே தீரவேண்டிய புத்தகம் இல்லை என்கிறீர்கள்.
அவரின் கூர்மையான எழுத்துக்கள், துல்லியமான வர்ணனை, மறைமுக சமுதாய சாடல்கள், அற்புதமான வார்த்தை தேர்வுகள், கதையின் கட்டமைப்பு, வாசகனை கட்டிப்போடும் துள்ளல் நடை எதுவும் உங்களுக்கு கண்களுக்கு தெரியவில்லையா? அல்லது தெரிந்து கொள்ள மறுக்கிறீர்களா ?..புரியவில்லை.
ஒன்று செய்யுங்கள். அவர் எழுதியதில் ஏதேனும், எப்போதாவது, நல்லதாக “உங்களுக்கு’ தென்பட்டால் அப்புத்தகத்தை ‘சிபாரிசு’ செய்யுங்கள்.உங்கள் “பார்வையில்”, ‘சுஜாதா’ “இலக்கியவாதியே அல்ல”, வெறும் காசு பண்ணியவர் என்றால், ஒன்று செய்யுங்கள்; அவரை படிக்காதீர்கள்; அப்படியே படித்தாலும் “படித்தே தீரவேண்டிய புத்தகம் அல்ல” என்று நீங்கள் தீர்மாணித்தால் அதை வேலை மெனக்கெட்டு பப்ளிஷ் பண்ணாமல், உங்களுக்கு பிடித்த வேறு எழுத்தாளர்களின் “சௌகரியமான” எழுத்துக்களை சிபாரிசு செய்யுங்கள். அதை படித்துக் கொள்கிறோம்.
“பத்ரி” சார் கூட அவர் புத்தகங்களை வெளியிட்டு காசு பண்ணிவிட்டு பிறகு விமரிசிப்பாராம்! வேதனை!
எனது நன்பர் வட்டாரத்தில், எனது பார்வையில், எதேனும் புத்தகங்கள் “சரியாயில்லை” எனப்பட்டால், அதை மற்றவர்களிடம் தம்பட்டம் போட்டு சொல்வதில்லை. மாறாக, நல்ல புத்தகம் என நான் உணருவதை மட்டும், மற்றவர்க்ளுக்குச் சொல்லி படிக்கச் சொல்லுவேன். அதுதான் என் தாய்மொழிக்கு என்னால் இயன்ற ‘அணில்’ பணி.
நன்றி
பலராமன்.
LikeLike
இந்த “கமிஷனருக்கு கடிதம்’ புத்தகத்தை குறைந்த பட்சமாக மூன்று முறை படித்துள்ளேன். எனது மனதைக் கவர்ந்த புத்தகம்தான் அது. // நீங்கள் முப்பது முறை படித்தாலும் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. 🙂
// //பலவீனம் பார்ப்பவர் எல்லாம் மாயாவை சைட் அடிப்பது; மாயா ஒரு விபச்சாரியின் தலை மயிரைக் கத்தரிப்பது நம்பும் படியாக இல்லை / என்கிறீர்கள். அவர் அவ்வாறு ஏன் செய்தார் என்பது யூகிக்கக் கூடியது தானே? // நீங்கள் அந்த வரிகளை சரியாகப் படிக்கவில்லை. அப்படி கத்தரிப்பது துப்பாக்கி சூட்டில் முடிவது நம்பும்படியாக இல்லை, கத்தரிப்பது நம்பும்படியாகத்தான் இருக்கிறது.
// முடிவாக இது படித்தே தீரவேண்டிய புத்தகம் இல்லை என்கிறீர்கள். அவரின் கூர்மையான எழுத்துக்கள், துல்லியமான வர்ணனை, மறைமுக சமுதாய சாடல்கள், அற்புதமான வார்த்தை தேர்வுகள், கதையின் கட்டமைப்பு, வாசகனை கட்டிப்போடும் துள்ளல் நடை எதுவும் உங்களுக்கு கண்களுக்கு தெரியவில்லையா? அல்லது தெரிந்து கொள்ள மறுக்கிறீர்களா ?..புரியவில்லை. // உங்கள் ரசனைப்படி நீங்கள் உங்கள் கருத்தை எழுதுகிறீர்கள், என் ரசனைப்படி நான் என் கருத்தை. இதில் உங்களுக்கு என்ன பிரச்சினை? சுஜாதா எழுதி இருந்தால் அதில் குறையே இருக்காதா? உங்களுக்கு பலங்கள் மட்டுமே தெரிகின்றன, எனக்கு பலம், பலவீனம் இரண்டும் தெரிகிறது, அவ்வளவுதான்.
// எனது நன்பர் வட்டாரத்தில், எனது பார்வையில், எதேனும் புத்தகங்கள் “சரியாயில்லை” எனப்பட்டால், அதை மற்றவர்களிடம் தம்பட்டம் போட்டு சொல்வதில்லை. மாறாக, நல்ல புத்தகம் என நான் உணருவதை மட்டும், மற்றவர்க்ளுக்குச் சொல்லி படிக்கச் சொல்லுவேன். அதுதான் என் தாய்மொழிக்கு என்னால் இயன்ற ‘அணில்’ பணி. // உங்கள் பாணி உங்களுக்கு. நீங்கள் பணி செய்யக் கிளம்பி இருக்கிறீர்கள், வாழ்த்துக்கள். நான் என்னுடைய வாசிப்பு அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள. எல்லாரும் பணி செய்ய வேண்டும், அதுவும் உங்கள் பாணியிலயே பணி செய்ய வேண்டுமா என்ன?
LikeLike
RV,
சுஜாதா பிடிக்குமென்றாலும், இந்தப் புத்தகத்தைப் படித்த போது எனக்கு ஆயாசமே ஏற்பட்டது… காரணத்தை என் பதிவிலேயே எழுதிவிட்டேன்…
இந்தப் புத்தகத்தின் என் விமர்சனத்தில் நான் கடைசியாக எழுதியிருந்தது
“Verdict: படிக்கக் கூடத் தேவையில்லை”
LikeLike
கார்த்திக், நான் வேறுபடுகிறேன் // போலீஸ் வாழ்க்கையை, நகரத்தின் சிறு குற்ற உலகை துல்லியமாகக் காட்டுகிறார். முடிச்சும் தீர்வும் யூகிக்கக் கூடியவைதான், ஆனால் நன்றாக வந்திருக்கிறது. // படிக்கலாம், ஆனால் சுமார்தான் என்பது என் கருத்து.
LikeLike