சுஜாதாவின் “அனிதாவின் காதல்கள்”

குற்றப் பின்னணி இல்லாமல் சுஜாதா எழுதி இருக்கும் இன்னொரு நாவல்.

காலேஜ் மாணவி அனிதா. அவளைப் பார்க்கும் வைரவன் – அம்பானி ரேஞ்ச் பணக்காரன் – வேறென்ன, காதலிக்கிறான். அனிதா யோசிப்பதற்குள் அவளைப் பெண் பார்க்க வரும் யு.எஸ். மாப்பிள்ளை சுரேஷ் கல்யாணம் செய்து கொள்ளத் துடிக்கிறான். அதை நிறுத்த அனிதா வைரவனிடம் தொடர்பு கொள்கிறாள். காரியம் நடக்கிறது. அனிதாவுக்கு வைரவன் மீது ஆசை உண்டா இல்லையா என்று அவளுக்கே குழப்பம். குழப்பம் தீர வைரவன் வாய்ப்பு தருவதில்லை. கிடுகிடுவென்று தன் பணத்தால் அனிதாவின் குடும்பத்தினரை வீழ்த்தி அனிதாவை மணம் செய்து கொள்கிறான். அனிதாவின் முறை மாப்பிள்ளை சீதாராமனுக்கு ரொம்ப நாளாக அவள் மீது ஆசை நிராசையாக முடிகிறது. கல்யாணம் ஆன ஓரிரு மாதங்களில் அனிதா வைரவனுக்கு தன் மேல் இருப்பது ஒரு வித obsession, தான் ஏறக்குறைய ஜெயிலில் இருக்கிறோம் என்று உணர்கிறாள். என்ன நடக்கிறது என்று புரிந்து கொள்வதற்குள் வைரவன் கைது – ஹர்ஷத் மேத்தா டைப் குற்றங்களுக்காக. யு.எஸ். மாப்பிள்ளை சுரேஷ் பழைய விஷயங்கள் முக்கியமில்லை, தான் கல்யாணம் செய்து கொள்கிறேன் என்கிறான், இன்னொரு பாடகன் பிரசன்னா அப்ளிகேஷன் போடுகிறான், சீதாராமனோடு கல்யாண ஏற்பாடே நடக்கிறது. அனிதா யாரோடு சேர்கிறாள் என்பதுதான் மிச்சக் கதை.

கதையின் பெரிய பலம் அனிதாவுக்கு தன் வாழ்க்கையில் மேல் துளியும் கண்ட்ரோல் இல்லை என்பதை நம்மை உணர வைப்பதுதான். என்னவோ நடக்கிறது, she gets swept along. அவள் தன் வாழ்வை தானே கண்ட்ரோல் செய்யும் தருணத்தில் – அது என்ன முடிவாக இருந்தாலும் சரி, அவள் எடுக்கும் முடிவு என்று ஆகும் தருணம் நம்மை சபாஷ் போட வைக்கிறது.

குறைகள்? Cliche-க்கள் நிறைய. தியாகச்சுடர் முறை மாப்பிள்ளை, அம்பானி ரேஞ்ச் பணக்காரன் கரெக்டாக அனிதா வீட்டு வாசலில் விபத்தில் சிக்கி அனிதாவைப் பார்த்து கண்டதும் காதல் ஏற்படுவது, டிபிகல் யு.எஸ். மாப்பிள்ளை, தேவையே இல்லாத நான்காவது காதலன் என்று போகிறது. அனிதாவின் பாத்திரம், அவர்கள் குடும்பம் உண்மையான மனிதர்களாகத் தெரிகிறார்கள். மிச்ச பேர் எல்லாம் கார்ட்போர்ட் கட்டவுட்கள்.

கிழக்கு பதிப்பகம் மீண்டும் பதித்திருக்கிறது. விலை 160 ரூபாய்.

பிற்சேர்க்கை: விமல் புண்ணியத்தில் மின்னூலை தரவிறக்கிக் கொள்ளலாம்.