சுஜாதாவின் மூன்று முகங்களும் தமிழ் இலக்கிய வரலாற்றில் அவரது இடமும்

சமீபத்தில் ஜெயமோகன் சுஜாதா

இலக்கியவாதி என்பதைக் காட்டிலும் வணிக எழுத்தாளர்தான். உங்கள் தேவை சுவாரசியம் என்பதல்லாமல் ஆன்மபரிசோதனையோ, அறிவார்ந்த தேடலோ, உணர்வுகளின் அனுபவமோ என்றால் உங்களுக்கு சுஜாதா பெரிதாகப் படமாட்டார். சுஜாதாவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்கள் பதின்பருவத்தில் அவரை வாசித்து அதன் பின் அந்த வாசகத் தரத்திலேயே நின்றுவிட்டவர்கள்

என்று எழுதி இருந்தார். அது தமிழ் இலக்கியத்தில் சுஜாதாவின் இடம் என்ன என்று யோசிக்க வைத்தது. கொஞ்ச நாளாக நிறைய சுஜாதா பதிவுகளாக வரவும் இதுதான் காரணம் – கையில் கிடைத்த புத்தகத்தை எல்லாம் படித்தேன்.

பதிவு ரொம்ப நீளமாகிவிட்டது. அதனால் சுருக்கத்தைத் தருகிறேன்.

சுஜாதாவுக்கு மூன்று முகங்கள் இருக்கின்றன – தாக்கம், முன்னோடி முயற்சிகள், தரம் வாய்ந்த படைப்புகள். அவரது தாக்கம் – குறிப்பாக கம்ப்யூட்டர் பற்றிய அபுனைவுகளின் (non -fiction) தாக்கம் – எண்பதுகளின் இளைஞர் கூட்டத்தின் மீது நிறைய உண்டு. அவர் மூலம்தான் நிறைய பேருக்கு இலக்கியம், ரசனை பற்றி அறிமுகம் கிடைத்தது. அவரது முன்னோடி முயற்சிகள் – குறிப்பாக SF (Science Fiction) – அறிவியல் புனைவுகள் முக்கியமானவை. சில சமயம் சாகசக் கதைகளின் limitations-ஐத் அவர் அநாயாசமாகத் தாண்டி இலக்கியம் படைத்திருக்கிறார். (நிர்வாண நகரம்) ஆனால் அவரது தரம் வாய்ந்த படைப்புகள் என்பது ஜெயமோகன் சொல்வது போல சில பல சிறுகதைகளும் (குறிப்பாக ஸ்ரீரங்கத்துக் கதைகள்) சில நாடகங்களும் மட்டுமே. ஜெயமோகன் அவரது மூன்றாவது முகத்தை மட்டும் கருத்தில் கொண்டு மேற்கண்ட வரிகளை எழுதி இருக்கிறார். மற்ற முகங்களை கணக்கில் எடுக்காததால் சுஜாதாவை குறைத்து மதிப்பிடுகிறார். ஆனால் எல்லா முகங்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டாலும் தமிழ் இலக்கிய வரலாற்றில் சுஜாதா இரண்டாம், மூன்றாம் படியில்தான் இருக்கிறார். சுருக்கமாகச் சொன்னால் சுஜாதா “வணிக/வாரப்பத்திரிகை எழுத்தாளர்களில்” முதன்மையானவர், அதிமுக்கியமானவர். அவணிக எழுத்தாளர், இலக்கியம் படைத்தவர் வரிசையிலும் அவருக்கு இடம் உண்டு.

நான் வளர்ந்து வந்த காலத்தில் சுஜாதா ஒரு icon. வாரப் பத்திரிகை எழுத்தின் சூப்பர்ஸ்டார். நிர்வாண நகரம், 24 ரூபாய் தீவு, நைலான் கயிறு போன்ற புத்தகங்கள் சுவாரசிய எழுத்து, இலக்கிய எழுத்து இரண்டுக்கும் நடுவில் எங்கேயோ இருக்கின்றன. Minor classics என்று கருதக்கூடிய பல புனைவுகளை அவர் எழுதி இருக்கிறார். சுவாரசியமான எழுத்தின் இலக்கிய சாத்தியங்களை ஒரு இரண்டு தலைமுறையினருக்காவது – அறுபதுகளின் இறுதியிலிருந்து எண்பதுகளின் இறுதி வரை – அவர் காட்டினார். மணியனையும் லக்ஷ்மியையும் சாண்டில்யனையும் படித்து வளர்ந்தவர்களுக்கு அவர் எழுத்தில் ஒரு புத்துணர்வு தெரிந்தது. புதுமைப்பித்தனும் அசோகமித்ரனும் கி.ரா.வும் சுந்தர ராமசாமியும் ஒரு சின்ன வாசகர் வட்டத்தைத் தாண்டி வராத காலம் அது என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.

ஆனால் அவர் வெறும் ஆலையில்லாத ஊருக்கு இலுப்பைப்பூ கேஸ்தானா இல்லை அதற்கு மேலும் ஏதாவது உண்டா? என்னைப் பொறுத்த வரையில் அவரது இடத்தை நிர்ணயிக்க நாம் மூன்று வேறு வேறு முகங்களைப் பார்க்க வேண்டும்.

 1. தாக்கம்
 2. முன்னோடி முயற்சிகள்
 3. இலக்கியம் என்ற உரைகல்லில் தேறும் படைப்புகள்

தாக்கம்:
தமிழ் கூறும் நல்லுலகில் அவரது தாக்கம் மிகப் பெரியது. கல்கிக்குப் பிறகு இத்தனை தாக்கம் உடைய, இத்தனை நாள் தாக்குப்பிடித்த, எழுத்தாளர் மற்றும் கலாசார சக்தி இவர்தான். அதற்கு அவரது நடையும், எழுத்தில் தெரிந்த இளமையும், புதுமையும் புத்துணர்ச்சியும் மட்டும் காரணமில்லை; விஞ்ஞானம், மின்னணுவியல் (electronics), கணினிகள் சமூகத்தின் பெரிய மாற்றமாக உருவெடுத்தபோது அவற்றைப் பற்றி விளக்கக் கூடிய திறம் வாய்ந்த ஒரே தமிழ் எழுத்தாளர் அவர்தான். பிரபலமான எழுத்தாளர் எழுதுவதை எல்லாரும் படித்தார்கள். ஓரளவு புரிந்தது. எண்பதுகளின் பிற்பாதியிலிருந்து தொண்ணூறுகள் வரை தமிழ்நாட்டின் இளைஞர் கூட்டம்- குறிப்பாக கிராமங்களிலிருந்து வந்த இளைஞர் கூட்டம் – அவர் மூலம்தான் கணினி, மின்னணுவியலை அறிமுகப்படுத்திக் கொண்டது. அவர்தான் அன்றைய விஞ்ஞான விக்கிபீடியா. அபுனைவுகள் (non-fiction) மூலம் மட்டுமல்ல, என் இனிய இயந்திரா, மீண்டும் ஜீனோ போன்ற கவர்ச்சிகரமான பாக்கேஜிங்கில் அவர்களுக்கு விஞ்ஞானப் புனைவுகள், விஞ்ஞானம் அறிமுகம் ஆனது. என் நண்பனின் வீடு கட்டும் கம்பெனி பேர் ஜீனோ பில்டர்ஸ்! ஏண்டா இப்படி சம்பந்தம் இல்லாமல் பேர் வைத்தாய் என்று ஒரு முறை கேட்டேன், அது ஒரு cool name, எல்லாருக்கும் சட்டென்று நினைவிருக்கும் என்று சொன்னான்.

கணேஷ்-வசந்த் கதைகளின் கவர்ச்சி, குறிப்பாக பெண்களைக் கவர்ந்த வசந்த், மத்யமர் போன்ற இலக்கியம் படைக்கும் முயற்சிகள், கரையெல்லாம் செண்பகப்பூ போன்ற நாவல்களில் நாட்டுப் பாடல் அறிமுகம் என்று பல விஷயங்கள் அவர் மேல் உள்ள ஈர்ப்பை அதிகரித்தன. அவருக்கு நல்ல புனைவுகளோடு, கவிதைகளோடு நல்ல பரிச்சயம் இருந்தது. அவற்றை கணையாழி மாதிரி பத்திரிகைகளில், தனிப்பட்ட முறையில் அறிமுகப்படுத்தி வைத்தார். வணிக எழுத்தின் வாடையே இல்லாத சுப்ரபாரதிமணியன் போன்றவர்கள் கூட அவரிடம் முன்னுரை வாங்கிப் போட்டார்கள். அவரது ரசனையின் மீது நம்பிக்கை இல்லாதவர் யாருமில்லை என்று நினைக்கிறேன்.

கவிதைகள் பற்றி பேசுவது, கணையாழி போன்ற இலக்கியப் பத்திரிகையில் எழுதுவது, பரந்த படிப்பு, விஞ்ஞானி என்ற முத்திரை, பல விஷயங்களை போகிறபோக்கில் அறிமுகப்படுத்துவது எல்லாம் அவரது தாக்கத்தை அதிகரித்திருக்கின்றன.

ஆனால் ஒரு விஷயம். இன்றைய பதின்ம வயதினர் அவரை விரும்பிப் படிப்பதில்லை. நிஜ விக்கிபீடியாவே இருக்கும்போது யாரும் அவரை அறிவியல் கலைக் களஞ்சியமாகப் பார்ப்பதில்லை. அவரது எழுத்தின் புத்துணர்ச்சி பழகிவிட்டது. அவர் இனி வரும் தலைமுறையினரிடம் இப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தப் போவதில்லை. சுருக்கமாகச் சொன்னால் இந்த முகம் ஒரு லோகல் முகம்; சிறிது காலமே நிற்கக் கூடிய முகம். அந்த குறுகிய காலத்தில், அந்த சின்ன வட்டத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பதால்தான் இந்த முகத்தைப் பற்றி யோசிக்க வேண்டி இருக்கிறது.

முன்னோடி முயற்சிகள்:
தமிழில் சில genre-கள் அவரோடுதான் ஆரம்பிக்கின்றன. அறிவியல் புனைவுகளை முதன்முதலாக எழுதியது அவர்தான். அவை சிறந்த அறிவியல் புனைவுகள் இல்லை என்பது வேறு விஷயம். மீண்டும் ஜீனோ மட்டும்தான் கொஞ்சம் பரவாயில்லை என்று நினைக்கிறேன். இப்போது படித்தால் என்ன நினைப்பேனோ தெரியாது. ஆனால் பிரதாப முதலியார் சரித்திரத்தை இன்று படித்தால் போரடிக்கிறது என்பதற்காக வேதநாயகம் பிள்ளையின் சாதனையை குறைத்து மதிப்பிட முடியுமா? அப்படித்தான் அவரது SF முயற்சிகளும்.

இன்றும் படிக்கக் கூடிய துப்பறியும் புனைவுகளை எழுதி இருக்கிறார். ஒரு விபத்தின் அனாடமி, நைலான் கயிறு போன்ற நாவல்களில் துப்பறியும் நாவல்களின் நுட்பங்களை நன்றாக கொண்டு வந்திருக்கிறார். நிர்வாண நகரம் போன்ற படைப்புகளில் அவர் துப்பறியும் புனைவுகளின் limitations-ஐ சுலபமாகத் தாண்டி இலக்கியம் படைத்திருக்கிறார்.

தமிழின் சிறந்த நாடக ஆசிரியர் வரிசையில் வைக்கப்பட வேண்டியவர். தமிழ் நாடக எழுத்தில் யாருமே ஷேக்ஸ்பியரோ பெர்னார்ட் ஷாவோ இப்சனோ ஆர்தர் மில்லரோ இல்லை என்பது வேறு விஷயம். ஆனால் அவரது சில நாடகங்கள் – ஊஞ்சல், சரளா போன்றவை – டென்னசி வில்லியம்சின் நல்ல படைப்புகளோடு ஒப்பிடக் கூடியவை.

பெ.நா. அப்புசாமிக்குப் பிறகு மீண்டும் மீண்டும் விஞ்ஞானம் பற்றி விளக்கியவரும் அவர்தான். ஆனால் இன்று அவற்றைப் படிக்க ஆள் இல்லை.

நல்ல இலக்கியம், குறிப்பாக கவிதைகளை மீண்டும் மீண்டும் அறிமுகப்படுத்தி இருக்கிறார். இதை வேறு பலரும் செய்திருக்கிறார்கள், ஆனால் யாருக்கும் இவரது பிராபல்யம் இருந்ததில்லை. அதனால் இவர் சொன்னதற்கு நல்ல தாக்கம் இருந்தது.

அவர் முனைந்திருந்தால் உலகத்தரம் வாய்ந்த SF, துப்பறியும் கதைகளை எழுதி இருக்கலாம். அவர் எதிலும் முழுமூச்சாக ஈடுபடவில்லை என்பதுதான் உண்மை. சாகசக் கதைகள் – குறிப்பாக கணேஷ்-வசந்த் கதைகள் தமிழின் மிகச் சிறந்த சாகசக் கதைகள். ஆனால் ஷெர்லாக் ஹோம்ஸை உரைகல்லாக வைத்துப் பார்த்தால் இவை மிகவும் பின்தங்கி இருக்கின்றன.

எத்தனை குறைகள் இருந்தாலும், முன்னோடி முயற்சிகள் முக்கியமானவை. ஆனால் அவற்றின் காலம் கடந்த பிறகு சராசரி வாசகன் அவற்றை ஒதுக்கத்தான் செய்வான். அவற்றின் முக்கியத்துவத்தை ஒரு தேர்ந்த விமர்சகருக்கு/வாசகருக்கு/ஆராய்ச்சியாளருக்குத்தான் விளங்கிக் கொள்ள முடியும். சுஜாதாவின் SF முயற்சிகளை நான் காலம் கடந்துவிட்ட முன்னோடி முயற்சிகள் என்றுதான் கணிக்கிறேன். இந்தக் கணிப்பு சுஜாதாவின் “விஞ்ஞானச் சிறுகதைகள்” தொகுப்பை வைத்து ஏற்பட்டது. என் இனிய இயந்திரா, மீண்டும் ஜீனோ பல வருஷங்களுக்கு முன் படித்தது. இப்போது மீண்டும் படித்தால் என் எண்ணம் மாறலாம்.

சாகசக் கதைகளின் காலம் இன்னும் முடியவில்லை, ஆனால் அந்தக் கதைகளின் limitations-ஐ அவர் தாண்டி இருக்கும் கதைகளே – நைலான் கயிறு, நிர்வாண நகரம் இத்யாதி – இன்னும் பல ஆண்டுகள் நிற்கும்.

நினைவில் நிற்கும் படைப்புகள்:
முழு வெற்றி பெற்ற படைப்புகள் என்பவை குறைவே. சில பல சிறுகதைகள், சில நாடகங்கள் ஆகியவற்றையே அவரது சாதனையாகக் கொள்ள வேண்டும். ஸ்ரீரங்கத்து சிறுகதைகள் – அதுவும் அவை தொகுக்கப்பட்டிருக்கும்போது – நல்ல இலக்கியம். ஒரு தனி சிறுகதையின் தாக்கத்தை விட அந்தத் தொகுப்பின் தாக்கம் அதிகம். அன்றைய அய்யங்கார்களின் ஸ்ரீரங்கத்தை – இன்றைக்கு அது இல்லை – காலாகாலத்துக்கும் நினைவு கொள்ள அவரது சிறுகதைகள்தான் காரணம். பிரச்சினை என்னவென்றால் அவரது output அதிகம். அதில் நல்ல சிறுகதைகள் என்று தேடுவது கொஞ்சம் கஷ்டம். தேறும் விகிதம் (எனக்கு) குறைவுதான்.

ஒரு எழுத்தாளரின் தரத்தை நிர்ணயிக்க சுலபமான வழி அவர் எழுதியதில் எதை எல்லாம் மொழிபெயர்த்து உலக அளவில் கொண்டு போக வேண்டும் என்று யோசிப்பதுதான். மூன்றாவது முகம், நினைவில் நிற்கும் படைப்புகள், இலக்கியம் என்பது ஏறக்குறைய அதுதான். அப்படி சுஜாதா எழுத்துகளில் கொண்டு போக வேண்டியவை என்றால் ஸ்ரீரங்கத்துக் கதைகள் (அவை அழிந்துபோன ஒரு உலகை தத்ரூபமாகக் காட்டுகின்றன), மேலும் சில சிறுகதைகள், இரண்டு மூன்று நாடகங்கள். உலக அளவில் வைத்துப் பார்த்தால் அவர் footnote என்ற அளவுக்குக் கூட வருவாரா என்பது சந்தேகம்தான்.

ஜெயமோகன் அவரது மூன்றாவது முகத்தை வைத்து மட்டுமே அவரை மதிப்பிடுகிறார். பிரதாப முதலியார்/கமலாம்பாள்/பத்மாவதி சரித்திரத்தின் முக்கியத்துவத்தை உணரும், எல்லாருக்கும் எடுத்துச் சொல்லும் ஜெயமோகன் சுஜாதாவின் முன்னோடி முயற்சிகளுக்கு உரிய முக்கியத்துவம் கொடுப்பதில்லை. சுஜாதாவின் அபுனைவுகளை (non-fiction) ஜெயமோகன் பொருட்படுத்துவதாகத் தெரியவில்லை. சுஜாதாவின் தாக்கத்தை ஜெயமோகன் கண்டுகொள்வதே இல்லை. இலக்கியம் என்றால் எப்போதுமே ஜெயமோகன் படு கறாராக எடை போடுவார். இப்படி மூன்றாவது முகத்தை வைத்து மட்டுமே பார்ப்பதால் ஜெயமோகன் சுஜாதாவை கொஞ்சம் underestimate செய்கிறார். மூன்றாவது முகத்தை மட்டும் வைத்துப் பார்த்தால் அவர் சொல்வது எனக்கும் ஏறக்குறைய சரியே. ஆனால் அவரது முன்னோடி முயற்சிகள், SF, சாகசக் கதைகளின் format-இல் அவற்றின் limitations-ஐ தாண்டுவது, அபுனைவுகளின் தாக்கம் ஆகியவையும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டியவையே என்பது என் உறுதியான கருத்து.

ஆனால் மூன்று முகங்களையும் வைத்துப் பார்த்தாலும் நான் சுஜாதாவை தமிழ் எழுத்தாளர்களின் இரண்டாம் வரிசையில்தான் வைப்பேன். ஆனால் முதல் வரிசையில் மிஞ்சி மிஞ்சிப் போனால் என்ன பத்து இருபது பேர் இருப்பார்களா? என் கண்ணில் அவர் சாதனையாளரே.

பின்குறிப்பு #1: சுஜாதா பற்றி எனக்கு நிறைய நாஸ்டால்ஜியா உண்டு. சிறு வயதிலேயே படிக்கும் பழக்கம் வந்துவிட்டாலும், சுஜாதாவுக்கு முன்பு சில – வெகு சில – தரம் வாய்ந்த புத்தகங்களைப் படித்திருந்தாலும், இலக்கியம்+சுவாரசியம் என்பதற்கான அறிமுகம் சுஜாதாவிடமிருந்துதான் கிடைத்தது. அவருடைய எல்லா புத்தகங்களையும் படிக்க வேண்டும் என்று ஆசை. Bibliography ஏதாவது இருக்கிறதா? நண்பர் ரமணன் கொடுத்த bibliography சுட்டி. பேச்சி தந்த சுட்டி இங்கே.சுஜாதா பக்தர்கள் யாருக்காவது இதை உருவாக்கும் திட்டம் இருக்கிறதா? உப்பிலி ஸ்ரீனிவாஸ்? (பால்ஹனுமான்)

பின்குறிப்பு #2: எண்பதுகளுக்குப் பிறகு சுஜாதா எழுதிய புனைவுகளில் – உள்ளம் துறந்தவன் மாதிரி -கொஞ்சம் சொதப்பி இருப்பார், ஆனால் அதற்கு முன் அப்படி இல்லை என்று எனக்கு ஒரு நினைப்பு இருந்தது. அவர் ஸ்டாராக இருந்த காலத்திலும் – எதையும் ஒரு முறை இத்யாதி – சில சமயம் அப்படித்தான் என்று தெரிந்தது வியப்புதான். வாரப் பத்திரிகைகளில் தொடர்கதையாக விட்டுவிட்டு படிக்கும்போது இது தெரிவதில்லை, ஆனால் மொத்தமாகப் படிக்கும்போது தெரிகிறது.

பின்குறிப்பு #3: ஜெயமோகன் சுஜாதாவை நிராகரிக்கிறார் என்று ஒரு கருத்து பரவலாக நிலவுகிறது. மேலோட்டமாகப் படிக்காதீர்கள். ஜெயமோகன் சுஜாதாவைப் புகழ்ந்து சொன்னால் அதை யாரும் கண்டுகொள்வதில்லை. ஆனால் அவர் குறை கண்டுபிடித்தால் அது பூதாகாரமாகத் தெரிகிறது!

ஜெயமோகனின் விமர்சனம் இதுதான் – சுஜாதாவின் புனைவுகளில் முக்கால்வாசி இலக்கியம் என்று சொல்வதற்கில்லை. அந்த விகிதம் என்ன, பத்து சதவிகிதம் புனைவுகள்தான் இலக்கியமா, இருபதா, ஐம்பதா, எண்பதா என்பதில் நீங்களும் நானும் ஜெயமோகனும் வேறுபடலாம். ஆனால் சுஜாதா சொதப்பியும் இருக்கிறார், இலக்கியம் என்று சொல்ல முடியாத புனைவுகளும் எழுதி இருக்கிறார் என்பதை யாரும் மறுக்க முடியாது. அவர் இலக்கியம் படைத்திருக்கிறார் என்பதை ஜெயமோகனும் பல முறை அழுத்தி சொல்லி இருக்கிறார். சந்தேகம் இருந்தால் அப்பா அன்புள்ள அப்பா என்ற பதிவுக்கு அவர் எழுதிய கமெண்டைப் பாருங்கள்.

ஒரு முந்தையப் பதிவிலிருந்து – ஜெயமோகன் தேர்ந்தெடுத்த சிறந்த சிறுகதைகள் பற்றி – சில வார்த்தைகளை கீழே கொடுத்திருக்கிறேன்.

புதுமைப்பித்தனின் 12 சிறுகதைகள். அசோகமித்ரனுக்கும் 12. தி.ஜா., அழகிரிசாமி, கி. ராஜநாராயணன், சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன், கோணங்கிக்கு தலா 8. சுஜாதாவுக்கு 7. பிச்சமூர்த்தி, லா.ச.ரா., ஆ. மாதவன், முத்துலிங்கம், வண்ணதாசன், கந்தர்வன், யுவன் சந்திரசேகர், ஜெயமோகன் ஆகியோருக்கு தலா 6. இந்த 17 பேருக்கும் ஏறக்குறைய பாதி கதைகள்.

அதாவது நல்ல சிறுகதைகளை எழுதியவர்கள் என்று பார்த்தால் (என் கண்ணில்) ஜீனியஸ்களான புதுமைப்பித்தன், அசோகமித்திரன் ஆகியோருக்கு அடுத்த வரிசையில் சுஜாதா – தி.ஜா., அழகிரிசாமி, கி.ரா., சுந்தரராமசாமி, ஜெயகாந்தன், லா.ச.ரா., ஜெயமோகன் இத்யாதியினருடன் இருக்கிறார்!

அனுபந்தம் – ஜெயமோகன் தேர்ந்தெடுத்த சுஜாதா சிறுகதைகள்

 1. நகரம்
 2. குதிரை
 3. மாஞ்சு
 4. ஓர் உத்தம தினம்
 5. நிபந்தனை
 6. விலை
 7. எல்டொரோடா

நகரம் சிறுகதைக்கு மட்டும் அழியாச்சுடர்களில் லிங்க் கிடைத்தது. மிச்ச கதைகளுக்கும் சுஜாதா பக்தர்கள் யாராவது லிங்க் கொடுங்கப்பா/ம்மா!

நண்பர் ரமணன் கொடுத்த bibliography சுட்டி. பேச்சி தந்த சுட்டி இங்கே.

 

தொகுக்கப்பட்ட பக்கம்: சுஜாதா பக்கம்

22 thoughts on “சுஜாதாவின் மூன்று முகங்களும் தமிழ் இலக்கிய வரலாற்றில் அவரது இடமும்

 1. இதற்கு முந்தைய எனது பின்னூட்டங்களில் இருந்த கடுமையான தொனிக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்- நீங்கள் எழுதியுள்ள இந்தக் கட்டுரையைப் படிக்கும்போது நான் அவ்வளவு கோபப்பட்டிருக்க வேண்டாம் என்று தோன்றுகிறது. மன்னிக்கவும்.

  நீங்கள் இந்த மாதிரி எழுதினால் எந்த குற்றமும் சொல்ல முடியாது- சுஜாதாவை சில வகைகளில் உயர்த்தி இருக்கிறீர்கள் என்பதற்காக சொல்லவில்லை- சைன்டிபிக் டெம்பர் என்கிற மாதிரி இந்த அணுகுமுறையில் ஒரு விமரிசனப் பார்வை இருக்கிறது.

  மீண்டும் மன்னிப்பு கேட்கிறேன். நன்றி.

  Like

 2. நட்பாஸ், ஏன் சார் படுத்தறீங்க? இப்படி தன்னிலை விளக்கம், மன்னிப்புக்கெல்லாம் அவசியமே இல்லை. லூசா விடுங்க சார்!

  ஸ்ரீனிவாஸ், உங்கள் சுட்டிக்கு நன்றி, ஆனால் எனக்கு bibliography – அதாவது அவர் எழுதிய அத்தனை புத்தகங்களின் லிஸ்ட் வேண்டும்…

  Like

 3. சுஜாதா பற்றிய மிக நிதமான அணுகல். சுஜாதாவின் சுகமான நடை பிடிக்கும். ஓரு சில கதைகள் பிடித்தன.
  தெருவெல்லாம் செண்பகப்பூ ரசித்துப் படித்ததாக ஞாபகம். படித்து நீண்ட காலம் என்பதால் சரியாகப் பெயரைத் தந்திருக்கிறேனா எனப் புரியவில்லை.

  Like

 4. நானும் சுஜாதா படித்துதான் என் எல்லைகளை விரித்துக்கொண்டேன். என் மட்டில் இது அவருடைய முக்கியமான சமூக பங்களிப்பு. அவர் காலத்தில், அவர் மட்டுமே நிறைக்க கூடிய வெற்றிடத்தை அவர் நிறைத்தார். இலக்கிய வரலாற்றில் குறிப்பிடப்பட என்ன தகுதி தேவையென ஏதாவது நெறி உண்டா? அது தராசைப் பிடிப்பவரின் கையில் அல்லவா இருக்கிறது? கால வெள்ளத்தில் தேவை இல்லாதது ஏதும் தங்குவதில்லை. சுஜாதாவின் இடமும் கூட. காலம் காட்டும் அதை (50 ஆண்டுகள்? ). அதுவரை நாம் நம்முடைய லிஸ்ட்களோடு வாழ்வோம்!

  Like

 5. சுஜாதாவின் நிறைய புத்தகங்கள் இணையத்தில் இலவசமாக கிடைக்கின்றன. அதில் சுஜாதாவின் சிறுகதையும் உண்டு.

  ஜெயமோகன் கருத்துகளுக்கு ம் கோட்டவோ, மறுக்கவோ இயலாது. இது அவருடைய தனிப்பட்ட கருத்து. நான் சுஜாதாவினை கொண்டாடும் காரணம், மற்ற எழுத்தாளர்களை விட படிப்பவனையும் படைப்பாளியாக மாற்றும் திறன்தான். மேலும் சுஜாதாவினை இந்தளவிற்கு மக்கள் கொண்டாட ஒரே ஒரு காரணம் தான் இருக்கும், அது அவரின் எழுத்தின் திறன்.

  சந்தேகமிருப்பின், வாசிங்மிஷின் கதையை வாசித்துப் பாருங்கள்….

  Like

 6. படைப்பாளி சுஜாதா பற்றிய நல்ல தெளிவான கட்டுரை என்பதில் சந்தேகமில்லை.

  ஆனால், எந்த ஒன்றையும் உங்கள் கண்களால் நேரடியாகப்பார்க்காமல், ‘ஜெயமோகன்’ என்ற கண்ணாடி அணிந்து பார்ப்பது சற்று நெருடுகிறது. (ஆனால் அது உங்கள் உரிமை என்பதை மறுப்பதற்கில்லை). எது ஒன்றைப்பற்றியும் சொல்லும்போது, உங்கள் கருத்து என்ன, அல்லது அணுகுமுறை எப்படி என்று நேரடியாக வருவதை விடுத்து, முதலில் அதைப்பற்றி ஜெயமோகன் என்ன சொல்லியிருக்கிறார் என்று ஒரு பாரா, அல்லது ஒரு வரி போடுவது (எல்லாவற்றிற்கும்) நன்றாக இருக்கிறதா?. மற்றபடி நீங்கள் திரு ஜெயமோகனின் தீவிர அபிமானியாக இருப்பத்தில் யாருக்கும் மாற்றுக்கருத்தும் இல்லை. (அவர் எழுத்துக்கள் எனக்கும் பிடிக்கும்).

  உதாரணமாக, நான் என்னதான் உங்களின் நெருங்கிய தோழியாக இருந்தபோதிலும், ஒரு சிவாஜி படத்தை என்னுடைய கண்ணோட்டத்தில் உங்களால் பார்க்க முடியுமா?. அதுபோலவே உங்கள் கருத்துக்களும் உங்களின் தனித்தன்மையோடு திகழ்வதை விரும்புகிறோம்.

  Like

 7. ஆர்வி

  உண்மையான, நேர்மையான, பாரபட்சமில்லாத கருத்துக்கள். இதை முன்பேயே தெரிவித்திருந்தீர்கள் என்றால் உங்களை பலர் கண்டணம் செய்திருக்க மாட்டார்கள் என எண்ணுகிறேன். தொடருங்கள்.

  Like

 8. //ஸ்ரீனிவாஸ், உங்கள் சுட்டிக்கு நன்றி, ஆனால் எனக்கு bibliography – அதாவது அவர் எழுதிய அத்தனை புத்தகங்களின் லிஸ்ட் வேண்டும்//

  முழுமையாக இருப்பதைப் பற்றித் தெரியவில்லை. கீழ்கண்ட சுட்டியில் சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள், நாடகங்கள் என நூற்றிற்கும் மேற்பட்ட நூல்கள் பற்றிய தகவல்கள் உள்ளன.

  http://writersujatha.com/ecommerce/catalog/index.php?cPath=24&osCsid=f47a380b9d8a2fa04afcc9984bfdcebb

  Like

 9. நவன், // இலக்கிய வரலாற்றில் குறிப்பிடப்பட என்ன தகுதி தேவையென ஏதாவது நெறி உண்டா? அது தராசைப் பிடிப்பவரின் கையில் அல்லவா இருக்கிறது? // ஆம். இங்கே என் தராசு.
  ஜெகதீஸ்வரன், வாஷிங் மெஷின் கதையில்தான் மனைவி கணவனின் சட்டையில் ஏதோ வாசனை வருவதைக் கண்டுபிடிப்பாளோ? என் கண்ணில் சுமாரான கதைதான்.
  சாரதா, பெரிய பதிலாக வருகிறது, கொஞ்சம் பொறுங்கள்.
  ரமணன், நீங்கள் கொடுத்த சுட்டியை இணைத்துவிட்டேன்.
  கதிர்முருகா, கிரி, ரத்னவேல், பாராட்டு+மறுமொழிக்கு நன்றி!

  Like

 10. நல்ல படைப்புகளை தேடும் சிரமத்தை நமக்கு வைக்காமல் அவரே பல நல்ல நூல்களை போகிற போக்கில் அவருடைய எழுத்துக்களில் நமக்கு அறிமுகப்படுத்தினார்,அவரை கடுமையாக விமர்சித்தவர்கள் கூட மறுக்கமுடியாது.brewer ‘s the dictionary of phrase & fable என்ற அற்புதமான அகராதியை அவர்தான் எனக்கு காண்பித்தார் ,அந்த ஒரு புத்தகத்தை மட்டுமே ஒருவன் வாழ்நாள் பூரா படிக்கலாம்.அபிதான சிந்தாமணி, திவ்ய பிரபந்த அகராதி இன்னும் எவ்வளவோ அறிய பழைய பொக்கிசங்களை அவர் நமக்கு அறிமுகம் செய்தார்.

  Like

 11. ஜெயமோகனுக்கு ஒரு கடிதம் – சி.சரவணகார்த்திகேயன்

  இரு வாரங்களுக்கு முன் எழுத்தாளர் சுஜாதா குறித்து ஜெயமோகன் தெரிவித்திருந்த கருத்துக்கு எதிர்வினையாய் இந்த மின்னஞ்சலினை அவருக்கு அனுப்பியிருந்தேன்.

  *******

  from c.saravanakarthikeyan@gmail.com
  to jeyamohan.writer@gmail.com
  date Thu, Aug 18, 2011 at 1:33 AM
  subject சுஜாதாவும் இளைஞர்களும் – சில கருத்துக்கள்
  mailed-by gmail.com

  டியர் ஜெயமோகன்,

  “சுஜாதாவின் எழுத்து இன்றைய இளைஞர்களைக் கவர்வதில்லை” என்கிற தொனியில் நீங்கள் எழுதியிருந்த ஒரு சிறிய குறிப்பினை வாசித்தேன் [சுஜாதாவும் இளைஞர்களும் ஒரு கடிதம் – http://www.jeyamohan.in/?p=19548%5D. இவ்வாக்கியத்தின் பொருளை முழுவதுமாய் உள்வாங்கிடும் முயற்சியின் ஒரு பகுதியாகவே இவ்விளக்கத்தைக் கோருகிறேன். மற்ற‌படி சுஜாதாவின் இலக்கிய ஸ்தான‌த்திற்குக் கொடி பிடித்து எழுதப்படுவதல்ல இக்கடிதம்.

  இதன் அர்த்தம் இன்றைய இளைஞர்கள் சுஜாதாவைப் படிப்பதில்லை என்பதா அல்லது சுஜாதாவைப் படிக்கிறார்கள் ஆனால் அவர்களுக்கு அவரெழுத்து பிடிக்கவில்லை என்பதா? சுஜாதாவைப் படிப்பதில்லை என்றால் அவர்கள் வேறு யாரைப் படிக்கிறார்கள்? படித்தும் பிடிக்கவில்லை என்றால் அவர்களுக்கு வேறு யாரைப் பிடிக்கிறது?

  இவ்விஷயம் குறித்த என் புரிதலாக‌ சிலவற்றை சுருக்கமாகச் சொல்ல முயல்கிறேன்.

  பதின்மத்திலிருந்து விலகும் ஒரு தமிழ் இளைஞனுக்கு வாசிப்பில் சுஜாதா ஒரு மிகச்சிறந்த ஆரம்பப்புள்ளி. சுலபமான அதே சமயம் கவர்ச்சிகரமான துவக்கம். ஆரம்பத்தில் வாசிப்பதற்கான ஒருவித ஊக்கத்தினை / போதையினை சுஜாதாவின் எழுத்துக்களிலிருக்கும் வாசிப்பின்பம் அளிக்கிறது. அது அலுக்கும் போது நிஜமான தேடலை உடையவன் அங்கிருந்து நிச்சயம் அடுத்த கட்டத்துக்கு நகர்வான். இத்தகைய எளிமையான‌ துவக்கத்தைத் தரக்கூடிய எழுத்து என்றால் தமிழில் பிரதானமாய் சுஜாதாவையே குறிப்பிட வேண்டியிருக்கிறது.

  ஒருவர் ஆழமான எழுத்துக்களை வந்தடைய‌ சுஜாதா ஒரு மறைமுக மார்க்கம். வாசிப்பின்பத்தை விட வாசிப்பாழம் முக்கியம் என்ற புரிதல் வருவதற்கு ஒருவன் வாசிக்க ஆரம்பிக்க வேண்டும். அந்த சுண்டியிழுக்கும் துவக்கத்தை குறைந்தபட்சம் அடுத்து வரும் ஐம்பதாண்டுகளில் எந்தவொரு சராசரித் தமிழ் இளைஞனுக்கும் சிறப்பான‌ முறையில் அளிக்க வல்லவை சுஜாதாவின் எழுத்துக்கள் என்பதாகவே எண்ணுகிறேன்.

  மாறாக, விபத்தாய் ஆரம்பத்திலேயே உங்களைப் போன்றவர்களின் சிக்கலான‌ எழுத்தை [நேர்மறை அர்த்தத்தில்] தன் வாசிப்பாய்த் துவக்கும் ஒரு பக்குவமுறா வாசகன் அதன் வீச்சின் கடுமையில் ஊக்கமிழந்து தன் வாசிப்பை நிறுத்திவிடக்கூடும். பதிலாய் அவன் சுஜாதாவில் தொடங்கி மெல்ல உங்களிடம் வரலாம்.

  ஆரம்பத்திலேயே முதிர்ந்த நோக்குடன் வாசிப்பைத் தொடங்கும் இளைஞர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் ஒப்பீட்டளவில் அவர்கள் எண்ணிக்கையில் மிகக்குறைந்தவர்கள். அதே போல் சுஜாதாவில் தொடங்கி சுஜாதாவிலேயே முடிந்து விடுப‌வர்க‌ளும் இருக்கிறார்கள். இந்த இரு சாராரையும் தவிர்த்து, இன்னும் தொடக்கம் கிடைக்காத, கிடைத்தால் நல்ல வாசிப்பை நோக்கி நகரக்கூடிய வாசகர்கள் கணிசமானோர் இருக்கிறார்கள். இங்கு தான் சுஜாதாவின் தேவை இருக்கிறது.

  அல்லது இன்றைய இளைஞர்கள் தமிழ் படிப்பதேயில்லை என்பதைத் தான் அப்படி அங்கதமாய்க் குறிப்பிட்டீர்களா – ஒருவன் சுஜாதாவை விரும்பவில்லை என்றால் அவன் தமிழே படிக்கவில்லை என்ற அர்த்தத்தில்? 😉

  சி.சரவணகார்த்திகேயன்
  http://www.writercsk.com

  Like

  1. ஸ்ரீனிவாஸ், இன்று சுஜாதாவைத் icon ஆகக் கருதுபவர்களில் முக்கால்வாசிப்பேர் முப்பதுக்கு மேற்பட்ட வயதினர் என்றே நான் எண்ணுகிறேன். பதின்ம வயதினருக்கு வேறு icon-கள் இருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது.

   Like

 12. மிக அற்புதமான பதிவு .கடவுள் இருக்கிறார் அல்லது இல்லை என்பதை கூட இன்று விஞ்ஞானம் தனது மறுப்பு கொள்கையின் தளர்வான முன் வைப்பை வைத்து விளிம்பில் நிற்கிறது .அது போல மறைந்த எழுத்தாளாந்தான் சுஜாதா ஆனால் அவர் மறக்கப் பட வேண்டும் என்பது பலரின் முயற்சி வைரமுத்து சர்ச்சை போல தன்னை முன் நிறுத்த யார் வேண்டுமானாலும் அவரிம் முயற்சியை தோண்டி பார்க்கட்டும் .அவர் பற்றிய தோண்டுதல் விளைவால் வீசப்படும் குப்பைகள் கூட முளைத்து கொண்டு இருக்கின்றன சுஜாதாவின் லாண்டரி கணக்கெல்லாம் பிரசுரமாகி விடும் அபாயம் மீண்டும் வரக்கூடும் .

  Like

 13. சுஜாதா பற்றிய உங்களுடைய விமர்சனம் நன்றாக இருக்கிறது. ஆனால், இந்த இலக்கியம் வணிகம் என்று விம்முவதுதான் சகிக்கவில்லை.

  ஒருவர் வாழக் கிடைத்த சூழ்நிலை, அவரைக் கவர்ந்தது, அவருக்குக் கிடைத்தது, கிடைக்காதது இவற்றின் synthesis தானே ஐயா, தனிப்பட்ட ஒருவரின் ரசனை! இதில் வணிகமெது, இலக்கியமெது?

  எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் தகுதித் தீர்ப்பு என்று ஒன்று உண்டா? எழுத்து, இசை, நடனம், நடிப்பு இன்னபிற கலா விஷயங்களுக்கெல்லாம் தர நிர்ணயம் செய்ய ஒரு absolute value இருக்கவே முடியாது. அவரவர் மனத்தளவு.

  சிறந்த இலக்கியப் படைப்பு என்று கூறு கட்டிக் கூவுவதெல்லாம் கவன ஈர்ப்பில் தோற்றவனின் ஒப்பாரி. பம்மாத்து என்றும் கொள்ளலாம்.

  Like

 14. ‘அவன் சுஜாதாவில் தொடங்கி மெல்ல உங்களிடம் வரலாம்!’

  ‘உங்களிடம்’! – அடடடடடடா…….பாவப்பட்டவர்களைப் பேரின்பப் பாதைக்கு வழி நடத்தி விட்டீர்கள்! என்ன ஒரு இலக்கியப் பகுப்பாய்வு!

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.