சோவின் “சாத்திரம் சொன்னதில்லை”

தமிழில் நல்ல நாடகங்கள் அபூர்வம். சோ ராமசாமி எழுதிய எல்லா நாடகங்களும் தேறும் என்று சொல்வதற்கில்லை, ஆனால் சோவின் நல்ல நாடகங்களும் அவருடைய கோமாளி இமேஜால் கண்டுகொள்ளப் படுவதில்லை.

சோவை பழைய கிரேக்க நாடக ஆசிரியர் அரிஸ்டோஃபனசுடன் ஒப்பிடலாம். அரிஸ்டோஃபனஸ் முதல் காமெடி நாடக எழுத்தாளர், சடையர் என்பது இவரோடுதான் ஆரம்பித்தது என்கிறார்கள். ஆனால் அரிஸ்டோஃபனசை இன்று முழுதாக புரிந்து கொள்வது கஷ்டம். அடிக்கடி க்ளியான் என்ற தலைவரை கிண்டல் அடித்து நிறைய வசனம் வரும். க்ளியானைப் பற்றி நமக்குத் தெரிவதே இந்த வசனங்களின் மூலம்தான். கிண்டல் அடிப்பது எப்படி புரியும்? சோவும் இப்படித்தான் அன்றைய அரசியல் நிகழ்ச்சிகளைப் பற்றி ஏதாவது கிண்டல் அடிப்பார், இன்றைய இளைஞனுக்கு எப்படி புரியும்?

சோவின் பொற்காலத்தில் – அறுபதுகள், எழுபதுகளின் முற்பாதி – அவர் ஏதாவது ஒரு சமுதாயப் பிரச்சினையை எடுத்துக் கொள்வார். அதை சில பாத்திரங்களை வைத்து விளக்குவார். மெலோட்ராமா ஸ்டைல்தான். சில சமயம் விளக்கம் நன்றாக இருக்கும், பல சமயம் உருப்படாது. ஆனால் நன்றாக விளக்கி இருந்தாலும் ஒரு பிரச்சினை இருக்கும் – வலிந்து புகுத்தப்பட்ட நகைச்சுவை. அவர் நடிக்கவென்றே ஒரு கோமாளி பாத்திரம் இருக்கும். அந்தக் கோமாளித்தனம் நாடகத்தின் பெரிய பலவீனம். ஆனால் அந்த பலவீனம், கோமாளித்தனம் இல்லாவிட்டால், சென்னை சபா சர்க்யூட்டில் அவருடைய நாடகங்கள் வெற்றி பெற்றிருக்க முடியாது.

அரிதாக அந்த கோமாளித்தனத்தையும் மீறி சில நல்ல நாடகங்கள் வந்திருக்கின்றன. அவற்றில் சாத்திரம் சொன்னதில்லையும் ஒன்று. (உண்மையே உன் விலை என்ன, யாருக்கும் வெட்கமில்லை, முகமது பின் துக்ளக் ஆகியவையும் என் கண்ணில் வெற்றி அடைந்த நாடகங்களே.)

சாத்திரம் சொன்னதில்லையில் அவர் ஜாதிப் பிரச்சினையை எடுத்துக் கொள்கிறார். ஜாதிப் பிரக்ஞை, ஜாதி ஸ்டீரியோடைப்கள் நம் மனதில் எவ்வளவு ஆழமாக ஊறிப் போயிருக்கின்றன என்பதை. அதை சிக்கனமாக, சில பாத்திரங்களையே வைத்துக் காட்டுகிறார்.

சாரியார் பிராம்மணோத்தமர். ஜாதி பார்க்கமாட்டார். ஒரே மகன் பாச்சா. பாச்சாவுக்கு படிப்பு வரவில்லை. பல வருஷமாக பி.யு.சி. பரீட்சை எழுதிக் கொண்டிருக்கிறான். ஆனால் சாரியாருக்கு அவன் செல்ல மகன். அவனுக்காக சப்பைக்கட்டு கட்டிக்கொண்டே இருக்கிறார். துரைக்கண்ணு ஹரிஜன். எம்.எல்.ஏ. அவருக்கும் பாச்சா வயதில் ஒரு மகன் இருக்கிறான். பெருமாள். பாச்சாவும் பெருமாளும் ஒரே ஆஸ்பத்திரியில் ஒரே நாளில் பிறந்தவர்கள். பெருமாள் நன்றாகப் படிக்கிறான். காண்ட்ராக்டர் முதலியார் மகள் உமாவோடு பெருமாளுக்குக் காதல். சாரியார் போன்றவர்கள் சிபாரிசு செய்தும் ஜாதி பார்க்கும் முதலியார் மறுக்கிறார். பாச்சா உமாவை கல்யாணம் செய்து கொள்கிறேன் என்றால் சாரியார் சம்மதிப்பாரா என்று கேள்வி கேட்கிறார். சாரியார் சம்மதிப்பேன் என்கிறார், ஆனால் முதலியார் நம்பவில்லை. இதற்குள் இவர்கள் காதல் ஊரெல்லாம் தெரிந்துவிடுகிறது. அது துரைக்கண்ணுக்கு பிரச்சினை ஆகிறது. ஏன் பெருமாளுக்கு ஹரிஜன் பெண்ணாகப் பார்க்கவில்லை என்று கேள்வி எழுகிறது. முதலில் காதலை ஒத்துக் கொண்ட துரைக்கண்ணு இப்போது உமாதான் என் பையன் பின்னால் சுற்றினான், பெருமாள் அவளைக் காதலிக்கவில்லை என்று பெருமாளைச் சொல்ல வைக்கிறார். முதலியார் அவமானப்படுகிறார்.

சாரியார் உண்மையிலேயே ஜாதி பார்க்கமாட்டாரா என்று அவரது டாக்டர் நண்பர் அவரை பரீட்சிக்க நினைக்கிறார். சாரியார் காதுபட பெருமாள்தான் சாரியாருக்குப் பிறந்தவன், பாச்சா துரைக்கண்ணுக்குப் பிறந்தவன், ஆஸ்பத்திரியில் குழந்தைகள் மாறிவிட்டனர் என்று சாரியார் நம்பும்படி பேசுகிறார். சாரியாருக்கு மண்டையில் லைட் எரிகிறது. பிராமணப் பையன், சாரியாரின் வித்துக்கு படிப்பு எப்படி வராமல் இருக்கும் என்ற கேள்விக்கு விடை கிடைத்துவிடுகிறது. பெருமாளின் மீது பாசமும் பாச்சா மீது கோபமும் வருகிறது. பாச்சா உமாவை மணக்க விரும்புவதாக சொல்கிறான். ஹரிஜன் முதலியாரை மணந்துகொண்டால் எனக்கென்ன போச்சு என்று சாரியார் சம்மதிக்கிறார், ஆனால் அவரது ஜாதி பார்க்காத உயர்ந்த உள்ளத்தைக் கண்டு ஊரே பாராட்டுகிறது.

சாரியாருக்கு உண்மை தெரிந்ததா, உமா யாரை மணக்கிறாள், என்பதுதான் மிச்சக் கதை.

எனக்கு சில விதங்களில் இது எஸ்.எல். பைரப்பா எழுதிய தாட்டு என்ற கதையை நினைவுபடுத்தியது. இதே போல சிக்கனமாக, வெகு சில பாத்திரங்களை வைத்து (ஒரு பிராமணக் குடும்பம், ஒரு கௌடா குடும்பம், ஒரு ஹரிஜன் குடும்பம்) ஜாதியை அற்புதமாக அலசி இருப்பார். சோவுக்கும் பைரப்பாவுக்கும் தூரம் அதிகம். இருந்தாலும் அதே சிக்கனம் இந்த நாடகத்திலும் தெரிகிறது.

சாரியார் அற்புதமான பாத்திரம். மிச்ச பாத்திரங்களில் ஜீவன் இல்லை. சோ நடிப்பதற்காக எழுதப்பட்ட நிரஞ்சன் பாத்திரம் சில இடங்களில் எரிச்சல் ஊட்டுகிறது. அதுவும் “வ” என்ற ஒலியைச் சொல்ல வரவில்லை (வங்காளிகள் போல), பிறகு “ப” வரவில்லை என்று கழுத்தை அறுக்கிறார். ஆனால் நாடகமாகப் பார்ப்பவர்கள் நிச்சயம் சிரித்திருப்பார்கள்.

நல்ல நாடகம், படியுங்கள் என்று சிபாரிசு செய்கிறேன். பார்த்தால் படிக்கும்போது தெரியும் சில குறைகளும் மறைந்துவிடும், அதனால் முடிந்தால் பார்த்துவிடுங்கள்.

அல்லையன்ஸ் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. விலை நாற்பது ரூபாய்.