பொருளடக்கத்திற்கு தாவுக

பொன்னியின் செல்வன்

by மேல் ஜூலை 15, 2011

”பொன்னியின் செல்வன்” மூன்றரை வருடங்கள் தொடராக வந்த ஒரு சரித்திர புனைவு. அமரர் கல்கியின் வெற்றி பெற்ற கதைகளுள் ஒன்று. இதை பற்றி எண்ணற்ற விமரிசனங்களும், தர்க்கங்களும், ஆராய்ச்சிகளும், ”அடித்தலும், துவைத்தலும்” நடந்து விட்டன. இன்றும் நடந்து கொண்டுதானிருக்கிறது. கதை எழுதப்பட்டு கிட்டதட்ட 60 வருடங்களாகியும் வாசகர்கள் மத்தியில் இன்னும் அதனிடம் ஒரு ஈர்ப்பு சக்தி இருந்து கொண்டுதானிருக்கிறது. வாசகர்கள் பல தளங்களில் இருந்தாலும் இன்னும் வாசிக்கப்படுவதால் நாவலை பொறுத்தவரையில் வெற்றிதான்.

கதையின் அமைப்பு – நல்ல கதை. பிரமிக்க வைக்கும் கதை பின்னல். ஒவ்வொரு நிகழ்வுக்கும் தகுந்த உறுதியான காரணங்கள் பின் வருகின்றன. அவை சில சமயம் உடனே வந்து விடுகின்றன. சில சமயங்களில் ஆயிரம் பக்கங்களுக்கு அப்பால் வருகின்றது. வாசகர்களுக்கு நிகழ்வுகளின் காரணங்களை தொடர்வதே ஒரு சிறிய அறைகூவல்தான். கதாபாத்திரங்களின் இயல்பை கட்டுக் குலையாமல் கொண்டு செல்கிறார் அமரர் கல்கி. ஆரமபம் முதல் குழப்ப சிந்தனையுள்ள நந்தினி கடைசி வரை ஆதித்த கரிகாலன் “கொலை” வரை குழம்பிக் கொண்டிருக்கிறார். ஆதித்த கரிகாலன் தன்னை சூழ்ந்துள்ளவர்களிடம் கடைசி வரை விஷ வார்த்தைகள் கக்கிக்கொண்டே இருக்கிறான். அருள்மொழிவர்மன் கடைசி வரை அன்பை பொழிகிறார்.  நாவலின் பரபரப்பும், சஸ்பென்ஸும் துணைக்கு வருகிறது. வாசகர்களைக் வணிக எழுத்தை ஒத்த பரபரப்புடன் கட்டிப் போடுகிறது. முக்கியமாக ரவிதாஸனின் ஆபத்துதவிகள் ஆதித்த கரிகாலனையும், அருள்மொழிவர்மனையும், சுந்தர சோழரையும் ஒரே பொழுதில் ஒரே சமயத்தில் கொலை செய்ய முயலுவதும், அதற்கு சொல்லப்படும் காரணங்களும் இன்றும் தீவிரவாதிகளும் (9/11 இரட்டை கோபுரம், பெண்டகன் மற்றும் இதர இடங்களில் நாசவேலைகள்), பல அரசுகளும் பின் பின்பற்றும் யுக்தியாக (coordinated effort) இருப்பதை நாம் பார்க்கும் பொழுது கல்கி கதையில் போர் முறைகளையும், சதிகளையும் கையாண்ட விதம் பாராட்டுக்குறியதே.

வரலாற்று சம்பவங்களை வைத்து கதை வளர்ந்திருக்கிறது. மேல் கூறிய கதை சொல்லும் விதத்தை மறந்து விட்டால் நன்றாக எடுத்துச் சென்றுள்ளார். ஆதித்த கரிகாலன் கொலை வரலாற்று ஆராய்ச்சியாளர்களால் இன்றும் உறுதி செய்ய முடியாத ஒரு பெரிய புதிர். கதையிலும் அப்படியே அமைத்திருப்பது கதைக்கு பலம் சேர்க்கிறது. திருவாலங்காடு செப்பேடுகள் ”அருள்மொழியே முடிச்சூட்ட வேண்டும் என்று மக்கள் விரும்பினார்கள் ஆனால் மதுராந்தகருக்கு பட்டம் சூட்டினான் அருள்மொழி” என்று சொல்வதை வேறு அர்த்தம் கொள்கிறார்கள் சில சரித்திர வல்லுனர்கள். உடையார்குடி கல்வெட்டை ஆதாரமாக வைத்து கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி “சோழர்கள்” என்ற ஆய்வில் மதுராந்தக உத்தம சோழன் தான் சதிசெய்து ஆதித்த கரிகாலனை கொன்றுவிட்டு சிம்மாசனத்தில் ஏறினான் என்று கூறுகிறார். தி.வை. சதாசிவ பண்டாரத்தார் என்ற ஆய்வாளர் இப்படி நடக்க வாய்பில்லை என்கிறார். ஆனால் 1971ல் விவேகானந்தா கல்லூரி மலரில் வந்த ஆர்.வி. சீனிவாசனின் கட்டுரையில் ஆதித்த கரிகாலனுடைய கொலையில் சதி செய்தது அருள்மொழிவர்மனும், குந்தவையும் தான் என்கிறார். ரவிதாசன் சோழ அரசில் முக்கிய பதவி வகித்து வந்தானென்றும், அவனுக்கு அருள்மொழி அளித்த தண்டனை மிகவும் சிறியது (சோழ நாட்டின் உள்ளேயே ரவிதாஸன் “நாடு” கடத்தப்பட வேண்டும்) என்றும் கருத்துக்கள் நிலவுவதே அதன் காரணமாக இருக்கலாம். இதை ஆய்வாளர் டாகடர். க.த.திருநாவுக்கரசு வன்மையாக மறுக்கிறார். ரவிதாஸன் பஞ்சவன் பிரம்மாதிராஜனும் அவன் சகோதரன் சோமன் சாம்பவனும் பிராமணர் குலத்தில் தோன்றியவர்களாதலால் அவர்களுக்கு மனு தர்மத்தின் படி மரண தண்டனை அளிக்க முடியாது என்பதால் தான் ரவிதாஸனுக்கு சிபி, மனுநீதிச் சோழன் குலத் தோன்றலாகிய அருள்மொழிவர்மன் கடுமையான தண்டனை கொடுக்கவில்லை என்று கூறிகிறார்.

ஒருவேளை அருள்மொழிவர்மனும், குந்தவையும் மதுராந்தகத் உத்தமச் சோழன், ரவிதாஸன் இவர்களுடன் சேர்ந்து சதி செய்திருப்பார்களா? ஆட்சி பங்கீடு பேச்சுவார்த்தையில் மதுராந்தகனும் அருள்மொழிவர்மனும் சோழ நாட்டை ஒருவர் பின் ஒருவராக ஆளலாம் என்று சமரசத்திற்கு வந்திருப்பார்களா? ஆனால் தெய்வ நம்பிக்கை (சிவபக்தி – ஆதாரம் ராஜராஜேஸ்வரம்) கொண்ட அருள்மொழி அப்படியெல்லாம் செய்வானா என்றும் தோன்றுகிறது. ஆதித்த கரிகாலன் கடவுள் நம்பிக்கையற்றனாக சித்தரிக்கிறார் அமரர் கல்கி. அது வரலாற்று உண்மையாக இருக்குமானால் இந்த கான்ஸ்பிரஸி தியரி மேலும் வலுப்பெறுகிறதல்லவா? இது பற்றி சமகால் ஆராய்ச்சியாளர் டாக்டர் நாகசாமி எதாவது கருத்து சொல்லியிருக்கிறாரா என்று தெரியவில்லை. ஜெயமோகனும் கருத்துகள் வைத்திருக்கலாம்.

எது எப்படியோ இந்த வரலாற்று நிகழ்வுகளை உறுதிப்படுத்துவது மிகக் கடினம். அதனால் அமரர் கல்கியின் கருத்துக்களோடு ஒன்றிப் பார்த்தால் தான் பொன்னியின் செலவன் ஒரளவேனும் அர்த்தமுள்ளதாக இருக்கும். ராஜராஜனின் மேல் குற்றமிருக்கும் என்று நம்பினால் பொன்னியின் செல்வன் படைப்பு அமரர் கல்கியின் ஆத்மாவிலிருந்து உருவாக மிகவும் கடினமாக இருந்திருக்கும். அவரைப் பொறுத்தவரையில் அருள்மொழிவர்மன் அறம் நிறைந்த ஒழுக்க சீலனாகவே இருந்திருக்கிறான். அதை நில நாட்டப் பாடுபடுகிறான்.

அமரர் கல்கி பழந் தமிழகத்தின் விழுமியங்களை இன்றையமக்கள் அறியவேண்டும் என்பதே அவருடைய வாழ்க்கையின் லட்சியமாக கொண்டிருந்தார் என்று சொல்லப்படுகிறது. “விமோச்சனம்” பத்திரிக்கை கட்டுரைகள், மது ஒழிப்பு பற்றிய கதைகள் போன்றவை மூலமாக அவர் கொண்டிருந்த விழுமியங்களை எடுத்துச் சொல்லிக் கொண்டேயிருந்தார். பொன்னியின் செல்வனிலும் அந்த தரிசனம் கிடைக்கிறது. சோழ நாட்டுக்கு சதி செய்யும் கூட்டம் உட்பட, அனைத்து கதாபாத்திரங்களுமே ஏதோ ஒரு வகையில் அறத்தை கடைபிடிக்கிறது. நந்தினி – பாண்டிய நாட்டிற்கு உண்மையாக இருப்பதற்க்காக சதி திட்டம் தீட்டினாலும் பெரிய பழுவேட்டறையருக்கு துரோகம் செய்யாமலிருக்கிறாள்; ரவிதாஸன் குழுவினர் – நந்தினியை அரசியாக ஏற்றுக் கொண்டபிறகு அவள் கூறுவதை மீறக்கூடாது என்று சூளுரைக்கினறனர்; ஆழ்வார்க்கடியான் நம்பி அநிருத்த பிரம்மராயரிடம் உண்மையாகவே இருக்கிறான்; பழுவட்டரையர்கள் சதி திட்டம் தீட்டினாலும் சுந்தர சோழ சக்ரவர்த்தியிடமும் சோழ நாட்டை பாதுகாப்பதிலும் நேர்மையாகவே இருக்கிறார்கள்; தவறுவதால் தன்னை தானே பெரிய பழுவேட்டரையர் மாய்த்துக் கொள்கிறார்; அருள்மொழிவர்மன் அறமே வாழ்க்கை என்று வாழ்கிறான். ஏன், ”மதுராந்தகன்” கூட சோழ நாட்டை போரிட்டே பிடிக்கவேண்டுமென நினைத்து செம்பியன் மாதேவியை விட்டு பிரிகிறான். கதை முழுக்க வரும் சதிகளும், வஞ்சங்களுக்குமிடையில் அமரர் கல்கி நிலைநாட்டும் விழுமியங்களை வாசகர்கள் தவறவிடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

சோழ நாட்டு இயற்கை காட்சிகளை பற்றி கல்கி விவரிப்பது ஒரு ரொமான்ஸ் தான். அப்படிபட்ட வளம், தேனும் பாலும் ஓடியதாக சொலவதெல்லாமே மிகைப்படுத்தல் வகையிலே தான் பார்க்கமுடிகிறது. வானதியும் குந்தவையும் மணிமேகலையும் வந்தியத்தேவனும் காணும் கனவுகள் வாயிலாக சோழ நாட்டு வளத்தை விவரிக்கிறார். இந்த விவரிப்புகளை தனித்து எடுத்துப் பார்த்து பரிசீலிப்போமானால் சங்க கால் இன்பவியல இலக்கியம் சாயல் கொண்டிருக்கிறது என்று சொல்லலாம்.

ஆனால் பொன்னியின் செல்வன் இலக்கியமா என்று பலருக்கு ஒரு ஐயமிருக்கிறது. மொத்தமாக நோக்கும்பொழுது இது இலக்கியம் அல்ல என்று உறுதியாக சொல்ல முடியும். இலக்கிய கூறுகள் ஆங்காங்கு வெளிப்படுகிறதே தவிர, இது வரலாற்றை அனுகூலமாக எடுத்துக் கொண்டு அதன்மூலம் ஒரு ரொமான்ஸாகத்தான் பரிணமித்திருக்கிறது. அதாவது அமரர் கல்கியின் சோழ நாடு இப்படி இருக்கவேண்டும் என்ற அபிலாஷை வெளிவந்திருக்கிறது. இது ஏன் இலக்கியமல்ல? நான் புரிந்துக் கொண்ட கோட்பாடின் படி இலக்கியம் சமகாலங்களின் அல்லது கடந்த காலங்களின் இயல்பான நிலை, சூழல், மற்றும் மக்களின் வாழ்க்கை, நடை, உடை, பாவனை, பண்பாடு, கலாச்சாரம் முதலியவற்றை புதினம் அல்லது பிற இலக்கிய கருவிகள் மூலம் மிகையில்லாமல் அல்லது பெரிதும் மிகைப்படுத்தாமல் சொல்வது ஆகும். இந்தக் கோட்பாடின் படி அமரர் கல்கி அவற்றை ஆழமாக சொல்லவில்லை.  மேலும் 1950ல் உள்ள தொல்பொருள் அறிதலின் படி, ஆயிரம் வருடத்திற்கு முந்தைய காலத்தில் (அதாவது 900 முதல் 1100ஆம் ஆண்டு வரை) கல்வெட்டுகள் மூலமும், செப்பேடுகள் மூலமும் வெளியிடப்பட்ட சோழ நாட்டு வாழ்க்கை முறை தகவல்கள் இவற்றையெல்லாம் சொல்லும் வகையில் விவரமானதாக அமைந்திருக்கவில்லை என்பது நம்மால் ஊகிக்கமுடிகிறது. கிடைத்த செப்பேடுகள் பெரும்பாலும் அரசு மற்றும் நிர்வாகம் சம்பந்தப்பட்ட தகவல்களையே அனேகமாக கூறி வந்தது. இந்த தகவல்களைக் கொண்டு வாழ்க்கை அனுபவங்களும் நிலைகளும் சூழலும் முழுமையாக கொடுக்க இயலாது. அமரர் கல்கி அந்த முயற்சியில் இறங்கவுமில்லை. உதாரணத்திற்கு தல்ஸ்த்யோவஸ்கியின் குற்றமும், தண்டனையும் பக்கத்துக்கு பக்கம் புதிய தரிசனங்களை கொடுத்துக் கொண்டே போகிறது. அதை பொன்னியின் செல்வனுடன் ஒப்பு நோக்கினால் இந்த வித்தியாசங்களை எளிதில் புரிந்துக் கொள்ளமுடியும்.

என்றாலும் கல்கி சில வரலாற்று நிகழ்வுகளின் மூலம் அகன்ற வாழ்க்கையை எடுத்துரைக்க முற்படுகிறார். அரபு நாடுகளுக்கும் சோழ நாட்டுக்கும் வணிகம் வளர்ந்து வந்தது. முன்னதாக மூன்று நூற்றாண்டுகளாக இஸ்லாம் அறிமுகப்படுத்தப்பட்டு சேர நாட்டில் (அன்றைய கேரளாவில்) இஸ்லாம் தன்னை ஸ்தாபித்திருந்தது. இந்த காலகட்டத்தில் அரபிக்கடலில் வணிக போக்குவரத்து பெருகியிருந்தது. கப்பல் கொள்ளையர்களும் வளர்ந்து வந்தனர். ஈழ நாட்டுவரை அரபு கப்பல் கொள்ளையர்களும் புழங்கி வந்திருக்கிறார்கள். இவற்றையெல்லாம் நிகழ்வுகளாக கதையில் சேர்த்திருக்கிறார். வட நாட்டுக் கோவில்களை எல்லாம் இஸ்லாமியர்கள் இடித்து தள்ளிக் கொண்டிருந்ததை ஒரு முரட்டு மதம் வளர்ந்து வருவதாகவும் குறிப்பிடுகிறார். (ராஜபுட்ததான மன்னர் ராஜா தாஹீரின் கடல் கொள்ளையர்களின் ஊக்குவிப்பே இஸ்லாமியர்கள் முதன் முதலில் உள்ளே நுழைவதற்கு காரணமாக இருந்தது என்பது வரலாறு – இஸ்லாமிய தரப்பு வாதம்).

குறை என்று பார்க்கப் போனால் இது ஒன்று தான் – கதையின் நடை (ஓட்டமும் தான்) சில சமயங்களில் ஏதோ குழந்தைகளை வைத்து கதை சொல்வது போலிருக்கிறது. உதாரணத்திற்கு வந்தியத்தேவன் வம்பில் மாட்டும் பொழுதெல்லாம் அவனை காப்பாற்றுவதற்க்காகவே அனைத்து நிகழ்வுகளும் காத்துக் கொண்டிருப்பதாக சித்தரித்திருப்பது, தேவை ஏற்படும் பொழுதெல்லாம் ஆள் மாற்றம் சுலபமாக நடப்பது, ”இருளாக இருக்கிறதே, எப்படி போவது” என்று ஒரு கதாபாத்திரம் சிந்தனை செய்து கொண்டிருக்கும்பொழுதே ”இதோ வெளிச்சம்” என்று இன்னொரு பாத்திரம் உதவி செய்வது, அல்லது ”தண்ணீரில் விழுந்து விட்டோமே, படகு வேண்டுமே” என்றால் யாரவது ஒருவர் அந்தப் பக்கம் படகுடன் வருவது, போன்ற முதிர்வு பெறாத நடைகள் பெருத்த ஏமாற்றத்தை அளிப்பது மட்டுமல்லாமல் சராசரி வணிக எழுத்திற்கும் கீழே போய்விடுகிறது. அதுவும் பெரிய பழுவேட்டரையர் கடம்பூரிலிருந்து கிளம்பி புயலில் சிக்கி கோயிலில் படுத்து பின்னர் பாண்டிய நாட்டு ரவிதாஸன் ஒற்றர் கும்பல்கள் லவ்ட்ஸ்பீக்கர் இல்லாத குறையாக அவர்கள் திட்டத்தை விவரிப்பதை “ஒட்டு” கேட்பது – ஒரு வேளை நேரத்தை விரயம் செய்கிறோமோ என்ற சோர்வை உண்டாக்குகிறது. விதியே என்று முன்னகர்ந்தால் ஒரு கதாபாத்திரத்திற்கு பிற கதாபாத்திரங்கள் உதவி செய்வது போதாதென்று கல்கி நினைத்தாரோ என்னவோ – ”வந்தியத்தேவன் அராபியக் கொல்லையர்களிடம் கட்டுண்டு கிடக்கிறானே. அய்யய்யோ! எப்படி தப்பிக்கப் போகிறான், ஒரு வேளை அவன் கட்டுகள் இறுக்கமாக கட்டு படவில்லையோ? ஆம் அப்படி தான் இருக்கவேண்டும்” என்று கூறி தன் பங்குக்கு கடலில் குதித்து, கப்பலில் சென்று கட்டுகளை லூஸ் பண்ணிவிட்டுவிட்டு மாயமாக மறைகிறார். கொடுமையே என்றிருக்கிறது. ”ஆபத்தா, இதோ வருகிறேன்” என்று திடீர், திடீரென்று தோன்றும் எம்ஜியார் திரைப்படத்தை நினைவூட்டுகிறது. அல்லது இன்றைய விஜய் சினிமாக்களை. ஒருவரும் வராவிட்டால் ஆசிரியரே வந்துவிடுவார். இதெல்லாம் ஆழ்வார்க்கடியான், வந்தியத்தேவன் போன்றவர்களுக்குதான். இருப்பதிலேயே வீரமான, புஜபல பராக்கிரம் நிறைந்த ஆதித்த கரிகாலனிடம் உதவிகளெல்லாம் பலிக்கவில்லை. ”அப்பாடா” என்றிருந்தது. 60 வருடங்களுக்கு முந்தைய கதை என்பதால் இந்தக் குறையை கண்டுக் கொள்ளாவிட்டால் கதை காலத்தில் பின்னோக்கிச் செல்லும் ஒரு இனிய பயணமே.

பொன்னியன் செல்வன் கதையை பதின்ம வயதில் படிப்போருக்கு அனேகமாக பரவசம் கொடுத்திருக்கும். காலம் கடந்து படிப்போருக்கும் பரவசம் தரக்கூடிய கதைதான். முதிர்ந்த வாசகர்களுக்கு தகவல்களும் சில சிறிய பிரமிப்புகளும் காத்திருக்கின்றன. ஆனால் அனைவரும் கட்டாயமாக படிக்க வேண்டிய ஒரு புதினமே.

மின்னூலை விமல் தரவேற்றி இருக்கிறார்.

42 பின்னூட்டங்கள்
 1. sara permalink

  தயவு செஞ்சு பொன்னியின் செல்வனை விட்டுவிடுங்கள். எங்களுக்கு அது இலக்கியமா இல்லையா என்ற ஆரய்ச்சி தேவை இல்லை. அதை உங்களை போன்ற அறிவுஜீவிகள் செய்துக் கொள்ளுங்கள் . இலக்கியம் என்றப பெயரில் சமகால எழுத்தாளார்கள் எழுதும் கூத்துகளை வித அது எவ்வளவோ மேலாகத்தான் இருக்கிறது

  Like

  • சரஸ்வதி, // தயவு செஞ்சு பொன்னியின் செல்வனை விட்டுவிடுங்கள். எங்களுக்கு அது இலக்கியமா இல்லையா என்ற ஆரய்ச்சி தேவை இல்லை. அதை உங்களை போன்ற அறிவுஜீவிகள் செய்துக் கொள்ளுங்கள் . இலக்கியம் என்றப பெயரில் சமகால எழுத்தாளார்கள் எழுதும் கூத்துகளை வித அது எவ்வளவோ மேலாகத்தான் இருக்கிறது // இதை விட சுலபமான வழி ஒன்று இருக்கிறதே? நீங்கள் இந்தப் பதிவை விட்டுவிடலாமே?

   Like

   • as u said, we being in this so called trendy generation, many of my friends even do not know what is book reading. they find it as very difficult thing in their life. i use to say, start reading with “Ponniyin Selvan”, and u will never quit reading. And we do prescribe your website for it, please do not leave negative comment on some highly impressive books, as it will make new person stop reading it.

    Like

  • s ponniyen selvan is classical navel, dont cry

   Like

 2. மேதாவி permalink

  வழக்கமாக ஏதாவது கமெண்ட்ஸ் வரும் உங்களது மற்ற பதிவுகளைப் போல இந்தப் பதிவுக்குக் கருத்துகள் எதுவும் (ஒன்று தவிர) வராததற்கு உங்களது அதிகப்பிரசங்கித்தனமான எழுத்து தான் காரணம். கல்கியின் பொன்னியின் செல்வன் ஒரு இலக்கியம் இல்லை என்று நீங்கள் அனலைஸ் செய்திருக்கும் விதம் சிறுபிள்ளைத்தனம். இந்தத் தளத்தில் இருந்து அதனை நாங்கள் எதிர்பார்த்திருக்கவில்லை. சாரி டு சே தீஸ்……

  இப்படிக்கு,
  தங்களைப் போல
  மெத்தப் படித்திருக்காத
  மேதாவி.

  Like

  • பொன்னியின் செல்வனைப் பற்றி விரிவாக எழுதும் ஐடியா இருப்பதால்தான் நான் இங்கே மறுமொழி தராமல் இருந்தேன். ஆனால் மேதாவி எழுதிய மறுமொழியைக் கண்டதும் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த வேண்டி இருக்கிறது.

   இந்தத் தளத்துக்கு ஆர்வி என்ற ஆர்.வி. சுப்ரமண்யன், பக்ஸ் என்ற பகவதி பெருமாள் என்று இரண்டு ஆசிரியர்கள் இருக்கிறோம். எங்கள் கருத்துகள் எப்போதும் ஒத்துப் போவதில்லை, ஒத்துப் போக வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் எங்களுக்குள் இல்லை. ஆர்விக்கு பொ. செல்வன் இலக்கியம், பக்ஸுக்கு இல்லை.

   இதை எழுதியதும் ஆர்வியே என்ற எண்ணத்தில் மேதாவி ” உங்களது மற்ற பதிவுகளைப் போல இந்தப் பதிவுக்குக் கருத்துகள் எதுவும் (ஒன்று தவிர) வராததற்கு…” இப்படி எழுதுகிறார். எத்தனையோ பதிவுகளுக்கு கருத்து வருவதில்லை, அதெல்லாம் எங்களுக்கு ஒரு பிரச்சினையும் இல்லை…

   Like

 3. பொன்னியின் செல்வன் ஒப்பீடு இல்லாத ஒரு க்ளாசிக் படைப்பு!

  Like

 4. மதி.இந்தியா permalink

  தமிழில் பொன்னியின் செல்வனுக்கு பின் நீங்கள் படித்த கிளாசிக்குகள் என்ன பின்னூட்டத்தாரே ? 🙂

  Like

 5. சுபத்ரா, மதி.செல்வன் கேட்பது போல உங்கள் கிளாசிக்குகளின் லிஸ்டை பகிர்ந்து கொள்ளுங்களேன்! எனக்கும் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறது…

  Like

 6. ஆகா.. கிண்டல் பண்றீங்கனு தெரியுது 🙂
  தமிழில் நான் படித்த இன்னொரு க்ளாசிக் ‘பாரதியார் கவிதைகள்’..

  Like

  • சுபத்ரா, // ஆகா.. கிண்டல் பண்றீங்கனு தெரியுது // இதில் கிண்டல் என்ன? இந்தத் தளமே இது போன்ற விஷயங்களை பகிருந்து கொள்ளத்தான்.

   Like

 7. புளிகான் permalink

  ஒனைஎல்லாம் இத பத்தி எழுதலைன்னு எவன் கேட்டான்?

  Like

  • புளிகான், // ஒனைஎல்லாம் இத பத்தி எழுதலைன்னு எவன் கேட்டான்? // நீங்கள் மறுமொழி எழுதவில்லை என்று கூட யாரும் கேட்கவில்லை, நீங்கள் எழுதவில்லையா? அந்த மாதிரிதான்…

   Like

 8. கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ மணியம் வரைந்த ஓவியங்களுடன் விகடன் பிரசுர வெளியீடாக அடுத்த மாதம் (ஜனவரி 2012) வர இருக்கிறது. நான் பத்மவாசன் வரைந்த போது அவரது ஓவியங்களுக்காகவே வாசித்தேன். ஆறுநாட்களில் தினம் ஒரு பாகமாக படித்தேன். வாசிப்பை தூண்டக்கூடிய நாவல்.

  Like

 9. விமல் permalink

  பொன்னியின் செல்வன் – PDF வடிவம்

  http://www.mediafire.com/download.php?lxlhf7zmr4ub0b9

  5 MB

  Like

 10. geep permalink

  “பொன்னியின் செல்வன் ” – ஒரு சினிமாக்காரரின் பார்வையில்

  http://mdeii.blogspot.com/2005_09_01_archive.html

  “அஞ்சலி” படத்தில் நடித்த சிறுவன் ஆனந்த் தான் இந்த வலைப்பதிவை எழுதியவர்!

  Like

 11. ரெங்கசுப்ரமணி permalink

  இந்த ஆராய்ச்சி இன்னும் 50 ஆண்டுகளுக்கு பின்னும் நடக்கும். அப்போதும் பொன்னியின் செல்வன் இருக்கும். பொன்னியின் செல்வன் இலக்கியமா இல்லையா என்று. இலக்கியத்திற்கு என்ன அளவுகோல் என்று எனக்கு தெரியாது.ஏதோ தரிசனம், சமகாலம் என்று எல்லாம் கூறப்படுகின்றது. என் அளவுகோல் காலத்தை கடந்து நிற்பது. சங்க இலக்கியங்கள் எல்லாம், எந்த தரிசனத்தை தருகின்றது. அந்த பாடல்களில் இருந்துதான் அனைவரும் தேனும் பாலும் ஓட விடுகின்றனர். 60 வருடங்களுக்கு முன் எழுதப்பட்டது அதன் வீச்சு குறையாமல் இருப்பதே அதன் தரத்திற்கு எடுத்துக்காட்டு. வாசிப்பின் உச்ச கட்டத்தில் இருப்பவனாலும் படிக்க முடிவது, ஆரம்ப நிலையில் உள்ளவனாலும் படிக்க முடிவதே இதன் வெற்றி.

  Like

 12. please tell us with all your experience in reading these many books, which books will you ppl prescribe us to read?

  Like

  • பிரபா, அவ்வப்போது படிக்க வேண்டிய புத்தகங்கள் என்று பட்டியல் போட்டிருந்தாலும் தொகுக்க வேண்டும். விரைவில்.

   Like

 13. prathap permalink

  RV,

  பொன்னியின் செல்வனின் தொடர்ச்சி காவிரி மைந்தன் என்ற புத்தகத்தை தாங்கள் படித்திருக்கிறீர்களா? நான் நந்திபுரத்து நாயகி எனும் புத்தகத்தை படித்து இருக்கிறேன் ஆனால் அது அவ்வளவு நன்றாக இல்லை, நான் இப்பொழுது காவிரி மைந்தன் புத்தகத்தை வாங்கலாம் என்று நினைக்கிறேன் தாங்கள் இதை படித்திருந்தால் உங்களது கருத்தை பதிவு செய்யவும்.

  Like

  • பிரதாப், காவிரி மைந்தன் ஆரம்பித்தேன். போரடித்தது என்று முடிக்கவில்லை. 🙂

   Like

   • prathap permalink

    பொன்னியின் செல்வன் அளவுக்கு எந்த சரித்திர நாவலும் (in historical fiction genre) இல்லை என்று நினைக்கிறேன், நான் எந்த சரித்திர நாவல் படித்தாலும் பொன்னியின் செல்வன் அளவுக்கு இல்லை என்றே தோன்றுகிறது.

    பொன்னியின் செல்வனை படித்து விட்டு எந்த சரித்திர நாவல்களை படித்தாலும் ஒரு மனநிறைவே ஏற்படுவதில்லை, குறிப்பாக அகிலன் எழுதிய சரித்திர நாவல்களை (உ.ம். வேங்கையின் மைந்தன்) படித்தால் “ஏன் இந்த நாவலை படித்தோம்?” என்ற உணர்வு ஏற்படுகிறது, மேலும் இந்த மாதிரி குப்பை புத்தகங்களை படிக்கும் போது சரித்திர நாவல்கள் படிக்க வேண்டும் எனும் என் ஆவலே குறைகிறது.

    பொன்னியின் செல்வன் போன்று சுவாரஸ்யமான புத்தகங்களை வரிசை படுத்துங்கள்

    Like

 14. பொன்னியின் செல்வனின் வெற்றிக்கு முக்கிய காரணம் கதாபாத்திரங்களின் அமைப்பு, சுவாரஸ்யமான முடிச்சுகள், கதை பரபரவென்று அங்குமிங்கும் பறப்பது, மெலிதான நகைச்சுவை. மொத்த கதையும் ஆறு மாதங்களில் நடக்கும் அதை மூன்று வருடங்களுக்கு மேலாக எழுதுவது என்பது சாதரணமல்ல. நேற்றுதான் மீண்டும் படிக்க ஆரம்பித்தேன். வந்து பார்த்தால் சைட் பெட்டியில் பொ.செ. கல்கியில் பத்தாண்டுகளுக்கு முன் வந்தது. கல்லூரியில் படிக்கும் போது சேகரித்து பைண்ட் செய்யப்பட்டது. பத்மவாசனின் ஓவியங்களுடன் படிக்கும் போது இன்னும் அருமை. நல்ல கத்திரி இருந்தால் சாண்டில்யனை படிக்கலாம். வேண்டாததை வெட்டி எறிந்தால் கொஞ்சம் சாண்டில்யன் சிறுகதைகளும், குட்டி நாவல்களும் கிடைக்கும்.

  Like

 15. சாரக்ரகி permalink

  பக்ஸ் உடன் நான் பெரும்பாலும் ஒத்துப் போகிறேன். பொசே யின் சிறப்பு நம்மை சோழர் காலத்தில் கொண்டு சென்றுவிடும். நாவல் படிக்கும்போது தேநீர் குடிக்கச் செல்லும் போது கூட எதோ சோழ நாட்டில் செல்வது போல தோன்றும். வெகுவாக பாதித்த நூல். சுஜாதாவின் காந்தளூர் வசந்தகுமாரன் கதை படித்தால் பொசெ யை கொண்டாடுவோம். காந்தளூர் கந்தலான தட்டையான ஒரு கதை.

  ஆனால் முதிர்ச்சியில்லாத சோர்வளிக்கும் பல பக்கங்கள் பொசெ யில் உள்ளது.

  கிளாச்சிக் தான் என்று சொல்லிக் கொண்டு படிக்க வேண்டியது தான் வேறு வழியில்லை. பெரிய தரிசனங்களும் எதிர்பார்க்க முடியாது.

  எந்தளவிற்கு பாப்புலர் ஆக உள்ளது என்பது முக்கியமல்ல. அப்படி பார்த்தல் விஷ்ணுபுரம் போன்ற நாவல்கள் இந்த அளவுக்கு பிரசித்தி கிடையாதது. ஆனால் புதிய தரிசனங்கள் தருவது.

  பொ.செ. வரலாறு சார்ந்ததா இல்லையா எந்தளவிற்கு கறாராக சொல்கிறது என்பது எனக்கு முக்கியமல்ல. ஆனால் அந்த கதைக் களத்திற்கு இன்னும் தரிசனங்கள் குறைவே.

  Like

 16. ரெங்கசுப்ரமணி, சாரக்ரகி, நீங்கள் இரண்டு பேரும் சொல்வதுமே சரிதான் என்று எனக்குப் படுகிறது. பல கோணங்கள் சரியாக இருப்பது ஒரு க்ளாசிக்குக்கு நடக்கக் கூடியதுதானே!

  Like

 17. kesavamani permalink

  எது நாவல்? எதற்காக நாவல்? யார் படைப்பாளி? என்பதை அறிந்துகொள்ள இந்தப் பதிவைப் படிப்பது நலம்.
  http://wp.me/p2NYDZ-Fl

  Like

Trackbacks & Pingbacks

 1. விஷ்ணுபுரம் – வரலாறு « விஷ்ணுபுரம்
 2. 9.விஷ்ணுபுரம் – முடிவுரை « விஷ்ணுபுரம்
 3. 9.விஷ்ணுபுரம் – முடிவுரை « விஷ்ணுபுரம் by ஜெயமோகன்
 4. 9.விஷ்ணுபுரம் – முடிவுரை « ஜெயமோகனின் "விஷ்ணுபுரம்"
 5. தமிழ் ஆடியோ புத்தகங்கள் | சிலிகான் ஷெல்ஃப்
 6. பிரபஞ்சனின் “வானம் வசப்படும்” | சிலிகான் ஷெல்ஃப்
 7. பிரபஞ்சனின் “மானுடம் வெல்லும்” | சிலிகான் ஷெல்ஃப்
 8. கல்கியின் வாரிசுகள் (சரித்திர நாவல்கள்) | சிலிகான் ஷெல்ஃப்
 9. பாலகுமாரனுக்கு பிடித்த புத்தகங்கள் | சிலிகான் ஷெல்ஃப்
 10. இலக்கியக் கோட்பாடுகளும் தரம் பிரித்தலும் | சிலிகான் ஷெல்ஃப்
 11. தமிழின் டாப் டென் நாவல்கள் | சிலிகான் ஷெல்ஃப்
 12. நானும் புத்தகங்களும் – 14 வயது வரை | சிலிகான் ஷெல்ஃப்
 13. ஏன் படிக்கிறேன்? | சிலிகான் ஷெல்ஃப்
 14. கல்கி vs தேவன் – அசோகமித்ரன் ஒப்பீடு | சிலிகான் ஷெல்ஃப்
 15. பிரபஞ்சன் – அஞ்சலி | சிலிகான் ஷெல்ஃப்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: