சிவசங்கரியின் “பாலங்கள்”

எனக்கு சின்ன வயதிலிருந்தே சிவசங்கரி மீது கொஞ்சம் கடுப்பு உண்டு. சிவசங்கரி காட்டும் மனிதர்கள் செயற்கையானவர்கள், ஃபிலிம் காட்டுகிறார்கள் என்றுதான் தோன்றும். ஆனால் எனக்குத் தெரிந்த பெண்களுக்கெல்லாம் சிவசங்கரிதான் பிடிக்கும். அவர்களோடு கடலை போடவாவது இதை எல்லாம் படிக்க வேண்டி இருந்தது. அதுவும் ஒரு வழக்கமான முக்கோணக் காதல் கதையில் அருண் என்று ரொம்ப நல்லவன் ஒருவன் வருவான் பாருங்க, அவனை எங்கேயாவது பார்த்தால் இரண்டு அறை கொடுக்க வேண்டும் என்று கொலை வெறியோடு கொஞ்ச நாள் அலைந்தேன். ஆனால் அவர் பெண்கள் உலகத்தில் ஒரு சூப்பர்ஸ்டார், ஒரு மனிதனின் கதை, நண்டு மாதிரி சில புத்தகங்கள் ஒரு தலைமுறை பெண்களின் மனதைத் தொட்டன என்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.

உறவினர் வீட்டில் பாலங்கள் என்ற புத்தகம் கிடைத்தது. இதைப் பற்றி அரசல் புரசலாகக் கேட்டிருக்கிறேன். படித்துத்தான் பார்ப்போமே என்று பிரித்தேன்.

சிவசங்கரி நல்ல முயற்சி செய்திருக்கிறார். தலைமுறைகளாகத் தொடர்ந்து வரும் அரவணைப்பு, தஞ்சாவூர் அக்ரஹாரக் குடும்பங்களின் ஐம்பது-அறுபது வருஷங்களுக்கு முந்தைய பழக்க வழக்கங்களை பதிவு செய்வது என்று நிறைய முயன்றிருக்கிறார். ஆனால் முயற்சி வெற்றி பெறவில்லை. வெற்றி பெற்றிருந்தால் இதை நான் இலக்கியம் என்றுதான் மதித்திருப்பேன்.

மூன்று தலைமுறைகள், மூன்று குடும்பங்கள், ஒவ்வொன்றிலும் பாட்டிக்கும் பேத்திக்கும் ஜெனரேஷன் கேப், அதை சமாளிக்கும் அம்மா என்ற தீம். 1910-40 தலைமுறை பகுதியில் எக்கச்சக்க நுண்விவரங்கள். 1940-65 தலைமுறையில் சென்னையில் வளரும் மேல்தட்டு பிராமணக் குடும்பச் சூழ்நிலையைப் பற்றி நல்ல சித்தரிப்பு (இது சிவசங்கரி வளர்ந்த சூழ்நிலை என்று நினைக்கிறேன்) அவ்வளவுதான் கதை.

முதல் தலைமுறையில் சேகரித்த எல்லா விவரத்தையும் சொல்லிவிட வேண்டும் என்ற ஆசையில் கதையின் சுவாரசியத்தைக் கொன்றுவிடுகிறார். இரண்டாவது தலைமுறையில் நுண்விவரங்கள் குறைந்துவிடுகின்றன. ஆனால் நல்ல சித்தரிப்பு இருக்கிறது. மூன்றாவது தலைமுறையிலோ நுண்விவரத்தையே காணோம்.

வெண்ணெய் எடுப்பது ஒவ்வொரு தலைமுறையிலும் எப்படி மாறுகிறது என்று காட்டுவது மாதிரி சில ஐடியாக்கள் நன்றாக இருந்தன. பெண் பூப்படைவது, மாதவிடாயைக் கையாள்வது எப்படி மாறுகிறது என்ற obvious விஷயங்களைத்தான் எதிர்பார்த்தேன்.

உடுமலை தளத்தில் கிடைக்கிறது. விலை நூறு ரூபாய்.

படிக்கலாம், நல்ல முயற்சிதான், இதை சிலர் ரசிக்கக்கூடும் என்பதை உணர்கிறேன், ஜெயமோகன் இதை சிறந்த social romances லிஸ்டில் சேர்க்கிறார். ஆனால் எனக்கு சரிப்படவில்லை.

பிற்சேர்க்கை: விகடனில் தொடராக வந்தபோது முதல் பாகத்திற்கு கோபுலு, இரண்டாவது பாகத்திற்கு மணியம் செல்வன், மூன்றாவது பாகத்திற்கு ஜெயராஜ் ஆகியோர் ஓவியம் வரைந்ததாக ரமணனும் சாரதாவும் தகவல் தருகின்றனர். (வாரப் பத்திரிகை ஓவியங்களை நான் மிகவும் ரசிப்பவன். பத்திரிகையை கிழித்து பைண்ட் செய்த புத்தகம் என்றால் மிகவும் பிடிக்கும்.)

விஜயன், சாரதா இருவரும் அதில் பலகாரம் சரியாக வரவில்லை என்று ஒரு மாமி அடுப்பிடம் போய் “என்னை அவமானப்படுத்தணும்னா இதோ பார்த்துக்கோ” என்று புடவையைத் தூக்கி அடுப்பிடம் காட்டிய ஒரு காட்சியை நினைவு கூர்கிறார்கள். என் கண்ணில் இதெல்லாம் ஒரு விஷயமே இல்லை, ஆனால் இந்த காட்சி அப்போது சர்ச்சையை கிளைப்பியது என்றும் துக்ளக் பத்திரிகை இது ஆபாசம் என்று போர்க்கொடி தூக்கியதாகவும் சாரதா தகவல் தருகிறார்.

நண்பர் சிமுலேஷனின் அம்மா இந்தப் புத்தகத்தைப் பற்றி ரேடியோவில் விமர்சித்திருக்கிறார். அவரது விமர்சனத்தை இங்கே கேட்கலாம், transcript-ஐ படிக்கலாம். கையெழுத்து முத்துமுத்தாக இருக்கிறது!

13 thoughts on “சிவசங்கரியின் “பாலங்கள்”

 1. //சென்னையில் வளரும் மேல்தட்டு பிராமணக் குடும்பச் சூழ்நிலையைப் பற்றி நல்ல சித்தரிப்பு (இது சிவசங்கரி வளர்ந்த சூழ்நிலை என்று நினைக்கிறேன்) அவ்வளவுதான் கதை//

  இல்லை. முழுக்க முழுக்க அவரது உறவினர் ஒருவர் வாழ்வில் நிகழ்ந்ததை அடிப்படையாக வைத்து எழுதியிருப்பதாக முன்பு எங்கோ படித்த ஞாபகம்.

  //சிவசங்கரி நல்ல முயற்சி செய்திருக்கிறார். தலைமுறைகளாகத் தொடர்ந்து வரும் அரவணைப்பு, தஞ்சாவூர் அக்ரஹாரக் குடும்பங்களின் ஐம்பது-அறுபது வருஷங்களுக்கு முந்தைய பழக்க வழக்கங்களை பதிவு செய்வது என்று நிறைய முயன்றிருக்கிறார். ஆனால் முயற்சி வெற்றி பெறவில்லை. வெற்றி பெற்றிருந்தால் இதை நான் இலக்கியம் என்றுதான் மதித்திருப்பேன்.//

  இலக்கியம் இல்லாவிட்டாலும் இது ஒரு முக்கியமான பதிவு சார். குறிப்பாக அந்த பத்து நாள் காரியங்கள் பற்றி அவர் எழுதியிருப்பது ரொம்ப முக்கியமானது. பல இப்போது வழக்கில் இல்லாமல் ஒழிந்து கொண்டிருப்பது. ஆதலால் இது ஒரு முக்கியமான பதிவுதான்.

  //இரண்டாவது தலைமுறையில் நுண்விவரங்கள் குறைந்துவிடுகின்றன. ஆனால் நல்ல சித்தரிப்பு இருக்கிறது. மூன்றாவது தலைமுறையிலோ நுண்விவரத்தையே காணோம்.//

  மெல்லத் தேய்ந்து ஒன்றும் இல்லாமல் போன மாதிரி. இதற்கு என்னவோ இலக்கியத்தில் ஒரு நல்ல பெயர் உண்டு ஆ… ”சென்று தேய்ந்து இறுகுதல்” அது மாதிரிதான் நாவல் இருக்கிறது. ஆனால் தொடராக வந்தபோது நல்ல பரப்பாகப் போனது. புத்தகமாகப் படிக்கும் போது மெல்ல மெல்ல (மெள்ள மெள்ள) ஒரு சலிப்பு வருவது உண்மைதான்.

  Like

 2. ஆனால் நல்ல முயற்சி. ’சிறை’ ’நண்டு’ “மனிதனின் கதையை”த் தொடர்ந்து இதுவும் ஒரு குறிப்பிடத்தக்க முயற்சி. அந்த வகையில் பிற வணிகப் பெண் (?) எழுத்தாளர்களோடு ஒப்பிடும்போது சிவசங்கரி சற்றே மேம்பட்ட நிலையில் இருக்கிறார்.

  Like

 3. அந்த அம்மாளின் எழுத்துக்களை பற்றி எனக்கு எப்போதும் கருத்து இருந்ததில்லை,இந்திரா காந்தி ஜெயலலிதா ஆகியோர்களின் supporter என்ற காரணம் கூட இருக்கலாம்.பாலங்கள் தொடராக வந்தபோது படித்த நினைவு இருக்கிறது,அதில் பலகாரம் சரியாக வரவில்லை என்று ஒரு அம்மணி செய்த காரியம் இப்பவும் பிடரியில் அடித்த மாதிரி நினைவில் உள்ளது.

  Like

 4. மூன்று காலங்களைக் கூறும் அந்த நாவல் விகடனில் தொடராக வந்தபோது நல்ல வரவேற்பு. முதல் பாகத்திற்கு கோபுலு, இரண்டாவது பாகத்திற்கு மணியம் செல்வன், மூன்றாவது பாகத்திற்கு ஜெயராஜ் ஃபெர்னாண்டஸ் ஆகியோர் ஓவியம் வரைந்ததாக நினைவு.

  Like

 5. சிவசங்கரியின் ‘பாலங்கள்’ நாவலை நானும் படித்திருக்கிறேன். ஆனந்த விகடனில் வெளியான கதையின் பைண்ட் செய்ப்பட்ட வடிவம். அதனால் அதன் ஓவியங்களோடு படிக்க முடிந்தது. அதில் ஒரு விசேஷம். முந்தைய தலைமுறைக்கதைக்கான அத்தியாயங்களுக்கு ஓவிய கோபுலுவும், இரண்டாம் தலைமுறை அத்த்தியாயங்களுக்கு ஓவியர் மாருதியும், மூன்றாம் தலைமுறை அத்தியாயங்களுக்கு ஓவியர் ஜெயராஜும் (ஜெ…) வரைந்திருந்ததால், ரொம்ப நேட்டிவிட்டியாக இருந்தது.

  K.N.விஜயன்,

  அவ்வளவு பெரிய நாவலில் அந்த ஒரு குறிப்பிட்ட பகுதியை நீங்கள் நினைவு கூர்ந்திருப்பது ஆச்சரியமில்லை. நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அந்த படுமோசமான இடம் நான் படிக்கும்போதே மனம் கூசியது. ஆண் எழுத்தாளர்களே எழுதத் தயங்கும் ஒரு விஷயத்தை ஒரு பெண் எழுத்தாளர் சர்வ சாதாரணமாக எழுதியிருப்பதும், அதை அச்சேற்றியிருப்பதும், சமூக அக்கறையுள்ளவர்கள் செய்யக்கூடியது அல்ல.

  இதை பிரபலப்படுத்தியதில் ‘துக்ளக்’ பத்திரிகைக்கும் பங்குண்டு. அப்பத்திரிகையில் ‘தமிழன் என்று சொல்லடா தலைகுனிந்து நில்லடா’ என்ற பகுதியில், தமிழ் நாவல்கள், மற்றும் கதைகளில் வரும் ஆபாசமான இடங்கள் பற்றிக்குறிப்பிட்டு, அவற்றைச்சாடி ‘துர்வாசர்’ என்பவர் எழுதி வந்தார். (துர்வாசர் என்ற பெயரில் எழுதியவர் எழுத்தாளர் வண்ணநிலவன் தான்). அதில் பாலங்கள் பகுதியில் வரும் இந்த ‘சர்ச்சைக்குரிய’ இடம் பற்றியும் எழுதியிருந்தார். அந்த நிகழ்ச்சியை விவரிப்பவரின் பாத்திரப்பெயரை ‘நடுக்கடை சித்தி’ என்று சிவசங்கரி குறிப்பிட்டிருந்தார். ‘துக்ளக்கில்’ எழுதியதன் பலனாக, அதுவரை மந்தமாக இருந்த ‘பாலங்கள்’ விற்பனை அதிகமானதுதான் மிச்சம். (ஒருவேளை விளம்பர யுக்தியோ?. ‘இங்கெல்லாம் ஆபாச எழுத்துக்கள் கிடைக்கின்றன, வேண்டுவோர் தேடிப்படியுங்கள்’ என்று சொல்வது போலவும் துர்வாசரின் கட்டுரை அமைந்தது).

  இதன் தொடர்ச்சியாக ‘இதயம் பேசுகிறது’ பத்திரிகையில் வந்த ஒரு கதையின் சர்ச்சைக்குரிய ஒரு இடம் பற்றியும் துர்வாசர் எழுதப்போக, அதைச்சாடி மணியன் நேரடியாக ‘சோ’வைத்தாக்கி தன் பத்திரிகையில் அறிக்கைவிட, அதற்கு ‘சோ’ தனது துக்ளக்கில் மணியணுக்கு நேராக பதில் சொல்ல, இரு பத்திரிகை ஆசிரியர்களிடையே பெரிய அறிக்கைப்போர் வெடித்தது என்பது கூடுதல் சுவாரஸ்யம்.

  Like

 6. பாலங்கள் நாவல் பற்றி கிடைத்த தகவல்களையும் இப்போது சேர்த்துவிட்டேன்.
  ரமணன், உங்கள் மறுமொழியோடு நான் முழுமையாக உடன்படுகிறேன்.
  சிமுலேஷன், உங்கள் அம்மாவின் பேச்சின் transcript கிடைக்குமா?
  மறுமொழி எழுதிய அனைவருக்கும் நன்றி!

  Like

   1. சிமுலேஷன், அந்த transcript-க்கும் சுட்டி கொடுத்திருக்கிறேன்.

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.