சிலிகான் ஷெல்ஃப் தளமும் ஜெயமோகனும்

இது வரை ஒரு ஆறேழு பேர் இந்தத் தளத்தில் ஜெயமோகனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக கமென்ட் அடித்திருக்கிறார்கள். அந்த ஆறேழு பேரில் இப்போது தோழி சாரதாவும் சேர்ந்துவிட்டதால் இதை எழுதுகிறேன்.

சாரதா என் மதிப்பிற்கும் அன்புக்கும் உரியவர். அவார்டா கொடுக்கறாங்க தளம் செயலாக இருந்த காலத்தில் இருந்தே பழக்கம். அவர்

எந்த ஒன்றையும் உங்கள் கண்களால் நேரடியாகப் பார்க்காமல், ‘ஜெயமோகன்’ என்ற கண்ணாடி அணிந்து பார்ப்பது சற்று நெருடுகிறது. (ஆனால் அது உங்கள் உரிமை என்பதை மறுப்பதற்கில்லை). எது ஒன்றைப்பற்றியும் சொல்லும்போது, உங்கள் கருத்து என்ன, அல்லது அணுகுமுறை எப்படி என்று நேரடியாக வருவதை விடுத்து, முதலில் அதைப்பற்றி ஜெயமோகன் என்ன சொல்லியிருக்கிறார் என்று ஒரு பாரா, அல்லது ஒரு வரி போடுவது (எல்லாவற்றிற்கும்) நன்றாக இருக்கிறதா?

என்று என் சுஜாதா மதிப்பீடு பதிவைப் பற்றி மறுமொழி எழுதி இருந்தார். என் எண்ணங்களை எழுதாமல் ஜெயமோகனின் கருத்தையே நான் பிரதிபலிக்கிறேன் என்று அவருக்கு தோன்றி இருப்பது எனக்கு வியப்பளித்தது. அவர் மறுமொழி எழுதி இருக்கும் பதிவே ஜெயமோகனின் கருத்திலிருந்து நான் வேறுபடுவதை, வேறுபடுவதற்கான காரணங்களை விளக்கும் பதிவுதான். என்னடா முன்முடிவுகளோடு பதிவைப் படிக்காமலே எழுதிவிட்டாரா என்று காரசாரமாக பதில் எழுத ஆரம்பித்தேன்; ஆனால் அவருக்கு ஏன் அப்படி தோன்றுகிறது என்று கண்டுபிடிப்போமே என்று தோன்றியதால் அந்தப் பதிலை குப்பைக்கூடைக்கு அனுப்பிவிட்டேன்.

கண்டுபிடிப்போமே என்றுதான் ஆரம்பித்தேன். என்னால் முடியவில்லை, இன்னும் புரியவில்லை. ஒரு வேளை ஜெயமோகன் சொல்வதுதான் எப்போதும் ஸ்டார்டிங் பாயின்ட், அவர் கருத்தை வெட்டியும் ஒட்டியும் மட்டுமே எழுதுகிறேன் என்று நினைக்கிறாரோ என்னவோ தெரியவில்லை. அதுவும் சரியாக இல்லை, ஏனென்றால் ஜெயமோகன் கருத்து ஸ்டார்டிங் பாயின்ட்டாக இருப்பதும் அபூர்வமே. சரி ஜெயமோகன் இந்தத் தளத்தில் என்ன ரோல் வகிக்கிறார் என்பதைப் பற்றியாவது விளக்குகிறேன். மாட்னீங்க!

எனக்கு படிக்கப் பிடித்திருக்கிறது. ஒரு வித addiction என்றே சொல்லலாம். பேசாமல் படித்தோமா போனோமா என்று இல்லாமல் எதற்காக இந்த விமர்சனம், புத்தக அறிமுகம், வணிக எழுத்தா/சீரிய எழுத்தா என்ற சச்சரவு எல்லாம்? என் விமர்சன மெதடாலஜி பதிவில் சொன்ன ஒரு பாயிண்டை இங்கு மீண்டும்:

ஒத்த ரசனை உள்ளவர்களை கண்டுபிடிக்கத்தான்! புத்தகங்களைப் பற்றி பேசுவதில் ஒரு மகிழ்ச்சி இருக்கிறது. அந்த மகிழ்ச்சி ஏறக்குறைய ஒத்த ரசனை உள்ளவர்களிடம் பேசும்போது இன்னும் அதிகமாகிறது. மார்க் போட்டால் கூட ஓரளவு ஒத்துப் போகிறது. அப்படி யாராவது கிடைத்தால் விடாதீர்கள்! உங்களுக்கு அவரும் அவருக்கு நீங்களும் செய்யும் சிபாரிசுகள் அனேகமாக ஒர்க் அவுட் ஆகும்!

எனக்கு ஜெயமோகனுக்கும் ஓரளவு ஒத்த ரசனை இருக்கிறது. குறிப்பாக அவர் இலக்கியம் என்று கருதும் படைப்புகளை அனேகமாக நானும் ரசிக்கிறேன். சில சமயம் எங்கள் எண்ணங்கள் ஒத்துப் போவதும் இல்லை. சமீபத்தில் சுஜாதாவைப் பற்றி என்னுடைய மதிப்பீட்டுப் பதிவு ஒரு உதாரணம். அவர் சிபாரிசு செய்யும் எல்லா புத்தகங்களையும் படிக்க வேண்டும் என்று எனக்கு ஆசை உண்டு. நான் சொல்லி அவர் இது வரை ஒரு புத்தகம் (Guns, Germs and Steel) படித்திருக்கிறார் என்று நினைக்கிறேன். அவரது மெதடாலஜி, வரையறைகள் மீது எனக்கு விமர்சனங்கள் உண்டு. ஆனால் அவர் ஒரு தேர்ந்த வாசகர், என்னை விடச் சிறந்த விமர்சகர் என்பதில் எனக்கு எந்த வித சந்தேகமும் இல்லை. தெள்ளத் தெளிவாக இதுதான் என் பாணி, இதுதான் என் வரையறை என்று சொல்லிவிட்டு அதன்படியே புத்தகங்களை விமர்சிப்பவர் எனக்குத் தெரிந்து அவர் ஒருவரே. அவரால் inspire ஆகித்தான் நானும் இது என் பாணி என்று சொல்லிவிட்டு அப்புறம்தான் புத்தகங்களைப் பற்றி இந்த ப்ளாகில் எழுத ஆரம்பித்தேன்.

ஜெயமோகன் என்னை விடச் சிறந்த விமர்சகர் என்பது தன்னடக்கம் இல்லை. தன்னடக்கம் என்பது ஒரு விதப் பொய். தேவை இல்லாதபோது பொய் சொல்வதில் எனக்கு எப்போதும் விருப்பம் இருந்ததில்லை. டெண்டுல்கர் என்னை விட சிறந்த பேட்ஸ்மன் என்றால் அது தன்னடக்கம் என்று யாரும் நினைக்கமாட்டீர்கள் இல்லையா?

ஜெயமோகன் மேதைதான், ஆனால் கடவுள் இல்லை. அவர் சொல்வது வேதவாக்கு இல்லை. கடவுளே விமர்சித்தாலும், by definition, விமர்சனம் எதுவும் இறுதி முடிவு இல்லை.அப்படி ஜெயமோகன் சொல்லிட்டார்ப்பா, அத்தோட அவ்வளவுதான் என்று நான் சொன்னால் அவருக்கு என் மீது இருக்கும் கொஞ்சநஞ்சம் மரியாதையும் போய்விடும். 🙂

விமர்சனத்தின் முக்கியமான tangible பயன் புத்தக அறிமுகம்தான். சில சமயங்களில் அது புத்தகத்தின் பின்புலத்தை விளக்கலாம் (பக்ஸ் எழுதிய பதினெட்டாவது அட்சக்கோடு அறிமுகம் நல்ல உதாரணம்), சில சமயங்களில் இதைப் படித்துவிட்டு அதைப் படித்தால் நன்றாக இருக்கும் என்று சொல்லலாம், ஆனால் ஷேக்ஸ்பியரைத்தான் காலகாலத்துக்கும் படிக்கப் போகிறோம், நாடக விமர்சனங்களையா படிக்கப் போகிறோம்?

ஒரு புத்தகத்தைப் பற்றி எழுதும்போது என் கருத்தைத்தான் பதிவு செய்கிறேன். ஜெயமோகனுக்குப் பிடித்திருக்கிறது, பிடிக்கவில்லை என்பது என் கருத்தைப் பாதிப்பதில்லை. அவர் சிபாரிசு செய்தால் அந்தப் புத்தகம் நான் படிக்க வேண்டிய லிஸ்டில் நிச்சயமாகச் சேரும், அவ்வளவுதான். அவர் மட்டுமல்ல, சுஜாதா ஒரு புத்தகத்தைப் பற்றி சொன்னாலும் சேரும், அசோகமித்ரன் சொன்னாலும் அப்படித்தான். ஒரு புத்தகத்தைப் பற்றி என் கருத்தைப் பதிவு செய்யும்போது ஜெயமோகன் போன்ற ஒரு நிபுணரின் கருத்து கிடைத்தால் அதையும் பதிவு செய்கிறேன். அவர் மட்டுமல்ல, அசோகமித்ரன், சுந்தரராமசாமி, கி.ராஜநாராயணன், சுஜாதா, க.நா. சுப்ரமண்யம், வெங்கட் சாமிநாதன் போன்றவர்கள் அந்தப் புத்தகத்தைப் பற்றி ஏதாவது சொல்லி அது என் கண்ணில் பட்டால் அதையும் பதிவு செய்வேன். க.நா.சு.வின் படித்திருக்கிறீர்களா புத்தகத்தில் இருக்கும் சிபாரிசுகளைப் பற்றி பல முறை எழுதி இருக்கிறேன் (உல்லாச வேளை, நாகம்மாள், கரித்துண்டு, இதயநாதம்…) எஸ். ராமகிருஷ்ணன் தமிழின் சிறந்த சிறுகதை அல்லது நாவல் என்று குறிப்பிட்டிருந்தால் அதை கட்டாயம் பதிவு செய்கிறேன். கல்கியின் சில புத்தக முன்னுரைகளைப் (சில்லறை சங்கதிகள் லிமிடட், கப்பலோட்டிய தமிழன்) பதித்திருக்கிறேன். கல்கியும் சுஜாதாவும் க.நா.சு.வும் வெ.சா.வும் ஜெயமோகனும் பாராட்டுகிறார்கள் என்பதற்காக நான் எதையும் பாராட்டுவதும் இல்லை, அவர்கள் நிராகரிக்கிறார்கள் என்பதற்காக நான் எதையும் நிராகரிப்பதும் இல்லை.

ஜெயமோகன் நிறைய எழுதுகிறார். அதுவும் இணையத்தில் நிறைய எழுதுகிறார். பிறரின் புத்தகங்களை விமர்சிக்கிறார். கல்கியும் சுஜாதாவும் க.நா.சு.வும் செய்திருக்கும் விமர்சனங்கள் இணையத்தில் சுலபமாகக் கிடைப்பதில்லை. கிடைத்தால் அவர்களையும் மேற்கோள் காட்டுவேன். அப்படி காட்டுவது என் பாணி, அவ்வளவுதான்.

ஜெயமோகனின் இரண்டு பதிவுகள் – தமிழின் சிறந்த நாவல்கள் மற்றும் சிறந்த சிறுகதைகள் – எனக்கு references. அதில் இருக்கும் அத்தனை புனைவுகளைப் பற்றியும் எழுத விரும்புகிறேன். நான் ஒரு புத்தகத்தைப் பற்றி எழுதி அந்தப் புத்தகம் இவற்றில் குறிப்பிடப்பட்டிருந்தால் ஜெயமோகன் இதை தமிழின் சிறந்த (வணிக, அவணிக) நாவல்களில் ஒன்றாக கருதுகிறார் என்பதை நிச்சயமாகக் குறிப்பிடுவேன். ஒரு வேளை இது உங்கள் கண்ணை உறுத்துகிறதோ என்னவோ. ஆனால் எஸ்.ரா.வின் இரண்டு பதிவுகளும் – – தமிழின் சிறந்த நாவல்கள் மற்றும் சிறந்த சிறுகதைகள் – எனக்கு references-தான். எஸ்.ரா., ஜெயமோகன் இருவரில் யாராவது ஒருவர் தேர்ந்தெடுத்திருந்தாலும் அது நிச்சயமகக் குறிப்பிடப்படும். ஜெயமோகன் லிஸ்டில் இருக்கிறது என்று சொல்வது தவறாகப் பட்டால் ஏன் எஸ்.ரா. லிஸ்டில் இருக்கிறது என்று சொல்வது தவறாகப் படவில்லை என்பது எனக்கு இன்னும் புரியவில்லை.

முதல் முறை யாரோ ஒருவர் ஜெயமோகன் பேரைக் குறிப்பிடாமல் உங்களால் ஒரு பதிவு கூட எழுத முடியாதா என்று கேட்டபோது நானே அதிச்சி அடைந்தேன். நான் உணராமலே ஜெயமோகனைப் பற்றி குறிப்பிடுவது கன்னாபின்னாவென்று அதிகரித்துவிட்டதோ என்று கொஞ்சம் பயந்தேன். நாற்பது பழைய பதிவுகளுக்கு மேல் மீண்டும் படித்துப் பார்த்தேன். இரண்டிலோ மூன்றிலோ ஜெயமோகன் என்ற பேர் இருந்தது. சமீபத்தில் விமல் கூட இப்படி சொன்னபோது கூட முதல் பக்கத்தில் இருந்த பத்து பதிவுகளையும் பார்த்தேன், ஒன்றில் மட்டும் ஜெயமோகன் பேர் இருந்தது. சராசரியாக பத்து பதினைந்து பதிவுகளுக்கு ஒரு முறை ஜெயமோகன் பேர் குறிப்பிடப்படுகிறது. சராசரியாக பத்து பதிவில் ஒன்று சுஜாதா புத்தகங்களைப் பற்றி.:-)

நண்பர் ஸ்ரீனிவாஸ் சில சமயம் நீங்கள் ஜெயமோகன் பக்தரா என்பார். ஜெயமோகனின் கருத்தை வெட்டியும் பதிவு வருகிறது, ஒட்டியும் பதிவு வருகிறது. அவர் இந்தக் கேள்வியை ஜெயமோகன் கருத்தை மறுத்து எழுதும் பதிவிலும் கேட்பார்!

சாரதா ஏன் ஜெயமோகனின் கருத்தோடு சுஜாதா பதிவை ஆரம்பிக்கிறாய் என்று கேட்கிறார். அவர் சொன்ன கருத்துதான் ஆரம்பப் புள்ளி, அதனால்தான். சாரதா சொன்ன கருத்துதான் இந்தப் பதிவின் ஆரம்பப் புள்ளி, இந்தப் பதிவை அதோடுதான் ஆரம்பித்திருக்கிறேன். சாரதாவின் கருத்தை மறுத்துத்தான் எழுதி இருக்கிறேன். இதையும் யாராவது நான் சாரதாவின் கண்ணாடி மூலமே உலகைப் பார்க்கிறேன் என்று பொருள் கொள்ளாமல் இருந்தால் சரி. 🙂

தொடர்புடைய சுட்டி: அடுத்த பதிவு

19 thoughts on “சிலிகான் ஷெல்ஃப் தளமும் ஜெயமோகனும்

  1. தன்னிலை விளக்கம் என்கிற வகையில் இந்தப் பதிவு சரி. சிலர் சுஜாதாவிற்கு ஏன் இவ்வளவு முக்கியத்வம் என்றும் கேட்கலாம். அதற்கும் ஒரு பதிவு எழுதலாம்.
    இப்படிப் போய்க்கொண்டே இருக்கலாம். உங்கள் கருத்துகளை மற்றும் மேற்கோளாக நீங்கள் படித்த கருத்துக்களை சொல்வதில் தவறென்ன ?

    Like

  2. ஆர்வி

    இதற்கு நான் பதில் சொல்லக்கூடாது, ஆனாலும் இது நம் சூழலில் ஒரு வாடிக்கை என்பதனால் பதில். ஏனென்றால் இதே சிக்கலை நானும் சந்தித்திருக்கிறேன். என் நண்பர்களும் வாசகர்களும் சந்தித்திருக்கிறார்கள்.

    நான் எழுத ஆரம்பித்தபோதிருந்து கணிசமான கட்டுரைகளில் சுந்தர ராமசாமி பெயர் வரும். சுந்தர ராமசாமியில் இருந்துதான் நான் ஆரம்பித்தேன். அவருடன் ஒட்டியும் வெட்டியும்தான் முன்னால் சென்றேன். ஆகவே அதை தவிர்க்கமுடியாது. தொண்ணூறுகளில் எழுதப்பட்ட சிற்றிதழ் வம்புகளில் சுரா பக்தர், சுரா மேற்கோள் இல்லாமல் பேசமாட்டார் என்றெல்லாம் என்னைப்பற்றி எழுதப்பட்டிருக்கிறது. நான் நீங்கள் எழுதியதுபோலவே கணக்கெல்லாம் பிரசுரித்திருக்கிறேன். எத்தனை இடங்களில் மேற்கோளிட்டிருக்கிறேன், எங்கெல்லாம் முரண்பட்டிருக்கிறேன் என

    பின்னர் தெரிந்தது அதெல்லாமே வெட்டிவேலை. இந்தமாதிரி எதிர்வினையாற்றுபவர்கள் அக்கறையாக வாசிப்பவர்கள் அல்ல. பொறுப்பாக பதிலும் சொல்ல அவர்களால் முடியாது. நம் கருத்துக்களை உண்மையிலேயே எதிர்கொள்பவர்கள் இந்தவகையான சில்லறைத்தனமான எதிர்வினைகளை செய்வதில்லை. அவர்களுக்குச் சொல்வதற்கு விஷயம் என ஏதேனும் இருக்கும்.

    இந்த வகையான விமர்சனங்கள் ஒருவகை காழ்ப்பு அல்லது ஆற்றாமையில் இருந்து வெளிப்படுபவை மட்டுமே. அவர்களுக்கு சுந்தர ராமசாமி அல்லது என் மேல் உள்ள காழ்ப்பையே இப்படி காட்டுகிறார்கள். இப்படி சில்லறைத்தனமாக அதை வெளிப்படுத்துவது பற்றிய சுயவெட்கம் கூட இருப்பதில்லை. ‘சுந்தர ராமசாமி என்ற பிராமணனை ஏன் மேற்கோள் காட்டுகிறாய்?’ என்று கேட்பதற்குப் பதிலாகத்தான் ‘சுரா வழியாகவே எல்லாவற்றையும் பார்ப்பீர்களா?’ என்று கேட்கிறார்கள் என புரிந்தது.

    அதேதான் இங்கும். என்னுடைய கருத்துக்களை எதிர்கொள்வதற்கான திராணி இல்லாதவர்கள், என் மேல் தனிப்பட்ட காழ்ப்புகளை [அவற்றில் கணிசமானவை சாதி, மதம் சார்ந்தவை. மரபான பிராமண மனங்கள் முதல் முற்போக்குமுகாமினர் வரை பல தரப்புகள்] கொண்டவர்களே என் கருத்துக்கள் கவனிக்கப்படுவதையும் விவாதிக்கப்படுவதையும் கண்டு இத்தகைய மனப்பொருமலை அடைகிறார்கள். அதையே இப்படி வெளிப்படுத்துகிறார்கள்

    இங்கே பலரிலும் நான் காண்பது இந்த காழ்ப்பையே. அதை அவர்கள்தான் சரிசெய்து கொள்ளவேண்டும். அந்தக் காழ்ப்பு வழியாக இழப்பது அவர்களே

    இந்த கணக்கெடுப்புகள், முத்திரை குத்தல்களில் இருந்து முழுமையாக விடுபட்டாலொழிய எவராலும் சுதந்திரமாக இங்கே சிந்திக்கமுடியாது என்பதை மட்டும் சுட்ட விரும்புகிறேன். அரசியல்சரிகளை கடைப்பிடிப்பது, முற்போக்கு முகத்தை தக்கவைப்பது, நண்பர்களை பேணுவது, சிக்கல்களில் மாட்டிக்கொள்ளாமல் இருப்பது போன்ற ஜாக்ரதைகளைப்போல சிந்தனைக்கு விலங்குகள் இல்லை.

    ஒருவரை சுதந்திரமாக சிந்திக்காமல் அடிப்பதற்கான ஒரு வழியாகவே இந்த முத்திரைகள் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு முத்திரையை ஒருவர் மேல் குத்திவிட்டால் அதன் பின்னர் அவர் அந்த முத்திரையை களைவதற்காக நேர் எதிராக சிந்திக்க ஆரம்பிப்பார், பேச ஆரம்பிப்பார். அப்படி ஒரு நாலைந்து முத்திரைகளை குத்தினால் எவரையுமே அவர் போக்கில் எழுதவிடாமல் ஆக்கிவிடலாம்

    இவர்களை ‘மயிரே போச்சு’ என எண்ணுவது வழியாகவே நீங்கள் அர்த்தபூர்வமாக ஏதேனும் எழுதமுடியும்

    ஜெ

    Like

  3. டியர் ஆர்.வி.

    நான் இட்ட ஒரு பின்னூட்டத்தின் பொருட்டு, ஒரு நீண்ட தனிப்பதிவை இட்டிருப்பதன்மூலம் என் கருத்துக்கு எவ்வளவு மதிப்பளிக்கிறீர்கள் என்று உணர்கிறேன். அதற்கு முதலில் நன்றி.

    இப்படி ஒரு கருத்தை (கவனிக்கவும், குற்றச்சாட்டை அல்ல, கருத்தை) நான் மட்டும் சொல்லவில்லை பலரும் இதற்கு முன் சொல்லியிருக்கிறார்கள் என்று நீங்களே சொல்லியிருப்பதிலிருந்தே, நான் சொன்னது ஒரு அபாண்டமான கருத்து அல்ல, அதில் முழுக்கவோ அல்லது கொஞ்சமேனுமோ உண்மையிருக்கிறது என்பது தெளிவாகிறது.

    இதற்கு ஒரே வரியில், ‘நான் அப்படித்தான் அவரை மேற்கோள் காட்டுவேன், அதைக்கேட்க நீ யார்?’ என்று ஒரே வரியில் கேட்டு விஷயத்தை நீங்கள் முடித்திருக்கலாம். அப்படியில்லாமல், என் கருத்தை மதித்து நீண்ட விளக்கமாக ஒரு தனிப்பட்ட பதிவையே இட்டிருப்பதன்மூலம், இந்த தோழியின் தோழமையை நீங்கள் எவ்வளவு மதிக்கிறீர்கள் என்று உணர்கிறேன். உங்கள் நட்புக்காக மகிழ்கிறேன்.

    காட்டமாக ஒரு பதில் எழுதி அதை தூக்கி குப்பையில் போட்டுவிட்டதாகக் குறிப்பிட்டிருந்தீர்கள். அந்தக்குறையை திரு. ஜெயமோகன் தனது பின்னூட்டத்தில் போக்கி விட்டார். உங்கள் எழுத்தில் காணப்படும் மெச்சூரிட்டி (நான் மிகவும் மதிப்பது) அவர் எழுத்தில் இல்லையென்பதைப் பார்க்கும்போது, அவர் எப்படி உங்கள் ஆதர்ச நாயகன் ஆனார் என்ற ஆச்சரியம் மேலிடுகிறது. விமர்சனத்தைத்தாங்கிக்கொள்ள முடியாதவர்கள் பெரிய மனிதர்கள் ஆக முடியாது. இருக்கின்ற ஒருசில ரசிகர்களில் ஆர்.வி. போன்ற ரசிகர்களை இழந்து விடுவோமோ என்ற அச்சம் அவர் பதிவில் தெரிகிறது

    அவருக்கு நானும் காட்டமாக பதில்சொல்ல முடியும். ஆனால் அதன்பொருட்டு உங்கள் இருவருக்கிடையில் விரிசல் விழ நான் காரணமாயிருந்து விடக்கூடாது என அஞ்சுகிறேன். நான் உங்கள் தோழி. உங்களிடம் நான் எதைப்பற்றி வேண்டுமானாலும் உரிமையோடு எழுதுவேன். என் தோழனோடு நான் எதைப்பேச வேண்டும் என்று எனக்கு அறிவுறுத்துவதற்கோ, என்னை உதாசீனப்படுத்தும்படி (அவரது கடைசி வரியில்) உங்களை அறிவுறுத்துவதற்கோ ஒரு மூன்றாவது மனிதருக்கு உரிமையில்லை.

    Like

  4. அன்பு ஆர்வி, அடுத்தவரை மதித்துப் பேசுபவர் என நீங்கள் முன்பு ஒருமுறை மேற்கோளிட்டது நினைவிருக்கலாம். அந்த் கருத்தில் உள்ள பிழையினை உuங்கள் வலை வழியாகவே வெளிக் கொண்டு வரவழைத்தது காலம்.. தன்னடக்கம் என்nபது எல்லாவற்றிலும் மேலானது. அதுவும் மிகவும் குறைவாக இருக்கிறது என்பது உங்கள் வலை வழியாகவும் வெளியாகி விட்டது ( எல்லோருக்கும் ஏற்கனவே தெரிண்ந்தது தான்)

    Like

  5. 1. // *** இவர்களை ‘மயிரே போச்சு’ என எண்ணுவது வழியாகவே நீங்கள் அர்த்தபூர்வமாக ஏதேனும் எழுதமுடியும் ** //

    என்ன ஒரு அருமையான விளக்கம் இந்த ஜெயமோஹனிடம் இருந்து.

    இதன் மூலம் தன்னுடைய சுய ரூபத்தை வெளிப்படுத்தி உள்ளார் ஜெயமோகன்.

    2. // *** அதேதான் இங்கும். என்னுடைய கருத்துக்களை எதிர்கொள்வதற்கான திராணி இல்லாதவர்கள், ***//

    அப்படி என்றால் உங்கள் தளத்தில்(www.jeymohan.in) பின்னோட்டம் இடும்
    வசதியை ஏன் நிறுத்தி வைத்து உள்ளீர்கள் ?

    உண்மையில், மற்றவர்களின் கருத்துக்களை எதிர்கொள்வதற்கான திராணி
    இல்லாதவர் இந்த ஜெயமோகன் மட்டும் தான் என்பது நிரூபணம் ஆகிறது.

    3. //** இதற்கு நான் பதில் சொல்லக்கூடாது, ***/

    இதை எழுதுவதருக்கு முன்பு யோசித்து இருக்க வேண்டும்.

    4. ”ஜெயமோகனிடம் பிடிக்காதது என்ன?” என்று எஸ். ராமகிருஷ்ணன் ஆனந்த விகடனில் சொல்லி இருக்கும் வரிகள் இப்போது மீண்டும் உண்மையாகிறது.

    பிடிக்காதது… தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்கிக்கொள்வது மற்றும் குரு
    மனப்பாங்கு!”

    ஜெயமோஹனிடம் நன்றாக பழகி வரும் ஒரு நல்ல எதார்த்தமான நன்றாக
    புரியும்படி எழுதி வரும் எஸ்.ராமகிருஷ்ணன் போன்றவரே இப்படி மனம் நொந்து சொல்கிறார் என்றால் மற்றவர்கள் ?!?
    ——–
    உண்மையுள், எழுத்து மூலமாக மற்றவர்கள்(உதாரணம் : சுஜாதா) பெரும் பெயரையும், புகழையும் இந்த ஜெயமொஹனால் கண்டு பொறுக்க முடியாது அது தான் இவரின் எழுத்து மூலம் வெளி வருகிறது.

    முதலில் நாம் எழுதும் எழுத்து மற்றவர்கள் எளிதாக புரிந்து கொள்ளும்படியாக இருக்க வேண்டும்.

    ஜெயமோகனின் எழுத்து ஒரு தரம் படித்தவுடன் எவள்ளவு பேருக்கு உடனே புரியும் என ஒரு சர்வே எடுக்கலாம். அவவளவு ஒரு தெளிவு.

    நாஞ்சில் நாடன், எஸ்.ராமகிருஷ்ணன் போன்ற நல்ல மனிதர்களை பார்த்து இனியாவது திருந்துங்கள் ஜெயமோகன் அவர்களே.

    ஒரு பின்னோட்டம் இடும் சாரதா அவர்களிடம் இருக்கும் நாகரிகம், நிறைய கதைகளை எழுதி வரும் இந்த ஜெயமோஹனிடம் சிறிதும் இல்லை.

    //*** சாரதா : பின்னோட்டம் —>>> காட்டமாக ஒரு பதில் எழுதி அதை தூக்கி குப்பையில் போட்டுவிட்டதாகக் குறிப்பிட்டிருந்தீர்கள். அந்தக்குறையை திரு. ஜெயமோகன் தனது பின்னூட்டத்தில் போக்கி விட்டார். உங்கள் எழுத்தில் காணப்படும் மெச்சூரிட்டி (நான் மிகவும் மதிப்பது) அவர் எழுத்தில் இல்லையென்பதைப் பார்க்கும்போது, அவர் எப்படி உங்கள் ஆதர்ச நாயகன் ஆனார் என்ற ஆச்சரியம் மேலிடுகிறது. விமர்சனத்தைத்தாங்கிக்கொள்ள முடியாதவர்கள் பெரிய மனிதர்கள் ஆக முடியாது. இருக்கின்ற ஒருசில ரசிகர்களில் ஆர்.வி. போன்ற ரசிகர்களை இழந்து விடுவோமோ என்ற அச்சம் அவர் பதிவில் தெரிகிறது ***/

    இதையே நானும் வழிமொழிகிறேன்.

    Like

    1. //ஜெயமோகனின் எழுத்து ஒரு தரம் படித்தவுடன் எவள்ளவு பேருக்கு உடனே புரியும் என ஒரு சர்வே எடுக்கலாம். அவவளவு ஒரு தெளிவு.//

      //இருக்கின்ற ஒருசில ரசிகர்களில் ஆர்.வி. போன்ற ரசிகர்களை இழந்து விடுவோமோ என்ற அச்சம் அவர் பதிவில் தெரிகிறது ***/
      //

      மேற்கண்ட கருத்துக்களை பார்க்கும்போது ஜெயமோகன் தனது பதிலில் இன்னும் கடுமையை கூட்டியிருக்கலாம் என்றே தோன்றுகிறது. அவர் சொன்னது போல அசலான விவாதத்தை விட்டு விட்டு வேறு எதோ பேசுகிறீர்கள்….இது மிக வருந்ததக்கது

      Like

  6. இது தேவையா? 😦

    நான் யாரைச் சொல்கிறேன் என்பது அவரவரர்களுக்கே தெரியும். ”நிற்க அதற்குத் தக” என்ற குறள் தான் நினைவிற்கு வருகிறது.

    Like

  7. //இவர்களை ‘மயிரே போச்சு’ என எண்ணுவது வழியாகவே நீங்கள் அர்த்தபூர்வமாக ஏதேனும் எழுதமுடியும்

    ஜெ//

    சத்தியமான வார்த்தைகள் , வெட்டிஞாயம் பேசும் இவர்கள் யாரும் ஆர்வி அளவு கூட வாசிப்பதில்லை , அதிபட்சம் பட்டுக்கோட்டை பிரபாகர் அல்லது சுஜாதா .

    அப்புறம் இங்கே ஆர்வி பேசும் விஷயங்களின் மதிப்பு என்ன தெரியும் இவர்களுக்கு ?

    ஆர்வி , ஜெயமோகன் சொல்லியிருப்பது 100 % சரி .

    Like

    1. மதி,
      நாங்கள் என்ன படித்திருக்கிறோம் என்பதை எப்படி நீங்களே தீர்மானிக்கிறீர்கள்?. பக்கத்தில் இருந்து பார்த்தீர்களா?. மகாபாரதத்திலும், சிலப்பதிகாரத்திலும் எந்த பகுதியைப்பற்றி விவாதம் செய்யவேண்டும்?. பொன்னியின் செல்வனில் குந்தவைக்கும், நந்தினிக்கும் இடையேயான குணாதிசயங்களில் இருபது ஒற்றுமை என்ன, வேற்றுமை என்ன என்று விவாதிக்க வேண்டுமா?. தமிழ்வாணனின் ‘பழகத்தெரிந்திருந்தால் பணம் கூட வேண்டாமே’ என்ற நூலில் என்ன சொல்கிறார் என்று சொல்ல வேண்டுமா?. அப்துல் ரகீம் எழுதிய ‘வாழ்வைத்துவங்கு’ நூலின் சாராம்சம் என்ன என்று விவாதிக்க வேண்டுமா?.

      சர்வ சாதாரணமாக, சுஜாதாவோடும், பட்டுக்கோட்டை பிரபாகரோடும் நின்றுவிட்டவர்கள் என்று எங்களை எப்படி எல்லை கட்டுகிறீர்கள்?.

      ஆனால் ஒன்று. திரு ஜெயமோகனின் எழுத்தையும் கருத்தையும் ஏற்றுக்கொள்பவர்கள் ‘மட்டும்தான்’ இலக்கிய வாசிப்பாளர்கள் என்றால், நாங்கள் இலக்கிய வாசிப்பாளர்கள் இல்லை ஐயா.

      Like

    2. //சத்தியமான வார்த்தைகள் , வெட்டிஞாயம் பேசும் இவர்கள் யாரும் ஆர்வி அளவு கூட வாசிப்பதில்லை , அதிபட்சம் பட்டுக்கோட்டை பிரபாகர் அல்லது சுஜாதா .//

      ஆஹா.. என்ன ஒரு அற்புதமான கண்டுபிடிப்பு. இதில் பின்னூட்டமிடுவர்களது கருத்துக்களை அவர்கள் தெரிவிக்கும் தகவல்களைப் படித்தாலே அவர்கள் எதை எதை எந்த அளவுக்கு வாசித்திருக்கிறார்கள் என்பதை எளிதில் உணர முடியுமே?

      //அப்புறம் இங்கே ஆர்வி பேசும் விஷயங்களின் மதிப்பு என்ன தெரியும் இவர்களுக்கு//

      ஓ. ஒன்றும் தெரியாமல்தான் எல்லோரும் பின்னூட்டம் இடுகிறார்கள் போல. அதை ஒன்றும் தெரியாமல் ஆர்வி அப்ரூவ் செய்கிறார் போல. பிரமாதம்.

      ஆர்வியின் சில கருத்துக்களில் சிலருக்கு சற்றே அதிகப் பிரசங்கித்தனம் பட்டிருக்கலாம். அதைச் சற்றுக் கடுமையாகச் சிலர் சொல்லியிருக்கலாம். அதற்காக எல்லோருமே ஒன்றும் தெரியாதவர்கள் – எதுவும் வாசிக்காதவர்கள் என்று சொன்னால் அந்த அரிதான கண்டுபிடிப்பைக் கண்டு வியப்படைவதைத் தவிர வேறில்லை.

      மற்றொரு விஷயம் எழுத்தாளர், சிந்தனையாளர் ஜெயமோகன் தனது அனுபவத்தினைக் கொண்டு சிலவற்றைப் பார்ப்பதற்கும், விமர்சிப்பதற்கும் ஆர்வி அதையேசெய்வதற்கும் நிச்சயம் வேறுபாடு உள்ளது. ஜெயமோகன் ஜெயமோகன் தான். ஆர் ஆர்வி தான். ஆர்வி, ஜெயமோகன் ஆகக்கூடும். ஆனால் ஜெயமோகன் ஆர்வி ஆக முடியாது. அதிகம் உணர்ச்சிவசப்படாத ஜெயமோகன் ஏனோ உணர்ச்சிவசப்பட்டு பின்னூட்டமிட்டுவிட்டார். பரவாயில்லை. அவரது கருத்தை ஆமோதிக்கும் மற்றவர்கள் தங்களையும் ஜெயமோகனாக அல்லது ஜெயமோகனுக்கு இணையாகக் கருதிப் பேசுவது நல்ல தமாஷ்.

      சபாஷ் சாரதா… நல்ல பதில். இனியாவது அமைதி திரும்புகிறதா என்று பார்ப்போம்.

      Like

  8. அன்புள்ள ஆர்.வி,

    இந்த மறுமொழி அவசியம் தானா என்று பல முறை யோசித்தே எழுதுகிறேன். ஏனென்றால் நான் கூற நினைத்ததெல்லாம் ஏற்கனவே சாரதா, விமல் மற்றும் சந்திரமௌளீஸ்வரன் கூறி விட்டார்கள்.

    ஜெயமோகனின் மறுமொழிக்கு வருகிறேன்…
    // *** இவர்களை ‘மயிரே போச்சு’ என எண்ணுவது வழியாகவே நீங்கள் அர்த்தபூர்வமாக ஏதேனும் எழுதமுடியும் ** //
    இங்கு ஜெயமோகன் மிகவும் தரம் தாழ்ந்து விட்டார் என்று தான் தோன்றுகிறது. இந்த நாள் வரை அவர் சந்திக்காத விமர்சனமா ? உங்களை ஜெயமோகன் பக்தர் என்று குறிப்பிட்டதில் ஏன் அவர் பொங்கி எழுகிறார் ?

    எங்களுக்கு (விமல், சதீஷ், சாரதா மற்றும் சந்திரமௌளீஸ்வரன்) ஜெயமோகன் மீது தனிப்பட்ட எந்த காழ்ப்புணர்ச்சி இருக்க முடியும்?

    சுஜாதாவைப் பற்றி அவருடைய கருத்துக்களில் எனக்கு சுத்தமாக உடன்பாடு கிடையாது. அது வேறு விஷயம். பத்மநாப சுவாமியின் செல்வம் பற்றி அவரது சமீபத்திய பல கட்டுரைகள் மிக மிக அருமை.

    சுஜாதா பற்றி சமீபத்தில் பல பதிவுகள் ஜெயமோகன் எழுதி விட்டார். சுஜாதாவுடைய படைப்புகளைப் பற்றி விமர்சிக்க அவருக்கு என்ன உங்கள் எல்லோருக்கும் உரிமை இருக்கிறது என்றே வைத்துக் கொள்வோம். பல இடங்களில் அவர் தனது எல்லையை மீறி தனிப்பட்ட தாக்குதலில் இறங்குகிறார். இது அவருக்குத் தேவை தானா ? இது அவரது காழ்ப்புணர்ச்சியைக் காட்டுவதாகத் தான் எனக்குத் தோன்றுகிறது. இதை இல்லை என்று நீங்கள் மறுக்க முடியுமா ?

    சில உதாரணங்கள்….

    >>இலக்கிய அடிப்படை அறிந்த பெரும்பாலான தமிழ் வாசகர்கள் சுஜாதாவைப் பெரிதாகப் பொருட்படுத்துவதில்லை – சில சிறுகதைகளையும் நாடகங்களையும் மட்டுமே கருத்தில்கொள்வார்கள். அவர் இலக்கியவாதி என்பதைக்காட்டிலும் வணிக எழுத்தாளர்தான்.

    மீண்டும் மீண்டும் இதைக் கூறுவதன் நோக்கம் சத்தியமாக எனக்குப் புரியவில்லை. வணிக எழுத்தாளர் என்பது அவ்வளவு கேவலமா என்ன ?

    >>சுஜாதாவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்கள் பதின்பருவத்தில் அவரை வாசித்து அதன் பின் அந்த வாசகத்தரத்திலேயே நின்றுவிட்டவர்கள்.

    இதன் மூலம் உலகம் முழுவதும் உள்ள சுஜாதாவின் லட்சக்கணக்கான வாசகர்களை ஜெயமோகன் கேவலப்படுத்துகிறார். இந்த உரிமையை இவருக்கு யார் கொடுத்தது ?

    >>இன்று, உயிர்மை வணிக நோக்குடன் சுஜாதாவை வீங்கச்செய்து காட்டுகிறது. ஆனால் அதெல்லாம் ஒன்றும் பெரிதாக நீடிக்காது. கடைசியில் வாசகனை நீண்ட நாட்கள் தொடர்ந்து செல்லும் படைப்புகள் மட்டுமே நிற்கும்.

    ஏன் இங்கு உயிர்மையை மட்டும் குறிப்பிடுகிறார் ? கிழக்கு மற்றும் உடுமலையிலும் கூடத் தான் சுஜாதாவின் பெரும்பான்மையான படைப்புகள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. இதை நான் மனுஷ்ய புத்திரன் மீதான ஜெயமோகனின் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி என்று நாம் எடுத்துக் கொள்ளலாமா ?

    மற்றும் ஒரு கட்டுரையில் சாவை எதிர் கொள்ள சுஜாதா தயாராக இல்லை என்று குறிப்பிடுகிறார். அவர் தன்னை எப்போதும் இளமையாக தக்க வைத்துக் கொள்ள முயன்றதாகவும் (Ex: wearing Designer Shirts) குறிப்பிடுகிறார். தனது வீடு வரை வர அனுமதித்து, கடைசி வரை இவரை ஒரு உண்மையான நண்பராக மதித்த சுஜாதாவை, Jeyamohan is clearly hitting below the belt here.

    Like

  9. ஆர்வி,

    தயவு செய்து பின்னூட்டங்களை மாடரேட் செய்யுங்கள். கோபப்படாதவர்கள் எல்லாம் கோபமாக கேள்வி கேட்கத் துவங்கி விட்டார்கள்.

    எனக்குத் தெரிந்தவரை நம் பிரச்சினை கேள்விகளை ஒழுங்காக பிரேம் செய்யக் கற்றுக் கொள்ளவில்லை என்பதுதான். அதனால் எதையோ பேச ஆரம்பித்து கிளைக்குக் கிளை தாவி என்னென்னவோ பேசிக்கொண்டிருக்கிறோம்.

    இந்த விவாதத்தில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் கொஞ்சம் நிதானிக்க வேண்டும். ஒருவரை ஒருவர் மட்டம் தட்டிக் கொள்வதால் யாரும் உயர்ந்துவிடப் போவதில்லை.

    இந்த புக் பிளாக்கின் நோக்கம் நம் வாசிப்பின் தரத்தை மேம்படுத்திக் கொள்வதுதான் என்று நினைக்கிறேன். அதை எப்படி செய்யலாம் என்று ஒரு ஓபன் த்ரெட்டைத் துவக்குங்களேன்.

    இங்கு தனிப்பட்ட முறையில் எந்த ஒரு நபரையும் தாக்கும் கமெண்ட்களை அனுமதிக்க வேண்டாம்.

    அண்மையில் Anil Dash என்பவர் எழுதிய ஒரு முக்கியமான கட்டுரையைத் தங்களுக்கு அறிமுகப்படுத்த விரும்புகிறேன்: http://dashes.com/anil/2011/07/if-your-websites-full-of-assholes-its-your-fault.html

    நீங்கள் அனைவரும் தனிப்பட்ட வாழ்வில் எவ்வளவோ சாதித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். ஒரு கம்யூனிட்டியாக constructive criticism செய்வதை benchmarkஆக வைத்துக் கொள்ளுங்கள். இது உங்களால் முடியாததல்ல.

    இந்த தளம் தமிழில் இன்னும் பல புக் ப்ளாக்குகள் வர இன்ஸ்பிரேஷனாக இருக்க வேண்டும். அப்படி நேராமல் நாம் அடிதடி சண்டையில் இறங்கினால் அதற்கான முழு பொறுப்பும் உங்களையே சேரும்.

    நீங்கள் கமெண்ட் மாடரேஷன் பாலிஸி வைத்துக் கொள்வது அவசியம்.

    “So, I beseech you: Fix your communities. Stop allowing and excusing destructive and pointless conversations to be the fuel for your business.” என்று சொல்கிறார் அனில் தாஷ். இது எவ்வளவு சத்தியமான வார்த்தை என்பதை நேற்றுதான் உணர்ந்தேன்.

    நீங்கள் எப்போது இதில் இருக்கும் உண்மையை உணரப் போகிறீர்கள் என்று தெரியவில்லை.

    Like

  10. சாரதா , அந்த பின்னூட்டம் உங்களை குறிவைத்ததல்ல என்றாலும் ..

    // பொன்னியின் செல்வனில் குந்தவைக்கும், நந்தினிக்கும் இடையேயான குணாதிசயங்களில் இருபது ஒற்றுமை என்ன, வேற்றுமை என்ன என்று விவாதிக்க வேண்டுமா?. தமிழ்வாணனின் ‘பழகத்தெரிந்திருந்தால் பணம் கூட வேண்டாமே’ என்ற நூலில் என்ன சொல்கிறார் என்று சொல்ல வேண்டுமா?. //

    ஆமாம் , தமிழில் நவீன இலக்கியம் பற்றியோ , அதன் வளர்ச்சி பற்றியோ ஏதுவுமே தெரியாமல் , கல்கி , சுஜாதாவுக்கு பின் எதையுமே படிக்காதவர்களுக்கு ஆர்வியுடன் விவாதிக்க எந்த தகுதியுமே இல்லை ,

    ஏனெனில் ஆர்வி பேசுவது இலக்கியம் பற்றி . கல்கியையும் , தமிழ்வாணனையும் இலக்கியவாதிகள் என நினைக்கும் உங்களீடம் என்ன பேச ?

    Like

  11. மதி,
    இதை வளர்த்த விரும்பவில்லையென்றாலும் சில வார்த்தைகள்.

    ஒரு உதாரணத்துக்குத்தான் கல்கியையும், தமிழ்வாணனையும் சொன்னேனே தவிர அவர்கள் இலக்கியவாதிகளா இல்லையா என்பதைத் தீர்மானிக்கும் தகுதி நிச்சயம் எனக்கில்லை. (உங்களுக்கு இருக்கலாம், இல்லையென்று நான் சொல்லக்கூடாது).

    மற்றபடி சுஜாதா, ப.கோ.பிரபாகர் என்பதோடு எங்கள் வாசிப்பு நின்று விடவில்லை. தி.ஜானகிராமன், கு.ப.ரா., மௌனி, கலாப்ரியா, டாக்டர் மு.வ., என்று நீள்கிறது. இவர்களின் படைப்புகளைப்பற்றியும் விவாதிக்கும் அளவுக்கு தெரிந்து வைத்திருக்கிறோம். (இவர்களும் இலக்கியவாதிகள் இல்லையென்று தீர்மானிக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்).

    இன்னொன்று… நான் ஆர்.வி.யுடன் விவாதிக்க தகுதியா இல்லையா என்பதை ஆர்.வி.தான் தீர்மானிக்க வேண்டும். அவர் ஏற்கெனவே தீர்மானித்து, அவர் எழுத்துக்களை விமர்சிக்கும் உரிமையை எனக்குத் தந்துள்ளார். எனக்கும் அவருக்கும் உள்ள நட்பை உங்களுக்கெல்லாம் புரிய வைக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை

    Like

  12. ஆர்.வி. அவர்களோடு எனக்கு பல கருத்து வேறுபாடுகள் உண்டு. அவைகள் கருத்துப்பூசலாக மட்டுமே இருக்கிறது. அவர் தன்னம்பிக்கையோடு எழுதுவது மற்றவர்களுக்கு அதிகப்ரசங்கமாகவோ ஆணவமாகவோ தென்படலாம். ஆனால் அவர் கூறவரும் கருத்தை எவர் என்ன நினைத்தாலும் கூறும் செயல் நன்றாக இருக்கிறது. அது அவரின் கடமை கூட.

    நிற்க, ஜெயமோகனை மேற்கோள் காட்டுவது குறித்து ஆர்.வி. மட்டுமே முடிவு செய்யமுடியும். அவரது கருத்திற்கு மாற்றுக்கருத்து இருந்தால் அது அவர்களுடைய பாணி. ஜெயமோகனை எப்படி நீங்கள் எதற்க்கெடுத்தாலும் மேற்கோள் காட்டலாம் என்று அவர் அப்படி செய்யாதபோதும் கேட்டது தான் முதல் தவறு என்று தோன்றுகிறது. மேலும், ஜெயமோகனை மேற்கோள் காட்டினால் தவறா? அதெல்லாம் கட்டுரை ஆசிரியராக ஆர்.வி.யின் முடிவாக மட்டுமே இருக்கமுடியும்.

    ஒரு விஷயம் நமக்கு புரியவில்லை என்பதால் அவர் எழுதியது தரக்குறைவு ஆகிவிடுமா என்ன? இன்னொன்றும் உண்டு, ஜால்ரா சத்தம் என்று சொன்னாலும் சரி, உண்மையான தரமான இலக்கியத்தில், இலக்கிய வாசகர்களிடையே ஜெயமோகன் அளவுக்கு தாக்கம் ஏற்ப்படுத்திய யாரும் இல்லை. இனி வருபவரும், அவரை ஆதரித்தோ, எதிர்த்தோதான் எழுதமுடியும் என்பது தான் நிதர்சனம்.

    Like

  13. // ஜால்ரா சத்தம் என்று சொன்னாலும் சரி, உண்மையான தரமான இலக்கியத்தில், இலக்கிய வாசகர்களிடையே ஜெயமோகன் அளவுக்கு தாக்கம் ஏற்ப்படுத்திய யாரும் இல்லை.//

    அது உங்கள் கருத்து. எனவே நீங்கள் தாராளமாகச்சொல்லிக்கொள்ளலாம்.

    ஆனால் திரு.ஜெ.மோ. வருவதற்கு முன்பே ஜெயகாந்தன், அகிலன், தி.ஜா., க.நா.சு போன்றவர்கள் ஏற்படுத்திய தாக்கத்தில் திளைத்தவர்கள் ஏராளமானோர் உண்டு, நான் உட்பட.

    //இனி வருபவரும், அவரை ஆதரித்தோ, எதிர்த்தோதான் எழுதமுடியும் என்பது தான் நிதர்சனம்.//

    இதுவும் உங்கள் கருத்து.

    ஆனால் நிதர்சனம் அப்படியல்ல. இவர் கருத்துக்களை ஆதரிப்பது அல்லது எதிர்ப்பது என்ற நிலைப்பாடுகளுக்கு அப்பால், ‘ஒதுக்கி வைத்துவிட்டு’ கருத்து எழுதலாம். அது நடந்துகொண்டும் இருக்கிறது.

    Like

  14. சுஜாதா பதில்கள் – இரண்டாம் பாகம்

    ஜாஸ்.
    ? திண்ணை.காமில் தமிழில் பத்து சிறந்த நாவல்கள் என்று ஜெயமோகன் குறிப்பிட்டிருப்பதைப் படித்தீர்களா ? அதில் உங்கள் நாவல்கள் எதுவும் இல்லையே. ஜனரஞ்சகமாய் எழுதப்படும் நல்ல படைப்புகளை அறிவு ஜீவிகள் எனப்படுவோர் வேண்டுமென்றே ஒதுக்குகிறார்களா? இது குறித்து உங்கள் கருத்து என்ன ?

    ! ஜெயமோகனின் லிஸ்ட் அது. என்னைக் கேட்டால் அது வேறு மாதிரி இருக்கும். எழுத்தாளர்களே விமர்சகர்களை இருந்தால் இந்த விருப்பு வெறுப்புகள் இருக்கவே இருக்கும்.

    Like

  15. எனக்கு ஒரு வருத்தம் – குறிப்பாக சாரதா, விமல், மௌலி, ஸ்ரீனிவாஸ் பேரில் இருக்கிறது. நீங்கள் ஒருவர் கூட பதிவில் இருக்கும் விஷயங்களுக்கு பதில் எழுதவில்லையே? எல்லாரும் ஜெயமோகனுக்குத்தான் மறுமொழி எழுதுகிறீர்கள்!

    நட்பாஸ், உங்கள் கருத்து சிந்திக்க வைத்தது. எனக்கு அதில் ஆட்சேபனைகள் இருக்கின்றன, ஆனால் என் மனதிலேயே அவை முழுமையாக articulate ஆகவில்லை. சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் நான் கட்டற்ற கருத்து சுதந்திரம் என்பதில் பெருநம்பிக்கை உடையவன். ஆனால் உங்கள் வாதங்கள் கோகேன்ட் ஆனவை என்பதில் சந்தேகமில்லை, அதனால்தான் இன்னும் யோசித்துக் கொண்டிருக்கிறேன். தனியாக ஒரு பதிவு எழுத வேண்டும் என்று நினைத்திருக்கிறேன், எப்போது எழுதுவேனோ தெரியாது.

    மதி.இந்தியா, கல்கியின் பொ. செல்வன் இலக்கியம் என்பது என் உறுதியான கருத்து. நான் கல்கியை நிராகரிப்பவன் இல்லை. ஆனால் ஜெயமோகன், இந்தத் தளத்தின் சக ஆசிரியனான பக்ஸ் ஆகியோர் இது இலக்கியம் இல்லை என்று வாதிடுபவர்கள். இந்தக் கருத்து வேற்றுமை எங்களுக்குள் தீராதது. ஆனால் அவை எல்லாம் கருத்து வேற்றுமை என்ற அளவில்தான் நிற்கிறது.

    ராம், //ஆர்.வி. அவர்களோடு எனக்கு பல கருத்து வேறுபாடுகள் உண்டு. அவைகள் கருத்துப்பூசலாக மட்டுமே இருக்கிறது. அவர் தன்னம்பிக்கையோடு எழுதுவது மற்றவர்களுக்கு அதிகப்ரசங்கமாகவோ ஆணவமாகவோ தென்படலாம். ஆனால் அவர் கூறவரும் கருத்தை எவர் என்ன நினைத்தாலும் கூறும் செயல் நன்றாக இருக்கிறது. அது அவரின் கடமை கூட //நன்றி ராம், மனதிற்கு பட்டதை உண்மையாக சொல்லுவது என்ற ஒரே ஒரு விதிதான் இது வரை வைத்துக் கொண்டிருக்கிறேன். அது உங்களுக்கும் ஏற்புடையதாக இருப்பது மகிழ்ச்சி!

    சாரதாவும் மற்றவர்களும் இது ஜெயமோகனின் கருத்தை பிரதிபலிக்கும் தளமாக இருக்கிறது என்று உணர்ந்தால் அதை சொல்வதில் என்ன தவறு? அவர்களது hypothesis is not supported by facts என்பது என் முடிவு, அதுதான் பிரச்சினை.

    ஸ்ரீனிவாஸ், சுஜாதா “ஜெயமோகனின் லிஸ்ட் அது. என்னைக் கேட்டால் அது வேறு மாதிரி இருக்கும்…” என்று சொல்லி இருப்பது அவரது மடுரிட்டி-ஐ அவர் ஒரு தேர்ந்த வாசகர் என்பதையே காட்டுகிறது.

    Like

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.