
வீரபாண்டியன் மனைவி என் படித்தே ஆக வேண்டிய நாவல்கள் லிஸ்டில் வராது. ஆனால் நான் படிக்க வேண்டும் என்று நினைத்திருந்த லிஸ்டில் இருந்தது. அதனால்தான் மாற்றங்கள் நடக்கும் என்று சொன்ன பிறகும் இதைப் பற்றி எழுதுகிறேன்.
தமிழில் சரித்திர நாவல்கள் என்று ஆரம்பித்த ஒரு சீரிஸ் இந்த தளத்தின் நல்ல பதிவுகள் பலவற்றைக் கொண்டது. நான் படிக்க வேண்டிய சரித்திர நாவல்கள் என்று சில பல நாவல்களை குறிப்பிட்டிருந்தாலும் உண்மையிலேயே படிக்க விரும்பியவை நான்குதான் – வீரபாண்டியன் மனைவி, டணாய்க்கன் கோட்டை, உடையார் மற்றும் காவல் கோட்டம். இந்த வருஷம் படிக்க வேண்டும் என்று நினைத்திருந்த புனைவுகளில் ஒன்று.
வீரபாண்டியன் மனைவி புத்தகத்தில் முதல் ஐம்பது பக்கம் தாண்டியதும் இது அரண்மனைச் சதி genre லெவலைத் தாண்டப் போவதில்லை என்று புரிந்தது. இன்னும் எத்தனை பக்கம் படிக்க வேண்டும் என்று சோர்வு வந்தது. ஆனாலும் விடாமல் படித்தேன். ஓரளவு ஜவ்வுதான், ஆனால் அகிலன், ஜெகசிற்பியன் மாதிரி பேப்பருக்குப் பிடித்த கேடு என்று சொல்லமாட்டேன். கல்கி, சாண்டில்யன் ரேஞ்சில் இருக்கிறது என்று நிச்சயமாகச் சொல்லலாம். தமிழின் நல்ல சரித்திர நாவல்களில் ஒன்று. ஆனால், in absolute terms, இது சில நல்ல கூறுகள் கொண்ட சுமாரான நாவல் மட்டுமே.
புத்தகத்தில் நினைவிருக்கப் போவது ஜனநாதக் கச்சிராயன் பாத்திரப் படைப்பு மட்டுமே. எந்த விதமான போலித்தனமும் இல்லாத சிந்தனையாளனாக, முடியாட்சியின் குறைகளை உணர்ந்து அதற்கு மாற்று தேடும் ஒருவனாக, உருவாக்கி இருக்கிறார். நிச்சயமாக எழுதப்பட்ட காலத்தில் பெரிய அளவு ஹிட் ஆகி இருக்கும். இன்று வாய்ச்சவடால் அதிகமாக இருப்பதாகத் தோன்றுகிறது, இருந்தாலும் ரசிக்கக் கூடிய பாத்திரப் படைப்புதான்.
ஜனநாதனைக் கழித்தால் புத்தகத்தில் வேறு ஒன்றுமே இல்லை. தட்டையான பாத்திரப் படைப்பு, போரடிக்கும் தெய்வீகக் காதல், எதிர்பார்க்கக் கூடிய திருப்பங்கள் என்றுதான் போகிறது. அதுவும் வீரபாண்டியனின் மனைவியை சிறை மீட்க நடக்கும் முயற்சிகள், அவற்றின் தோல்வி எல்லாம் ஒரு ஆயிரம் பக்கத்துக்கு மேல் இழு இழு என்று இழுக்கிறார். தொடர்கதையாகப் படித்தால் தெரிந்திருக்காது, புத்தகமாகப் படிக்கும்போது எப்படா கடைசிப் பக்கம் வரும் என்று திருப்பிப் திருப்பிப் பார்த்தேன்.
மூன்றாம் குலோத்துங்க சோழன் வீரபாண்டியனை முறியடித்து விக்கிரம பாண்டியனை பாண்டிய அரியணையில் அமர்த்தினான் என்பது வரலாறு (என்று நினைக்கிறேன்). அந்தப் பின்புலத்தில் சோழ அதிகாரிகள் – ஒற்றர் படைத்தலைவன் ஜனநாதன், மதுரையைப் பிடித்ததில் பெரும் பங்கேற்று அதிகாரியாக உயர்ந்த வீரசேகரன் -, அவர்களது அதிகாரச் சண்டைகள், வீரசேகரன்-பாண்டிய “சதிகாரி” ஊர்மிளா காதல், வீரபாண்டியனின் மனைவியைப் பிடித்து சிறையில் வைத்தல், அவளை மீட்க வீரபாண்டியனின் முயற்சிகள், ஜனநாதன் அவற்றை தோற்கடித்தல், தொடர்கதைகளுக்கு வேண்டிய திடுக்கிடும் திருப்பங்கள், அசாதாரண நிகழ்ச்சிகள் என்று கதை போகிறது.
எவ்வளவு வரலாறு, எவ்வளவு கற்பனை என்று தெரியவில்லை. குறிப்பாக ஜனநாதன் என்று ஒரு அதிகாரி இருந்தானா என்று சந்தேகமாக இருக்கிறது. ஆதாரங்கள் பற்றி அரு. ராமநாதன் எதுவும் குறிப்பிடவில்லை.
1940களில் எழுதப்பட்ட கதை. வருஷம் சரியாகத் தெரியவில்லை. அவரே நடத்திய காதல் இதழில் தொடர்கதையாக வெளிவந்தது.
ஜெயமோகன் இதை நல்ல வரலாற்று romances லிஸ்டில் சேர்க்கிறார். எஸ்.ரா. இதை நூறு சிறந்த தமிழ் நாவல்களில் ஒன்றாகக் கருதுகிறார். எனக்கு இதை சிறந்த தமிழ் சரித்திர நாவல்களில் ஒன்றாகச் சேர்க்கலாம், ஆனால் சுமாரான நாவலே.
அரு. ராமநாதன் ராஜராஜ சோழன் என்ற நாடகத்தையும் எழுதி இருக்கிறார். இதை டி.கே.எஸ். சகோதரர்கள் அரங்கேற்றினர். பிற்காலத்தில் சிவாஜி கணேசன் நடித்து ஏ.பி. நாகராஜன் இயக்கத்தில் நாடகமாகவும் வந்தது. இவரைப் பற்றி மேலும் தகவல்களுக்கு தோழி அருணாவின் அப்பா கிருஷ்ணன் வெங்கடாசலம் எழுதிய கட்டுரையைப் பார்க்கலாம்.
புத்தகத்தை மீனாட்சி கல்லூரி எதிரில் உள்ள பிரேமா பிரசுரத்தில் வாங்கினேன். இது அரு. ராமநாதன் ஏற்படுத்திய நிறுவனம். இன்றும் அவரது மகன் ரவிதான் நடத்தி வருகிறார். பார்த்தால் அசப்பில் அப்பா மாதிரிதான் இருக்கிறார். விலை 225 ரூபாய்.
அரு. ராமனாதனின் அசோகன் காதலி என்ற சிறு நாவலையும் படித்தேன். அதே பாணி. அசோகனை புத்த மதத்தின் பக்கம் திருப்பியது அவன் காதலி காரூவகி என்று எழுதி இருக்கிறார். நான் ரசித்தது சாணக்யனின் பேச்சுக்களை மட்டுமே.
நாயனம் சௌந்தரவடிவு என்ற இன்னொரு நாவலும் கிடைத்தது. நாதஸ்வரம் வாசிக்கும் நாயகன், நாயகி அவர்களுக்குள் காதல், போட்டி என்று போகிறது. பாய்ஸ் கம்பெனி நாடகம் பார்ப்பது மாதிரி இருக்கிறது.
Like this:
Like ஏற்றப்படுகின்றது...