அகிலனின் “சித்திரப்பாவை”

இன்னும் கொஞ்ச நாளைக்கு பதிவுகள் ரெகுலராக வராது. இந்தியா வந்திருக்கிறேன், பல உறவினர்கள்/நண்பர்களை சந்திக்க வேண்டி இருக்கிறது. இன்டர்நெட் வேறு அவ்வப்போது வேலை செய்வதில்லை. தற்போதைக்கு ஒன்று.

எனக்கு அகிலனைப் பற்றி நல்ல அபிப்ராயம் இல்லை. அவர் எழுதிய எந்தப் புனைவும் என்னை எந்த வயதிலும் கவர்ந்ததில்லை. சாண்டில்யனை ஆர்வத்தோடு எட்டு ஒன்பது வயதில் படித்தேன். அந்த வயதில் கூட கயல்விழி போரடித்தது. பின்னே என்னங்க இரண்டு பக்கமும் பெரும் சேனைகள் திரண்டு போர் நடக்கும்போது கயல்விழி குறுக்கே புகுந்து அழுது புரண்டு போரை நிறுத்துகிறாளாம். அடப் போங்கய்யா!

ஆனால் ஞானபீட விருது பெற்ற முதல் தமிழ் எழுத்தாளர் அவர்தான். விருது வாங்கிய எழுத்தைப் படித்துவிட வேண்டும் என்று ஒரு ஆசை. மேலும் ஒரு காலத்தில் ஸ்டார் எழுத்தாளர். லட்சிய வேகம் அவரது எழுத்துகளில் நிறைய தென்படும் என்பார்கள்.

அண்ணாமலை ஓவியன். அவன் அப்பா மேஸ்திரி உலகாயத முறையில் முன்னேறத் துடிப்பவர். மாணிக்கம் அவருக்கு பிள்ளை மாதிரி. அண்ணாமலை கதிரேசன் என்ற பெரிய ஓவியரை சந்திக்கிறான். அவர் உதவியால் ஓவியக் கல்லூரியில் சேர்கிறான். கதிரேசனின் மகள் ஆனந்தியும் அண்ணாமலையும் ஒருவரை ஒருவர் ஈர்க்கிறார்கள். ஆனால் அண்ணாமலை அப்பாவி. தான் காதலிக்கிறோம் என்பது கூட அவனுக்கு சரியாக புரியவில்லை. மாணிக்கத்துக்கும் ஆனந்தி மேல் ஆசை. ஒரு நாள் ஆனந்திக்கு மாணிக்கம் முத்தம் கொடுத்துவிடுகிறான். ஆனந்தி தான் கறைபட்டுவிட்டோம் என்று எண்ணி மாணிக்கத்தை மணக்கிறாள். அண்ணாமலை தன் முறைப்பெண் சுந்தரியை மணக்கிறான். சுந்தரிக்கு ஓவியம் கீவியம் எதிலும் ஆர்வம் கிடையாது. இருவருக்கும் நடுவில் நிறைய பிணக்குகள். சண்டை முற்றிப்போய் சுந்தரி தற்கொலை செய்துகொள்கிறாள். மாணிக்கம் அண்ணாமலையை பண விஷயத்தில் ஏமாற்றிவிடுகிறான். ஆனந்தி அவனை கடியும்போது அவள் தாலி மாணிக்கத்தின் கையோடு வந்துவிடுகிறது. உடனே புரட்சி நடந்து ஆனந்தி அண்ணாமலை இணைகின்றனர்.

அகிலன் அளவில் – அவரது மற்ற புத்தகங்களோடு ஒப்பிட்டால் – சாதனைதான், புரட்சிதான். ஆனால் cliche பாத்திரங்கள், உபதேசங்கள், கலை-பணம், நகரம்-கிராமம் வழக்கமான ஒப்பிடல்கள், அய்யகோ நாட்டின் நிலை இப்படி ஆகிவிட்டதே புலம்பல்களைத் தாண்டவில்லை. ஒரு நல்ல புனைவுக்கு வேண்டிய எந்த நயமும் இல்லை. இதுதான் தமிழின் சிறந்த புனைவு என்று இதை எல்லாம் மொழிபெயர்த்து வேற்று மொழிக்காரன் படித்தால் – அதுவும் கன்னட, மலையாள, வங்காள வாசகர்கள் படித்தால் நம் மானம் போகும்.

இது டிவி தொடராக வந்தது என்று சாரதா தகவல் தருகிறார்.

அவரது வேறு சில புத்தகங்களைப் பற்றி தனியாக பதிவு எழுத பொறுமை இல்லை, அதனால் இங்கேயே எழுதிவிடுகிறேன்.

துணைவி: சித்திரப் பாவையின் forerunner மாதிரி இருக்கிறது. கல்லூரி காலத்தில் நாயகனும் நாயகியும் ஒருவரை ஒருவர் விரும்புகிறார்கள். ஆனால் வெளியே காட்டிக் கொள்ளவில்லை. நாயகி வேறு ஒருவனை மணக்கிறாள். வாழ்வு சுகப்படவில்லை. நாயகன் எதிர்பாராத விதமாக அடுத்த வீட்டுக்கு குடிவருகிறான். அவனுக்கும் அப்போது ஆசை இருந்தது என்று தெரியவருகிறது. என்னை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று அவள் சொல்ல, இவன் மறுக்க, அது தெரிந்ததும் நாயகியின் கணவன் திருந்துகிறான். டைம் பாஸ். எப்படி சித்திரப்பாவை உருவானது என்று புரிந்து கொள்ள நினைப்பவர்கள் படிக்கலாம்.

நெஞ்சின் அலைகள்: புகழ் பெற்ற, ஆனால் ஏமாற்றம் தரும் நாவல். இந்திய தேசிய ராணுவ பின்புலம் என்றால் நேதாஜி ஒரு சீனில் வந்தால் போதும் என்று நினைத்து எழுதுபவரை என்ன சொல்வது? அம்பிகாபதி அமராவதி நாடகம் பின்னால் தொங்கும் படுதாவில் பாலைவனக் காட்சி இருந்தால் லைலா மஜ்னு நாடகம் ஆகிவிடுமா? அதே உப்பு சப்பில்லாத காதல், அதே முக்கோணம், நாயகன் என்ற ஒரே காரணத்துக்காக காதல் வசப்படும் பெண்கள், அதே உபதேசங்கள், படுதாவை மட்டும் மாற்றிவிட்டு ஆஹா ஓஹோ என்றால் எந்த சுவரில் போய் முட்டிக் கொள்வது?

அவளுக்குஅகிலன், ஆர்வி உட்பட நான்கு பேர் எழுதி இருக்கிறார்கள். நான்கு கடிதங்கள். ஒரு எழுத்தாளன், ஒரு மண முறிவு ஏற்பட்ட பாடகி இருவருக்கும் “காதல்”. ஆனால் பாடகி எழுத்தாளனை சந்தேகித்து விலகிவிடுகிறாள். இது அகிலன் “அவளுக்கு” எழுதிய கடிதத்தில் வருகிறது. அப்புறம் யாரோ செல்லம் என்ற வாசகர் மிகவும் இம்ப்ரஸ் ஆகி பாடகி “அவருக்கு” எழுதுவது போல ஒரு கடிதம் எழுதி இருக்கிறார். சந்தேகப்பட வேண்டியதில்லை என்றால் சொல்ல வேண்டியதுதானே என்கிறாள். எழுத்தாளன் தன் முதல் காதலை சொல்கிறான். கடைசியில் ஆர்வி எல்லா முடிச்சுகளையும் சம்பிரதாயமாக தீர்க்கிறார். டைம் பாஸ் கிம்மிக்தான், என்றாலும் படிக்கலாம்.

இப்போது வேங்கையின் மைந்தன் படித்துக் கொண்டிருக்கிறேன். ரொம்ப போரடிக்குது சார்!

பாவை விளக்கு வேறு படிக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். இப்போது பயமாக இருக்கிறது.

தொடர்புடைய சுட்டிகள்:
அகிலனுக்காக ஒரு தளம்