பொருளடக்கத்திற்கு தாவுக

அகிலனின் “சித்திரப்பாவை”

by மேல் ஓகஸ்ட் 2, 2011

இன்னும் கொஞ்ச நாளைக்கு பதிவுகள் ரெகுலராக வராது. இந்தியா வந்திருக்கிறேன், பல உறவினர்கள்/நண்பர்களை சந்திக்க வேண்டி இருக்கிறது. இன்டர்நெட் வேறு அவ்வப்போது வேலை செய்வதில்லை. தற்போதைக்கு ஒன்று.

எனக்கு அகிலனைப் பற்றி நல்ல அபிப்ராயம் இல்லை. அவர் எழுதிய எந்தப் புனைவும் என்னை எந்த வயதிலும் கவர்ந்ததில்லை. சாண்டில்யனை ஆர்வத்தோடு எட்டு ஒன்பது வயதில் படித்தேன். அந்த வயதில் கூட கயல்விழி போரடித்தது. பின்னே என்னங்க இரண்டு பக்கமும் பெரும் சேனைகள் திரண்டு போர் நடக்கும்போது கயல்விழி குறுக்கே புகுந்து அழுது புரண்டு போரை நிறுத்துகிறாளாம். அடப் போங்கய்யா!

ஆனால் ஞானபீட விருது பெற்ற முதல் தமிழ் எழுத்தாளர் அவர்தான். விருது வாங்கிய எழுத்தைப் படித்துவிட வேண்டும் என்று ஒரு ஆசை. மேலும் ஒரு காலத்தில் ஸ்டார் எழுத்தாளர். லட்சிய வேகம் அவரது எழுத்துகளில் நிறைய தென்படும் என்பார்கள்.

அண்ணாமலை ஓவியன். அவன் அப்பா மேஸ்திரி உலகாயத முறையில் முன்னேறத் துடிப்பவர். மாணிக்கம் அவருக்கு பிள்ளை மாதிரி. அண்ணாமலை கதிரேசன் என்ற பெரிய ஓவியரை சந்திக்கிறான். அவர் உதவியால் ஓவியக் கல்லூரியில் சேர்கிறான். கதிரேசனின் மகள் ஆனந்தியும் அண்ணாமலையும் ஒருவரை ஒருவர் ஈர்க்கிறார்கள். ஆனால் அண்ணாமலை அப்பாவி. தான் காதலிக்கிறோம் என்பது கூட அவனுக்கு சரியாக புரியவில்லை. மாணிக்கத்துக்கும் ஆனந்தி மேல் ஆசை. ஒரு நாள் ஆனந்திக்கு மாணிக்கம் முத்தம் கொடுத்துவிடுகிறான். ஆனந்தி தான் கறைபட்டுவிட்டோம் என்று எண்ணி மாணிக்கத்தை மணக்கிறாள். அண்ணாமலை தன் முறைப்பெண் சுந்தரியை மணக்கிறான். சுந்தரிக்கு ஓவியம் கீவியம் எதிலும் ஆர்வம் கிடையாது. இருவருக்கும் நடுவில் நிறைய பிணக்குகள். சண்டை முற்றிப்போய் சுந்தரி தற்கொலை செய்துகொள்கிறாள். மாணிக்கம் அண்ணாமலையை பண விஷயத்தில் ஏமாற்றிவிடுகிறான். ஆனந்தி அவனை கடியும்போது அவள் தாலி மாணிக்கத்தின் கையோடு வந்துவிடுகிறது. உடனே புரட்சி நடந்து ஆனந்தி அண்ணாமலை இணைகின்றனர்.

அகிலன் அளவில் – அவரது மற்ற புத்தகங்களோடு ஒப்பிட்டால் – சாதனைதான், புரட்சிதான். ஆனால் cliche பாத்திரங்கள், உபதேசங்கள், கலை-பணம், நகரம்-கிராமம் வழக்கமான ஒப்பிடல்கள், அய்யகோ நாட்டின் நிலை இப்படி ஆகிவிட்டதே புலம்பல்களைத் தாண்டவில்லை. ஒரு நல்ல புனைவுக்கு வேண்டிய எந்த நயமும் இல்லை. இதுதான் தமிழின் சிறந்த புனைவு என்று இதை எல்லாம் மொழிபெயர்த்து வேற்று மொழிக்காரன் படித்தால் – அதுவும் கன்னட, மலையாள, வங்காள வாசகர்கள் படித்தால் நம் மானம் போகும்.

இது டிவி தொடராக வந்தது என்று சாரதா தகவல் தருகிறார்.

அவரது வேறு சில புத்தகங்களைப் பற்றி தனியாக பதிவு எழுத பொறுமை இல்லை, அதனால் இங்கேயே எழுதிவிடுகிறேன்.

துணைவி: சித்திரப் பாவையின் forerunner மாதிரி இருக்கிறது. கல்லூரி காலத்தில் நாயகனும் நாயகியும் ஒருவரை ஒருவர் விரும்புகிறார்கள். ஆனால் வெளியே காட்டிக் கொள்ளவில்லை. நாயகி வேறு ஒருவனை மணக்கிறாள். வாழ்வு சுகப்படவில்லை. நாயகன் எதிர்பாராத விதமாக அடுத்த வீட்டுக்கு குடிவருகிறான். அவனுக்கும் அப்போது ஆசை இருந்தது என்று தெரியவருகிறது. என்னை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று அவள் சொல்ல, இவன் மறுக்க, அது தெரிந்ததும் நாயகியின் கணவன் திருந்துகிறான். டைம் பாஸ். எப்படி சித்திரப்பாவை உருவானது என்று புரிந்து கொள்ள நினைப்பவர்கள் படிக்கலாம்.

நெஞ்சின் அலைகள்: புகழ் பெற்ற, ஆனால் ஏமாற்றம் தரும் நாவல். இந்திய தேசிய ராணுவ பின்புலம் என்றால் நேதாஜி ஒரு சீனில் வந்தால் போதும் என்று நினைத்து எழுதுபவரை என்ன சொல்வது? அம்பிகாபதி அமராவதி நாடகம் பின்னால் தொங்கும் படுதாவில் பாலைவனக் காட்சி இருந்தால் லைலா மஜ்னு நாடகம் ஆகிவிடுமா? அதே உப்பு சப்பில்லாத காதல், அதே முக்கோணம், நாயகன் என்ற ஒரே காரணத்துக்காக காதல் வசப்படும் பெண்கள், அதே உபதேசங்கள், படுதாவை மட்டும் மாற்றிவிட்டு ஆஹா ஓஹோ என்றால் எந்த சுவரில் போய் முட்டிக் கொள்வது?

அவளுக்குஅகிலன், ஆர்வி உட்பட நான்கு பேர் எழுதி இருக்கிறார்கள். நான்கு கடிதங்கள். ஒரு எழுத்தாளன், ஒரு மண முறிவு ஏற்பட்ட பாடகி இருவருக்கும் “காதல்”. ஆனால் பாடகி எழுத்தாளனை சந்தேகித்து விலகிவிடுகிறாள். இது அகிலன் “அவளுக்கு” எழுதிய கடிதத்தில் வருகிறது. அப்புறம் யாரோ செல்லம் என்ற வாசகர் மிகவும் இம்ப்ரஸ் ஆகி பாடகி “அவருக்கு” எழுதுவது போல ஒரு கடிதம் எழுதி இருக்கிறார். சந்தேகப்பட வேண்டியதில்லை என்றால் சொல்ல வேண்டியதுதானே என்கிறாள். எழுத்தாளன் தன் முதல் காதலை சொல்கிறான். கடைசியில் ஆர்வி எல்லா முடிச்சுகளையும் சம்பிரதாயமாக தீர்க்கிறார். டைம் பாஸ் கிம்மிக்தான், என்றாலும் படிக்கலாம்.

இப்போது வேங்கையின் மைந்தன் படித்துக் கொண்டிருக்கிறேன். ரொம்ப போரடிக்குது சார்!

பாவை விளக்கு வேறு படிக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். இப்போது பயமாக இருக்கிறது.

தொடர்புடைய சுட்டிகள்:
அகிலனுக்காக ஒரு தளம்

18 பின்னூட்டங்கள்
 1. Chandramowleeswaran permalink

  அகிலனின் கதை பத்தி http://mowlee.blogspot.com/2008/07/2_26.html எழுதிருக்கேன் பயப்படாம படிஙg்க

  Like

 2. எனது சிறுவயதில் சித்திரப்பாவையைப் படிக்கும் போது மிகவும் ஈர்த்தது. தற்போது சில மாதங்களுக்கு முன் படித்தபோது சுவைக்கவில்லை.

  காரணம் என்னவாக இருக்கும்?

  Like

 3. knvijayan permalink

  வணக்கம் RV .இந்தியாவிற்கு வந்தது அறிந்து மிகவும் சந்தோசம்.உங்களை நேரில் பார்க்க ஆவலாயிருக்கிறேன்,பெங்களூர் வருவீர்களா?உங்களுக்கு ஏதும் ஆட்சேபம் இல்லையென்றால் பெங்களூர் வரும்போது தொலைபேசியில் கூப்பிடவும்,நேரில் வந்து பார்கிறேன்.டெலிபோன் எண் 080 -22237825 ,09845017111 .நன்றி.

  Like

 4. ஆர்வி! உங்களுக்குப் படித்துப் பிடிக்காதவற்றையெல்லாம் பற்றி எழுதினால் யாருக்கு என்ன பயன்?.. இதெல்லாம் குப்பையென்றால், குப்பை என்று சொல்வதற்கு ஒரு பதிவா?.. உங்கள் பதிவைப் படிக்கிறவர்களுக்கு உங்கள் ரசனையைச் சொல்லி இதெல்லாம் படித்துப் பாருங்கள் அற்புதம் என்று சொல்லத் தானே இந்த தளம்?.. இருக்கவே இருக்கு, ஜெமோவின் புதினங்கள்.. (இவர் ஏனென்றால் இவர் எழுத்துக்கள் உங்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று உங்கள் மூலம் தெரிந்ததால் தான்; அந்த ஒரு காரணம் மட்டுமே) இணையத்தில் அவர் எழுதியவற்றில் சிலவற்றைப் படித்திருக்கிறேனே தவிர, அவரின் ஒரு புதினத்தைக் கூடப் படித்தறியாதவன் நான்.
  இந்த தளத்தில் அவர் பற்றி வரும் குறிப்புகளைப் படித்து, அவரது சமூகப் புதினங்களைப் படிக்க வேண்டுமென்ற ஆவல் எனக்குண்டு.

  அவரின் ஒரே ஒரு சமூக நாவலைப் பற்றியாவது விமரிசனமாக– போகிற போக்கில் சொல்கிற ஒற்றை வரியெல்லாம் லாயக்குப் படாது– முழுமையான விமரிசனம் எழுதினால் அது எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும்?.. இது ஒரு ஆரம்பம் தான்.

  இந்த ஆரம்பம் பல தொடர்ச்சியைகளை ஏற்படுத்தும்.

  ஆகவே எழுதுங்கள்.

  Like

  • Bags permalink

   சமூக நாவல் என்று எதைக் குறிக்கிறீர்கள்? சிலவற்றை பற்றி எழுதியிருக்கிறோம். கன்யாகுமரி, ஏழாம் உலகம், ரப்பர்…

   Like

 5. டியர் ஆர்.வி.,

  ஞானபீடம் விருது பெற்ற பின்புதான் இந்த நாவலைப்படிக்க ஆர்வம் வந்தது. அது ‘சித்திரப்பாவை’யின் இரண்டாவது பதிப்பு, அதனால் ஞானபீடம் விருதுக்கான சான்றிதழையும் அதில் இணைத்திருந்தனர். நீங்கள் சொன்னது போல கதை அவ்வளவு சுவாரஸ்யமில்லை. வணிக எழுத்துக்களின் கவர்ச்சியில்லாததால் இருக்கலாம்.

  இது தூரதர்ஷண் தொலைக்காட்சிக்காக தொடராகவும் எடுக்கப்பட்டிருந்தது. இப்போதுபோல நவீன தொழில்நுட்பத்துடன், திரைப்படங்களையும் மிஞ்சும் வண்ணம் சாகசங்களோடு எடுக்கப்பட்ட தொடர் அல்ல. தொலைக்காட்சி நிலைய ஸ்டுடியோவிலேயே செட்கள் போடப்பட்டு ஒரு மேடை நாடக ரேஞ்சுக்கு எடுக்கப்பட்டிருந்தது. (இப்போதைய சீரியல்களில் செட்களே கிடையாது. எல்லாமே ஒரிஜினல் வீடுகளிலேயே எல்லா சீரியல்களும் எடுக்கப்படுவதால், காட்சிகளைப்பொறுத்தவரை படு நேச்சுரல்). சித்திரப்பாவையின் வெளிப்புறக்காட்சிகள் அனைத்தும் நிஜமான வெளிப்புறங்களிலேயே எடுக்கப்பட்டிருந்தன.

  ஆனந்தியாக (சௌகாரின் பேத்தி) வைஷ்ணவியும், சுந்தரியின் அப்பாவாக பழைய நடிகர் ஸ்ரீகாந்தும் நடித்திருந்தனர். மற்ற நடிகர்கள் பரிச்சயமில்லாதவர்கள். சீரியலைப்பார்த்தபோது, வழக்கம்போல, எழுத்தில் படித்த கதை உயர்வாகத் தெரிந்தது.

  முழுக்க முழுக்க வணிக எழுத்தைக்கொண்டு புனையப்பட்ட அகிலனின் நாவல் ‘பொன் மலர்’ சற்று சுவாரஸ்யமாக இருக்கும். அதில் வரும் ஒரு கதாபாத்திரமும், காதலை மனதுக்குள் வைத்துக்கொண்டு புழுங்குவார். கதாநாயகியும் வேறொருவரை மணப்பாள். சாண்டோ சின்னப்பா தேவர் ஒரே கதையை திருப்பி திருப்பி படமாக எடுத்தது போல இவரும் ஒரே தீம் ஒன்றை வைத்துக்கொண்டு மாவரைத்தாரா?.

  எத்தனையோ பிடிக்காத நாவல்கள் பற்றி எழுதியிருக்கிறீர்க்ள். அப்படியே, ஜெகசிற்பியனின் ‘நந்திவர்மன் காதலி’ பற்றியும் ஒரு விரிவுரை எழுதுங்களேன்.

  Like

 6. ஆர்.வி,

  அகிலனின் ‘பால் மரக் காட்டினிலே’ படித்திருக்கிறீர்களா ? அதைப் பற்றிய ஒரு மினி விமர்சனம் இங்கே…

  1970களில் மலேசியத் தோட்டத் தொழிலாளர்களை நேரில் கண்டு, அவர்களுடன் பேசிய அகிலன் எழுதிய பால் மரக் காட்டினிலே மேலோட்டமான சம்பவங்களின் தொகுப்பாக உள்ளது.

  தமிழகத்திலிருந்து கங்காணியினால் ஒப்பந்தக் கூலிகளைக் கொண்டுவரப்பட்ட வீரப்பன்-வேலம்மாள் ரப்பர் தோட்ட வேலையில் சிரமப்படுகின்றனர். மலேயா சுதந்திர நாடாக அறிவிக்கப்பட்ட பின்னமும் தோட்டமுதலாளிகளான ஆங்கிலேயரும் கிராணிகளும் தொடர்ந்து அதிகாரம் செலுத்துகின்றனர். பாலன், கண்ணம்மா, முருகன், செல்லம்மா போன்றோரைப் பற்றிய பல்வேறு உணர்ச்சிமயமான சம்பவங்கள் உருக்கமான மொழியில் விவரிக்கப்பட்டுள்ளன.

  புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் வாழ்க்கைச் சம்பவங்களின் கோவை மட்டும் நாவலாக முடியாது என்பதற்கு பால்மரக் காட்டினிலே சிறந்த எடுத்துக்காட்டு. புலம் பெயர்ந்து வாழும் தமிழர் பற்றிய ஆழமான விவாதங்களை உருவாக்கிடாமல் செயற்கையான முறையில் சோகத்தையும் கண்ணீரையும் வரவழைக்க முயன்றிருப்பது நாவலின் பலவீனமான அம்சம்.

  Like

 7. //ஆனந்தியாக (சௌகாரின் பேத்தி) வைஷ்ணவியும், சுந்தரியின் அப்பாவாக பழைய நடிகர் ஸ்ரீகாந்தும் நடித்திருந்தனர். மற்ற நடிகர்கள் பரிச்சயமில்லாதவர்கள். சீரியலைப்பார்த்தபோது, வழக்கம்போல, எழுத்தில் படித்த கதை உயர்வாகத் தெரிந்தது.//

  அந்த சீரியல் ரொம்ப ஸ்லோ. வைஷ்ணவியைப் பார்த்துக் கொஞ்சம் பயமாகக் கூட இருந்தது. நாயகனாக சோகமாக அவ்வப்போது தாடியோடு நடித்தவர் ரவி ராகவேந்தர் (இவர் ரஜினியின் உறவினர்) என்று நினைக்கிறேன். வானம் படத்தில் ஒரு காட்சியில் டாக்டராக வருகிறார்.

  Like

 8. // எனது சிறுவயதில் சித்திரப்பாவையைப் படிக்கும் போது மிகவும் ஈர்த்தது. தற்போது சில மாதங்களுக்கு முன் படித்தபோது சுவைக்கவில்லை // ரமணன், நமக்கு வயதாகிவிட்டதுதான் காரணமாக இருக்கும். 🙂

  ஜீவி, // உங்களுக்குப் படித்துப் பிடிக்காதவற்றையெல்லாம் பற்றி எழுதினால் யாருக்கு என்ன பயன்?.. இதெல்லாம் குப்பையென்றால், குப்பை என்று சொல்வதற்கு ஒரு பதிவா?.. உங்கள் பதிவைப் படிக்கிறவர்களுக்கு உங்கள் ரசனையைச் சொல்லி இதெல்லாம் படித்துப் பாருங்கள் அற்புதம் என்று சொல்லத் தானே இந்த தளம்? // இல்லை ஜீவி, நான் படித்ததைப் பற்றி – அது குப்பையோ காவியமோ – எழுதத்தான் என்று நினைத்திருக்கிறேன். neengal சொல்வதைப் பார்த்தால் குப்பை அதிகமாகிவிட்டதோ என்று தோன்றுகிறது. ஜெயமோகன் நாவல்களைப் பற்றி எழுத ஆசைதான். ஆனால் அவை எல்லாம் நீங்களே சொல்வது போல போகிற போக்கில் எழுதுவதற்கில்லை. நேரமாகும், அதனால்தானோ என்னவோ ஆரம்பிப்பது தள்ளிக்கொண்டே போகிறது. விரைவில்…

  சாரதா, டிவி தொடர் பற்றிய தகவல்களுக்கு நன்றி! ஜெகசிற்பியனா, அய்யய்யோ! https://siliconshelf.wordpress.com/2011/01/13/கல்கியின்-வாரிசுகள்-சரி/

  பால்மரக்க்காட்டினிலே பற்றிய அறிமுகத்துக்கு நன்றி, ஸ்ரீனிவாஸ்!

  Like

 9. — // எனது சிறுவயதில் சித்திரப்பாவையைப் படிக்கும் போது மிகவும் ஈர்த்தது. தற்போது சில மாதங்களுக்கு முன் படித்தபோது சுவைக்கவில்லை // ரமணன், நமக்கு வயதாகிவிட்டதுதான் காரணமாக இருக்கும். —

  உண்மைதான் ஆர்வி. மனம் முதிர்ச்சி அடைய அடைய இளமையில் இருந்த பல ஈர்ப்புகள் மாறித்தான் போகின்றன. படைப்புகளும் அதற்கு விதிவிலக்கல்ல. ஆனால் … என்னால் அப்போது ரசித்த எம்கேடி, சின்னப்பா, ஜி.ஆர், ஸ்ரீனிவாஸ், ஏம்.எம்.ராஜா, சீர்காழி பாடல்களை இப்போதும் ரசிக்க முடிகிறது. கூடவே ராஜாவையும், ரஹ்மானையும், ஹாரிஸையும், வித்யாசாகரையும் துள்ளலோடு ரசிக்க முடிக்கிறது.

  இசை, ஒருவேளை காலம் கடந்து நிற்பது காரணமாக இருக்கக் கூடும். இலக்கியப் படைப்புகள் அது மாதிரி இருப்பதில்லையோ? 😉

  Like

 10. அன்புள்ள ஆர்வி,

  எனக்கு 70 வயது ஆகிறது. ‘பாவை விளக்கு’ கல்கியில் வெளிவந்த காலத்து அந்தாளைய வாசகர்கள் எத்தனை பேர் அதனை உணர்வுபூர்வமாக ரசித்துப் படித்தார்கள் என்பதை அறிவேன். அகிலனைப் பற்றிய எனது பதிவில், பாவைவிளக்கு தொடர்கதையாக வந்த பொழுது, ‘கல்கி’ காரியாலயத்தையே திகைக்க வைத்த அப்பொழுது நடந்த ஒரு ஆச்சரியமான சம்பவத்தைக் குறிப்பிட்டிருக்கிறேன்.

  இந்தக் காலத்தில் அந்நாளைய எழுத்துக்களைப் பற்றி எழுதும் பொழுது அந்தக் காலத்திய வளர்ச்சியையும் மனோபாவத்தையும் கணக்கில் கொள்ள ஏன் மறுக்கிறீர்கள் என்று புரியவில்லை. . அதுதான் விஞ்ஞான பூர்வமான வளர்ச்சியை ஏற்றுக் கொள்வோருக்கு அழகு. எல்லாவற்றிலும் புரட்டிப் போடும் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கும் பொழுது காலத்தை வென்று நிற்கக் கூடிய எழுத்து என்று எதைச் சொல்வது?… ஒன்றுமில்லை, இன்று நீங்கள் சிலாகித்துச் சொல்பனவற்றை இருபது ஆண்டுகள் கழித்துப் படித்துப் பார்த்தாலும் இதே கதை தான். இதற்கா அப்படி மாய்ந்து மாய்ந்து எழுதினோம் என்று தோன்றும். உங்களுக்கே இந்த உண்மை புரிபடும். தமிழின் முதல் சிறுகதை என்று கருதப்படும் வ.வே.சு. அவர்களின் ‘குளத்தங்கரை அரசமரம்’ பற்றி இதே மாதிரி கருத்தைச் சொல்லி உங்களிடமிருந்து மறுதலையான ஒரு பதிலை பெற்றது நினைவுக்கு வருகிறது. நீங்கள் எழுதுவது உங்கள் ரசனை மட்டுமில்லை, ஒன்றைப் பற்றியதான உங்களது விமரிசனமும் ஆகும்.

  ஆனால் இத்தனை முரண்களுக்கும் நடுவே, பெரும்பாலும் உங்கள் ரசனையைச் சொல்ல நீங்கள் எடுத்துக் கொள்வது அந்தக் காலத்து நாவல்களைத் தான். அது தான் ஏன் என்று தெரியவில்லை. பழுத்த மரம் தான் கல்லடி படும் என்கின்ற நிதர்சனமோ?.. உங்கள் ரசனையில் மாற்றம் ஏற்பட்டிருக்கிற பொழுது உங்கள் ரசனைக்கேற்றவான இந்த காலத்து எழுத்துக்களை சிலாகித்து சொல்ல வேண்டும் என்றே கேட்டுக் கொண்டேன். அதுதான் பழைய தலைமுறையை உள்ளடக்கிய புதிய தலைமுறைக்கேற்பவான புதியன பற்றியதான அறிமுகமாக இருக்கும்.

  இன்னொன்று. எழுத்து என்று வருகிற பொழுது ஒரு குறிப்பிட்ட புதினத்தைப் பற்றி
  ‘கதைச்சுருக்கம்’ கொடுப்பதைத் தாண்டி, அதை எழுதிய எழுத்தாளர் படிப்பவருக்கு சலிப்பேற்படுத்தாதவாறு எவ்வளவு நேர்த்தியாக அதை தான் எழுதுகிற எழுத்தில் வடிவமைத்துச் சொல்லியிருக்கிறார் என்பதையும் குறிப்பிடுவது முக்கியமாகிறது. ஒரு பாரா என்றால் சரி; எப்படி இருந்தாலும் படித்து விடுவோம். 250 பக்க நாவல் என்றால் சும்மாவா?.. படிப்போரை வருத்தாது சொல்ல வேண்டுமல்லாவா?.. எழுத்தாளருக்கு வேண்டிய முக்கியமான திறமையே இது தான்.. இந்த சிறப்பே எதை அவர் எழுதினாலும் படிப்போரைப் படிக்கத் தூண்டுகிறது. (உ.ம்: ரா.கி. ரங்கராஜன், சுஜாதா) கதை சொல்வதில் தான் எழுதுவதெல்லாம் ஒன்றே போல் இல்லாமல, புதுப்புது மாதிரிகளைச் சோதித்துப் பார்த்த எழுத்தாளர்கள் உண்டு. இதையும் வணிக எழுத்தாளர்களின் லட்சணம் என்று குறிப்பிடமாட்டீர்கள் என்று நினைக்கிறேன்.

  . .

  Like

  • அன்புள்ள ஜீவி,
   எழுபது வயதிலும் வயதில் சின்னவர்களை அலட்சியபப்டுதாமல் மாற்றுக் கருத்துகளோடு செறிவாக வாதம் புரியும் உங்கள் போன்றவர்கள் மிகக் குறைவுதான், வாழ்த்துக்கள்!

   // அந்நாளைய எழுத்துக்களைப் பற்றி எழுதும் பொழுது அந்தக் காலத்திய வளர்ச்சியையும் மனோபாவத்தையும் கணக்கில் கொள்ள ஏன் மறுக்கிறீர்கள்… // இதை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியத்தை நான் பூரணமாக உணர்ந்திருக்கிறேன். ஆனால் இன்றைய வளர்ச்சி, மனோபாவம் ஆகியவற்றை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் அந்நாளைய எழுத்த்க்களைப் பற்றி எழுதக் கூடாது என்று நான் உறுதியாகக் கருதுகிறேன். அறுபதுகளில் என்ன நினைத்தார்கள் என்று கிளிப்பிள்ளை போல திருப்பிச் சொல்ல நான் எதற்கு? அப்படி நான் திருப்பி சொல்வதை நீங்கள் படிக்க வேண்டிய அவசியம்தான் என்ன? அறுபதுகளில் புகழப்பட்ட எழுத்து இன்று படிக்கப்பட வேண்டியதா இல்லையா என்று “ஜட்ஜ்மென்ட்” கொடுப்பதையே என் தளமாகக் கருதுகிறேன். எந்த புத்தகமும் சரி அது காலம் கடந்து நிற்கிறதா, நிற்கக் கூடியதா என்று என் கருத்தைப் பதிவு செய்யவே விரும்புகிறேன். அகிலனின் எழுத்து அன்றைக்கு லட்சியவாதமாகக் கருதப்பட்டிருக்கலாம். குறிஞ்சி மலர் படித்த பெற்றோர்களால் ஒரு ஆயிரம் பேருக்கு அரவிந்தன் என்றும் பூரணி என்றும் பேர் வைக்கப்பட்டிருக்கலாம். அவை சமூக ஆராய்ச்சியாளர்களுக்கு முக்கியம், எனக்கு எழுத்துகளில்தான் பிரதான focus, கல்கி அலுவலகத்தில் நடந்தது இரண்டாம் பட்சமே, curiosity value . ஷேக்ஸ்பியர் காலத்தில் அவர் மட்டும்தானா நாடகம் எழுதினார்? ஆனால் பெண் ஜான்சனும் க்ரிஸ்டோஃபர் மார்லோவும் எழுதியவற்றின் தரம் குறைவுதான், இன்று அவர்களைப் படிப்பவர்கள் academics மட்டும்தானே? அகிலனுக்கும், மு.வ.வுக்கும், நா.பா.வுக்கு அப்படிப்பட்ட நிலைதான் என்றுதான் நான் நினைக்கிறேன்…

   // பெரும்பாலும் உங்கள் ரசனையைச் சொல்ல நீங்கள் எடுத்துக் கொள்வது அந்தக் காலத்து நாவல்களைத் தான் // தெரியாத குறைதான்! இன்றைய முக்கியப் புனைவுகளைப் பற்றி பத்து பேர் இணையத்தில் பேசினால், நண்பர்கள் யாராவது சிபாரிசு செய்தால்தான் தெரிகிறது. அன்றைய நாவல்களைப் பற்றி நானே கேள்விப்பட்டிருக்கிறேன், ஏற்கனவே நிறைய பேர் சொல்லி இருக்கிறார்கள், புத்தகங்களும் வாங்கி வைத்திருக்கிறேன், நூலகங்களில் கிடைக்கிறது, நண்பர்களிடம் இருக்கிறது. புதுமைப்பித்தனையும், நா.பா.வையும் எனக்கே அறிமுகம் உண்டு, மௌனியையும், பிச்சமூர்த்தியையும் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் ஜோ டி க்ரூசும், பெருமாள் முருகனும் தெரிய வருவது தற்செயலே.

   Like

   • natbas permalink

    சார் ஒரே ஒரு சந்தேகம்…

    //எந்த புத்தகமும் சரி அது காலம் கடந்து நிற்கிறதா, நிற்கக் கூடியதா என்று என் கருத்தைப் பதிவு செய்யவே விரும்புகிறேன். //

    உங்களது இந்த கருத்தின் அடிப்படையில் ஒவ்வொரு தலைமுறையும் தனக்கு முந்தைய தலைமுறையைவிட உயர்ந்த ரசனை கொண்டதாக இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று நினைக்கிறேன்.

    நம் பிள்ளைகள், அல்லது அவரகளின் குழந்தைகள் மோசமான ரசனை உள்ளவர்களாக இருக்க மாட்டார்கள் என்று என்ன நிச்சயம்?

    ஒவ்வொரு தலைமுறையும் தன் தேவைகளுக்கேற்ப தனக்கான புத்தகங்களைத் தேர்வு செய்து கொள்கிறது என்பதுதானே சரியாக இருக்கும்?

    Like

 11. பதிலுக்கு நன்றி, ஆர்வி! உங்கள் மனசு புரிகிறது. அது புரிகிற வரையில் தான் எல்லாம். புரிந்து விட்டால் மிதியெல்லாம் அப்புறம் தான்.

  மிக்க அன்புடன்,
  ஜீவி

  Like

 12. மன்னிக்கவும். ‘புரிந்து விட்டால் மீதியெல்லாம்’ அப்புறம் தான்’–என்று திருத்திப் படிக்க வேண்டுகிறேன்.

  Like

 13. நட்பாஸ்,

  // உங்களது இந்த கருத்தின் அடிப்படையில் ஒவ்வொரு தலைமுறையும் தனக்கு முந்தைய தலைமுறையைவிட உயர்ந்த ரசனை கொண்டதாக இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று நினைக்கிறேன். // அதற்கான வாய்ப்புகள் அதிகம், ஆனால் அது எப்போதும் உண்மையாக இருக்க வேண்டியதில்லை. உண்மையோ, பொய்யோ ஒவ்வொரு தலைமுறையும் நிச்சயமாக முந்தைய தலைமுறையை விட தனக்கு உயர்ந்த ரசனை என்று நினைக்கும். 🙂

  // ஒவ்வொரு தலைமுறையும் தன் தேவைகளுக்கேற்ப தனக்கான புத்தகங்களைத் தேர்வு செய்து கொள்கிறது என்பதுதானே சரியாக இருக்கும்? // ஆம், ஆனால் பல தலைமுறைகள் மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுக்கும் புத்தகங்களும் உண்டு. அதற்கான வாய்ப்பு உள்ள, இந்தத் தலைமுறையில் எழுதப்பட்ட புத்தகங்கள் என்னென்ன என்று தேடுவோமே!

  ஜீவி, நீங்கள் நினைப்பதும் புரிகிறது. மாற்று கருத்துகளை மதிக்கும் உங்களிடமிருந்து கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது.

  ரமணன், // இசை, ஒருவேளை காலம் கடந்து நிற்பது காரணமாக இருக்கக் கூடும். இலக்கியப் படைப்புகள் அது மாதிரி இருப்பதில்லையோ? // யோசிக்க வைத்துவிட்டீர்கள். 🙂

  Like

Trackbacks & Pingbacks

 1. அகிலனின் கயல்விழி | சிலிகான் ஷெல்ஃப்
 2. தமிழின் டாப் டென் நாவல்கள் | சிலிகான் ஷெல்ஃப்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: