மைக்கேல் க்ரைக்டன் எழுதிய “ரைசிங் சன்”

எனக்குப் பிடித்த த்ரில்லர்களில் ஒன்று.

மைக்கேல் க்ரைக்டன் பெரும் வெற்றி பெற்ற எழுத்தாளர். ஜுராசிக் பார்க் திரைப்படத்தின் மூல நாவலை எழுதியவர் இவர்தான்.

ரைசிங் சன் ஒரு பெரும் ஜப்பானிய கம்பெனி – நகோமோடோ கார்ப்பரேஷன் – விழாவில் கொல்லப்படும் ஒரு பெண்ணோடு ஆரம்பிக்கிறது. லாஸ் ஏஞ்சலஸ் போலீஸ் துறை ஜப்பானிய பின்புலம் உள்ள பிரச்சினைகளைப் பார்த்துக் கொள்ள ஸ்மித்தை நியமித்திருக்கிறது. பெரிய கம்பெனி என்பதால் ஜப்பானிய கலாசாரத்தை நன்கு அறிந்த கேப்டன் கானரும் ஸ்மித்தோடு சேர்ந்து கொள்கிறார். கொலை நடந்த அறையில் வீடியோ surveilance இருக்கிறது, ஆனால் வீடியோக்களைத் தர ஜப்பானிய கம்பெனி அதிகாரி இஷிகுரோ முட்டுக்கட்டை போடுகிறார். இறந்தவள் ஒரு ஹை கிளாஸ் விபசாரி என்று தெரிகிறது. அவள் வீட்டில் விசாரித்ததில் சந்தேகம் எட்டி சகமுரா என்ற ஜப்பானியன் மேல் விழுகிறது. கானர், ஸ்மித், லாஸ் ஏஞ்சலஸ் போலீஸ் துறை மேல் ஜப்பானியர்களால் நிறைய அழுத்தம் தரப்படுகிறது. வீடியோக்கள் எடிட் செய்யப்பட்டிருக்கின்றன என்று தெரிகிறது. அரசியல் தொடர்புகள், செனட்டர் மார்ட்டன் என்று சந்தேகம் மாறிக் கொண்டே இருக்கிறது. முடிவு? படித்துக் கொள்ளுங்கள்.

புத்தகத்தை உயர்த்துவது ஜப்பானியர்களைப் பற்றிய சித்திரம்தான். கேப்டன் கானர் ஜப்பானில் வாழ்ந்தவர். ஜப்பானியர்கள் இன வெறி பிடித்தவர்கள், அவர்கள் அமெரிக்கப் பொருளாதாரத்தை கட்டுப்படுத்த முயற்சிக்கிறார்கள், அதை அமெரிக்கர்கள் புரிந்து கொள்ளவில்லை என்ற தியரிதான் கதையின் அடிப்படை. கதையின் கேப்டன் கானர் அதைப் புரிந்து கொண்டிருக்கும் சிலரில் ஒருவர், ஆனால் ஜப்பானிய கலாச்சாரத்தால் ஈர்க்கப்பட்டிருக்கிறார். அவர் மூலம்தான் இந்த சித்திரம் விவரிக்கப்படுகிறது. அது மிகைப்படுத்தப்பட்ட சித்திரம் என்றே நினைக்கிறேன். ஆனாலும் சுவாரசியமான சித்திரம்.

ஷான் கானரி நடித்து திரைப்படமாகவும் வந்தது.

படியுங்கள் என்று சிபாரிசு செய்கிறேன்.

தொடர்புடைய சுட்டிகள்:
க்ரைக்டன் பற்றி விக்கியில்
ரைசிங் சன் திரைப்படம்