ஒரு இரண்டு வருஷம் முன்னால் படிக்க ஆரம்பித்த புத்தகம். கவனமாகப் படிக்க வேண்டிய புத்தகம் என்று தெரிந்தது. சரி அப்புறம் படிக்கலாம் என்று எடுத்து வைத்தேன், படிக்க இப்போதுதான் நேரம் வந்தது.
சிறந்த புத்தகங்களில் ஒன்று. எந்த வித சந்தேகமும் இல்லை. குறிப்பாக கடல் காட்சிகள் அற்புதமானவை. உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும்போது சுற்றி இருக்கும் மீன்களில் கூட்டத்தின் அழகை ரசிக்கும் தருணம் புத்தகத்தின் ஒரு உச்சம். தொம்மந்திரை, கோத்ரா, போஸ்கோ மூவரும் சுறா வேட்டைக்குப் போகும் காட்சி ஒரு தொன்மம் ஆவதற்கான தகுதி உள்ள சித்தரிப்பு. தென் மாவட்டத்து மீனவர் வாழ்க்கையை இத்தனை நுண்விவரங்களுடன் படிப்பது ஆனந்தமாக இருக்கிறது.
மீனவர் வாழ்க்கையை – அதுவும் கிருஸ்துவ பரதவர் வாழ்க்கையை – இது வரையில் இவ்வளவு அருமையாக யாரும் சித்தரித்தே இல்லை. (கடல்புரம் நாவலையும் கணக்கில் வைத்துக்கொண்டுதான் இதைச் சொல்லுகிறேன்)
நான் கதைச் சுருக்கம் எல்லாம் எழுதப் போவதில்லை. பரதவர் வாழ்க்கை, அவ்வளவுதான். இதில் யார் யாருக்கு துரோகம் செய்தான்(ள்), யார் குடும்பம் வாழ்ந்தது, யார் குடும்பம் வீழ்ச்சி அடைந்தது, யார் யாரை கொன்றது, யார் யாரோடு படுத்தது எல்லாம் வெறும் பரதவர் வாழ்க்கையை விவரிக்க உதவும் ஒரு சட்டம்தான் (framework). குசும்பு, அடிதடி, காதல், காமம், கோபம், வன்மம், துரோகம், அடுத்த ஊர்க்காரர்களோடு சண்டை, கடைசி வரை நல்லவர்களாகவே இருந்த சிலர், தவறு செய்யும் பலர், அவர்களில் திருந்தி வாழும் சிலர், ஊரின் நீண்ட கால பொருளாதார முன்னேற்றத்துக்கு உழைத்த ஒரு பாதிரி (நிஜ மனிதராம்), ஊரைச் சுரண்டும் பல பாதிரிகள் என்று கதை போகிறது.
எனக்குப் பிடித்த காட்சிகளில் சில: சுறா வேட்டை; பெரிய மீன் கட்டுமரத்தைத் தூக்குவது; பரதவர்கள் கிருஸ்துவர்கள் ஆக மாறி பல நூறு ஆண்டுகள் ஆனாலும் கன்னியாகுமரி அம்மனை விட முடியாதது; சவேரியார் குகைக்கு போகும் சேகர்; ஒரு ஓரத்தில் காட்டப்படும் நாடார்களின் வளர்ச்சி; உயிருக்குப் போராடும்போது மீன் கூட்டத்தின் அழகை ரசிக்கும் சூசையும் சிலுவையும்; தங்கள் பாதுகாப்பில் விடப்பட்ட நகைப்பெட்டி என்ற பெரும் பொறுப்பின் சுமையில் அழுந்திக் கொண்டிருப்பவர்களிடம் ஒரு வருஷமாக அது காலியாகத்தான் இருக்கிறது என்று அலட்சியமாக சொல்லும் செலின்; சண்டையைத் தவிர்க்க விரும்பும் முன்னாள் சண்டியர் ஜஸ்டின் தன் மகனிடம் உன்னால்தான் கோழையாகிவிட்டேன் என்று சொல்வது; ஜஸ்டினின் இறப்பு; சுந்தரி-சூசை உறவு சூசையின் மனைவிக்குத் தெரியும் என்று சுந்தரி உணரும் இடம்; ஹிந்து-கிருஸ்துவ மதங்களைப் பற்றிப் பேசும் இடம்; மனைவியை முதலாளிக்குக் கூட்டிக் கொடுக்க முயல, முதலாளி நாசூக்காக மறுப்பது…
குறை என்று பெரிதாக எதுவும் சொல்வதற்கில்லை. 1936-இல் கலர் என்றும் லோன் என்றும் ஆங்கில வார்த்தைகளை சாதாரணர்கள் பயன்படுத்துவது கொஞ்சம் நெருடியது. அதே வருஷத்தில் சிதம்பரம் பிள்ளைக்கு என்னாயிற்று என்று விசாரிப்பது anachronism ஆகத் தெரிகிறது. அப்போது அவர் இறந்தே போய்விட்டார், ஜெயிலிருந்து வந்தே இருபது வருஷம் ஆகிவிட்டது.
மனித மனத்தின் உள்ளுணர்வுகள் பற்றிய தரிசனங்கள் சொல்லும்படியாக இல்லை, அப்படி இருந்திருந்தால் புத்தகத்தை இன்னும் உயர்ந்த இடத்தில் வைத்திருப்பேன். ஆசிரியர் முயன்றிருக்கிறார்; வசந்தாவுக்கு ஜஸ்டின் மீது உள்ள வன்மமும், சூசை-சிலுவை உறவும் அவற்றுக்கான முயற்சிகள்தான். ஆனால் அவற்றில் ஏதோ குறைகிறது.
நண்பர் பாலாஜி இது நேர்கோட்டில் செல்லும் straightforward narrative என்று சொன்னார்; உண்மைதான், ஆனால் ஒரு literary டெக்னிக் பயன்படுத்தப்படவில்லை என்பது எனக்கு குறையாகத் தெரியவில்லை. தனித்துவமுள்ள பாத்திரங்கள் இல்லை என்ற அவர் விமர்சனத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன், ஆனால் அதுவும் அப்படி இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்றுதான் சொல்ல முடியும்.
என் அப்பா படித்துவிட்டு இத்தனை “கெட்ட” வார்த்தைகளை ரியலிசத்துக்காக அப்படியே பயன்படுத்தி இருக்க வேண்டாம் என்று சொன்னார். அவருடைய வால்யூ சிஸ்டம் வேறு என்பதைப் புரிந்து கொள்கிறேன், ஆனால் அவரது நிலையை நிராகரிக்கிறேன். நான் ரசித்த ஒரு வார்த்தைப் பிரயோகத்தை அவருடைய நிலை கருதி இங்கே பிரசுரிக்கவில்லை. 🙂
தோழி காவேரி சில உடல் உறவுக் காட்சிகள் மிகவும் graphical ஆக இருப்பது கொஞ்சம் நெருடியதாகச் சொன்னார்; எனக்கு அப்படித் தெரியவில்லை. நாங்கள் சிறு வயதில் படித்த புத்தகங்கள் வேறு என்று தெளிவாகத் தெரிகிறது. 🙂
எஸ்.ரா.வின் நூறு சிறந்த நாவல்கள் லிஸ்டில் இருக்கிறது. ஆனால் ஜெயமோகனின் லிஸ்டில் இல்லை. அவரது லிஸ்ட் வெளியான பிறகு பதிப்பிக்கப்பட்ட புத்தகம் என்பதுதான் காரணமாக இருக்க வேண்டும். பேசும்போது புகழ்ந்து பேசி இருக்கிறார். ஒரு பதிவும் எழுதி இருக்கிறார்.
தமிழினி வெளியீடு. விலை 320 ரூபாய். தமிழக அரசின் சிறந்த நாவலுக்கான பரிசைப் பெற்றிருக்கிறது. 2004-இல் வெளிவந்திருக்கிறது.
சாதனை. கட்டாயமாகப் படியுங்கள் என்று சிபாரிசு செய்கிறேன்.
தொடர்புடைய சுட்டி: ஆழி சூழ் உலகு பற்றி ஜெயமோகன் பதிவு
Like this:
Like ஏற்றப்படுகின்றது...