முஹம்மது நபிக்கு பிறகு – முதல் 4 காலிஃப்கள்

மௌலானா முஹம்மது அலி எழுதிய “Early Caliphate”

மௌலானாவைப் பற்றி கேள்விப்பட்டிருக்கலாம். கிலாஃபத் இயக்கத்தின் முக்கியத் தலைவர். பின்னாளில் முஸ்லிம் லீக் பக்கம் போய்விட்டார். பெரிய ஸ்காலர் என்று கேள்வி. “Early Caliphate” அவர் எழுதிய புத்தகமா, அதுவும் கிலாஃபத் இயக்கத்தின் தலைவர் காலிஃப்களைப் பற்றி எழுதிய புத்தகமா என்றுதான் படித்தேன். எழுதி முடித்த பிறகுதான் இந்த ஆசிரியர் கிலாஃபத் புகழ் மௌலானா இல்லை, வேறு ஒருவர் என்று தெரிந்தது. புத்தகமே கிலாஃபத் மௌலானா மறைந்த பிறகுதான் – 1932-இல் – வெளி வந்திருக்கிறது. முன்னாலேயே தெரிந்திருந்தால் படித்திருக்கமாட்டேன். விக்கியில் பார்த்துக் கொள்ளலாம் என்று இருந்திருப்பேன்.

முஹம்மது நபிக்கு பிறகு முஸ்லிம்கள் தங்கள் தலைவராக ஏற்றுக் கொள்பவர்களை காலிஃப் என்று அழைப்பார்கள். சுன்னி முஸ்லிம்கள் அபூ பக்கர் (முஹம்மதின் மாமனார்), உமர், உத்மான் (முஹம்மதின் மாப்பிள்ளை), மற்றும் அலி (முஹம்மதின் இன்னொரு மாப்பிள்ளை) ஆகியோரை முதல் நான்கு காலிஃப்களாகக் கருதுகிறார்கள். ஷியாக்கள் அலி, அவரது மகன் ஹாசன் ஆகிய இவரைத்தான் உண்மையான காலிஃப்களாகக் கருதுகிறார்கள். இவர்களின் ஆட்சி ஒரு முப்பது வருஷம்தான் நடந்திருக்கும். அதற்குள் கிழக்கில் லிபியாவிலிருந்து மேற்கே ஆஃப்கானிஸ்தான் வரைக்கும் ஆட்சி பரவி இருந்தது. (உமர்தான் அதற்கு முக்கிய காரணம்) பாரசீக சாம்ராஜ்யத்தைத் தோற்கடித்துவிட்டார்கள். சாதனைதான்.

இந்தப் புத்தகம் சுன்னி பிரிவினரின் கோணத்தில் எழுதப்பட்டிருக்கிறது. மௌலானாவுக்கு வரலாற்றைப் பற்றி எழுதுவதை விட இவர்கள் நான்கு பேருமே உண்மையான காலிஃப்கள் என்று நிறுவ வேண்டி இருக்கிறது; முஸ்லிம்களுக்கு பிற நாடுகளை வெல்ல வேண்டும் என்றோ, மதமாற்றம் செய்ய வேண்டும் என்றோ எந்த நோக்கமும் இல்லை என்றும் நிறுவ வேண்டி இருக்கிறது. தலையைச் சுற்றி நிறைய முறை மூக்கைத் தொடுகிறார். என்னதான் சப்பைக்கட்டு கட்டினாலும் அவர் எழுத்திலிருந்தே அலிக்கும் அடுத்தவர்களுக்கும் இருந்த பிரச்சினைகள் (சுன்னி-ஷியா பிரிவுக்கு முக்கிய காரணம்), முஸ்லிம்களின் சாம்ராஜ்ய ஆசைகள் எல்லாம் தெளிவாக தெரியத்தான் செய்கின்றன.

முஹம்மது நபி உயிரோடு இருக்கும்போது ஒரு முறை அலிதான் அடுத்த தலைவன் என்று பொருள்படும்படி ஒரு வசனம் பேசி இருக்கிறார். ஆனால் மரணப் படுக்கையில் இருக்கும்போது அபூ பக்கரை தொழுகைக்கு தலைமை தாங்கவும் சொல்லி இருக்கிறார். முஹம்மது தனக்கு அடுத்தபடி யார் என்பதை நிர்ணயிக்க உயில் எழுத முயற்சித்ததும் அதை உமர் (அபூ பக்கரின் முக்கிய ஆதரவாளர்) தடுத்ததும் தெளிவாகத் தெரிகிறது. வேறு ஒருவர் காலிஃபாக ஆக முயற்சித்தபோது உமர் அபூ பக்கரை முன்னே தள்ளி காலிஃபாக ஆக்கியதும் தெரிகிறது. காலிஃப் ஆன பிறகு அபூ பக்கர் முஹம்மதின் சொத்தை அலியின் மனைவி ஃபாத்திமாவுக்கு (முஹம்மதின் மகள்) போகவிடாமல் தடுத்திருக்கிறார். அவரை சபித்த ஃபாத்திமா ஆறு மாதத்தில் இறந்து போயிருக்கிறார். ஃபாத்திமாவின் இறப்புக்கு பின்னால்தான் அலி வேறு வழியில்லாமல் அபூ பக்கரை காலிஃபாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்.
அபூ பக்கர் இரண்டு வருஷம்தான் ஆட்சி செய்தார். முஹம்மது நபி இறந்த பிறகு ஏற்பட்ட கலகங்களை உறுதியாக நின்று அடக்கி இருக்கிறார். மேற்குப் பக்கம் இருந்த ரோம சாம்ராஜ்யம், கிழக்குப் பக்கம் இருந்த பாரசீக சாம்ராஜ்யம் இரண்டுக்கும் எதிராக போராடி இருக்கிறார்.

அபூபக்கருக்குப் பிறகு உமர் காலிஃபாக ஆகி இருக்கிறார். அவர்தான் அபூபக்கரின் பலம். யாராலும் தடுக்க முடியவில்லை. அவர் இறக்கும்போது ஆறு பேர் கொண்ட ஒரு குழுவை நியமித்து உங்களில் ஒருவரை காலிஃபாக தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு செத்திருக்கிறார். அந்த அறுவரில் அலி இருந்தாலும் அது ஒரு rigged election ஆகத்தான் தெரிகிறது. அலியை உத்மான் பின் தள்ளி காலிஃபாக ஆகி இருக்கிறார்.
உமர் காலத்தில்தான் சாம்ராஜ்யம் பெரிதானது. சிறந்த ஆட்சியாளர் என்று கருதபப்டுகிறார்.

உத்மானை எதிர்த்து புரட்சி வெடித்திருக்கிறது. அவரது தலைநகரமான மெதினாவுக்கே வந்து அவரை வீட்டுச் சிறையில் வைத்திருக்கிறார்கள். கொஞ்ச நாள் கழித்து அவரைக் கொன்றுவிட்டு அலியை அடுத்த காலிஃபாக அறிவித்திருக்கிறார்கள். அலி இதை எல்லாம் எதிர்க்கவில்லை. அடுத்த காலிஃபாக முடிசூட்டிக் கொள்கிறார். கொன்றவர்கள் அவரது படையில் சேருகிறார்கள். அவர்களை தண்டிக்கத் துடிப்பவர்களிடம் இது தண்டிக்கும் சமயம் இல்லை என்கிறாராம். தண்டிக்க வருபவர்களோடு போரிடுகிறார். கடைசி வரை யாரையும் உத்மானைக் கொன்றதற்காக தண்டிக்கவே இல்லை.
உத்மான் சாம்ராஜ்யத்தை இன்னும் பெரிதாக்கி இருக்கிறார். குரானை இன்று நாம் அறியும் வகையில் தொகுத்தவரும் இவர்தான்.
அலி காலத்தில் உள்நாட்டு சண்டைகள் பெரிதாக வெடித்தன. ஆச்சரியமான விஷயம் அவரை சுன்னி, ஷியா இரு பிரிவினரும் பெரிதாக மதிப்பதுதான்.

சுன்னி முஸ்லிம்களின் கருத்தில் இவர்கள் நால்வரின் ஆட்சி ரஷீதுன் காலிஃபேட் என்று அழைக்கப்படுகிறது. அதாவது நல்ல, சிறந்த ஆட்சி. உள்குத்து எல்லாம் இல்லவே இல்லை என்று நம்புகிறார்கள் போலிருக்கிறது.

இவர்கள் எல்லாருமே, குறிப்பாக உமர், சாம்ராஜ்யத்தை விஸ்தரித்திருக்கிறார்கள். அதற்கு மௌலானா என்னவெல்லாமோ சப்பைக்கட்டு கட்டுகிறார். அவர்களுக்கு மதமாற்ற ஆசையே கிடையாது, எல்லாரும் தானாகவே மாறியவர்கள் என்கிறார்.

மௌலானா இதை வரலாற்று ஆய்வாளராக எழுதவில்லை. சுன்னி முஸ்லிமாக எழுதி இருக்கிறார். ஆனால் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு அன்றைய நிலை புரிகிறது. If you read between the lines, நன்றாகவே புரிகிறது.