கரிச்சான் குஞ்சுவின் “பசித்த மானிடம்”

ரொம்ப நாளாகத் தேடிக் கொண்டிருந்த புத்தகம். நண்பர் அன்பரசனிடம் இரவல் வாங்கினேன். திருப்பிக் கொடுப்பதற்குள் அவர் டெக்சாசுக்கு குடிபெயர்ந்துவிட்டார். புத்தகம் என்னிடமே தங்கிவிட்டது. (ஹை ஜாலி!)

என்னதான் இலக்கியம் கிலக்கியம் என்றாலும் இந்தப் புத்தகம் நிறைய பேர் நினைவில் தங்குவதற்கு அதன் ஷாக் வால்யூதான் காரணமாக இருந்திருக்கும். ஓரினச் சேர்க்கையைப் பற்றி இன்னும் கூட இந்த அளவுக்கு வெளிப்படையாக யாரும் தமிழில் எழுதவில்லை என்று நினைக்கிறேன். ஒரு கதாநாயகனை அதற்காகவே சிறு வயதிலேயே ஒரு பணக்காரர் தேடிப் பிடித்து “சின்ன வீடாக” வைத்துக் கொள்கிறார். அவன் அங்கிருந்து ஆண் பெண் பலர் கை மாறுகிறான். இவற்றை எல்லாம் matter of fact ஸ்டைலில் எழுதி இருக்கிறார். இது கல்கி விகடன் படித்து வளர்ந்தவர்களுக்கு பெரிய ஷாக்காகத்தான் இருந்திருக்கும். ஹரல்ட் ராபின்ஸ் படித்து வளர்ந்த எனக்கே தஞ்சாவூர் பக்கத்தில் 1920-40-களில் இப்படி எல்லாம் நடந்திருக்குமா, அப்படியே நடந்தாலும் இதெல்லாம் சர்வசாதாரணமான நிகழ்ச்சியாக இருந்திருக்குமா என்று தோன்றுகிறது.

பாலியல் உறவுகள் பற்றிய சமூகத்தில் எழுதப்படாத விதிகள் வெறும் வேஷமாக இருப்பது பெரிய விஷயம் இல்லைதான். ஆனால் கணேசன் பள்ளிப் பருவத்திலேயே ராவுத்தருக்கு வைப்பாட்டியாகப் போவது, ராவுத்தர் உறவு அலுக்கும்போது வேறு ஒருவனிடம் போவது, அவன் எப்படா தொடுவான், எப்ப படுக்கலாம் என்று காய்ந்து போய் கிடக்கும் பெண், அவனை gigolo-வாக மட்டுமே நடத்தும் இன்னொரு டாக்டர் பெண்மணி என்பதெல்லாம் எனக்கு ஆச்சரியமான சித்தரிப்பாக இருந்தது. தஞ்சாவூர் பிராமணப் பையனுக்கு இப்படி நடந்ததா என்பதை விட, எந்த விதமான courting-உம் இல்லாமல் நேராக படுக்கைக்கு அழைக்கும் ஆண் பெண் சித்திரங்கள் எல்லாம் வாசகனின் பிம்பங்களை அலட்சியமாக (casually) உடைக்கும் ஒரு கை தேர்ந்த எழுத்தாளரைக் காட்டுகின்றன. ஒரு விதத்தில் எனக்கு ஜி. நாகராஜனை நினைவுபடுத்தினார். ஆனால் நாகராஜனின் உலகம் விபசாரிகளும் மாமாக்களும் ரவுடிகளும் நிறைந்த உலகம். விபசாரி நேராக படுக்கைக்குப் போவதை விட தஞ்சாவூர் பிராமணப் பின்புலத்தில் இது நடப்பது பிம்பங்களை இன்னும் சுக்கல் சுக்கலாக உடைக்கிறது.

இன்னொரு விதத்தில் பொய்த்தேவு புத்தகத்தையும் நினைவுபடுத்தியது. சோமுவுக்கு முடியாத தேடல் என்று க.நா.சு. சொன்னால் இவர் தீராத பசி என்கிறார்.

உண்மையைச் சொல்லப் போனால் இந்தப் புத்தகம் என்னை ரொம்பக் குழப்புகிறது. ஒரு புத்தகம் படித்தால் – முக்கால்வாசி நேரம் ஒரு ஐம்பது நூறு பக்கம் படித்த உடனே – புத்தகம் எனக்குப் பிடிக்குமா பிடிக்காதா என்று தெரிந்துவிடும். படித்து இரண்டு மாதம் ஆயிற்று, சில பல முறை யோசித்தும் ஆயிற்று, இன்னும் புத்தகம் பிடிக்கிறதா இல்லையா என்று சொல்லத் தெரியவில்லை. சர்வ அலட்சியமாக பிம்பங்களை உடைப்பது பிடித்திருக்கிறது. அந்தக் கால தஞ்சாவூர் பின்புலம் நன்றாக வந்திருக்கிறது. இரண்டு நாயகர்களின் பாத்திரப் படைப்பு, அவர்களின் பசிகள், அவர்களின் குடும்பங்கள் எல்லாம் நன்றாகச் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் இரண்டு திரிகளுக்கும் உள்ள தொடர்பு ரொம்ப மெலிதாக இருக்கிறது. கதைக்கு என்ன பாயின்ட் என்று புரியவே இல்லை. மனிதனுக்கு பசி – காமம், பணம், அதிகாரம் ஏன் பந்தம் கூட அடங்கவே அடங்காது என்கிறாரா? அதற்கு இத்தனை பெரிய கதையா? அதுதான் பாயின்ட் என்றால் மலையைக் கெல்லி எலியைப் பிடிப்பது போலிருக்கிறது.

கதைச் சுருக்கம் எல்லாம் நான் எழுதப் போவதில்லை. கட்டாயமாக வேண்டும் என்றால் வெங்கட் சாமிநாதனின் வார்த்தைகளில்:

நாவலின் பிரதான பாத்திரங்கள் இருவரில், ஒருவன் அனாதை, கிராமத்து ஆசிரியர் ஒருவரால் வளர்க்கப்படுபவன். இன்னொருவன் ஒரு ஏழை குடும்பத்தவன். கண்டிப்பின்றி தத்தாரியாக வளர்பவன். அனாதைப் பையன் மிகவும் புத்திசாலி, கிராமத்தில் உள்ள எல்லோருக்கும் பிரியமானவன். ஆனால் வாழ்க்கையில் இலக்கின்றி அலைந்து கொண்டிருப்பவன். ஒரு கட்டத்தில் அவன் வளர்ச்சியில் சில பணக்காரர்களின் வேண்டாத நட்புறவில் சிக்கிக் கொள்கிறான். விரும்பித்தான் அவர்களின் பாலியல் இச்சைக்கு இரையாகிறான். அத்தோடு பல பெண்களுக்கும் அவனிடம் மோகம் மிகுந்து அவனைச் சக்கையாக்கித்தான் விடுகிறார்கள். கடைசியில் வாழ்க்கையே பாழாகிவிடுகிறது. குஷ்டநோய் பீடித்து. ஏதும் சம்பாதிக்கும் வழியற்று வறுமையில் வீழ்ந்தவன் பிச்சையெடுக்கும் நிலைக்கு ஆளாகிறான். தன் வாழ்க்கையில் இவ்வளவு சோதனைகளுக்கு ஆளானவன், எதிர்கொண்ட இன்னல்களே அவனைப் புடம் போட்டது போல, இப்போது அவன் எல்லோருக்கும் உதவுகிறவனாக, மரியாதைக்குரியவனாக ஆக்கிவிடுகின்றன.

தத்தாரியாக வளர்ந்தவனோ கிராமத்தில் எல்லோருடைய வெறுப்பையும் சம்பாதித்துக்கொண்டு விட்ட காரணத்தால், முதலில் கிராமத்தை விட்டே வெளியேறி நல்லபடியாக வாழ்ந்து தன்னை வெறுத்தவர்களின் பாராட்டைப் பெற வேண்டும் என்று நினைக்கிறான். வெகு ஜாக்கிரதையாக தன் ஒவ்வொரு அடிவைப்பையும் திட்டமிட்டுச் செய்யவே அவனுக்கு விதியும் உதவுகிறது. ஒரு கட்டத்தில் மிகப் பெரிய செல்வந்தனாகிறான். வரும் சந்தர்ப்பங்களை பயன்படுத்திக்கொள்ளவும், தன்னை நாடி வந்தவர்களைக் கவர்ந்து தன் விருப்பத்திற்கு அவர்களை வளைத்துப் போடவும் தெரிகிறது. வியாபாரத்தில் குவித்த செல்வம் வாழ்க்கையில் அவன் ஆசைப்பட்டதையெல்லாம், அதிகாரம், பெண்கள், அந்தஸ்து என எல்லாம் பெற்றுத்தருகிறது. அவனை உதவாக்கரை என்று வெறுத்து ஒதுக்கியவர்கள் எல்லாம் இப்போது அவனிடம் பயத்துடன் நடந்து கொள்கிறார்கள். இருப்பினும், தான் வாழ்க்கையை வெற்றி கொண்டு அதன் சிகரத்தில் அமர்ந்துள்ளதாக எண்ணும் அதேசமயம் தான் வாழ்க்கையில் தோற்றுவிட்டதாக ஒரு எண்ணம் அவன் மனத்தைக் குடைகிறது. கடைசியில் தன் கிராமத்துக்கு ஒரு மகான் வந்து எழுந்தருளியுள்ளதாக, மக்கள் அவரைத் தரிசித்து ஆசிகள் பெறுவதாகக் கேட்டதும் தானும் அம்மகானைச் சரணடைவது என்று நிச்சயித்து அந்த மகானிடம் செல்கிறான். அந்த மகான் தன் சிறு பிராயத்தில் தன் கிராமத்திலேயே வளர்ந்த தன்னில் பொறாமையை வளர்த்த அந்த அனாதைப் பையனே தான்.

இவ்வளவும் அந்த நாவலைப் பற்றிச் சொன்னபிறகு, இது அதிகமும் கற்பனையான சம்பவங்களை இஷ்டத்துக்கு உருவாக்கிக் கோர்த்த, மிகை உணர்ச்சியாகக் கொட்டி நிரப்பிய தமிழ் சினிமாக்கதை போன்றிருப்பதாக எண்ணத் தோன்றும். ஆனால் உண்மை அதுவல்ல. நாவலின் ‘உண்மையும்” அது விரிக்கும் வாழ்க்கையும் முற்றிலும் வேறு குணத்தவை. இந்த நாவலில் வரும் பாத்திரங்கள் எல்லாம், காவேரி நதி தீரத்தின் கிராமங்களில் காணும் மனிதர்கள் தான். வாழ்க்கைதான். அந்த கலாச்சாரம் தந்தது தான். நாவல் விரிக்கும் காலம் 1920-களிலிருந்து 1950-கள் வரைய கால கட்டத்தைச் சேர்ந்தது. கரிச்சான் குஞ்சு தன் நாவலை இரண்டு பிரதான பாத்திரங்களை மாத்திரமே எடுத்துக்கொண்டு அவர்கள் இருவரை மாத்திரமே மையமாகக் கொண்டு எழுதியிருப்பதான தோற்றம் தந்தாலும், அவர் எடுத்துக் கொண்டிருக்கும் நாற்பது வருட கால கட்டத்தின் பண்பாட்டையே, வாழ்க்கையின் கதியையே நம் முன் வைத்துள்ளதான ஒரு உணர்வை நமக்குத் தந்துவிடுகிறார்.

சிறு வயதில் கிராமத்தில் தத்தாரியாக இருந்த பையன் பின் தன் வழி கண்டு பல லக்ஷங்கள் கோடிகள் புரளும் வியாபார வெற்றி அடைவதும் மனிதர்களை தன் இஷ்டத்திற்கு வளைத்து ஆள்வது என்பதெல்லாம் நம்பத்தகுந்த விஷயங்கள் தான். நம் முன்னேயே நாம் வாழும் காலத்திலேயே இப்படிப் பல மாதிரிகள் தமிழ் வாழ்க்கையிலேயே உலவக் காண்கிறோம். அதே சமயம் கிராமத்து நல்ல பையன் பெற்ற வளர்ச்சியைப் பற்றி அப்படிச் சொல்ல முடியாது. அவன் வாழ்க்கையில் எல்லா பாலியல் உறவுகளையும் அனுபவித்துக் கடந்து குஷ்டரோகியாகி, பின்னர் மனம் திருந்தி ஞானியாகிறான் அவன். அவன் வாழ்க்கை யில் கண்ட மேடு பள்ளங்களோ, அவன் மனம் பெற்ற கோணல்கள் நிறைந்த வளர்ச்சியோ, பின்னர் அவன் சமூகத்தின் வழிபடற்குரிய ஞானியாக மாறுவதோ, இந்த வாழ்க்கையின் அடியோட்டமாக, சொல்லாது குறிப்பிடப்படும் தத்துவ நோக்கோ, எல்லாம் அசாதாரணமான ஒரு சங்கிலித் தொடரில் தோன்றினாலும், இவை வலிந்து புகுத்தப்பட்ட கற்பனையல்ல. இவையெல்லாம் தமிழ் கலாச்சார சரித்திரத்தில், அதன் இலக்கிய, தத்துவார்த்த மரபில் வேர்கொண்டவை தான்.

17- 18- 19-ம் நூற்றாண்டுகளில் தலை சிறந்த கவிஞர்களாகவும் இசைவல்லுனர்களாகவும், பாடகர்களாகவும் இருந்த ஞானிகள் பலரை தமிழ் நாடு கண்டுள்ளது. பட்டினத்தார், அருணகிரிநாதர், சதாசிவ பிரம்மேந்திரர் போன்றோர் வாழ்க்கை இம்மாதிரியான வளர்ச்சிப் போக்கையும் சம்பவங்களையும் கண்டது தான். இம்மகான்களின் போலி மாதிரிகள் உண்டு தான். இம்மகான்களின் வாழ்க்கையை போலி செய்யும் திருகல்களையும் நாம் காண்போம் தான். அவைதான் இன்றைய தமிழ் வாழ்க்கையை நிரப்புகின்றன. இத்திருகல்களே கூட அவற்றின் உயரிய மரபின் சத்தியத்தை வலுயுறுத்துவனதான்.

ஜெயமோகன் இதை தமிழ் நாவல்கள் இரண்டாம் பட்டியலில் – பல்வேறு வகையில் முக்கியத்துவம் உடைய ஆனால் முழுமையான கலைவெற்றி கைகூடாத படைப்புகள் – சேர்க்கிறார். எஸ்.ரா. இதை நூறு சிறந்த தமிழ் நாவல்களில் ஒன்றாகக் கருதுகிறார். உடுமலை தளத்தில் கிடைக்கிறது. விலை 200 ரூபாய்.

பாலகுமாரன் எழுதிய இரும்பு குதிரைகள் புத்தகத்தில் அவரை சித்தரித்திருக்கிறார் – மன்னார்குடி ஸ்கூல் வாத்தியார், ரிடையர் ஆன பிறகு லாரி கணக்கு எழுத சென்னைக்கு தன் மகளுடன் வருவார். நான்கு நாள் முன்னால் இங்கே வந்திருந்த என் அத்தை பெண் ஜம்பா – மன்னார்குடியில் பிறந்து வளர்ந்தவள், அவள் அப்பாவும் பள்ளி ஆசிரியர்தான், என்னை பள்ளியில் சேர்த்தவர் அவர்தான் – கரிச்சான் குஞ்சுவை அவளுக்கு அவள் அப்பாவுக்கும் நன்றாகத் தெரியும் என்று சொல்லிக் கொண்டிருந்தாள். 🙂

இதைத் தவிர கரிச்சான் குஞ்சுவின் தெளிவு என்ற ஒரு சிறுகதை தொகுப்பு படித்திருக்கிறேன், அது என்னை அவ்வளவு impress செய்யவில்லை.

எனக்கு இந்த நாவல் புரிந்துவிட்டதா என்று எனக்கே சந்தேகம்தான். ஆனாலும் படியுங்கள் என்று சிபாரிசு செய்கிறேன். நிச்சயமாக என்னவோ இருக்கிறது. படித்துவிட்டு முடிந்தால் கோனார் நோட்சும் போடுங்கள். (ஜெயமோகன் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்)

தொடர்புடைய சுட்டிகள்:

 • கரிச்சான் குஞ்சு மற்றும் பசித்த மானுடம் நாவல் பற்றி வெங்கட் சாமிநாதன்
 • கூட்டாஞ்சோறு தளத்தில் அவரைப் பற்றிய சுட்டிகளின் தொகுப்பு
 • கரிச்சான் குஞ்சு பற்றி ஜீவி
 • கரிச்சான் குஞ்சுவின் சித்தி மகன் ஸ்ரீனிவாசன் அவரைப் பற்றி
 • 14 thoughts on “கரிச்சான் குஞ்சுவின் “பசித்த மானிடம்”

  1. போகியொருவன் ரோகியாயி யோகியான கதை என்றுகூட சொல்லலாம். பசித்த மானுடம் வாசித்த போது சற்று அதிர்ச்சியாக இருந்தது. அந்த காலத்திலேயே இதை எழுத சற்று தைரியம் வேண்டும். மிக அற்புதமான நாவல். தஞ்சாவூர்,கும்பகோணம் என காவிரிகரையோரம் போய் வர வேண்டும் என்ற ஆவலை வாசித்த போது தூண்டிய நாவல். நல்ல பதிவு. நன்றி.

   Like

  2. சித்திரவீதிக்காரன், என்னை விட நீங்கள் புரிந்துகொண்டிருக்கிறீர்கள் என்று தெரிகிறது. என்ன பாயின்ட் என்று விளக்குங்களேன்!

   Like

  3. காமம், பணம், இடம், நகை, பதவி, அதிகாரம்,அமைதி, ஞானம் என இக்கதையிலுள்ள ஒவ்வொருவரும் ஒன்றின் மேல், அல்லது பலவற்றின் மேல் தீராத பசியோடு அலைவதாகவே எனக்கு தோன்றுகிறது. அதனால், ”பசித்த மானுடம்” என்ற தலைப்பு இக்கதைக்கு நன்றாகவே பொருந்தி வருகிறது. நாமும் வாசிப்பின் மேல் தீராத பசி கொண்டவர்கள் தானே? எனவே, நாமும் ஒரு வகையில் பசித்தமானுடம் தான். நன்றி.

   Like

  4. ஆர். வி – ரொம்ப நாளாக படிக்க வேண்டும் என்று நினைத்து இப்பொழுது தான் முடிந்தது. இது எனக்கும் பொய்த்தேவை நாவலை ஞாபகப்படுத்தியது. வெ.சா வின் விமரிசனம் நாவலை மிக துல்லியமாக விவரிக்கிறது என நினைக்கிறேன். எழுதிய காலகட்டத்திற்கு மட்டும் அல்ல இப்பொழுது படித்தாலும் அது விவரிக்கும் வாழ்க்கை சித்திரம் மிக அதிர்ச்சியை அளிப்பது. ஆனால் matter of fact ஆக அதை சொல்லி விட்டு போகிறாறே தவிர ஷாக் வால்யூவிற்காக விவரணைகளை கூட்டுவதில்லை. Titilate பண்ணாமல் இவ்விஷயத்தை சொல்வது மிக கஷ்டம் என நினைக்கிறேன். கணேசனின் சித்திரத்தை விட கிட்டாவின் சித்திரம், மன நெருக்கடி இன்னும் நன்றாக வந்திருக்கிறது என நான் நினைத்தேன்.

   குறை என்று சொன்னால் கதாபாத்திரங்கள் ஒரு பக்கத்திற்கு மறு பக்கம் தடாலடியாக தமிழ் சினிமா மாதிரி மாறுகிறது. சின்னவன் ஒரு அரை மணி நேர இடைவெளியில் மாறுவது எல்லாம் ஏன் என்று விரிவாக சொல்லப்பட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். சில இடங்களில் அதி விவரணைகளும் சில இடங்களிலில் குறை விவரணைகளும் உறுத்துகிறது.

   Like

   1. அருணா, மானிடமா, மானுடமா என்று குழப்பி விட்டுவிட்டீர்களே! புத்தகம் வேறு எங்கே போச்சு என்று தெரியவில்லை. குறைகள் இருந்தாலும் மிக நல்ல புத்தகம்.

    Like

  5. ஆர். வி – கதையின் தலைப்பு பசித்த மானிடம். நீங்கள் மானுடம் என்று பதித்திருப்பதால் தேடும்போது வருவதில்லை.

   Like

  6. ஆர். வி – “குறைகள் இருந்தாலும் மிக நல்ல புத்தகம்”ம்- ஆம், அதில் மாற்றுக் கருத்து இல்லை. தலைப்பு மானிடம் தான். கையிலுள்ள புத்தகத்தை பார்த்து தான் சொல்கிறேன்.

   Like

  மறுமொழியொன்றை இடுங்கள்

  Fill in your details below or click an icon to log in:

  WordPress.com Logo

  You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

  Google photo

  You are commenting using your Google account. Log Out /  மாற்று )

  Twitter picture

  You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

  Facebook photo

  You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

  Connecting to %s

  This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.