மாற்றங்கள் வரும், இனி நல்ல புத்தகங்கள் என்று நான் கருதுபவை பற்றியே focus செய்யப் போகிறேன் என்று சொன்ன பிறகும் இதைப் பற்றி எழுத வேண்டுமா என்று ஒரு முறைக்கு இரு முறை யோசித்தேன். ஜெயமோகனின் நாவல் சிபாரிசுகள் அத்தனையும் பற்றி எழுத வேண்டும் என்ற ஆசை; சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழ் புத்தகங்கள் அத்தனையும் பற்றி எழுத வேண்டும் என்ற ஆசை இரண்டும் எழுத வைக்கின்றன.
வேங்கையின் மைந்தன் பேப்பருக்குப் பிடித்த கேடு. உலக மகா போர். இதற்கெல்லாம் சாகித்ய அகாடமி விருது கொடுக்கப்பட்டிருப்பது மானம் போகும் விஷயம். நாவலில் சரித்திரமும் இல்லை, நாவலும் இல்லை. நல்ல பாத்திரப் படைப்பு, ஒரு காலகட்டத்தைச் சித்தரிப்பது, தகவல்கள், நுண்விவரங்கள் ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை. கல்கி எழுதிய கொஞ்சம் குழந்தைத்தனமான பார்த்திபன் கனவு இதை விட பல மடங்கு பெட்டர். எப்படி அகிலன் ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் பெருவெற்றி பெற்றார் என்பது எனக்கு மர்மமாகவே இருக்கிறது. அதே காலத்தில் வெற்றி பெற்ற, இன்றைக்கு மறக்கப்பட்டுக் கொண்டிருக்கும் மு.வ., நா.பா., தேவன் மாதிரி “வணிக எழுத்தாளர்களில்” ஏதோ கொஞ்சமாவது இருக்கிறது. இவரது வெற்றி புரியவே இல்லை. இதில் ஞானபீடம், சாகித்ய அகாடமி என்று விருது வாங்கிக் குவித்திருக்கிறார். எப்படி? அந்தக் காலத்தின் இலக்கியத்தின் வால்யூ சிஸ்டம் என்ன என்று ஜீவி, ஜெயமோகன் மாதிரி யாராவது கொஞ்சம் விளக்குங்கள்!
வேங்கையின் மைந்தனில் உள்ள சரித்திரம் ராஜேந்திரச் சோழர் காலத்தில் இலங்கையை வென்று பாண்டியர்களின் கிரீடம், ஆரம் ஆகியவற்றைக் கைப்பற்றியது, கங்கை கொண்டது அவ்வளவுதான். இதில் கொடும்பாளூர் இளவரசன் இளங்கோ, அவனோடு love-hate உறவுள்ள இலங்கை இளவரசி ரோஹிணி, அவனைக் காதலிக்கும் ராஜேந்திரரின் மகள் அருண்மொழி என்று சில பல கற்பனைப் பாத்திரங்களைப் படைத்து உலாவ விட்டிருக்கிறார்.
புத்தகத்தைப் படிப்பது ரொம்ப கஷ்டமாக இருந்தது. தம் கட்டித்தான் படித்தேன். இளங்கோ-ரோஹிணி சந்திக்கும்போதெல்லாம் அய்யய்யோ என்றுதான் மனம் போனது. எண்ணூறு பக்க நாவலில் இவர்கள் இருவரும் ஒரு இருநூறு முன்னூறு பக்கத்துக்கு சண்டை போட்டுக் கொள்கிறார்கள். கொடுமையாக இருந்தது. நான் சிறுவனாக இருந்து பகல் கனவு கண்டபோது கூட இளங்கோவை விட வீர சாகசங்கள் புரிந்திருக்கிறேன். உண்மையில் கல்கி, சாண்டில்யனின் சரித்திர நாவல்கள் என் இன்னும் பாப்புலராக இருக்கின்றன என்று புரிந்து கொள்ளத்தான் இந்தப் புத்தகம் உதவியது.
ஜெயமோகன் இதில் என்னத்தைக் கண்டார் என்று எனக்கு கொஞ்சம் கூடப் புரியவில்லை. சித்திரப்பாவையிலாவது அகிலன் முயற்சி செய்திருப்பது தெரிகிறது. இது மெகாசீரியலுக்குக் கூட லாயக்கில்லை. நாவல் சிபாரிசுகளில் இன்னும் நாலு அகிலன் புத்தகங்களை ஜெயமோகன் குறிப்பிட்டிருக்கிறாரே (கயல்விழி, வெற்றித்திருநகர், பெண், பாவை விளக்கு) என்று பயமாக இருக்கிறது.
உடுமலை தளத்தில் கிடைக்கிறது. விலை 350 ரூபாய். நூலகம் தளத்தில் மின்னூலும் இலவசமாகக் கிடைக்கிறது.
தொடர்புடைய சுட்டிகள்: அகிலனின் “சித்திரப்பாவை“