அகிலனின் “வேங்கையின் மைந்தன்”

மாற்றங்கள் வரும், இனி நல்ல புத்தகங்கள் என்று நான் கருதுபவை பற்றியே focus செய்யப் போகிறேன் என்று சொன்ன பிறகும் இதைப் பற்றி எழுத வேண்டுமா என்று ஒரு முறைக்கு இரு முறை யோசித்தேன். ஜெயமோகனின் நாவல் சிபாரிசுகள் அத்தனையும் பற்றி எழுத வேண்டும் என்ற ஆசை; சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழ் புத்தகங்கள் அத்தனையும் பற்றி எழுத வேண்டும் என்ற ஆசை இரண்டும் எழுத வைக்கின்றன.

வேங்கையின் மைந்தன் பேப்பருக்குப் பிடித்த கேடு. உலக மகா போர். இதற்கெல்லாம் சாகித்ய அகாடமி விருது கொடுக்கப்பட்டிருப்பது மானம் போகும் விஷயம். நாவலில் சரித்திரமும் இல்லை, நாவலும் இல்லை. நல்ல பாத்திரப் படைப்பு, ஒரு காலகட்டத்தைச் சித்தரிப்பது, தகவல்கள், நுண்விவரங்கள் ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை. கல்கி எழுதிய கொஞ்சம் குழந்தைத்தனமான பார்த்திபன் கனவு இதை விட பல மடங்கு பெட்டர். எப்படி அகிலன் ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் பெருவெற்றி பெற்றார் என்பது எனக்கு மர்மமாகவே இருக்கிறது. அதே காலத்தில் வெற்றி பெற்ற, இன்றைக்கு மறக்கப்பட்டுக் கொண்டிருக்கும் மு.வ., நா.பா., தேவன் மாதிரி “வணிக எழுத்தாளர்களில்” ஏதோ கொஞ்சமாவது இருக்கிறது. இவரது வெற்றி புரியவே இல்லை. இதில் ஞானபீடம், சாகித்ய அகாடமி என்று விருது வாங்கிக் குவித்திருக்கிறார். எப்படி? அந்தக் காலத்தின் இலக்கியத்தின் வால்யூ சிஸ்டம் என்ன என்று ஜீவி, ஜெயமோகன் மாதிரி யாராவது கொஞ்சம் விளக்குங்கள்!

வேங்கையின் மைந்தனில் உள்ள சரித்திரம் ராஜேந்திரச் சோழர் காலத்தில் இலங்கையை வென்று பாண்டியர்களின் கிரீடம், ஆரம் ஆகியவற்றைக் கைப்பற்றியது, கங்கை கொண்டது அவ்வளவுதான். இதில் கொடும்பாளூர் இளவரசன் இளங்கோ, அவனோடு love-hate உறவுள்ள இலங்கை இளவரசி ரோஹிணி, அவனைக் காதலிக்கும் ராஜேந்திரரின் மகள் அருண்மொழி என்று சில பல கற்பனைப் பாத்திரங்களைப் படைத்து உலாவ விட்டிருக்கிறார்.

புத்தகத்தைப் படிப்பது ரொம்ப கஷ்டமாக இருந்தது. தம் கட்டித்தான் படித்தேன். இளங்கோ-ரோஹிணி சந்திக்கும்போதெல்லாம் அய்யய்யோ என்றுதான் மனம் போனது. எண்ணூறு பக்க நாவலில் இவர்கள் இருவரும் ஒரு இருநூறு முன்னூறு பக்கத்துக்கு சண்டை போட்டுக் கொள்கிறார்கள். கொடுமையாக இருந்தது. நான் சிறுவனாக இருந்து பகல் கனவு கண்டபோது கூட இளங்கோவை விட வீர சாகசங்கள் புரிந்திருக்கிறேன். உண்மையில் கல்கி, சாண்டில்யனின் சரித்திர நாவல்கள் என் இன்னும் பாப்புலராக இருக்கின்றன என்று புரிந்து கொள்ளத்தான் இந்தப் புத்தகம் உதவியது.

ஜெயமோகன் இதில் என்னத்தைக் கண்டார் என்று எனக்கு கொஞ்சம் கூடப் புரியவில்லை. சித்திரப்பாவையிலாவது அகிலன் முயற்சி செய்திருப்பது தெரிகிறது. இது மெகாசீரியலுக்குக் கூட லாயக்கில்லை. நாவல் சிபாரிசுகளில் இன்னும் நாலு அகிலன் புத்தகங்களை ஜெயமோகன் குறிப்பிட்டிருக்கிறாரே (கயல்விழி, வெற்றித்திருநகர், பெண், பாவை விளக்கு) என்று பயமாக இருக்கிறது.

உடுமலை தளத்தில் கிடைக்கிறது. விலை 350 ரூபாய். நூலகம் தளத்தில் மின்னூலும் இலவசமாகக் கிடைக்கிறது.

தொடர்புடைய சுட்டிகள்: அகிலனின் “சித்திரப்பாவை

16 thoughts on “அகிலனின் “வேங்கையின் மைந்தன்”

 1. எனக்கு இவை எல்லாம் இலக்கியமா என்று சொல்லத் தெரியாது. ஆனால் சாண்டில்யனிடம் இல்லாத ஆனால் எனக்குப் பிடித்த புத்தகங்களான,
  1) வேங்கையின் மைந்தன்
  2) வீரபாண்டியன் மனைவி
  ௩) மணிபல்லவம்
  ௪) பாமினிப் பாவை
  இந்த நான்கிலுமே உள்ள ஒரே பொது அம்சம் உருகி உருகிக் காதலிப்பது தான் 🙂 (சாண்டில்யனின் பாத்திரங்கள் பெரும்பாலும் காதலைக் காம நோக்கிலேயே அணுகுவர்). ஒரு காதல் காவியம் என்ற வகையில் கூடவா உங்களுக்கு இவை பிடிக்கவில்லை? நீங்கள் அந்தக் காதல் செயற்கை என்று கூறலாம். எனக்குக் காதலில் எதுவுமே சாத்தியம் என்றுதான் தோன்றுகிறது. நீங்கள் சொல்வது போல் இவற்றில் சரித்திரம் இல்லது போகலாம். காதல் நன்றாகத்தானே வந்திருக்கிறது? வீரசேகரன்-ஊர்மிளா இளங்கோ-ரோஹிணி இரண்டுக்கும் நிறைய ஒற்றுமை உண்டு. அவர்களின் காதல் உணர்வுகளும் போராட்டங்களும் நன்றாக வந்திருக்கிறது என்பதே எனது அபிப்பிராயம். நான் இவற்றை எல்லாம் படித்த பொது பக்கங்களைப் புரட்ட வைத்தது அந்தக் காதல் “மட்டும்” தான் என்று சொல்லலாம் (பாண்டிமாதேவியில் சில இடங்களில் double track/triple track வந்து கதையில் கொஞ்சம் சுவாரசியம் வரும். எனவே அதனை முழுக் காதல் கதை என்று சொல்ல முடியாது). காதல் கதைக்கு ஏன் சாகித்ய அகாடமி விருது கொடுத்தார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம் 🙂

  Like

  1. பிருந்தாபன்,

   நீங்கள் குறிப்பிட்டிருக்கும் நான்கையும் படித்திருக்கிறேன். பா. பாவை சின்ன வயதில் படித்தது, சரியாக நினைவில்லை. மற்றவற்றில் வீ. மனைவி ஒன்றுதான் ஓரளவாவது வெற்றி பெற்ற புத்தகம் என்று நினைக்கிறேன்.

   https://siliconshelf.wordpress.com/2011/08/24/அரு-ராமநாதனின்-வீரபாண்ட/
   https://siliconshelf.wordpress.com/2011/05/25/மணிபல்லவம்/

   Like

 2. நான் சரித்திர நாவல் படிப்பதில் மிகவும் ஆர்வமுடையவன்(ஆர்வத்திற்கு காரணம் கல்கியின் பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் மற்றும் பார்த்திபன் கனவு).

  நான் மேலும் பல நாவல்கள் படிக்க வேண்டும் என ஆர்வம் இருந்ததால் கடல்புறா, வீரபாண்டியன் மனைவி, நந்திப்புரத்து நாயகி (பொன்னியின் செல்வனின் தொடர்ச்சி) மற்றும் வேங்கையின் மைந்தன் ஆகிய புத்தகங்களை வாங்கினேன்.

  நான் வேங்கையின் மைந்தன் பற்றி நிறைய இணையதளங்களில் நல்ல விதமாக படித்திருந்தேன் ஆனால் உங்களுடய பதிவில் நீங்கள் அதை மிக மோசமாக விமர்சனம் செய்திருந்தீர்கள்.

  இந்த பதிவை படித்தவுடன் உங்கள் மீது எனக்கு முதலில் கோபம் வந்தது (இச்சமயம் நான் வேங்கையின் மைந்தனை படித்திருக்கவில்லை வாங்கி மட்டும் வைத்திருந்தேன் ), பிறகு வேங்கையின் மைந்தனை படிக்க ஆரம்பித்ததும் தாங்கள் கூறியது எவ்வளவு பொருத்தம் என்பதை உணர்ந்தேன். நீங்கள் கூறியது போல “வேங்கையின் மைந்தன் பேப்பருக்குப் பிடித்த கேடு”, மிக மோசமான நாவல்.

  ஏறக்குறைய நந்திபுரத்துநாயகியும் இதே மாதிரி தான், பொன்னியின் செல்வனில் எத்தனை முடிச்சுகள், திருப்பங்கள் என கதை சுவாரஸ்யமாக செல்லும் ஆனால் இக்கதை ஒரு திருப்பமும் இன்றி பக்கங்களை மட்டும் வளர்த்து கொண்டே போகிறது.

  பொன்னியின் செல்வனின் தொடர்ச்சி என்று இப்புத்தகத்தை கூறும் அளவுக்கு இதில் ஒன்றுமே இல்லை (வந்திய தேவன் கதாபாத்திரம் வீணடிக்கபட்டிருக்கிறது), இருந்தும் இது வேங்கையின் மைந்தன் அளவுக்கு மோசமில்லை என எனக்கு தோன்றுகிறது (தாங்கள் நந்திபுரத்துநாயகியை படித்திருந்தால் உங்கள் கருத்தை பதியவும்)

  வீரபாண்டியன் மனைவி , கடல் புறா ஆகியவை கொடுத்த பணத்திற்கு ஏற்ற புத்தகங்களாக இருந்தன.

  நான் பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் , பார்த்திபன் கனவு, கடல் புறா, வீரபாண்டியன் மனைவி, நந்திப்புரத்து நாயகி, வேங்கையின் மைந்தன் மற்றும் வெற்றி திருநகர் (நீங்கள் கூறியது போல் இது அகிலன் எழுதியதில் சிறந்தது) ஆகியவற்றை படித்து விட்டேன் தாங்கள் எனக்கு மேலும் சில புத்தகங்களை (historical thrillers in tamil) பரிந்துரைக்குமாறு கேட்கிறேன்.

  Like

 3. சமீபத்தில் திரு. ஜெயமோகனின் அருமையான கட்டுரை ஒன்றை ‘தி இந்து’ தமிழ் நாளேட்டில் படித்தேன்.

  “இன்று வணிக கேளிக்கை எழுத்து எழுத்து அனேகமாக அழிந்து விட்டது. சென்ற தலைமுறையில் சுஜாதா, பாலகுமாரன், இந்துமதி, வாசந்தி, சிவசங்கரி போன்ற நட்சத்திர அந்தஸ்து கொண்ட வணிக கேளிக்கை எழுத்தாளர்கள் இருந்தார்கள். அவர்கள் வாசகர்களைக் கவர்ந்து வாசிப்புக்குள் கொண்டு வந்தனர். அவர்களின் வாசகர்களில் ஒரு சாரார் பின்னர் இலக்கிய வாசகர்கள் ஆனார்கள்.

  இந்தத் தலைமுறையில் அப்படி எவருமே இல்லை. அவ்வாறு வணிக எழுத்து நிறைய வந்தால் மட்டுமே லட்சக்கணக்கானவர்கள் தமிழில் வாசிக்க ஆரம்பிப்பார்கள். இல்லையேல் அடுத்த தலைமுறையில் தமிழில் வாசிக்க யாரும் இருக்க மாட்டார்கள்.”

  — இது தான் கட்டுரையின் சாரம். திரு. ஜெயமோகனின் எழுத்துக்களையே உபயோகித்திருக்கிறேன்.

  செப்.2011க்கும் செப்.2013க்கும் ஆன இரண்டு வருட இடைப்பட்ட காலக்கட்டத்தில் சிந்தனையில் ஏற்பட்ட மாற்றம் இது. வரவேற்கத்தக்க புரிதலும் கூட.

  Like

  1. இல்லை ஜீவி, சிந்தனையில் மாற்றம் என்ற உங்கள் புரிதல் தவறானது.

   ஜெயமோகனோடு நான் முதல்முதலில் 2002-2003 வாக்கில் இணையத்தில் விவாதித்திருக்கிறேன். “வணிக” நாவல்களுக்கு ஒரு இடம் உண்டு என்று வாதித்த முதல் தீவிர விமர்சகர் அவர்தான். நானும் அவ்வாறே நினைப்பவன் அதனால் அவருடன் பேசுவது மிகவும் பிடித்திருந்தது. அவருடைய புகழ் பெற்ற பட்டியலைப் பாருங்கள் – “வணிக” நாவல்களைத் தனியாக பட்டியல் இட்டிருப்பார். இன்று வரை எனக்குத் தெரிந்து யாரும் படிக்க வேண்டிய வணிக நாவல்களுக்கான பட்டியலை இட்டதில்லை.

   ஜெயமோகன் சொல்வெதல்லாம் வணிக நாவல்கள் முக்கியமானவையே, ஆனால் அவற்றை இலக்கியம் என்று குழப்பிக் கொள்ளக் கூடாது என்பதுதான். எனக்கும் அதே கருத்துதான். ஆனால் ஒரு காலத்தில் பிரபலமான நாவல் என்பதால் மட்டும் அதை நல்ல வணிக நாவலாகக் கருதக் கூடாது என்று நான் உறுதியாக எண்ணுகிறேன். ஜெயமோகன் வணிக நாவல்களைப் பொறுத்த வரை என் அளவு கறாராக இருப்பதில்லை. மேலும் அவர் வணிக நாவல் என்று கருதும் சிலவற்றை நான் இலக்கியம் என்றே வரையறுக்கிறேன். பொ. செல்வன் மாதிரி.

   Like

 4. பாண்டிமாதேவியை எல்லாம் தப்பிதவறி கூட சிபாரிசு செய்துவிடாதீர்கள். வேங்கையின் மைந்தன் எல்லாம் அதோடு ஒப்பிட்டால் பேரிலக்கியம்.

  பொ.செ இலக்கியம் என்றுதான் என்னாலும் கூற முடியும். ஒரு பத்தாண்டுகளுக்கு முன் கேட்டிருந்தால் அலைஓசையும் சேர்ந்திருக்கும், இன்று அதை மறுபடியும் படிக்க முடியவில்லை.

  அசோகமித்திரன் தியாகபூமியை கூறுகின்றார். அதை படிக்கும் போது என் பக்கத்தில் யாரோ அமர்ந்து கொண்டு சோகமாக வயலின் வாசிக்கின்றார்கள்.

  சரித்திர கதையிகளிலே பிரமாதம் என்று பலர் பரிந்துரைக்கும் மானுடம் வெல்லும் / வானம் வசப்படும், கதை உள்ளேயே போக முடியவில்லை. வறட்சியாக உள்ளது. என்னடா துண்டு துண்டாக உள்ளதே என்று பார்த்தால், ஆனந்தரங்கம் பிள்ளையின் டைரி யை கொண்டு எழுதியது என்கின்றார்கள். பேசாமல் அதையே படித்திருக்கலாம் என்றுதான் தோன்றுகின்றது.

  ஜீரோ டிகிரியை ஆளாளுக்கு புகழ்ந்து அதை வாங்கி இன்று வரை அது என்ன வஸ்து என்றே புரியாமல் வைத்திருக்கின்றேன்.

  வணிக நாவல், இலக்கியம் என்றெல்லாம் வரையறை செய்வது மிகக்கடினம். ஆளாளுக்கு மாறுபடும். பேசாமால் அவரவர்க்கு ஒரு வரையறை வைத்து கொண்டு படிக்க வேண்டியதுதான். யாராவது மறுத்து கூறினால், முடிந்தால் விளக்குவது இல்லையா ஆமாமா சரிதான் என்று கூறிவிடுதலே நலம். பாலகுமாரனை பற்றி பேசியதால் பின்னுட்ட பெட்டியையே மூட வைத்துவிட்டர்கள் பாவம்.

  Like

 5. ரெங்கசுப்ரமணி, ஆஹா நமக்குள்ளும் ஒரு வேறுபாடு! மானுடம் வெல்லும் என் கண்ணில் ஒரு பிரமாதமான படைப்பு. வா. வசப்படும் அதற்கு ஒரு மாற்று கம்மிதான்; ஆனால் அதுவும் ஒரு பிரமாதமான படைப்புதான்.

  Like

 6. ஆர்வி சார். நானும் உங்களுடன் ஒத்துப்போகிறேன். இந்நாவலை எழுதிய பிரபஞ்சன் “தமிழில் சரித்திரக் கதை இல்லை என்ற வசை என்னால் ஒழிந்தது” என்கிறார். அது உண்மைதான் என நானும் கருதுகிறேன்.

  Like

  1. ரெங்கசுப்ரமணி மட்டும் இப்படி இதைப் பிடிக்கவில்லை என்கிறார்? நம் மூவருக்கும் ரொம்பவே ஒத்துப் போகுமே!

   Like

 7. முதலில் பிரபஞ்சனின் முன்னுரை. குறிப்பாக வசையை அவர் ஒழித்ததாக பெருமை பட்டுக் கொள்ளும் டவண்டை சத்தம், அதை படித்தவுடனே எரிச்சாலாகிவிட்டது. “இருய்யா இது எல்லாம் படிச்சிட்டு நாங்க இல்ல சொல்லனும்” என்றுதான் மைண்ட் வாய்ஸ் பேசியது. கதை துண்டு துண்டாக இருப்பது போன்ற எண்ணம். அதற்கு காரணம் அந்த டைரி. டைரி குறிப்புகளுக்காக சம்பவங்களை உண்டாக்கியிருப்பது. நாவல் என்ற இடத்திலிருந்து இறங்கி, வெறும் சரித்திர குறிப்பாகி விட்டது என்பது என் கருத்து. சரித்திரத்தை சொல்வதில் சுவாரஸ்யமில்லை என்பதாக எனக்கு படுகின்றது. பிடிக்க இன்னும் கொஞ்சம் வயதும், வாசிப்பனுபவமும் வேண்டுமோ 🙂

  Like

 8. வசையை ஒழித்ததாக பிரபஞ்சன் சொல்லிக்கொண்டது தன்னை முன்னிருத்த அல்ல, அதுவரை சரித்திர நாவல் என்ற பெயரில் எழுதி வந்த அபத்தங்களைத் தாக்கவே அவர் அவ்வாறு சொன்னதாகப் படுகிறது.

  Like

 9. http://koottanchoru.wordpress.com/2009/09/24/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D/ இதைத்தான் நான் சொல்ல வந்தது. ஆர்.வி நம் கருத்து பெரும்பாலும் ஒத்துதான் 🙂 போகின்றது. நீங்கள் இதையும் தாண்டி இதை முழுதாக படித்துவிட்டீற்கள். என்னால் படிக்கவே முடியவில்லை 😦

  Like

 10. துண்டு துண்டாக இருப்பதாகச் சொல்வது நாவலின் ஒரு குறையாக நான் கருதவில்லை. ஏதோ ஒர சரடைப் பின்பற்றி அதைத் தொடர்ந்து செல்லும் மனோபாவத்திலிருந்து நாம் இன்னும் விடுபடவில்லை. இன்று வரும் பல நாவல்கள் இத்தகைய உத்தியைத்தான் கையாலுகின்றன என்பதை நாம் நினைவு படுத்திக்கொள்வது நல்லது.

  Like

 11. ரெங்கசுப்ரமணி, கேசவமணி // வசையை ஒழித்ததாக பிரபஞ்சன் சொல்லிக்கொண்டது தன்னை முன்னிருத்த அல்ல, அதுவரை சரித்திர நாவல் என்ற பெயரில் எழுதி வந்த அபத்தங்களைத் தாக்கவே அவர் அவ்வாறு சொன்னதாகப் படுகிறது. // என்று சொல்வதை நான் முழுமையாக ஆமோதிக்கிறேன். அப்புறம் நீங்கள் சுட்டி இருக்கும் பதிவிலும் நான் நல்ல நாவல் என்றுதானே சொல்லி இருக்கிறேன்?

  Like

  1. அந்த பதிவில் நீங்கள் நல்ல நாவல் என்றுதான் கூறியுள்ளீர்கள். //நாவலின் பிரச்சினை கதை கோர்வையாக இல்லாததுதான். // // ஒரு வருஷம் பேப்பர் தலைப்பு செய்திகளை சேகரித்து அதை ஒரு கதை ஆக்குவது போலத்தான்.// இது தான் என்பிரச்சினையும். முதலில் படிக்க முடியாமல் செய்தது இதுதான்.

   முதல்பாகத்தை விட்டு இரண்டாம பாகத்தை முதலில் படித்திருக்கின்றேன். அதுதந்த குழப்பத்தில் இரண்டையும் தூக்கி மேலே வைத்துவிட்டேன். இப்பதிவிற்கு பின் மறுபடியும் அதை படித்தேன். இந்த முறை கொஞ்சம் முயற்சி செய்து படித்து முடித்தும் விட்டேன். முதல்பாகம் பரவாயில்லை. ஆனால் இரண்டாம் பாகம் முழுக்க ஒட்டவில்லை. தெரிந்த தகவல்களை எல்லாம் கொட்டி வைத்திருக்கின்றார். நடை வேறு திடீர் திடீரென்று மாறுகின்றது. நல்ல தமிழில் வருவது, ஒரு பக்கத்தில் அக்கால தமிழிலுக்கு போகின்றது. டைரி குறிப்பை அப்படியே பயன்படுத்தியிருக்கின்றார் போல.

   ஆனால் இது போன்றவை முதல் பாகத்தில் இல்லை. இரண்டையும் ஒப்பிட்டால் முதல்பாகம் சிறப்பாகவே உள்ளது. என் பிரச்சினை கோர்வையாக இல்லாதது, சாதரண மக்களை பற்றி பேசுகிறேன் பார், என்று சொல்லவே வலுவில் நுழைத்தது போல் உள்ளது. அது செயற்கையாக உள்ளது வழக்கமான கற்பனை பாணியிலில்லாமல், உண்மை தகவல்களை வைத்து புனையப்பட்டது என்பதுதான் இதன் தனித்தன்மை.

   Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.