பாரதி வைத்த மூன்று நெருப்புகள்

இன்று பாரதி நினைவு நாள். (செப்டம்பர் 11) என் அப்பா ராமசாமி எழுதிய guest post. அப்பாவின் நடைக்கும் என் நடைக்கும் உள்ள வித்தியாசம் ஆச்சரியப்படுத்துகிறது. ஓவர் டு அப்பா!

செப்டம்பர் 11-ஆம் தேதி அன்றுதான் பாரதிர பா ரதம் ஓட்டிய அமரகவி பாரதியின் நினைவு நாள். பாரதி “யார்” என்று கேட்காமல் ஆண்டுதோறும் அந்த நாளைக் கொண்டாடி வருகிறோம். அன்னார் சிலைக்கு மாலை அணிவித்தல், தேசிய கவி, கவிதை மூலம் விடுதலை வேட்கையைத் தூண்டிய புரட்சியாளர் சமுதாயச் சீர்திருத்தவாதி என்பன போன்ற புகழ் மாலைகள் சூட்டிப் பெருமை கொள்கிறோம். ஆனால் அந்தக் கவிஞன் இதயத்தில் கோபம் பல இடங்களில் கொப்பளிக்கிறது. மக்களை,சமூகத்தை பலவகையிலும் சாடுகிறான். கொழுந்து விட்டு எரியும் அந்தக் கனல் மூன்று இடங்களிலும் தீயிட்டுக் கொளுத்துகிற அளவுக்கு இருந்தது என்றால் அது மிகையாகாது.

முதலாவதாக நாம் பெண்ணியம், பெண் விடுதலை போன்ற விஷயங்களைப் பெருமையுடன் பெருமளவில் விவாதிக்கிறோம். அலசி அலசி பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றுகிறோம். ஆனால் அன்றே பாரதி “பெண்மை வாழ்கவென்று கூத்திடுவோமடா” என்றும் “பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்” என்று விடுதலைக் கும்மியிலும் பலவாறு பாடி மகிழ்கிறான். சக்தி, சக்தி எங்கும் சக்தி என உரத்துக் கூறிப் பெருமிதம் கொள்கிறான். ஆனால் பெண்களுக்கு இழுக்கு என்றால் அவன் நெஞ்சம் பொறுப்பதில்லை. “மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்” என்று வெகுண்டெழுகிறான். இதுதான் அய்யா, பாரதி பற்ற வைக்கும் முதல் நெருப்பு!

இரண்டாவதாக நாம் இலவசக் கல்வி, சமச்சீர் கல்வி,உயர் கல்வி, தொழிற் கல்வி என்றெல்லாம் அதிக அளவில் தர்க்கம் செய்கிறோம். மேடைகளில் முழங்குகிறோம். ஆனால் அடிப்படைக் கல்வியை, வாழ்க்கைக் கல்வியைப் பெருமளவில் மறந்துவிட்டோமே? கல்விக்கு வேண்டிய அடிப்படை வசதிகளைக் கூட செய்து கொடுக்கத் தவறிவிட்டோமே? இளஞ்சிறார் வாழ்க்கை வளம் பெற நல்ல பல ஆயத்தங்கள் செய்துவிட்டோமா? அமைப்புகளை உருவாக்கி இருக்கிறோமா? மீண்டும் பாரதி இங்கும் அறைகூவல் விடுக்கிறான்.

“அன்னசத்திரம் ஆயிரம் வைத்தல்” போன்ற நற்காரியங்கள் பலவிருந்தாலும் “ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்” என்ற உண்மையை முழுமையாக பாரதி உணர்ந்த காரணத்தால், “கல்வி வேண்டும், கல்விச் சாலைகள் வேண்டாவா?” என்று வினவுகிறான். மீண்டும் கவிஞன் குரல் உரத்துக் கேட்கிறது.

வீடுதோறும் கலையின் விளக்கம்
வீதிதோறும் இரண்டொரு பள்ளி
…………
நகர்களெங்கும் பலபல பள்ளி
தேடு கல்வியிலாத தோரூரை
தீயினுக்கு இரையாக மடுத்தல்

மீண்டும் பாரதியின் நெருப்பு; ஆம் பாரதியின் இரண்டாவது நெருப்பு.

சிறுமை கொண்டு பொங்கியவன் பாரதி. தவறென்று தெரிந்தால் தயக்கமின்றித் தட்டிக் கேட்கும் வல்லமை படைத்தவன். பாண்டவர்களின் மூத்தோன், தருமன் சூதாடி உடைமைகளனைத்தையும் – இளவல்கள், மனைவி அனைவரையும் இழந்தான். பாஞ்சாலி கெளரவ ஸபையில் அவமதிக்கப்பட்டாள். தவறு செய்த அண்ணனை, மூத்தவன் என்று கூடப் பாராமல் பீமன் சொற்களால் கவிஞன் சாடுகிறான்.

இது பொறுப்பதில்லை தம்பி!
எரிதழல் கொண்டு வா
கதிரை வைத்திழந்தான்-அண்ணன்
கையை எரித்திடுவோம்

மூன்றாவது முறையாக கவிஞன் பாரதியின் கனல் தெறிக்கும் சொற்கள் இது. பாரதியின் மூன்றாம் நெருப்பு.

பாரதி நினைவு நாளில், நாமும் வாய்ச்சொல் வீரராக இல்லாமல், செயல் வீரராக மாறி, அவனுடைய முற்போக்கு கருத்துக்களை நடைமுறைப்படுத்த சூளுரைப்போம்.

P.S. ஏன் அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் கவிதையை விட்டுவிட்டார் என்று தெரியவில்லை.