Skip to content

ஜோ டி க்ரூஸின் “ஆழிசூழ் உலகு”

by மேல் செப்ரெம்பர் 13, 2011

ஒரு இரண்டு வருஷம் முன்னால் படிக்க ஆரம்பித்த புத்தகம். கவனமாகப் படிக்க வேண்டிய புத்தகம் என்று தெரிந்தது. சரி அப்புறம் படிக்கலாம் என்று எடுத்து வைத்தேன், படிக்க இப்போதுதான் நேரம் வந்தது.

சிறந்த புத்தகங்களில் ஒன்று. எந்த வித சந்தேகமும் இல்லை. குறிப்பாக கடல் காட்சிகள் அற்புதமானவை. உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும்போது சுற்றி இருக்கும் மீன்களில் கூட்டத்தின் அழகை ரசிக்கும் தருணம் புத்தகத்தின் ஒரு உச்சம். தொம்மந்திரை, கோத்ரா, போஸ்கோ மூவரும் சுறா வேட்டைக்குப் போகும் காட்சி ஒரு தொன்மம் ஆவதற்கான தகுதி உள்ள சித்தரிப்பு. தென் மாவட்டத்து மீனவர் வாழ்க்கையை இத்தனை நுண்விவரங்களுடன் படிப்பது ஆனந்தமாக இருக்கிறது.

மீனவர் வாழ்க்கையை – அதுவும் கிருஸ்துவ பரதவர் வாழ்க்கையை – இது வரையில் இவ்வளவு அருமையாக யாரும் சித்தரித்தே இல்லை. (கடல்புரம் நாவலையும் கணக்கில் வைத்துக்கொண்டுதான் இதைச் சொல்லுகிறேன்)

நான் கதைச் சுருக்கம் எல்லாம் எழுதப் போவதில்லை. பரதவர் வாழ்க்கை, அவ்வளவுதான். இதில் யார் யாருக்கு துரோகம் செய்தான்(ள்), யார் குடும்பம் வாழ்ந்தது, யார் குடும்பம் வீழ்ச்சி அடைந்தது, யார் யாரை கொன்றது, யார் யாரோடு படுத்தது எல்லாம் வெறும் பரதவர் வாழ்க்கையை விவரிக்க உதவும் ஒரு சட்டம்தான் (framework). குசும்பு, அடிதடி, காதல், காமம், கோபம், வன்மம், துரோகம், அடுத்த ஊர்க்காரர்களோடு சண்டை, கடைசி வரை நல்லவர்களாகவே இருந்த சிலர், தவறு செய்யும் பலர், அவர்களில் திருந்தி வாழும் சிலர், ஊரின் நீண்ட கால பொருளாதார முன்னேற்றத்துக்கு உழைத்த ஒரு பாதிரி (நிஜ மனிதராம்), ஊரைச் சுரண்டும் பல பாதிரிகள் என்று கதை போகிறது.

எனக்குப் பிடித்த காட்சிகளில் சில: சுறா வேட்டை; பெரிய மீன் கட்டுமரத்தைத் தூக்குவது; பரதவர்கள் கிருஸ்துவர்கள் ஆக மாறி பல நூறு ஆண்டுகள் ஆனாலும் கன்னியாகுமரி அம்மனை விட முடியாதது; சவேரியார் குகைக்கு போகும் சேகர்; ஒரு ஓரத்தில் காட்டப்படும் நாடார்களின் வளர்ச்சி; உயிருக்குப் போராடும்போது மீன் கூட்டத்தின் அழகை ரசிக்கும் சூசையும் சிலுவையும்; தங்கள் பாதுகாப்பில் விடப்பட்ட நகைப்பெட்டி என்ற பெரும் பொறுப்பின் சுமையில் அழுந்திக் கொண்டிருப்பவர்களிடம் ஒரு வருஷமாக அது காலியாகத்தான் இருக்கிறது என்று அலட்சியமாக சொல்லும் செலின்; சண்டையைத் தவிர்க்க விரும்பும் முன்னாள் சண்டியர் ஜஸ்டின் தன் மகனிடம் உன்னால்தான் கோழையாகிவிட்டேன் என்று சொல்வது; ஜஸ்டினின் இறப்பு; சுந்தரி-சூசை உறவு சூசையின் மனைவிக்குத் தெரியும் என்று சுந்தரி உணரும் இடம்; ஹிந்து-கிருஸ்துவ மதங்களைப் பற்றிப் பேசும் இடம்; மனைவியை முதலாளிக்குக் கூட்டிக் கொடுக்க முயல, முதலாளி நாசூக்காக மறுப்பது…

குறை என்று பெரிதாக எதுவும் சொல்வதற்கில்லை. 1936-இல் கலர் என்றும் லோன் என்றும் ஆங்கில வார்த்தைகளை சாதாரணர்கள் பயன்படுத்துவது கொஞ்சம் நெருடியது. அதே வருஷத்தில் சிதம்பரம் பிள்ளைக்கு என்னாயிற்று என்று விசாரிப்பது anachronism ஆகத் தெரிகிறது. அப்போது அவர் இறந்தே போய்விட்டார், ஜெயிலிருந்து வந்தே இருபது வருஷம் ஆகிவிட்டது.

மனித மனத்தின் உள்ளுணர்வுகள் பற்றிய தரிசனங்கள் சொல்லும்படியாக இல்லை, அப்படி இருந்திருந்தால் புத்தகத்தை இன்னும் உயர்ந்த இடத்தில் வைத்திருப்பேன். ஆசிரியர் முயன்றிருக்கிறார்; வசந்தாவுக்கு ஜஸ்டின் மீது உள்ள வன்மமும், சூசை-சிலுவை உறவும் அவற்றுக்கான முயற்சிகள்தான். ஆனால் அவற்றில் ஏதோ குறைகிறது.

நண்பர் பாலாஜி இது நேர்கோட்டில் செல்லும் straightforward narrative என்று சொன்னார்; உண்மைதான், ஆனால் ஒரு literary டெக்னிக் பயன்படுத்தப்படவில்லை என்பது எனக்கு குறையாகத் தெரியவில்லை. தனித்துவமுள்ள பாத்திரங்கள் இல்லை என்ற அவர் விமர்சனத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன், ஆனால் அதுவும் அப்படி இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்றுதான் சொல்ல முடியும்.

என் அப்பா படித்துவிட்டு இத்தனை “கெட்ட” வார்த்தைகளை ரியலிசத்துக்காக அப்படியே பயன்படுத்தி இருக்க வேண்டாம் என்று சொன்னார். அவருடைய வால்யூ சிஸ்டம் வேறு என்பதைப் புரிந்து கொள்கிறேன், ஆனால் அவரது நிலையை நிராகரிக்கிறேன். நான் ரசித்த ஒரு வார்த்தைப் பிரயோகத்தை அவருடைய நிலை கருதி இங்கே பிரசுரிக்கவில்லை. 🙂

தோழி காவேரி சில உடல் உறவுக் காட்சிகள் மிகவும் graphical ஆக இருப்பது கொஞ்சம் நெருடியதாகச் சொன்னார்; எனக்கு அப்படித் தெரியவில்லை. நாங்கள் சிறு வயதில் படித்த புத்தகங்கள் வேறு என்று தெளிவாகத் தெரிகிறது. 🙂

எஸ்.ரா.வின் நூறு சிறந்த நாவல்கள் லிஸ்டில் இருக்கிறது. ஆனால் ஜெயமோகனின் லிஸ்டில் இல்லை. அவரது லிஸ்ட் வெளியான பிறகு பதிப்பிக்கப்பட்ட புத்தகம் என்பதுதான் காரணமாக இருக்க வேண்டும். பேசும்போது புகழ்ந்து பேசி இருக்கிறார். ஒரு பதிவும் எழுதி இருக்கிறார்.

தமிழினி வெளியீடு. விலை 320 ரூபாய். தமிழக அரசின் சிறந்த நாவலுக்கான பரிசைப் பெற்றிருக்கிறது. 2004-இல் வெளிவந்திருக்கிறது.

சாதனை. கட்டாயமாகப் படியுங்கள் என்று சிபாரிசு செய்கிறேன்.

தொடர்புடைய சுட்டி: ஆழி சூழ் உலகு பற்றி ஜெயமோகன் பதிவு

Advertisements

From → Joe de Cruz

10 பின்னூட்டங்கள்
 1. ஆழி சூழ் உலகு பற்றி ஜெயமோகன்…

  http://www.jeyamohan.in/?p=59
  http://www.jeyamohan.in/?p=16807

  ஆழிசூழ் உலகு பற்றி மலேசியாவின் இளம் இலக்கியவாதியான நவீன் எழுதிய மதிப்புரை வல்லினம் இதழில் வெளிவந்துள்ளது. ஆழிசூழ் உலகு பற்றி எழுதப்பட்ட அந்தரங்கமான, ஆழமான விமர்சனம்!

  http://www.vallinam.com.my/issue30/navin.html

  Like

 2. நன்றி ஆர்வி

  தகவலுக்காக: இந்த புத்தகத்தை சிலிக்கன்ஷெல்ஃப் இலக்கிய வட்டம் ச்மீபத்தில் (ஆகஸ்ட் மாத) ஆய்வுக்கு எடுத்துக் கொண்டது.

  Like

  • natbas permalink

   // சிலிக்கன்ஷெல்ஃப் இலக்கிய வட்டம்// 🙂

   சிலிக்கன்ஷெல்ஃப் உயரிலக்கிய மேலடுக்கு என்பது இன்னும் பொருத்தமாக இருக்குமோ?

   Like

   • சில நண்பர்கள் இங்கே மாதம் ஒரு முறை கூடி ஏதாவது ஒரு புத்தகத்தைப் பற்றி பேசுகிறோம். போன மாதம் (ஆகஸ்ட் 11) ஆழிசூழ் உலகைப் பற்றிப் பேச திட்டம். என்னால் படித்துவிட்டுப் போக முடியவில்லை. போய் வந்த பிறகு படித்தேன், அதே வேகத்தில் எழுதிவிட்டேன்.

    Like

   • Bags permalink

    natbas – ஏன் இலக்கியவட்டம் பொருத்தமில்லையோ? ஒழிச்சுட்டீங்களே 🙂

    Like

 3. ”ஆழி சூல் உலகு” மிக அற்புதமான நாவல். நான் இதற்கு முன் ராஜம் கிருஷ்ணன் எழுதிய ”அலைவாய்கரையில்” என்னும் நாவல் வாசித்திருக்கிறேன். அதை எழுத அவர்கள் அங்கு போய் தங்கியிருந்து அம்மக்களின் வட்டார வழக்கை சற்று கவனித்து அவர்களின் பிரச்சனைகளை மிக அற்புதமாக எழுதியிருந்தார். ஆனால், கடற்கரை பகுதியை சேர்ந்த ஒருவர் அம்மக்களின் வாழ்க்கையை பற்றி எழுதும் போது எவ்வளவு வீரியமும், உண்மையும் இருக்கும் என்பதை ஜோடிகுரூஸ் எழுதிய போது உணர்ந்தேன். மிக அற்புதமான நாவல். வாசித்து மூன்று வருடங்களிருக்கும். ஞாபகமூட்டிய நல்ல பகிர்வு. நன்றி. மேலும், தங்கள் இலக்கியவட்டம் மிகவும் சிறப்பாக நடைபெற வாழ்த்துகள். நல்ல முயற்சி.

  Like

 4. சித்திரவீதிக்காரன், ராஜம் கிருஷ்ணனை நான் அதிகம் படித்ததில்லை. மண்ணில் புதைந்த அடிகளாவது படிக்க வேண்டும்…

  கோபி, மறுமொழிக்கு நன்றி!

  Like

 5. natbas permalink

  @bags பாதி விளையாட்டாதான் சொல்றேன், கோவிச்சுக்காதீங்க.

  நீங்க செய்யறது தரம் பிரிக்கற இலக்கிய சேவை. மிகவும் அவசியமானது. ஆனா அதுல அடி வாங்கறவங்க சும்மா போவாங்களா, கொஞ்சம் சவுண்ட் விடத்தானே செய்வாங்க, அப்படித்தான் இது.

  பிக்மிக்களும் வளர்ச்சி குன்றிய வாசகர்களும் படிக்க வேண்டிய புத்தகங்களை அவர்கள் கைக்கெட்டும் உயரத்தில் கீழ் அடுக்கில் வைப்பதால் சிலிகான் ஷெல்ஃபுக்கு வட்டத்தைவிட அடுக்குதான் பொருத்தமா இருக்கும் என்று தோணுது. 🙂

  நன்றி.

  Like

Trackbacks & Pingbacks

 1. ஆழி சூழ் உலகு – Bags « சிலிகான் ஷெல்ஃப்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: