ஆயுள் தண்டனை – நரசய்யா

(திருமதி லலிதாவின் புத்தக விமர்சனம் – அது சரி யார் இந்த லலிதா?  இந்தத் தளத்தின் ஆசிரியர்களுள் ஒருவரான RVக்கு படிக்க சொல்லிக் கொடுத்ததே அவர் தான். இவர் ஒரு தேர்ந்த வாசகர். சிலிக்கன் ஷெல்ப் இலக்கிய வட்டத்தின் guest உறுப்பினர்.  சென்னையில் வசிக்கிறார். ஆமாம், திருமதி லலிதா ஆர்வியின் தாய்தான் 🙂 )

அண்மையில நான் படித்த நரசய்யாவி்ன் ஆயுள் தண்டனை மனதைத் தொட்ட சிறுகதைகளில் ஒன்று 94-வயது மூதாட்டி வாழ்க்கையின் நிலையாமையை எவ்வளவு எளிதாக விளக்கி விடுகிறார். தன் வாழ்க்கையில் குறுக்கிட்ட பல்வேறு ஏற்றத்தாழ்வுகளை, மேடு பள்ளங்களை மனதில் இருத்தி தன் பேரனுக்கு அரிய தத்துவங்களச் சுலபமாக புரிந்துகொள்ளக் கூடிய வகையில் விளக்கும் பாங்கு உண்மையிலேயே பாராட்டுதலுக்கு உரியது.

உயர் பதவியில் இருக்கும் தன் பேரனைப் பார்த்து பாட்டி கேட்கிறாள். ‘உன் கடடுப்பாட்டில் பணியாற்றும் ஒருவரை வேறு பணியிடத்திற்கு மாற்றும் அதிகாரம் உனக்கு உள்ளதா?’

‘ஆம். உண்டு’ இது பேரனின் பதில். அந்த நபர் பணிமாற்றத்தை ஏற்றுக்கொள்ளாவிட்டால் என்னசெய்வாய்? என்று பாட்டி கேட்க, ‘வலுக்கட்டாயமாகப் பணியிலிருந்து விடுவித்து அனுப்பி விடுவேன்’என்கிறான் பேரன்.

மீண்டும் கேள்விக்கணை தொடுக்கிறாள் பாட்டி. ‘மேலும் அந்தக் காலிப் பணியிடத்தில் வேறு ஒரு நபரை மாற்றவோ அல்லது நியமிக்கவோ கூட உனக்கு அதிகாரம் உண்டா?’ ‘இல்லை’ என்கிறான் பேரன்.

பாட்டி மெளனம் காக்கிறாள். சற்று நேரம் பதில் இல்லை. கண் முன்னே அவள் வாழ்க்கை சினிமா போல் மனத்திரையில் மலர்கிறது.

‘வாழ்க்கைப் பயணத்தில் நீண்டகாலம் பயணிக்கும் பயணி நான். ஆனால் என்னுடன் இருந்த பலரும் என்னைவிட்டுப் பிரிந்துவிட்டார்கள்.அதில் முதியவர்கள், இளையவர்கள் என எத்தனையோ பேர்  அடக்கம். என்னை வேறு இடத்திற்கு மாற்ற இறைவனுக்கு மனமில்லை போலும். ஒரு வேளை என்னை அனுப்பக் காலி இடம் ஏதுமில்லையோ என்னவோ? இருந்து அனுபவிக்கவேண்டும் என்பதுதான் எனக்கு விதிக்கப்பட்டுள்ளதோ? இதுதான் எனக்குக் கிடைத்த ஆயுள் தண்டனை என்று நினைக்கிறேன்.’ பாட்டியின் குரலில் விரக்தி தொனித்தது.

பாட்டியின் கூற்று எத்தனை உண்மை! ‘தண்டனை ஆயுளுக்கும் இருக்கலாம். ஆயுசாலேயும் இருக்கலாம் இல்லையா?’ பாட்டியின் வினா பேரனின் சிந்தனையைத் தூண்டியது. இன்றைய ஆதர்சவாதியான பேரன் ‘constant quantity theory’ என்பதையும் உடலில் எந்த விதக் கோளாறும் இல்லாமல் இருக்கும் பாட்டியின் உடல்நிலை டாக்டர்களே வியக்கும் “clinical wonder”என்பதையும் ஒப்பிட்டுப் பாரக்காமல் இருக்க முடியவில்லை.

கடைசியில் பாட்டி ‘சதாயுசா நன்னா ஐஸ்வர்யத்தோடு, ஆரோக்கியத்தோடு வாழவேண்டும்’ என்று மனமார பேரனை வாழ்த்துகிறாள். பேரனுக்கு சற்றே நெருடல் மனதில். உடனே பிறக்கிறது கேள்வி.

‘பாட்டி நீண்ட ஆயுஸ் உங்களுக்குத் தண்டனை என்றால் எனக்கும் அதே தண்டனைதானா?’ பேரன் குழம்புகிறான். பாட்டி சொன்னாள். ‘முகூர்த்தம் ஜ்வலிதம் ஸ்ரேயோ நது தூமாயுதம் சிரம். இது மகாபாரதத்திலே, உத்யோக பர்வத்திலே வரது. ராணி விதுலை சொல்றா. அப்படீன்னா யுகங்களுக்கும் பொகஞ்சுண்டு இருக்கிறத விட ஒரு கணத்துக்குப் ப்ரகாசிச்சுட்டுப் போறது உத்தமம்.”

ஆயுள் தண்டனையை விட ஆயுளால் கிடைக்கும் தண்டனை கொடியதுதான் என்பதுதான் கதையின் முத்தாய்ப்பே.

இந்தப் பதிவைப் பார்த்துவிட்டு நரசய்யாவே எழுதிய மறுமொழி:

எப்படி ஏன் என்று தெரியாமல் வைத்திருப்பது ஆண்டவனின் முக்கியமான விளையாட்டுகளில் ஒன்று. செப் 15, 2011 ல் இடபபட்ட இந்த இடுகை இன்று, மதுரையில் எங்கள் தாயார் சிரார்த்தத்திற்கு வந்திருக்கும் எனது கண்களில் பட்டது! நானே மறந்துவிட்டேன். ஆனால் இன்று பார்க்கநேர்ந்தபோது இவ்விடுகை இட்டவருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்ளவேண்டும் எனவே தோன்றிற்று.
உங்களுக்கும் உமது தாயாருக்கும் எனது நன்றிகள்.
ஏனென்றால் நான் தான் அக்கதை எழுதிய நரசய்யா!

தொடர்புடைய சுட்டிகள்:
தென்றல் இதழில் நரசய்யாவின் நேர்காணல் முதல் பகுதி, இரண்டாம் பகுதி (Registration Required) சுட்டிகள் கொடுத்த நண்பர் அரவிந்துக்கு நன்றி!

14 thoughts on “ஆயுள் தண்டனை – நரசய்யா

    1. ரத்னவேல்/கிரி/ஸ்ரீனிவாஸ், என் அம்மாவின் சார்பாக நன்றி! ரத்னவேல், அம்மாவுக்கு சொந்த ஊர் ஸ்ரீவில்லிப்புத்தூர் பக்கம் வத்ராப்தான்.

      Like

  1. பத்துப் பன்னிரண்டு வருடங்களுக்கு விகடனில் படித்த சிறுகதை!

    //ஆயுள் தண்டனையை விட ஆயுளால் கிடைக்கும் தண்டனை கொடியதுதான் // இப்போதும் மனதில் நிற்கும் வரிகள்!

    உங்கள் தாயாருக்கு என் நன்றிகள்!

    Like

  2. அருமையான விமர்சனம். நன்றி Bags.

    உங்கள் புண்ணியத்தில் RV-யின் பெற்றோரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு சமீபத்தில் கிடைத்தது…

    Like

  3. எப்படி ஏன் என்று தெரியாமல் வைத்திருப்பது ஆண்டவனின் முக்கியமான விளையாட்டுகளில் ஒன்று. செப் 15, 2011 ல் இடபபட்ட இந்த இடுகை இன்று, மதுரையில் எங்கள் தாயார் சிரார்த்தத்திற்கு வந்திருக்கும் எனது கண்களில் பட்டது! நானே மறந்துவிட்டேன். ஆனால் இன்று பார்க்கநேர்ந்தபோது இவ்விடுகை இட்டவருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்ளவேண்டும் எனவே தோன்றிற்று.
    உங்களுக்கும் உமது தாயாருக்கும் எனது நன்றிஅகள்.
    ஏனென்றால் நான் தான் அக்கதை எழுதிய நரசய்யா!
    நரசய்யா

    Like

    1. அன்புள்ள நரசையா சார்,

      நீங்கள் இந்தத் தளத்தைப் பார்த்தது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. என் அம்மாவுக்கும் மெயில் அனுப்பி இருக்கிறேன். முடிந்தபோது பார்த்து உங்கள் எண்ணங்களை எழுதினால், இல்லை உங்கள் புத்தகங்களைப் பற்றியோ, அனுபவங்களைப் பற்றியோ, பிற புத்தகங்களைப் பற்றியோ – எதைப் பற்றி இருந்தாலும் சரிதான் 🙂 – பதிவாகவே எழுதினால் இன்னும் சந்தோஷப்படுவேன்.

      Like

  4. இன்றுதான் மறுபடி பார்க்க நேர்ந்தது. இடுகை இட்டவர்களுக்கெல்லாம் நன்றி. இப்போது புதுகைத் தென்றல் என்ற ஒரு சிறு பத்திரிகைக்கு எந்தையும் தாயும் என்ற தலைப்பில் ஒரு தொடர் எழுதி வருகிறேன். 39 அத்தியாயங்கள் முடிந்து விட்டன. இந்தியாவின் சுதந்திர எழுச்சியைப் பற்றிய கட்டுரகள். முடிந்தால் பார்க்கவும்.
    நரசய்யா

    Like

    1. அன்புள்ள நரசையா,

      உங்களை மீண்டும் இந்தப் பக்கம் பார்த்தது பெருமகிழ்ச்சி!

      புதுகைத் தென்றல் இணையத்தில் கிடைக்குமா? என்னைப் போல அயல் தேசத்தில் வாழ்பவர்களுக்கு உதவியாக இருக்கும்…

      Like

  5. இல்லை. அது இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படுவதில்லை. உங்கல் மின்னஞ்சல் முகவ்ரியைத் தெரியப்படுத்தவும். முடிந்தால் சில பகுதிகளை அதில் அனுப்புகிறேன்.இன்று ஜனவரி18, 2019 தான் இதை பார்த்தேன். நரசய்யா

    Like

  6. அன்புள்ள நரசையா,

    நீங்கள் இந்தப் பக்கம் வந்தீர்கள் என்று தெரியும்போதெல்லாம் மகிழ்ச்சியாக இருக்கிறது.

    என் மின்னஞ்சல் முகவரி rv.subbu@gmail.com

    Like

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.