ஹாலோவீன் ஸ்பெஷல் – க்ரியா எழுதிய கதை

(மீள்பதிவு)

என் பெண் க்ரியாவுக்கு ஸ்கூலில் “Young Author” என்று ஒரு அசைன்மென்ட் உண்டு. அவளே யோசித்து ஏதாவது ஒரு கதை எழுத வேண்டும். அவள் முதல் வகுப்பில் (ஆறு வயதில்) எழுதிய கதை கீழே. எனக்கு மிகவும் பிடித்த கதை.

One day a girl named Kriya got the hiccups. And then skipping around the street, she found a haunted house. She was so scared. There were zombies, skeletons, and ghosts.

I saw a sign that said “Exit”. I climbed a few steps. But the stairs were broken. I thought and thought and thought. And I decided to build some stairs.

After I built them, I climbed them very carefully. Suddenly I realized my hiccups were gone! I cheered Hooray!

முதல் பத்தியில் படர்க்கையில் சொல்லப்படும் கதை இரண்டாம் பத்தியில் தன்னைப் பற்றி சொல்லப்படுவதாக மாறுவது எனக்கு மிகப் பிடித்திருக்கிறது. இரண்டாம் பத்தியில் படிகள் உடைந்துவிட்டதால் அவளே படிகளை கட்டுவது அபாரம்! (சர்ரியலிசம்? ஃபான்டசி?) கடைசியில் விக்கல் போய்விட்டதாக முடித்திருப்பது, ஆஹா!

எல்லாருக்கும் அவரவர் குழந்தை ஒஸ்திதான். ஆனால் இந்தக் கதை எனக்கு உண்மையிலேயே பிடித்திருக்கிறது.

தொகுக்கப்பட்ட பக்கம்: படைப்புகள்

தொடர்புடைய பதிவுகள்:
க்ரியாவும் கலீலியோவும்
சிற்பிகளின் மறதி
ஏற்கனவே எழுந்தாச்சு!
திருப்பிக் கொடு
அப்பாதான் ரோல் மாடல்!
முதலாளித்துவமும் சோஷலிசமும்
அம்மாவிடம் திட்டு வாங்காமல் விஷமம் செய்வது எப்படி
க்ரியாவின் அலுப்பு
நேற்று இன்று நாளை
அக்கா vs சாக்லேட்
க்ரியாவின் ஏமாற்றம்
பெரிய நம்பர்கள்
க்ரியாவுக்கு சொன்ன கதை
திசைகளின் நடுவே

சுமந்த்ரா போஸ் எழுதிய “காஷ்மீர்”

சுமந்த்ரா போஸ் லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் பேராசிரியர். வட அயர்லாந்து, போஸ்னியா போன்ற trouble spots-ஐ ஆய்வு செய்திருக்கிறார். அவரது நிபுணத்துவத்துவத்தை இப்போது காஷ்மீர் பிரச்சினையில் காட்டுகிறார். நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இவருக்கு சின்னத் தாத்தா. இவர் சுபாஷ் போசின் அண்ணனான சரத் போசின் பேரன்.

போஸ் மூன்று முக்கிய பாயிண்ட்களை எடுத்து வைக்கிறார்.

  1. 1990 வாக்கில் பெரிதாக வெடித்த காஷ்மீர் பிரச்சினையின் மூல காரணம் 47-க்குப் பிறகு காஷ்மீரிகளின் அடிப்படை ஜனநாயக உரிமைகள் இந்திய அரசால் மறுக்கப்பட்டதே. சுய நிர்ணயம் என்று சொல்லப்படுவதை தங்கள் நாடு எது என்று தாங்களே தீர்மானித்துக் கொள்வோம் என்ற அதிகபட்ச நிலையிலிருந்து பல கட்சி ஜனநாயகம் என்ற நிலைக்குக் கீழே இறக்குவதே இந்தியாவின் முக்கிய சவால்.
  2. ஜனநாயகம் என்று சொல்வது சுலபம். ஆனால் இந்தியா, பாகிஸ்தான் இரண்டும் தங்கள் அதிகபட்ச நிலையிலிருந்து இறங்கி வரத் தயாராக இல்லை என்பதுதான் ப்ராக்டிகல் நிலைமை. காஷ்மீரை தன மதசார்பற்ற தன்மையின் நிரூபணமாக இந்தியா பார்க்கிறது. காஷ்மீருக்கு வெளியே 15 கோடி முஸ்லிம்கள் இருக்குபோது இப்படி ஒரு நிரூபணம் இந்தியாவுக்கு ஏன் தேவைப்படுகிறது என்று புரிந்து கொள்வது கஷ்டம். பாகிஸ்தான் 47-இலிருந்தே முஸ்லிம்கள் மெஜாரிட்டியாக இல்லாத காஷ்மீர் பாகிஸ்தானின் ஒரு பங்காக இல்லாவிட்டால் பாகிஸ்தான் முழுமை அடையாது என்ற கோட்பாட்டின் அடிப்படையில் செயல்படுகிறது. இதையும் புரிந்து கொள்வது கஷ்டம். முஸ்லிம்கள் நிறைந்த பங்களாதேஷ் பிரிந்து 40 வருஷம் ஆகிறது. ஆனால் இங்கே லாஜிக் செல்லாது. கோட்பாட்டில் ஓட்டை கண்டுபிடிப்பதில் பயனில்லை. இதுதான் ப்ராக்டிகல் நிலை என்று புரிந்து கொள்ளாமல் தீர்வுக்கு வாய்ப்பே இல்லை. காஷ்மீர் இந்தியாவின் integral part என்று இந்தியாவும் jugular vein என்று பாகிஸ்தானும் மீண்டும் மீண்டும் அறைகூவுகின்றன. இந்த இரண்டு நிலைகளுமே காஷ்மீர் பல இனங்களைக் கொண்ட ஒரு pluralistic சமூகம், அதை எப்படிப் பிரிததாலும் ஒவ்வொரு geographic entity-இலும் ஒரு கணிசமான மைனாரிட்டி வேறு தீர்வை விரும்பும் என்பதை கணக்கில் கொள்வதில்லை. மூன்றாவதும் ஒரு நிலை – சுதந்திர காஷ்மீர் – இருக்கிறது, அதற்கும் கணிசமான ஆதரவு இருக்கிறது, அதனால் குட்டை இன்னும் குழம்புகிறது.
  3. காஷ்மீரின் நிலை unique இல்லை. சைப்ரஸ், போஸ்னியா, வட அயர்லாந்து ஆகிய இடங்களில் இதே போன்ற பிரச்சினைகளைக் காணலாம். அங்கே முயற்சிக்கப்பட்ட தீர்வுகளின் வெற்றி தோல்வியை ஆராய்வது இங்கேயும் உதவியாக இருக்கும்.

புத்தகத்தில் எனக்குப் பிடித்தது அவரது ப்ராக்டிகல், pragmatic கோணம். உதாரணமாக காஷ்மீர் இந்தியாவோடு இருக்க வேண்டுமா வேண்டாமா என்பதற்காக வாக்கெடுப்பு நடத்துவதாக நேரு கொடுத்த வாக்குறுதி, ஐ.நா. தீர்மானங்கள். இந்தியா கொடுத்த வாக்குறுதியை நேரு காலத்திலேயே கழற்றிவிட்டது அநியாயம்தான் என்பதை தெளிவாக வெளிப்படையாக சொல்கிறார். ஏறக்குறைய அதே வரியிலேயே கழற்றிவிட்டது அநியாயம் என்றாலும் இன்று வாக்கெடுப்பு என்று பேசுவது ப்ராக்டிகல் இல்லை, முட்டாள்தனம் என்றும் தெளிவாக வெளிப்படையாக சொல்கிறார். வாக்கெடுப்புக்கான காலம் போய்விட்டது.

இந்தியாவைப் பொறுத்த வரையில் என்ன பிரச்சினை? கணிசமான காஷ்மீரிகள் இந்தியக் குடிமகன்களாக இருக்க விரும்பவில்லை என்பதுதான். சுதந்திர காஷ்மீர் என்ற கனவு இன்னும் உயிரோடு இருக்கிறது, பெரும்பான்மையான காஷ்மீரிகள் – இந்திய காஷ்மீரிகள் மற்றும் பாகிஸ்தானில் இன்று வாழும் காஷ்மீரிகள் – தனி நாடு என்ற ரொமாண்டிக் கனவோடு இருக்கிறார்கள். ஆனால் இவர்கள் மெஜாரிட்டி – ஐம்பது சதவிகிதத்துக்கு மேலானவர்கள் இல்லை.

வாக்கெடுப்பு என்ற கோட்பாட்டின் குறைபாடுகளை போஸ் மிக அழகாக விளக்குகிறார். காஷ்மீர் பல இனங்கள் உள்ள ஒரு சமூகம். மூன்று நிலைகளுக்கும் – காஷ்மீர் பாகிஸ்தானில் இருக்க வேண்டும், இந்தியாவில் இருக்க வேண்டும், சுதந்திர காஷ்மீர் – எல்லா இடங்களிலும் ஆதரவு இருக்கிறது. எந்த நிலைக்கும் எங்கும் – ஜம்முவிலும், காஷ்மீர் பள்ளத்தாக்கிலும், பாகிஸ்தான் காஷ்மீரிலும் கூட – overwhelming majority இல்லை. பாகிஸ்தான் காஷ்மீரில் கூட இந்தியாவோடு போக வேண்டும் என்று நினைப்பவர்கள் கணிசமானவர்கள் உண்டு. இந்தியாவோடு இருக்க விரும்புபவர்கள் கணிசமானவர்கள். காஷ்மீர் பள்ளத்தாக்கிலேயே கணிசமான மைனாரிட்டி. பாகிஸ்தானோடு போக விரும்புபவர்களும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களுடைய விருப்பத்தை புறக்கணிப்பது நியாயமில்லையே? ஜம்மு பகுதியிலும் அப்படி இந்தியாவோடு இருக்க விரும்பாத கணிசமான மைனாரிட்டி முஸ்லிம்கள் மெஜாரிடியாக இருக்கும் டோடா போன்ற மாவட்ட்டங்களில் இருக்கிறார்கள். அந்த மாவட்டங்களிலும் இந்தியாவோடு இருக்க விரும்பும் நகரங்கள் உண்டு. வாக்கெடுப்பின் winner takes all methodology இப்படிப்பட்ட கணிசமான மைனாரிட்டிகளின் விருப்பத்தை கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை.

காஷ்மீரிகளுக்கு இழைக்கப்பட்ட ஜனநாயக அநீதிகளை போஸ் புட்டுப் புட்டு வைக்கிறார். ஷேக் அப்துல்லா காலத்திலிருந்தே மத்திய அரசுக்கும் காஷ்மீர் அரசுக்கும் ஒரு எழுதப்படாத ஒப்பந்தம் இருந்திருக்கிறது. ஆட்சியில் இருக்கும் காஷ்மீர் தலைவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம், தங்களுக்கு எதிராக யாரும் தேர்தலில் நிற்காதபடி செய்யலாம். எப்படி? ஒரு சிம்பிளான வழி வேட்பு மனுவை நிராகரித்துவிடலாம். கள்ள ஓட்டு போட வைக்கலாம், அரசு எந்திரத்தை தனக்கு ஆதரவாக பணியாற்ற வைக்கலாம் இத்யாதி. பதிலுக்கு அவர்கள் மத்திய அரசின் மேலாண்மையை ஒரு அளவுக்கு மீறி கேள்வி கேட்கக் கூடாது. ஷேக் அப்துல்லா அப்படி ஓவராக சவுண்ட் விடாத வரைக்கும் அவர்தான் காஷ்மீரின் முதலமைச்சர்; சவுண்ட் விட்டதும் அவருக்கு ஜெயில், பக்ஷி குலாம் அஹமத் முதலமைச்சர். ஷேக் அப்துல்லா காம்ப்ரமைஸ் செய்து கொண்டபின் அவர் மீண்டும் முதல்வர்; 86-இல் ஃபரூக் அப்துல்லா முதல்வரானது இந்த farcial தேர்தல்களின் உச்சக்கட்டம்.

காஷ்மீரில் நிலவும் சுதந்திரக் கனவை போஸ் விவரிக்கிறார். அது ஒரு ரொமாண்டிக் கனவு என்று தெரிந்தாலும் கணிசமான காஷ்மீரிகள் அந்தக் கனவை காணத்தான் செய்கிறார்கள். பாகிஸ்தானிடம் உதவி பெறும் தீவிரவாதிகளே அந்தக் கனவை காணும்போது, சோழியன் குடுமி சும்மா ஆடாது என்று உணராதபோது, சாதாரணனுக்கு அந்தக் கனவு இருப்பதில் வியப்பில்லை.

காஷ்மீர் கிளர்ச்சியைப் பற்றியும் ஒரு chapter இருக்கிறது. பாகிஸ்தானின் பங்கு, காஷ்மீரிகளின் மனநிலை என்று இங்கே நிறையப் பேசுகிறார்.

போஸ் சொல்லும் தீர்வு என்ன? மீண்டும் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவதுதான். டெல்லியும் இஸ்லாமாபாத்தும் ஸ்ரீநகரும் ஜம்முவும் ஸ்ரீநகரும் முசாஃபராபாதும் பேச வேண்டும் என்கிறார். அவர் முன் வைக்கும் ரோல் மாடல் வட அயர்லாந்து. மனித உரிமை, போலீஸ் அமைப்புகள், தேர்தல்கள் மூன்றும் எந்தத் தீர்விலும் அமல்படுத்தப்பட வேண்டிய விஷயங்கள் என்கிறார்.

போசின் எல்லா வாதங்களிலும் எனக்கு இசைவில்லை. உதாரணமாக காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி என்பது இந்தியர்களின் தேசியப் பெருமிதம் (national pride) சார்ந்த விஷயம். மதச்சார்பின்மை என்பதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை. காஷ்மீரி பண்டிட்கள் மிகச் சிறிய மைனாரிட்டி என்கிறார். இது உண்மைதானா என்று எனக்குத் தெரியவில்லை.

இந்தியக் காஷ்மீரைப் பற்றி பெரிதாகப் பேசுகிறார், ஆனால் பாகிஸ்தானிய காஷ்மீரை அவ்வளவாக கண்டுகொள்வதில்லை. இந்தியாதான் இங்கே எல்லாரையும் விட முக்கியமான தரப்பு என்று அவர் காரணம் சொன்னாலும் புத்தகம் முழுமை பெறாமல் இருக்கிறது. அவர் லடாக், வட பகுதிகள், அக்சாய் சின் ஆகியவற்றைப் பற்றி பெரிதாகப் பேசுவதில்லை. அவருடைய focus எல்லாம் காஷ்மீர் பள்ளத்தாக்கிலும், ஸ்ரீநகரிலும், ஜம்முவிளும்தான் இருக்கிறது.

பொதுவாக நியாயமாக நடக்க வேண்டும் என்று நினைக்கும் ஒரு நல்ல இந்தியன் scholar இந்திய அரசுக்கு அறிவுரை சொல்லும் கோணத்தில் இருக்கிறது. அவரே இந்திய வம்சாவளியர் என்பதாலோ இல்லை இந்தியாதான் முக்கிய player என்பதாலோ என்று தெரியவில்லை. பாகிஸ்தானைப் பற்றி இன்னும் எழுதி இருக்கலாம்.

உண்மையான நடுநிலையாளர் எழுதி இருக்கும் உபயோகமான புத்தகம். 2003-இல் வந்திருக்கிறது. படியுங்கள் என்று சிபாரிசு செய்கிறேன்.

தொடர்புடைய சுட்டி: சுமந்த்ரா போசின் தளம்

ஞானக்கூத்தனின் குசும்புக் கவிதைகள்

கூட்டாஞ்சோறு தளத்திலிருந்து மீள்பதிவு.

பொதுவாக எனக்கும் கவிதைகளுக்கும் கொஞ்சம் தூரம். ஆனால் இந்த இரண்டு கவிதைகளையும் ரசித்தேன். முடிந்தால் ஒரு கட்டைக்குரலில் கற்பனை செய்துகொள்ளுங்கள்!

தலைவரார்களேங்….
தமிழ்ப் பெருமக்களேங்… வணக்கொம்
தொண்ணூறாம் வாட்டத்தில் பாசும் வாய்ப்பை
தாந்தமைக்கு மகிழ்கின்றேன். இன்றய்த் தீனம்
கண்ணீரில் பசித் தொய்ரில் மாக்களெல்லாம்
காலங்கும் காட்சியினெய்க் காண்கின்றோம் நாம்”

‘‘வண்ணாரப்பேட்ட கிள சார்பில் மாலெ”

‘‘வளமான தாழிழர்கள் வாடலாமா?
கண்ணாளா போருக்குப் போய் வா என்ற
பொற நான்ற்றுத் தாயெய் நாம் மறந்திட்டோமா?
தாமிழர்கள் சொக வாழ்வய்த் திட்டாமிட்டுக்
கெடுப்பவர்கள் பொனக்குவ்யல் காண்போமின்றே
நாமெல்லாம் வரிப்பொலிகள் பகைவர் பூனெய்
நாரி மதி படைத்தோரை ஒழிப்போம் வாரிர்

தலைவரார்களேங்
பொதுமக்களேங் நானின்னும்
யிரு கூட்டம் பேசவிருப்பதால்
விடய் பெறுகிறேன் வணக்கொம்

இன்னுமிருவர் பேச இருக்கிறார்கள் அமைதி… அமைதி

இன்னும் ஒன்று:

எனக்கும் தமிழ்தான் மூச்சு
ஆனால்
பிறர் மேல் அதை விட மாட்டேன்

தொகுக்கப்பட்ட பக்கம்: கவிதைகள்

தொடர்புள்ள சுட்டி: ஞானக்கூத்தன் தளம்

புதுமைப்பித்தன் மறைவு – விகடன் ஆபிச்சுவரி

தமிழ் எழுத்தாளர் உலகத்தில் பிரசித்தி பெற்றவரான ஸ்ரீ விருத்தாசலம் (புதுமைப்பித்தன்) மறைவு இலக்கிய அன்பர்களிடையே பெரிய வருத்தத்தை உண்டாக்கியிருக்கிறது. கற்பனைகள் மிகுந்த அவருடைய எழுத்துக்கள் புரட்சியும் புதுமையும் கொண்டு தமிழ் எழுத்தில் ஒரு புது சகாப்தத்தையே ஆரம்பிக்கக் கூடியவை. தமிழிலக்கியத்தில் மறுமலர்ச்சிக்கு முன் நின்று நவ நவமான சிருஷ்டிகள் செய்தவர்களில் புதுமைப்பித்தனுக்கு ஓர் உயர்ந்த ஸ்தானம் உண்டு. அன்னாருடைய மறைவுக்காக எழுத்தாளர் சங்கக் காரியதரிசி சங்கத்தின் சார்பாக வருத்தத்தைத் தெரிவித்து, அவர் பெயரால் ஒரு நிதி திரட்டி அவர் குடும்பத்துக்கு அளிக்கவும், அவருக்கு சாசுவதமான ஒரு ஞாபகச் சின்னம் ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுத்துக்கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருக்கிறார். எழுத்தாளர்களும் எழுத்தின் சுவையறிந்தவர்களும் இந்த முயற்சிக்கு நல்ல ஆதரவு அளிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

புதுமைப்பித்தன் மாதிரி ஒரு ஜீனியஸ் மறைந்ததற்கே நாலு வரி ஆபிச்சுவரிதான் வந்திருக்கிறது. சந்தேகம் இருந்தால் எண்ணிப் பாருங்கள், சரியாக நாலே நாலு வாக்கியம்தான். எழுத்தாளன் “செத்த பிறகு சிலை வைக்காதீர்” என்று எழுதியவருக்கே ஞாபகச் சின்னமாம்! அவருக்கு ஆவி உலகத்தில் தெரிந்திருந்தால் இந்த irony-ஐ மிகவும் ரசித்திருப்பார்!

தொகுக்கப்பட்ட பக்கம்: புதுமைப்பித்தன் பக்கம்

தொடர்புடைய சுட்டிகள்:
புதுமைப்பித்தன் நினைவு நாள்
புதுமைப்பித்தன் படைப்புகள் – வேதசகாயகுமார் ஆய்வின் கதை
புதுமைப்பித்தனும் சந்திரபாபுவும்

சினிமா – எமிலி ஜோலாவின் வாழ்க்கை

ஒரு பழைய படத்தை – Life of Emile Zola – சமீபத்தில் பார்த்தேன். பால் முனி எமிலி ஜோலாவாக நடித்திருக்கிறார். சூப்பர் டூப்பர் என்றெல்லாம் சொல்ல மாட்டேன், ஆனால் நல்ல படம்.

நான் எமிலி ஜோலாவின் புத்தகங்களை இது வரை படித்ததில்லை. ட்ரேஃபஸ் விவகாரத்தில் போராடினார் என்று தெரியும், அவ்வளவுதான். திரைப்படத்தைப் பார்த்த பிறகுதான் ஜோலா ஓவியர் பால் செசானின் (Paul Cezanne) நெருங்கிய நண்பர், சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டிருக்கிறார் என்பதெல்லாம் தெரிந்தது. படம் எனக்கு ரொம்ப சுவாரசியமாக இருந்தது.

செசானும் ஜோலாவும் ஒரு ஜன்னல்கள் உடைந்து குளிர் காற்று வீசிக் கொண்டிருக்கும் சின்ன garret-இல் வாடகை கொடுக்க முடியாமல் கஷ்டப்படும் காட்சியோடு திரைப்படம் ஆரம்பிக்கிறது. ஜோலாவுக்கு ஒரு பதிப்பகத்தில் வேலை கிடைக்கிறது. அவர் எழுதிய Confessions of Claude அவரை பிரச்சினைகளில் தள்ளுகிறது. போலீஸ் அவரை எச்ச்சரிகிறது. வேலை போகிறது. ஒரு விபசாரியை சந்திக்கிறார். அவளை கருவாக வைத்து அவர் எழுதும் நானா என்ற புத்தகம் பெரிய ஹிட் ஆகிறது. (அவர் அந்தப் புத்தகத்துக்காக கொஞ்சம் அட்வான்ஸ் கேட்க வரும் காட்சி மிக நன்றாக இருந்தது) பணம், புகழ் எல்லாம் வருகிறது. அவரை மீண்டும் சந்திக்கும் செசான் நட்பு முறையில் அவரது பணம்/புகழ் பற்றி ஜோலாவை எச்சரிக்கிறார்.

ஃபிரெஞ்ச் ராணுவத்தில் ஒரு உயர் அதிகாரி ஜெர்மனி ஒற்றர் என்று தெரிகிறது. சந்தேகம் ட்ரேஃபஸ் என்ற யூத அதிகாரி மீது விழுகிறது. அவர் சிறைக்கு அனுப்பப்படுகிறார். சில வருஷங்கள் கழித்து கர்னல் பிக்வார்ட் என்பவர் ட்ரேஃபஸ் குற்றமற்றவர், எஸ்டர்ஹாசி என்பவர்தான் உண்மையான குற்றவாளி என்று கண்டுபிடிக்கிறார். ஆனால் ராணுவத்தின் மீது யாரும் குறை சொல்லக்கூடாது என்று உண்மை அமுக்கப்படுகிறது. ஜோலா புகழ் பெற்ற J ‘Accuse என்ற கடித்தத்தைப் பதிக்கிறார். அவர் மீது மான நஷ்ட வழக்கு, அவருக்கு ஒரு வருஷம் ஜெயில் தண்டனை கிடைக்கிறது. ஜோலா இங்கிலாந்துக்கு தப்பி விடுகிறார். கடைசியில் உண்மை வெளி வருகிறது. ட்ரேஃபஸ் மீண்டும் ராணுவத்தில் பதவி ஏற்கிறார். ஆனால் ஜோலா அதற்குள் இறந்துபோகிறார்.

ஜோலா அந்தக் கடிதத்தைப் டிக்டேட் செய்வது மிக நன்றாக இருந்தது. அவர் ஜூரிகளிடம் நிகழ்த்தும் உரையும் அருமை.

பால் முனி சிறப்பாக நடித்திருக்கிறார். நல்ல வசனங்கள். இது சினிமா சாதனை இல்லாவிட்டாலும் நல்ல கருவை கெடுக்காமல் காட்டி இருக்கிறார்கள். ஒரு ஜெயகாந்தனைப் பற்றி, அசோகமித்ரனைப் பற்றி, இப்படி ஒரு படம் வந்தால் ஆ என்று பார்த்துக் கொண்டு இருக்கலாம். என்று வருமோ? நானே நிறைய பணம் சம்பாதித்து எடுத்தால்தான் உண்டு போலிருக்கிறது.

பழைய கறுப்பு வெள்ளை படம். 1937-இல் வந்திருக்கிறது. சிறந்த படத்துக்கான ஆஸ்கர் விருதை வென்றிருக்கிறது. ட்ரேஃபஸ்ஸாக நடித்த Joseph Schildkraut-க்கும் சிறந்த துணை நடிகர் விருது கிடைத்திருக்கிறது. இயக்கம் William Dieterle.

தொகுக்கப்பட்ட பக்கம்: திரைப்படங்கள்

தொடர்புடைய சுட்டிகள்:
எமிலி ஜோலா – விக்கி குறிப்பு
Dreyfus Affair – விக்கி குறிப்பு
Life of Emile Zola – IMDB குறிப்பு
J’Accuse – ஆங்கில மொழிபெயர்ப்பு

அமர் சித்ரகதா

சின்ன வயதில் குடும்பத்தில் புத்தகம் எல்லாம் வாங்கிப் படிக்கும் பழக்கம் இருந்ததில்லை. அதுதான் லைப்ரரி இருக்கிறதே என்ற நினைப்புதான். அனேகமாக வாங்கும் அளவுக்கு வசதியும் இருந்திருக்காது. இந்த லட்சணத்தில் காமிக்ஸ் புத்தகம் வாங்குகிறேன், காசு கொடு என்று கேட்டால் அடிதான் விழுந்திருக்கும். அதுவும் இங்கிலீஷ் காமிக்ஸ்! உனக்குப் புரியாது, இங்கிலீஷ் படிக்கக் கற்றுக் கொள்ள வேண்டுமென்றால் ஹிந்து எடிட்டோரியல் படி என்றுதான் அறிவுரை சொல்லி இருப்பார்கள்.

வேலைக்குப் போன பிறகு ஓரளவு புத்தகம் வாங்கினாலும் காமிக்ஸ் வாங்கத் தயக்கம். என்னடா சின்னப் பிள்ளை மாதிரி காமிக்ஸ் படிக்கறான் என்று யாராவது நினைத்துவிட்டால்? அதனால் ஆஸ்டரிக்ஸ் மட்டும் அவ்வப்போது வாங்குவேன். அமர் சித்ரகதாவுக்கெல்லாம் சான்ஸ் இல்லை. அதுவும் கொஞ்சம் வளர்ந்த பிறகு பார்த்ததாலோ என்னவோ அமர் சித்ரகதாவின் சிம்ப்ளிஸ்டிக் ஆன கதைகளும் ஓவியங்களும் என்னை அவ்வளவு தூரம் கவரவில்லை.

முதன்முதலாக அமர் சித்ரகதாவை நானும் படிக்கலாம் என்று தோன்றியது மகாபாரதத்தை காமிக்ஸ் வடிவில் படித்தபோதுதான். மிகவும் அருமையான முயற்சி. அதற்கப்புறம் இன்னும் சிலவற்றை படித்துப் பார்த்தேன். சிறு வயதில் படித்திருந்தால் மிகவும் சந்தோஷப்பட்டிருப்பேன், இப்போது இவற்றை என்ஜாய் செய்யும் வயது தாண்டிவிட்டது என்று தெரிந்தது.

பிள்ளைகளுக்கு நம் வரலாறு, கலாசாரம் பற்றி சொல்லித் தர இதை விட சுலபமான வழி இல்லை. ஆனால் என் அமெரிக்கக் குழந்தைகளுக்கு அவ்வளவாக ஒட்டவில்லை. அவர்களுக்காக வாங்கியவற்றை நான்தான் படித்து கதை சொல்ல வேண்டிய நிலை.

அமர் சித்ரகதாவை உருவாக்கியவர் அனந்த் பை. 2011-இல்தான் இறந்தார். அவருக்கு ஒரு ஜே!

தொடர்புடைய சுட்டி: அமர் சித்ரகதா தளம்

பூமணிக்கு விஷ்ணுபுரம் விருது

போன வருஷம் ஆ. மாதவன். இந்த வருஷம் பூமணி.

நான் பூமணியின் பரம ரசிகன். வெக்கையை இலக்கிய சாதனைகளில் ஒன்றாகக் கருதுகிறேன். பழி வாங்குவதையும் வன்முறையையும் தப்பி ஓடுவதையும் foreground-இல் வைத்து நாவல் முழுதும் அன்பால் நிறைந்திருப்பது பெரிய சாதனை.

பிறகு இன்னொரு சாதனை, ஆனால் அது எனக்கு வெக்கைக்கு அடுத்த இடத்தில்தான் இருக்கிறது. நைவேத்யம் எனக்கு சுமார்தான். வரப்புகளோ வாய்க்காலோ ஏதோ ஒரு பேரில் ஒரு கிராமப் பள்ளியை பின்புலமாக வைத்து எழுதிய கதை எனக்கு பர்சனலாக நெருக்கமானது. என் அப்பாவும் அம்மாவும் கிராமப் பள்ளிகளில் வேலை பார்த்த சூழலை எனக்கு நினைவூட்டியது. அவரது சிறுகதைகளும் – குறிப்பாக நல்ல நாள் சிறுகதைத் தொகுதி – எனக்குப் பிடித்தமானவை. என் அபிமான ஹிந்தி எழுத்தாளர் பிரேம்சந்தை பல இடங்களில் நினைவூட்டின.

சரியானவர்களை தேர்ந்தெடுத்த விஷ்ணுபுரம் குழுவினருக்கு வாழ்த்துக்கள். ஆ. மாதவனையும் பூமணியும் கவுரவிப்பதால் விஷ்ணுபுரம் விருது பெருமை பெறுகிறது.

தொடர்புள்ள சுட்டிகள்:
விஷ்ணுபுரம் விருது அறிவிப்பு
வெக்கை
அழியாச்சுடர்கள் தளத்தில் பூமணியின் சில சிறுகதைகள்

சுஜாதாவின் “சில்வியா”

சிறுகதைத் தொகுப்பு.

சுஜாதா சில்வியா ப்ளாத் பற்றி படித்திருக்கிறார், அந்தப் பாதிப்பில் தற்கொலை செய்துகொள்ளும் இளம் பெண்ணைப் பற்றி ஒரு கதை எழுதி இருக்கிறார். சுவாரசியம் இல்லாத கதை. கணேஷ்-வசந்த் இல்லாவிட்டால் நான் இதைப் பற்றி எழுதி இருக்கக் கூட மாட்டேன்.

இந்தக் கதையில் எனக்கு நினைவிருக்கப் போவது நிரந்தர இளைஞனான வசந்த்தின் தலைமுறைக்கு அடுத்து ஒரு தலைமுறை வந்துவிட்டது என்பதுதான். வசந்த்தே தான் இன்றைய இளைஞன் இல்லை என்பதை உணர்கிறான்.

அயோத்தியா மண்டபம் காலிகளால் தாக்கப்படும் ஒரு பிராமண தாத்தாவைப் பற்றி. உரையாடல், பாத்திரப் படைப்பு எல்லாம் நன்றாக வந்திருக்கிறது, ஆனால் கதையின் கரு மிகைப்படுத்தப்பட்டது. மிகை என்று சொல்வது சுலபம், ஆனால் தனி மனிதனின் வலி புறக்கணிக்கக் கூடியதல்ல என்பது உண்மைதான், இருந்தாலும் எனக்கு மிகை என்றுதான் தோன்றுகிறது.

ஏழையின் சிரிப்பு ஒரு டிபிகல் சுஜாதா சிறுகதை. நடை, நக்கல், உரையாடல் எல்லாம் இருக்கிறது, ஆனால் யூகிக்கக் கூடிய முடிச்சு. துர்காவும் அப்படித்தான்.

ஜோதியும் ரமணியும் ஹாஸ்டல் வாழ்க்கையை நன்றாக சித்தரிக்கிறது. ஒவ்வொரு ஹாஸ்டலிலும் யாராவது ஒரு bully இருப்பான். அதன் கச்சிதமான சித்தரிப்பு. ஆனால் என்ன பாயின்ட் என்று புரியவில்லை.

மற்றவற்றில் கொல்லாமலே சிறுகதையைப் பற்றி சொல்ல ஒன்றுமில்லை. திருப்பங்கள் வேஸ்ட், ட்விஸ்ட் கொடுத்துக் கொண்டே இருக்கிறார். மற்றொரு பெண் ஜன்மம் எனக்கு ரசிக்கவில்லை.

உயிர்மை வெளியீடு. விலை 70 ரூபாய்.

சுஜாதா ரசிகர்கள், கணேஷ்-வசந்த் ரசிகர்கள் படிக்கலாம்.

அ.கா. பெருமாளின் “சுண்ணாம்பு கேட்ட இசக்கி”

படிக்க விரும்பும் டாப் 15 தமிழ் புத்தகங்களில் சுண்ணாம்பு கேட்ட இசக்கியும் ஒன்று. நண்பர் ராஜனிடம் கிடைத்தது.

சு.கே. இசக்கியில் தெளிவாகத் தெரிவது அ.கா. பெருமாளின் உழைப்பு. தணியாத ஆர்வம். தமிழர்களின் – குறிப்பாக நாஞ்சில் நாட்டு பழக்கங்களை, சடங்குகளை, கதைப் பாடல்களை, தெய்வங்கள் பற்றிய தொன்மங்களை, கலைகளைப் பற்றிய விவரங்களை கையிலிருந்து பணம் செலவழித்தாவது பதிவு செய்தே ஆக வேண்டும் என்ற வெறி. கர்ப்பிணியின் பிணத்தை அறுத்து குழந்தையை வெளியே எடுக்கும் முறை சில சாதியினரில் உண்டாம். அது உண்மைதானா, பார்க்க முடியுமா என்று மனிதர் அலைந்து திரிந்து கடைசியில் பக்கத்தில் நின்று பார்த்தே விட்டார்.

இப்படிப்பட்டவர்கள் தமிழ்நாட்டின் செல்வங்கள். எவ்வளவு பாராட்டினாலும் தகும். இப்படிப்பட்ட சாதனையாளர்களுக்கு அங்கீகாரம் கிடைப்பது பெரிய போராட்டமாக இருப்பது தமிழர்களின் துரதிருஷ்டம். ஒரு பத்மஸ்ரீயாவது இத்தனை நாளில் கிடைத்திருக்க வேண்டாமா?

எனக்கு அதிகமாக எழுதப் பிடிக்கவில்லை. அவரது ஆர்வமும் உழைப்பும் நிறைவைத் தந்தது. அந்த நிறைவை விவரிக்க முடியும் என்று தோன்றவில்லை. கட்டாயம் வாங்கிப் படியுங்கள் என்பதோடு நிறுத்திக் கொள்கிறேன்.

அ.கா. பெருமாள் தொகுத்த சில நாட்டார் தெய்வங்கள் பற்றிய குறிப்புகளை இங்கே காணலாம்.

தொடர்புள்ள சுட்டி: சுரேஷ் கண்ணனின் பதிவு

நவம்பர் மாதம் – நேஷனல் நாவல் ரைட்டிங் மன்த்

நவம்பர் மாதம் நேஷனல் நாவல் ரைட்டிங் மன்த் என்று வருஷாவருஷம் கொண்டாடப்படுகிறதாம். சமீபத்தில் வெளியான வாட்டர் ஃபார் எலிஃபண்ட்ஸ் (Water for Elephants) என்ற திரைப்படத்தின் மூல நாவல் இந்த போட்டிக்காக எழுதப்பட்டதுதானாம். அமெரிக்கர்கள்தான் பங்கேற்க வேண்டுமா என்று தெரியவில்லை, ஆனால் ஆங்கிலத்தில்தான் எழுத வேண்டும். 🙂 விருப்பம் இருப்பவர்கள் எழுதிப் பாருங்களேன்!

தொடர்புடைய சுட்டி: நேஷனல் நாவல் ரைட்டிங் மன்த் தளம்