சுஜாதாவின் “டாக்டர் நரேந்திரனின் வினோத வழக்கு”

இதுதான் சுஜாதாவின் நாடகங்களில் அதிக வெற்றி பெற்றது என்று நினைவு.

டாக்டர் நரேந்திரன் தமிழுக்கு நல்ல நாடகம். On absolute terms, சிம்பிளான முடிச்சுகள் உள்ள, யூகிக்கக் கூடிய நாடகம். பூர்ணம் விஸ்வனாதனுடைய திறமையை showcase செய்ய எழுதப்பட்ட நாடகமாகத் தெரிகிறது. சில நாடக டெக்னிக்குகளை (ஒளி அமைப்பு, திரை இழுக்காமல் ஸ்டேஜின் பல இடங்களில் பல காட்சிகளை நடத்துவது, ராஷோமான் மாதிரி ஒரே காட்சியை இரண்டு ஃப்ளாஷ்பாக்கில் வேறு வேறு விதமாகக் காட்டுவது, க்ளைமாக்ஸ் வரும்போது ஆடியன்ஸைப் பார்த்து சிரிப்பது) காட்ட எழுதப்பட்ட நாடகமாகத் தெரிகிறது. சிவாஜி கணேசனுக்கு கவுரவம் திரைப்படம் போல என்று வைத்துக் கொள்ளுங்களேன். ஆனால் நிச்சயமாக என்ஜாய் செய்து பார்க்கக் கூடிய நாடகம். படிக்கும்போது எனக்கு பூர்ணத்தின் குரல் கேட்டுக் கொண்டே இருந்தது.

டாக்டர் நரேந்திரன் மீது மூன்று குற்றச்சாட்டுகள். கோமா ஸ்டேஜில் இருந்த ஒரு கிழவனின் life support-ஐப் பிடுங்கிவிட்டு அவனை சாகடித்தார்; அரசு மருத்துவமனையின் விதிகளை மீறி ஒரு இளம் பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்து வைத்தார்; இன்னும் அனுமதி கிடைக்காத ஒரு மருந்தை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒரு சிறுவனுக்குக் கொடுத்து அவனையும் சாகடித்தார். உண்மை என்னவாக இருக்கும் என்று சுலபமாக யூகிக்கலாம். ஆனால் டாக்டருக்கே சிறுவன் இறந்ததில் குற்ற உணர்ச்சி இருக்கிறது, தனக்கு தண்டனை கிடைப்பதே நியாயம் என்று அவரே நினைக்கிறார். கணேஷ்-வசந்த் டாக்டருக்காக வாதிடுகிறார்கள். உண்மையை வெளியே கொண்டு வருகிறார்கள். நீதிபதி, சாட்சி எல்லாருமே எதிராக மாறி டாக்டர் சிறை செல்கிறார்.

நாடகத்தின் பெரிய பலம் டாக்டர் பாத்திரம்தான். பூர்ணம் போன்ற சிறந்த நடிகர்கள் இந்த மாதிரி ரோலுக்காகத்தான் வாழ்கிறார்கள். கொஞ்சம் திமிர், கொஞ்சம் அலட்சியம், நேர்மை எல்லாம் கலந்த ஒரு படைப்பு. இரண்டாவதாக விறுவிறு என்று போகும் திரைக்கதை. சில ஓட்டைகள் யோசித்தால்தான் தெரிகிறது. உதாரணமாக டாக்டர் கடைசி விசாரணையின்போது தனக்கு தண்டனை கிடைப்பது நியாயம் என்ற நிலையை விட்டு தான் செய்தது சரி என்று வாதிடுகிறார்.

நிச்சயமாகப் படிக்கலாம். ஆனால் பார்ப்பது (பூர்ணம் நடித்த வீடியோ ஏதாவது இருக்கிறதா?) இன்னும் நல்லது.

பிற்சேர்க்கை: விமல் புண்ணியத்தில் மின்னூலை தரவிறக்கிக் கொள்ளலாம்.

தொடர்புடைய சுட்டிகள்:
சுஜாதாவின் நாடகம் – ஊஞ்சல்
சிமுலேஷன் இந்த நாடகத்தைப் பற்றி