வெட்டுப்புலி

சில புத்தகங்களைப் பற்றி கேள்விப்படும்போதே பிடித்துவிடும் என்று தெரிகிறது. வெட்டுப்புலி அப்படிப்பட்ட புத்தகங்களில் ஒன்று.

நான் சிறுவனாக இருந்தபோது வெட்டுப்புலி தீப்பெட்டிகள் பிரபலம். அப்போதெல்லாம் வெட்டுப்புலி தீப்பெட்டி இல்லாத வீடே தமிழ்நாட்டில் எங்கும் இருந்திருக்காது. அதுதான் நன்றாக பற்றிக் கொள்ளும் என்றெல்லாம் சொல்வார்கள், நன்றாக நினைவிருக்கிறது. அது என்ன யாரோ புலியை வெட்டப் போகிறானே என்றெல்லாம் ஒரு யோசனையும் தோன்றியதில்லை. தமிழ்மகனுக்கு தோன்றி இருக்கிறது. அது உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட ஓவியம் என்று ஒரு premise வைத்துக் கொள்கிறார். சின்னா ரெட்டி அப்படி உண்மையிலேயே சிறுத்தையை வெட்டினார், அவரது படத்தைத்தான் தீப்பெட்டி logo-வாக வைத்து விற்கிறார்கள் என்ற தியரியோடு கதை ஆரம்பிக்கிறது. யார் அந்த சின்னா ரெட்டி என்று மூன்று நண்பர்கள் அந்தக் குடும்பத்தின் வேர்களை தேடுகிறார்கள். அதை ஒரு சட்டமாக வைத்து கடந்த நூறு வருஷ செய்திகளை ஒரு குறுக்குவெட்டுப் பார்வையில் சித்தரித்திருக்கிறார் தமிழ்மகன். உண்மையைச் சொல்லப் போனால் சின்னா ரெட்டியின் குடும்பம், கிராமம், மற்றவர்கள், நிகழ்ச்சிகள் எதுவும் அவ்வளவு முக்கியமில்லை.

வெட்டுப்புலியில் ஆழம் கிடையாது. மேலோட்டமான கதைதான். பிரமாதமான தரிசனம், மனிதர்களை தோலுரித்துக் காட்டிவிடுவது, உச்சம் கிச்சம் என்றெல்லாம் ஒன்றும் கிடையாது. ஒரு விதத்தில் பார்த்தால் பத்திரிகை தலைப்பு செய்திகளை வைத்து ஒரு கதை எழுதிய மாதிரி இருக்கிறது. அதனால் ஒன்றும் குறைந்துவிடவில்லை. சுவாரசியம் இருக்கிறது. சமீப கால வரலாறு, குறிப்பாக திராவிட இயக்கத்தின் வரலாறு, தாக்கம் – பிராமண எதிர்ப்பு உட்பட – பதிவு செய்யப்பட்டிருக்கிறது. காலம் மாறுவது பதிவு செய்யப்பட்டிருக்கிறது. எனக்குத் தெரிந்து செங்கல்பட்டு மாவட்டத்தை, அதன் தெலுங்கு பின்புலத்தை, தளமாக வைத்து எழுதப்பட்ட முதல் நாவல் இதுதான்.

இதன் முக்கியத்துவம் சமகால வரலாற்று நாவல் என்பதுதான். நல்ல நாவல், படியுங்கள் என்று சிபாரிசு செய்கிறேன்.

தொடர்புள்ள சுட்டிகள்:
தமிழ்மகனின் தளம்
சிலிகான் ஷெல்ஃப் குழும உறுப்பினர் அருணகிரியின் விமர்சனம்