பாலகுமாரனின் “அகல்யா”

அகல்யா பாலகுமாரனின் நல்ல நாவல்களில் ஒன்று. உருகல், நெகிழ்தல் எல்லாம் கொஞ்சம் அதிகம்தான்; முடிவு செயற்கையாக இருக்கும். ஆனாலும் அது அவரது நல்ல நாவல்களில் ஒன்று.

அனேகமாக எல்லாரும் படித்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். சிவசு ஒரு விதவையை மணப்பேன் என்று விளம்பரம் கொடுக்கிறான். அகல்யாவை சந்திக்கிறான். காதல், கல்யாணம், அகல்யா ஆசைப்பட்ட மாண்டிசோரி ஸ்கூல் என்று வாழ்க்கை போகிறது. நாவல் என்றால் ஏதாவது பிரச்சினை இருக்க வேண்டாமா? அதனால் ஸ்கூலில் வேலை பார்க்கும் ஏழைப் பெண் வத்சலா சிவசுவால் கவரப்படுகிறாள். அகல்யா கடுப்பாகிறாள். இதற்குள் செத்துப் போனான் என்ற நினைத்த கணவன் திரும்பி கதையை கிடுகிடுவென்று முடித்து வைக்கிறார்.

சிறந்த பகுதி என்றால் அகல்யாவும் சிவசுவும் காதல்வசப்படுவதுதான். நல்ல மனிதர்கள் சந்திக்கும்போது படிப்படியாக அன்னியோன்யம் பெருகுவதை நன்றாக சித்தரித்திருப்பார். அதே போல வத்சலா சிவசுவால் ஈர்க்கப்படுவதையும் நன்றாக சித்தரிப்பார். சிவசுவின் பாத்திரப் படைப்பும் நன்றாக வந்திருக்கும். எத்தனைதான் மெலோட்ராமாவாக இருந்தாலும் கதையின் இறுதியில் சிவசு அகல்யாவின் முதல் கணவனைத் தேடிப் போவது எனக்கு ஒரு மானுட உச்சத்தைக் காட்டியது.

எல்லோரும் நல்லவரே என்றால் கதையில் முடிச்சுக்கும் டென்ஷனுக்கும் எங்கே போவது? அதற்காக பின்பாதியில் சம்பவங்கள் வலிந்து புகுத்தப்பட்டதாகத் தோன்றியது.

நூல் உலகம் தளத்தில் கிடைக்கிறது. விலை 70 ரூபாய்.

நல்ல நாவல், படியுங்கள் என்று சிபாரிசு செய்கிறேன்.

தொடர்புடைய சுட்டிகள்:
பாலகுமாரனின் தளம்
பாலகுமாரன் பக்கம்