பாலகுமாரனின் “அகல்யா”

அகல்யா பாலகுமாரனின் நல்ல நாவல்களில் ஒன்று. உருகல், நெகிழ்தல் எல்லாம் கொஞ்சம் அதிகம்தான்; முடிவு செயற்கையாக இருக்கும். ஆனாலும் அது அவரது நல்ல நாவல்களில் ஒன்று.

அனேகமாக எல்லாரும் படித்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். சிவசு ஒரு விதவையை மணப்பேன் என்று விளம்பரம் கொடுக்கிறான். அகல்யாவை சந்திக்கிறான். காதல், கல்யாணம், அகல்யா ஆசைப்பட்ட மாண்டிசோரி ஸ்கூல் என்று வாழ்க்கை போகிறது. நாவல் என்றால் ஏதாவது பிரச்சினை இருக்க வேண்டாமா? அதனால் ஸ்கூலில் வேலை பார்க்கும் ஏழைப் பெண் வத்சலா சிவசுவால் கவரப்படுகிறாள். அகல்யா கடுப்பாகிறாள். இதற்குள் செத்துப் போனான் என்ற நினைத்த கணவன் திரும்பி கதையை கிடுகிடுவென்று முடித்து வைக்கிறார்.

சிறந்த பகுதி என்றால் அகல்யாவும் சிவசுவும் காதல்வசப்படுவதுதான். நல்ல மனிதர்கள் சந்திக்கும்போது படிப்படியாக அன்னியோன்யம் பெருகுவதை நன்றாக சித்தரித்திருப்பார். அதே போல வத்சலா சிவசுவால் ஈர்க்கப்படுவதையும் நன்றாக சித்தரிப்பார். சிவசுவின் பாத்திரப் படைப்பும் நன்றாக வந்திருக்கும். எத்தனைதான் மெலோட்ராமாவாக இருந்தாலும் கதையின் இறுதியில் சிவசு அகல்யாவின் முதல் கணவனைத் தேடிப் போவது எனக்கு ஒரு மானுட உச்சத்தைக் காட்டியது.

எல்லோரும் நல்லவரே என்றால் கதையில் முடிச்சுக்கும் டென்ஷனுக்கும் எங்கே போவது? அதற்காக பின்பாதியில் சம்பவங்கள் வலிந்து புகுத்தப்பட்டதாகத் தோன்றியது.

நூல் உலகம் தளத்தில் கிடைக்கிறது. விலை 70 ரூபாய்.

நல்ல நாவல், படியுங்கள் என்று சிபாரிசு செய்கிறேன்.

தொடர்புடைய சுட்டிகள்:
பாலகுமாரனின் தளம்
பாலகுமாரன் பக்கம்

11 thoughts on “பாலகுமாரனின் “அகல்யா”

 1. ஆர். வி

  நான் ரொம்ப வருடங்களுக்கு முன்னால படித்த ஞாபகம் இருக்கு. அப்ப பிடித்திருந்தது. இப்ப பிடிக்காதுன்னு நினைக்கிறேன். பாலகுமாரனுக்கு பெண்களைப்பற்றிய ஒரு மிகையான உணர்ச்சி எப்பவுமே இருந்திருக்கிறது. நிறைய பெண்களுக்கும் இது ஏனோ பிடித்தும் இருக்கு. வாசந்தியோட ஒரு கதைன்னு நினைக்கிறேன். உணர்ச்சிகரமா பேசி பேசி ரெண்டு பெண்களை திருமணம் செய்யும் ஒரு நண்பனை பார்த்து தானும் முயன்று தோற்றுப்போகும் ஒருவனது கதை ரொம்ப நக்கலா இருக்கும். பேர் ஞாபகம் இல்லை. ஆனா பா.குமாரனை வாரரன்னு நினைத்து படித்து சிரித்த ஞாபகம்.

  Like

 2. எனக்கு பாலகுமாரன் எழுத்து அவ்வளவாக பிடிக்காது. ஒரு மேதாவித்தனம் இருக்கும். சமீபத்தில் ‘கரையோர முதலைகள்’ (மறுபடி) படித்தேன். அதில் வரும் எல்லா கதாப்பாதிரங்களும் செயற்கை! அதிலும் அந்த பத்மஜா கதாப்பாத்திரம் காதலுக்கு தரும் விளக்கம் இருக்கே – எந்தக் காலத்திற்கும் ஒத்து வராது!

  Like

 3. மன உணர்வுகளை வார்த்தையாக்கும் விதம் இந்த நாவலைப்போல் வேறு எந்த பாலகுமாரன் நாவலிலும் இல்லை.

  இதில் அவரது எழுத்தின் வீச்சை அனுபவித்தேன்:)
  பகிர்வுக்கு வாழ்த்துகள் சகோ.

  Like

 4. ஆர்வி

  நம்ப முடியவில்லை. பாலகுமாரனின் பல படைப்புகள் மிக மிகச் செயற்கையானவை. பெண்களை அப்படியே வானளவுக்கு உயர்த்தி ரொம்ப மிகையாக எழுதியிருப்பார். பட் வார்த்தை ஜாலங்களிலும் பாத்திரப் படைப்புகளிலும் தேர்ந்தவர். அந்த வகையில் ஜாலகுமாரன். எனக்கு உங்களைக் கவர்ந்ததுதான் வியப்பு. அவருடைய சுயசரிதையைப் படித்திருக்கிறேன் (இதற்குத்தானே ஆசைப்பட்டாய் etc..) இந்த நாவலுக்கும் அவரது வாழ்க்கை அனுபவங்களுக்கும் ஏதோ ஒரு விதத்தில் தொடர்பு இருக்கும் என நம்புகிறேன்,

  Like

 5. பாலகுமாரனின் ‘இரும்புக்குதிரைகள்’, ‘மெர்க்குரிப்பூக்கள்’ இவற்றோடு ஒப்பிடுகையில் இதில் விறுவிறுப்பு குறைவுதான். இறுதியில், எதையாவது செய்து எப்படியாவது முடித்தால் போதும் என்கிற ரீதியில் ஒரு அவசரம் தென்படும். ‘தாயுமானவன்’ கதையில் நடுவில் சாது வரும் காட்சிகளில் தொய்வு விழுவது போல இதிலும் தொய்வு விழும். தூக்கி நிறுத்த சற்று சிரமப்படுவார்.

  Like

 6. பாலகுமாரன் திஜா-வைப் பார்த்து சூடு போட்டுக்கொண்டவர். அவரின் பெண்கள் கதாபாத்திரங்கள் ஒரு ஆண், பெண் எப்படி தனக்கு இருக்க வேண்டும் என்று யோசிப்பானோ அப்படியே வார்த்தது போல் இருக்கும் (இதை நாங்கள் ‘கஞ்சா அடித்துக் கொண்டு யோசித்தல்’ என்போம்). நம் சமுகத்தில் girl/boy friend concept 1980 -களில் பரவலாக இல்லாததால் அவரால் பல படைப்புகளை வாசகர்களிடத்தில் செலுத்த முடிந்தது. ஆனால் பாலகுமாரன் ஸ்கோர் செய்தது இயல்பான வசனங்கள் மூலம். ‘நிழல் யுத்தம்’, ‘இரும்புக் குதிரைகள்’ என்று பல உதாரணங்கள்.

  ஆதவன் கதைகளும் ஆண்/பெண் உறவுகளைப் பேசுபவையே. ஆனால் அவரால் நடுத்தர வர்க்க மனவோட்டத்தை மிக இயல்பாகக் கொண்டு வர முடிந்தது. பாலகுமாரன் பாத்திரங்கள் கால் பாவாமல் உலாவுபவை.

  Like

 7. >>ramanans: இந்த நாவலுக்கும் அவரது வாழ்க்கை அனுபவங்களுக்கும் ஏதோ ஒரு விதத்தில் தொடர்பு இருக்கும் என நம்புகிறேன்,

  அவரின் ‘என்றென்றும் அன்புடன்’ அவரின் வாழ்க்கை சம்பவங்களுக்கு மிக அருகில் இருக்கும். அதில் கதாநாயகன் இரண்டாம் திருமணம் செய்வதை விளக்கியிருப்பார். அவரின் personal life-ஐ நான் இங்கு பேசவில்லை. கதையில் நாயகன் கொடுக்கும் காரணங்கள் எரிச்சலை வரவழைத்தது.

  Like

 8. அருணா, நீங்கள் சொல்லும் வாசந்தியின் கதையை நானும் படித்திருக்கிறேன். 🙂

  உஷா, பாலகுமாரனின் படைப்புகளில் – குறிப்பாக பிற்காலப் படைப்புகளில் அவர் தன்னை தமிழர்களின் குரு என்று நினைத்துக் கொண்டிருக்கிறாரோ என்று தோன்றும் அளவுக்கு உபதேசம் செய்து கொண்டே இருப்பார். அது எரிச்சலூட்டும் விஷயம்தான்.

  நிகழ்காலத்தில், இந்த படைப்பில் குறைகள் உண்டு. ரமணன் சொல்வது போல செயற்கைத்தனம், வலிந்து புகுத்தப்படும் “நல்ல”தனம் எல்லாம் உண்டு. இருந்தாலும் இது அலட்சியப்படுத்தக் கூடிய படைப்பு இல்லை.

  சாரதா, ஆம் கதையை அவர் கற்பனை செய்த விதத்தில் பிரச்சினையே இருந்திருக்காது. வாரப் பத்திரிகை தொடர்கதைக்கு சம்பிரதாயமான ஆரம்பம், பிரச்சினை, முடிவு எல்லாம் வேண்டும். என்ன செய்வது என்று தெரியாமல் பிற்பகுதியை செயற்கையாக்கிவிட்டார்.

  ராஜ் சந்திரா, தி.ஜா.வின் தாக்கம் நிறைய உள்ளவர்தான் பாலகுமாரன். அவர் அளவுக்குத் தரம் வரவில்லை. ஆனால் அவர் எடுத்துக் கொண்டிருக்கும் களம் – தமிழ் நாட்டில் பல தரப்பட்ட சூழல்கள் – மிகவும் அகலமானது. வெற்றிக்குப் பின்னால் போகாமல் இருந்திருந்தால் அவர் இன்னும் உயர்ந்த படைப்புகளை எழுதி இருப்பார் என்று நினைக்கிறேன்.

  Like

 9. அவர் தன்னுடைய பிரபலத்தையும் வெற்றியையும் பெறுவதற்கு எழுதி, பெற்று – பிறகு தக்க வைத்துக்கொள்ளவும் முயன்றார். மேலும் அவர் எழுதிய காலத்தில் ஒரு புதிய அலை வாரப்பத்திரிகை அலை இருந்தது. அந்த சமயத்தில் அவர் நிறைய இளைஞர்களை இளைஞ்சிகளை ஈர்த்தார். அவருடைய எழுத்தை பொத்தாம் பொதுவான ஒரு விர்மர்சனமாக சொல்லி விடுவது முற்றிலும் நியாமாகாது. படித்து படித்து அறிந்து அறிந்து மேலும் ஒரு வாசகன் தன்னுடைய எல்லைகளை விரிவு படுத்திக்கொண்டே போவதே சரியான வாசிப்பு என்று கொண்டால் – பாலகுமாரன் ஒரு லேயரில் இருப்பார். நீண்ட நாட்களுக்குப் பிறகு இரும்பு குதிரை படித்தபோது ஏமாற்றம் ஏற்பட்டது. ஆனால் அது எழுதப்பட்ட காலத்தில் அது நிறைய பேருக்கு ஏமாற்றத்தை தந்திருக்காது என்றே தோன்றுகிறது. எனக்கென்னவோ அவருடைய நிழல் யுத்தம் நல்ல கதை என்று தோன்றுகிறது. கந்தல் வள்ளி என்று சணல் கயிறுகள் பேசிக்கொள்ளும் பாரதியின் உரையாடலை சொல்லி ஆரம்பிக்கும் கதை என்று ஞாபகம்.

  Like

  1. ரமேஷ், என் கண்ணில் பாலகுமாரன் நீர்த்துப் போன ஒரு எழுத்தாளர். எக்கச்சக்க குப்பைகளை எழுதி இருக்கிறார். அவரது ஆரம்ப கால நாவல்களை மட்டுமே படித்து நான் ஒரு காலத்தில் அவரை தி.ஜா.வுக்கும் மேலாக மதிப்பிட்டேன். மேலும் மேலும் படிக்க படிக்கத்தான் புரிகிறது…

   Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.