சினிமா – எமிலி ஜோலாவின் வாழ்க்கை

ஒரு பழைய படத்தை – Life of Emile Zola – சமீபத்தில் பார்த்தேன். பால் முனி எமிலி ஜோலாவாக நடித்திருக்கிறார். சூப்பர் டூப்பர் என்றெல்லாம் சொல்ல மாட்டேன், ஆனால் நல்ல படம்.

நான் எமிலி ஜோலாவின் புத்தகங்களை இது வரை படித்ததில்லை. ட்ரேஃபஸ் விவகாரத்தில் போராடினார் என்று தெரியும், அவ்வளவுதான். திரைப்படத்தைப் பார்த்த பிறகுதான் ஜோலா ஓவியர் பால் செசானின் (Paul Cezanne) நெருங்கிய நண்பர், சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டிருக்கிறார் என்பதெல்லாம் தெரிந்தது. படம் எனக்கு ரொம்ப சுவாரசியமாக இருந்தது.

செசானும் ஜோலாவும் ஒரு ஜன்னல்கள் உடைந்து குளிர் காற்று வீசிக் கொண்டிருக்கும் சின்ன garret-இல் வாடகை கொடுக்க முடியாமல் கஷ்டப்படும் காட்சியோடு திரைப்படம் ஆரம்பிக்கிறது. ஜோலாவுக்கு ஒரு பதிப்பகத்தில் வேலை கிடைக்கிறது. அவர் எழுதிய Confessions of Claude அவரை பிரச்சினைகளில் தள்ளுகிறது. போலீஸ் அவரை எச்ச்சரிகிறது. வேலை போகிறது. ஒரு விபசாரியை சந்திக்கிறார். அவளை கருவாக வைத்து அவர் எழுதும் நானா என்ற புத்தகம் பெரிய ஹிட் ஆகிறது. (அவர் அந்தப் புத்தகத்துக்காக கொஞ்சம் அட்வான்ஸ் கேட்க வரும் காட்சி மிக நன்றாக இருந்தது) பணம், புகழ் எல்லாம் வருகிறது. அவரை மீண்டும் சந்திக்கும் செசான் நட்பு முறையில் அவரது பணம்/புகழ் பற்றி ஜோலாவை எச்சரிக்கிறார்.

ஃபிரெஞ்ச் ராணுவத்தில் ஒரு உயர் அதிகாரி ஜெர்மனி ஒற்றர் என்று தெரிகிறது. சந்தேகம் ட்ரேஃபஸ் என்ற யூத அதிகாரி மீது விழுகிறது. அவர் சிறைக்கு அனுப்பப்படுகிறார். சில வருஷங்கள் கழித்து கர்னல் பிக்வார்ட் என்பவர் ட்ரேஃபஸ் குற்றமற்றவர், எஸ்டர்ஹாசி என்பவர்தான் உண்மையான குற்றவாளி என்று கண்டுபிடிக்கிறார். ஆனால் ராணுவத்தின் மீது யாரும் குறை சொல்லக்கூடாது என்று உண்மை அமுக்கப்படுகிறது. ஜோலா புகழ் பெற்ற J ‘Accuse என்ற கடித்தத்தைப் பதிக்கிறார். அவர் மீது மான நஷ்ட வழக்கு, அவருக்கு ஒரு வருஷம் ஜெயில் தண்டனை கிடைக்கிறது. ஜோலா இங்கிலாந்துக்கு தப்பி விடுகிறார். கடைசியில் உண்மை வெளி வருகிறது. ட்ரேஃபஸ் மீண்டும் ராணுவத்தில் பதவி ஏற்கிறார். ஆனால் ஜோலா அதற்குள் இறந்துபோகிறார்.

ஜோலா அந்தக் கடிதத்தைப் டிக்டேட் செய்வது மிக நன்றாக இருந்தது. அவர் ஜூரிகளிடம் நிகழ்த்தும் உரையும் அருமை.

பால் முனி சிறப்பாக நடித்திருக்கிறார். நல்ல வசனங்கள். இது சினிமா சாதனை இல்லாவிட்டாலும் நல்ல கருவை கெடுக்காமல் காட்டி இருக்கிறார்கள். ஒரு ஜெயகாந்தனைப் பற்றி, அசோகமித்ரனைப் பற்றி, இப்படி ஒரு படம் வந்தால் ஆ என்று பார்த்துக் கொண்டு இருக்கலாம். என்று வருமோ? நானே நிறைய பணம் சம்பாதித்து எடுத்தால்தான் உண்டு போலிருக்கிறது.

பழைய கறுப்பு வெள்ளை படம். 1937-இல் வந்திருக்கிறது. சிறந்த படத்துக்கான ஆஸ்கர் விருதை வென்றிருக்கிறது. ட்ரேஃபஸ்ஸாக நடித்த Joseph Schildkraut-க்கும் சிறந்த துணை நடிகர் விருது கிடைத்திருக்கிறது. இயக்கம் William Dieterle.

தொகுக்கப்பட்ட பக்கம்: திரைப்படங்கள்

தொடர்புடைய சுட்டிகள்:
எமிலி ஜோலா – விக்கி குறிப்பு
Dreyfus Affair – விக்கி குறிப்பு
Life of Emile Zola – IMDB குறிப்பு
J’Accuse – ஆங்கில மொழிபெயர்ப்பு