சுமந்த்ரா போஸ் எழுதிய “காஷ்மீர்”

சுமந்த்ரா போஸ் லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் பேராசிரியர். வட அயர்லாந்து, போஸ்னியா போன்ற trouble spots-ஐ ஆய்வு செய்திருக்கிறார். அவரது நிபுணத்துவத்துவத்தை இப்போது காஷ்மீர் பிரச்சினையில் காட்டுகிறார். நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இவருக்கு சின்னத் தாத்தா. இவர் சுபாஷ் போசின் அண்ணனான சரத் போசின் பேரன்.

போஸ் மூன்று முக்கிய பாயிண்ட்களை எடுத்து வைக்கிறார்.

 1. 1990 வாக்கில் பெரிதாக வெடித்த காஷ்மீர் பிரச்சினையின் மூல காரணம் 47-க்குப் பிறகு காஷ்மீரிகளின் அடிப்படை ஜனநாயக உரிமைகள் இந்திய அரசால் மறுக்கப்பட்டதே. சுய நிர்ணயம் என்று சொல்லப்படுவதை தங்கள் நாடு எது என்று தாங்களே தீர்மானித்துக் கொள்வோம் என்ற அதிகபட்ச நிலையிலிருந்து பல கட்சி ஜனநாயகம் என்ற நிலைக்குக் கீழே இறக்குவதே இந்தியாவின் முக்கிய சவால்.
 2. ஜனநாயகம் என்று சொல்வது சுலபம். ஆனால் இந்தியா, பாகிஸ்தான் இரண்டும் தங்கள் அதிகபட்ச நிலையிலிருந்து இறங்கி வரத் தயாராக இல்லை என்பதுதான் ப்ராக்டிகல் நிலைமை. காஷ்மீரை தன மதசார்பற்ற தன்மையின் நிரூபணமாக இந்தியா பார்க்கிறது. காஷ்மீருக்கு வெளியே 15 கோடி முஸ்லிம்கள் இருக்குபோது இப்படி ஒரு நிரூபணம் இந்தியாவுக்கு ஏன் தேவைப்படுகிறது என்று புரிந்து கொள்வது கஷ்டம். பாகிஸ்தான் 47-இலிருந்தே முஸ்லிம்கள் மெஜாரிட்டியாக இல்லாத காஷ்மீர் பாகிஸ்தானின் ஒரு பங்காக இல்லாவிட்டால் பாகிஸ்தான் முழுமை அடையாது என்ற கோட்பாட்டின் அடிப்படையில் செயல்படுகிறது. இதையும் புரிந்து கொள்வது கஷ்டம். முஸ்லிம்கள் நிறைந்த பங்களாதேஷ் பிரிந்து 40 வருஷம் ஆகிறது. ஆனால் இங்கே லாஜிக் செல்லாது. கோட்பாட்டில் ஓட்டை கண்டுபிடிப்பதில் பயனில்லை. இதுதான் ப்ராக்டிகல் நிலை என்று புரிந்து கொள்ளாமல் தீர்வுக்கு வாய்ப்பே இல்லை. காஷ்மீர் இந்தியாவின் integral part என்று இந்தியாவும் jugular vein என்று பாகிஸ்தானும் மீண்டும் மீண்டும் அறைகூவுகின்றன. இந்த இரண்டு நிலைகளுமே காஷ்மீர் பல இனங்களைக் கொண்ட ஒரு pluralistic சமூகம், அதை எப்படிப் பிரிததாலும் ஒவ்வொரு geographic entity-இலும் ஒரு கணிசமான மைனாரிட்டி வேறு தீர்வை விரும்பும் என்பதை கணக்கில் கொள்வதில்லை. மூன்றாவதும் ஒரு நிலை – சுதந்திர காஷ்மீர் – இருக்கிறது, அதற்கும் கணிசமான ஆதரவு இருக்கிறது, அதனால் குட்டை இன்னும் குழம்புகிறது.
 3. காஷ்மீரின் நிலை unique இல்லை. சைப்ரஸ், போஸ்னியா, வட அயர்லாந்து ஆகிய இடங்களில் இதே போன்ற பிரச்சினைகளைக் காணலாம். அங்கே முயற்சிக்கப்பட்ட தீர்வுகளின் வெற்றி தோல்வியை ஆராய்வது இங்கேயும் உதவியாக இருக்கும்.

புத்தகத்தில் எனக்குப் பிடித்தது அவரது ப்ராக்டிகல், pragmatic கோணம். உதாரணமாக காஷ்மீர் இந்தியாவோடு இருக்க வேண்டுமா வேண்டாமா என்பதற்காக வாக்கெடுப்பு நடத்துவதாக நேரு கொடுத்த வாக்குறுதி, ஐ.நா. தீர்மானங்கள். இந்தியா கொடுத்த வாக்குறுதியை நேரு காலத்திலேயே கழற்றிவிட்டது அநியாயம்தான் என்பதை தெளிவாக வெளிப்படையாக சொல்கிறார். ஏறக்குறைய அதே வரியிலேயே கழற்றிவிட்டது அநியாயம் என்றாலும் இன்று வாக்கெடுப்பு என்று பேசுவது ப்ராக்டிகல் இல்லை, முட்டாள்தனம் என்றும் தெளிவாக வெளிப்படையாக சொல்கிறார். வாக்கெடுப்புக்கான காலம் போய்விட்டது.

இந்தியாவைப் பொறுத்த வரையில் என்ன பிரச்சினை? கணிசமான காஷ்மீரிகள் இந்தியக் குடிமகன்களாக இருக்க விரும்பவில்லை என்பதுதான். சுதந்திர காஷ்மீர் என்ற கனவு இன்னும் உயிரோடு இருக்கிறது, பெரும்பான்மையான காஷ்மீரிகள் – இந்திய காஷ்மீரிகள் மற்றும் பாகிஸ்தானில் இன்று வாழும் காஷ்மீரிகள் – தனி நாடு என்ற ரொமாண்டிக் கனவோடு இருக்கிறார்கள். ஆனால் இவர்கள் மெஜாரிட்டி – ஐம்பது சதவிகிதத்துக்கு மேலானவர்கள் இல்லை.

வாக்கெடுப்பு என்ற கோட்பாட்டின் குறைபாடுகளை போஸ் மிக அழகாக விளக்குகிறார். காஷ்மீர் பல இனங்கள் உள்ள ஒரு சமூகம். மூன்று நிலைகளுக்கும் – காஷ்மீர் பாகிஸ்தானில் இருக்க வேண்டும், இந்தியாவில் இருக்க வேண்டும், சுதந்திர காஷ்மீர் – எல்லா இடங்களிலும் ஆதரவு இருக்கிறது. எந்த நிலைக்கும் எங்கும் – ஜம்முவிலும், காஷ்மீர் பள்ளத்தாக்கிலும், பாகிஸ்தான் காஷ்மீரிலும் கூட – overwhelming majority இல்லை. பாகிஸ்தான் காஷ்மீரில் கூட இந்தியாவோடு போக வேண்டும் என்று நினைப்பவர்கள் கணிசமானவர்கள் உண்டு. இந்தியாவோடு இருக்க விரும்புபவர்கள் கணிசமானவர்கள். காஷ்மீர் பள்ளத்தாக்கிலேயே கணிசமான மைனாரிட்டி. பாகிஸ்தானோடு போக விரும்புபவர்களும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களுடைய விருப்பத்தை புறக்கணிப்பது நியாயமில்லையே? ஜம்மு பகுதியிலும் அப்படி இந்தியாவோடு இருக்க விரும்பாத கணிசமான மைனாரிட்டி முஸ்லிம்கள் மெஜாரிடியாக இருக்கும் டோடா போன்ற மாவட்ட்டங்களில் இருக்கிறார்கள். அந்த மாவட்டங்களிலும் இந்தியாவோடு இருக்க விரும்பும் நகரங்கள் உண்டு. வாக்கெடுப்பின் winner takes all methodology இப்படிப்பட்ட கணிசமான மைனாரிட்டிகளின் விருப்பத்தை கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை.

காஷ்மீரிகளுக்கு இழைக்கப்பட்ட ஜனநாயக அநீதிகளை போஸ் புட்டுப் புட்டு வைக்கிறார். ஷேக் அப்துல்லா காலத்திலிருந்தே மத்திய அரசுக்கும் காஷ்மீர் அரசுக்கும் ஒரு எழுதப்படாத ஒப்பந்தம் இருந்திருக்கிறது. ஆட்சியில் இருக்கும் காஷ்மீர் தலைவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம், தங்களுக்கு எதிராக யாரும் தேர்தலில் நிற்காதபடி செய்யலாம். எப்படி? ஒரு சிம்பிளான வழி வேட்பு மனுவை நிராகரித்துவிடலாம். கள்ள ஓட்டு போட வைக்கலாம், அரசு எந்திரத்தை தனக்கு ஆதரவாக பணியாற்ற வைக்கலாம் இத்யாதி. பதிலுக்கு அவர்கள் மத்திய அரசின் மேலாண்மையை ஒரு அளவுக்கு மீறி கேள்வி கேட்கக் கூடாது. ஷேக் அப்துல்லா அப்படி ஓவராக சவுண்ட் விடாத வரைக்கும் அவர்தான் காஷ்மீரின் முதலமைச்சர்; சவுண்ட் விட்டதும் அவருக்கு ஜெயில், பக்ஷி குலாம் அஹமத் முதலமைச்சர். ஷேக் அப்துல்லா காம்ப்ரமைஸ் செய்து கொண்டபின் அவர் மீண்டும் முதல்வர்; 86-இல் ஃபரூக் அப்துல்லா முதல்வரானது இந்த farcial தேர்தல்களின் உச்சக்கட்டம்.

காஷ்மீரில் நிலவும் சுதந்திரக் கனவை போஸ் விவரிக்கிறார். அது ஒரு ரொமாண்டிக் கனவு என்று தெரிந்தாலும் கணிசமான காஷ்மீரிகள் அந்தக் கனவை காணத்தான் செய்கிறார்கள். பாகிஸ்தானிடம் உதவி பெறும் தீவிரவாதிகளே அந்தக் கனவை காணும்போது, சோழியன் குடுமி சும்மா ஆடாது என்று உணராதபோது, சாதாரணனுக்கு அந்தக் கனவு இருப்பதில் வியப்பில்லை.

காஷ்மீர் கிளர்ச்சியைப் பற்றியும் ஒரு chapter இருக்கிறது. பாகிஸ்தானின் பங்கு, காஷ்மீரிகளின் மனநிலை என்று இங்கே நிறையப் பேசுகிறார்.

போஸ் சொல்லும் தீர்வு என்ன? மீண்டும் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவதுதான். டெல்லியும் இஸ்லாமாபாத்தும் ஸ்ரீநகரும் ஜம்முவும் ஸ்ரீநகரும் முசாஃபராபாதும் பேச வேண்டும் என்கிறார். அவர் முன் வைக்கும் ரோல் மாடல் வட அயர்லாந்து. மனித உரிமை, போலீஸ் அமைப்புகள், தேர்தல்கள் மூன்றும் எந்தத் தீர்விலும் அமல்படுத்தப்பட வேண்டிய விஷயங்கள் என்கிறார்.

போசின் எல்லா வாதங்களிலும் எனக்கு இசைவில்லை. உதாரணமாக காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி என்பது இந்தியர்களின் தேசியப் பெருமிதம் (national pride) சார்ந்த விஷயம். மதச்சார்பின்மை என்பதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை. காஷ்மீரி பண்டிட்கள் மிகச் சிறிய மைனாரிட்டி என்கிறார். இது உண்மைதானா என்று எனக்குத் தெரியவில்லை.

இந்தியக் காஷ்மீரைப் பற்றி பெரிதாகப் பேசுகிறார், ஆனால் பாகிஸ்தானிய காஷ்மீரை அவ்வளவாக கண்டுகொள்வதில்லை. இந்தியாதான் இங்கே எல்லாரையும் விட முக்கியமான தரப்பு என்று அவர் காரணம் சொன்னாலும் புத்தகம் முழுமை பெறாமல் இருக்கிறது. அவர் லடாக், வட பகுதிகள், அக்சாய் சின் ஆகியவற்றைப் பற்றி பெரிதாகப் பேசுவதில்லை. அவருடைய focus எல்லாம் காஷ்மீர் பள்ளத்தாக்கிலும், ஸ்ரீநகரிலும், ஜம்முவிளும்தான் இருக்கிறது.

பொதுவாக நியாயமாக நடக்க வேண்டும் என்று நினைக்கும் ஒரு நல்ல இந்தியன் scholar இந்திய அரசுக்கு அறிவுரை சொல்லும் கோணத்தில் இருக்கிறது. அவரே இந்திய வம்சாவளியர் என்பதாலோ இல்லை இந்தியாதான் முக்கிய player என்பதாலோ என்று தெரியவில்லை. பாகிஸ்தானைப் பற்றி இன்னும் எழுதி இருக்கலாம்.

உண்மையான நடுநிலையாளர் எழுதி இருக்கும் உபயோகமான புத்தகம். 2003-இல் வந்திருக்கிறது. படியுங்கள் என்று சிபாரிசு செய்கிறேன்.

தொடர்புடைய சுட்டி: சுமந்த்ரா போசின் தளம்

4 thoughts on “சுமந்த்ரா போஸ் எழுதிய “காஷ்மீர்”

 1. நல்ல பதிவு ஆர்வி. இந்த்ப் புத்தகத்தைப் படிக்க வேண்டும்.

  ராமச்சந்திர குகா, தன் “India After Gandhi” புத்தகத்திலும் காஷ்மீர் பிரச்சனையின் தோற்றத்தை நன்றாக விவரித்துள்ளார். காஷ்மீர் மன்னர் இந்தியாவுடன் இனைய ஒப்பந்தமிட்ட போது, காஷ்மீர் மக்கள் தலைவர் ஷேக் அப்துல்லாவும் இந்தியாவுடன் இனைய விருப்பம் தெரிவித்துள்ளார். (கண்டிப்பாக பாக்கிஸ்தானுடன் போவதற்கு அவருக்கு விருப்பம் இல்லை. ‘சுதந்திர நாடு’ என்ற கனவு இருந்திருக்கலாம்). சீனப் ப்ரீமியர் சோ என்லாய் – ஷேக் சந்திப்பு,நேருவுக்கு ஷேக்கின் மேல் இருந்த நம்பிக்கையை சீர்குலைத்தது. அவர், இந்தியாவிற்கு திரும்பியதும் வீட்டுச் சிறையில் அடைக்கப்படுகிறார். இருப்பினும் நேருவின் கடைசி காலத்தில் மீண்டும் ஷேக்கை விடுவித்து, அவரை பாக்கிஸ்தானுக்கு அனுப்பி சமரசத்திற்கு முயல்கிறார். (ஷேக் மீது, பாக் பத்திரிக்கைகள் அதிருப்தி கொள்கின்றன. பாக்கிடம் அடைக்கலம் கோருவார் என்று நினைத்தால், இவர் ஏதோ இந்தியா – பாக் சமாதான தூதரைப்போல பேசுகிறாரே என்று கடுப்படைகின்றன). பாக் செல்லும் முன், ஷேக் ராஜாஜியை சந்தித்து ‘ராஜாஜி திட்டம்’ என்ற ஒன்றை விவாதிக்கிறார். அது என்ன என்று சரியாகத் தெரியவில்லை. இந்தியா – பாக் இனைந்து காஷ்மீருக்கு சுயாட்சி குடுப்பதாக இருக்கலாம்.

  அதே சமயம் படேல், அம்பேத்கர் போன்றவர்கள் காஷ்மீர் பிரச்சனையில் ஒரு விட்டுக்குடுக்கும் மனநிலையில் இருந்தனர் என்கிறார் குகா. பாக்கிஸ்தான் தலைவர்களை பொறுத்தவரை, யாராவது, காஷ்மீர் பிரச்சனையில் சமரசம் / விட்டுக் கொடுக்கலாம் என்று சொன்னாலே, அவருக்கு அரசியல் எதிர்காலம் இல்லை. ( ஆளே இல்லாமல் போகலாம் ).

  இதுவரை பேசி என்னத்த கண்டோம் என்று நினைத்தாலும், பேசுவதை விட்டால் வேறு வழியில்லை என்று தான் தோன்றுகிறது.

  Like

 2. மயிலேறி, புத்தகம் ஃ ப்ரீமான்ட் நூலகத்தில் கிடைக்கிறது.

  குஹா காஷ்மீரைப் பற்றி எழுதி சிறப்பாக எழுதி இருப்பார். ராஜாஜி திட்டத்தைப் பற்றிய சில விவரங்களை இந்தப் பதிவில் காணலாம். http://koottanchoru.wordpress.com/2009/10/26/ராமச்சந்திர-குஹாவின்-இந/

  Like

  1. பழைய ஆளு, அர்விந்த் லவாகரே சுட்டிகளுக்கு நன்றி! அவரது கருத்துகளில் எனக்கு வேறுபாடு உண்டு என்பதையும் பதிவு செய்துவிடுகிறேன்.

   Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.