சாண்டில்யனின் “ஜலதீபம்” – 70% காமம், 25% சாகசம், 5% சரித்திரம்

ஒரு பத்து வயது வாக்கிலேயே சாண்டில்யன் புத்தகங்கள் அலுத்துவிட்டன. ஆனால் சாண்டில்யன் புத்தகங்களின் வழியாகத் தெரிந்து கொண்ட சரித்திரம் மறந்து போவதே இல்லை. ஒரு வேளை சரித்திரம் குறைவாகவும் சாகசம் அதிகமாகவும் இருப்பதாலோ என்னவோ. சரித்திரத்தை விடுங்கள், சம்பவங்களே ரொம்பக் கம்மி.

ஜலதீபமும் அப்படித்தான். மூன்று பாகம் கதையில் உள்ள சரித்திரம் மூன்று வரி கூட இருக்காது. ஆங்கிலேயர், போர்ச்சுக்கீசியர், அபிசீனிய சித்திகள் போன்றவர்களின் போட்டி இருந்தாலும், கனோஜி ஆங்க்ரே அரபிக் கடலின் முடி சூடா மன்னர், மகாராஷ்டிர அரண்மனைப் பூசலில் முதலில் ஷாஹுவுக்கு எதிராகப் போராடினாலும் பேஷ்வா பாலாஜி விஸ்வநாத்தின் முயற்சியால் ஷாஹுவின் மேலாண்மையை ஏற்றுக் கொண்டார் என்பதுதான் சரித்திரம். அதை வைத்தே ஆயிரத்துச் சொச்சம் பக்கம்.

கதைச்சுருக்கமும் சில வரிகளில் எழுதிவிடலாம். தமிழன் இதயசந்திரன் தஞ்சையில் ராஜாராமின் ரகசிய மனைவிக்குக் கொடுத்த வாக்குக்காக ஒரு ஆளைத் தேடி மகாராஷ்டிரம் வருகிறான். அப்போது ஷாஹு-தாராபாய் அரசுரிமைப் போட்டி. ஷாஹுவின் தரப்பில் இருக்கும் பானுதேவியிடம் மயங்குகிறான். பானு அவனால் ஈர்க்கப்பட்டாலும் ஷாஹு ஜெயிப்பதற்கு அவனை எப்படி பயன்படுத்தலாம் என்றுதான் சதா சிந்திக்கிறாள். சித்திகள் தலைவனிடம் ஒரு பூசல், அதிலிருந்து கனோஜியின் வளர்ப்பு மகள் மஞ்சுவால் காப்பாற்றப்படுவது, மாலுமி ஆவது, ஜலதீபம் கப்பலின் உபதளபதி, சில ஆங்கிலக் கப்பல்களைக் கைப்பற்றுவது, அங்கே காதரினோடு உறவு, ஷாஹுவின் தளபதியோடு தரையில் போர், வெற்றி, ஆனால் திடீரென்று தேடி வந்தவன் அவனாகவே மாட்டிக் கொள்வது, பாலாஜி விஸ்வநாத்தின் சமரசம், மஞ்சுவோடு திருமணம் என்று கதை போகிறது.

காமம் (சாண்டில்யன் கண்ணில்) 70%, சாகசம் 25%, சரித்திரம் 5% என்ற கலவையில் நிறைய காகிதத்தை வேஸ்ட் செய்திருக்கிறார். ஆங்கிலக் கப்பல்களை கைப்பற்றுவது ஒரு சாப்டர் என்றால் காதரினோடு குலாவுவது ஐந்து சாப்டர் வருகிறது. அவர் எழுதியது அந்தக் காலத்துக்கு கிளுகிளுப்பான வர்ணனையாக இருக்கலாம். இன்று போரடிக்கிறது. எல்லாரும் இதயசந்திரனுக்கு வசதியாக தமிழ் கற்றிருக்கிறார்கள். இதயசந்திரனும் மற்றவர்களும் ஆண்டுகளையும் மாதங்களையும் ஆங்கிலக் கணக்குப்படிதான் – டிசம்பர் 1712 என்றெல்லாம்தான் கணிக்கிறார்கள், இந்திய மரபுப்படி இல்லை. போரைப் பற்றி சாண்டில்யன் வர்ணிப்பது சின்னப்பிள்ளைகளுக்கு கதை சொல்வது போலத்தான் இருக்கிறது. பாலாஜி விஸ்வநாத் சொல்வதை எல்லாரும் அப்படியே கேட்கிறார்கள். முதல் பக்கத்திலேயே அவரை பேஷ்வா ஆக்கி இருந்தால் நாவல் சின்னதாக இருந்திருக்கும்.

சாண்டில்யனின் பலவீனங்கள் தெரிந்தவையே. அவரது பலம் என்ன, ஏன் அலுத்துவிட்டன என்று குறை சொல்லிக் கொண்டே ஜலதீபம் போன்ற புத்தகங்களை இன்னும் படிக்கத் தோன்றுகிறது, நாஸ்டால்ஜியாவைத் தவிர்த்து வேறு காரணங்கள் உண்டா என்று யோசித்துக் கொண்டிருந்தேன். இந்த நாவலைப் பொறுத்த வரையில் எனக்குத் தெரிவது அவர் தேர்ந்தெடுத்த பாத்திரங்கள் – கனோஜி, பாலாஜி விஸ்வநாத் மற்றும் அபிசீனிய சித்திகள், ஜன்ஜிரா கோட்டை ஆவலைத் தூண்டும் பாத்திரங்கள்+தளங்கள். அவர்களைப் பற்றி இன்னும் தெரிந்து கொள்ள ஆவலைக் கிளப்பி விடுகிறார். ஜன்ஜீரா கோட்டை இன்னும் இருக்கிறதாம், அதைப் பார்க்க வேண்டும் என்றும் ஆவலாக இருக்கிறது. இடது பக்கம் இருக்கும் படத்தைப் பாருங்கள், தீவு ஒரு பெரிய மரகதப் பதக்கம் போல ஜொலிக்கிறது! இரண்டாவதாக சாண்டில்யனின் பாத்திரங்கள் caricatures-தான் என்றாலும் ஒரு ஜெகசிற்பியனை விட, அகிலனை விட உயிருள்ள பாத்திரங்களைப் படைத்திருக்கிறார்.

ஜெயமோகன் இதை historical romances-இன் இரண்டாம் பட்டியலில் சேர்க்கிறார். சாண்டில்யனின் படைப்புகளில் இது நல்ல நாவல்தான். சரித்திர நாவல் விரும்பிகள் படிக்கலாம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் வரலாற்றுப் புனைவுகள்

தொடர்புடைய சுட்டிகள்:
சாண்டில்யன் நூற்றாண்டு
சாண்டில்யனின் “கன்னி மாடம்”
கனோஜி ஆங்க்ரே பற்றி விக்கி குறிப்பு
பாலாஜி விஸ்வநாத் பற்றி விக்கி குறிப்பு
ஜன்ஜிரா கோட்டை பற்றி விக்கி குறிப்பு
சித்திகள் பற்றி விக்கி குறிப்பு

ஜெயமோகன் பரிந்துரைத்த சிறுகதை – சந்திராவின் “அறைக்குள் புகுந்த தனிமை”

ஜெயமோகன் எழுதி இருக்காவிட்டால் தெரிந்திருக்காது. நல்ல சிறுகதை. என்னை யோசிக்க வைத்தது.

சில மணி நேரங்களில் உறவு நிலை மாறிக்கொண்டிருப்பது, யார் அதிகாரம் செலுத்துவது, யார் அடங்கிப்போவது என்பது மாறுவது எனக்கு ஒரு literary device ஆகத் தெரிகிறது. மனித உறவுகளுக்குள் ஒரு சமநிலை (equillibrium) வந்த பிறகு அது மாறும் என்று நாம் எதிர்பார்ப்பதில்லை. ஆனால் அக/புற வயமான நிகழ்ச்சிகள் அவற்றை மெதுமெதுவாக மாற்றத்தான் செய்கின்றன. இதே கதையை பல வருஷங்களில் கணவன் மனைவிக்கு ஏற்படும் உறவு நிலை மாற்றங்களாக யோசித்துப் பார்த்தேன். நிறைய சிந்திக்க வைத்தது. ஓரங்க நாடகமாக வந்தால் மிகச் சிறப்பாக வரும்.

சந்திரா தன்னைப் பற்றி சொல்வது:

நுண்ணிய ஆயுதத்தைப் போல கண்ணுக்கு தெரியாமல் ஊசியாய் வாழ்க்கை அதன் வன்மத்தை என் மேல் செலுத்தினாலும் வாழ்வின் சுவையை ஆயுதத்தின் கூர்மையில் தேடிக் கொண்டிருப்பேன். ‘பூனைகள் இல்லாத வீடு‘, ‘காட்டின் பெருங்கனவு‘ இரண்டு சிறுகதை தொகுப்புகளும், ‘நீங்கிச் செல்லும் பேரன்பு‘ என்ற கவிதை தொகுதியும் வெளிவந்திருக்கிறது.

சந்திராவின் தளத்தில் இன்னும் சில சிறுகதைகள் – சூது நகரம், தரை தேடிப் பறத்தல், தொலைவதுதான் புனிதம் – படிக்கக் கிடைக்கின்றன. சூது நகரமும், தொலைவதுதான் புனிதமும் படிக்க சுவாரசியமாக இருந்தாலும் பாயின்ட் என்ன என்று என்று புரியவில்லை. தரை தேடிப் பறத்தலின் உருவகம் நன்றாக இருந்தாலும், முடிவு கொஞ்சம் போரடிக்கிறது.

சந்திராவுக்கு வாழ்த்துக்கள்!

தொடர்புடைய சுட்டி: சந்திராவின் தளம்

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் சிறுகதைகள்

ஸ்டூவர்ட் நெவில் எழுதிய “கொல்யூஷன்”

முந்தைய பதிவு: நெவில் எழுதிய Ghosts of Belfast

Collusion எனக்கு ஏமாற்றம் அளித்தது. இது sequel ஆக இல்லாவிட்டால் இதைப் பற்றி எழுதவே மாட்டேன்.

Ghosts of Belfast சாதாரண ஆக்ஷன் மசாலா த்ரில்லர் என்ற லெவலை அநாயாசமாகத் தாண்டியது. ஃபெகனைத் துரத்தும் ஆவிகள் என்ற ஐடியா அந்த நாவலை என் கண்ணில் இலக்கியம் என்று உயர்த்தியது. இதில் அப்படி எதுவும் இல்லை. வெறும் ஆக்ஷன்தான். ஒரே ஒரு இடத்தில்தான் ஆஹா என்று வியந்தேன்.

பழைய பதிவைப் படிக்க சோம்பல் படுபவர்களுக்காக: ஜெர்ரி ஃபெகன் (Jerry Fegan) வட அயர்லாந்து தீவிரவாதி. 12 பேரைக் கொன்றுவிட்டு ஜெயிலுக்குப் போனவன். பிரம்மஹத்தி போல அவர்களின் ஆவிகள் அவனைப் பின் தொடர்கின்றன. சமாதானப் பேச்சு நடந்து பழைய தீவிரவாதிகள் எல்லாம் இப்போது சிஸ்டத்தில் பங்கேற்கிறார்கள். ஜெர்ரியும் விடுதலை ஆகிவிட்டான். இந்த பின்தொடரும் ஆவிகளால் ஏறக்குறைய மனநிலை பிறழ்ந்தவன் போல இருக்கிறான். இப்படி கொலை செய்யும்படி அவனுக்கு ஆணையிட்டவர்களை இப்போது பழி தீர்த்து கொன்றாலொழிய அந்த ஆவிகள் அவனை விடாது என்று அவனுக்கு தெரிகிறது. அவன் அவர்களைக் கொல்ல ஆரம்பிக்கிறான். அப்படி முதலில் கொல்லப்பட்ட மக்கென்னாவின் சகோதரன் மகள் மேரியிடம் அவனுக்கு ஈர்ப்பு ஏற்படுகிறது. அவளுடைய நாலு வயதுக் குழந்தையை தன் உயிரைக் கொடுத்தாவது காப்பாற்ற வேண்டி இருக்கிறது. சண்டைகள் பெரிதாகி கடைசியில் புல் ஓ’கேன் என்ற பெரிய தாதாவின் பண்ணையில் ஏறக்குறைய எல்லாரையும் கொன்றுவிடுகிறான். ஓ’கேன் மட்டுமே தப்பிக்கிறான், ஆனால் அவனுக்கும் இனி மேல் படுத்த படுக்கைதான். மேரியும் குழந்தையும் ஒரு இடத்துக்கும் ஃபெகன் நியூ யார்க்குக்கும் தப்பிக்கிறார்கள். மேரியிடம் எப்போது அபாயம் என்றாலும் தனக்கு ஃபோன் செய்யுமாறு சொல்கிறான் ஃபெகன்.

Collusion இங்கிருந்து ஆரம்பிக்கிறது. படுத்த படுக்கையாக இருக்கும் ஓ’கேன் ஃபெகனைத் தேடுகிறான். Traveller என்று மட்டுமே அறியப்படும் ஒரு கொலையாளியை நியமிக்கிறான். வட அயர்லாந்தின் சிஸ்டத்தில் எல்லாருமே – முன்னாள் Catholic தீவிரவாதிகள், அவர்களை எதிர்த்த ப்ராடஸ்டெண்டுகள், போலீஸ், கிரிமினல்கள் எல்லாருமே ஒருவருக்கொருவர் உள்கையாக இருக்கிறார்கள். ஃபெகன் செய்த கொலைகள் எல்லாம் பூசி மெழுகப்பட்டுவிட்டன. மேரியின் குழந்தைக்கு அப்பா ஒரு போலீஸ்காரன். ஆனால் அவன் Catholics இங்கிலாந்தை எதிர்த்துப் போராடியபோது போலீசில் சேர்ந்து ஏறக்குறைய ஒதுக்கி வைக்கப்பட்டவன். மேரியும் அவனும் பிரிந்துவிட்டாலும் இன்று அவன் தன் குழந்தை எங்கே என்று தேடிக் கொண்டிருக்கிறான். Traveller-இன் திட்டம் மேரியை வைத்து ஃபெகனைப் பிடிப்பது. ஓ’கேன் பற்றிய உண்மைகளைத் தெரிந்த எல்லா பழைய கூட்டாளிகளையும் அவன் போட்டுத் தள்ளுகிறான். மேரியை ஃபெகனால் காப்பாற்ற முடிந்ததா, குழந்தையும் அப்பாவும் இணைந்தார்களா என்பதுதான் கதை.

கதையில் எனக்குப் பிடித்த இடம் அந்த சின்னப் பெண் Traveller-ஐ முதல் முறையாக சந்திக்கும் இடம்தான். Traveller எப்படி அந்தப் பெண்ணை கடத்துவது என்று யோசித்துக் கொண்டிருக்கும்போது அந்தப் பெண்ணே அவனிடம் வருகிறது. ஃபெகனுக்குப் பின்னால் எப்போதும் சுற்றிக் கொண்டிருந்த ஆவிகளைப் போல இவன் பின்னும் சுற்றும் ஆவிகள் அவள் கண்ணுக்குத் தெரிவதுதான் காரணம். அபாரமான கற்பனை.

ஒருவருக்கொருவர் உள்கை என்பது நன்றாக வந்திருக்கிறது. விடுதலைப் புலிகள் சமாதானமாகப் போயிருந்தால் பழைய கதை எல்லாம் வெளியே வந்துவிடக் கூடாது என்று புலிகள், இலங்கை அரசு, இந்திய அரசு எல்லாரும் முயற்சி செய்வார்கள் இல்லையா? அது போல.

ஆனால் ஆக்ஷன் த்ரில்லர் என்ற லெவலைத் தாண்டவில்லை. Sequel-களை மிஸ் செய்ய விரும்பாதவர்கள், த்ரில்லர் விரும்பிகள் படிக்கலாம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: த்ரில்லர்கள்

தொடர்புடைய சுட்டி: Ghosts of Belfast

ஐரா லெவினின் “எ கிஸ் பிஃபோர் டையிங்”

லெவினின் கதை இன்று கொஞ்சம் cliche லெவலுக்குப் போய்விட்டது. ஆனால் வெளிவந்த சமயத்தில் – 1953 – சென்சேஷனல் ஹிட்டாக இருந்திருக்கும்.

கதையின் ஹீரோ ஒரு வில்லன். ஏழைக் குடும்பத்தவன். அழகன். கொழுத்த பணக்கார வீட்டு மாப்பிள்ளையாகப் போக திட்டம். பணக்காரப் பெண்கள் படிக்கும் காலேஜாகத் தேர்ந்தெடுத்து அங்கே சேர்கிறான். பெரிய தொழிலதிபர் பெண் டோரதியைக் “காதலிக்கத்” தொடங்குகிறான். கர்ப்பம். அதனால்தான் திருமணம் என்று தெரிந்தால் ஒரு பைசா கூடத் தராமல் தொழிலதிபர் வீட்டை விட்டு துரத்திவிடுவார். திருமணம் செய்துகொள்ளாவிட்டால் பழி வாங்குவார். என்ன செய்வது? த்ரில்லர்களில் என்ன நடக்குமோ அதுதான் நடக்கிறது.

பெண்ணின் ஒரு அக்கா எல்லனுக்கு சில க்ளூக்கள் கிடைக்கிறது. காலேஜில் blond ஆன, நல்ல உயரமான, தங்கையின் ஆங்கில வகுப்பில் கூடப் படித்த ஒருவனைத் தேடுகிறாள். வில்லனை நெருங்கும்போது வில்லன் சுதாரிக்கிறான். தங்கையின் கதி அக்காவுக்கும்.

இன்னொரு அக்கா மரியன் கதையில் நுழைகிறாள். (இவள்தான் கடைசி, வேறு அக்கா கிடையாது) மரியனுக்கும் எல்லனின் பழைய பாய்ஃப்ரென்ட் பட் கார்லிசுக்கும் காதல் ஏற்படுகிறது. மிச்சத்தைப் படித்துக் கொள்ளுங்கள்.

எல்லன் பகுதி சிறப்பாக எழுதப்பட்டிருக்கிறது. ஒரு நல்ல துப்பறியும் நாவலுக்கு வேண்டிய சஸ்பென்ஸ் அந்தப் பகுதியில்தான் இருக்கிறது. டோரதி பகுதி பரவாயில்லை. என்ன செய்ய முயற்சிக்கிறான் என்று தெரிவதால் சஸ்பென்ஸ் கிடையாது, ஆனால் விறுவிறுப்பு உண்டு. மரியன் பகுதியில் முடிச்சை அவிழ்ப்பது பிரமாதமாக இல்லை. ஆனால் மரியன் மற்றும் அவள் அப்பா பாத்திரங்கள் நன்றாக வந்திருக்கின்றன.

சஸ்பென்ஸ் த்ரில்லர், சைக்கலாஜிக்கல் த்ரில்லர் எல்லாவற்றையும் கலந்து கட்டி அடித்திருப்பது கதையின் பலவீனம். ஆனால் கதையில் இன்றும் – கொஞ்சம் cliche ஆன பிறகும் – ஒரு freshness தெரிகிறது. நல்ல ஐடியா. படியுங்கள் என்று சிபாரிசு செய்கிறேன்.

கம்பன் பாடல்கள் பற்றி ஜடாயு

ஜடாயுவைப் பற்றி கேள்விப்பட்டிருக்கலாம். சிறந்த வாசகர், தமிழ் ஹிந்து தளத்தில் நிறைய கட்டுரைகள் எழுதி இருக்கிறார். (அவருடைய அரசியல் கண்ணோட்டத்தில் எனக்கு கருத்து வேறுபாடுகள் உண்டு என்பதையும் பதிவு செய்துவிடுகிறேன்.)

ஊட்டியில் ஜெயமோகன் முன்னின்று நடத்திய காவிய முகாமில் கம்பன் பாடல்கள் பற்றி ஜடாயு பெரிய உரை நிகழ்த்தி இருக்கிறார். அவர் சமீபத்தில் அமெரிக்கா வந்திருந்தபோது இதுதான் சான்ஸ் என்று இங்கேயும் அவரை ஒரு நாள் கம்பன் கவிதைகள் பற்றி பேசுங்களேன் என்று சிலிகான் ஷெல்ஃப் குழுமம் சார்பில் கேட்டோம். அவரும் பிகு பண்ணிக் கொள்ளாமல் சம்மதித்தார். சுந்தர காண்டத்திலிருந்து ஒரு பதினைந்து பாடல்களைத் தேர்ந்தெடுத்து அவற்றை விளக்கினார்.

என்னதான் எனக்கு கவிதை அலர்ஜி என்றாலும் கவித்துவம் என்று ஒன்று இருக்கத்தான் செய்கிறது. அது என்ன என்று என்னால் வரையறுக்க முடிவதில்லை. நல்ல கவிதை என்றால் என்ன என்றெல்லாம் சொல்ல முடிவதில்லை. சில விஷயங்களை கவிதையாக எழுதினால்தான் ரசிக்க முடிகிறது. அது என்ன விஷயம், எப்போது கவிதை தேவைப்படுகிறது, எப்போது கவிதை பிடிக்கிறது, எப்போது பிடிப்பதில்லை என்றெல்லாம் என்னால் வரையறுக்க முடிவதில்லை.

குகனொடும் ஐவரானோம் என்பதுதான் எனக்கு உயர்ந்த மானிட தரிசனம். அது கவிதையாக இருக்க வேண்டிய அவசியம் என்ன, உரைநடையாக இருந்தால் என்ன குடி முழுகிவிடும் என்று எனக்குப் புரிவதில்லை. அதனால்தானோ என்னவோ, ஒரு கவிதை எனக்குப் பிடிப்பது அபூர்வம். ஆயிரம் கவிதை படித்தால் ஒன்று பிடிக்கலாம். மிச்ச 999 கவிதைகளை ஏன் நிராகரிக்கிறேன் என்று articulate செய்யக் கூடத் தெரியவில்லை. ஒரு கவிதைக்காக ஆயிரம் கவிதை படிப்பது inefficient process ஆகத் தெரிகிறது. எல்லாரும் கம்பன் கம்பன் என்கிறார்களே, ஏதாவது புரிந்துவிடுமோ என்று கொஞ்சம் நப்பாசையோடு இந்த நிகழ்ச்சியை அணுகினேன்.

மேலும் எனக்கு கொஞ்சம் குதர்க்க புத்தி உண்டு. அடுத்தவர்கள், அதுவும் நண்பர்கள், ரசனை, பக்தி என்று பேசும்போது நான் கிண்டலாக ஏதாவது கமென்ட் அடித்துவிடுவேனோ என்று கொஞ்சம் தயக்கம் இருந்தது.

ஜடாயு

கறங்கு கால் புகா; கதிரவன் ஒளி புகா; மறலி
மறம் புகாது; இனி, வானவர் புகார் என்கை வம்பே!
திறம்பு காலத்துள் யாவையும் சிதையினும், சிதையா
அறம் புகாது, இந்த அணி மதில் கிடக்கை நின்று அகத்தின்!

என்று ஆரம்பித்தார். நயம் உள்ள கவிதை. சுழல் காற்றும் வெயிலும் மரணமும் புக முடியாத கோட்டைக்குள் அறம் எப்படிப் புகும் என்று ஹனுமான் நினைப்பதாக எழுதுவதில் கவித்துவம் இருப்பது எனக்கே தெரிகிறது. கதிரவன் ஒளி புகா என்பதை கோட்டையின் பெருமையாக சொல்வதைப் பார்த்ததும் என் குதர்க்க புத்தி வேலை செய்ய ஆரம்பித்தது. இதை வெய்யிலை உணர்ந்த ஒருவன்தான் பெருமையாகச் சொல்ல முடியும். காஷ்மீரி பண்டிட்டோ, ஸ்வீடன் நாட்டுக்காரனோ சொல்ல முடியாது. 🙂

எனக்குப் பிடித்த இன்னொரு கவிதையிலும் இதே ஐடியா இருக்கிறது. இன்று போய் நாளை வா என்று ராமன் சொன்னதும் ராவணன்

வாரணம் பொருத மார்பும் வரையினை எடுத்த தோளும்
நாரத முனிவர்க்கேற்ப நயம்பட உரைத்த நாவும்
தாரணி மௌலி பத்தும் சங்கரன் கொடுத்த வாளும்
வீரமும் களத்தே போட்டு வெறுங்கையோடிலங்கை புக்கான்

இன்னொரு கவிதை. கல்மருங்கு எழுந்து என்றும் ஓர் துளி வரக் காணா நல்மருந்து (அரக்கியர் நடுவில் சீதையை ஒரு துளி தண்ணீரைக் கூட காணாத பாறையின் நடுவில் முளைத்திருக்கும் நல்ல மூலிகைச் செடிக்கு ஒப்பிடுகிறார்) என்ற உவமை அழகானது. ஆனால் வேறுள அங்கமும் மெலிந்தாள் என்பதில் கவித்துவம் கீழே போய்விடுகிறது. ஏதோ filler மாதிரி இருக்கிறது.

வன்மருங்குல் வாழ் அரக்கியர் நெருக்க அங்கிருந்தாள்
கல்மருங்கு எழுந்து என்றும் ஓர் துளி வரக் காணா
நல்மருந்து போல் நலன் அர உணங்கிய நங்கை
மென் மருங்குல் போல் வேறுள அங்கமும் மெலிந்தாள்

பல கவிதைகள் சொல் நயத்துக்காக, சந்தத்துக்காக மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டன என்று நினைக்கிறேன்.

தோள் ஆற்றல் என் ஆம்? மேல் நிற்கும் சொல் என் ஆம்?
வாள் ஆற்றல் கண்ணாளை வஞ்சித்தான் மணிமுடி என்
தாள் ஆற்றலால் இடித்து தலை பத்தும் தகர்த்து இன்று என்
ஆள் ஆற்றல் காட்டேனேல், அடியேனாய் முடியேனே!

வாங்கினள்; முலைக் குவையில் வைத்தனள்; சிரத்தில்
தாங்கினள்; மலர்க் கண்மிசை ஒற்றினள்; தடந்தோள்
வீங்கினள்; மெலிந்தனள்; குளிர்ந்தனள் ; வெதுப்போடு
ஏங்கினள்; உயிர்த்தனள்; இது இன்னது எனல் ஆமே!

இந்த மாதிரி பாடல்களை சிவாஜி கணேசன் மாதிரி யாராவது ஒருவர் சிம்மக் குரலில் படித்தால் கேட்க நன்றாக இருக்கும்.

ஜடாயுவின் உரையில் நான் மிகவும் ரசித்த இடம் அந்த வாங்கினள் என்று ஆரம்பிக்கும் கவிதையையும்

ஒரு கணத்திரண்டு கண்டேன்; ஒளி மணி ஆழி, ஆன்ற
திருமுலைத் தடத்து வைத்தாள்; வைத்தலும், செல்வ நின்பால்
விரகம் என்பதனின் வந்த வெங்கொழுந்தீயில்
உருகியது; உடனே ஆறி வளைத்தது, குளிர்ப்பு உள் ஊற

என்ற கவிதையையும் லிங்க் செய்த இடம்தான்.

மத்துறு தயிர் என்பது இன்னொரு அழகான உவமை.

மத்துறு தயிர் என வந்து சென்று இடை
தத்துறும் உயிரோடு புலன்கள் தள்ளும்
பித்து நின் பிரிவில் பிறந்த வேதனை
எத்தனை உலா? அவை எண்ணும் ஈட்டவோ?

பொதுவாக பாட்டுகள் ஜடாயு விளக்குவதற்கு முன்பே ஒரு மாதிரி குன்சாகப் புரிந்துவிட்டது. எப்பவோ எழுதின பாட்டு கோனார் நோட்ஸ் இல்லாமல் இப்போதும் புரிவதில் இப்படி நீண்ட பாரம்பரியம் உள்ள தமிழ் என் தாய்மொழி என்று ஒரு சின்ன பெருமிதம், சந்தோஷம் உண்டானது.

சின்ன சாம்பிளை வைத்துக் கொண்டு கம்பன் பாடல்களைப் பற்றி தீர்ப்பு எழுதுவது முட்டாள்தனமே. ஆனால் இந்த உரையை வைத்து மட்டும் பார்த்தால் கம்பன் கவிதையை ரசிப்பது என்பது கொஞ்சம் elaborate விதிகள் உள்ள ஒரு விளையாட்டு போல இருக்கிறது. நல்ல உவமை வந்தால் உயர்ந்த கவிதை ஆகிவிடுகிறது, மேற்கோள் காட்டப்படுகிறது. காற்றும் ஒளியும் மரணமும் புகாத கோட்டையில் அறம் எப்படிப் புகும் என்று உயர்வு நவிற்சி அணியில் வியப்பது உயர்ந்த கவிதை ஆகிவிடுகிறது. சொல் நயம் இருந்தால் மேடைப் பேச்சில் உயர்த்திப் பேச முடிகிறது. உதாரணமாக:

பஞ்சி ஒளிர் விஞ்சு குளிர் பல்லவம் அனுங்க
செஞ்செவிய கஞ்ச நிமிர் சீறடியளாகி
அஞ்சொலிள மஞ்ஞையென அன்னமென மின்னும்
வஞ்சியென நஞ்சமென வஞ்சமகள் வந்தாள்

இதுதான் கவிதையா? சொல் நயமோ அல்லது பொருள் நயமோ இருந்தால் அது உயர்ந்த கவிதையா? இதில் எனக்கு மீண்டும் மீண்டும் யோசிக்க என்ன இருக்கிறது? சொல் நயம், சந்தம் மட்டுமே உள்ளவற்றை மொழிபெயர்க்க முடியாது. தமிழனுக்கு மட்டும்தான் அது கவிதையாக இருக்க முடியும்.

பி.ஜி. வுட்ஹவுஸ் I was not disgruntled, but I was not exactly gruntled either என்று எழுதுவார். அருமையான வார்த்தை விளையாட்டு. அதை நான் உயர்ந்த எழுத்தாக நினைத்த காலம் உண்டு. இன்று தொந்தி சரிந்து மயிரே உதிர்ந்த பின்னும் அதை நினைத்தால் புன்னகைக்கிறேன். ஆனால் அதை பெரிய இலக்கியமாகக் கருதுவதில்லை.

மனித வாழ்க்கையின் தரிசனம் (Telephone Conversation கவிதையில் How Dark? என்று கேட்கும் இடம்), வாழ்க்கையின் அனுபவத்தை நாலு வரியில் காட்டுவது (குறுகுறு நடந்து, சிறுகை நீட்டி, இட்டும், தொட்டும், கவ்வியும், துழந்தும் நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்) இப்படி ஏதாவது இருந்தால்தான் எனக்கு அது உயர்ந்த கவிதை என்று தோன்றுகிறது.

ஜடாயுவின் உரையில் எனக்குக் கிடைத்த லாபம் இதுதான். கவிதையைப் பற்றி நான் என்ன நினைக்கிறேன், நல்ல கவிதையில் நான் என்ன எதிர்பார்க்கிறேன் என்று எனக்கு இப்போதுதான் ஓரளவு புரிய ஆரம்பித்திருக்கிறது.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாலாஜி ஸ்ரீனிவாசன் எழுதுகிறார்:

சென்ற வெள்ளிக்கிழமை இரவு, ஆர்வி வீட்டில் ஜடாயு கம்ப ராமாயணத்திலிருந்து சில பாடல்களை வழங்கினார். இருபது பேர் வந்திருந்தனர். ஜடாயு எடுத்துக்கொண்டது சுந்தர காண்டத்திலிருந்து சில பாடல்கள். அருமையாக நடத்திச் சென்றார். ஒவ்வொரு பாடலையும் உரக்க வாசித்து, பொருள் விளக்கி, அதன் நுணுக்கங்களை சுட்டிக்காட்டி, விவாதித்து, அதை ஏன் தேர்ந்தெடுத்தேனென்றும் கூறினார். சில பாடல்களின் மூலமே கம்ப ராமாயணத்தின் பல சிறப்புகளையும் தொட்டுக் காட்டிட முடிந்தது. ஜடாயு மிகவும் confident ஆக, அதே நேரம் எல்லாருக்கும் புரியும் படியாகவும் பேசினார். கம்ப ராமாயணத்தைப் பற்றிய பொதுவான கருத்துக்களும், காளிதாசனின் கவிதைகளுடன் (ரகுவம்சம்) ஒப்பீடும் நன்றாக இருந்தன. எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

ஜடாயுவுக்கு ஒரு வேண்டுகோள். நீங்கள் பேசிய அத்தனை பாடலையும் இங்கே போடவில்லை. நீங்கள் கொடுத்த காகிதம் எல்லாம் எங்கே போயிற்றோ தெரியாது. முடிந்தால் அவற்றை ஈமெயிலில் அனுப்பினால் இங்கே ஒரு பிற்சேர்க்கையாகப் பதித்துவிடுகிறேன்.
ஜடாயுவின் உதவியால் பாடல்களை ஒரு அனுபந்தமாகப் பதித்திருக்கிறேன்.

அனுபந்தம் 1 – ஜடாயு தேர்ந்தெடுத்த எல்லா கவிதைகளும்

கம்பராமாயணம்: சுந்தர காண்டம் – சில பாடல்கள்

இலங்கை மாநகர மதிளைக் கண்டு அனுமன் வியத்தல்
கறங்கு கால் புகா; கதிரவன் ஒளி புகா; மறலி
மறம் புகாது; இனி, வானவர் புகார் என்கை வம்பே;
திறம்பு காலத்துள் யாவையும் சிதையினும், சிதையா
அறம் புகாது, இந்த அணி மதிள் கிடக்கை நின்று அகத்தின். (1)

இராவணன் அரண்மனையில் உறங்கும் இயக்க மகளிர்
வாளின் ஆற்றிய கற்பக வல்லியர்
தோளின் நாற்றிய தூங்கு அமளித் துயில்
நாளினால், செவியில் புகும் நாம யாழ்த்
தேளினால், திகைப்பு எய்துகின்றார் சிலர். (2)

உறங்கும் இராவணைக் கண்டு அனுமன் எண்ணம்
தோள் ஆற்றல் என் ஆகும்? மேல் நிற்கும் சொல் என் ஆம்?
வாள் ஆற்றல் கண்ணாளை வஞ்சித்தான் மணிமுடி என்
தாள் ஆற்றலால் இடித்து, தலை பத்தும் தகர்த்து, இன்று என்
ஆள் ஆற்றல் காட்டேனேல், அடியேனாய் முடியேனே. (3)
(ஊர்தேடு படலம்)

அசோகவனத்தில் சீதையின் நிலை
வன் மருங்குல் வாள் அரக்கியர் நெருக்க அங்கு இருந்தாள்;
கல் மருங்கு, எழுந்து என்றும் ஓர் துளிவரக் காணா
நல்மருந்து போல், நலன் அற உணங்கிய நங்கை
மென் மருங்குல்போல் வேறுள அங்கமும் மெலிந்தாள். (4)

சீதையின் தூய்மையை அனுமன் வியத்தல்
பேண நோற்றது மனைப் பிறவி, பெண்மை போல்
நாணம் நோற்று உயர்ந்தது, நங்கை தோன்றலால்;
மாண நோற்று, ஈண்டு இவள் இருந்தவாறு எலாம்
காண நோற்றிலன், அவன் கமலக் கண்களால்! (6)

இராவணன் சீதையை இரத்தல்
இன்று இறந்தன; நாளை இறந்தன;
என் திறம் தரும் தன்மை இதால்; எனைக்
கொன்று இறந்தபின் கூடுதியோ – குழை
சென்று, இரங்கி மறம் தரு செங்கணாய்! (7)
(காட்சிப் படலம்)

கணையாழியைக் கண்ட சீதை நிலை
வாங்கினள்; முலைக் குவையில் வைத்தனள்; சிரத்தால்
தாங்கினள்; மலர்க் கண்மிசை ஒற்றினள்; தடந்தோள்
வீங்கினள்; மெலிந்தனள், குளிர்ந்தனள்; வெதுப்போடு
ஏங்கினள்; உயிர்த்தனள், இது இன்னது எனல் ஆமே? (8)

இருந்து பசியால் இடர் உழந்தவர்கள் எய்தும்
அருந்தும் அமுது ஆகியது; அறத்தவரை அண்மும்
விருந்தும் எனல் ஆகியது; வீயும் உயிர் மீளும்
மருந்தும் எனல் ஆகியது; வாழி மணி ஆழி! (9)
(உருக்காட்டு படலம்)

அனுமனிடம் சீதை கூறியது
அல்லல் மாக்கள் இலங்கையது ஆகுமோ?
எல்லை நீத்த உலகங்கள் யாவும், என்
சொல்லினால் சுடுவேன்; அது, தூயவன்
வில்லின் ஆற்றற்கு மாசு என்று, வீசினேன். (10)

ஆரம் தாழ் திருமாற்பற்கு அமைந்ததோர்
தாரம் தான் அலளேனும், தயா எனும்
ஈரம் தான் அகத்து இல்லை என்றாலும், தன்
வீரம் காத்தலை வேண்டென்று வேண்டுவாய். (11)

வந்து எனைக் கரம் பற்றிய வைகல்வாய்,
இந்த, இப்பிறவிக்கு இரு மாதரைச்
சிந்தையாலும் தொடேன் என்ற செவ்வரம்
தந்த வார்த்தை திருச்செவி சாற்றுவாய். (12)

அனுமன் சீதையைத் தேற்றுதல்
மத்துறு தயிர் என வந்து சென்று, இடை
தத்துறும் உயிரொடு புலன்கள் தள்ளுறும்
பித்து, நின் பிரிவினில் பிறந்த வேதனை,
எத்தனை உள? அவை எண்ணும் ஈட்டவோ? (13)
(சூடாமணிப் படலம்)

இராவணன் அரசவையில் வீற்றிருக்கும் காட்சி
நரம்பு கண்ணகத்துள் உறை நறை, நிறை பாண்டில்
நிரம்பு சில்லரிப் பாணியும், குறடும் நின்று இசைப்ப,
அரம்பை மங்கையர் அமிழ்து உகுத்தாலன்ன பாடல்
வரம்பு இல் இன்னிசை, செவிதொறும் செவிதொறும் வழங்க.. (14)
(பிணி வீட்டு படலம்)

சீதையைக் கண்டதை அனுமன் இராமனிடம் கூறுதல்
ஒரு கணத்து இரண்டு கண்டேன்; ஒளி மணி ஆழி, ஆன்ற
திருமுலைத் தடத்து வைத்தாள்; வைத்தலும், செல்வ நின்பால்
விரகம் என்பதனின் வந்த வெங் கொழுந் தீயில் வெந்து
உருகியது; உடனே ஆறி, வலித்தது, குளிர்ப்பு உள் ஊற. (15)
(திருவடி தொழுத படலம்)

அனுபந்தம் 2 – மேற்கோள் காட்டப்பட்ட எனக்குப் பிடித்த கவிதைகள்

A Telephone Conversation by Wole Soyinka

The price seemed reasonable, location
Indifferent. The landlady swore she lived
Off premises. Nothing remained
But self-confession. “Madame,” I warned,
“I hate a wasted journey—I am African.”
Silence. Silenced transmission of
Pressurized good breeding. Voice, when it came,
Lipstick coated, long gold-rolled
Cigarette-holder pipped. Caught I was, foully.
“HOW DARK?”… I had not misheard… “ARE YOU LIGHT
OR VERY DARK?” Button B. Button A. Stench
Of rancid breath of public hide-and-speak.
Red booth. Red pillar box. Red double-tiered
Omnibus squelching tar. It was real! Shamed
By ill-mannered silence, surrender
Pushed dumbfoundment to beg simplification.
Considerate she was, varying the emphasis —
“ARE YOU DARK? OR VERY LIGHT?” Revelation came.
“You mean — like plain or milk chocolate?”
Her assent was clinical, crushing in its light
Impersonality. Rapidly, wave-length adjusted,
I chose. “West African Sepia” — and as afterthought,
“Down in my passport.” Silence for spectroscopic
Flight of fancy, till truthfulness clanged her accent
Hard on the mouthpiece. “WHAT’S THAT?” conceding
“DON’T KNOW WHAT THAT IS.” “Like brunette.”
“THAT’S DARK, ISN’T IT?” “Not altogether.
Facially, I am brunette, but madam, you should see
The rest of me. Palm of my hand, soles of my feet
Are a peroxide blonde. Friction, caused —
Foolishly madam — by sitting down, has turned
My bottom raven black — One moment madam!” — sensing
Her receiver rearing on the thunderclap
About my ears — “Madam,” I pleaded, “wouldn’t you rather
See for yourself?”

படைப்புப் பல படைத்துப் பலரோடு உண்ணும்
உடைப்பெருஞ் செல்வர் ஆயினும், இடைப்படக்
குறுகுறு நடந்து, சிறுகை நீட்டி,
இட்டும், தொட்டும், கவ்வியும், துழந்தும்
நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்,
மயக்குறு மக்களை இல்லோர்க்குப்
பயக்குறை இல்லைத் தாம் வாழும் நாளே.
      – பாண்டியன் அறிவுடை நம்பி

தொகுக்கப்பட்ட பக்கம்: கவிதைகள்

தொடர்புடைய சுட்டிகள்:
எனக்குப் பிடித்த சில கவிதைகள்
ஜடாயு கட்டுரைகள்

எம். ஆர். ராதா பற்றி சில புத்தகங்கள்

விந்தன் தொகுத்த “எம்.ஆர். ராதாவின் சிறைச்சாலை சிந்தனைகள்”

நண்பர் அருணகிரி எம்.ஆர். ராதாவின் சிறைச்சாலை சிந்தனைகள் என்ற புத்தகத்தைப் பற்றி ஒரு முறை குறிப்பிட்டிருந்தார். அவரது வார்த்தைகளில்:

சிறையிலிருந்து வெளிவந்த எம்.ஆர். ராதாவைப் பேட்டி கண்டு விந்தன் தினமணி கதிரில் தொடராக எழுதிய சிறைச்சாலை நினைவுகள்(?) உண்மையிலேயே மினி சுயசரிதம் எனும் தகுதி பெறக்கூடிய ஒன்று. சில விடுபட்ட, மறைக்கப்பட்ட பகுதிகள் இருந்தாலும் பல விஷயங்களில் ராதாவிற்கே உரிய முகத்திலறையும் நேரடித்தனம் நிரம்பியது. அப்பட்டமாகப் பேசப்படும் பல தகவல்களால் ஆவணமாகும் அளவுக்கு முக்கியமானது.

இணையத்தில் கிடைக்கவும் கிடைத்தது. தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

ஜெயிலிலிருந்து வெளியே வந்த பிறகு ராதாவை விந்தன் பேட்டி கண்டு தொகுத்திருக்கிறார். அருணகிரி சொல்வது போல ராதா வெளிப்படையாகப் பேசுகிறார். அவரது சிறு வயது நாடக அனுபவங்கள், ஜெகந்நாதய்யர் நாடகக் கம்பெனி, என்.எஸ். கிருஷ்ணனின் நட்பு, அவருக்கு உதவி செய்த கணேசய்யர், ஈ.வெ.ரா. கறாராக இவரிடம் பணம் வசூல் செய்தது, அதற்கு பழி வாங்க இவர் மாநாட்டில் நாடகம் போட ஆயிரம் ரூபாய் சார்ஜ் செய்தது, அன்று பாய்ஸ் கம்பெனிகளில் பரவலாக இருந்த ஓரினச்சேர்க்கை பழக்கம் எதையும் மறைக்கவில்லை. எம்ஜிஆரை சுட்டதைப் பற்றி மட்டும்தான் பேசவில்லை.

படித்தே ஆக வேண்டிய புத்தகம் இல்லை. ஆனால் சுவாரசியம் இருக்கிறது. ராதாவின் ஆளுமை வெளிப்படுகிறது. இதை டி.கே. சண்முகத்தின்எனது நாடக வாழ்க்கை” நூலோடு சேர்த்துப் படிக்க வேண்டும். அன்றைய நாடக உலகைப் பற்றி ஒரு தெளிவான சித்திரம் கிடைக்கும்.

சுதாங்கன் எழுதிய “சுட்டாச்சு சுட்டாச்சு”

சமீப கால தமிழக வரலாற்றில் எம்.ஆர். ராதா எம்ஜிஆரை சுட்டது போல பரபரப்பு ஏற்படுத்திய நிகழ்ச்சி வேறு எதுவுமில்லை. சுட்டவரும் சுடப்பட்டவரும் பிரபல சினிமா நட்சத்திரங்கள். சினிமா கவர்ச்சி உச்சத்தில் இருந்த காலம். இன்று கூட ஏன் சுட்டார் என்று தெரியாது. லட்சுமிகாந்தன் கொலை வழக்கு போல தமிழர்கள் நெஞ்சில் ஆழமாகப் பதிந்த நிகழ்ச்சி.

சுதாங்கன் போலீஸ் விசாரணை மற்றும் கோர்ட் வாக்குமூலங்களை வைத்து இதை ஒரு புத்தகமாக எழுதி இருக்கிறார். ஆரம்பத்தில் கொஞ்சம் thinly disguised புனைவு போல இருந்தாலும் கடைசி முக்கால் பகுதி கோர்ட் விசாரணை மட்டுமே. அதனால் இதை அபுனைவு என்றுதான் நான் வகைப்படுத்துகிறேன். புனைவாக எழுதி இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்று ஆரம்பப் பகுதி நினைக்க வைக்கிறது.

ஏன் சுட்டார் என்று எம்ஜிஆரும் சொல்லவில்லை, ராதாவும் சொல்லவில்லை. கோர்ட்டில் ராதா எம்ஜிஆர்தான் தன்னை முதலில் சுட்டார், தான் தற்காப்புக்காகத் திருப்பி சுட்டேன் என்று வாதாடி இருக்கிறார். ராதாவின் வக்கீல் நிறைய குட்டையைக் குழப்ப முயற்சி செய்திருக்கிறார். சில procedural irregularities இருந்திருக்கிறது என்று தோன்றுகிறது. தற்செயலாக நடந்தவை என்றுதான் தோன்றுகிறது.

புத்தகம் எல்லாரும் விரும்பிப் படிக்கும் அளவுக்கு சுவாரசியமாக இல்லை. இது இந்த விஷயத்தைப் பற்றி curiosity உள்ளவர்களுக்கு மட்டும்தான்.

சில titbits : எம்ஜிஆர் தான் கோடீஸ்வரன் இல்லை லட்சாதிபதிதான் என்று வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். அன்பே வா திரைப்படத்துக்கு கிடைத்த ஒன்றரை லட்சம்தான் அவருக்கு அது வரை கிடைத்த அதிகபட்ச ஊதியமாம். அசோகனுக்கு நிறைய சிபாரிசு செய்திருக்கிறார், குலதெய்வம் ராஜகோபாலுக்கு வாய்ப்பு கூடாது என்று மறுத்திருக்கிறார். ராதா எம்ஜிஆரை கடுமையாக தி.க. பத்திரிகைகளில் தாக்கி இருக்கிறார், ஆனால் தொடர்ந்து எம்ஜிஆருடன் நடித்திருக்கிறார். ராதா முன்னால் எம்ஜிஆர் உட்காரக் கூட மாட்டாராம், அவ்வளவு மரியாதையாம்.

முகில் எழுதிய “எம்.ஆர். ராதாயணம்”

புதிய தகவல்கள் என்று எதுவுமில்லை. ஆனால் ஏறக்குறைய முழுமையான வாழ்க்கை வரலாறு. ராதா எப்போதுமே ஒரு maverick ஆகத்தான் இருந்திருக்கிறார். முரடர், மனதில் இருப்பதை நேரடியாக சொல்லிவிடுபவர், தோன்றியதை செய்துவிடுபவர், பின்விளைவுகளைப் பற்றி யோசிப்பவரில்லை என்று தெரிகிறது. அறுபதுகளில் கொடிகட்டிப் பறந்திருக்கிறார். Professional ஆக உழைத்திருக்கிறார். எல்லாம் எம்ஜிஆரை சுட்டதோடு போச்சு.

மணா என்பவர் எம்.ஆர். ராதா பற்றி தொகுத்த/எழுதிய புத்தகத்தையும் படித்திருக்கிறேன். டைம் பாஸ்.

இன்னொரு சினிமா புத்தகத்தைப் பற்றி தனியே எழுதுவதற்கில்லை. கலைஞானம் கதாசிரியர். தேவர் ஃபிலிம்ஸ் கதை இலாகாவில் பணி புரிந்தவர். அவரது சினிமா நினைவுகள் புத்தகத்தில் தேவரின் தன்மை நன்றாக வெளிப்படுகிறது, மற்றபடி பெரிதாக எதுவுமில்லை.

தொடர்புள்ள சுட்டிகள்:
விந்தனின் புத்தகம் pdf வடிவில்
எம்ஜிஆர் சுடப்பட்ட அன்று ஆஸ்பத்திரியில் இருந்த டாக்டர்
டி.கே. சண்முகத்தின் “எனது நாடக வாழ்க்கை
சுதாங்கனின் தளம்

விஷ்ணுபுரம் பற்றி பா.ராகவன்

நண்பர் ஸ்ரீனிவாஸ் இங்கே பல பின்னூட்டங்களாக பா.ரா.வின் விமர்சனத்தைப் பதித்திருந்தார். ஒன்றாகத் தொகுத்திருக்கிறேன். நன்றி, ஸ்ரீனிவாஸ்!

ஆங்கிலத்தில் மிக அதிகம் பேரால் வசை பாடப்பட்ட நாவல், சாங்சுவரி (Sanctuary). வில்லியம் ஃபாக்னருடைய நாவல் இது. உன்னதமான இலக்கியப் படைப்பு என்று ஒரு சாரார் இதைத் தொடர்ந்து சொல்லி வந்தாலும், இந்நாவலில் ஃபாக்னர் விதைத்திருக்கும் குரூரமும், வக்கிரமும், வன்முறையும் வெறியும் வேகமும் சராசரி மனிதர்கள் சகித்துக் கொள்ளவே முடியாதவை என்று இன்றும் சொல்பவர்கள் உண்டு. சாங்சுவரி நாவலைத் திட்டித் தீர்த்த அத்தனை பேருமே அதன் சுடும் உண்மையை எதிர்கொள்ள முடியாமல்தான் திட்டினார்கள். இப்படியெல்லாமுமா அப்பட்டமாக எழுதுவது என்று சபித்தார்கள். எல்லா சாபங்களையும் மீறி சாங்சுவரி சாகாவரம் பெற்றதொரு படைப்பானது சரித்திரம்.

தமிழிலும் இப்படி எல்லாத் தரப்பினராலும் வசை பாடப்பட்ட நாவல் ஒன்று உண்டு. சாங்சுவரிக்கு இல்லாத ஒரு சிறப்பு என்னவென்றால் இந்த நாவலைப் படித்தவர்களும் திட்டினார்கள், படிக்காதவர்களும், கேள்விப்பட்டதை வைத்துக்கொண்டு திட்டினார்கள்! இந்த நாவலைத் திட்டினால்தான் நமக்கு ஒரு இலக்கிய அங்கீகாரம் கிடைக்கும் போலிருக்கிறது என்று நினைத்துக் கூடத் திட்டினார்கள். திட்டுவதற்கு இதில் என்னென்ன அம்சங்கள் இருக்கின்றன என்று பூதக்கண்ணாடி வைத்துத் தேடித் தேடியும் திட்டினார்கள்.

தன்னளவில், உண்மையிலேயே சிறப்பான நாவலான விஷ்ணுபுரம், அதற்குக் கிடைத்த எதிர்மறை விமர்சனங்களினால் மேலும் பிரபலமடைந்ததே தவிர, தோல்வி காணவில்லை.

ஜெயமோகனின் விஷ்ணுபுரம் வெளியாகி, வெகுநாள் ஆகவில்லை என்பதால் வாசர்களுக்கு அப்போது ஏற்பட்ட பரபரப்புகள் மறந்திருக்காது. தமிழில் அதற்கு முன்னால் வேறு எந்த ஓர் இலக்கியப் படைப்பு வெளியானபோதும், அப்படியொரு பரபரப்பும் பேச்சும் எழுந்ததாகச் சரித்திரமில்லை.

விஷ்ணுபுரத்தில் அப்படி என்னதான் இருக்கிறது என்று வாசிக்க ஆரம்பித்து, பாதியில் நிறுத்தி விட்டவர்கள் அதிகம், என்னுடைய நண்பர்கள் பலரே, ‘படிக்க முடியவில்லை’ என்று சொன்னதைக் கேட்டிருக்கிறேன். நாவலின் பக்க அளவு ஒரு பொருட்டே இல்லை. வழுக்கிக்கொண்டு ஓடும் ஜெயமோகனின் மொழியின் உதவியுடன் இரண்டேநாளில் கூட வாசித்து விடலாம்.

பிரச்னை, நாவலின் கட்டுமானம் தொடர்பானது. விஷ்ணுபுரம் நாவல் மூன்று பாகங்கள் கொண்டது. நாவலில் காலம் புரண்டு கிடக்கிறபடியால், வாசிப்பு நடுவில் லேசாகத் தடைபடக்கூடும். சற்றே கவனமுடன் நடைபயின்றால் இது ஒரு சிக்கலே இல்லை.

ஆனால், ஏன் நாவலை இப்படி புரட்டிப் போட்டு எழுத வேண்டும் என்று கேட்கக் கூடாது! நம்மால் நமது சிந்தனையை ஒரு நேர்க்கோட்டில் எப்போதும் வைத்துக் கொள்ள முடிகிறதா என்ன! விஷ்ணுபுரம், காலத்தை உதைத்துத் தள்ளி, படைப்புக்கு ஒரு காவியத்தன்மை சேர்த்து, கற்பனையில் ஒரு நகரை நிர்மாணிக்கும் பிரும்மப் பிரயத்தனம்.

நகரை நிர்மாணிப்பதென்றால் ஊரும் தெருவும் வீடும் வாசலும் மட்டுமல்ல. விஷ்ணுபுரம் என்கிற புராதன, கற்பனை நகரை உருவாக்கி, நூற்றுக்கணக்கான கற்பனைக் கதாபாத்திரங்களைச் சித்திரித்து உலவ விட்டு, நிஜம் போன்ற பிரமையை உருவாக்கும் படைப்பு அது. ஆதிகாலத்தில், இங்கு இருந்த சைவ, வைணவப் பிரிவுகள், இடையில் வந்த பவுத்த மதத் தாக்கம், பவுத்தத்துக்கும் மற்றவற்றுக்குமான மோதல்கள் (மோதல் என்றால் இன்றைய அர்த்தத்தில் அல்ல. மிக அழகான, ஆழமான விவாத மோதல்கள்.), பவுத்தத்தின் ஆட்சி மற்றும் வீழ்ச்சி என்று மறைந்து போன ஒரு கால கட்டத்தை மீட்டெடுத்துக் கொண்டுவந்து கண்முன் நிறுத்தும் இந்த நாவல், இறுதியில் ஒரு மாபெரும் பிரளயத்துடன் நிறைவடைகிறது.

உண்மையில் பிரளயம் என்பது எப்படி இருக்கும் என்று புராணங்களில் சொல்லப்பட்டதற்கு அப்பால் நமக்கு எதுவும் தெரியாது. ஜெயமோகனுக்கும் தெரிந்திருக்க நியாயமில்லை. ஆனால் ஒரு நதியின் பெருக்கெடுப்பை மையமாக வைத்து ஒரு முழு நகரமும் அதற்கு அப்பாலும் இல்லாமல் போவதை சிறு சிறு அத்தியாயங்களில் காட்சிப்படுத்தும் நேர்த்தியில் வாசிக்கும் யாருக்கும் சிலிர்த்துப் போவது நிச்சயம்.

விஷ்ணுபுரத்தின் மையப்புள்ளி ஜெயமோகனுக்குக் கிடைத்த இடம், திருவட்டாறு. தமிழக – கேரளா எல்லையில் அமைந்துள்ள ஒரு புராதானத் திருத்தலம். ஆதிகேசவப் பெருமாள் இங்கே மூன்று கருவறைகளை அடைத்தபடி மிகப் பிரம்மாண்டமாக சயன கோலம் கொண்டிருக்கிறார். ஏழெட்டு வருடங்களுக்கு முன்பு ஒருமுறை இந்த ஊருக்கு ஒரு சமயம் போயிருந்தேன். கைக்கு அடக்கமான கடவுள் உருவங்களைப் பார்த்து சிநேகம் கொண்ட மனங்களுக்கு ஆதிகேசவப் பெருமாளின் ஆகிருதி நிச்சயமாக அச்சமூட்டவே செய்யும். ஒரு மலை படுத்திருப்பது போலக் கிடப்பார். ஒரு நபர் மட்டுமே ஒரு சமயத்தில் நுழையக் கூடிய கருவறை. இருளும், திருமேனியின் கருமையும் ஒன்று சேர்ந்து, எண்ணெய் நெடியில் என்னவோ செய்யும். நம்பூதிரிகள் வாழை இலைத் துண்டில் வைத்துக் கொடுக்கும் சந்தனப் பிரசாதத்தை வாங்கிக் கொண்டு வெளியே வந்து, கோயிலைச் சுற்றிக் கொண்டு ஓடும் அந்தச் சிறு ஓடையின் கரையில் சற்று நேரம் நின்றால்தான் பதற்றமும் தவிப்பும் சற்றே தணியும்.

வாழ்க்கையில் செய்வதற்கு ஏதுமில்லை என்கிற முடிவு ஏற்பட்டு எண்பதுகளின் தொடக்கத்தில் ஒரு நாள், துறவியாகி விடலாம் என்ற யோசனையுடன் வீட்டைவிட்டுக் கிளம்பி வந்த ஜெயமோகன், இந்தக் கோயிலின் மண்டபத்தில் இரவுப் பொழுதைக் கழிக்க படுத்தார். வேறு சிலரும் அந்த மண்டபத்தில் ஏற்கனவே படுத்திருந்தார்கள். நல்ல இருட்டு. பக்கத்தில் இருப்பவர் முகம் தெரியாதபடிக்குக் கவிந்திருந்த இருட்டு. அந்த இருட்டில் ஒரு வயதானவர் கோயிலைப் பற்றியும், ஆதிகேசவப் பெருமாளைப் பற்றியும் பேசியிருக்கிறார். “ஒரு யுகம் முடியும் போது ஆதிகேசவன் புரண்டு படுப்பார்.”

இது கற்பனையா, ஏற்கனவே சொல்லப்பட்ட கதையா, புராணத்தில் இருக்கிறதா எதுவுமே தெரியாது. ஆனால், பிரம்மாண்டமான ஆதிகேசவப் பெருமாள் சிலை ஒரு முறை புரண்டு படுப்பது என்கிற படிமம், அங்கு படுத்திருந்த ஜெயமோகனைத் தாக்கியது. அதற்குமேல், அவரால் அன்றைய இரவு உறங்கக்கூட முடியவில்லை.

ஏழெட்டு வருடங்கள் அலைந்து திரிந்து புராண இதிகாசங்கள், பவுத்த தத்துவங்கள், மேலைத் தத்துவங்கள் என்று கிடைத்த அனைத்தையும் படித்து அறிந்து, பல ஞானியருடன் தொடர்பு கொண்டு விவாதம் மேற்கொண்டு, தனக்குக் கிடைத்த படிமத்தை ஒரு கலைவடிவமாக்குவதற்கான ஆயத்தங்களைச் செய்துகொண்டு, அதன் பிறகே இந்த நாவலை அவர் எழுத ஆரம்பித்திருக்கிறார்.

விஷ்ணுபுரம், காவியத்தன்மையுடன் படைக்கப்பட்ட ஒரு நாவல். ஆனால் அதன் அமைப்பும் கட்டுமானமும் நுட்பமான செதுக்கல்களும் நேர்த்தியான விவரணைகளும் முற்றிலும் நவீன மொழியில் சாத்தியமாகியிருப்பது, தமிழில் ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வு.

இந்நாவல் நடைபெறும் களமாக ஜெயமோகன் சொல்லும் விஷ்ணுபுரம் தமிழகத்தில் இருக்கிறதா, கேரளத்தில் இருக்கிறதா, அல்லது ஹரித துங்கா, வராகபிருஷ்டம் போன்ற பெயர்களைப் பயன்படுத்துவதால் ஆந்திரப்பிரதேசமா என்று சரியாகத் தெரியவில்லை என்றும், சமஸ்கிருதப் பெயர்கள் நிறைய இடம் பெறுவது ஒட்டவில்லை என்றும், விஷ்ணு ஆலயம் ஒன்றின் பின்னணியில் பின்னப்படும் நாவலில் துளசியைப் பற்றி எதுவுமே சொல்லப்படவில்லை என்றும் அத்தனை ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் கற்பூரம் இருந்ததாக எப்படிக் காட்டலாம் என்றும் இன்னபலவாகவும் இதற்கு வந்த விமர்சனங்கள் அனைத்தும் எனக்கு அப்போது மிகவும் வியப்பூட்டின.

தமிழகம், கேரளம், ஆந்திரம் எல்லாம் நேற்றே பிறந்தவை அல்லவா ! இந்தக் கதை நடந்த காலத்தில் மாநிலப் பிரிவினைகள் ஏது ? கற்பூரம் என்று சொல்லப்படுவது வாசிக்கும்போது எனக்கு பச்சைக் கற்பூரமாகத்தான் வாசனை அடித்தது. பெருமாள் கோயில் இருக்கும் இடத்தில் அந்த வாசனை இல்லாமல் எப்படி இருக்கும்?

ஜெயமோகனுடன் எனக்கு அதிகப் பழக்கம் கிடையாது. இரண்டொருமுறை சந்தித்திருக்கிறேன். ஏழெட்டு கடிதப் பரிமாற்றங்கள் நடந்திருக்கின்றன. நான்கைந்து முறை மின்னஞ்சல் தொடர்பு. அவ்வளவுதான். எப்போதோ ஒரு முறை விஷ்ணுபுரத்துக்கு வந்த விமர்சனங்கள் அவரை எப்படி பாதித்தன என்று கேட்டேன். அவர் சிரித்தது நினைவிருக்கிறது. என்ன பதில் சொன்னார் என்று நினைவில்லை.

ஆனால் அவர் சொல்லியிருக்கமுடியாத அந்த பதில், சில மாதங்களுக்குள்ளாக வந்துவிட்டது. அடுத்த நாவல். பின் தொடரும் நிழலின் குரல். இன்னொரு எண்ணூறு பக்கம்!

அவரைப் போல ஒரு கடும் உழைப்பாளியை எழுத்து வட்டத்தில் நான் இன்றுவரை சந்தித்ததே இல்லை. சுவாசித்துக் கொண்டு இருக்கும் பொழுதெல்லாம் உழைத்துக் கொண்டிருக்கும் நபர் அவர். சளைக்காமல் கடிதங்கள் எழுதுவார். கூட்டங்களில் கலந்துகொள்வார். பல கூட்டங்களைத் தானே முன் நின்றும் நடத்துவார். டெலிகாம் துறையில் உத்தியோகம் பார்த்துக் கொண்டு நாவல்களும் எழுதுவார்.

நாவலென்பது வாழ்வைச் சித்திரிப்பது என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள். ஜெயமோகனுக்கு அந்தக் கருத்துடன் உடன்பாடு கிடையாது. வாழ்வின் அடிப்படைகளை ஆராய்வதுதான் ஒரு நாவலின் பணி என்று நினைப்பவர் அவர். விஷ்ணுபுரம் மட்டுமல்லாமல் அவரது அத்தனை நாவல்களுக்குமே இதுதான் அடிப்படை. எடுத்துக்கொள்ளும் விஷயங்களின் மீது அவர் எழுப்பும் ஆழமான கேள்விகள் முக்கியமானவை. நூற்றுக்கணக்கான கேள்விகளைத் தனக்குத் தானே எழுப்பிக்கொண்டு விடைகளைத் தேடி ஓடும்போது எந்த இடத்துக்கு வந்து சேருவோம் என்பது நமக்கே தெரியாது. நமது விருப்பம் வேறாகவும் இருக்கலாம். ஆனால் வந்தடைவதை நேர்மையுடன் முன்வைப்பதுதான் ஒரு கலைப்படைப்பின் தரத்தைத் தீர்மானிக்கும் முக்கியக் காரணியாக விளங்குகிறது.

விஷ்ணுபுரத்தில் இடம் பெற்றிருக்கும் தர்க்கங்களுக்கு அப்பால் பண்டையத் தென்னிந்தியர்களின் வாழ்க்கை முறை, பேச்சு முறை, கலைகள், கலாசாரம், சமூக அடுக்குகள், அரசியல், ஆன்மிகம் என்று ஏராளமான விஷயங்களைப் பற்றிய அசலான தகவல்களை நம்மால் பெற முடியும். எத்தனை பெரிய உழைப்புக்குப் பிறகு இதெல்லாம் சாத்தியமாகியிருக்கக்கூடும் என்கிற வியப்பு அவசியம் உண்டாகும்.

தேவை திறந்த மனம் மட்டுமே..

தொடர்புடைய சுட்டி: பிரமிக்க வைத்த விஷ்ணுபுரம்

எது நல்ல இலக்கியம்? – சிரில் அலெக்சின் விளக்கம்

நண்பர் சிரில் அலெக்ஸ் ஆழிசூழ் உலகு புத்தகத்தைப் பற்றி ஓர் அருமையான விமர்சனம் எழுதி இருக்கிறார். அதில் நல்ல இலக்கியத்திலிருந்து என்ன எதிர்பார்க்கிறோம் என்பதை தெள்ளத்தெளிவாக articulate செய்திருக்கிறார். அவர் வார்த்தைகளில்:

நேரடிக் காட்சிகளை துல்லியமாக பதித்துச் செல்வதுவோ, கிராமத்துக் கதைகளை மீள்பதிப்பதுவோ மட்டுமே ஒரு சிறந்த படைப்பை உருவாக்கிவிட முடியாது. ஒரு இலக்கியப் புனைவின் போக்கில் இரண்டு நகர்வுகள் இருக்க வேண்டும். ஒன்று கதை மாந்தர்களின் செயல்களின், சொற்களின் வழியே, எழுத்தாளனின் வர்ணணைகள், விவரணைகள் வழியே நகரும் கதையின் நகர்வு. இன்னொன்று அதற்கு மேல்தளத்தில் நிகழும் கருத்தின் அல்லது கருத்துக்களின் நகர்வு. இந்த இரண்டு நகர்வுகளும் பின்னிப் பிணைந்து சென்று சேர்ந்து உச்சமடைதலே ஒரு நல்ல இலக்கிய படைப்பின் அழகு.

நான் கருத்து எனச் சொல்வது நல்லொழுக்க போதனைகளையோ, புரட்சிகரமான சமூகக் கருத்துகளையோ அல்ல. அந்தக் கருத்துகள் நம் நம்பிக்கைகளை கேள்வி கேட்பவையாக இருக்கலாம், ஒழுக்க விதிகளை சிதறடிக்கச் செய்யலாம், நம் இருப்பையே கேலி செய்யலாம். ஒரு லட்சியம் நோக்கிய நகர்வு, அல்லது லட்சியங்களை விமர்சிக்கும் கருத்து. எதுவாகிலும் ஒன்று.

என் பதிவில் நான் பார்க்கத் தவறிய பல விஷயங்களை சொல்லி இருக்கிறார். கட்டாயம் படியுங்கள்!

தொடர்புள்ள சுட்டி: ஆழிசூழ் உலகு – என் விமர்சனம்

ஜெயமோகனின் “விஷ்ணுபுரம்”

விஷ்ணுபுரத்தை பல விதத்தில் படிக்கலாம். அமைப்புகளின் குரூரம், தொன்மங்கள் தோன்றி மறையும் விதம், ஹிந்து தத்துவங்களைப் பற்றிய அறிமுகம் என்றெல்லாம் படிக்கலாம். ஒரு fantasy என்ற விதத்தில் கூட படிக்கலாம். படிக்கும்போது இப்படி பல கூறுகள் எனக்குத் தெரிந்தது. ஆனால் உண்மையைச் சொல்லப் போனால் பட்டிக்காட்டான் மிட்டாய்க்கடைக்கு போன மனநிலையில்தான் நான் இருந்தேன். பக்கத்துக்குப் பக்கம் ஏதாவது கவனத்தைக் கவர்ந்தது. பல சமயம் மேலே படிப்பதை நிறுத்திவிட்டு இரண்டு நிமிஷம் மூச்சு வாங்கிக்கொண்டு படித்ததை ஒரு மாதிரி absorb செய்துகொண்டு பிறகுதான் மேலே படிக்கவே முடிந்தது. ஒரு மாபெரும் ஓவியம் அல்லது சிற்பத்தைப் பார்க்கும் உணர்வு தோன்றிக் கொண்டே இருந்தது. மாமல்லபுரத்தில் பகீரதன் தவம் பார்த்திருப்பீர்கள். விவரங்களைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் இல்லையா? குயர்னிகா என்ற ஓவியத்தைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். எவ்வளவு முறை பார்த்தாலும் புதிது புதிதாக ஏதாவது கண்ணில் பட்டுக் கொண்டே இருக்கும். பார்த்து முடித்துவிட்டோம் என்ற எண்ணமே எனக்கு வருவதில்லை. அதைப் போலத்தான் இந்தப் புத்தகத்தைப் பற்றியும் உணர்ந்தேன்.

சுருக்கமாகச் சொன்னால் இந்தப் பதிவு விமர்சனமோ புத்தக அறிமுகமோ இல்லை. இங்கே கதைச்சுருக்கம் எல்லாம் எழுதப் போவதில்லை. வழக்கமாக பத்து வரியில் கதைச்சுருக்கம் எழுதுவது போல இதற்கு எழுதிவிடவும் முடியாது. படித்தபோது எனக்கு ஏற்பட்ட பிரமிப்பை பதிவு செய்யும் முயற்சி, அவ்வளவுதான்.


எதைச் சொல்வது, எதை விடுவது? முதலில் அந்தச் சிலை. ஸ்ரீபாதம், அல்லது உந்தி அல்லது முகம் மட்டுமே காணலாம் என்ற அளவுக்கு பிரமாண்டமான ஒரு சிலை! காஞ்சிபுரத்தில் ஒரு இருபது அடி உயரம் இருக்கும் உலகளந்த பெருமாள் சிலையைப் பார்த்தபோது உண்டான மன எழுச்சியே இன்னும் அகலவில்லை (பார்த்து 15 வருஷம் இருக்கும்) திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் கோவில்தான் கதையின் மூலக்கரு என்று ஜெயமோகன் எங்கோ சொல்லி இருக்கிறார். அந்த கோபுரங்களும் கண்டாமணியும். அஜிதன். அஜிதன் உண்மையிலேயே வாதத்தில் வென்றானா? திருவடி, அவனுடைய obsession, அவனால் உருவாகும் cult . சங்கர்ஷணன், அவன் சந்திக்கும் இன்னொரு “புலவன்”, அரங்கேற்றம், பின்னாளில் சங்கர்ஷணன் பற்றி உலவும் தொன்மங்கள். கதையின் அமைப்பே – முதல் பகுதியின் மனிதர்கள் மூன்றாம் பகுதியில் தொன்மங்களாக வருவதும், முதல் பகுதியின் தொன்மங்கள் இரண்டாம் பகுதியில் உண்மை மனிதர்களாக வருவதும் அபாரமான construction technique. யானைகள். மீண்டும் யானைகள். சிற்பிகள். அந்த பாண்டிய அரசன். அவனுக்குக் கூட்டிக் கொடுக்க சம்மதிக்கும் வீரர் தலைவன். அந்த ஆழ்வார், அதுவும் அவர் “அத்தைத் தின்று அங்கே கிடக்கும்” என்று சொன்ன ஆழ்வார்! (நம்மாழ்வார் அப்படி சொன்னதாக ஒரு வைஷ்ணவ குருபரம்பரை கதை உண்டு)

தத்துவ விசாரத்தை இவ்வளவு சுவாரசியமாக சொல்ல முடியுமென்று நான் கனவிலும் நினைத்ததில்லை. அதுவும் ஆன்மிகம் என்றால் எனக்கு கண் வெகு சீக்கிரம் சொருகிக் கொள்ளும். பொதுவாக தத்துவம் எழுப்பும் கேள்விகளில் எனக்கு அக்கறையே கிடையாது. அதுவும் நமது தத்துவம் எல்லாம் வெறும் speculation-தான். உதாரணமாக சாவுக்குப் பிறகு என்ன? சம்பத் மாதிரி அது ஓர் இடைவெளி என்று சொல்லலாம். சாவுக்குப் பிறகு எல்லாரும் ஒரு நிறமாக மாறுவோம் என்று நான் சொல்லலாம். இந்த வெற்று யூகங்களை எல்லாம் நிரூபிக்க வழி இல்லாதபோது கேள்வியே சாரமற்றது என்ற முடிவுக்குத்தான் நான் வருவேன்.

ஆனால் இந்த மாதிரி speculation எல்லாம் theoretical exercises என்ற அளவுக்காவது என்னை இந்தப் புத்தகம் ஒத்துக் கொள்ள வைத்தது. எனக்கு இன்று நமது தத்துவங்கள் பற்றி ஓரளவாவது தெரிகிறது என்றால் அதற்கு இந்த நாவலே காரணம். ஜெயமோகனின் உழைப்பு அசர வைக்கிறது. தத்துவங்களைப் பற்றி நா.பா. எழுதிய மணிபல்லவம் நாவலிலும்தான் வாதிக்கிறார்கள். அதைப் படிப்பதை விட வெங்காயம் உரிக்கலாம்.

எனக்கு இன்னும் இரண்டு மூன்று முறையாவது படிக்க வேண்டும். வார் அண்ட் பீஸ் படித்துவிட்டு என்று நினைத்திருக்கிறேன், எப்போது முடியுமோ தெரியவில்லை.

ரொம்ப கஷ்டம்தான், ஆனால் விஷ்ணுபுரம் மொழிபெயர்க்கப்பட வேண்டும்.

கட்டாயம் படிக்கப்பட வேண்டிய புத்தகம். தத்துவம் என்றவுடன் பயப்பட வேண்டாம், மிகவும் சுவாரசியமான எழுத்தும் கூட. Unputdownable.

விஷ்ணுபுரத்தை எஸ்.ரா. தமிழின் நூறு சிறந்த நாவல்களில் ஒன்றாக மதிப்பிடுகிறார். ஜெயமோகன் அதைத்தான் தமிழின் தலை சிறந்த நாவலாகக் கருதுகிறார். அப்படி சொன்னதற்காக நிறைய பேர் அவரை கர்வி என்று திட்டி இருக்கிறார்கள். 🙂 அவருடைய வார்த்தைகளில்:

ஐதீகத் தொன்மை அணுகு முறையின் வழியாக இந்திய வரலாற்றையும், தத்துவ மரபையும் ஆய்ந்து மாற்று சித்திரம் ஒன்றைத் தரும் முயற்சி. அதன் முழுமை, மொழியின் தீவிரம், குறியீட்டு கவித்துவம் காரணமாக பெரிதும் பாராட்டப் பட்டது. ‘நூறு வருடத் தமிழிலக்கியத் தளத்தில் செய்யப்பட்ட மிகப் பெரிய இலக்கிய முயற்சி’ என்று மதிப்பிட்டார் அசோகமித்திரன்.

1997ல் பிரசுரமாயிற்று.

தொகுக்கப்பட்ட பக்கம்: ஜெயமோகன் பக்கம்

தொடர்புடைய சுட்டிகள்:
பா. ராகவனின் விமர்சனம்
கோபி ராமமூர்த்தியின் விமர்சனம்

லூயி லமூர் எழுதிய “ஹோண்டோ”

சிறுவர்களுக்கு கடற்கொள்ளையர், கௌபாய் “தொழில்களில்” ஒரு தனிக் கவர்ச்சி உண்டு. அதில் இருக்கும் சாகசக் கூறுகள் பல தலைமுறைகளாக அவர்களை ஈர்க்கின்றன. நானும் அப்படித்தான் இருந்தேன். ஜெய்ஷங்கரும் அசோகனும் குதிரைகளில் சவாரி செய்துகொண்டு துப்பாக்கியால் சுடும் படங்களை விரும்பிப் பார்த்திருக்கிறேன். கௌபாய் படங்களில் மாட்டையே காணோமே என்ற யோசனை கூட வந்ததில்லை.

இதன் தொடர்ச்சியாக பதின்ம வயதில் ஆங்கிலப் புத்தகங்களைப் படிக்க ஆரம்பித்தபோது வெஸ்டர்ன் நாவல்களைப் படிப்பதில் நிறைய ஆர்வம் இருந்தது. ஆலிவர் ஸ்ட்ரேஞ்ச் எழுதிய சடன் (Sudden) நாவல்கள், லூயி லமூரின் சாக்கெட் நாவல்களை விரும்பிப் படித்த காலம் அது. இரண்டு மூன்று வருஷங்களிலே அலுப்புத் தட்டிவிட்டது.

சமீபத்தில் ஜான் வெய்ன் நடித்த ஹோண்டோ என்ற திரைப்படத்தைப் பார்த்தேன். சுமார்தான். கதையும் ஒன்றும் பிரமாதமில்லை. ஆனால் இப்படி வெஸ்டர்ன் படங்களில் ஜான் வெய்னை அடித்துக் கொள்ள ஆளில்லை என்று தோன்றியது. ஒரு நாற்பத்து சொச்சம் வயதுள்ள, அனுபவம் நிறைந்த, வாழ்க்கை என்றால் என்ன என்று தெரிந்த ஒரு லுக் இருக்கிறது. சும்மா வந்து போனாலே பார்க்கலாம் என்று தோன்றியது. அதுவும் ஹோண்டோ எல்லாம் அவருக்காகவே எழுதப்பட்ட கதை போல இருந்தது. எப்படி எம்ஜிஆருக்கு எங்க வீட்டுப் பிள்ளையும், நாடோடி மன்னனும், ஆயிரத்தில் ஒருவனும், அன்பே வாவும் பொருந்துகிறதோ அந்த மாதிரி.

அதனால்தான் ஹோண்டோ புத்தகத்தை நூலகத்தில் தேடி எடுத்துப் படித்தேன். சினிமா மூலக்கதையிலிருந்து பெரிதாக மாறவில்லை. எப்படி மாறும்? முதலில் லமூர் ஒரு சிறுகதையை எழுதி இருக்கிறார். அது திரைப்படமாகி இருக்கிறது. திரைக்கதையை நாவலாக மீண்டும் லமூர் எழுதி இருக்கிறார்!

சம்பிரதாயமான கதைதான். ஹோண்டோ தனியன். தற்செயலாக ஆஞ்சி லோவை சந்திக்கிறான். ஆஞ்சிக்கு ஒரு ஆறு வயதுப் பையன், ஜானி. தன்னந்தனியாக தனது “பண்ணையை” நிர்வகித்து வருகிறாள். பண்ணை இருக்கும் இடத்தில் அபாச்சி (Apache) இந்தியர்களால் அபாயம் இருக்கிறது. அவர்களது தலைவன் விட்டோரோ ஜானியின் தைரியத்தைக் கண்டு அவனைத் தன் தம்பியாக ஏற்றுக் கொள்கிறான். ஆஞ்சியின் பண்ணையைத் தாக்க மாட்டேன் என்று வாக்களிக்கிறான். இந்தியர்களால் அபாயம் என்று நினைத்து ஹோண்டோ ஆஞ்சியை பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துப் போக மீண்டும் வருகிறான். வரும்போது தன்னைக் கொல்ல வரும் ஆஞ்சியின் கணவனைக் கொன்றுவிடுகிறான். அவனை இந்தியர்கள் பிடித்துப் போகிறார்கள். ஆஞ்சி ஹோண்டோதான் தன் கணவன் என்று சொல்லி அவன் உயிரைக் காப்பாற்றுகிறாள். ஆஞ்சி, ஹோண்டோ, ஜானி மூவரும் பாதுகாப்பான கலிஃபோர்னியாவுக்குக் கிளம்புகிறார்கள், வழியில் இந்தியர்களோடு சண்டை. எப்படியோ சமாளித்துப் போய்விடுகிறார்கள்.

கதையின் பலம் என்பது இந்தியர்களைப் பற்றி ஹோண்டோ அவ்வப்போது பேசும் இடங்கள்தான். ஒரு இடத்தில் ஹோண்டோ சொல்கிறான் – “There’s no word in the Apache language for lie,an’ we lied to ’em”. பொய் என்ற வார்த்தையே இல்லாத மொழி ஏதும் உண்மையிலேயே இருக்கிறதோ இல்லையோ, அப்படி ஒரு மொழி இருக்கக்கூடும் என்ற எண்ணமே மனதை உற்சாகப்படுத்துகிறது.

படித்தே ஆக வேண்டிய நாவல் இல்லை. பார்த்தே ஆக வேண்டிய திரைப்படமும் இல்லை. ஆனால் படிக்கக் கூடிய நாவல், பார்க்கக் கூடிய படம். டைம் பாஸ் என்ற அளவுக்குக் கொஞ்சம் மேலே இருக்கிறது.

தொடர்புடைய சுட்டிகள்:
லூயி லமூர் பற்றிய விக்கி குறிப்பு
ஹோண்டோ திரைப்படம் பற்றி IMDB-யில்
லமூரின் ஒரிஜினல் சிறுகதை