ஃப்ரெடரிக் ஃபார்சித் எழுதிய “டாக்ஸ் ஆஃப் வார்”

ஃபார்சித்தின் த்ரில்லர்கள் – குறிப்பாக Day of the Jackal – பிரபலமானவை. Dogs of War ஜாக்கல் அளவுக்குப் பிரபலம் இல்லைதான். ஆனால் இதைத்தான் நான் ஃபார்சித்தின் மிகச் சிறந்த த்ரில்லராகக் கருதுகிறேன்.

கூலிப்படை வீரர்கள் என்றால் இந்தக் காலத்தில் என்னென்னவோ அர்த்தம் வருகிறது. ஆனால் mercenaries என்று ஆங்கிலத்தில் எழுதினால் கொஞ்சம் கவுரமாகத் தெரிகிறது. 🙂 ஃபார்சித் காட்டுவது இவர்களின் உலகத்தைத்தான். அதுவும் அறுபது எழுபதுகளில் உலகின் பல இடங்களில் – குறிப்பாக ஆஃப்ரிக்காவில் உள்நாட்டு சண்டை நடந்து கொண்டே இருந்தது. ஐரோப்பிய பின்புலம் உள்ள ராணுவ வீரர்களுக்கு லோகல் படைகளுக்கு பயிற்சி அளிக்கவும் சிறு படைகளை நடத்திச் செல்லவும் தேவை இருந்தது. சில சமயம் அரசுகள் கவிழ்ந்து வேறு அரசுகள் உருவாகவும் இவர்கள் காரணமாக இருந்தார்கள்.

ஆனால் இவர்களை எங்கே என்று தேடுவது? அவர்களுக்கு வேண்டிய ஆயுதங்களை எப்படிப் பெற்றிருப்பார்கள்? ஃபார்சித் இவற்றை எல்லாம் painstaking details கொடுத்து விளக்குகிறார். அநேகருக்கு பரிச்சயம் இல்லாத வேறு ஒரு உலகத்தை மிகுந்த நம்பகத்தன்மையோடு காட்டுகிறார். ஜாக்கலிலும் இப்படி நிறைய விவரங்கள் கொடுப்பது நினைவிருக்கலாம்.

கதை ஷானன் என்ற கூலிப்படை கேப்டன் தோல்வி அடைந்த ஒரு ராணுவத்திலிருந்து விலகிச் செல்வதோடு ஆரம்பிக்கிறது. ஷானன் அந்த ராணுவத்தின் ஜெனரல் மீது நிறைய மரியாதை வைத்திருக்கிறான். ஒரு ஆஃப்ரிக்க நாட்டில் பிளாட்டினம் நிறைய இருப்பது ஒரு பெருமுதலாளிக்குத் – மான்சன் – தெரிய வருகிறது. ஆனால் அங்கே ரஷியர்களின் தாக்கம் அதிகம், நேர்வழியில் போனால் சுரங்கம் அமைக்க அனுமதி கிடைக்காது. மான்சன் அந்த நாட்டில் ஒரு “புரட்சிக்கு” ஏற்பாடு செய்கிறார். இன்றைய அரசு மீது போர் புரிந்து அதைக் கைப்பற்ற ஷானன் தலைமையில் ஒரு கூலிப்படையை ஏற்பாடு செய்கிறார். ஷானன் எப்படி படையை நிறுவுகிறான், எங்கெங்கு ஆயுதம் வாங்குகிறான், எப்படி அவற்றை அந்த நாட்டுக்கு கொண்டு போகிறான் என்பதுதான் கதை. ஐந்தே ஐந்து கூலிப்படையினர் ஒரு நாட்டை கைப்பற்றுகிறார்கள் என்பதை வாசகர்களை நம்ப வைப்பதுதான் இந்தப் புத்தகத்தின் சாதனை. கடைசியில் ஒரு satisfying ட்விஸ்ட் வைத்திருக்கிறார்.

சில பாத்திரப் படைப்புகள் – கனிமங்கள் எங்கெங்கே கிடைக்கும் என்று ஆராயும் மல்ரூனி, இடி அமீன் மாதிரி இருக்கும் ஜனாதிபதி கிம்பா – நம்பகத்தன்மை அதிகம் உள்ளவை.

நாவல் 1974-இல் வெளிவந்தது. கிறிஸ்டோஃபர் வாக்கன் நடித்து 1980-இல் திரைப்படமாகவும் வந்தது.

ஃபார்சித்தின் பிற புத்தகங்களில் எனக்குப் பிடித்தது Devil’s Alternative மற்ற புத்தகங்கள் – புகழ் பெற்ற ஒடெஸ்ஸா ஃபைல் உட்பட – என் கண்ணில் சுமார்தான்.

படியுங்கள் என்று சிபாரிசு செய்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: த்ரில்லர்கள்