சம்பத்தின் “இடைவெளி”

இடைவெளி எனக்கு முழுதாகப் புரிந்துவிட்டது என்று சொல்வதற்கில்லை. ஆனால் சுவாரசியமான புத்தகம்.

என்ன கதை? சம்பிரதாயமான கதை எதுவுமில்லை. தினகரன் சாவைப் பற்றி யோசிக்கிறார் என்று வேண்டுமானால் சொல்லலாம். அது போதுமானதாக இல்லை, ஆனால் அதுதான் கதை.

தினகரனின் சித்தரிப்பு அபாரமானது. நிறைய புத்தகங்களைப் படித்துப் படித்து இப்போது சாவு என்றால் என்ன என்று புரிந்து கொள்ள முயற்சித்துக் கொண்டிருக்கிறார். அவர் அவ்வப்போது மெய்மறந்து யோசனையில் ஆழ்ந்துவிடுவது, அவரது “சராசரி” மனைவி பத்மாவோடு பேசுவது, அவரது பெரியப்பா இறக்கும்போது அவருக்குள் ஓடும் எண்ணங்கள் எல்லாமே சிறப்பாக வந்திருக்கின்றன.

நாவலின் பலம் என்பது அதன் அசாதாரண தளமே. இப்படி ஒரு புத்தகம் தமிழில் வேறு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஒரு தத்துவ விசாரப் புத்தகத்தை இவ்வளவு சுவாரசியமாக, கையில் எடுத்தால் கீழே வைக்க முடியாத மாதிரி, எழுத முடியும் என்று நான் நினைத்ததே இல்லை. அதுவும் புரியாத வார்த்தைகளில் எழுதப்படவில்லை. தினகரனின் சிந்தனை குன்சாகவாவது புரிந்துவிடுகிறது. சுலபமான நடை.

நாவலின் பலவீனம் – என்னைப் பொறுத்த வரையில் – அதன் அடிப்படை கேள்வியில் எனக்குப் பெரிதாக அக்கறை இல்லாததுதான். செத்த பிறகு என்ன என்று யாருக்கும் தெரியாது, அதை எப்படி ஆராய்வது என்று கூடத் தெரியவில்லை. ஒரு குண்டூசியின் தலையில் எத்தனை தேவதைகள் இருக்க முடியும் என்று கிருஸ்துவப் பாதிரிகள் ஒரு காலத்தில் நீட்டி முழக்கி ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார்களாம். அதைப் போன்ற கேள்வி இது. அதற்கப்புறம் சில பல சில்லறை பலவீனங்களும் இருக்கின்றன. தினகரனைத் தவிர வேறு எந்தப் பாத்திரமும் விவரிக்கப்படவில்லை. கல்பனா, பேனா சேகரிக்கும் அதிகாரி, அவரைத் திட்டிவிட்டுப் போகும் உயர் அதிகாரி இவர்களுக்கெல்லாம் என்ன significance என்றே புரியவில்லை. ஜெயமோகன் மாதிரி யாராவது கோனார் நோட்ஸ் எழுதினால் உபயோகமாக இருக்கும். எஸ்.ரா. எழுதி இருக்கிறார், ஆனால் எனக்குப் புரியாத இடங்களைப் பற்றி அவர் எழுதவில்லை.

சம்பத்தின் வாழ்க்கை பற்றி எனக்கு எதுவும் தெரியாது. இந்தப் பதிவுக்காக இணையத்தில் தேடியபோது ஆர்.பி. ராஜநாயஹம் எழுதிய ஒரு கட்டுரையில் சில விவரங்கள் கிடைத்தன. சின்ன வயதிலேயே இறந்துவிட்டாராம். நமது துரதிருஷ்டம்தான்.

எஸ்.ரா. இதை நூறு சிறந்த தமிழ் நாவல்களில் ஒன்றாகக் கருதுகிறார். ஜெயமோகன் இடைவெளியை தன் இரண்டாம் பட்டியலில் – பல்வேறு வகையில் முக்கியத்துவம் உடைய ஆனால் முழுமையான கலைவெற்றி கைகூடாத படைப்புகள் பட்டியலில் – சேர்க்கிறார். அவரோடு நான் இந்த விஷயத்தில் முழுமையாக உடன்படுகிறேன். முக்கியமான, நல்ல, ஆனால் முழுமையான கலை வெற்றி கூடாத புத்தகம்தான்.

குன்ஸாகத்தான் புரிகிறது என்றாலும் நல்ல புத்தகம். படியுங்கள் என்று சிபாரிசு செய்கிறேன்.

இதை ஒரு நண்பர் எனக்கு மின்னூலாக அனுப்பி வைத்தார். எப்படியோ அவர் அனுப்பிய மெயில் அழிக்கப்பட்டுவிட்டது, இப்போது அவர் பெயரை வேறு மறந்துவிட்டேன். அவருக்கு நன்றி! அதை இங்கே pdf கோப்பாக இணைத்திருக்கிறேன். காப்பிரைட் பிரச்சினை ஏதாவது வந்தால் எடுத்துவிடுவேன்.

பின்குறிப்பு: சம்பத்தின் இரண்டு சிறுகதைகள் – சாமியார் ஜூவுக்குப் போகிறார் மற்றும் பிரிவு – அழியாச்சுடர்கள் தளத்தில் கிடைக்கின்றன. இந்த இரண்டு சிறுகதைகளையும் இடைவெளியோடு சேர்த்து, முடிந்தால் முன்னாலேயே படிக்க வேண்டும். பத்மா, கல்பனா உறவுகள் ஓரளவு புரிகின்றன. சுவாரசியமாகவும் இருக்கின்றன. ஆனால் சிறுகதை என்று தனியாக எடுத்துக் கொண்டால் பாயின்ட் என்ன என்று பிடிபடவில்லை.

தொடர்புடைய சுட்டிகள்:

  • இடைவெளி குறுநாவல் pdf கோப்பாக
  • இடைவெளி பற்றி எஸ். ராமகிருஷ்ணன்
  • சாமியார் ஜூவுக்குப் போகிறார் சிறுகதை
  • பிரிவு சிறுகதை
  • சம்பத் பற்றிய சில விவரங்களை ஆர்.பி. ராஜநாயஹம் தருகிறார்.
  • அழகியசிங்கரின் பதிவு
  • 24 thoughts on “சம்பத்தின் “இடைவெளி”

    1. @ஆர்வி, நீங்க படிச்சுப் பாத்துட்டு அர்த்தம் சொல்வீங்கன்னு பாத்தேன்:-)

      நான் ஒரு வாட்டி படிச்சேன். ஒண்ணும் அவ்வளவா புரியலை.

      நீங்க சொல்றா மாதிரி எஸ்ரா நமக்கு எந்தப் பகுதிகள் புரியலையோ அதைப் பத்தி ஒண்ணுமே சொல்லலை.

      சில பதிவுகள் பாத்தேன். அவங்களும் புரியலை என்பதைத்தான் பதிவு செய்திருக்கிறார்கள்:-))

      Like

    2. சம்பத்தின் பிரிவு மட்டுமே படித்திருக்கிறேன். இணைப்பில் உள்ள மற்ற சிறுகதை, நாவலைப் படித்து விட்டு வருகிறேன்.

      ’மரணம்’ பற்றியே சம்பத் அதிகம் பேசியதற்கு ஏதாவது உளவியல் காரணம் இருந்திருக்குமா என்று பார்க்க வேண்டும்.

      சம்பத் பற்றி அவருடன் தொடர்பில் இருந்த அழகியசிங்கரின் கட்டுரை கீழே…

      http://navinavirutcham.blogspot.com/2009/03/blog-post_29.html

      Like

    3. கோபி, இடைவெளி நாவல் முழுதும் புரியாத மரமண்டை நான் ஒருவன் மட்டுமில்லை என்று தெரிவித்ததற்கு நன்றி! 🙂
      நட்பாஸ், எங்கே ஆளையே காணோம்?
      நட்பாஸ் மற்றும் ரமணன், உங்கள் கருத்துக்காகக் காத்திருக்கிறோம்… சுட்டிக்கு நன்றி ரமணன்!

      Like

      1. எங்கும் போகவில்லை- அமைதியாக பின்தொடர்கிறேன். உங்கள் ஒவ்வொரு பதிவையும் தவற விடாமல் படித்துக் கொண்டிருக்கிறேன். மிக்க நன்றி. 🙂

        Like

    4. நட்பாஸ், அப்பப்ப கொஞ்சம் குரல் கொடுங்க! You are badly missed.

      ஜெகதீஷ்குமார், இடைவெளி நாவல் பற்றிய பதிவு உங்களுக்குப் பிடித்திருப்பது மகிழ்ச்சி!

      Like

    5. மணிக்கொடி சிட்டி : நேர்மையே வாழ்க்கையாகவும் வஞ்சனை கண்டால் வெகுண்டு எழும் தன்மையும் கொண்ட அருமை நண்பர் அன்பே உருவானவர் R.P.ராஜநாயஹம்கி. ராஜநாராயணன் : நீங்கள் புதுவையை விட்டுப் போனது எனக்கு ஒரு இழப்பு. நல்ல ஒரு சினேகம் விட்டுப் போச்சி. இப்போதெல்லாம் நல்ல மனுசர்களைப் பார்ப்பது அருகிக்கொண்டே வருகிறது. கொஞ்ச நாள் பழகினாலும் மனசை பிய்த்துக் கொண்டு போய்விட்டீர்கள். என்னோடு வந்து பழகியவர்களில் நீங்கள் ஒரு வித்தியாசமானவர் தான். நீங்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டே இருக்கலாம். அவ்வளவு அனுபவங்கள் புதைந்து கிடக்கிறது உங்களிடம். அதே பேச்சை நீங்கள் எழுத்தில் கொண்டுவர ஆரம்பித்து விட்டால் நாங்களெல்லாம் நடையைக் கட்ட வேண்டியது தான்.அசோகமித்திரன் : நீங்கள் என்னை மீண்டும் மீண்டும் வியப்பில் ஆழ்த்துகிறீர்கள். தாங்கள் என் படைப்புகள் குறித்து கட்டுரை எழுதி அதை நான் படிக்க நேர்ந்தால் மிகவும் ரசமான அனுபவமாய் இருக்கும்.டாக்டர். கி. வேங்கடசுப்ரமணியம்: அன்புமிக்க அறிஞர் ராஜநாயஹத்திற்கு ! அறிந்தவர் அறிஞர். நீங்கள் நன்கு அறிந்தவர். எனவே இப்பட்டத்தைப் பெற தகுதியானவர். சரி துணைவேந்தரைத் தவிர வேறு யார் பட்டம் கொடுக்க முடியும் ? சாரு நிவேதிதா : ராஜநாயஹம் உலக இலக்கியத்தின் வாசகர். எனக்கு ஷேக்ஸ்பியரில் சந்தேகம் ஏதும் இருந்தால் அவரிடம் தான் கேட்பது வழக்கம். ஹாலிவுட் சினிமா பற்றி அதிகம் அறிந்தவர். ஹாலிவுட் சினிமா பற்றி அவர் ஒரு புத்தகமே எழுதலாம். அறிவினால் வியக்க வைத்தவர் RP ராஜநாயஹம். எப்படி ஒரு ராஜா மாதிரி வாழ்ந்தவர் , இந்த ராஜநாயஹத்தைப் பற்றித்தான் வீழ்ந்தாலும் லியர்மன்னன் மன்னன் தானே என்று எழுதினேன். சங்கீதத்திலும் கரை கடந்தவர் ராஜநாயஹம்.

      Like

    6. சுகெல், பதிவுக்கு நேரடியான தொடர்பு இல்லாவிட்டாலும் ஆர்.பி. ராஜநாயஹம் பற்றிய மேற்கோள்களுக்கு நன்றி!

      Like

    7. RV சார், சம்பத்தின் இடைவெளி எங்கு கிடைக்கும்?. பல நாட்களாக தேடி வருகிறேன். கையில் கிடைக்கமாட்டேன் என்கிறது. கிரியா வெளியீடு, அவுட் ஆப் பிரிண்ட் என்கிறார்கள். சி.மோகன் இடைவெளி நாவலை, சம்பத் மற்றும்
      கிரியா ராமகிருஷ்ணனுடன் சேர்ந்து, வெளியிட்ட அனுபவம் ஒன்றை படித்தேன். அது அந்நாவலை படிக்கவேண்டும் என்ற ஆர்வத்தை அதிகரித்துள்ளது.

      Like

        1. உங்களுக்கு அது புது அனுபவமாக இருக்கும். கூடவே குற்றமும் தண்டனையும் படிக்க கேட்டு கொள்கிறேன்.

          Like

    பின்னூட்டமொன்றை இடுக

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.